திங்கள், 16 மே, 2022

ஆத்மா

ஆத்மாவை உணருதல். எப்படி என்று பார்ப்போமா.


பரபிரம்மத்தை உணறதுலே எல்லா மனித பிறவியின் நோக்கம்.
எல்லாமே அவன் என்கின்ற எண்ணம் வந்து விட்டால் எதற்கு மன போராட்டம். மன பக்குவம் தான் தேடலில் ஆரம்பம். எதற்காக வேஷம்? நாம், நாமாக இருப்பதே நலம். அதற்கு சாட்சி நம் மனம் தானே. நல்ல மனதுடன் பிறரோடு பழகும் போது மனதில் மகிழ்ச்சி உருவாகும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போது தான் மனநிறைவு உருவாகும். அந்த மனநிறைவு தான் உடலில் புது சக்தியை உருவாக்கும். அந்த மந்திர சக்தி தான் வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்கும்.
நீங்க எத்தனை கோடி கொடுத்தாலும், ஒரு சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தால் மட்டுமே, உங்களுக்கு அது தெரிய வரும்.


மனித உடல் இறைவனின் வடிவம். அதை இறைவனின் கோவிலாக மாற்றுவதும், வெறும் கூடாகவே வைத்திருப்பதும் அவரவர் கையில் இருக்கிறது. ஆனால் இதை கோவிலாக மாற்றுவதற்கான எளிதான முறையை சொல்வது தான் நமது நோக்கம். இதற்கு மிகவும் எளிதான வழியாக இருப்பது தான் இறைவனுடைய சிந்தனை. அதாவது மனதை ஆசை, பொறாமை போன்ற எதற்கும் உதவாத எண்ணங்களில் இருந்து மாற்றி இறைவனை தியானிப்பது.
மனதுக்கு திடம் கொடுப்பவை – மன திறம் – மந்திரம் என்பது. சில மந்திரங்களை நாம் குறிப்பிட்ட அதிர்வில் ஜெபிக்க, அந்த சக்தி நம் செயல்களை முறைப்படுத்தி, நம்மை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது.


ஒவ்வொருவருக்கும் அவரவர் மூலாதாரத்தில் ஒரு மிகப் பெரும் சக்தி சுருண்டு கிடக்கிறது. முறையான மூச்சுப் பயிற்சியினாலும், மந்திர அதிர்வாலும், இந்த சக்தி தூண்டப்பட்டு மேல் நோக்கி எழும்பும். இந்த நிலையை அடைந்தவருக்கு அவர் எடுக்கும் முயற்சியில் தோல்வியே கிடையாது எனலாம். நாம் இந்த பிறவியில் செய்யும் நன்மை, தீமை எல்லாமே நம் மனதில் பதிவாகிறது இல்லையா? இதை யாரும் மறுக்க முடியாது. இறந்த பிறகும், இந்த நினைவடுக்குகள் அப்படியே தான் நம் ஆன்மாவில் இருக்கின்றன. நாம் அடுத்த பிறவி எடுக்கும் போது நமது நல்ல கெட்ட பலன்களுக்கு ஏற்ப நம் எண்ணங்களை, செயல்களை மனது தீர்மானித்து நம்மை செயல்பட வைக்கிறது.
நவ கிரகங்கள் நம் ஜாதக கட்டங்களில் உட்கார்வதும் அதற்க்கேற்ப்பத்தான். நம் தலை எழுத்து அல்லது விதி எனப்படுவது, இவ்வாறாக எழுதப்படுகிறது.


மிக நேர்த்தியாக முத்துக்கள், ஒரு கயிற்றில் கோர்க்கப்பட்டு இருக்கும் ஒரு முத்து மாலை ஒன்றை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதில் கோர்க்கப்பட்டுள்ள கயிறு நம் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் கயிறு நிச்சயம் இருக்கிறது இல்லையா? அந்த கயிறு போன்றது தான் நம் ஆத்மா. முத்துக்கள், நம் எண்ணங்கள் போன்றவை. ஒரு எண்ணத்திற்கும், இன்னொரு எண்ணத்திற்கும் உள்ள இடைவெளியில் நம் ஆத்மாவை நம்மால் உணர முடியும். அப்படி என்றால், என்ன அர்த்தம் என்று உங்கள் மனம் கேட்கிறதா.


ஒரு எண்ணத்திற்கும், இன்னொரு எண்ணத்திற்கும் இடைவெளி தேவை. அல்லது எண்ணங்களே இல்லாத நிலையை அதிகமாக்க வேண்டும். அந்த நிலை


தான் – நம்மை பரவசப்படுத்தும் நிலை, பரமாத்மா குடிகொண்டுள்ள பேரானந்தமான ஆனந்த நிலை.

கருத்துகள் இல்லை: