வியாழன், 3 டிசம்பர், 2020

பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா

பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா

ஹரே ராமா.... ஹரே கிருஷ்ணா !

ஜலதூதா எனும் பெயர் கொண்ட கப்பல், 1965 - ஆம் வருடம், இந்திய தேசத்திலிருந்து அமெரிக்கக் கரையை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தது. அதில், 69 வயது பெரியவர் ஒருவர், பயணம் மேற்கொண்டு இருந்தார். குடை, கைப்பை, சாப்பிடுவதற்குக் கொஞ்சம் தானிய வகை உணவுகள் மற்றும் பெட்டிகள் சிலவற்றில் புத்தகங்கள்; தவிர, 300 ரூபாய் மதிப்புள்ள ஏழு அமெரிக்க டாலர்கள்; இவையே அவருடைய உடைமைகள் !

அமெரிக்கக் கரையை நெருங்கிக்கொண்டிருந்தது கப்பல். தான் எதிர்கொள்ளவேண்டிய புதியதொரு சூழல் அவருக்குள் கவலையையும் மலைப்பையும் தந்தது ! கொண்டு வந்திருந்த பெட்டிகளில் ஒன்றினைத் திறந்து, நாட்குறிப்பேட்டை எடுத்தார். அன்றைய தினத்தின் பக்கத்தில், இன்று, என்னருமைத் துணைவன் கிருஷ்ணனிடம் உள்ளத்தில் இருப்பதைக் கொட்டித் தீர்த்தேன் என்று குறிப்பு எழுதினார். பிறகு, மண்டியிட்டுக் கண்கள் மூடி, கிருஷ்ணா, உனக்கு இங்கே ஆற்றவேண்டிய செயல்கள் ஏராளமாக இருக்கவேண்டும். இல்லையெனில் முற்றிலும் புதிதான இந்த பூமிக்கு என்னை ஏன் அழைத்துவந்தாய் ? நான் எளியவன்; சக்தியேதும் இல்லாதவன்; உனது பணியை நிறைவேற்ற எனக்குக் கருணை காட்டுவாயாக  என்று மனமுருகிப் பிரார்த்தித்தார். அவருக்குள் கண்ணனின் கருணை, வெள்ளமெனப் பாய்ந்தது. கிருஷ்ண பக்தி எனம் அமுதூற்று உலகளாவிய கிருஷ்ண விழிப்பு உணர்வு சங்கம் (இண்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் கிருஷ்ணா காண்சியஸ்நெஸ்) எனும் பெயரில் (இஸ்கான்), சிறு வித்தாய்த் தோன்றியது; பிறகு அதுவே பேரியக்கமாகப் பல்கிப் பெருகி, நாடுகளையும் கண்டங்களையும் தாண்டி, அனைவரையும் அரவணைத்தது ! இவை அனைத்துக்கும் அடிகோலிய அந்த முதியவர்... பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா ! 1896 ஆம் வருடம், கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்கு மறுநாள், செப்டம்பர் 1-ஆம் தேதியன்று, கொல்கத்தாவில்... கௌர் மோஹன் டே - ரஜனி டே ஆகிய வைணவத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு, அபய் சரண் எனப் பெயரிட்டு, அன்புடன் வளர்த்தனர். தெய்வ பக்தியும், தேச பக்தியுமாக வளர்ந்தான், அபய் சரண். பள்ளிக் கல்வி முடித்ததும், கொல்கத்தாவில் ஸ்காடிஷ் சர்ச் கல்லூரியில் ஆங்கிலம், தத்துவம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்டப் படிப்பை முடித்தான். ஆங்கிலத்தில் புலமை, தலைமையேற்று நடத்தும் திறமை, சம்ஸ்கிருதத்தில் பாண்டித்யம் என சிறந்து விளங்கினான் அபய் சரண். ஆனாலும் காந்திய வழியில், கதராடைகளையே உடுத்தி வந்தான். அது மட்டுமா ?! ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும்விதமாக, தன் படிப்புக்கு உரிய பட்டத்தையும் ஏற்க மறுத்தான் ! உரிய வயது வந்ததும், தந்தை சொல்படி, ராதா ராணி தத்தா என்பவளை மணந்தான்; அடுத்து ஆண் குழந்தைக்கும் தந்தையானான். ஆனாலும், ஆன்மிகத்தில் திளைப்பதிலும், ஸ்ரீ கிருஷ்ணரை நினைப்பதிலுமாக வாழ்ந்தான் அபய் சரண் ! 1922 - ஆம் வருடம் சுவாமி பக்தி சித்தாந்த சரஸ்வதி எனும் மகானைச் சந்தித்தான் அபய் சரண். அவரைத் தரிசித்த மாத்திரத்திலேயே வெகுவாகக் கவரப்பட்டு, அவரை தனது குருவாக ஏற்றான். அதுவே, அவனது வாழ்வின் மிகப் பெரிய திருப்புமுனை ! வேதங்கள், உபநிஷதங்கள் ஆகியவற்றில் உள்ள கருத்துக்களையும், சைதன்ய மகாபிரபுவின் ஸ்ரீகிருஷ்ண பக்தி சாரத்தையும், ஆங்கிலப் புலமையால், உலக மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். என விரும்பினார் குருநாதர். அதன்படி, தனது வாழ்க்கையை அதற்காகவே அர்பணிக்க முடிவு செய்தார் அபய் சரண். அடுத்த சில வருடங்களில், பகவத்கீதைக்கு ஆங்கிலத்தில் உரை எழுதினார். அப்போது முதல், அபய் சரணின் ஆன்மிகப் பயணம், கிருஷ்ண பக்தி எனும் பாதையில் சீராகச் செல்லத் துவங்கியது. பரத கண்டத்தின் கலாசாரப் பொக்கிஷங்கள் அனைத்தும், அபய் சரணின் ஆங்கிலப் புலமையால், புத்தகங்களாக வெளிவந்தன; உலகெங்கும் பரவத் துவங்கின !

இவருடைய புலமை, மனித குலத்துக்கு ஆற்றி வரும் சேவை ஆகியவற்றின் காரணமாக, பக்தி வேதாந்த... பிரபுபாதா ஆகிய பட்டங்கள் இவரது பெயருடன் இணைந்தன. ஒரு கட்டத்தில், பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா என அனைவராலும் அழைக்கப்பட்டார். மனம் ஏற்காத சம்சார வாழ்வைத் துறந்தார். ஸ்ரீகண்ணன் லீலைகள் செய்த பிருந்தாவனத்தை, 1950-ஆம் வருடத்தில் தனது இருப்பிடமாக்கிக் கொண்டார் சுவாமிஜி. 59 - ஆம் வருடத்தில் தீட்சை பெற்று, காவியுடை அணிந்து, துறவறம் பூண்டார் பிரபுபாதா. ராதா தாமோதர் கோயிலும், கௌடியா மடத்திலும் வாழ்ந்துகொண்டே, உன்னிடம் எப்போது பணம் சேர்ந்தாலும், புத்தகத்தை வெளியிடு என்ற குருநாதரின் கட்டளைப்படி, தனது பக்தி இலக்கிய சேவையை முனைப்புடன் தொடர்ந்தார். சம்ஸ்கிருதம், ஹிந்துஸ்தானி போன்ற மொழிகளில் இருந்த பாகவத புராணம் முதலான அற்புதமான வைணவ கிரந்தங்கள், இவரது மொழிபெயர்ப்பில் விரிவான உரையுடன், ஆங்கில நூல்களாக வெளியாகின. கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரவச் செய்யும் நோக்கில், 1965-ஆம் வருடம் கொல்கத்தாவில் கப்பலேறினார் பிரபுபாதா. கையில் அதிகம் பணமில்லை; வெளிநாட்டில் வரவேற்பாரும் இல்லை; உதவுபவர்களும் கிடையாது. நியூயார்க்கை அடைந்தவர், ஏழைகள் குடியிருக்கும் பகுதியில் பொது இடத்தில் ஓரு மரத்தடியில் காவியுடையும் நெற்றியில் சந்தனக் கீற்றுமாக அமர்ந்தார்; கையில் தாளத்தைத் தட்டிக்கொண்டே... ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே எனும் கிருஷ்ண நாமத்தைப் பாடத் தொடங்கினார். பாடலைக் கேட்டவர்கள் நின்றனர்; அருகில் வந்தனர்; அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளின் லீலைகளையும் கீதையையும் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில், ஆங்கிலத்தில் தெளிவாக எடுத்துரைத்தார். இதில் கிறங்கிப்போன பலரும், அவருடன் இணைந்து கிருஷ்ண நாமாவளியைப் பாடத் துவங்கினர். இப்படி எளிமையாய்த் துவங்கியதுதான் பிரபுபாதாவின் அமைப்பு ! தன்னை மதித்து அழைப்பவர் வீட்டில் தங்குவது, கொடுப்பதை உண்பது, பொது இடங்களில் கிருஷ்ணனின் நாமத்தைச் சொல்லி சொற்பொழிவு ஆற்றுவது என அவரது வாழ்க்கை முறை மாறியது.

அதுமட்டுமா ?! மது, போதை மருந்துகள், பாலியல் வன்முறைகள் எனச் சீரழிந்துகொண்டு இருந்த அமெரிக்க இளைஞர்களிடமும், யுவதிகளிடமும் பேசினார்; கிருஷ்ண பக்தி, நல்லொழுக்கம் மற்றும் நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றால் அவர்களைத் திருத்தி வெற்றி கண்டார். இதனால் பிரபுபாதாவின் புகழ் பரவியது. இவரது பக்தி இலக்கியங்களும் சொற்பொழிவுகளும் அனைவரையும் வசீகரித்தன. இதையடுத்து, 1966 - ஆம் வருடம், ஜூலை மாதம், நியூயார்க் நகரில், இஸ்கான் எனும் அமைப்பு உதயமானது. அடுத்து, சான்பிரான்சிஸ்கோ மற்றும் அமெரிக்காவின் பல நகரங்களிலும் இஸ்கான் கிளைகள் துவக்கப்பட்டன. ஸ்ரீகிருஷ்ணருக்கு ஆலயங்கள், பிரார்த்தனைக் கூடங்கள், கல்விச் சாலைகள், தொழில் மற்ணும் விவசாய மையங்கள் என கிளை பரப்பியது இஸ்கான் அமைப்பு. இங்கிலாந்தில் இந்த இயக்கத்தில், பீட்டில்ஸ் எனும் புகழ்பெற்ற பாப் இசைக் குழுவினர் இணைந்ததால், லண்டன் போன்ற முக்கிய நகரங்களிலும் இந்த இயக்கம் வேரூன்றியது. 1971-ஆம் வருடம் இந்தியா திரும்பிய பிரபுபாதா, இங்கேயும் பல நகரங்களில் ஸ்ரீகிருஷ்ணருக்கு அற்புதமான ஆலயங்களை அமைத்தார். நூற்றுக்கணக்கான ஆன்மிகப் புத்தகங்களை மொழிபெயர்த்தும் உரை எழுதியும் சேவையாற்றிய சுவாமியின் நூல்கள், இதுவரை 80-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. இந்திய பக்தி இலக்கி யங்களைப்பிரசுரித்த வகையில், இன்றைக்கும் முன்னிலையில் நிற்கிறது இஸ்கான் அமைப்பு. உலகெங்கும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மையங்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களையும் கொண்டு விளங்கும் ஹரே கிருஷ்ண இயக்கத்தைத் துவக்கி வழி நடத்திய சுவாமி பிரபுபாதா, 77-ஆம் வருடம் நவம்பர் 14-ஆம் நாள், பிருந்தாவன மண்ணில், தனது வாழ்வை நிறைவு செய்துகொண்டார். எளிமையாக வாழ்ந்து, அரிதான செயல்களை நிகழ்த்தி, ஸ்ரீ கிருஷ்ண பக்தி சாம்ராஜ்ஜியத்தை உலகெங்கும் நிறுவிய சுவாமி பிரபுபாதாவை உலகமே போற்றுகிறது; கிருஷ்ண பக்தி இருக்கும்வரை, பிரபுபாதாவின் புகழும் இருக்கும்!


கருத்துகள் இல்லை: