ராகவேந்திரர் பகுதி இரண்டு
பாலிகனாகப் பிறந்த சங்குகர்ணன், கவுரவர்களுடன் இணைந்திருந்தாலும் கூட அப்போதும் சில புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டான். மனிதர்கள் பாவம் செய்தாலும் சரி, புண்ணியம் செய்தாலும் சரி! கன்மம் எனப்படும் இந்த இரு வினை களால் ஏற்படும் பலன்களை அனுபவிப்பதற்காக பூலோகத்தில் மீண்டும் பிறக்க நேரிடும். அதனால் தான் பாவ, புண்ணியம் இரண்டும் கலந்த இந்த பிறவிச்சுழலில் இருந்து காப்பாற்றும்படி இறைவனிடம் மகான்கள் வேண்டிக் கொள்வார்கள்.பாலிகன் செய்த புண்ணியத்தின் விளைவை அனுபவிக்க அவன் பூலோகத்தில் பிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல நூறு ஆண்டுகள் கடந்தன. கலியுகம் பிறந்தும் பல ஆண்டுகள் ஓடிவிட்டன. மைசூரு மாநிலத்தில் (இப்போதைய கர்நாடகம்), அப்பூர் என்ற கிராமத்தை ஒட்டிய குக்கிராமத்தில் ராமாச்சாரியார் என்பவர் வசித்தார். இவருக்கு குழந்தை இல்லை. ராமாச்சாரியாரும், அவரது மனைவியும் மனம் நொந்து போய் இருந்தனர்.ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால் ஊரார் அவர்களைப் பற்றி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவார்கள். குறிப்பாக, உறவுக்காரர்கள் அந்தப் பெண்ணை மலடி என ஏசுவார்கள். அந்த ஆண்மகனை குடும்ப வாழ்வுக்கு லாயக்கற்றவன் என்பர். ராமாச்சாரியரும் இதற்கு விதிவிலக்கல்ல. கணவனும், மனைவியும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார்கள். அந்த தம்பதியர் கண்ணீர் வடிக்காத நாளில்லை. அவர்கள், தங்கள் பிரச்னைக்கு தீர்வு வேண்டி பிரமான்ய தீர்த்தர் என்ற வைணவத்துறவியை அணுகினர். தீர்த்தர் சுவாமிகளுக்கு எங்கள் நமஸ்காரம். இவள் என் மனைவி, நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்படுகிறோம். ஊராரும் உற்றாரும் எங்களைப் பற்றி பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனம் நொந்து போயிருக்கிறோம். குழந்தை இல்லாதவர்கள் வாழ்வதை விட சாவதே மேல். மேலும், குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கு சிரார்த்தம் முதலியன செய்ய ஆள் இல்லாததால் நரகத்திற்கு செல்வார்கள் என்கிறது சாஸ்திரம். நாங்கள் ஏன் வாழ வேண்டுமென நினைக்கிறோம். எங்களுக்கு குழந்தை பிறக்க வழியிருக்கிறதா? நீங்கள் தான் ஒரு யோசனை சொல்ல வேண்டும், என்றார்.
தீர்த்தர் ராமாச்சாரியரிடம், அன்பனே! கவலைப்படாதே. உனக்கு குழந்தை பிறக்கும் காலம் கனிந்துவிட்டது. ஒரு ஆண்குழந்தை உனக்குப் பிறக்கும், என்றதும், தம்பதியர் உணர்ச்சிப்பிழம்பாகி விட்டனர். தீர்த்தரை சேவித்த அவர்கள், சுவாமி! இதென்ன அதிசயம்! நிஜமாகவா இது நிகழப்போகிறது! எங்களுக்கு குழந்தையா! அதிலும் ஆண் குழந்தையா! என்னே நாங்கள் செய்த பாக்கியம், என்று புன்னகையும், கண்ணீருமாகக் கேட்டவர்களுக்கு அடுத்து வார்த்தைகள் வர மறுத்தன. நா தழுதழுத்தது. மனிதர்களுக்கு மிதமிஞ்சிய மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சரி, அல்லது சோகம் நிகழ்ந்தாலும் சரி! ஏனோ, வார்த்தைகள் வர மறுக்கின்றன. பிரமான்ய தீர்த்தரே அவர்களது இந்த உணர்ச்சிவசப்படும் தன்மையைக் கண்டித்தார். ராமாச்சாரி! நீ ரொம்பவும் சந்தோஷப்படாதே. மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும் போதும், வேண்டாத நிகழ்ச்சிகள் நடக்கும் போதும் மனதை ஒரே நிலையில் வைத்திருப்பவனே சிறந்த மனிதன். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத நிலையற்ற உலகில் நாம் வசிக்கிறோம் என்பதை மறந்துவிடாதே. நல்லது நடக்கப் போகிறது என்பதற்காக மகிழாமலும், துன்பம் வரப்போகிறது என்பதற்காக கலங்காமலும் இருக்க வேண்டும், என சொல்லி விட்டு, ராமாச்சாரி! இந்த அறிவுரையை நான் எதற்காக உன்னிடம் சொன்னேன் என்று உனக்குத் தெரியுமா? என்றதும், கேள்விக்குறியோடு, தீர்த்தரின் முகத்தை அந்த தம்பதியர் ஒரு வித பயத்தோடு நோக்கினர். அத்துடன், தீர்த்தர் சொன்னதில் இருந்த நியாயத்தை உணர்ந்து தங்கள் மகிழ்ச்சியை ஒரு குட்டையைப் போல் சுருக்கிக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்க தயாராயினர்.ராமாச்சாரி! உங்களுக்கு குழந்தை பிறக்கும். ஆனால், அந்தக் குழந்தை எனக்குரியது. குழந்தை பிறந்தவுடன் அவனை எனக்கு தத்துக் கொடுத்து விட வேண்டும், என்றார்.இந்த நிபந்தனையைக் கேட்டதும், தம்பதிகள் விக்கித்துப் போனார்கள். சற்றுமுன் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, நதியில் கரைந்த சர்க்கரை போல் ஆயிற்று. குழந்தை பிறந்தவுடன் சீராட்டி, பாலூட்டி வளர்க்க வேண்டும்.
குருகுலத்துக்கு அனுப்பி அவனுக்கு பெரிய படிப்பெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும், இளைஞன் ஆனதும், சிறந்த பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும், அந்த திருமணத்தை ஊரே வியக்கும் வகையில் பெரிய அளவில் நடத்த வேண்டும், பேரன், பேத்திகளுடன் மகிழ்ந்து விளையாட வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்வது எல்லாப் பெற்றோர்களுக்கும் வாடிக்கை தானே! ஆனால், தீர்த்தர் தங்களுக்கு இப்படி ஒரு நிபந்தனை விதிக்க என்ன காரணம் என்று யோசித்தனர்.சுவாமி! எங்களுக்கு குழந்தை பிறக்குமென தங்கள் திருவாக்கு மலர்ந்ததும் நாங்கள் மகிழ்ந்தோம். இப்போது, இப்படி ஒரு நிபந்தனை விதிக்க காரணமென்ன? என அவர்கள் கவலையுடன் கேட்டனர்.ராமாச்சாரி! கவலைப்படாதே! உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை சாதாரண குழந்தையல்ல. அவன் உலக இச்சைகளில் வாழ்வதற்காகப் பிறக்கவில்லை. மிகப்பெரிய புண்ணிய ஆத்மாவான அந்தக் குழந்தை சன்னியாச நிலை பெற்றுய்வதற்காக பிறக்கிறது. நீங்கள் அந்தக் குழந்தையை என்னிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்தால் மட்டுமே உங்களுக்கு குழந்தை பாக்கியம். இல்லாவிட்டால் இதுவும் சிரமமே! என்றார். உலகம் உய்வதற்காக ஒரு மகானைப் பெற்றுத் தரப்போகிறோம். அத்துடன் மலடி என்று ஊரார் சூட்டிய கொடுமையான பட்டத்தில் இருந்து விடுதலையும் கிடைக்கும். துறவியின் நிபந்தனைக்கு சம்மதித்து விட வேண்டியது தான் என முடிவெடுத்த அந்தத்தாய், சுவாமி! எனக்கு குழந்தை பிறந்தால் போதும், பிறந்தவுடன் தங்களிடமே ஒப்படைத்து விடுகிறேன், என்று கண்ணீர் மல்க கூறினார்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வியாழன், 3 டிசம்பர், 2020
ராகவேந்திரர் பகுதி இரண்டு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக