வியாழன், 3 டிசம்பர், 2020

ராமகிருஷ்ணர் பகுதி ஒன்று


ராமகிருஷ்ணர் பகுதி ஒன்று

சத்தியம் தவறாத சுதிராமிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவ்வூரில் மிகப்பெரிய ஜமீன்தார் ராமானந்தர். அவரைப் பகைத்துக்கொண்டு யாராலும் வாழ இயலாது. அவ்வாறு பகைத்துக்கொண்டால் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சொத்துக்களைப் பறித்துக்கொண்டு ஊரைவிட்டே விரட்டிவிடுவார். இதே நிலைமைதான் இப்போது சுதிராமிற்கு ஏற்பட்டிருந்தது. சத்தியம் தவறாத உத்தமரான சுதிராம் கோல்கட்டாவிலிருந்து 120 கி.மீ. தொலைவில் அமைந்திருந்த தேரேய்பூர் கிராமத்தில் வசித்தார். அவரது முன்னோர்கள் புகழ்பெற்று விளங்கினர். ராமபிரான் அவர்களின் குலதெய்வம். இருந்தாலும் சிவபெருமானையும் வழிபடத் தவறுவதில்லை. 50 ஏக்கர் நிலத்திற்கு சுதிராமும், அவரது இரண்டு தம்பிகளும் சொந்தக்காரர்கள். ஏழைகளுக்கு இரக்கத்துடன் உதவுவார்கள். பிறர் துன்பம் கண்டு மனமுருகும் தன்மை கொண்டவர்கள். இக்குடும்பத்தின் புகழ் பக்கத்து கிராமங்களில்கூட பரவியிருந்தது. மாணிக்ராம் சட்டர்ஜி என்பவர்தான் இக்குடும்ப தலைவராக இருந்தார். அவரது மகன்தான் சுதிராம். சுதிராமிற்கு பிறகு நிதிராம், கனைராம் என்ற தம்பிகளும், ராம்சிலா என்ற தங்கையும் பிறந்தார்கள். இவர்களில் சுதிராம் பக்தியில் மிகுந்த நாட்டமுள்ளவர். ராமபிரானைத் துதித்துக்கொண்டே இருப்பார். காலையில் ராமனை வணங்கிய பிறகுதான் தண்ணீர்கூட குடிப்பார். தியாக உணர்வு மிக்கவர். உண்மை மட்டுமே பேசுவார். அவருக்கு இயற்கையாகவே ஆசைகள் மனதில் இல்லை. ஒழுக்கம் தவறி நடப்பவர்களைக் கண்டால் ஒதுங்கிப் போய் விடுவார். அவர்களைப்பற்றி வேதனையோடு பேசுவார். சாஸ்திர சம்பிரதாயங்களில் அதிக நாட்டம் கொண்டவர்.

அக்கால அந்தணர் மரபுப்படி, இளமையிலேயே அவருக்கு ஒரு சிறுமியை மணம் செய்து வைத்தனர். ஆனால், அச்சிறுமி மனைவி சில நாட்களில் இறந்து போனார். மீண்டும் இருபத்தைந்தாம் வயதில் சந்திரமணிதேவி என்னும் நற்குண மங்கையை மணம் செய்துகொண்டார். சந்திராவும் தன் கணவரைப் போலவே பக்திப்பிழம்பாக இருந்தார். கள்ளம் கபடமற்றவர். பிறரது துன்பங்களை வலியச்சென்று ஏற்றுக்கொள்வார். ஒரு சுமைதாங்கியாக அவர் திகழ்ந்தார். 1805-ல் இத்தம்பதியருக்கு ராம்குமார் என்ற மகன் பிறந்தான். 1810-ல் காத்யாயனி என்ற மகள் பிறந்தாள். இதன்பிறகு 16 ஆண்டுகள் கழித்து ராமேஸ்வர் என்ற மகன் பிறந்தான். மூத்தவர் என்ற முறையில், குடும்பப் பொறுப்பு சுதிராமின் கைவசம் இருந்தது. உழைப்பில் வல்லவரான அவர் குடும்பத்திற்காக ஏராளமான சொத்துக்களைச் சேர்த்தார். செழுமைக்கு பஞ்சமில்லை. ஆனால், இந்த அழகிய குடும்பத்தின் மீது யார் கண்பட்டதோ; அல்லது சுதிராம் ராமனின் பக்தர் என்பதால், இயற்கையாகவே துன்பம் ஆட்கொண்டதோ தெரியவில்லை. அவரது குடும்பத்திற்கு வந்தது சோதனை. அப்போது தேரேய்பூர் கிராமம் ஜமீன்தார்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருந்தது. அவர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கு மொத்தமாக வரியை கட்டிவிட்டு கிராமத்தை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வருவார்கள். அவர்கள் வைத்தது தான் சட்டம். அவர்கள் விதித்தது தான் வரி. தேரேய்பூர் கிராமம் ராமானந்தராய் என்ற ஜமீன்தாரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அவர் பெரும் கொடுமைக்காரர்.

அவ்வூரில் வசித்த ஏழை ஒருவன் அவரது கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தான். அவன்மீது பொய்வழக்கு தொடர்ந்தார் ராய். தனது வழக்கிற்கு சாட்சிகளை அவர் தேடவேண்டி வந்தது. அவ்வூரிலேயே சத்தியவான் என கருதப்பட்டவர் சுதிராம். எனவே அவரை சாட்சிசொல்ல அனுப்பினால், அந்த சாட்சியம் நியாயமானதாகக் கருதப்பட்டு, ஏழைக்கு தக்க தண்டனை கிடைக்கும் என அவர் நம்பினார். சுதிராமிற்கு ஆள் அனுப்பினார். நான் சொல்வதை நீ கேட்க வேண்டும். அந்த ஏழைக்கு எதிராக நீ நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் நான் உனக்கு வேண்டிய வசதி செய்து தருகிறேன் என்றார். சத்தியம் தவறாத சுதிராம் இதற்கு மறுத்தார். ஏய் சுதிராம்! நீ சாட்சி சொல்ல மறுத்தால் அந்த ஏழையின் கதிதான் உனக்கும் ஏற்படும். உன்மீதும் பொய் வழக்கு போட்டு உன் சொத்துக்களைப் பறிப்பேன். உன் குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வந்துவிடுவேன். நீ மட்டுமின்றி உனது சகோதரர்களும் அவர்களது குடும்பமும் தெருவிற்கு வந்துவிடும், ஜாக்கிரதை, என மிரட்டினார் ராமானந்தர்.

சுதிராம் அவரது மிரட்டலுக்கு பணியவில்லை. என்னால் ஒரு ஏழையின் குடும்பம் அழியக்கூடாது. என் குடும்பம் வேண்டுமானால் அழிந்து போகட்டும், என ஆணித்தரமாகச் சொல்லி விட்டார். தன் குடும்பமே அழியப்போகிறது என தெரிந்தும் சத்தியம் தவறக்கூடாது என்பதில் உறுதியாக நின்று விட்டார். ஆனால், அந்த ஜமீன்தாரின் செல்வாக்கின் முன் சாதாரண பணக்காரரான சுதிராமின் சத்தியம் எடுபடவில்லை. ராமானந்தர் நினைத்ததை சாதித்துவிட்டார். சுதிராம்மீது பொய்வழக்கு தொடுக்கப்பட்டது. அவரது வீடு, 50 ஏக்கர் நிலம் அத்தனையும் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ராமானந்தருக்கு சொந்தமாகிவிட்டன. தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த வீட்டை விட்டு குடும்பத்தினர் கண்ணீருடன் வெளியேறினர். ஊர்மக்கள் அவர்கள்மீது பரிதாபப்பட்டார்களே தவிர, ஜமீன்தாருக்கு பயந்து எவ்வித உதவியும் செய்ய முன்வரவில்லை. சுதிராமின் இரண்டு சகோதரர்களும் அவரவர் மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டனர். 40 வயதே நிரம்பிய சுதிராம் மனைவி, குழந்தைகளுடன் நட்ட நடுரோட்டில் தத்தளித்து நின்றார். அப்போது ஒரு கரம் அவரது தோளைப் பற்றியது..


கருத்துகள் இல்லை: