கிருஷ்ண சைதன்யர்
விருந்தாவனம்.. டில்லி அருகிலுள்ள ஒரு கிராமம். இங்கு மட்டும் இப்போது 5 ஆயிரம் கிருஷ்ணர் கோயில்கள் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இங்கே கிருஷ்ணருடன் ராதையும் எழுந்தருளியிருக்கிறாள். இந்தளவுக்கு ராதையின் மீது கிருஷ்ணருக்கு என்ன பிரியம்? இவ்வுலகில் எத்தனையோ காதலர்கள் உள்ளனர். ஒவ்வொரு கணவன் மனைவியும் கூட காதலர்களே. இவர்களெல்லாம் பகலில் பணத்தைப் பற்றி பேசுகிறார்கள். இரவில் சுகத்தைப் பற்றி பேசுகிறார்கள். இது தான் வாழ்க்கை; இந்த சக்கரம் ஒழுங்காக உருண்டு ஓடினாலே போதும் எனக் கருதுகிறார்கள். இவர்கள் நூறாண்டுகளே வாழ்கிறார்கள் என வைத்துக் கொள்வோமே. ஒரு நாளாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கும். வள்ளுவரின் மனைவி வாசுகி கணவர் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாமல் தான் இருந்தார். ஆனால், அவர்கூட வாழ்வின் கடைசி நாளில், அவர் செய்த சில செய்கைகள் பற்றி கேள்விகள் கேட்டாராம். ஆனால், ராதா அப்படியல்ல. அவள் பேசினால் கண்ணன் பேசியததாகத் தான் நினைப்பாள். பாடினால் கண்ணன் பாடியாகத்தான் நினைப்பாள். சாப்பிட்டால் கண்ணன் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகத் தான் கருதுவாள். அவளது நெஞ்சம் அந்த பரந்தாமனுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது. பிறந்தது முதல் கண் விழியாமலே இருந்த அவள், கண்ணனை அவரது அன்னை அவளது வீட்டுக்கு எடுத்து வந்த போது தான் முதன் முதலாக கண்ணைத் திறந்து பார்த்தாளாம். அதன்பிறகு அவரது திருவடிகளைத் தவிர வேறெந்த நினைப்புமில்லை. அவளது இதயம் கிருஷ்ணா என்ற நான்கெழுத்து மந்திரத்தில் மூழ்கிக் கிடந்தது.
கிருஷ்ண பரமாத்மாவுக்கோ அவளது பிரேமையை மதிப்பிட அளவுகோலே கிடைக்கவில்லை. ஊரில் எல்லாரையும் சோதிக்கும் அந்த பரந்தாமனுக்கு அவளுக்கு சோதனை கொடுக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு அவளது காதல் மீது பொறாமையே ஏற்பட்டு விட்டது. இப்படி ஒருத்தி நம்மைக் காதலிக்கிறாளே... நம்மை அடையத் துடிக்கிறாளே...இவள் தரும் அன்பை என்னால் தாங்கவே இயலவில்லை. இவள் தரும் காதல் சுவையை நான் அனுபவிக்கிறேன். அனுபவிக்கும் எனக்கே இவ்வளவு சுகம் என்றால், அதைக் கொடுக்கும் உனக்கு, எவ்வளவு சுகமாய் இருக்கும். அதை அனுபவித்து உணர்ந்து கொள்ளப் போகிறேன். அது மட்டுமல்ல. உலகத்து மக்களெல்லாம் என்னை அடையத் துடிக்கிறார்கள். என்னை அடைவதே இன்பமென கருதுகிறார்கள். அப்படி என்ன இன்பம் அதில் இருக்கிறது என்பதையும் அனுபவித்து தெரிந்து கொள்ளப் போகிறேன், என்று தமக்குள் அங்கலாய்த்தார். அது மட்டுமல்ல! கிருஷ்ணர் இப்பூமியில் அவதரிக்க துடித்தமைக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. இந்த கலியுகத்தில், இவ்வுலகில் இனி மந்திரங்கள் எடுபடாது. பகவத்கீதை படிக்க நேரமிருக்காது. உலகம் ஏதோ ஒரு சுகத்தை நோக்கி நடை போடும். பகவந்நாமா சொல்ல ஆளிருக்காது. இறைவணக்கத்தை எளிமைப்படுத்தி, நாம சங்கீர்த்தனம் என்னும் புதிய சமயத்தை படைக்க வேண்டும். அதன் மூலம் பக்தியைப் பரப்ப வேண்டும் என்பதும் அவரது நோக்கமாயிற்று.
இதற்காக அவர் பூமிக்கு புறப்பட்டார். யார் வயிற்றில் பிறப்பது என யோசித்தார். சாந்திபுரா என்ற இடத்தில் அத்வைத ஆச்சாரியார் ஒருவர் இருந்தார். இவரது இல்லத்தில் தினமும் ஏராளமான பக்தர்கள் கூடுவர். கீதை, பாகவதம் ஆகியவற்றில் இருந்து கருத்துரைகளை ஆச்சாரியார் எடுத்துக் கூறுவார். அங்கு வரும் பக்தர்கள் கிருஷ்ணரைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். ஆச்சாரியாருக்கு இதிலெல்லாம் திருப்தி ஏற்படவில்லை. இந்த உலக மக்கள் அனைவருமே கிருஷ்ணரைப் பற்றி சிந்திக்க வேண்டும். பிறப்பு இறப்பு இல்லாத ஆனந்த நிலையை அடைய வேண்டும். எல்லாருமே கிருஷ்ணருள் கலக்க வேண்டும், என தனக்குள் சொல்லிக் கொண்டார். ஒருமுறை கௌடாமியா தந்த்ரா என்ற நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வாசகத்தை வாசித்தார். யார் ஒருவன் அபரிமிதமான பக்தியுடன் கிருஷ்ணருக்கு வெறும் துளசி இலையையும், கையளவு தண்ணீரையும் கொடுக்கிறானோ, அவனிடம் பகவான் தன்னையே விற்றுக் கொள்கிறார், என்பதே அந்த வாசகம்.
ஆஹா...எவ்வளவு எளிமையான வழிபாடு. கங்கைக் கரையிலே எவ்வளவோ துளசி செடிகள் உள்ளனவே. அவற்றை பறித்து அவருக்கு அர்ப்பணம் செய்வதைத் தவிர வேறென்ன வேலை. கிருஷ்ணா! இப்பூமிக்கு வந்து அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்களை ஆட்கொள்ள வேண்டும், என வேண்டினார். தினமும் துளசி இலைகளைப் பறித்து வந்து பூஜைகளைச் செய்தார். பகவான் பூமிக்கு வர வேண்டுமென நினைத்தாலும், யாராவது ஒருபக்தன் அழைத்தால் தானே வருவார்! நாராயணா இந்த தூணுக்குள் இருந்து வெளியே வா என பிரகலாதன் அழைத்ததால் தானே நரசிம்ம மூர்த்தியாய் அவர் எழுந்தருளினார். அதுபோல் ஆச்சாரியாரின் துளசி கைங்கர்ய அழைப்புக்கு பகவான் கட்டுப்பட்டார். உபேந்திர மிஸ்ரா என்ற அந்தணரின் குடும்பத்தில் அவதாரம் செய்ய முடிவெடுத்தார். இவர் கிருஷ்ணாவதார காலத்தில் கிருஷ்ணரின் தாத்தாவாக இருந்த பர்ஜன்யரின் மறுபிறவி என கருதப்பட்டார். இவருக்கு ஏழு மைந்தர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் ஜெகந்நாத மிஸ்ரா. இவர் இன்றைய மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா நகரில் வசித்து வந்தார். இவ்வூர் கங்கைக்கரையில் உள்ளது. இவர் நீலாம்பர சக்ரவர்த்தி என்பவரின் மகள் சச்சிதேவியை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதியர் தீராத சோகத்தில் மூழ்கியிருந்தனர். ஏன்... இவர்களுக்கு பிறந்த எட்டு பெண் குழந்தைகளும் இறந்து விட்டன என்றால் எந்தப் பெற்றவர்களைத் தான் வருத்தம் வாட்டி எடுக்காது?
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வியாழன், 3 டிசம்பர், 2020
கிருஷ்ண சைதன்யர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக