JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
புதன், 30 டிசம்பர், 2020
தியானம்
தியானம்
தியான அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உள்ளது. சிலருக்கு தியானத்தில் ஏற்படும் அனுபவங்கள் சில நாட்களிலேயே ஏற்படும். இன்னும் சிலருக்கு 6 அல்லது 9 மாதங்களில் கூடத் தோன்றும். அது மனநிலை அல்லது மன ஒருமைப்பாட்டின் தரத்தைப் பொறுத்து அமையும். ஒரு சிலருக்கு இத்தகைய அனுபவங்கள் எதுவுமே தோன்றாத நிலையில் அவர்கள் சாதனையில் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். இந்த அனுபவங்கள் காட்சிகளாகவோ, ஒலிகளாகவோ, உணர்வுகளாகவோ பலவாறு அமைகின்றன. இவை எல்லாம் நம் மனதின் சிருஷ்டிகளே. சூக்கும உலகோடு தொடர்பு உடையவை. பஞ்ச பூதங்களின் தன்மாத்திரைகளின் பல தரங்களின் ஒழுங்கான அசைவுகளால் பல லோகங்களாக உள்ளது சூக்கும உலகம். ஜாக்ரதையில் நாம் செய்த நமது தீவிர சிந்தனையின் உருவகமாகவோ அல்லது முற்றிலும் கற்பனையாகவோ இருக்கும். நம் இஷ்ட தெய்வங்களையும் காணக் கூடும். சில வேளைகளில் நம்மை நாமே கூட காண்பது போன்ற காட்சிகளும் அமையும். பலவிதமான இனிய நாதங்களும் கேட்கும். கண்ணைக் கூசும் ஒளிகளும் தோன்றும். ஒழுங்காக விடாமுயற்சியுடன் தியானம் செய்யும் போது தியானத்தின் இலட்சியப் பொருள் வெகு விரைவில் நம் முன் தோன்றும். தேவதைகள், நம் குரு, சித்தர்கள், ரிஷிகளின் தரிசனங்கள் கூட கிடைக்கும். தீவிரமான மன ஒருமைப்பாட்டின் போது மூலாதாரச் சக்கரத்திலிருந்து மின்சாரம் பாய்வது போன்ற உணர்வும் சிலருக்கு ஏற்படும். உடனே அவர்கள் பயந்து பௌதிக உணர்வு நிலைக்குத் திருந்பி விடுகிறார்கள். பயப்பட வேண்டிய அவசியமில்லை. அச்சமின்மையே சாதனையில் வெற்றியைத் தரும்.மேலும், நாம் தியானிக்கும் பொருள் நம்மை அப்படி சுற்றிலும் படர்ந்து மூடுவது போலத் தோன்றும். விண்வெளி எங்கும் ஒளிர்வது போலத் தோன்றும். இவை எல்லாவற்றையும் கடந்த பேரமைதியையும் உணரலாம். இந்த அனுபவங்கள் பேரானந்தத்தைத் தரும். ஆனால் இவற்றால் எல்லாம் நாம் நம் இலக்கை அடைந்து விட்டோம் என்று சிலர் தவறாக எண்ணிப் பயிற்சியில் தடுமாற்றம் அடைந்து விடுகிறார்கள். தாங்கள் ஆத்மானுபூதி அடைந்து விட்டதாகக் கருதி சாதனையை நிறுத்தி விட்டு பிறருக்கு போதனை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். இது சாதனையில் மிகப் பெரிய வீழ்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தி விடும். இத்தகைய அனுபவங்களெல்லாம் இதற்கும் மேலான ஆன்மீக வாழ்விற்கு உங்களை அழைத்து சொல்வதற்கு தரப்படும் ஊக்கங்களே ஆகும். அவற்றில் லயித்து நம் இலட்சியத்தை இழந்து விடக் கூடாது. காட்சிகளும், அனுபவங்களும் வரும், போகும். இவைகளெல்லாம் சாதனையில் முடிந்த நிலைகளல்ல. இவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து சாதனையில் ஏற்படும் முன்னேற்றத்தை இழந்து விடக் கூடாது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் கடந்து போக வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு தரப்பட்டுள்ளது. உள்ளார்த்தமான, நேரடியான பரம்பொருள் அனுபவம் ஒன்றே உண்மையானது. அதை நீங்கள் அடைந்து விட்டால் பிறகு உங்களுக்கு அப்பால் எதுவும் இல்லை. எல்லாவற்றிற்குள்ளும் நீங்களும், உங்களுக்குள் எல்லாமும் இருப்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக