திருக்கச்சி நம்பிகள்
சென்னை அருகிலுள்ள பூவிருந்தவல்லியில் 1009ம் ஆண்டு வீரராகவர் கமலாயர் தம்பதிகள் வாழ்ந்தனர். திருமால் பக்தர்களான இவர்களுக்கு நான்காவதாக பிறந்தவர் கஜேந்திர தாசர். இவர் தான் பிற்காலத்தில் திருக்கச்சிநம்பிகள் என்று பெயர் பெற்றார். கஜேந்திரதாசர் திருமாலின் மீது பக்தி கொண்ட வராய் வளர்ந்து வந்தார். முதுமையை எய்தியதும் வீரராகவர் தன் பிள்ளைகள் நால்வருக்கும் சொத்தினை சமமாகப் பிரித்துக் கொடுத்தார். வைசியர்கள் என்பதால் செல்வத்தை மேலும் பெருக்கிக் கொண்டு செல்வந்தர் களாக வாழவேண்டும் என்று வீரராகவர் தன் பிள்ளைகளுக்கு அறிவுரை தந்தார். முதல் பிள்ளைகள் மூவரும் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டு வாழ்ந்தனர். கஜேந்திரதாசர் மட்டும் பணத்தைப் பற்றி எண்ணாமல் திருமாலுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே காலத்தைக் கழித்தார். ஒருநாள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த திருக்கச்சிநம்பிகளின் கனவில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் வந்தார். கஜேந்திர தாசரே! நந்தவனம் அமைத்து, பூக்களைப் பறித்து மாலையாக்கி நாளும் புஷ்ப கைங்கர்யம் செய்வாயாக! உனக்கு எம் அருளைப் பூரணமாகத் தந்தோம்! என்று ஆணையிட்டார். பூவிருந்தவல்லியில் தந்தை கொடுத்த நிலத்தில் நந்தவனம் அமைத்தார். பூக்களைப் பறித்து மாலையாக்கி, நடந்தே காஞ்சிபுரம் சென்று வரதராஜருக்கு மாலை அணிவித்து அழகுபார்த்தார். சிலகாலம் கழித்து, பூவிருந்தவல்லிக்கு வராமல் காஞ்சிபுரத்திலேயே தங்கி ஆலவட்டம் என்னும் விசிறி சேவை செய்யவும் செய்தார். திருக்கச்சி நம்பிகளின் மேலான தூய பக்தியை கண்டு பெருமாளே நேருக்கு நேர் அவருடன் பேசத் தொடங்கிவிட்டார். பெருமாளுடனேயே பேசும் சக்திமிக்க திருக்கச்சிநம்பியின் பாதத்தூளியை (கால் தூசு) வணங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் ஒரு அன்பர்.
அவர் ஒருமுறை நம்பிகளிடம், சுவாமி! அடியேனுக்கு மோட்சம் உண்டா? என்று பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்றார்.பெருமாளும் அவருக்கு மோட்சம் உறுதி என்று பதில் தந்தார். திருக்கச்சி நம்பிகள் பெருமாளிடம் பெருமாளே! அடியேனுக்கும் மோட்சம் உண்டுதானே என்று கேட்டார். பெருமாளோ அவரிடம் அதெப்படி முடியும்! குருபக்தியோடு சேவை செய்து பாகவத அபிமானம் பெற்றால் தான் வைகுண்டம் போக முடியும் என்று பதில் தந்தார். மறுநாளே குரு ஒருவருக்கு சேவை செய்யும் எண்ணத்தில் ஸ்ரீரங்கம் கிளம்பினார் திருக்கச்சி நம்பி. அங்கு குருவாக இருந்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் மாடுமேய்க்கும் வேலையாளாக சேர்ந்துவிட்டார். ஒரு நாள் மழை கடுமையாகப் பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்த மாட்டிற்கு தன் ஆடையைப் போர்த்திவிட்டு தான் அதன் கீழ் படுத்துக் கொண்டிருந்தார். பசுக்கொட்டிலில் நடந்த இந்த நிகழ்வைக் கண்ட கோஷ்டியூர் நம்பிக்கு கண் களில் கண்ணீர் வந்துவிட்டது. தம்பி ஏன் உன் ஆடையை பசுவுக்கு கொடுத்தாய்? என்று கேட்டார். மழையில் நனைந்தால் பசுவுக்கு சீதளம் உண்டாகும்.அதன் பாலைப் பருகும் உங்களுக்கும் சீதளம் உண்டாகுமே. அதனால் தான் இப்படி செய்தேன், என்றார். இதைக் கேட்ட திருக்கோஷ்டியூர் நம்பி இவர் மாடுமேய்ப்பவர் அல்ல பரமஞானி என்று உணர்ந்து கொண்டார். ஸ்ரீரங்கத்திலும் பெருமாளுக்கு விசிறி வீசும் தொண்டு செய்து வந்தார் திருக்கச்சிநம்பி. ரங்கநாதர் அவரிடம் எனக்கு இங்கே காவிரிக்கரையோர காற்று சுகமாக வீசுகிறது. திருமலை (திருப்பதி) செல். அங்கு எனக்கு ஆலவட்டம் வீசு என்று ஆணையிட்டார். எனவே திருக்கச்சி நம்பி, திருமலை சென்று வெங்கடேசப்பெருமாளுக்கு ஆலவட்டகைங்கர்யம் செய்தார். அங்கே பெருமாள் எனக்கு எதற்கு விசிறி? இங்கே மலைக்காற்று சுகமாக இருக்கிறது. காஞ்சிபுரம் செல் வரதராஜப் பெருமாளுக்கு இந்த சேவையைச் செய் என்று அனுப்பி வைத்தார். பின்னர் பூந்தமல்லி திரும்பிய கச்சிநம்பி தினமும் காஞ்சிபுரம் சென்று வரதருக்கு புஷ்பக்கைங்கர்யம் செய்து வந்தார். முதுமையடைந்த பிறகு அவரால் நடக்க முடியவில்லை இருப்பினும் முழங்காலால் தவழ்ந்து கொண்டே காஞ்சிபுரம் சென்று வந்தார். அவரது வைராக்கியத்தைக் கண்ட வரதராஜப்பெருமாள் அவருக்குக் காட்சி கொடுத்து தன்னோடு ஐக்கியமாக்கிக் கொண்டார்.
ராமானுஜரின் குருவான திருக்கச்சிநம்பிகளின் அவதார தலமான பூவிருந்த வல்லி சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் திருப்பதி வெங்கடேசர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதிகள் உள்ளது. மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்ஸவம் நடத்தப்படுகிறது. பங்குனியில் வரும் ஒரு ஞாயிறன்று மூவரும் திருக்கச்சிநம்பிக்கு கருடசேவை காட்சி தருவர். இங்குள்ள வரதராஜப் பெருமாள் புண்ணியகோடி விமானத்தின் கீழ் பின்தலையில் சூரியனுடன் இருக்கிறார். எனவே இது சூரியத்தலமாக கருதப்படுகிறது. இங்குள்ள மகாலட்சுமி தாயார் மல்லிகை மலரில் அவதரித்தாள். இவளை புஷ்பவல்லி என்று அழைக்கிறார்கள். இவள் பூவில் இருந்தவள் என்பதால் இவ்வூருக்கு பூவிருந்தவல்லி எனப் பெயர் இருந்தது. இப்போது அது மருவி பூந்தமல்லி ஆகிவிட்டது. ராமானுஜரின் அவதார தலமான ஸ்ரீபெரும்புதூரில் அவரது திருநட்சத்திர விழா நடக்கும் போது இங்கிருந்து மாலை பரிவட்டம் பட்டு கொண்டு செல்வர். மாசியில் திருக்கச்சிநம்பியின் அவதார விழா நடக்கும் போது காஞ்சி வரதராஜர் கோயிலில் இருந்து மாலை பரிவட்டம் பட்டு இங்கு வரும். அன்று வரதராஜர் இவரது சன்னதி முன் எழுந்தருளுவார். அப்போது நம்பி இயற்றிய தேவராஜ அஷ்டகம் பாடி விசேஷ பூஜை செய்வர். வருடத்தில் இந்நாளில் மட்டும் மூலவர் நம்பிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். ஆனி மிருகசீரிஷத்தன்று 108 கலச பூஜை செய்து வரதராஜர் புஷ்பவல்லி ஆண்டாள் மற்றும் திருக்கச்சி நம்பிக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கும். பிரகாரத்தில்உள்ள திருக்கச்சி நம்பியின் குரு ஆளவந்தாருக்கு, ஆடியில் திருநட்சத்திர விழா நடக்கும்.
திருமாலின் தீவிர பக்தரான திருக்கச்சி நம்பிகள் காஞ்சி பெருமாளுக்கு கைங்கரியம் செய்து வந்தார். இவரை ஏழரைச்சனி பிடிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. இவரிடம் சனி பகவான் சுவாமி தங்களை பிடிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதற்கு தங்களது அனுமதி வேண்டும் என வணங்கி நின்றார். அதற்கு நம்பிகள் பகவானே தாங்கள் என்னை பிடிப்பதால் ஏற்படும் கஷ்டங்களை நான் தாங்கி கொள்வேன். அந்த கால கட்டத்தில் நான் பெருமாளுக்கு செய்யும் கைங்கரியத்தில் ஏதேனும் இடைஞ்சல் ஏற்பட்டு விடுமே எனவே ஏழரை ஆண்டுகள் என்பதை கொஞ்சம் குறைத்து கொள்ள கூடாதா என்றார். அதற்கு சனீஸ்வரர் ஏழரை மாதங்கள் பிடிக்கட்டுமா? என்றார். நம்பியோ ஏழரை மாதம் அதிகம் என்றார். அப்படியானால் ஏழரை நாட்கள பிடிக்கட்டுமா? என்றார் சனி பகவான். வேண்டுமானால் ஏழரை நாழிகை பிடித்துக் கொள்ளுங்கள் என்றார். சனிபகவானும் ஒத்துக்கொண்டார். மறு நாள் நம்பிகள் பெருமாளுக்கு ஆலவட்டம் விசிறி விட்டு தமது இருப்பிடம் திரும்பினார். அப்போது சனிபகவான் நம்பிகளை பிடித்து கொண்டார். கவுன்ட்டவுன் ஆரம்பமாகி விட்டது. நம்பிக்கு ஏழரை ஆரம்பமாகிவிட்டது. அந்த நேரத்தில் கோயில் கருவறையில் திருவாராதனம் செய்ய ஆரம்பித்தார் ஒரு அர்ச்சகர். அப்போது நைவேத்தியம் வைக்கும் தங்க கிண்ணத்தை காணவில்லை. இதை யார் எடுத்திருப்பார்கள் யோசித்து யோசித்து பார்த்தார் அர்ச்சகர். அப்போது தான் அவருக்கு ஞாபகம் வந்தது. கடைசியாக பெருமாளுக்கு கைங்கரியம் செய்து விட்டு போனது திருக்கச்சி நம்பி. அவரோ மாபெரும் மகான். அவரா இந்த தட்டை எடுத்திருப்பார்.ஒரே குழப்பம். இருந்தாலும் சந்தேகம் மட்டும் தீரவில்லை. கோயில் அதிகாரிக்கு இந்த அர்ச்சகர் தகவல் தெரிவித்து விட்டார். கோயில் ஊழியர்கள் கோயில் முழுவதும் தேடினார்கள். ஆனாலும் கிடைக்கவில்லை. கடைசியாக நம்பிக்கு ஆள் அனுப்பி வரவழைத்து விசாரிப்பது என்ற முடிவுக்கு வந்தனர். நம்பிகள் வரவழைக்கப்பட்டார். தங்க கிண்ணம் என்னாயிற்று? ஆளாளுக்கு கேள்வி கேட்டனர். நெருப்பில் விழுந்த புழுவாய் நம்பிகள் துடித்தார்.பெருமாளே உனக்கு நான் செய்த பணிக்கு திருட்டுப்பட்டமா எனக்கு கிடைக்க வேண்டும்? எப்போதும் என்னிடம் பேசுவாயே இப்போது பேசு.எல்லோரது முன்னிலையிலும் பேசுஎன புலம்பினார். ஆனால் பெருமாளோ அமைதியாக இருந்து விட்டார். நம்பிகள் நம்பிக்கை இழக்கவில்லை பெருமாளே எல்லாம் உன் விருப்பப்படி நடக்கட்டும் என சொல்லிவிட்டு தண்டனையை ஏற்றுக்கொள்வதற்காக அரசவை நோக்கி காவலர்களால் ரோட்டில் அழைத்து செல்லப்பட்டார் நம்பி. மக்கள் அனைவரும் இவரை மிகவும் ஏளனமாக பார்த்தனர். இவருக்கு மிகவும் அவமானமாக போய் விட்டது. இதற்குள் ஏழரை நாழிகை முடிந்து விட்டது. அப்போது கோயில் அர்ச்சகர்கள் ஓடி வந்தனர்.சுவாமி கிண்ணம் கிடைத்து விட்டது.சுவாமியின் பீடத்திற்கு கீழே கிண்ணம் மறைந்து இருந்தது. அறியாமல் நடந்த தவறுக்கு மன்னியுங்கள்என மன்னிப்பு கேட்டனர். சனிபகவானும் இறைத்தொண்டு செய்த நம்பியிடம் நடந்ததை விளக்கி மன்னிப்பு கேட்டு விலகிக் கொண்டார். மாபெரும் மகானுக்கே சனிபகவானால் இந்த பாதிப்பு என்றால் சாதாரணமான நமக்கு சொல்லவே வேண்டாம். எனவே பெருமாளை வழிபட்டு சனிதோஷம் நீங்கப்பெறுவோம்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
புதன், 30 டிசம்பர், 2020
திருக்கச்சி நம்பிகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக