ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

பீஷ்மாச்சாரியர்

பீஷ்மாச்சாரியர்

இஷ்வாகுவின் மகன், மகாபிஷக் ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் நடத்தியவர். ஒரு முறை பிரம்மனின் சபையில் மகாபிஷக் மற்றும் பல ரிஷிகளும், தேவர்களும் இருந்தனர். அங்கே மகாபிஷக்கும் இருந்தார். கங்காதேவியும் அங்கே இருந்தாள். திடீரென வீசிய காற்றால் கங்காதேவியின் மேலாடை விலகிப் பறந்தது. மகாபிஷக் கங்காதேவியின் அழகில் மதிமயங்கி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். கங்காதேவியும் மகாபிஷக்கின் அழகில் மயங்கினாள். பிரம்ம சபையில் காம உணர்வுகளுக்கு இடமில்லை. காமவயப்பட்ட மகாபிஷக் கங்காதேவி ஆகிய இருவர் மீதும் பிரம்மா கோபம் கொண்டார். “அற்ப ஆயுள்கொண்ட மனிதர்களைப் போல காமவயப்பட்டீர்கள். எனவே நீங்கள் இருவரும் பூலோகத்தில் மனிதர்களாகப் பிறப்பீர்கள். பின்பு கணவன் மனைவியாக இணைந்து சுக துக்கங்களில் உழல்வீர்களாக. பூவுலகில் கங்காதேவி மகாபிஷக்கிற்கு விருப்பம் இல்லாததைச் செயல்களைச் செய்வாள்’” என்று சபித்தார். முற்பிறவியில் பிரம்மலோகத்தில் பிரம்மாவிடம் பெற்ற சாபத்தின் விளைவாக மகாபிஷக் பூவுலகில் சந்தனுவாகவும், கங்காதேவி மானுடப் பெண்ணாகவும் குரு தேசத்தில் பிறப்பெடுத்தனர். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. கங்காதேவி ஒவ்வொன்றாக அக்குழந்தைகளைக் கங்கை நீரில் மூழ்கடித்தாள். இதன் மூலம் ஏழு அஷ்ட வசுக்கள் சாபவிமோசனம் பெற்றனர். சந்தனு எதுவும் கேட்கக் கூடாது என்பது கங்காதேவி விதித்த நிபந்தனை. எட்டாவது அஷ்ட வசுவான பிரபாசன் குழந்தையாகப் பிறப்பெடுத்தான். அந்த எட்டாவது குழந்தையையும் இவள் மூழ்கடிக்க முயற்சிக்கையில் சந்தனு தடுத்துக் கேள்வி கேட்டான். அதனால் அக்குழந்தை உயிர் தப்பியது. இக்குழந்தைக்குத் தேவவிரதன் என்று பெயர் சூட்டினர்.

அதன் பின் ஒரு நாள் சந்தனு ராஜா ஒரு மீனவப் பெண் மீது மோகம்  கொள்கிறார். அவளை மணக்க சம்மதம் கேட்கும்போது, அவளின் தந்தை மறுக்கிறார். தனது மகளுக்கு பிறக்கும் குழந்தைக்கு. அரசாளும் உரிமை வேண்டும் என நிபந்தனைவிதிக்கிறார். ஆனால் சந்தனுவால் அப்பெண்ணை மறக்க முடியவில்லை மோகத்தின் வயப்பட்டு உடல் மெலிகிறான். தேவவிரதனுக்கு செய்தி தெரிகிறது. உடனே அவர் தன் தந்தைக்காக மீனவனிடம் சென்று, "உன் மகளின் வயிற்று குழந்தைக்குத்தான் அடுத்த ராஜா பட்டம் "என்று  சத்தியம் செய்கிறார்.  அந்த மீனவனோ,"சரி நீங்கள் விட்டு கொடுக்கின்றீர்கள் ,ஆனால் உங்களுக்கு திருமணம் ஆகி,உங்கள் குழந்தைகள் வந்த பின்,அவர்கள் பதவிக்கு போட்டி போடுவார்கள் அல்லவா "என்று பேராசையுடன் சொல்லுகிறான்.பீஷ்மர் அவ்வளவுதானே "நான் திருமணம் செய்தால் தானே குழந்தை பிறக்கும் ?நான் திருமணம் செய்ய மாட்டேன் என்று சபதம் செய்கிறார், மேலும் ,"இந்த பெண் வயிற்று குழந்தைகளின் அரசுக்கு நான் காவலாக இருப்பேன் "" என்று வாக்குறுதி தருகிறார் . அந்த சமயத்தில் வானத்தில் இருந்து ''பீஷ்ம  பீஷ்ம "என்று இவரை வாழ்த்தி அசரீரி ஒலிக்கிறது. பீஷ்ம என்றால் செயற்கரிய செயலை செய்தவர் என்று பொருள். அன்று முதல் அவர், பீஷ்மர் என அழைக்கப்பட்டார். அப்போது மனம் மகிழ்ந்த சந்தனு? "பீஷ்மா,யாரும் செய்ய முடியாத தியாகத்தை செய்து விட்டாய், மகனே, நான் உனக்கு நீ விரும்பும் போதுதான் மரணம் உனக்கு நேரும் என்ற வரம் அளிக்கிறார்.

சகுனியின் சூழ்ச்சியாலும், துரியோதனின் பிடிவாதத்தாலும், குருக்ஷேத்திரப் போர் மூண்டது. போரில், சிகண்டி தன் எதிரில் போர் புரிய வந்தபோது, பெண்ணிற்கு எதிராக போர் புரிய மாட்டேன் என பீஷ்மர், ஆயுதங்களை கைவிட்டு நிற்கையில், அர்ச்சுனன் தனது அம்புகளால் பீஷ்மரை வீழ்த்தினான். பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் வரவிருக்கிற தக்ஷிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.

அவரின் விடைபெறலுக்கு முன் அவரிடமிருந்து  நீதி, நேர்மை, அரசியல் தர்மம் குறித்த போதனைகளைப் பெற தர்ம புத்திரர் விரும்பினார். தனது சகோதரர்கள் நால்வருடன் திரௌபதியையும் அழைத்துக்கொண்டு பிதாமகரிடம் சென்றார் . பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி "பிதாமகரே!தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் " என்று கேட்க, திரௌபதி மட்டும் பலமாக வாய்விட்டுச் சிரித்தாள். அதில் கேலியின் தன்மையை உணர்ந்த தர்மர், " தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய்?இது தகாத செயல்" என்று கேட்டார்.
"அன்று துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது, ஸ்ரீ கிருஷ்ணன் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும்? அன்று, இதே பீஷ்மர், அந்தச் சபையில் அமர்ந்து, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர, துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா? இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றிக் கேட்கிறீர்களே என்று நினைக்கும்போது சிரிக்காமல் என்ன செய்வது?" என்று சொல்ல, பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியானார்கள்.

பீஷ்மர் பொருள் பொதிந்த பார்வையுடனும் புன்னகையுடனும் பதில் அளித்தார்.
"திரௌபதியின் சிரிப்பும் கேள்வியும் முற்றிலும் நியாயமானது. அவளுக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போதுதான் உங்களுக்கும், உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும். துரியோதனன் அன்னமிடுவதில் உயர்ந்தவன். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறையும்படி உபசரிப்பான். ஆனால் அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல, சுயநலத்துக்காக. "ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக்கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது. அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோதும் எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன்" .

ஆனால் இப்போது அர்ச்சுனன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த தீய எண்ணங்களுடன் கலந்திருந்த ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது. அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன. இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது.எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவனாக என்னைக் கருதுகிறேன்." என்று சொல்லி, பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார். தன் தந்தையிடம் பெற்ற இச்சா மரண வரத்தினால், அம்புப் படுக்கையில் இருந்தும் உயிர் நீங்காமல் இருந்தார்.பீஷ்மர் கடவுளின் ஆயிரம் நாமங்களை (விஷ்ணு சஹஸ்வர நாமம்) ஜபிக்கத் தொடங்கினார்,அவர் அவற்றைச் சொல்லச் சொல்ல சூரியன் வடக்கு நோக்கி நகர்ந்தது.

போர் முடிந்த பௌர்ணமியிலிருந்து எட்டாம் நாள் பீஷ்மர் உயிர் துறந்தார்.

கருத்துகள் இல்லை: