ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

ராமானுஜர்

ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ

ஶ்ரீ இராமனுக்கு மூல நட்சத்திரத்தில் தோன்றிய ஆஞ்சனேயர் எப்படி கைங்கர்யம் செய்தாரோ அதேபோல் பகவத் ஶ்ரீராமானுஜர் கட்டிய வைணவ மார்க்கத்துக்கு கைங்கர்யம் செய்த ஆசாரியரான ஶ்ரீ மணவாள மாமுனிகளுக்கு பூலோக வைகுண்டமான ஶ்ரீரங்கத்தில் அந்த வைகுண்டநாதனான ஶ்ரீரங்கநாதன் தானே குழந்தையாக வந்து  ஶ்ரீசைலேசதயாபாத்ரம் தனியன் சேவித்த நன்னாள் ஆனிமூலம் நாள்

1433ம் ஆண்டு இதேபோல் தமிழ் பிரமாதீச ஆண்டு ஆனி மாதம் ஞாயிற்றுக்கிழமை பெளர்ணமி திதியில் மணவாள மாமுனிகளின் திருநட்சித்திரமான மூல நட்சத்திரத்தை போன்ற  அதாவது ஆனிமாத மூல நட்சத்திரமன்று

ஶ்ரீராமனின் ஆராதன பெருமாளான ஶ்ரீரங்கம் பெரிய பெருமாள் அழகியமணவாளர் அவரின் ஸ்ரீரங்கம் பெரிய கோவிலில் உள்ள காயத்ரி மண்டபத்தில் பகவத் ஸ்ரீராமானுஜரின் மறு அவதாரமான நம் ஜீயரான ஸ்ரீ மணவாள மாமுனிகளைத் தம் ஆசார்யராக ஏற்க திருவுள்ளங்கொண்டு

தன் கல்யாண குணங்களை தானே அவரின் வாயால் பிரவசனமாக கேட்க எண்ணி சுமார் ஒருவருட காலம் காயத்ரி மண்டபத்தில் திருவாய்மொழி காலட்சேபம் அவரின் திருவாயால் கேட்டருளி மிகவும் மனம் உகந்து ஒரு சிறு பாலகன் ரூபத்தில் வந்து ஆசாரியரான இவருக்கு ஒரு தனியனை சேவித்து அதை ஒரு சுவடியில்
எழதி மணவாளமாமுனிகளிடம் சமர்பித்தார்

தனியன் என்றால் ஒரு ஆசார்யர்களைப் போற்றி அவரது சீடர்கள் இயற்றிப் பாடும் பாடல் அல்லது ஸ்தோத்ரம்

பன்னிரு ஆழ்வார்களுக்கும் பல ஆசார்யப்பெருமக்கள் அவரவர் காலத்தில் அவரவர் கருத்துகளாக பல தனியன்களை பாடியதால் ஒன்றுக்கும் மேற்பட்ட தனியன்கள் உள்ளன

அதேபோல் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் இயற்றிய கிரந்தங்களுக்கும் தனித்தனியாக தனியன்கள் உள்ளன

தனியன் என்பது தனிபாடல்

அதாவது ஆழ்வார் ஆசார்யர் இயற்றிய கிரந்தங்களின் பகுதியாக இல்லாமல் இந்த பாடல் தனியாக இருப்பதாலும்

ஆனால் ஆழ்வார் ஆசாரியர்கள் இயற்றிய பிரபந்தம் கிரந்தம் மற்றும் அவர்களது சரிதை ஆகியவற்றை நாம் சேவிக்கும் (படிக்கும்/பாடும்) முன் இந்த தனி ஸ்தோத்ரத்தைச் அவர்கள் முன் சேவித்த பின்பே தொடங்க வேண்டும் என்பது மரபு இப்படியாக தனியாக சேவிப்பதால் தனியன் எனப்படுகிறது

அதுசரி நம்பெருமாள் சேவித்த தனியன் என்ன என்றால்

ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்,
தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே
ரம்ய ஜாமாதரம் முநிம்  என்பதே

அதாவது ஶ்ரீசைலேசர் என்றழைக்கப்படும் ஶ்ரீதிருவாய்மொழிப்பிள்ளையின்
(ஶ்ரீமணவாள மாமுனிகளின் ஆசார்யர்) எல்லையற்ற கருணைக்கு பாத்திரமானவரான
பக்தி ஞானம் வைராக்யம் ஆகிய குணங்கள் நிறைந்தசமுத்திரம் போன்றிருப்பவருமான
ஶ்ரீயதிராஜரான ஶ்ரீராமானுஜர் மீது அளவுக்கதிகமான பக்தி கொண்டவரான
ஶ்ரீஅழகிய மணவாள மாமுநிகளை அடியேன் வணங்குகிறேன் என்பது அர்த்தம்

தனியனைப் பாடிய அந்த சிறுவன் பெயர்
ரங்கநாயகம் என்பதாகும்

அதாவது சிறுவன் வடிவில் வந்த ரங்கத்தின் நாயகனான சாட்சாத் ஶ்ரீரங்கநாதப் பெருமாளே என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை

இதிலே ஒரு விசேஷம் என்னவென்றால் ஶ்ரீரங்கநாதனின் பெயரும் அழகியமணவாளன் தான்

பொதுவாக சிஷ்யனானவன் குருவின் பெயரை தனக்கான பெயராக ஏற்க்க வேண்டும் ( ராமானுஜதாசன் என்பது போல்) என்ற உயர்ந்த நோக்கிலேயே மணவாளமாமுனிகளை ஆசாரியனாக ஏற்று
இப்போது இருவர் பெயரும் ஒன்றுதானே

எப்படி நம்மாழ்வார் தனது அந்தாதி ஆயிரம் பிரபந்த பாசுரத்தில் உயர்வர உயர்நலம் என தொடங்கி ஆயிரத்தில் இப்பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே என முடித்தாரோ

அதே போல் எந்த பகவான் ஶ்ரீமன் நாராயணன் தானே ஆசாரிய பரன்பரையில் முதலாவதான ஆசாரியனாக இருக்கிறானோ அதே பகவான் இந்த கலியில் தோன்றியுள்ள கடைசி ஆசாரியரிடம் தானே சிஷ்யனாக மாற ஆசைபட்டு ( ஶ்ரீமன் நாராயணனே தன் ஸ்வருபமாக பிரமனிடம் ஆராதிக்க கொடுத்த பெருமாளே அழகியமணவாளன் என்ற நம்பெருமாளான ஶ்ரீரங்கன்) உயர்(வற)என ஆரம்பித்து உயர்(ந்தார்) என நம்மாழ்வார் முடித்தது போல் ஆசாரிய பரன்பரையை மீண்டும் தன்னிடமே கொண்டுவர ஆசைபட்டு ஶ்ரீஅழகியமணவாளரான மணவாளமாமுனியை தன் ஆசாரியராக ஏற்று தான் வேறு அவர் வேறு அல்ல என காட்டும் விதமாக தனது அனந்தனையும் அவருக்கு உகந்து கொடுத்தார்

அப்பேற்பட்ட ஆசாரிய குரு சிஷய பரன்பரையில் வந்துள்ள நாம் நம் ஜீயரான மணவாளமாமுனிகளை நாளை இந்த தனியனை ஒருமுறைக்கு இருமுறை சேவித்து உய்வோம்

ஆசாரியன் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்

ஜெய் ஶ்ரீராம்!

கருத்துகள் இல்லை: