புதன், 22 ஜூலை, 2020

அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் இல்லத்திற்கு வந்தார் முனிவர் ஒருவர். அப்போது அபிமன்யு வீட்டில் இல்லாததால், அவனது மனைவி உத்தரையைச் சந்தித்து ஆசியளித்த அவர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை பரிசளித்தார்.

அதன் முன் நிற்பவருக்கு பிரியமானவர் யாரோ அவரது முகமே கண்ணாடியில் தெரியும். உத்தரை உற்றுப் பார்த்தாள். அவளது கணவர் அபிமன்யு தெரிந்தார். சற்று நேரத்தில் வீடு திரும்பிய அபிமன்யு கண்ணாடியைப் பற்றிய விபரம் அறிந்து வியந்தான். அவன் பார்த்த போது அதில் மனைவியான உத்தரை தெரிந்தாள். அன்புக்கயிறால் இருவரும் கட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். அப்போது அபிமன்யுவின் தாய்மாமன் கிருஷ்ணர் அங்கு வந்த போது, ”கண்ணாடியைப் பார்த்து ஆச்சரியப்படுகிறீர்களே! என்ன விஷயம்?” என்றார்.

”மாமா! இந்த கண்ணாடியில் நீங்கள் தெரிய மாட்டீர்கள். உங்களுக்கு அன்புக்குரியவர் யாரோ அவரே தெரிவார். உங்கள் மனதைக் கவர்ந்தவர் அத்தை ருக்மணியா, பாமாவா” என்றான் அபிமன்யு. யாராவது ஒரு மனைவியை அடையாளம் காட்டி, இன்னொருத்தியிடம் சிக்குவானா அந்த மாயக்கிருஷ்ணன்! அவன் கண்ணாடி யைப் பார்த்த போது அதில் சகுனி தெரிந்தான்.

”இதென்ன விந்தை” என்றான் அபிமன்யு. ”அபிமன்யு! பக்தர்கள் கூட காரியம் ஆக வேண்டுமென்றால் தான் என்னை நினைப்பார்கள். ஆனால் துாக்கத்திலும் கூட என்னைக் கொல்லத் துடிக்கிறான் சகுனி. எப்போதும் அவனுக்கு என் நினைவு தான். அதனால் எனக்கும் அவன் நினைவு” என்றார். நிந்தனை செய்தாலும் நாத்திகர்கள் தான் கடவுளை அதிகம் சிந்திக்கிறார்கள் என்பதற்கு சகுனியே சாட்சி.

கருத்துகள் இல்லை: