ஞாயிறு, 12 ஜூலை, 2020

#ஆலயதரிசனம்..

#பண்ணாரி_மாரியம்மன்.                 

அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமான பராசக்தி பல்வேறு  பெயர்களுடன் பல்வேறு தலங்களில் குடிகொண்டிருக்கிறாள். அவள் பண்ணாரி காட்டில் மாரியம்மன் என்ற பெயருடன் சக்தி வாய்ந்த தெய்வமாக  விளங்குகிறாள். காட்டுக்குள்ளேயே இவளுக்கு விழா நடக்கிறது.  நவராத்திரியையொட்டி இவளை தரிசித்து வருவோம்.

#தல_வரலாறு...

பண்ணாரியில் ஓடிய தோரணப்பள்ளம் என்ற காட்டாற்றங் கரையில் மக்கள் மாடு மேய்த்து வாழ்ந்தனர். ஒரு காராம்பசு ஒன்று தன் கன்றுக்கு கூட பால் கொடுக்காமல் காட்டுக்குள் அடிக்கடி ஓடி ஒளிந்தது. மடுநிறைய பாலுடன் செல்லும் பசு, திரும்பும் போது காலியான மடுவுடன் வரும். மாடு மேய்ப்பவர் ஒருநாள் பசுவை பின்தொடர்ந்து சென்று கவனித்தார். அந்தப்பசு, ஒரு வேங்கை மரத்தடியில்உள்ள புற்றில், பாலைப் பொழிவதைப் பார்த்தார். மறுநாள் கிராம மக்களிடம்  விபரத்தைக் கூறினார். மக்கள், அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்த போது, ஒரு அம்மன் திருவுருவம் இருப்பதை பார்த்தனர். பசு அந்த அம்மனுக்கே அபிஷேகம் செய்ததாகக் கருதினர். அப்போது, ஒருவருக்கு தெய்வ அருள் உண்டாகி, ""நான் வண்ணார்க்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரிலிருந்து வருகிறேன் (இவ்வூர் கேரளாவில் உள்ளது). பொதிமாடுகளை ஒட்டிக் கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன். எழில் மிகுந்த இந்த இயற்கை சூழலில் தான் தங்க விரும்புகிறேன். என்னை "பண்ணாரி மாரியம்மன்' எனப் பெயரிட்டு வணங்கி வாருங்கள்,'' என்றார்.

அந்த அருள்வாக்கின்படி அந்த இடத்தில் புற்களைக் கொண்டு குடில் அமைத்து அம்பாளை பிரதிஷ்டை செய்தனர். காலப்போக்கில், விமானத் துடன் சிறிய கோயில் கட்டப்பட்டது. அதில் அமைக்கப்பட்ட தாமரை பீடத்தில் தற்போது அம்பாள் அருள்பாலித்து வருகிறாள்.

#தல_சிறப்பு..

இந்த அம்பாள் கால்நடை வளர்ப்போரின் காவல் தெய்வமாக விளங்குகிறாள். கால் நடைகள் கொண்டு தொழில் செய்பவர்கள், தங்கள் தொழில் விருத்தியடைய அம்பாளை வணங்குகின்றனர். இங்கு அம்மனுக்கு உயிர் பலி ஏதும் இல்லாமல், சைவ படையல் மட்டுமே செய்யப்படுகிறது.  திருநீறுக்கு பதிலாக காட்டிலிருந்து வெட்டி எடுக்கப் படும் புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்தால், திருட்டு மற்றும் தீங்கு போன்ற அபாய செயல்கள் நடக்காது என்பதும், கால் நடைகளுக்கு நோய் வராது என்பதும் நம்பிக்கை. மாறாக, மங்களகரமான செயல்கள் வீடுகளில் நடப்பதுடன், அம்மன் தங்களுக்கு பாதுகாப்பாகவும் இருப்பாள் என்கின்றனர் பக்தர்கள். ஆதரவற்ற சிறுவர்களை பராமரிப்பதற்கான கருணை இல்லம் ஒன்றும் கோயில் சார்பாக நடத்தப்படுகிறது.

#கோயில்_அமைப்பு..

தாமரைப்பீடத்தில் அமர்ந்த நிலையில் பண்ணாரி மாரியம்மனின் கைகளில் கத்தி, கபாலம், டமாரம், கலசம் ஆகியவை உள்ளது. சாந்த நிலையில் முகம் இருக்கிறது. பிரகாரத்தில் மாதேசுவர திருமூர்த்தி, தெப்பக்கிணறு அருகில் சருகு மாரியம்மன், வண்டி முனியப்ப சுவாமி ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.

#குண்டம்_திருவிழா..

இங்கு நடக்கும் குண்டம் திருவிழா சிறப்பு வாய்ந்தது. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இந்த திருவிழா நடந்து வருகிறது. குண்டத்துக்கு தேவையான மரங்கள் குறிப்பிட்ட அளவு காடுகளில் வெட்டப்படுவது வழக்கம். இந்த சடங்கிற்கு "கரும்பு வெட்டுதல்' என்று பெயர். தற்போது பங்குனி மாதம் நடக்கும் குண்டம் திருவிழா நடக்கிறது. இந்த குண்டத்தில் பருத்தி, மிளகாய், தானியங்கள், சூரைத்தேங்காய்களை போடுகின்றனர். இந்த குண்டத்தில் பக்தர்களுடன் கால்நடைகளும் இறங்குவது சிறப்பு.

#கண்வியாதிக்கு_தீர்த்தம்...

காட்டு இலாகா  அதிகாரியாக பணியாற்றிய மற்றொரு ஆங்கிலேயர் , துப்பாக்கியால் பன்னாரி அம்மன் கோயில் சுவற்றில் குறிவைத்துச் சுட்டார். இதன்பிறகு அவரது கண்கள் ஒளி இழந்தன. தவறை உணர்ந்து அம்மனிடம் வேண்டி, கோயிலில் வழங்கப்பட்ட தீர்த்தத்தால் கண் ஒளி பெற்றார். இதனால் தற்போதும் கண்வியாதி  உள்ளவர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படுகிறது. இது கண் வியாதியை குணப்படுத்துவதாக  நம்பப்படுகிறது.திருவிழா காலத்தில் தென்படாத மிருகங்கள்: பண்ணாரி அம்மன் கோயில் சத்தியமங்கலம் காட்டில் உள்ளது. இங்கு யானைகள், காட்டுப் பன்றிகள், மான்கள், செந்நாய்கள், கரடிகள் உள்ளிட்ட மிருகங்கள் உள்ளன. கோயில் தெப்பக்கிணறு அருகில் காட்டு யானைகள் தண்ணீர் குடிக்க தொட்டிகளும் கட்டப் பட்டுள்ளன. திருவிழா காலங்களில் இந்த மிருகங்கள் பக்தர்கள் கண்களில் தென்படுவதில்லை.

#பூச்சாற்று_சிறப்பு...

பங்குனி மாதம் அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூச்சாற்று நடக்கிறது. மறுநாள் அம்மன் சப்பரத்தில்  சுற்றுவட்டாரப்பகுதிக்கு வீதி உலா வருகிறாள். சோளகர் என்ற மலைவாசிகள் வாத்தியங்ளும், அருந்ததி இனத்தார் தாரை, தப்பட்டை வாத்தியங்களும் முழங்க சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. பூச்சாற்று விழாவின் ஒன்பதாம் நாள் இரவில் அக்கினி கம்பம் அமைக்கப்பட்டு கம்பத்தருகில் மேளதாளத்துடன் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 15ம் நாள் திருவிழாவில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து அக்கினிக் கரகம் ஏந்தியும், வேல், சூலம் தாங்கியும் மேளதாளங்கள் முழங்க அம்மனை வழிபடுகின்றனர்.

#திருவிழா..

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது.

திறக்கும் நேரம்:
காலை 5.30 முதல் இரவு 9 மணி.

#இருப்பிடம்..
கோவையில் இருந்து 70 கி.மீ., தூரத்தில் உள்ள சத்தியமங்கலம் சென்று, அங்கிருந்து மைசூர் செல்லும் ரோட்டில் 15 கி.மீ., தூரத்தில் பண்ணாரியை அடையலாம். ஈரோட்டில் இருந்தும் இங்கு செல்லலாம்...

கருத்துகள் இல்லை: