சனி, 6 ஜூன், 2020

அம்பா ஆராதனை

அம்பாளை ஆராதிப்பதற்கு ரொம்ப உத்க்ருஷ்டமான சாஸ்த்ரத்திலே சொல்லி இருக்கிற சம்ப்ரதாயத்தை அனுசரித்து எல்லோரும் அனுஷ்டானம் செய்து கொண்டு வருகிறோம்.

அம்பாளை நாம் சாதாரணமாக ஸஹஸ்ர நாமங்கள் சொல்லி ஆராதிப்பது உண்டு.

ஸஹஸ்ர நாமங்கள் என்று சொன்னால் நாம் சொல்லி வருவது சாதாரணமாக லலிதா ஸஹஸ்ர நாமம்தான்.

அந்த லலிதா ஸஹஸ்ர நாமத்தைச் சொல்லி நாம் அம்பாளை ஆராதிப்போம்.

நிஜமாக அந்த ஸஹஸ்ர நாமத்தினுடைய அர்த்தத்தை நாம் புரிந்து கொண்டால் அது ஒரு ரொம்பப் பெரிய விஷயம். அது புரிந்து கொண்டு அதன்படி நாம் நடந்துகொண்டால் நாம் அம்பாளுடைய பரிபூரண க்ருபைக்குப் பாத்ரமாவோம்.

ஸஹஸ்ர நாமங்களில் அம்பாளுடைய மகிமை எவ்வளவு? என்பதைச் சொல்லியிருக்கிறது.

அம்பாளுடைய பூஜை பண்ணக் கூடியவன் எப்பேர்ப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறது.

வேதாந்தத்து சித்தாந்தம் என்ன என்பதையும் இங்கு சொல்லியிருக்கிறது. எல்லாமே சொல்லி இருக்கிறது.

அம்பாளுடைய மகிமை என்ன என்பதன் விஷயம் வரும்போது

“பவதாவ ஸூதா வ்ருஷ்டி: பாபாரண்ய தவானனா
தௌர்பாக்ய தூல வாதூனா
ஜராக் வாந்த ரவிப்ரபா
பாக்யாப்தி சந்த்ரிகா
பந்த சித்த கேகி கனாகனா
போக பர்வத தம்தூளி;
ம்ருத்யு தாரு குடாரிகா

என்று சொல்லியிருக்கிறது.

அவளை (அம்பாளை) பூஜித்தால் என்ன வெல்லாம் கிடைக்கும்? என்றால் கிடைக்காதது ஒண்ணுமில்லை.

 “பவதாவ ஸுதா வ்ருஷ்டி; ‘பவம்’ என்று சொன்னால் இந்த ஒரு சம்சார சக்கரம். சம்சார சக்ரம் என்று சொன்னால் ஜனன மரணாத்மக ஒரு ப்ரவாகம். பிறக்கிறோம். கொஞ்சம் வருஷம் இந்தப் பூமண்டலத்தில் இருக்கிறோம். திரும்ப இந்த சரீரத்தை விட்டு விடுகிறோம். இன்னொரு சரீரம் வருகிறது. அந்த சரீரத்துலே கொஞ்சம் சுகமோ, துக்கமோ அனுபவிக்கிறோம். போய் விடுகிறோம். திரும்ப இன்னொரு சரீரம். இந்த ஒரு சக்ரம், இது தான் சம்சார சக்ரம் என்பது.

எத்தனை காலம் இந்த சக்ரத்தில் சுற்றிக் கொண்டு இருப்பது? இதில் என்ன சௌக்யம் இருக்கிறது? பார்த்தால் இதில் ஒரு சௌக்யமும் இல்லை.

இந்த சக்ரத்திலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்று சொன்னால் அம்பாளுடைய தயவு வேண்டும். அதிலிருந்து விடுதலை கொடுக்கக் கூடியவள் அம்பாள்.

 “பவதாவ ஸூதா வ்ருஷ்டி;” அதாவது அந்த நாமத்துக்கு நேரடியாக அர்த்தம் சொல்ல வேண்டும் என்று சொன்னால் காட்டிலே தீப்பிடித்து விட்டால் அந்தத் தீ அணைய வேண்டும் என்று சொன்னால் நாம் ஒரு குடம் ஜலம் கொண்டு போனால் அது ஒண்ணும் அணையாது. ஆனால் ஆகாசத்துலேருந்து பெரிய வ்ருஷ்டி: (மழை)வந்தால்தான் அந்தக் காட்டுத் தீ அணையும். இந்த சம்சார சக்ரம் என்கிற இந்த காட்டுத் தீக்கு அவளுடைய அனுக்ரஹம் என்பது ஒரு பெரிய மழை. அப்பேர்ப்பட்டவள் என்று சொன்னால் இந்த சம்சார பயத்தை போக்கக் கூடியவள்.

இரண்டாவதாக “பாபாரண்ய தாவன லா” என்று சொல்லி இருக்கிறது. பாபங்கள், பாபங்கள் செய்து கொண்டே இருக்கிறோம்.

பாபங்கள் செய்யாதவன் யார்? என்று கேட்டால் யாருமே இல்லை. எல்லாரும் ஏதோ ஒரு விதமாக பாபங்கள் செய்து கொண்டே இருக்கிறோம்.

சிலர் சொல்வார்கள். நான் ஒரு பாபமும் செய்யவில்லை என்று சொல்வார்கள். அது சும்மா நீங்கள் சொல்வதோடு சரி. செய்கையிலே உங்களுக்கு அப்படி இருக்க முடியாது. அது தான் பகவத் பாதாள் ஓர் இடத்திலே, மனிதன் பிறந்த அன்றிலிருந்து சாகிற வரையிலும் ஒரு விதமான பாபமும் செய்யவில்லை என்று நெஞ்சு தட்டிக் கொண்டு சொல்ல முடியுமா? சொல்ல முடியாது.

“வாசா’ ஜன்ம ப்ராயண யோஹோ
அந்த ராளே காம்ய ப்ரதி ஸித்த போஹோ ஸர்வாத் மனா வர்ஜனம்
கேனி சித் ப்ரதிக்ஞாதம் அசக்யம்”
பகவத் பாதருடைய வாக்யம் இது.

 “ஸ்வநிபுணானாம் அபி ஸுஷ்மா பராத தர்சனா” அதாவது சம்ஸ்க்ருதத்துலே அவருடைய வார்த்தைக்கு அர்த்தம்.

எவனுமே பிறவியிலிருந்து சாவதற்குள்ளே அந்த சமயத்துலே எந்த விதமான ஒரு காம்ய கர்மத்தையோ, நிஷித்த கர்மத்தையோ அதாவது பாபத்தையோ செய்யவில்லை என்று “ப்ரதிக்ஞா’ செய்ய முடியாது.

எவ்வளவு பெரிய கெட்டிக்காரர் என்று நினைத்துக் கொள்ளும் நபர்களுக்கும், தனக்குத் தெரியாமலே சில தப்பிதங்கள் நடந்து போய் விடும். அதனாலே நம்மால் பாபங்கள் நடக்கவில்லை என்று நாம் சொல்லவே முடியாது. பின்பு என்ன சொல்லலாம்? நான் தெரிந்து ஒரு தப்பிதமும் செய்யவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். தெரியாமல் எவ்வளவு தப்பிதங்கள் நடக்கிறதோ தெரியாது. தெரியாமல் தப்பிதம் நடந்தால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளலாமோ என்று யாரும் சொல்லக் கூடாது.

 ஏனென்றால்

“அனிச்ச யாபி ஸம்ஸ்ப்ருஷ்டோ
தஹத்யே விஹி பாவத:
நெருப்பு இருக்கிறது.

ஒரு சின்னக் குழந்தை நெருப்பைத் தொட்டால் சுடும் என்பது தெரியாது. நெருப்பைத் தொட்டு விட்டது. அப்போது அந்த நெருப்பு அந்தக் குழந்தையின் கையில் சுடாமல் விடுமா? சுடும். அப்போது நாம் போய் அதுகிட்ட “என்ன குழந்தை தெரியாமல் தொட்டு விட்டால் அதையே நீ சுட்டு விட்டாயே!” என்று நாம் யாராவது அந்த நெருப்பை சத்தம் போடலாமா?அதே போல் நாம் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பாபத்துக்குப் பலன் இருக்கவே இருக்கிறது. அதேபோல் புண்யத்துக்கும் பலன் இருக்கிறது.

ஒருவனுக்குத் தெரியவில்லை. அது புண்யம் என்று சொல்லி பண்ணி விட்டான். ஆனாலும் அந்த புண்யத்துடைய பலன் கிடைக்கத்தான் செய்யும்.அதாவது ஓர் இடத்துலே இந்த மாதிரி ஒரு  ஸத்காலட்சேபம் நடந்து கொண்டு இருந்தது. ஒருவன் வந்தான். இங்கு காலட்சேபம் நடக்கிறது என்பதே தெரியாது. அந்த இடத்துலே உட்கார்ந்தான். ஸ்வாமி தர்சனம் பண்ணினான். போய் விட்டான். அவனுக்கு அந்த பலன் இருக்கவே இருக்கும். பஜனை நடந்து கொண்டு இருந்தது. அவனும் அவர்களோடு சேர்ந்து அந்த பஜனை நாமத்தை உச்சரித்தான். அதனுடைய பெருமை என்ன என்பது தெரியாது. எல்லாரும் பகவான் நாமா சொல்கிறார்கள். அவனும் சொல்லிவிட்டான். அந்த பலன் அவனுக்கு இருக்கவே இருக்கும். அதுதான் பூர்வார்த்தத்துலே சொன்னார்,

 “தஹரர் ஹரதி பாபானே
திஷ்ட தித்மதர விஸ்ம்ருத:
என்று சொன்னார். அதனால் நாம் பாபங்கள் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பாபம் பாபம்தான். அதற்கு பலனை அனுபவிக்க வேண்டியது உண்டு. அப்போது எத்தனையோ பாபங்கள் நடக்கிறதே இந்த எல்லாப் பாபங்களுக்கும் நாம் ப்ராயச்சித்தத்துக்கு  எங்கே போவது? அந்த ப்ராயச்சித்தங்கள் நமக்குத் தெரியவும் தெரியாது. அதனால் இந்த இத்தனை பாபங்களுக்கும் ப்ராயச்சித்தம் தேவியினுடைய நாமத்தை உச்சாரணம் செய்தால், தேவியினுடைய மகிமையைச் சொல்லும் போது

ஏகஸ்ய நாம்ணே ஞான  சக்தி:
பாப கானான் நிவர்த்தயே
தன் நிவர்த்ய மதே கர்த்தம்
மானன் லோகாய் ஸதுர்தசே”

இந்தப் பதினான்கு லோகங்களிலே இருக்கக் கூடிய ஜனங்கள் அத்தனை பேரும் செய்த பாபங்கள் எல்லாவற்றையும் தேவியுடைய ஒரு நாமமே போக்கும் என்று அதற்கு அர்த்தம்.

அம்பாளை எப்படியெல்லாம் ஆராதிக்கலாம் என்பதை மேலும் சிந்திப்போம்.

கருத்துகள் இல்லை: