வெள்ளி, 5 ஜூன், 2020

*லிங்க புராணம் ~ பகுதி — 09*

        காலனை வென்ற
        சுவேதன் வரலாறு
=======================

சுவேதன் என்ற மறையோன் தன் வாழ்நாள் மிகக்குறைவே என்று அறிந்து ஈசன்தாள் பற்றி., சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து பக்தியுடன் வழிபட்டு வந்தான். எந்த நேரமும்., அவன் செயல் நினைப்பு அனைத்தும் ஈசனைப் பற்றியதாகவே இருந்தது. அவன் ஆயுள் முடியும் நேரம் காலனே நேரில் வந்தான். காலனைக் கண்டு அவன் சிறிதும் அஞ்சவில்லை. மேலும் ஈசன் திருவடிகளைப் பற்றினார்க்கு யாராலும்., எவ்விதமும் துன்பம் நேராது என்று காலனிடம் சொன்னான். உன்னால் எனக்கு என்ன பயம் என்றான். அதைக் கேட்ட காலன் கடுஞ்சினம் கொண்டு பாசக்கயிற்றை சுவேதன் மீது வீசினான். கயிறு இறுகத் தொடங்கியது. சுவேதன் "என்னைக் காப்பது நீயே அல்லவா..?" என்று எண்ணியவாறு தான் பூஜித்து வந்த லிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டான்.

அடுத்த கணம் லிங்கத்திலிருந்து தோன்றிய பரமன் கோபத்துடன் காலனை உற்று நோக்க அவன் வாகனத்திலிருந்து கீழே விழுந்து உயிர் நீத்தான். பரமன் சுவேதனுக்கு அழியா வாழ்வைக் கொடுத்து தம் கணங்களில் ஒருவனாக இருக்க அருள் செய்தார். உயிரற்றுக் கிடந்த யமுனை எழுப்பி அவனிருப்பிடம் அனுப்பி வைத்தார். சுவேதன் வரலாற்றைக் கூறிய பிரமன் முனிவர்களிடம், ஈசனைத் தியானித்து அவரைப் பக்தியுடன் ஆராதித்து வாருங்கள். சிவலிங்கம் ஒன்றை அமைத்து அதில் ஈசனைத் தியானித்து மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுங்கள். உங்கள் அன்புக்கு ஈசன் கட்டுண்டு அருள்புரிவான் என்றார். அவ்வாறே முனிவர்கள் பக்தியுடன் பூசிக்க திருப்தி அடைந்த ஈசன் அவர்களுக்கு அருள்புரிய முன் தோன்றிய அதே திகம்பர சந்நியாசி கோலத்தில் தாருகாவனம் வந்து சேர்ந்தார். இம்முறை முனிவர்கள் ஈசனை அன்புடன் வரவேற்றனர், வணங்கினர். முனி பத்தினிகளும் அவர்களுடன் ஈசனை வழிபட்டனர். மேலும் அவர்கள் ஈசனை நோக்கி, நாங்கள் செய்த அபசாரங்களை மன்னித்து, அடியார்களாகிய எங்களிடம் அளவற்ற அன்பு பூண்டு, பக்தியுடன் நாங்கள் அளிக்கும் உபசாரங்களை மனமுவந்து ஏற்று அருளவேண்டும் என்று வேண்டினர்.

அப்போது ஈசனின் திகம்பர வடிவம் மறைந்து, கைகளில் மானும், மழுவும் ஏந்தி உமாதேவியுடன் காட்சி அளித்தார். முனிவர்கள் பரமானந்தக் கடலில் மூழ்கினர். நெஞ்சம் உருக ஈசனைப் பக்தியுடன் துதித்து வணங்கினர். சுவேதன் வரலாறு, மார்க்கண்டேயன் வரலாறு போன்றது. மேலும், விரிஞ்சன் முதலான தேவர்கள் பாசுபத விரதத்தை ஆற்றியே அழியா உயர் பதத்தை அடைந்தனர். ஆகவே நீங்களும் அவ்விரதத்தைப் பக்தியுடன் கடைப்பிடியுங்கள் என்று கூறி மறைந்தார் ஈசன். முனிவர்களும் பக்தியுடன் பாசுபத விரதத்தைக் கடைப்பிடித்து வல்வினைகள் தொலையப் பெற்றனர்.

தொடரும்.....

*லிங்காஷ்டகம் தமிழில்....*

ப்ரம்ம முராரியார் போற்றிடும் லிங்கம்
சிறிதும் களங்கம் இல்லா சிவலிங்கம் ।
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எறித்த கருணாகர லிங்கம் ।
இராவணன் உள்ளம் விளங்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

வாசமனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரண லிங்கம் ।
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிடை நாகம் அணிந்திடும் லிங்கம் ।
தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம் ।
தொங்கிய வினைகளை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

தேவ கணங்களின் அர்ச்சனை லிங்கம்
தேடிடும் பக்தியில் வூரிடும் லிங்கம் ।
சூரியன் கோடி சுடர் விடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

எட்டு தளத்தினுள் எழுந்திடும் லிங்கம்
எல்லாமாகிய காரண லிங்கம் ।
எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

தேவரின் உருவில் பூஜைக்கும் லிங்கம்
தேவ வனமலரை ஏற்றிடும் லிங்கம் ।
பரமநாதனாய் பரவிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

லிங்காஷ்டகம் இதனை தினமும் சிவ சன்னதியில் சொல்வார்
சிவலோக காட்சியுடன் சிவனருளும் கொள்வார்….
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி….

கருத்துகள் இல்லை: