ஞாயிறு, 24 மே, 2020

ஸ்ரீவிட்டோபா ஸ்வாமிகள்
உடல் முழுதும் புழுதி, சேறு; இடுப்பில் ஒரு கோவணம் மற்றும் அரைகுறையான மேலாடை என்னும் கோலத்தோடு, ஊர் முழுதும் சுற்றிக் கொண்டிருந்தார் துறவி ஒருவர். சாப்பாடு கிடையாது; ஒருவேளை பசித்தால், ஏதாவது ஒரு வீட்டின் முன் நின்று, இருமுறை கைகளைத் தட்டுவார். ஓசை கேட்டு, யாராவது வந்து உணவு இட்டால் சரி... இல்லையேல், பட்டினி தான். நல்லவர்கள் என்றும் எங்கும் இருப்பர் அல்லவா! அதன்படி, அந்த ஊரில் இருந்த பெண்மணி ஒருவர், இந்த உத்தம துறவியின் நிலை உணர்ந்து இரங்கி, தினந்தோறும் அத்துறவி வரும்போது, அவரை வணங்கி உபசரித்து, உணவு அளிப்பார். துறவியும் அன்போடு இடப்படும் அந்த அன்னத்தை ஒரு கவளம் வாங்கி கொள்வார். இந்த உத்தமருக்கு உணவளிக்காமல், நான் உண்பதில்லை என்ற நியதியைக் கடைப்பிடித்து வந்தார் அந்தப் பெண்மணி.

ஒருநாள்... அந்த வீட்டுக்கு, உணவிற்காக துறவி சென்றபோது, பெண்மணி வீட்டில் இல்லை; ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தார். பெண்மணியின் கணவர் மட்டும் வீட்டில் இருந்தார். துறவியைப் பார்த்தார்; துறவியின் கோலமும், தோற்றமும் அந்த மனிதருக்கு, அலட்சியத்தையும், சினத்தையும் உண்டாக்கின. ஆதலால், அவர் தன் கையில் இருந்த பிரம்பை ஓங்கி, ’போ, போ... இங்க நிக்காதே... போ...’ என்று திட்டி, விரட்டி விட்டார். துறவியும் வாய் திறவாமல், நகர்ந்து விட்டார். இது நடந்து நீண்டநேரம் கடந்து, பெண்மணி வீடு திரும்பினார். துறவி வந்ததோ, அவரைத் தன் கணவர் அவமானப்படுத்தித் துரத்தியதோ, பெண்மணிக்குத் தெரியாது. அவர், ’என்ன ஆச்சு இன்னிக்கி... அந்த மகான் உணவுக்கு இன்னும் வரலியே...’ என்று கவலையில் ஆழ்ந்தார். அலுவலகம் சென்ற, அந்தப் பெண்மணியின் கணவர் எழுதத் துவங்கினார்; ஊஹூம், எழுத முடியவில்லை. சில வினாடிகளில் கை முழுதுமாக உணர்ச்சியற்று, செயலற்றுப் போய் விட்டது. மருத்துவரிடம் ஓடினர்; பலனில்லை. அதனால், அவரை வீட்டிற்கு கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினர் நண்பர்கள்.

பதறித் துடித்தார் மனைவி, ’ஏன் இப்படி நடந்தது...’ எனக் குழம்பினார். அந்த நேரத்தில் அவர் கணவர், ’இன்று, ஒரு பரதேசி வீட்டிற்கு வந்தார். பிரம்பை ஓங்கி, கண்டபடி திட்டி, அவரை விரட்டினேன். ஒருவேளை, அதனால், இப்படி ஆகியிருக்குமோ...’ என்றார், மனைவியிடம். பெண்மணிக்கு உண்மை புரிந்தது. ’ஆகா! வந்தது, நம் மரியாதைக்கு உரிய துறவி தான். நம் கணவர் அவமானப்படுத்தியது அவரைத்தான்...’ என்பதை உணர்ந்தார். உடனே, கணவரை ஒரு வண்டியில் அழைத்துக் கொண்டு, துறவியைத் தேடிப் போனார். துறவி, ஒரு இடத்தில், உட்கார்ந்து, கைகளால் தாளம் போட்டபடி, பாடிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும், பெண்மணி, வண்டியிலிருந்து இறங்கி, துறவியின் திருவடிகளில் விழுந்தார்; துறவியின் முன், கணவரை நிறுத்தி, மன்னிக்கும்படி வேண்டி அழுதார். அவர் கணவரின் பாதிக்கப்பட்ட கையை, கருணையோடு பார்த்த துறவி, ’ஜா ஜா...’ என்று சொல்லி, பழையபடி பாடலை முணுமுணுத்து தாளம் போடத் துவங்கினார்.

அதே வினாடியில், செயலற்று இருந்த கை செயல்படத் துவங்கியது. கணவரின் கை செயல்படத் துவங்கியதைக் கண்ட பெண்மணி, ஆனந்தக்கண்ணீர் சிந்த, கணவரோடு சேர்ந்து, துறவியின் திருவடிகளில் மீண்டும் விழுந்து வணங்கினார். அந்தத் துறவி, விட்டோபா சுவாமிகள். இந்நிகழ்ச்சி நடந்த இடம், திருவண்ணாமலையில் இருந்து வேலுார் செல்லும் வழியில் உள்ள போளூர் என்னும் ஊர். ஸ்ரீவிட்டோபா சுவாமிகளின் சமாதி, இன்றும் அங்கே உள்ளது. யாரையும் இழிவாகப் பேசி, அவமானப் படுத்தாமல் இருந்தால், தெய்வத் திருவருள் தானே வந்து பொருந்தும் என்பதை விளக்கும் வரலாறு இது.இவர் சித்தியான போது ஸ்ரீசேஷாத்திரி ஸ்வாமிகள் வானத்தை நோக்கி அதோ விட்டோபா போறான் என்று பல முறை கூறினாராம்
மதுரகாளிதாசன்

கருத்துகள் இல்லை: