செவ்வாய், 10 டிசம்பர், 2019

11.இடைக்காடர்

நவக்கிரகங்களில் குருவைத் தவிர அனைவரும் பதறிப் போனார்கள். நாம் சரியான இடத்தில் தானே நேற்றிரவு படுத்திருந்தோம், இன்று இடம் மாறியிருக்கிறோம். எப்படி இது நிகழ்ந்தது? நமது மாறுபாட்டான நிலையால், கொடும் பஞ்சம் சம்பவிக்க வேண்டிய ஒரு மாமாங்க காலத்தின் நடுப்பகுதியிலேயே, மழை கொட்டிக் கொண்டிருக்கிறதே! இனி நாம் முந்தைய நிலையை அடைந்தாலும், மழை நிற்குமா? என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.குரு சிரித்தார்.கிரகங்களே! நீங்கள் பேசுவது நகைப்புக்குரியதாய் இருக்கிறது. நாம் ஒருமுறை இடம் மாறி விட்டால், குறிப்பிட்ட காலம் வரை அதே இடத்தில் தான் சஞ்சரிக்க முடியும் என்ற விதியைக் கூட மறந்து விட்டீர்களா? விதியை மதியால் வெல்லலாம் என்பது இதுதான்! இந்த விளையாட்டுக்கு காரணமானவர் யார் தெரியுமா? இடைக்காடர்... ஆம்... நேற்று வரை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அவர், இன்று மாபெரும் சித்தர். சிவனருள் பெற்றவர். அவரது மதி பலம் மட்டுமல்ல... நமக்கெல்லாம் படியளக்கும் சிவபெருமான் மீது அவர் கொண்டிருக்கும் பக்தியும் இதற் கொரு காரணம், என்றதும், ஆ... என வாயைப் பிளந்த கிரகங்கள், ஆடு மேய்த் தவர் சித்தரானது எப்படி? குருதேவா! எங்களுக்கு விளக்கியருள வேண்டும்? என்றனர். குரு இடைக்காடரின் வரலாறை விவரித்தார். இடைக்காடர், காஞ்சிபுரம் அருகிலுள்ள இடையன் மேட்டைச் சேர்ந்தவர் என்று ஒரு சாராரும், சிவகங்கை அருகிலுள்ள இடைக்காட்டூரைச் சேர்ந்தவர் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். எப்படியிருப்பினும், ஊரின் பெயரே இவருக்கு நிலைத்திருக்கிறது. இவரது தந்தை நந்தக்கோனார், தாய் யசோதா. இந்தப் பெயர் களைக் கொண்டு, இவரைப்பெருமாளின் ஒரு அம்சம் என்று கூறுபவர்களும் உண்டு.

கண்ணன் பசுக்களை மேய்த்தார், இவரே ஆடுகளை மேய்த்தார். கல்வியறிவு அறவே இல்லை. இந்த ஆடுகள் அங்குமிங்கும் பாய்கின்றனவே! தனக்கு வரும் ஆபத்தை உணராமல் குறுக்கும் நெடுக்குமாக ஓடி, முன்னால் செல்ல துடிக்கின்றனவே! இவற்றின் மந்தபுத்தியால், இவை தனக்கும், பிறருக்கும் சிரமத்தைத் தருகின்றனவே! ஓ...ஆண்டவனே! இந்த ஆடுகளின் ஸ்பாவத்தைப் போலவே தானே, உன்னைப் போன்ற மனிதர் களின் ஸ்பாவமும் இருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறாயோ! மனிதன் கடவுளுக்கு பயப்படவா செய்கிறான்? ஆடுகளைப் போல குறுக்கு வழியில் முன்னேறத்தானே நினைக்கிறான்! இந்த ஆடுகளை நான் நல்வழிப்படுத்தி, அவரவர் வீட்டில் ஒப்படைப்பது போல, மனித ஜீவன்களையும் ஒழுங்குபடுத்தி, உன்னிடம் ஒப்படைக்கத்தான் எனக்கு இந்தப் பிறவியைத் தந்துள்ளாயோ! படிப்பில்லாவிட்டாலும் கூட, இடைக்காடரின் மனதில் ஆழ்ந்த ஞானத்தைத் தரும் இந்தக் கேள்வி எழும்பியதும், இதற்கு விடை தேடி அலைந்தார். ஆடுகளை ஓரிடத்தில் மேயவிட்டு, கோலை ஊன்றி, ஒற்றைக்காலை உயர்த்தி, தவ நிலையில் இருப்பார். சிவபெருமானே! என் கேள்விக்கு விடை வேண்டும், இந்த சமூகத்தை நான் ஒழுங்குபடுத்த வேண்டும். கல்வி எனக்கில்லை, யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள அது அவசியமும் இல்லை. எனக்கு, மனித வாழ்வின் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ளும் சக்தியைக் கொடு, இந்த சமுதாயத்தை ஒழுங்குபடுத்தும் உபாயத்தைச் சொல்,.... இப்படி அன்றையப் பொழுது முழுவதும் பல மாதங்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். ஒருநாள், அவர் முன்னால் அதிபயங்கர மின்னல் போன்ற பிரகாசமான ஒளி வீசியது. அது இடைக்காடரின் உடலில் பாய்ந்தது. இடைக் காடருக்கு ஏதோ தனக்குள் மாற்றம் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அப்போது அசரீரி ஒலித்தது. சேவை... சேவை... சேவை... இதுவே மனிதன் என்னை அடைவதற்கான வழி...பிறருக்கு சேவை செய். அதற்குரிய உபாயத்தைக் காண். மகனே! இதோ, ஞானநூல்கள் அனைத்தையும் கற்ற பெருமைக்குரியவர்களின் வரிசையில் உன்னையும் சேர்க்கிறேன்.

நீ இன்று முதல் பெரிய மகான். சாதாரண இடைக்காடன் அல்ல... இடைக்காட்டு சித்தன்... இடைக்காட்டு சித்தன்... ஒலி நின்றுவிட்டது. சிவனருளால் இடைக்காடர் இப்படி சகல ஞானமும் பெற்றதும், அவரால் நினைத்ததை எல்லாம் செய்ய முடிந்தது. ஒருமுறை அவர் தியானத்தில் இருந்த போது, கொடிய பஞ்சம் வரப்போவதை அறிந்தார். அந்த பஞ்சம் 12 ஆண்டுகள் நீடிக்கும் என்பதைக் கணித்தார்.ஆஹா...நதிகள் வற்றப்போகின்றன. ஊற்று தோண்டினால் கூட தண்ணீர் கிடைக்காது. தண்ணீர் இல்லாவிட்டால் உலகமேது. இந்தப் பஞ்சத்தால் பல உயிர்கள் அழிவது உறுதியாகி விட்டது. நானும் அதில் ஒருவனாகத்தானே இருப்பேன்! ஒருவேளை நான் உயிர் பிழைத்தேன் என்றால், ஏதாவது செய்து இந்த மக்களுக்கு நல்வழி பிறக்கச் செய்யலாம்.
--------------------------

கருத்துகள் இல்லை: