வெள்ளி, 6 செப்டம்பர், 2019

மஹாளய பட்சம்

பித்ருக்களின் ஆசி கிடைக்கும் மஹாளய பட்சம் : தட்சிணாயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசையும் உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசையும் முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதனிடையே புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் தொடங்கி விட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 28 வரை மஹாளய பட்ச காலமாகும். மஹாளய பட்சம் புரட்டாசி அமாவாசையன்று முடிவடையும். அதற்கு முந்திய பதினைந்து நாட்களும் மஹாளய பட்ச காலமாகும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்ததாகும். மஹாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள்ளை தண்ணீருடன் சேர்த்து  அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் வரும் பரணி மஹாபரணி என்றும் அஷ்டமி மத்பாஷ்டமி என்றும் திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படும். மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தனங்களைச் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

புராணங்களில் மஹாளயபட்சம்: கருடபுராணம், விஷ்ணு புராணம், வராகபுராணம், போன்ற தெய்வீக நூல்களில் மஹாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.  இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.  நாம் கலியுகத்தில் வாழ்வதால் அது சாத்தியமில்லாமல் போய் விட்டது.  மஹாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசிவழங்குவதற் காகவே பிதுர் லோகத்தில் இருந்து பிதுர் தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.  வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுது போக்கு அம்சங்களை அறவே தவிர்த்து உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒரு நாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல் பழம் கொடுக்கலாம்.  ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர் பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பின்னர் பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.

அன்னதானம் செய்த கர்ணன் : பிணிகளில் கொடுமையானது பசிப்பிணி. பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள். பசியின் கொடுமை பல தானங்களை செய்த கர்ணனையே வாட்டியது. அதற்கு காரணம் கர்ணன் அன்னதானம் செய்யாது தான் என்று கூறப்பட்டது. அது பற்றிய சுவையான கதை. கர்ணன் தர்மங்கள் பல செய்த மாபெரும் வள்ளல் என்றாலும் கூட அதர்மத்துக்கு துணை போன துரியோதனனுடன் சேர்ந்திருந்ததால் அவனை அழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் கிருஷ்ண பரமாத்மா. குருசேத்திர யுத்தத்தின் முடிவில் கர்ணன் இறக்க வேண்டும் என்பது விதி. இதற்காகவே அர்ஜுனனை தயார் செய்து கர்ணன் மீது அம்பு எய்ய சொன்னார் கிருஷ்ணன். ஆனால் அர்ஜூனன் விட்ட சில அம்புகளால் அவனைக் காயப்படுத்தினவே ஒழிய உயிரைப் பறிக்கவில்லை. அதற்குக் காரணம் கர்ணன் செய்த தர்மம்தான்.

தானம் பெற்ற கிருஷ்ணன் : அப்போது அந்தணராக வேடமணிந்துவந்த கிருஷ்ணன் கர்ணன் செய்த தர்மங்களை அவனிடம் இருந்து தானமாக பெற்றார். அதற்காக அவனுக்கு மோட்சம் அளித்தார். சொர்க்கம் சென்ற கர்ணனுக்கு அவன் செய்த பொன் நவரத்தின தானத்துக்கு பலனாக தங்கமாளிகை கட்டித் தரப்பட்டிருந்தது. பலவிதமான வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன ஆனால் அவனுக்கு அங்கே உணவு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தெரியாமல் அவன் தவித்த போது தேவர்கள் அவனிடம் கர்ணா… நீ பூமியில் இருந்த போது பொன்னும் மணியுமே தானம் செய்தாய் அன்னதானம் செய்யவில்லை. எனவே நீ இப்போது பூமிக்குச் செல். இப்போது மஹாளயபட்ச காலம். பிதுர்கள் பூமிக்குச் செல்லும் காலம். அவர்களை அவரவர் உறவினர் வரவேற்று தர்ப்பணம் செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் செய்வர். இக்காலத்தில் நீ மறைந்திருந்து அன்னதானம் செய்து வா. பின்பு இங்கு உணவும் கிடைக்கும் என்றனர். இதனையேற்று கர்ணன் பூமிக்கு வந்த காலமே மஹாளய காலம் ஆனது.

உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால் அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மஹாளயபட்ச காலத்தில் நாம் எல்லாருமே முன்னோர்களை வரவேற்று பதிநான்கு நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும். கடைசி நாளான மஹாளய அமாவாசையன்று முன்னோருக்கு பெரும் படையல் படைத்து அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். மஹாளயபட்ச காலத்தில் நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும். நமக்கு மட்டுமின்றி உலகிலுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம் மாதா மாதம் அமாவாசை வருகிறது. ஆனால் மஹாளய அமாவாசை என்பது மிகவும் விசேடமானது. மஹாளய அமாவாசைக்கு முன்னர் மஹாளயபட்சம் என்ற ஒன்று ஆரம்பமாகும். எப்படி கிருஷ்ண பட்சம் சுக்கில பட்சம் என்ற இரண்டு உள்ளது. சுக்கில பட்சம் என்றால் வளர் பிறை கிருஷ்ண பட்சம் என்றால் தேய்பிறை. அது போல் மஹாளய பட்சம். இது எப்போது ஆரம்பம் ஆகுமென்றால் ஆவணி மாதத்தில் பெளர்ணமி முடிந்த மறுநாள் மஹாளய பட்சம் ஆரம்பமாகும். இதில் தொடங்கி புரட்டாசி மாதத்தில் அமாவாசை வருகிறது அல்லவா அதுவரை அதாவது பெளர்ணமியில் இருந்த அமாவாசை வரையிலான இரு வார காலம் இந்த மஹாளாய பட்சம் ஆகும்.
-----------------------------------------

கருத்துகள் இல்லை: