வெள்ளி, 13 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 32 ॐ

மேலே நாம் காண்பது சிவகங்கை என்று அழைக்கப்படும் கோவிலைச் சேர்ந்த கோவிலுக்குள்ளேயே இருக்கும் திருக்குளம் ஆகும். மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியை அடுத்து நாம் காண்பது நூற்றுக்கால் மண்டபம் ஆகும். சோழர்களின் தளபதியான காளிங்கராயன் என்பவனால் கட்டிக் கோவிலுக்கு அளிக்கப் பட்டதாயும் முற்காலங்களில் நவராத்திரி சமயத்தில் அன்னை சிவகாமியை இங்கே தான் அலங்காரம் செய்து வைப்பார்கள் என்றும் குறிப்புக்கள் கூறுகின்றன. அடுத்தது நாம் மேலே காணும் சிவகங்கைக் குளம்.

{சிதம்பரத்தில் பத்து முக்கிய தீர்த்தங்கள் உள்ளன.}
அவை1. சிவகங்கை மூன்றாவது வெளிப்பிரகாரத்தில் அன்னை சிவகாமி சன்னதிக்கு நேரே உள்ளது.
2.பரமானந்த கூபம் ஏற்கெனவே நாம் பார்த்தோம் சித்சபைக்கு வெளியே கிழக்கே ஒரு கிணறாக உள்ளது.
3. குய்ய தீர்த்தம் என்று சிதம்பரம் நகருக்கு வட கிழக்கே கிள்ளை என்னும் இடத்துக்கு அருகே உள்ள பாசமறுத்தான் துறையில் உள்ளது.
4.சிதம்பரத்துக்குத் தெற்கே புலிமடு என்னும் தீர்த்தம் உள்ளது.
5. வியாக்ரபாத தீர்த்தம் மேற்கே உள்ளது.
6. அனந்த தீர்த்தமும் மேற்கே அனந்தீஸ்வரர் கோவில் அருகே உள்ளது.
7.நாகசேரி என்னும் தீர்த்தம் அனந்த தீர்த்தத்துக்கு மேற்கே உள்ளது.
8. பிரம்ம தீர்த்தம் சிதம்பரத்துக்கு வடமேற்கே திருக்களன்ச்சேரியில் உள்ளது.
9.சிவப்பிரியை சிதம்பரத்துக்கு வடக்கே தில்லைக் காளி கோவில் அருகே உள்ளது.
10.சிவப்பிரியைக்குத் தென் கிழக்கே "திருப்பாற்கடல்" என்னும் தீர்த்தமும் இருந்தன. தற்சமயம் சில குறிப்பிட்ட தீர்த்தங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் சிவகங்கை முக்கியமானது.

"ஹேம புஷ்கரணி", "அம்ருதவாபி", "சந்திர புஷ்கரணி" என்றெல்லாம் தல புராணங்களில் வர்ணிக்கப்படும் இந்தக் குளம் பண்டைக் காலந்தொட்டே இருந்து வந்ததாய்க் கூறுகிறார்கள். நமக்கு நன்கு தெரிவது ராஜா ஹிரண்யவர்மனின் காலத்தில் இருந்து தான். சோழத் தளபதியான காளிங்கராயனால் குளத்துக்குள் இறங்கும் 9 படிக்கட்டுக்கள் கட்டுவிக்கப்பட்டதாய்த் தெரிகிறது. பல ரூபங்களில் உள்ள சிவலிங்கங்களும் விநாயக மூர்த்திகளும் இந்தக் குளத்தைச் சுற்றிலும் பிரதிஷ்டை பண்ணப் பட்டிருக்கிறது. தென் பகுதியில் தண்ணீருக்குள் "ஜம்புகேஸ்வரர்" லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதாயும் தினசரி தீட்சிதர்களால் வழிபாடு செய்யப் படுவதாயும் சொல்கிறார்கள். ( இன்னும் பார்க்கவில்லை இந்த வழிபாட்டை). பல்லவ ராஜா சிம்மவர்மன் உடல் நலம் குன்றி இருந்த சமயத்தில் மகரிஷி வியாகிரபாதரின் ஆலோசனையின் பேரில் அவன் இந்தக் குளத்தில் புனித நீராடி நடராஜரை ஆனந்தத் தாண்டவக் கோலத்தில் தரிசனம் கேட்டுப் பெற்று வழிபட்டதாயும் அதன் பின்னர் அவன் உடல் நலம் அடையவே தான் பெற்ற பயன் அனைத்து மக்களும் பெறவேண்டி அவன் குளத்தை ஆழப்படுத்தியும் அகலப் படுத்தியும் பராமரிப்புப் பணிகள் செய்ததாயும் கூறுகின்றனர். இதன் பின்னரே அவன் பெயர் ஹிரண்ய வர்மன் என அழைக்கப்பட்டதாயும் கூறுகின்றனர். இந்தக் குளம் ரஜ சபை என அழைக்கப்படும். ஆயிரக்கால் மண்டபத்துக்கும் சிவகாம சுந்தரி சன்னதிக்கும் நடுவே அமைந்துள்ளது. குளத்தின் நடுவில் இருந்து நேரே அன்னை சிவகாமி குளத்தைத் தன் அருட்கண்களால் பார்த்தவண்ணம் அருள் பாலிக்கிறாள்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

கருத்துகள் இல்லை: