வெள்ளி, 13 செப்டம்பர், 2019

 நடனமாடும் நடராஜர், கண்ணன் படங்களை வீட்டில் பூஜை செய்வதின் பயன்கள்?

நடராஜர் எபவர் எல்லாம்வல்ல பரமேஸ்வரனின் மஹேச்வர மூர்த்தங்களில் முதன்மையானவர். அவரே பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுக்கும் காரணமானவர். அவரில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கின்றன. நான் இவற்றை எழுதுவதும் பதிப்பகத்தார் பதிப்பிப்பதும் நீங்கள் படிப்பதும் என்ற அனைத்து காரியங்களும் அவனது அசைவுகளே! நம்முள் இயங்கிவரும் கோடிக்கணக்கான அணுக்களின் அசைவுகளும் அவனே. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் இதனால் தான்! இது மட்டுமல்ல. காற்று வீசுவதும், தண்ணீர் சென்றுகொண்டிருப்பதும், பறவைகள் பறப்பதும், மீன்கள் நீந்துவதும், எறும்பு நகர்வதும் இப்படி எல்லா விதமான ஆற்றலும் அவரே. இதனாலேயே இவரை விதமான காஸ்மிடான்சர் என்கிறோம். அதாவது பிரபஞ்சகூத்தாடி எனப் போற்றுவது வழக்கம். இவரை தெற்கு நோக்கி வைத்து வழிபட்டால் நமது ஆற்றல் மேம்படும். இப்பேராற்றல் மிக்க நடராஜப் பெருமானை வழிபடுவதினால் உடலாலும் உள்ளத்தாலும் சோர்வு பெற்றிருக்கும் உயிர்கள் சோர்வு நீங்கி ஆற்றல் பெறுவார்கள் என்பது நமது முன்னோர்கள் கண்ட உண்மை.

கிருஷ்ணரை கோபாலன் என கூறுவர். கோ எனில் பசு; பாலயதி எனில் காப்பாற்றுதல். இங்கு பசு என்பது நாம் வழக்கத்தில் கொண்டுள்ள பசுக்களை மட்டும் குறிக்காது. அனைத்து ஜீவராசிகளையும் குறிக்கும். அவரின் புல்லாங்குழல் ஓசையினால் அனைத்து பசுக்களுமே அவரிடம் ஈர்க்கப்படுகிறது. இது போன்று நாமும் குழல் ஊதும் கண்ணனை வழிபடுவோமானால் தெய்வ ஆற்றல் பெற்றவர்களாக விளங்குவோம். இது மட்டுமல்லாமல் அக்காலத்தில் ஒரு மனிதனுடை செல்வத்தை அவனிடம் இருக்கும் பசுக்களை கொண்டே கணக்கிட்டார்கள். ஆதலால் இவரை நாம் வணங்குவதினால் அனைத்து செல்வங்களையும் பெற்று இன்பமாக வாழ்வோம் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை: