புதன், 2 செப்டம்பர், 2015

திருவாசகம் -திருச்சதகம் (அநுபோக சுத்தி) (தடையில்லாச்சிவாநுபவம்)
(சிவானுபவத்தினால் ஆன்மா தன்னைத் தூய்மைப் படுத்திக்கொள்ளுதலாம்.)
ஈசனே என் எம்மானே
எந்தை பெருமான் என்பிறவி
நாசனே நான் யாதுமொன்
றல்லாப் பொல்லா நாயான
நீச னேனை ஆண்டாய்க்கு
நினைக்க மாட்டேன் கண்டாயே
தேச னேஅம் பலவனே
செய்வ தொன்றும் அறியேனே.
செய்வ தறியாச் சிறுநாயேன்
செம்பொற் பாத மலர்காணாப்
பொய்யர் பெறும்பே றத்தனையும்
பெறுதற் குரியேன் பொய்யிலா
மெய்யர் வெறியார் மலர்ப்பாதம்
மேவக் கண்டுங் கேட்டிருந்தும்
பொய்ய னேன்நான் உண்டுடுத்திங்
கிருப்ப தானேன் போரேறே.
போரே றேநின் பொன்னகர்வாய்
நீபோந் தருளி யிருள்நீக்கி
வாரே றிளமென் முலையாளோ
டுடன்வந் தருள அருள்பெற்ற
சீரே றடியார் நின்பாதஞ்
சேரக் கண்டுங் கண்கெட்ட
ஊரே றாய்இங் குழல்வேனோ
கொடியேன் உயிர்தான் உலவாதே.
உலவாக் காலந் தவமெய்தி
உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான்
பலமா முனிவர் நனிவாடப்
பாவி யேனைப் பணிகொண்டாய்
மலமாக் குரம்பை இதுமாய்க்க
மாட்டேன் மணியே உனைக்காண்பான்
அலவா நிற்கும் அன்பிலேன்
என்கொண் டெழுகேன் எம்மானே.
மானோர் நோக்கி உமையாள்
பங்கா வந்திங் காட்கொண்ட
தேனே அமுதே கரும்பின்
தெளிவே சிவனே தென்தில்லைக்
கோனே உன்தன் திருக்குறிப்புக்
கூடு வார்நின் கழல்கூட
ஊனார் புழுக்கூ டிதுகாத்திங்
கிருப்ப தானேன் உடையானே.
உடையா னேநின் றனைஉள்கி
உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் உடையாய் நின்பாதஞ்
சேரக் கண்டிங் கூர்நாயிற்
கடையா னேன்நெஞ் சுருகாதேன்
கல்லா மனத்தேன் கசியாதேன்
முடையார் புழுக்கூ டிதுகாத்திங்
கிருப்ப தாக முடித்தாயே.
முடித்த வாறும் என்றனக்கே
தக்க தேமுன் னடியாரைப்
பிடித்த வாறும் சோராமற்
சோர னேன்இங் கொருத்திவாய்
துடித்த வாறும் துகிலிறையே
சோர்ந்த வாறும் முகங்குறுவேர்
பொடித்த வாறும் இவையுணர்ந்து
கேடென் றனக்கே சூழ்ந்தேனே.
தேனைப் பாலைக் கன்னலின்
தெளிவை ஒளியைத் தெளிந்தார்தம்
ஊனை உருக்கும் உடையானை
உம்ப ரானை வம்பனேன்
நானின் னடியேன் நீஎன்னை
ஆண்டாய் என்றால் அடியேற்குத்
தானுஞ் சிரித்தே யருளலாந்
தன்மை யாம்என் தன்மையே
தன்மை பிறரால் அறியாத
தலைவா பொல்லா நாயான
புன்மை யேனை ஆண்டையா
புறமே போக விடுவாயோ
என்னை நோக்கு வார்யாரே
என்நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழுந் திருமேனி
எந்தாய் எங்குப் புகுவேனே.
புகுவேன் எனதே நின்பாதம்
போற்றும் அடியா ருள்நின்று
நகுவேன் பண்டு தோள்நோக்கி
நாண மில்லா நாயினேன்
நெகும்அன் பில்லை நினைக்காண
நீஆண் டருள அடியேனுந்
தகுவ னேஎன் தன்மையே
எந்தாய் அந்தோ தரியேனே.

கருத்துகள் இல்லை: