திங்கள், 28 ஏப்ரல், 2014

பக்தர்களின் அனுபவங்கள்….காஞ்சி மகானின் கருணை நிழலில்…!!

விழுப்புரம் அருகில் உள்ளது வடவாம்பலம் கிராமம். 1926-ம ஆண்டு மகா பெரியவர் அந்த வழியாக போகும்போது மனதில் ஏற்பட்ட திடீர் சலனத்தின் காரணமாக அந்த கிராமத்துக்குள் தன் பரிவாரங்களுடன் நுழைந்தார்.”இங்கே ஒரு சந்நியாசி இருந்தாரே, ஞாபகம் இருக்கிறதா? என்று எதிர்பட்ட கிராமத்து முதியோர்களிடம் கேட்டார், யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த கும்பலில் இருந்த ஒரு முதியவர் மட்டும் அந்த ஊரில் பல வருடங்களுக்கு முன் ஒரு துறவி இருந்ததாகவும், அவர் அதே ஓரில் சமாதி அடைந்ததாகவும் சொன்னார். இரண்டு, மூன்று வருடங்கள் அவரது சமாதிக்கு பூஜைகள் தொடர்ந்து நடந்ததாகவும், பிறகு அது நின்று போனதாகவும் சொன்னார்.

ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்னும் 58-வது பீடாதிபதி அங்கேதான் சமாதி அடைந்திருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட மகான் அந்த கிராமம் முழுக்கத் தேடி அவரது சமாதியை கண்டுபிடித்தார். பிறகு தன்னுடன் வந்த அடியார்களில் ஒருவரிடம் அந்த இடத்தை தோண்ட சொன்னார்.’அகலமாக வேண்டாம், ஆழமாக தோண்டுங்கள்’ என்று கட்டளையிட்டார். மண்வெட்டிஎடுத்து மகான் காட்டிய இடத்தை தோண்டினார் ஒருவர். அப்போது அருகில் இருந்த குமாரமங்கலம் சாம்பமூர்த்தி சாஸ்திரி என்பவர் மெய்மறந்து ‘தோண்டாதே தோண்டாதே’ என்று கூச்சலிட்டு அங்கேயே மயங்கி விழந்தார். தோண்டிய ஆசாமி திகைத்துபோய் உடனே தோண்டுவதை நிறுத்தினார். வெகு நேரத்துக்கு பிறகுதான் அவரது மயக்கம் தெளிந்தது. மகான் சாம்பமூர்த்தி சாஸ்திரியிடம் மெதுவாக விசாரித்தார்.

‘உடலில் காவி .. கையில் தண்டம். கழுத்தில் ருத்திராட்ச மாலை .. நெற்றி நிறைய விபூதி .. இத்துடன் ஆகாயத்தை தொடுமளவு ஒரு துறவியின் உருவம் என் கண் முன் தோன்றியது. அவருக்கு முன்னால், ஆயிரக்கணக்கான அந்தணர்கள் வேதபாராயணம் செய்வதைக் கண்டேன். ஒரு கட்டத்தில் அவர் மெல்லிய குரலில் ‘தோண்டாதே .. தோண்டாதே’ என்று கூறியது என் செவிகளில் விழுந்தது. அதையே நானும் சொல்லியிருப்பேன் போலிருக்கிறது. பின்னர் அந்த நெடிய உருவம் சிறிதாகி மறைந்து போனது! ‘சதாசிவம். சதாசிவம்’ என்று யாரோ ஜெபித்துக் கொண்டிருப்பதைக் கேட்டேன்!’ என்றார்.

அதே இடத்தில்தான் ஸ்ரீஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இருப்பதை உறுதிசெய்துகொண்ட மகாபெரியவா, 1927-ஆம் வருடம் ஜனவரி மாதம் 17-ஆம் தேதி அதிஷ்டானத்துக்கு பிருந்தாவனம் கட்டி, சிவலிங்க பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கே வருடா வருடம் ஆராதனை நடக்கிறது.

சேலத்தில் இருக்கிறது மகா பெரியவா கிரஹம் (இல்லம்). இந்த கிரஹத்தின் மாடியில் வசித்து வருகிறார் ராஜகோபால் என்பவர். கும்பகோணம் அருகில் இருக்கும் கோவிந்தபுரத்தையும் மகாபெரியவாளையும் சம்பந்தப்படுத்தி சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றைச் சொன்னார்.

ஒரு முறை தம்பதிசமேதராக காஞ்சி மகானின் தரிசனத்துக்கு சென்றிருந்தார் ராஜகோபால். அப்போது யதேச்சையாக பெரியவா ராஜகோபாலிடம் கேட்டாராம்: “ஏண்டா, நீ கோவிந்தபுரம் (காஞ்சி மடத்தின் 59-வது பீடாதிபதி ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இங்குதான் ஸித்தியடைந்தார்!) போயிருக்கியோ?”

‘இன்னும் போகலை’ என்றார் ராஜகோபால்.

புன்சிரிப்பு தவழ மகான் சொன்னார் : “ஒரு தடவை அந்த ஊருக்குப் போயிட்டு வா… புரியும்!’ ‘அந்த ஊர் எங்கே இருக்கிறது?’ என்றெல்லாம் கேட்காமல் நிறுத்திக் கொண்டார் அந்த பக்தர்.
இது நடந்த சில வருடங்களுக்குப் பிறகுதான் சேலத்தில் ‘பெரியவா கிரஹம்‘ ஸ்தாபிதமானது. காஞ்சி சங்கரமடத்தில் வருடாவருடம் மகா பெரியவா ஜெயந்தி (வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம்) விமரிசையாக நடக்கும். அதேபோல் சேலம் பெரியவா கிரஹத்திலும் அதே தினம் பெரியவா ஜெயந்தி விழா நடக்கும். அன்றைய தினத்தில் சுமங்கலிகளுக்குப் புடவை தானம் அளிப்பது வழக்கம். இந்த புடவைகள் தஞ்சை மாவட்டம் குத்தாலத்தில் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தாரால் தயார் செய்யப்படுபவை. அந்த வருடம் , ராஜகோபாலின் மனைவி வழி உறவினரான ஒரு டாக்டர் (அமெரிக்காவில் இருக்கிறார்). சேலைகளை வாங்கிக் கொடுக்கும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லி இருந்தார். எனவே ராஜகோபால் தன் மனைவியுடன் குத்தாலம் சென்று புடவைகளை ஆர்டர் கொடுத்த பின், மெயின் ரோடு வந்தார். சேலம் திரும்புவதற்கு எந்த பக்கம் பயணம் செய்வது என்கிற குழப்பத்துடன் கணவனும் மனைவியும் பிற்பகல் நேரத்தில் பஸ் ஸ்டாப்பில் விழித்தனர். வயிற்றுப் பசி வேறு ஒரு பக்கம் அவர்களை அழுத்தியது. அப்போது ஒரு கார் வேகமாக வந்து அவர்கள் முன் பிரேக் போட்டு நின்றது.

டிரைவர் அவர்களிடம் கேட்கிறார்: “ஏன் சார் நீங்க கோவிந்தபுரம் போகணுமா?”

‘சட்‘ டென்று உறைத்தது ராஜகோபாலுக்கு. என்றோ ஒரு நாள் மகாபெரியவா இவரிடம் கேட்ட கேள்வியல்லவா இது? டிரைவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு “ஆமாம்” என்றார். ஒருவித பிரமிப்புடன்.

“வண்டியில் ஏறுங்கள். கொண்டுபோய் விடுகிறேன்” என்றார் டிரைவர்.

இருவரும் வண்டியில் ஏறினர். சிறிது நேரப் பயணத்துக்குப் பிறகு கார் கோவிந்தபுரம் சாலையில் போய் நின்றது. “இங்கேருந்து கொஞ்ச தூரம் நடந்தா கோயில் வரும்! தரிசனம் பண்ணிட்டுக் கிளம்புங்க” என்று சொன்ன அந்த டிரைவர் ராஜகோபால் கொடுத்த வாடகைப் பணத்தையும் வாங்கிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போய்விட்டார்.

கோவிந்தபுரத்தை அடைந்த தம்பதி கோயிலுக்குள் நுழையும் முன்னரே ஓர் அந்தணர் அவர்களைப் பார்த்து, “வாருங்கள் … வாருங்கள். உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். முதலில் சாப்பாடு. பிறகுதான் எல்லாம்!” என்று இருவரையும் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அவர் அழைத்துச் சென்ற இடம் போஜன சாலை! இரண்டே இலைகளைத் தவிர எஞ்சியிருந்த இலைகள் முன்னால் அடியவர்கள் சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தனர்.

சாப்பிட்டு முடிந்த பின் கோயிலையும் அதிஷ்டானத்தையும் பார்த்துவிட்டுத்தான் தம்பதி சேலம் திரும்பினர்.

கார் சவாரி, சாப்பாடு, உபசரிப்பு எல்லாமே பெரியவா ஏற்பாடுதானோ? தன் பக்தர்களுக்கு எந்த குறையையும் அந்த மகான் வைத்ததே இல்லை!!
 
 

கருத்துகள் இல்லை: