திங்கள், 28 ஏப்ரல், 2014

பத்ராசலம் ஸ்ரீசீதாராமர் திருக்கோயிலும் பக்த ராமதாசரும் (கிளியை கூண்டில் அடைத்ததால் 12 வருட சிறை தண்டனை):

பத்ராசலம் என்னும் பிரசித்தி பெற்ற தலம் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. தென் அயோத்தி என்று அழைக்கப் பெறும் சிறப்புப் பொருந்தியது. தலத்தின் மூலவரான ஸ்ரீராமசந்திர மூர்த்தி அன்னை சீதையை மடியில் அமர்த்திய நிலையில், இலக்குவனும் உடன் இருக்க, அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

ஸ்ரீராமதாசர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருளாளர். 'கோல்கொண்டா' பகுதியின் மன்னன் 'தானேஷாவிடம்' பணிபுரிந்து வந்தார். மன்னனின் ஆணையால் பத்ராசலப் பகுதியின் தாசில்தாராக பொறுப்பேற்றார். அங்கு சிறிய ஆலயத்தில் ஸ்ரீசீதாராமர் எழுந்தருளி இருப்பதைக் கண்ணுற்று வருந்தினார். பெருமானுக்கு பெரியதொரு ஆலயம் புதுக்க சங்கல்பம் பூண்டார்.

தன் செல்வமனைத்தும் திருப்பணிக்கு அர்ப்பணித்தும், நிதி போதாத நிலை உருவாக, அத்தல மக்கள் உதவ முன்வந்தனர். தங்கள் வரிப் பணத்திலிருந்து வேண்டிய நிதியை தற்சமயம் எடுத்துக் கொள்ளுமாறும், அவ்வருட விளைச்சலுக்குப் பின் தங்கள் பங்கை கொடுத்து விடுவதாகவும் வாக்களிக்க, திருப்பணியும் இனிதே நடந்தேறியது.

மன்னன் செய்தி அறிந்து வெகுண்டு, ஸ்ரீராமதாசரை கைது செய்து, சித்திரவதை செய்ய ஆணையிட்டான். சிறையில் அனுதினமும் கீர்த்தனைகள் புனைந்து, பெருமானிடம் தன்னைக் காத்தருளுமாறு கண்ணீர் மல்க முறையிடுவார் ஸ்ரீராமதாசர். 12 ஆண்டுகள் இதே முறையில் கழிய, ஸ்ரீராமர் இலக்குவனுடன் இரு வீரர்களின் உருக் கொண்டு அரண்மனையில் தோன்றி அருளினார்.
*
மன்னனிடம், ஸ்ரீராமதாசர் எடுத்த செல்வத்தை வட்டியுடன் செலுத்தி, ரசீதும் பெற்று மறைந்தார். இன்றும் பெருமான் செலுத்திய பொன் நாணயங்களை திருக்கோயிலில் தரிசிக்கலாம். பின்னர் ஸ்ரீராமர் சிறையில் ராமதாசருக்கு காட்சி அளித்து, ரசீதையும் சேர்ப்பித்தார். ராமதாசர் விழி நீர் மல்க, பன்முறை பெருமானைப் பணிந்து போற்றினார்.
*
'12 வருடங்களாக மனமுருக அழைத்தும், தன்னைக் காத்தருள வராததன் காரணம் யாது?' என பணிவுடன் வினவினார். 'முற்பிறவியில் ஒரு கிளியை கூண்டில் பல காலம் அடைத்து வைத்த பாவத்தால், இப்பிறவியில் ஸ்ரீராமதாசர் 12 வருடங்கள் சிறையில் துன்புறும் நிலை எய்தியது' என்று விளக்கியருளினார் ஸ்ரீராமர். ராமதாசர் சிறையிருந்த கோல்கொண்டா கோட்டையை இன்றும் தரிசிக்கலாம்.
*
இந்நிகழ்வில் இருந்து ராம பக்தியை மட்டும் அல்லாது, அகிம்சையையும் பாடமாகக் கற்போம். பரம பக்தரான ஸ்ரீராமதாசரையும் கர்மவினை விடவில்லை. உயிரினங்களை அடைத்து வைப்பது கொடிய பாவம். எனில், உயிரினங்களை வதைத்து உட்கொள்வது எவ்வளவு பாவம் என்று உணர்தல் மிகவும் அவசியம். இறைவன், பக்தியோடு அகிம்சையையும் நிச்சயம் எதிர்பார்க்கிறான் (ஸ்ரீராமஜெயம்).
 
 


கருத்துகள் இல்லை: