புதன், 22 ஜனவரி, 2014

காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சக்கரத்தாள்வார் சன்னதியின் எதிரே உள்ள அனந்தசரஸ் குளத்தில், நேற்று முன்தினம் தெப்ப உற்சவம் துவங்கியது. மூன்று நாட்களாக நடை பெற்று வரும் உற்சவத்தில், முதல் நாளான நேற்று முன்தினம் வரதராஜபெருமாள், பெருந்தேவி தாயாருடன் அனந்தசரஸ் குளத்தில் உள்ள தெப்பலில் இரவு 7:00 மணிக்கு, எழுந்தருளினார். மேலும், இண்டாம் நாளான நேற்று தெப்பலில் எழுந்தருளிய சுவாமி, குளத்தை 5 முறை வலம் வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், மூன்றாம் நாளான இன்றும் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் ஏற்பாடு செய்திருந்தார். இதேபோல், திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ரிஷப தீர்த்தக் குளத்தில் தைபூசத்தன்று தெப்பல் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக கோவில் திருப்பணி நடைபெற்றதினால் தெப்பல் திருவிழா நடைபெறவில்லை. கடந்த செப்டம்பரில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு தைபூசத்தில் தெப்ப உற்சவம் நடத்த இந்து அறநிலையத்துறையினர் முடிவுசெய்தனர். நேற்று இரவு 7.30 மணியளவில் ரிஷப தீர்த்த குளத்தில் தெப்பத்தி்ல் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தெப்பத்தில் திருமுறை இசை, நாதாஸ்வர இசை முழங்க குளத்தில் மூன்றுமுறை தெப்பத்தில் உலா வந்தார். நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

கருத்துகள் இல்லை: