வியாழன், 7 நவம்பர், 2013

நமஸ்காரம் எவ்வாறு செய்ய வேண்டும் தெரியுமா?

நமஸ்காரம் என்பது பணிவன்புடன் மரியாதை கலந்து தேவர்களையும் பெரியோர்களையும் வணங்கும் முறையாகும். இது தண்டாக்ருதியாய் விழுந்து நமஸ்கரித்தலும், நின்றபடியும் இருந்தபடியும் நமஸ்கரித்தலுமான இரு வகைப்படும். விழுந்து நமஸ்கரித்தலிலும் இரு வகைப்படும். அவை அஷ்டாங்க நமஸ்காரமும் பஞ்சாங்க நமஸ்காரமும் ஆகும். இவற்றுள் அஷ்டாங்க நமஸ்காரம் என்பது தலை, கையிரண்டு, செவியிரண்டு, மோவாய், புஜங்களிரண்டு என்னும் எட்டு அவயங்களும் நிலத்தில் பொருந்தும் படியாக விழுந்து நமஸ்கரிப்பதாகும். இது பூமியில் சிரத்தை வைத்து மார்பு பூமியிலே படும்படி வலக்கையை முன்னும் இடக்கையைப் பின்னும் நேரே நீட்டிப் பின் அம்முறையே மடக்கி வலப்புயமும் இடப்புயமும் மண்ணிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்கி நீட்டி, வலக்காதை முன்னும் இடக்காதைப் பின்னும் மண்ணிலே பொருந்தச்செய்வது. இவ்வகை நமஸ்காரம் ஆண்களுக்குரிய தாகும். பஞ்சாங்க நமஸ்காரம் என்பது தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்து அவயங்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாகும். பெண்கள் இவ்வகை நமஸ்காரம் செய்வதற்கு உரியர். பெண்கள், மார்பு பூமியில் படாமல் வணக்கம் செய்ய வேண்டும். எனவே அங்கப்பிரதட்சணம் பெண்கள் செய்யக்கூடாது என்பது மரபு. தலை மட்டுமே குனிந்து வணங்கல் ஏகாந்த நமஸ்கராம் எனப்படும். தலைக்கு மேல் இரு கரங்கூப்பி வணங்குவது திரியங்க நமஸ்காரம் எனப்படும்.

நம் உடலில் உள்ள எட்டு அங்கங்களும் பூமியில் படும்படி வீழ்ந்து வணங்குதல் சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும். இதை தண்டனிடுதல் என்பர். அல்லது தண்டம் சமர்ப்பித்தல் என்பர். தண்டம் என்பது கழி அல்லது கோல். கையில் பிடித்துள்ள ஒரு கோலை விட்டு விட்டால் அது கீழே விழுந்து விடும். நமஸ்காரம் செய்வதை தண்டம் போல் செய்ய வேண்டுமென்று சொல்வது வழக்கம். நம் சரீரம் வெறும் மரக்கோல்தான். உதவாத பொருளை, அது தண்டமாகி விட்டது என்கிறோம். அப்படி தண்டமான வஸ்துதான் நம் சரீரம். இதைத் தூக்கிப் பிடித்து நிறுத்தி வைத்து ஆட்டுகிற சக்தி ஈஸ்வரன் கொடுத்ததே ஆகும். இந்த உடம்பை ஏதோ நாமே தாங்கி நடத்துகிறோம் என்ற எண்ணத்தை ஒழித்து விட்டு, அதாவது அகங்காரத்தை விலக்கி விட்டு அதற்கு அடையாளமாக ஈஸ்வரன் முன் இந்தச் சரீரத்தை கீழே போட வேண்டும். இதுதான் தண்டம் சமர்ப்பித்தல் என்கிறார் ஜகத்குருஸ்ரீ ஆச்சார்ய சுவாமிகள். இந்த நமஸ்காரம் தாய், தந்தை, குரு, தேவர், பெரியோர், மூத்தோர் முதலியவர்களுக்கு உரியதாகும். தவத்தாலும் வயதாலும் ஞானத்தாலும் உயர்ந்தவர்கள் நித்தியம் நமஸ்கரித்தக்கவர்கள். எந்த குருவானவர் வேத சாஸ்திர உபதேசத்தால் துக்கத்தைப் போக்கடிக்கத் தக்கவரோ அவரை நித்தியம் நமஸ்கரிக்க வேண்டும். கெட்ட மரியாதையுள்ளவனையும், நன்றி மறந்தவனையும், கள்வனையும், வஞ்சகனையும், பித்தனையும், மூர்க்கனையும், சூதாடுபவனையும், தன்னிச்சையாக நடந்துகொண்டிருப்பவனையும், அசுசியானவனையும், எண்ணெய் தேய்த்துக் கொண்டிருப்பவனையும், ஜெபம் செய்து கொண்டிருப்பவனையும், வேத பாஷ்யனையும், காரூட வித்தைக்காரனையும், சோதிடங் கூறிப் பிழைப்பவனையும், பாதகனையும், அது போலவே புருஷனைக் கொன்ற பூவையையும், ரஜஸ்வலையானவளையும், விபச்சாரம் செய்பவளையும், பிரசவித்தவளையும், அதிகக் கோபக்காரனையும் எக்காரணம் கொண்டும் நமஸ்கரிக்கக் கூடாது.

சபையிலும், யாக சாலையிலும், தேவாலயத்திலும், புண்ணிய ÷க்ஷத்திரத்திலும், புண்ணிய நதி தீர்த்தத்தில் நீராடுபவனையும், வேதத்யயன காலத்திலும் பிரத்தியேகமான நமஸ்காரம் செய்வது பூர்வத்தில் செய்த புண்ணியத்தைப் போக்கும். சிரார்த்தம், தானம், தேவ தர்ச்சனம், யக்ஞம், தர்ப்பணம் செய்பவனையும் நமஸ்கரிக்கக் கூடாது. ஆலயத்தில் பலி பீடத்திற்குப் பின்னுள்ள கொடிக் கம்பத்தின் முன்புதான் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். ஆலயத்தின் உள்ளே எந்தச் சன்னதிகளின் முன்பும் நமஸ்காரம் செய்யக் கூடாது. பலிபீடம் இறைவனின் மாயா சக்கரம். நாம் பிறப்பு இறப்பு என்னும் மாயா சக்கரமான பலி பீடத்தில் மும்முறை வணங்குவதும், அதை உட்படுத்தி வலம் வருவதும் ஸ்தூல சூட்சும காரண சரீரங்களிலிருந்து என்னை விடுவிப்பாயாக என்று வேண்டுவதைக் குறிப்பதாகும். கிழக்கு மேற்கு நோக்கிய சன்னதிகளில் வடக்கே தலை வைத்தும், தெற்கு வடக்கு நோக்கிய சன்னதிகளில் கிழக்கே தலை வைத்தும் விழுந்தும் நமஸ்கரிக்க வேண்டும். தான் கால் நீட்டும் பின்புறத்தில் எந்தத் தெய்வச் சன்னதியும் இருத்தல் கூடாது. கொடி மரத்தின் முன்னால் விழுந்து வணங்கினால் அங்கு எத் தெய்வச் சன்னதியும் இருக்காது. எனவேதான் கோயிலில் இங்கு மட்டும்தான் விழுந்து வணங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் விதித்துள்ளனர். நமஸ்காரம் செய்வது மிகவும் புனிதமான செயலாகும். அதற்கும் விதிமுறைகள் வகுத்துச் சென்ற நம் முன்னோர்களைப் போற்றி வணங்குவோம் !

கருத்துகள் இல்லை: