வியாழன், 7 நவம்பர், 2013

திருக்களிற்றுப்படியார் பகுதி-2

31 பற்றினுட் பற்றைத் துடைப்பதொரு பற்றறிந்து
பற்றிப் பரிந்திருந்து பார்க்கின்ற பற்றதனைப்
பற்று விடில் அந்நிலையே தானே பரமாகும்
அற்றமிது சொன்னேன் அறி.

உடல், கருவி, உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகியவற்றில் உயிருக்கு இயல்பாகப் படர்கின்ற பற்றினைத் துடைப்பதற்கு உரிய துணையாக இருப்பது திருவடி ஞானமே என்பதனை அறிந்து அதனையே பற்றி. அன்போடு கூடித் தன் முனைப்பை நெகிழவிடின் அந்நிலையிலேயே சிவப் பேரொளி தோன்றும். இதனை உனக்கு அறிவுறுத்தினேன் கேட்பாயாக.

யான் என்னும் அகப்பற்றும், எனது என்னும் புறப் பற்றும் உயிர்களுக்கு மேலும் மேலும் பிறப்பு இறப்புக்களை உண்டாக்கும் என்பது மேலோர்கள் அறிந்து அறிவித்த உண்மை. பற்றற்று இருத்தல் என்பது எளிதில் கைகூடும் அன்று என்பதனையும் அருளாளர்கள் உணர்ந்திருந்தார்கள். இழிந்த பொருள்களில் செல்லுகின்ற பற்றினை ஒழிப்பதற்கு உரிய உபாயம், உயர்ந்த பொருளின் இறுகப் பற்றிக் கொள்ளுவதே என்று அவர்கள் நமக்கு அறிவுறுத்தினாகள். இறைவன் திருவடியை விட உயர்ந்த பொருள் வேறு ஒன்றும் இல்லை. ஆதலால் அதனையே பற்றிக் கொள்க என அறிவுத்தினார்கள். அவ்வாறு பற்றிக் கொள்ளப்பட்ட செம்பொருளே உலகியல் பற்றுக்களை அறவே துடைத்து எறியும் என்பதனையும் உணர்த்தியருளினார்கள்.

திருக்குறளில் ,பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு (குறள் 350) என்று திருவள்ளுவ நாயனார் கூறியதும், திரு உந்தியாரில் பற்றை அறுப்பதோர் பற்றினைப்பற்றி என்று தொடங்கும் பாடலும் இந்தப் பாடலுக்கு முன்னோடியாக அமைந்தன.

பற்றினை ஒழிப்பதால்தான் மனிதனின் துயரம் தீரும் என்பதை எத்தனையோ சமயங்கள் பன்னெடுங்காலமாக எடுத்துரைத்து வந்திருக்கின்றன. அத்தகைய சமயங்கள் எல்லாம் துறவு நெறியை மிகவும் வலி யுறுத்தின. துறவு நெறியிலுங்கூடத் துறவிக்குத் தன் உடல் மீது பற்று இருத்தல் கூடாது என்பதற்காக உடலை வருத்தியும் ஒறுத்தம் பழகுதல் வேண்டும் என்று அவை கூறி வந்தன. சைவசமயத்திலோ இத்தகைய கடுமையான வழிகளிலே பற்றை அறுத்தல் வேண்டும் என்று கூறாமல் செம்பொருளைப் பற்றுவதன் மூலம் உலகியல் பற்றை விட்டொழிக்க முடியும் என்ற எளிய முறை உணர்த்தப்பட்டது. நான் பற்றினைத் துறக்கிறேன் என்று எண்ணுவதும் கூட அகப்பற்றுக்கு இடம் கொடுக்கிறது. ஆதலால் அந்த நினைவும் பற்றறுக்க முனைவாருக்கு ஏற்படுதல் கூடாது. உறங்கினவன் கையிலிருந்த பொருள் தானாக நழுவிப் போய் விடுவது போலப் பற்றுக்கள் அகல வேண்டும். அது, தற்போதம் இழந்து உயிர் சிவஞானத்தின் ஒன்றிய போதுதான் கைகூடும் என்பது இந்தப் பாடலிலும் இதுபோன்ற சாத்திர தோத்திர நூற்களிலும் எடுத்துறைக்கப்பட்டுள்ளது.

மாணிக்கவாசகர் திருவாசகத்தில் ,
பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும் பற்று ஆங்கு அது பற்றி
நற்றாங்கதி அடைவோம் எனில் கெடுவீர் ஓடிவம்மின்
தெற்றார் சடைமுடியான் மன்னுதிருப் பெருந்துறை இறைசீர்
கற்றாங்கு அவன் கழல் பேணின ரொடுங் கூடுமின் கலந்தே
என்று அருளிச் செய்ததும் இங்குக் கருதத்தகுந்தது.

32 அறிவறிவாய் நிற்கில் அறிவுபலவாம் என்று
அறிவின் அறிவு அவிழ்த்துக் கொண்டு அவ் அறிவினராய்
வாழ்ந்திருப்பர் நீத்தோர்கள் மானுடரின் மாணவகா
தாழ்ந்தமணி நாவேபோல் தான்.

உயிர் தனது அறிவினாலேயே யாவற்றையும் அறிந்து கொள்ளுவேன் என்ற முனைப்போடு உலகத்துப் பொருள்களில் படியும் போது தனது முயற்சியில் தோல்வியடைகின்றது, ஏனெனில் உயிரின் அறிவு சிற்றறிவு. அது பொருள்களைப் பற்றும் பொழுது அவ்வப்பொருள்களில் அழுந்தி அதுவதுவாகக் கண்டு பண்முகப்பட்டுச் சிதறி ஓடுமேயன்றி, ஒரு முகப்பட்ட பேரறிவு உயிருக்கு வாய்ப்பதில்லை. இதனை ஞானாசிரியன் உணர்த்த, உணர்த்தியவாறே உணர்ந்து தன் முனைப்புக் கெடுமாறு திருவருள் ஞானத்தோடு ஒன்றி இருக்கப் பெறின் உலகப் பற்றினை நீத்தவர்கள் சிவமாம் தன்மை பெறுவார்கள். அகப்பற்று புறப்பற்று எனக் கூறப்படும் யான் எனது என்னும் செருக்கை அறுத்தவர்கள் நிலத்தின் மீது தாழ வைக்கப்பட்ட மணியின் நாவைப்போல் அசையா திருப்பார்கள்.

புலன்வழி ஓடிப் பொருள்களைச் சேரும் உயிர் அறிவு ஒன்றைப் பற்றும் இயல்புடையதேயன்றி ஒருமுகப்பட்டு யாவற்றையும் ஒருங்கே அறியும் இயல்புடையது அன்று. எனவே மெய்ப்பொருளை அறிய விழையும் உயிர்கள் தமக்கென ஒரு முயற்சியின்றித் திருவருள் ஞானத்தைப் பற்றித் தற்போதம் கெட நிற்றல் வேண்டும் அவ்வாறு பற்று அறுத்தவர்களுக்கு சிவப் பேரின்பம் கிட்டுவதனால் ஆரவாரம் அடங்கி, நிலத்தில் பொருந்த வைக்கப்பட்ட மணியின் நாவைப் போலத் திருவருளை ஆதாரமாகக் கொண்டு பேரின்பத்தில் திளைத்திருப்பர்.

33 ஓசையெலாம் அற்றால் ஒலிக்கும் திருச்சிலம்பின்
ஓசை வழியே சென்று ஒத்து ஓடுங்கின் ஓசையினின்
அந்தத் தானத்தான் அரிவையுடன் அம்பலத்தே
வந்து ஒத்தான் அத்தான் மகிழ்ந்து.

முந்திய பாடலிலே கூறப்பட்ட படி உலகத்தின் ஆரவாரங்கள் ஒடுங்க இறைவனின் திருவடியிலே ஒற்றித்து நின்ற உயிருக்கு ஆனந்தப் பெருங்கூத்து ஆடும் பெருமானின் திருவடியிலே விளங்கும் சிலம்பின் ஓசை கேட்கும், அந்த ஓசையைப் பற்றிக் கொண்டே அதன் வழியே சென்றால் அதன் முடிவிலே சிவகாமியம்மை காணத் திருநடனம் புரிகின்ற அம்பலக் கூத்தன் விருப்பத்துடன் வெளிப்பட்டு இவ்வுயிருடனே நேர் படக் கூடியருளுவான்.

யோக நெறியில் நின்றார்க்கு அவர்களின் அகத்துட் கேட்கும் நுண் ஒலிகளாக மணி கடல் யானை வேய்ங்குழல் மேகம் வண்டு சங்கு முதலிய பலவகை ஒலிகள் திருமந்திரத்துள் (606)கூறப்படுகின்றன. கழறிற்றறிவார் நாயனாருக்கு ஒவ்வொரு நாளும் இயற்றும் பூசையின் முடிவிலே இறைவன் தன் பாதச் சிலம்பொலி கேட்குமாறு அருள் பாலித்தான் என்று பெரிய புராணம் கூறுகிறது சிலம்பு என்பது பரவிந்து என்றும் அந்தச் சிலம்பில் தோன்றும் ஒலி என்பது பரநாதம் என்றும் கூறுவர். திருச்சிலம்பு ஒசையைப் பற்றிச் செல்பவர்களுக்கு அதன் அந்தத்தில் இறைவன் திருவருளாகிய இவ்வுயிரை விருப்பத்தோடு நேர்பட்டு ஆட்கொள்ளுவான் என்று இப்பாடலில் உணர்த்தினார்.

34 சார்பு உணர்ந்து சார்பு கெட வொழுகின் என்றமையால்
சார்பு உணர்தல் தானே தியானமுமாம் சார்பு
கெட வொழுகின் நல்ல சமாதியுமாம் கேதப்
படவருவது இல்லை வினைப் பற்று.

என்றென்றும் உயிர்களுக்கு உண்மையான பற்றுக்கோடாகிய கொழுகொம்பு இறைவனின் திருவடிகளே என்பதனை உணர்ந்து, அன் றாட வாழ்க்கையில் நாம் உறுதி என்று சார்ந்து இருக்கின்ற எவையும் நமக்கு ஆதரவு அல்ல என்பதையும் உணர்ந்து உலகியல் சார்புகளை விட்டு ஒழிக்க வேண்டும். உண்மைச் சார்பை உணர்தல் தியானம் ஆகும்.

உலகியல் சார்பு விட்டு அகலத் தன் முனைப்பு அற்றுப் போனால் அதுவேஉயர்ந்த சமாதி நிலையுமாகும். இந்நிலை எய்திவர்களுக்கு வினையினால் வரும் துன்பங்கள் சார்வதில்லை.

முதலில் வருகிற சார்பு எவ்வுயிர்க்கும் எப்பொருட்கும் ஆதார மாய் உள்ள இறைவனின் திருவருளைக் குறித்தது. இரண்டாவது கூறப் படும் சார்பு உலகினில் நிலை இல்லாதவற்றை நிலையாகக் கொண்டு சார்ந்து நிற்கும் உயிரின் இயல்பைக் குறித்தது. திருவருட் சார்பை உணர்ந்த அளவிலே உலகியல் சார்பு கழன்று போகும். இதுவே இறைவனின் பெருங் கருணையை ஒரு போதும் மறவாமல் உள்ளம் பொருந்துகிற தியானத்திற்கு இட்டுச் செல்லும். அப்போது நான் தியானிக்கிறேன் என்ற தன் முனைப்பும் கெடும் என்பது இரண்டாம் முறையாகச் சார்பு கெட ஒழுகின் என்ற சொற்றொடரால் குறிக்கப்பட்டது. இந்த நிலை பேரின்பச் சுடராக உள்ள சிவபெருமாளை உணர்ந்து அவனில் ஒடுங்கும் சமாதி நிலையைக் குறிக்கிறது. இந்த நிலை அடைந்தவர்களுக்குத் தொல்லை வல்விவைகளால் வரும் துயரங்கள் வரமாட்டா.

சார்பு உணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு போய் (359) என்னும் திருக்குறளின் சொல்லும் பொருளும் இந்தப் பாடலில் ஆசிரியரால் எடுத்து ஆளப்பட்ட தோடு விரிவுரையும் தரப்பட்டுள்ளது என்பதை அறிந்து போற்றுக.

35 அன்றிவரும் ஐம்புலனும் நீயும் அசையாதே
நின்றபடியே நிற்க முன்னிற்கும் சென்று
கருதுவதன் முன்னம் கருத்தழியப் பாயும்
ஒரு மகள் தன் கேள்வன் உனக்கு

மாறி நின்று உன்னை மயக்கிடும் வஞ்சப் புலன்களின் வயப்பட்டு நீயும் உலகப் பொருள்களில் படிந்து துன்புறாதே. உயிர்க்கு உயிராய் உன்னோடு பொருந்தி உள்ள திருவருளை உள்ளவாறு உணர்ந்து, அதிலே ஒடுங்கி நின்ற படியே நிற்பாயாக. திருவருள் வயப்பட்ட நிலையில் அந்த ஒளிவளர் ஞானத்திற்கு முதல்வனாகிய சிவன் உனக்கு முன் தோன்றி அருள் பாலிப்பான்.

ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்படும் உயிர்கள் துன்பத்தையன்றி வேறு எதனையும் அறியமாட்டா. எனவே அப்பர் அடிகளும் துள்ளுவர் ஐவர் கள்வர் தூநெறிச் சேரல் ஒட்டார்என்று அருளினார். எறும்புகளால் பற்றப்பட்ட நாங்கூழ்ப் புழுவினைப் போல ஐம்புலன்களால் அலைக்கழிக்பட்டேன் என்று அருளினார் மணிவாசகப் பெருமான் . புலன் வழிச் சேரும் உயிருக்கு உய்வில்லை என்பதனாலே அவற்றை மாறுபட்டு என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்து என்று குறித்தனர் பெரியோர். இவ்வாறு புலன்களுக்கு ஆட்படாமல் திருவருள் வழியிலே சோர்வின்றி நிற்றலை நின்றபடி நிற்றல் என்று குறித்தார்.

தத்துவங்களிலிருந்து நீங்கித் திருவருளோடு ஒன்றி உயிர் தன் முனைப்பு அற்ற போது ஒளிவளர் ஞானம் விளங்கித் தோன்றும். தன் முனைப்பற்ற உயிருக்குத் தூய்மையான ஞானத்தின் ஒரு முதலாகிய சிவ பெருமான் உயிரின் கருத்து அழியும் வண்ணம் அருள் பாலிப்பான்.

திருவருள் என்பது திருவடி ஞானம். அது குணமும் சிவபரம் பொருள் குணியும் ஆகும். இரண்டும் ஒன்றை விட்டு ஒன்று ஒரு காலத்தும் பிரிந்து நிற்பதில்லை. ஆதலால் ஞானமும் ஞானத்திற்கு முதலாகிய சிவமும் கருதுவதன் முன்னம் கருத்து அழியப் பாயும் ஒரு மகள் கேள்வன் என்று ஒருங்கு வைத்துக் கூறப்பட்டன.

36 உண்டெனில் உண்டாகும் இல்லாமை இல்லையெனில்
உண்டாகும் ஆனமையின் ஓரிரண்டாம் உண்டில்லை
என்னும் இவை தவிர்த்த இன்பத்தை எய்தும் வகை
உன்னில் அவன் உன்னுடனே யாம்.

கருவி கரணங்களால் அறியப்பட்டு உயிரால் உண்டு என்று காணப்படும் பொருள் சிவம் எனின் உண்மையில் அப்பொருள் நிலைத்ததன்று ஆகும் ஏனெனில் உயிரறிவினால் அறியப்படும் எப்பொருளும் அசத்துப்பொருளே ஆகும். சிவபரம் பொருள் கருவி கரணங்கள் இல்லாத நிலையில் அறியப்படுவது எனின் உயிர் கருவி கரணங்களின் துணையின்றி எதனையும் அறிய முடியாது. ஆதலின் சிவபரம் பொருளும் ஒரு காலும் அறியப்படாத பொருளே ஆகி இல்பொருளாய் முடியும். இந்த இரண்டினுள்ளும் அடங்காது உயிர் அறிவினால் உண்டு என்றும் இல்லை என்றும் கொள்ளப்படுவதற்கு அப்பால், திருவருளே கண்ணாகக் காணுமிடத்து இன்ப வடிவாகத் தோன்றும் பொருளே சிவம். அவனைப் பேரன்பினால் நினைந்து போற்றுவாயானால் அவன் தன் பேரருளால் உன்னோடு இரண்டறக் கலந்து நிற்பான்.

உண்டு எனின் இல்லாமை உண்டாகும் என்ற சொற்களால் உயிர் இறைவனைத் தன் சிற்றறிவினால் அறிந்து உண்டு என்று கண்டு கொள்ளும் இயல்புகள் இறைவனுக்கு உண்டு எனில், அது சிவபரம் பொருளை இல்லாமையில் கொண்டு உய்த்துவிடும் என்று விளக்குகிறார். சுட்டறிவுக்குப் புலப்பட்டு உள்பொருளாகத் தோன்றுகின்ற யாவும் தோன்றி நின்று அழியும் தன்மை உடையன. இந்தக் கருத்து சிவப்பிரகாசத்தில், அறிவினால் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதி என்று கூறப்படும். எனவே உயிர் அறிவால் உண்டு எனக் காணப்படுவது இல்லாமையில் முடியும்.

இல்லையெனில் இல்லாமை உண்டாகும் என்பது அடுத்த கருத்து. சிவபரம் பொருள் ஒருவாற்றானும் அறியப்படாத பொருள் என்று கொண்டாலோ, அல்லது கருவி கரணங்கள் அற்ற நிலையில் உயிரால் அறியப்படுவது என்று கொண்டாலோ அப்பொழுதும் அது இல்லையாய் முடியும். ஏனெனில் ஒருவாற்றானும் அறியப்படாத பொருளும் இல்பொருளே. கருவி கரணங்கள் கடந்த நிலையில் உயிருக்கு அறிவு நிகழ்வதே இல்லை. அந்நிலையில் உயிர் எதனையும் அறியாது. ஆகையால் இறை வனையும் அறியாது. அப்போதும் இல்லாமை தோன்றுகிறது.

இவ்வாறு அறியப்படு பொருளும், அறியவே முடியாத பொருளும் அகிய இரண்டு தன்மையும் கடந்து இவை தவிர்ந்த மூன்றாவது நிலையை ஆசிரியர் உணர்த்துகிறார். அது யாதெனின் இறைவன் திருவருளயே பற்றி அவனையே இடையறாத பேரன்பினால் வழிபடுவாருக்கு அவன் தன் கருணைத்திறத்தினால் இரண்டறக் கூடி நின்று திருவருள் பாலிப்பான்.

சிவஞான போதத்தின் ஆறாம் சூத்திரம் இப்பாடலின் கருத்தினை, உணர்உரு அசத்து எனின் உணராது இன்மையின் இருதிறன் அல்லது சிவசத்து ஆம் என இரண்டு வகையின் இசைக்கும் மன்னுலகே என்று எடுத்துரைக்கும்.

37 தூல உடம்பாய முப்பத்தோர் தத்துவமும்
மூல உடம்பாம் முதல் நான்கும் மேலைச்
சிவமாம் பரிசினையும் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்த
பவமாம் பரிசறுப்பார் பார்.

உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் என வகைப்படுத்தப்பட்ட பரு உடம்பைத் தந்து உயிரை வாழ்வியலில் நடத்தும் தத்துவங்கள் முப்பத்தொன்று. இந்த முப்பத்தொன்றினையும் செலுத்துவன விந்து (சத்தி) சதாசிவம் ஈசுவரம் சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் நான்கு. இந்த நான்கிற்கும் மேலாய் இவற்றுக்கு ஆதாரமாய் ஒப்பற்றதாய் விளங்குகின்றது. சிவ தத்துவம். இவ்வாறு தத்துவம் முப்பத் தாறையும் ஞான ஆசிரியன் தெரிவிக்க உணர்ந்து அவற்றின் இயல்புகளையும் அறிந்து தச காரியம் எனப்படும் பத்து வகைப் படி நிலைகளிலே முயன்று உண்மை உணர்ந்தவர்கள் பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவார்கள்.

தத்துவங்கள் முப்பத்தாறு. அவை மண் முதல் சிவம் ஈறாய் பரு மையில் தொடங்கி மிக நுண்மையில் முடிவதாகக் கூறப்படும். இவை ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கு எனவும், வித்தியா தத்துவங்கள் ஏழு எனவும், சிவ தத்துவங்கள் ஐந்து எனவும் வகுத்துரைக்கப்படும். நுகர்வும் நுகர்வுக்குக் காரணமும் ஆகிய ஆன்ம தத்துவங்கள் போசயத் திருகாண்டம் எனவும், வித்தியா தத்துவங்கள் போக்கிய காண்டம் எனவும் முறையே வழங்கப்படும். இந்த முப்பத்தொரு தத்துவங்களும் இப்பாடலில் தூல உடம்பாய முப்பத்தொரு தத்துவமும் என்று குறிக்கப் பட்டன.

இவற்றைச் செலுத்துகிற தத்துவங்கள், இவற்றினும் நுண்ணிய தாய் உள்ளனவாகிய விந்து சதாசிவம் ஈசுரம் சுத்தவித்தை ஆகிய நான்கும் மூல உடம் பாய முதல் நான்கும் எனப்பட்டன.

இவை யாவற்றுக்கும் மேலாக, இவற்றுக்கு ஆதாரமாக விளங்கும் சிவதத்துவம் மேலைச் சிவமாம் பரிசு என்று குறிக்கப்பட்டது.

உயிர் வீடு பேறு அடைவதற்குப் பத்துப்படி நிலைகள் கூறப் பெறும். அவற்றை தச காரியம் என்பர். அவை தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம் ஆன்ம சுத்தி, சிவ ரூபம், சிவ தரிசனம், சிவயோகம், சிவபோகம் எனப்படும்.

ஆசிரியன் உணர்த்த இவற்றை உணர்ந்து , நீங்க வேண்டியவற்றிலிருந்து நீங்கித் திருவடி ஞானத்தால் இறைவனாகிய பரம் பொருளை உணர்ந்தவர்கள் பிறப்பு இறப்புக்களை அறுத்தவர்கள் ஆவார்கள்.

38 எத்தனையோ தத்துவங்கள் எவ்வௌர் கோட்பாடுடைய
அத்தனையும் சென்றங்கு அளவாதே சித்தமெனும்
தூது தனைப் போக்கிப் போய்த் தூக்கற்ற சோதிதனிற்
பாதிதனைக் கும்பிடலாம் பார்.

உலகத்தில் பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்களும் தம்மில் மாறு பட்ட பல்வேறு வகைப்பட்ட தத்துவங்களையும் கோட்பாடுகளையும் எடுத்துரைத்து அவ்வவர் கொண்ட பொருளே சிறந்தது என்றும், உயர்ந்தது என்றும் வாதிடுவர். அவ்வாறு கூறப்படும் வழிகளில் எல்லாம் புகுந்து மனக் கலக்கமுறுதல் பயன் தருவது அன்று. சித்தத்தைச் சிவன் பாலே வைத்துச் சந்திக்கிறோம் என்னும் உணர்வும் அழிந்து, திருவருள் வழி நின்றால் அம்மையப்பராக விளங்குகின்ற திருவருளையும் அதன் முதலாகிய ஞானத்தையும் ஒளிப்பிழம்பாகக் கண்டு வழிபடலாம்.

சமயக் கணக்கர் தாம் கண்டவற்றைச் சரியானது என்று தமக்குள் முரணி வாதிட்டு நிற்க அதனுள் புகுந்து மயங்காமல் இறைவனையே நினைந்து வழிபடும் அடியார்களுக்கு அவன் மாதொரு பாகனாக வெளிப்பட்டு ஆண்டு கொள்வான் என்று அன்பு நெறியினை இந்தப் பாடலின் மூலம் விளக்கினார்.

39 சாம் பொழுதும் ஏதும் சலமில்லை செத்தாற்போல்
ஆம்பொழுதிலே அடைய ஆசையறில் சோம்புதற்குச்
சொல்லும் துணையாகும் சொல்லாத தூய் நெறிக்கண்
செல்லும் துணையாகும் சென்று.

உயிரும் உடம்பும் கூடி வாழ்ந்திருக்கும் காலத்திலேயே அகப்பற்றையும் புறப்பற்றையும் அறவே ஒழித்துவிட்டவர்கள் உலகத்தைப் பொறுத்தவரை உயிரோடு இருந்தும் செத்தவர்களைப் போல் ஆவார்கள். ஏனெனில் ஐம்புல வழி ஒடும் ஆசைகள் அவர்களுக்கு இல்லை. அத்தகைய மனத்துறவு உடையவர்களுக்கு உயிர் நீங்கும் காலம் வந்துற்ற போதும் வருகின்ற துயரம் இல்லை ; இவ்வாறு தன் பணி நீத்து ஒழுகுதல் இறைபணி நிற்றற்கு உறுதுணையாகும் இன்னதென்று சொல்லால் விளக்கப்படாத தூநெறியாகிய வீட்டு நெறியிலே சென்று சேர்வதற்கும் அது உயரிய துணையாகும்.

சோம்பர் என்பது உயிர் தனக்கென ஒரு முயற்சியின்றி இறைவனின் திருவருள் வழியிலே நடப்பது ஆகும். தன் முனைப்பின்மையால் தன் முயற்சியற்று இருத்தல் சோம்புதல் எனப்பட்டது. தூநெறி என்பது அவாவின்மையால் வருவதாகும் தவநெறி. அது உயிரை வீட்டு இன்பத் துக்கு இட்டுச் செல்லும் உற்ற துணையாகும்.

40 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின் அஃதொன்றுமே வேண்டுவது வேண்டினது
வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டும் அவன் பால்.

இறைவனிடத்து ஒன்றை வேண்டிப் பெறுங்கால் அவ்வாறு வேண்டத்தக்கது பிறவாமை ஒன்றுமே ஆகும். அப்பிறவாமையும் வேண்டாமை எனப்படும் அவா அறுத்தலால் விளைவதால் இறைவனிடம் வேண்டும் போது அவா அறுத்தலையே வேண்டுக.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது, வேண்டாமை வேண்டவரும் என்ற திருக்குறளின் சொல்லும் பொருளும் பொருந்த எழுந்தது இப்பாடல். அதனோடு அமையாமல் இக்குறட்பாவின் நயத்தை எல்லாம் வெளிப்படுத்தும் உரை போலவும் இப்பாடல் அமைந்துள்ளது.

வேண்ட முழுதும் தருவோய் நீ என்று மணிவாசகப் பெருந்தகையும் , வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் என்று அப்பர் பெருமானும் கூறியருளியதிலிருந்து சிற்றுயிர்கள் விரும்பி வேண்டுவன எவை யாயினும் அவற்றை வழங்கும் வள்ளன்மை உடையவன் இறைவன் என்பது புலனாகும். வரையாது கொடுக்கும் அவ்வள்ளலிடத்தே வேண்டத்தக்கது எது? உலகத்துப் பேறுகளிலெல்லாம் மிக உயர்ந்த பேறாகிய மீண்டும் பிறவாமையையே அவனிடம் வேண்டிப் பெறுதல் வேண்டும். பிறப்பு என்பது தளை . பிறவாமை என்பது வீடு.

பிறவாமை எப்போது கைகூடும்? அவாவினைப் பற்று அற ஒழித்த போதே எய்தற் பாலது பிறவாமை. எனவே வேண்டாமையாகிய அவா அறுத்தலை இறைவனிடம் வேண்டினால் அப்பெருமான் அதனை நமக்கு நல்குவான். அதனைப் பெற்ற அளவிலே அதுவே பிறவாமையை நல்கும். ஆதலால் வேண்டுவதற்கு உரிய வள்ளலாகிய இறைவனிடத்து வேண்டாமையை வேண்டுக என்று இந்தப் பாடலில் நுட்பமாக அறிவுறுத்தினார்.

41 அரண உணர்வுதனில் அவ்வுணர்வை மாற்றில்
கரணமும் காலும் கைகூடும் புரணமது
கூடாமையும் கூடும் கூடுதலுங் கூட்டினுக்கு
வாடாமையும் கூடும் வந்து.

ஆன்மாவின் அறிவை உலகத்தில் செல்லவிடாது அரண் செய்து காக்கும் திருவடி ஞானத்தில் சிந்தையைச் செலுத்தினால் கரணங்களும் உடம்புக்குள் இயங்குகின்ற பத்து வாயுக்களும் கட்டுக்குள் அடங்கி நிற்கும். அதாவது சிவஞானத்தை விட்டு விலகாதிருக்கும். அந்த நிலையில் சுட்டறிவாகிய ஏகதேச அறிவு மீண்டும் வந்து தாக்காது நிற்றலும் கைகூடும். அது கைவரப் பெற்றதும் உடம்பாகிய கூடு வாடாது நிற்கும் இயல்பும் வந்து பொருந்தும்.

அவ்வுணர்வு என்றது உயிர் அறிவினை. அரணம் என்பது காப்பு அரண் போன்ற திருவடி ஞானத்தினை. உலகத்துப் பொருள்களில் ஈடு பட்டுச் சிதறியோடும் ஆன்மாவின் அறிவை அவ்வாறு ஓடாது அரண் போல நின்று காக்கும் திருவடி ஞானத்தில் ஒடுக்கினால் கரணங்கள் வசப்படும். உடம்பில் இயங்கும் காற்றுக்களும் வசப்படும். கால் காற்று. இந்நிலையில் மாறாது நிற்கும் போது உயிரறிவு மீண்டும் உலக இன்பங்களை நோக்கிப் புரண்டு போகாமையும் கைகூடும் . புரணம் மீண்டும். திருவருள் நெறிப்பட்டு அதனுள் அடங்கி நிற்கின்ற உயிருக்குக் கரணங்களும் காற்றுகளும் வசப்படுவதனால் உடம்பாகிய கூடு வாடாது நிலை பெறும். உடல், நரை, திரை, மூப்பு ஆகியவற்றுக்கு உட்படும் தன்மை உடையது. எனினும் கரணங்களும் காற்றுகளும் வசப்பட்டதனால் சமாதி நிலையில் உடம்பும் வாடாதிருக்கும்.

42 இன்று இங்கு அசேதனமாம் இவ்வினைகள் ஓரிரண்டும்
சென்று தொடருமவன் சென்றிடத்தே என்றுந்தான்
தீதுறுவன் ஆனால் சிவபதிதான் கைவிடுமோ
மாதொரு கூறு அல்லனோ மற்று.

முன்னைப் பிறப்பில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள் ஆகிய புண்ணிய பாவங்கள் அறிவற்றன. ஆயினும் அவை இறைவன் ஆணை யால் அடுத்த பிறப்பில் செய்தவனையே சென்று பற்றுகின்றன. அவ்வாறாயின் வினைகள் ஈட்டிய உயிருக்கு விடிவு காலமே கிடையாதா? என்றென்றைக்கும் தான் செய்த வினையில் விளைந்த தீமைகளை அது அனுபவித்துக் கொண்டே கிடக்க வேண்டுமா? சிவனாகிய தலைவன் அதனைக் கைவிட்டு விடுவானோ? என்று கேட்பின் திருவருளை ஒரு கூறாக உடைய உமை யொருபாகன் ஒரு நாளும் ஆன்மாவைக் கைவிடமாட்டான்.

வினைகள் நல்வினை தீவினை என இரண்டு. அவற்றின் பயன்கள் புண்ணிய பாவங்கள். இன்று இங்கு அசேதனமாம் இவ்வினைகள் எனக் கூறியதன் மூலமாக வினைகள் அறிவற்றவை . எனவே அவை தாமாகச் சென்று அடுத்த பிறவியில் தம்மைச் செய்தவனைப் பற்றும் என்பதனை மறுத்தார். வினையின் பயனை அதனைச் செய்தவனுக்கே ஊட்டுவது இறைவனின் ஆணையே அன்றிப் பிறிதன்று என்பதை உயத்து உணர வைத்தார். அவ்வினையைப் பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல் யார் தான் அறிந்து அணைப்பார் அங்கு என்ற சிவஞானபோதி எடுத்துக் காட்டுச் செய்யுள் இதனை நன்கு விளக்கும்.

கடல் அலைபோல் வரும் வினைத் தொடர்பால் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்புட் பட்டு வரும் உயிருக்கு விடுதலையே கிடையாதா என்ற கேள்விக்கு விடை தருவார் போல, மாதொரு கூறு அல்லனோ என்று கூறினார். சிவபதி எனவே ஒப்பற்ற தலைவன் அவன். சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன் ஆதலினால் அவன் உயிர்களைக் கைவிடுவானல்லன். அது மட்டுமன்றி அவன் திருவருளாகிய சத்தியினைத் தன் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டிருக்கிறான். பெருங் கருணைத் தடங்கடலைத் தன்னில் பிரியாது கொண்டிருக்கும் தலைவன் உயிருக்கு வினைப் பயன்களை ஊட்டிக் கழித்துத் தன் திருவருட்பேற்றினை அருளியே தீருவான். ஒரு போதும் கைவிடமாட்டான் என்பதனை இப்பாடலில் ஆசிரியர் உணர்த்தினார்.

43 அனாதி சிவனுடைமை யால் எவையும் ஆங்கே
அனாதி எனப்பெற்ற அணுவை அனாதியே
ஆர்த்த துயரகல அம்பிகையோடு எவ்விடத்தும்
காத்தல் அவன் கடனே காண்.

இறைவன், உயிர்கள், உயிர்களைக் கட்டும் தளைகள் ஆகிய முப் பொருள்களும் என்றென்றும் உள்ளவை. தோற்றமில் காலம் தொட்டே உலகம் சிவபெருமானுக்கு உடைமையும் உயிர்கள் சிவபெருமானுக்கு அடிமையும் ஆவன. எனவே உயிரைத் தோற்றமில் காலம் தொட்டே பிணித்து நிற்கும் பாசங்களை அறுத்து எல்லாவிடத்தும் எல்லா நிலைகளிலும் உயிருக்குத் துணையாக நின்று அதன் துயரத்தை அகற்றுவது மாதொரு பாகனான இறைவனின் கடமை என்று அறிவாயாக.

முப்பொருள்களும் தோற்றமில் காலந்தொட்டே உள்ளன என்பது சைவசித்தாந்தம் கூறுகின்ற உண்மை. என்று உயிர் உளதோ அன்றே அது ஆணவத்தில் அழுத்தி அதனால் தன் அறிவு முற்றிலும் மறைக்கப்பட்டிருக்கிறது, எனவே கேவல நிலையில் உயிர் தனக்கென ஒரு செயலின்றி உள்ளது. இறைவன் தன்னுடைய கருணையினால் உயிருக்கு உடல் கருவி முதலியவற்றைத் தானே இரங்கித் தந்தருளுகிறான். இப்பொழுது உயிர் சகல நிலைக்கு வருகிறது. இந்நிலையிலும் இறைவனே உயிருக்கு ஒன்றாய் வேறாய் உடனாய் நின்று அதே நேரத்தில் தோன்றாத் துணை யாகவும் இருந்து உயிரின் வினைப் பயன்களை அதற்கு அருத்திப் படிப்படியே அதனை உயர்த்துகிறான். உரிய பக்குவம் எய்திய உயிர்களை குரு வடிவம் கொண்டு ஆண்டருள் புரிகிறான் . அவன் திருவடிப் பேற்றை அடைந்த உயிர்கள் சுத்த நிலையை அவன் அருளால் பெறுகின்றன.

ஆக, கேவலம் சகலம் சுத்தம் என்னும் மூன்று நிலைகளிலும் இறைவனின் துணையின்றி உயிர் தனக்கென ஒரு செயலின்றியே இருக்கிறது என்பது புலனாகிறது. திருவருளாகிய சத்தியோடு பிரிப்பின்றி நிற்கின்ற சிவபெருமானே தன் கருணையால் உயிரைக் காத்துக் கடைத் தேற்றுகின்ற கடமை உடையவனாக விளங்குகிறான். தன் கடன் அடியேனையும் தாங்குதல் என்ற அப்பர் பெருமான் திருவாக்கில் அண்டங்கள் அனைத்தையும் தாங்கி வழி நடத்தும் இறைவன் சிற்றுயிராகிய அடியேனையும் தாங்கி அருள் பாலிக்க வேண்டும் அதுவே கடமை என்ற வேண்டுகோள் இனிது அமைந்துள்ளது இங்கு நினையத் தகும்.

44 தம்மில் சிவலிங்கம் கண்டு அதனைத் தாம் வணங்கித்
தம்மன்பால் மஞ்சனநீர் தாம் ஆட்டித் தம்மை யொரு
பூவாக்கிப் பூ அழியா மற்கொடுத்துப் பூசித்தால்
ஓவாமை யன்றே உடல்.

தம் உடலிலேயே இறைவன் கோவில் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து அவனுடைய அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கம் உள்ளக் கோயிலில் எழுந்தருளி இருப்பதைக் கண்டு, அதற்குத் தம் அன்பினால் திருமஞ்சனம் ஆட்டித் தம்மையே திருமாலையாக்கி அப்பொருமானுக்குச் சாத்தி அவனை ஒரு நாளும் தவறாமல் வணங்கிப் பூசித்தால் அத்தகைய அன்பர்களுக்கு அவர்களின் உள்ளத்தே கோவில் கொண்டருளிய சிவபெருமான் வெளிப்பட்டு அருள் பாலிப்பான்.

புற வழிபாடு அக வழிபாடு என்று சிவ வழிபாடு இரு வகைப்படும். இங்கே கூறப்பட்டது அகவழிபாடு எனப்படும் அந்தரியாக வழிபாடு. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்ற திருமந்திரமும், காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக , வாய்மையே தூய்மையாக மன மணி லிங்கமாக, நேயமே நெய்யும் பாலாய் நிறைய நீர் அமைய ஆட்டிப் பூசனை ஈசனார்க்குப் போற்று அவிக் காட்டினோமே என்ற அப்பர் அடிகள் தேவாரமும் இங்கு நினையத்தக்கது.

45 தன்னை பெறுவதன் மேல் பேறு இல்லை, தான் என்றும்
தன்னைத்தான் பெற்றவன் தான் ஆரென்னில் தன்னாலே
எல்லாந்தன்னுள் கொண்டு கொண்டதனைக் கொள்ளாதே
எல்லாமாய் நிற்கும் இவன்.

உலகத்துப் பேறுகள் யாவற்றுள்ளும் மிக உயர்ந்த பேறு தன்னைத் தான் பெறுவதேயாகும். அத்தகைய பேறு பெற்றவர் யார் எனக் கேட்பின் தத்துவங்களை உணர்ந்து அவற்றை விட்டு நீங்கித் தன்னில் நிலைத் திருக்கும் திருவருளைப் பற்றுவதனாலே தன் முனைப்பும் அழிந்து சிவபெருமானாகிய பரம் பொருளோடு ஒற்றித்து நிற்பதனால் தன் வியாபக நிலையை உணர்ந்தவன் ஆவான்.

தன்னைப் பெறுவது என்பது தத்துவங்கள் வேறு தான் வேறு என உணர்தல். அவ்வாறு உணர்ந்த உடன் தனக்கு எக்காலத்திலும் ஆதாரமாக நின்று வழி நடத்தும் திருவருளைத் தன்னுள்ளே கண்டு தான் என்னும் முனைப்பையும் அறவே ஒழித்துச் சிவபெருமான் வியாபகத்துள் அடங்கி நிற்பவனே உண்மையில் தன்னைப் பெற்றவன் என்று கூறத் தகுந்தவன்.

46 துன்பமாம் எல்லாம் பரவசனாய்த் தான்துவளில்
இன்பமாம் தன் வசனாய்த் தானிருக்கில் என்பதனால்
நின்வசனா யேயிருக்கில் நின்னுடனாம் நேரிழையாள்
தன்வசனா யேயிருப்பன் தான்.

உயிர் உறுதிப்பாட்டை இழந்து தன் நிலையில் நிற்காமல் ஐம்பொறிகள் வழியே ஒடி உலக இன்பங்களில் ஈடுபடுமானால் அதற்கு உறுவது துன்பமேயன்றி இன்பம் இல்லை. இதற்கு மாறாக ஐம்பொறிகளைத் தன் வசப்படுத்தி அடக்கி ஐம்புல நுகர்ச்சிகளை விரும்பாது இருப்பின் அதனால் விளைவது இன்பமேயன்றித் துன்பமில்லை இவ்வாறு மெய்ந் நூல்கள் கூறுகின்றன. எனவே பொறி புலன்களை வசப்படுத்தி அருள் வழியில் நிற்கின்றவனுக்கு அம்பிகை பாகனாகிய சிவபெருமான் உடன் நின்று அருள் பாலிப்பான்.

கள்ளப் புலன்கள் உயிரை அருள்வழிச் செல்லாது தடுக்கும் இயல் புடையவை. அவற்றின் ஆற்றலுக்கு முன்னால் துவண்டு போகிற உயிர் துன்பத்தையே அனுபவிக்க நேரும். தான் துவளாமல் நின்று பொறிகளை அடக்கி நன்னெறியில் ஒழுகுவோர்க்கு இறைவன் தன் திருவருளாகிய சத்தியுடன் வந்து பொருந்தித் துன்பக் கலப்பற்ற இன்பத்தை அருளுவான் என்பது இப்பாடலில் கூறப்பட்டது.

47 செத்தாரே கெட்டார் கரணங்கள் சேர்ந்ததனோடு
ஒத்தாரே யோகபரர் ஆனார் எத்தாலும்
ஆராத அக்கரணத்து ஆர்ப்புண்டு இங்கு அல்லாதார்
பேராமற் செல்வர் அதன் பின்.

தன் முனைப்பு அற்றவர்களே கருவி கரணங்களால் உளவாகின்ற துயரங்களைக் கெடுத்தவர்கள். தன் முனைப்பை ஒழித்தவர்கள் பரம் பொருளாகிய சிவத்தோடு பொருந்தி அதன் வழி நடக்கின்ற இயல்பு கை கூடியவர்கள், மேலான சிவயோகம் கைவரப் பெற்றவர்கள். தன் முனைப்பு அறப்பெறாதவர்கள் நிறைவு என்பதையே அறியாத கருவி கரணங்களினால் கட்டப் பெற்று அவற்றின் வழியே சென்று மீண்டும் பிறந்தும் இறந்தும் எல்லையற்ற துன்பங்களிலே உழல்பவர்கள் ஆவார்கள்.

செத்தல் என்பது இவ்விடத்தில் இறத்தலைக் குறியாமல் ஊன் கெட்டு உயிர் கெட்டு உள்ளமும் போய் நான் என்னும் முனைப்பும் கெட்டலைக் குறித்தது. அதனோடு சேர்ந்து ஒத்தார் என்ற சொற்றொடருக்கு, ஒப்பற்ற பரம் பொருளோடு கூடி அருள் வழியிலே ஒத்து நின்றவர் என்று பொருள் காண்க. எல்லா யோக நிலையிலும் மிக உயர்ந்த சிவயோகம் கைவரப் பெற்றவர்களை யோகபரர் என்ற சொல்லால் குறித்தார்.

எதனாலும் நிறைவு பெறாதவை கரணங்கள் என உணர்த்துவார் எத்தாலும் ஆறாத அக்கரணம் என்று குறிப்பிட்டார். பெற்ற சிறுகப் பெறாத பெரிது உள்ளும் இயல்பு ஐம்பொறி வயப்பட்டவர்களுக்கு உளதாகும். ஆதலால் கரணங்கள் நிறைவு அறியாதவை எனப்பட்டன. திருக்குறளிலும் ஆரா இயற்கை அவா என்று இது உணர்த்தப்பட்டது. கரணங்கள் உயிரைக் கட்டு நிலையில் செலுத்துவன ஆதலால் ஆர்ப்புண்டு என்று கூறினார். ஆராமை நிறைவு பெறாமை . ஆர்புண்டல் பிணிக்கப்படுதல்.

48 கண்ணும் கருத்தும் கடந்த தொரு பேறேயும்
கண்ணும் கருத்தும் களிகூர நண்ணி
வடம் அடக்கிநிற்கும் வடவித்தே போல
உடனடக்கி நிற்பர்காண் உற்று.

சிவபரம் பொருள் என்பது கண்ணுக்கும் புலப்படாமல் கருத்துக்கும் அளவு படாமல் இவை யாவற்றையும் கடந்து நிற்கும் எல்லையற்ற தோர் பெரும் பொருள். ஆயினும் அப்பரம் பொருள் தம்மை யடக்கித் தற்போதம் இழந்து சிவயோகத்திலே ஒன்றி இருக்கும் அருளாளர்களுக்கு, அவர்களுடைய கண்ணும் கருத்தும் பேரின்பத்திலே மூழ்கித் களி கூருமாறு வெளிப்பட்டுத் தோன்றும். இது எத்தகையது போல் என்றால் மிக நுண்ணிய ஆலம் விதையினுள் ஆலமரமே அடங்கி இருந்தது போன்றது.

பரம்பொருள் எல்லையற்றுப் பரந்து விரிந்து திகழ்வது. கண்ணால் காணவும் கருத்தால் நினைக்கவும் எட்டாதது. அப்பெரும் பொருள் ஐம்புலனும் அகத்தடக்கி சிவயோக நிலை கைவரப்பெற்று, பசுபோதம் இழந்து சிவபோதத்தில் அழுந்தி இருக்கும் சிவயோகியர்களுக்கு அவர்களது கண்ணும் கருத்தும் மகிழுமாறு வெளிப்பட்டுத் தோன்றி அருள் பாலிக்கும்.

தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை, தெண்ணீர்க் கமத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி ஆட்பெரும் படையோடு மன்னர்க்கு இருக்க நிழாகும்மே என்று வெற்றிவேற்கை கூறும். ஆலம் விதை மீனின் முட்டையினும் சிறிதாக இருந்தாலும் பரந்து உயர்ந்து வேரோடி விழுது விட்டுப் பெரும் படைக்கும் நிழல் தரும் ஆலமரத்தைத் தன்னுள் நுண்ணிய வடிவில் அடக்கிக் கொண்டிருக்கும். அதுபோலவே ஒப்பற்ற பரம் பொருள் சிவஞானிகளின் உள்ளத்தில் எழுந்தருளி இருக்கும், வடம் ஆலமரம். வடவித்து ஆலமரத்தின் வித்து . பேறேயும் பேறே ஆயினும்.

49 வானகமும் மண்ணகமு மாய் நிறைந்த வான்பொருளை
ஊனகத்தே உன்னுமது என் என்றனையேல் ஏனகத்து
வாதனையை மாற்றும் வகையதுவே மண்முதலாம்
ஆதனமே அன்றோ அதற்கு.

எல்லையற்ற வான் பரப்பும் அவற்றில் உள்ள அண்டங்களும் இம் மண்ணுலகில் உள்ள எல்லாப் பொருள்களுமாய் நிறைந்தும் அதற்கு அப்பாலும் விளங்குகின்ற உயர்ந்த பொருளாகிய இறைவன் ஊனாலாகிய உடம்புக்குள்ளே உளன் என்று எண்ணுவது எவ்வாறு பொருந்தும்? என்று கேட்பாய் ஆயின் எளியோரிடத்தும் தோற்றமில் காலம் தொட்டுப் பிணித்து இருக்கிற பாசக் கூட்டத்தை அறவே ஒழிப்பதற்கு அப்பரம் பொருளே துணை. தத்துவங்களில் இறுதியாக எண்ணப்பட்ட நிலமும் அதற்கு மேம்பட்ட நுண்ணிய தத்துவங்களும் அப்பரம் பொருள் எழுந்தருளி இருக்கும் ஆசனம் அன்றோ?

பரம்பொருளுக்கு இலக்கணம் கூறும் போது அது வாக்கையும் மனத்தையும் கடந்து நிற்பது என்று கூறிவிட்டு, அதன் பின்னர் அப்பரம் பொருளை உள்ளமாகிய திருக்கோவிலில் எழுந்தருளுவித்து வழிபட வேண்டும் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும் என்று மாணவர் வினவ அதற்கு ஆசிரியர் விடை தருவது போன்று அமைந்திருப்பது இப்பாடல்.

எல்லாப் பொருள்களிலும் கலந்தும் வேறாயும் நிற்கின்ற பெருமை உடையவன் சிவபெருமான். தத்துவங்களுள் கடைப்பட்டதாக எண்ணப்படுவது நிலம். பருமையான நிலத்தில் கலந்து நிற்பது போலவே அதனினும் மேம்பட்ட முப்பத்து ஐந்து தத்துவங்களிலும் கலந்தும் தத்துவங்களைக் கடந்த தத்துவ ஆதீதனாகவும் இறைவன் விளங்குகிறான். மனத் தகத்தான் தலை மேலான் வாக்கினுள்ளான் என்று தொடங்கும் திருத்தாண்டகத்துள் திருநாவுக்கரசு நாயனார் இறைவன் எல்லாவிடத்திலும் செறிந்து விளங்குகிறான் என்பதை அருளிச் செய்கிறார். அவ்வாறு அவன் எழுந்தருளி இருப்பது உயிர்களின் மலப் பிணிப்பை நீக்கும் பெருங் கருணையினாலேயே என்பதையும் ஆசிரியர் விளக்கினார்.

50 கல்லில் கமரில் கதிர் வாளில் சாணையினில்
வல்லுப் பலகையினில் வாதனையைச் சொல்லும்
அகமார்க்கத் தால் அவர்கள் மாற்றினர்காண் ஐயா
சகமார்க்கத் தால் அன்றே தான்.

துணி துவைக்கும் கல்லில் சிவனடியார்களின் ஆடைகளைத் துவைத்தும், அதற்கு முட்டுப்பாடு ஏற்பட்ட பொழுது தம் தலையை அக்கல்லின் மீது மோதியும் சிவபெருமானின் திருவருளைப் பெற்றார் திருக்குறிப்புத் தொண்ட நாயனார். சிவபெருமானுக்கு அமுதுபடியாகச் செந்நெல்லும் செங்கீரையும் மாவடுவும் தலைமீது ஏந்திச் சென்ற அரிவாட்டாய நாயனார் பசியினால் வயலில் தடுக்கிக் கீழே விழ அவர் சுமந்து சென்ற அமுதுபடிக்கான பொருள்கள் நிலத்தின் வெடிப்பின் உள்ளே விழுந்தன. இதனால் துயருற்ற நாயனார் அரிவாளால் தம் கழுத்தை அறுக்க முற்பட்ட போது வயற் கமரில் இருந்து வெளிப்பட்ட இறைவனின் திருக்கரம், அவரது அரிவாள் ஏந்திய கையைத் தடுத்துப் பிடித்தது. அதனோடு இறைவன் மாவடுவைக் கடித்ததால் உண்டான ஓசையும் அவர்காதில் விழுந்தது . இறைவன் அவருக்குத் தோற்றம் காட்டி ஆட்கொண்டான்.

ஏயர் கோன் கலிக்காம நாயனார் சுந்தரமூர்த்தி நாயனாருடன் மனம் வேறுபட்டு அவரைக் காண விரும்பாமல் தம் வாளால் தம் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உயிர் நீத்தார். நாயனாரின் அன்பின் திறத்தை அறிந்த இறைவன் அவருக்கு அருள் பாலித்தான் . மூர்த்தி நாயனார் சிவ பெருமானுக்குச் சந்தனம் அரைத்துச் சாத்தும் திருத்தொண்டு புரிந்து வந்தார். ஒரு சமயம் சந்தனக் கட்டைகள் கிடைக்கப் பெறாமை யால் தன்னுடைய முழங்கையையே சந்தனக் கட்டையாகக் கொண்டு வட்டம் திகழ் பாறையில் வைத்துத் தேய்த்தார். இத்தகு செயல் செய்ய வேண்டா, அரசனாகி நாடு காத்து அதன் பின் நம் உலகு எய்துக என்று இறைவன் விண்ணில் எழுந்த ஒரு வாக்கால் மூர்த்தி நாயனாருக்கு அருள் புரிந்தான்.

மூர்க்க நாயனார் சிவனடியாருக்கு அமுதூட்டுவதற்காகச் சூதாடி, அதில் வென்று பொருள் ஈட்டி அப்பொருளால் அடியவர்களுக்கு அமுது ஊட்டிவந்தார். அதனால் இறைவன் திருவருள் கிடைக்கப் பெற்றார்.

மேலே கூறப்பட்ட ஐந்து அடியார்களும் சிவபெருமானிடத்துக் கொண்ட பேரன்பினாலே அகமார்க்கத்தைப் பின் பற்றி அதனால் தம் பிறப்பை மாற்றினார்களேயன்றி , அவர்கள் சக மார்க்கத்தைப் பின் பற்றி யவர்கள் அல்லர்.

அகமார்க்கம் என்பது இந்த இடத்தில் இறைவனைத் தம் உள்ளத்து இருத்தி அன்பால் உருகி அவனடியே சிந்தித்துத் தாவர சங்கம வழிபாட்டை மேற்கொள்ளுபவர் என்பதைக் குறித்தது. உள்ளத்தில் ஊறும் அன்பு நெறி அகமார்க்கம் என்க.

சகமார்க்கம் என்பது தோழமை நெறி என்று வழங்கப்படும் யோக நெறியாகும். இறைவனை அடைவதற்கான வழிகளில் தொண்டு நெறி மகன்மை நெறி தோழமை நெறி ஞான நெறி என நான்கு கூறப்படும். இவை முறையே தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம் , சக மார்க்கம், சன் மார்க்கம் என்றும் கூறப்படும், திருநாவுக்கரசு நாயனார், திருஞான சம்பந்த நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பெருமக்களும் முறையே இந்த நான்கு நெறிகளையும் பின்பற்றியதாகக் கூறுவர்.

கமர் நிலத்தின் வெடிப்பு, சாணை சந்தணக்கல், வல்லுப் பலகை சூதாடும் பலகை.

51 உள்ளும் புறம்பும் நினைப் பொழியில் உன்னிடையே
வள்ளல் எழுந்தருளும் மாதினொடும் தெள்ளி
அறிந்தொழிவாய் அன்றியே அன்புடையை ஆயின்
செறிந் தொழிவாய் ஏதேனுஞ் செய்

இறைவனை அகத்தில் இருத்தி வழிபடுவது என்பது ஒரு வகை, மற்றொரு வகை அவனைப் புறத்தே கண்டு வழிபடுவது. இரண்டு நிலை யினானும் இறைவன் மீது கொண்ட இடைவிடாத அன்பினால் வழிபடுவாருக்குச்சிவபெருமான் அவர் பக்குவம் அறிந்து அருள் பாலிப்பான். உள்ளும் புறமும் என்ற வேறுபாட்டு உணர்வுகள் எல்லாம் வழிபடுவோருக்கே அன்றிச் சிவபெருமானுக்கு இல்லை. எந்நிலையில் நின்றாலும் தன் முனைப்பை ஒழித்தவர்களுக்கே சிவ பெருமான் உமையம்மையோடும் எழுந்தருளி அருள் பாலிப்பான் என்பதனை உறுதியாக அறிவாயாக. அறிவு நெறியும் அன்பு நெறியும் ஆகிய இரண்டில் உனக்கு ஏற்ற ஒரு நெறியில் ஒழுகி இறைவனது அருளைப் பெறுதல் கூடும்.

ஞான மார்க்கம் பத்தி மார்க்கம் என்ற இரண்டும் இறைவனிடம் இட்டுச் செல்லும். ஒன்று உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்று கொள்ள வேண்டா. ஆயினும் இரண்டு நெறிகளிலும் தன் முனைப்பை இழத்தலும், தன்னுயிர் தான் அறப்பெறுதலும் இன்றியமையாத தேவை. யோகத்திலே நின்று ஞானம் கைவரப் பெற்றுத் தன் முனைப்பு அறுதல் அல்லது அன்பு நெறியிலே நின்று சிவபெருமான் திருவடிகளிலே பத்தியுடன் வழிபட்டுத் தன் முனைப்பு அறுதல் என்ற இவை இரண்டிலும் உமையொரு பாகன் திருவருளை வழங்குவான். எனவே உனக்கு இயன்றதோர் நெறியில் நின்று இறைவன் திருவருளைப் பெறுவாயாக என்று ஆசிரியர் அறிவுறுத்துகிறார்.

52 கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை என்ற மையால்
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பதனைக் கண்ணப்பர்
தாம் அறிதல் காளத்தியார் அறிதல் அல்லது மற்று
யாமறியும் அன்பன்று அது.

மணிவாசகப் பெருந்தகை திருவாசகத்துள் திருக்கோத்தும்பியுள் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்று அருளிச் செய் துள்ளார். மிக உயரிய அன்பின் திறத்துக்குக் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு என்று எடுத்துக் காட்டியதால் , இறைவன் பால் அன்பு செலுத்தியவர்கள் யாவருள்ளும் கண்ணப்ப நாயனாரோடு ஒப்ப அன்பு கொண்டவர் வேறு யாருமிலர் என்பதாயிற்று. கண்ணப்பரின் அன்பைக் காளத்தியப்பர் அறிவாரேயன்றிப் பிறர் எவராலும் அறியமுடியாத தகைமை உடையது அது என்று அறிக.

கண்ணப்ப நாயனார் திருக்காளத்தியில் குடுமித் தேவரைக் கண்டு, அவர் மீது ஆராத அன்பு பாராட்டி ஆறே நாட்களில் தம் கண்ணை இடந்து அப்பிச் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டார். அவருடைய அன்போடு ஒத்த அன்பினை வேறு எவரிடத்திலும் காண்கிலோம். ஆதலால் மாணிக்கவாசகர்.

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என் ஒப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப்பணித்து என்னை வா என்ற வான்கருணைச்
கண்ணப்பொன் நீற்றற்கே சென்று ஊதாய் கோத்தும்பி
என்று அருளினார்.

இத்திருப்பாடலுக்குப் பொருள் காணும் பொழுது கண்ணப்ப நாயனார் அன்புடைமையில் எவ்வாறு தலைசிறந்து நின்றாரோ அவ்வாறே அன்பின்மையின் எல்லையில் அடியேன் நின்றேன். அவ்வாறு இருந்தும் என் தந்தையாகிய சிவபெருமான் என்னைத் தன் அடியானாக ஏற்றுக் கொண்டான் என்று கொள்ள வேண்டும். கண்ணப்ப நாயனாரின் அன்பைப் பட்டினத்து அடிகளும் நான் ஆறில் கண் இடந்து அப்பவல்லேன் அல்லேன் என்று பாடினார். சேக்கிழார் நாயனார் கண்ணப்பரை அன்பு பிழம்பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ என்று போற்றினார்.

கண்ணப்பரின் அன்பின் திறம் நாயனாருக்குத் தெரியும். காளத்தி யப்பருக்குத் தெரியும் என்பதல்லது வேறு யாராலும் அறிய இயலாத சீர்மை உடையது என்று ஆசிரியர் விளக்குகிறார்.

53 அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை
அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க அவிழ்ந்தசடை
வேந்தனார்க்கு இன்னமுதம் ஆயிற்றே மெய்யன்பிற்
சேர்ந்தனார் செய்த செயல்

திருவிசைப்பா அருளிய சேந்தனார் மிக எளிமையான களிய முதினை ஒரு கந்தல் துணியிலே இட்டுத் தில்லையம்பலவாணப் பெருமானுக்கு மெய்யன்போடு அமுதுபடியாகப் படைக்க, அதனையே இன்னமுதமாகப் பெருமான் ஏற்று அருளினார் இது பேரன்பின் திறத்தால் நிகழ்ந்த செயலன்றோ?

சேர்ந்தனார் தாழத்தபட்ட குலத்தில் உதித்த சிவனடியார். அவர் எளிமையான களியமுதினைத் தமது கந்தல் துணியே கொள்கலமாக இறைவனுக்கு மனமுவந்த அன்பினோடு படைத்தார். தில்லைக்கூத்தப் பெருமான் அவ்வாறு நிவேதிக்கப்பட்ட களியையும் இன்னமுதமாக ஏற்றுக் கொண்டார். சேர்ந்தனாரின் அன்பின் திறத்தை இச்செயல் விளக்குகிறது.

54 சுரந்த திருமலைக்கே துய்யசிவ ஞானம்
சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் சுரந்த
தனமுடையாள் தென்பாண்டி மாதேவி தாழ்ந்த
மனமுடையாள் அன்பிருந்த வாறு.

திருஞானசம்பந்த நாயானார் சீர்காழிப் பதியிலே திருக்குளக் கரையில் உமையம்மையார் அளித்த ஞான அமுதப் பாலைப் பொற்கிண்ணத்தில் ஊட்ட அந்நிலையில் சிவஞானம் கைவரப் பெற்றார் என்று கேள்விப் பட்ட அளவிலே தென்பாண்டி மாதேவியாகிய மங்கையர்க்கரசியார் தாய்மை உணர்வு மீதூரப் பெற்றுத் தம்முடைய திருமார்பில் பால் சுரக்கப் பெற்றார். அந்த அன்பு முதிர்ந்த திரு உள்ளம் எவ்வளவு பெருமைக் குரியது?

ஞானசம்பந்தர் அழுததைக் கண்டதும் இறைவி ஞானப் பால் சுரந்து ஊட்டினார். பாண்டி மாதேவியாரோ அவர் அழுததைக் காணாத போதும், செய்தி கேட்ட அளவிலேயே அமுதப் பால் சுரக்கப் பெற்றார் என்பது அவரது தாய்மை அன்பின் ஆழத்தைப் புலப்படுத்துகிறது. இத்தகைய பேரன்பை எவ்விடத்தும் கண்டதில்லை. ஆதலால் அதன் உயர்வை நம்மால் அளவிட்டு உரைக்க இயலாது.

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். தாம் அருளிய நால்வர் நான்மணி மாலையில் இந்த நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டிச் சம்பந்தப் பெருமானை நோக்கி பொற்கிண்ணத்தில் பால் வழங்கிய தாயும், அந்த நிகழ்ச்சியைக் கேட்ட அளவில் பால் சுரந்த தாயும் ஆகிய இருவரில் யாரு டைய அன்பு உயர்ந்தது? எனக்கு அதைச் சொல்வாயாக ? என்று கேட்ப தாக அமைந்தது.

இலைபடர்ந்த பொய்கை இடத்து அழுதல்கண்டு
முலைசுரந்த அன்னையோ முன்நின் நிலைவிளம்பக்
கொங்கை சுரந்த அருட் கோமகளோ சம்பந்தா
இங்கு உயர்ந்த தார்யார் சொல் எனக்கு. எனும் பாடல்.

55 அன்பே என் அன்பே என்று அன்பால் அழுது அரற்றி
அன்பே அன்பாக அறிவு அழியும் அன்பு அன்றித்
தீர்த்தம் தியானம் சிவார்ச்சனைகள் செய்யும் அவை
சாற்றும் பழமன்றே தான்.

அன்பே வடிவாகியவனே, என் அன்புக்குரியவனே என்று பல வாறும் அன்பினால் அழுதும் அரற்றியும் அன்பின் நிறைவினால் தன் முனைப்பற்றும், அறிவும் உணர்வும் இழந்து சிவபெருமான் மீது அன்பு பாராட்டுவது ஒன்றே அவனை அடைவதற்குரிய நெறியாகும் அன்பு இல்லாமல் புண்ணிய தீர்த்தங்களிலே நீராடுவதும் தியானத்தை மேற்கொள்ளுவதும் பூவும் மலரும் இட்டுப் போற்றி வழிபடுவதும் ஆகிய எவையும் பயன் தரா.

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார் என்னும் திரு மந்திரம், சைவ சமயத்தில் அன்பிற்குரிய பெருமையினை எடுத்து விளக்கு வதாகும். அன்பால் அகம் குளிர்ந்து நெக்கு உருகுவார்க்கு அருளும் சிவபெருமான் ஆரவாரமான புறப் பூசை செய்வாரைக் கண்டு நாணி நிற்பான் என்பதனை, நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே, புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன் பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு, நக்கு நிற்பன் அவர்தமை நாணியே என்ற அப்பர் அடிகள் அருள் வாக்கால் உணரலாம். மாணிக்கவாசகரை அழுது அடி அடைந்த அன்பர் என்றே பெரியோர் பாராட்டுவர். அழுதல் அவரது அன்பின் முதிர்ச்சியைக் காட்டிற்று.

இப்பாடலின் செம்பொருள் தீர்த்தமாடுதலும் தியானமும் சிவ அர்ச்சனையும் அன்பால் அகம் குளிர்ந்து இயற்றப்படுதல் வேண்டும், அன் பின்றிச் செய்யப்படும் புறப்பூசைகள் பயன்தரா என்பதே ஆகும்.

பழம்பயன்.

56 எல்லார் அறிவுகளின் தாற்பரியம் என்னறிவு
செல்லும் இடத்தளவும் சென்றறிந்தேன் வல்லபடி
வாதனையை மாற்றும் வகையிதுவே மற்றவற்றுள்
ஏதமறக் கண்ட விதம்.

எல்லா மெய்ப்பொருள் நூல்களிலும் பல்வேறு சமயத்தைச் சார்ந்தவர்கள் கண்டு சொன்ன கோட்பாடுகளின் உட்கருத்துக்களை என் ஆன்ம சிற்சத்தி செல்லுமளவு சென்று அறிந்தேன். அவை யாவற்றிலும் உட் கருதாய் அமைந்திருப்பது, தக்கதொரு ஞான ஆசிரியனை அடைந்து அவர் அருளிச் செய்த முறையிலே ஒழுகித் தன் முனைப்பு என்பதனை அறவே போக்கிச் சிவஞானத்துடன் ஒன்றியிருப்பதே உலகத் துன்பங்கள் யாவற்றையும் அறுத்தொழிக்க வல்ல நெறி என்பதே.

தாற்பரியம் என்பது வெளிப்பட்டுத் தோன்றாமல் சொல்லின் உள்ளே பொதிந்திருக்கும் உட்கருத்தாகும். எல்லார் அறிவுகளின் தாற்பரியம் என்னுமிடத்துப் பல்வேறு வகைப்பட்ட சமயங்களில் அவரவர் உரைத்த நூல்களை. அப்படிப் பல வகைப்பட்ட நூல்களிலும் கருது கோளும், எய்தப்படுவதாகிய குறிக்கோளும் வேறு வேறாய் இருப்பினும் துன்பத்தை மாற்றும் வகை ஒன்றாகவே காணப்படுகிறது. அது யாதெனின் தகுதியுடைய ஞானாசிரியனை அடுத்து அவ்வாசிரியன் உணர்த்தும் நெறிப் படி தன் முனைப்பின்றி ஒழுகி ஞான நன்னெறியிலே நிற்றல் ஒன்றே உலகத் துன்பங்களை அறுத்தற்குரிய நெறி என்பதாம்.
தாற்பரியம் உட்கருத்து. வாதனை துன்பம். ஏதம் குற்றம்.

57 வித்தும் அதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம்
வித்தும் அதன் அங்குரமும் மெய்யுணரில் வித்து அதனிற்
காணாமை யால் அதனைக் கைவிடுவர் கண்டவர்கள்
பேணாமை யால் அற்றார் பேறு.

வித்தாக இருப்பது சிவபரம் பொருளான முழுமுதல். அதனின்று வெளிப்பட்டுத் தோன்றும் முளையாக இருப்பது திருவருள். மறைந்திருப்பது சிவம். வெளிப்பட்டுத் தோன்றுவது திருவருள் ஞானம். ஒன்றிய முனையினிடத்து விதை வெளிப்படக் காணப்படுவதில்லை. எனவே விதை என்ற ஒன்று உளது என்பதை உண்டு என்று அறியாது அதனைக்கைவிடுவார்கள் சிலர். மற்றும் சிலர் வெளிப்படத் தோன்றிய முளையினைப் போற்றிப் பாதுகாக்கத் தவறி அதனால் பெறுவதற்குரிய வளர்ச்சியின் எல்லையாகிய சிவப்பேற்றைப் பெறாமல் போவதும் உண்டு.

வயலிலே விதைக்கப்பட்ட நெல் முளைத்தெழுந்து வருகின்ற காலத்து வித்து நிலத்துக்கு அடியிலேயே இருக்கும். முளை மட்டிலுமே வெளிப்பட்டுத் தோன்றும் அது போலவே தனி முதற் பொருளாயுள்ள சிவம் தன்வயத்ததாக நிற்க, அதன் திருவருள் வெளிப்பட்டுத் தோன்றும் இந்த உண்மையை உணர்ந்தவர்கள் விதையுண்டு என்பதை மறவார். மறந்தவர்கள் வித்தினைக் கண்ணால் காணாமையால் அதனைக் கைவிடுவர்.

மற்றொரு சாரார் இந்த முளையின் முழுமைப்பட்ட தன்மையே விதை என்று உணராமல் இம் முளையினைப் பேணிக் காக்கத் தவறுவதனால், விளைவின் பயனாம் வித்தினைப் பெற இயலாமல் பேறு இழந்தவர்கள் ஆவார்கள்.இந்தப் பாடலுக்கு அடிப்படையாக அமைந்த திருமந்திரம், வித்தினில் அன்றி முளை இல்லை அம்முளை. வித்தினில் அன்றி வெளிப் படுமாறு இல்லை, வித்தும் முளையும் ஒன்றல்ல வேறல்ல, அத்தன்மைத்தாகும் அரனெறி தானே ( 1932) என்பதாகும்.

முளையைக் கண்ட போது வித்தினையும் , வித்தினைக் கண்ட போது முளையினையும் தேடித் திரியாமல் பெற்றதனைப் பேணி வளர்த்து மற்றதனைப் பெறுதல் கூடும் என்று இப்பாடல் உணர்த்துகிறது. பிசிச் செய்யும் போல ஒட்டணியில் அமைந்த இப்பாடலின் உட்கருத்து நுணுகி உணரத் தக்கது.

58 ஒன்றன்று இரண்டன்று உளதன்று இலதன்று
நன்றன்று தீதன்று நானன்று நின்ற
நிலையன்று நீயன்று நின்னறிவும் அன்று
தலையன்று அடியன்று தான்.

உயிர் சிவத்தோடு பொருந்திய நிலை எத்தகையது? பெறுவான் வேறு. அவன் பெறுகின்ற பேறு வேறு. அப்பேற்றினால் விளைகின்ற பேரின்பம் வேறு. எனவே அந்த நிலை ஒன்றன்று. முத்தியைச் சேர்ந்த உயிர் அதிலிருந்து மீண்டும் பிறப்பதில்லை ஆகையினால் இரண்டும் அன்று. சிவமும் உயிரும் தனித்துத் தோன்றாமையினால் உள்ளதுமன்று. உயிருக்கு சிவமும் உயிரும் தனித்துத் தோன்றாமையினால் உள்ளதுமன்று. உயிருக்கு சிவப் பேரின்பத்தை நுகர்கின்ற பேறு கிடைப்பதால் இல்லாததுமன்று. உலக வாழ்க்கையில் நல்லதும் தீயதும் பகுத்துக் காணும் உயிரின் அறிவிற்கும் அப்பாற்பட்டு உள்ளதனால் நன்றும் அன்று தீயதும் அன்று.

முத்தி நிலை, சுட்டி உணரப்படும் இயல்புடையதன்று. ஆதலால் நான், நீ என்று பிரித்துக் காணும் இடமன்று. தற்போதம் கெட்டதனாலே உயிரின் அறிவும் அன்று . தோற்றம் முடிவு என்ற இரண்டையும் கடந்த தனால் தலையுமன்று அடியுமன்று.

சொல்லின் வரம்புக்கு உட்படாத நிலையே உயிர் சிவத்தோடு ஒன்றுபட்ட நிலை. ஆதலால் அதன் தன்மை இன்னது என்று வரையறுத்துச் சொல்ல முடியாத இயல்பினை ஆசிரியர் இந்தப் பாடலில் கூறுகிறார். எனவே இது அன்று, இது அன்று என்று கழித்து, இவற்றை எல்லாம் கடந்து எதுவோ அதுவே சிவத்தோடு ஒன்றிய நிலையாகும் என்று கூறுகிறார்.

மனத்தால் நினைத்தற்கும் வாக்கால் உணர்த்துதற்கும் அரிய நிலை என்பதைப் புரிய வைத்தார்.

59 செய்யாச் செயலை அவன் செய்யாமை கண்டுதனைச்
செய்யாச் செயலிற் செலுத்தினால் எய்யாதே
மாணவக ! அப்பொழுதே வாஞ்சைக் கொடிவளர்க்கும்
ஆணவமும் அற்றது அறி.

தன் ஒருவனை அன்றி வேறு எவராலும் செய்ய முடியாத ஐந்தொழில்கள் இயற்றுபவன் சிவபெருமான். ஐந்தொழில் இயற்றும் காலத்தும் அவன் அவற்றுள் தோயாது நின்றும் விகாரப்படுவதின்றியும் தன் சங்கற்ப மாத்திரையினாலே செய்வான் , இத்தகைய பெருமையை அறிந்து உயிர் அவன் திருவருளோடு ஒன்றித் தன் செயல்களையும் தன் நினைப்பினையும் விட்டொழித்தால் அந்நிலையிலேயே ஆசைக் கொடியை வளர்க்கும் ஆணவ மலம் உயிருக்குத் துன்பத்தைச் செய்யாது தேய்ந்து போகும். ஆணவம் தேய்ந்தால் பிறப்பும் இறப்பும் தரும் எய்ப்பு இன்றி என்றென்றும் சிவப் பேரின்பத்தினை நுகர்ந்து மகிழலாம் என்பதை, மாணவனே, நீ அறிவாயாக,

படைத்தல், காத்தல், மறைத்தல், ஓடுக்குதல், அருளுதல் என்ப்படுகின்ற ஐந்தொழிலும் செய்வதற்குரிய வல்லமை உடையவன் சிவபெருமானே. இந்தச் செயல்கள் யாவும் வேறு எவராலும் செய்யப்படாதவை. ஆதலினால் இவற்றை செய்யாச் செயல் என்றார். இச் செயல்களை எல்லாம் விகாரப்படாமலும் தனது திருவருட் குறிப்பு ஆகிய சங்கற்ப மாத்திரையினாலேயே இவற்றைச் செய்கிறான் . ஆதலால் செய்யாமை கண்டு எனக் கூறினார்.

சிற்றறிவும் சிறு தொழிலும் உடைய உயிர், தன் முனைப்போடு செயல்படுகிற போது அது அங்குமிங்கும் பரந்து உலகியல் பொருள்களைப் பற்றித் துயருறும். துயரத்தைத் தவிர்ப்பதற்கு உரிய ஒரே வழி தன் பரபரக்கும் இயல்பை அறவே ஒழித்துத் திருவருளின்கண் அடங்கி நிற்றலே ஆகும். முனைப்பு அடங்குவதை செய்யாச் செயலின் செலுத்துதல் என்றார். இது திருவாசகம் திருத்தெள்ளேணத்தில் செயல் மாண்டவாறு, என்று அருளப்படும்.

இந்த நிலையை எய்திய உயிருக்கு அப்பொழுதே மோகத்தை வளர்க்கின்ற ஆணவ மலம் தேய்ந்து இறும். அதனை வாஞ்சைக் கொடி வளர்க்கும் ஆணவம் என்று குறித்தார். ஆணவ மலத்தின் காரிய வேறு பாடுகளை ஏழு வகையாகப் பகுத்து உணர்த்திய மாதவச் சிவஞான முனிவர், அதன் முதலாவது காரியம் மோகம் என்று உணர்த்தினார். மோகமும் நீங்கிய வழியேஆணவ மலக் கேடு கைகூடும் எனவும் கூறினார்.மோகத்தை இப்பாடலில் வாஞ்சைக் கொடி என்று சுட்டினார் ஆசிரியர். மாணவனை நெறிப்படுத்தும் முறையில் இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலுக்குச் சில பாட வேறுபாடுகளும் உள்ளன.

60 ஏதேனும் காலமுமாம் ஏதேனும் தேசமுமாம்
ஏதேனும் திக்கு ஆசனமுமாம் ஏதேனும்
செய்தால் ஒருவலுமாம் செய்யாச் செயலதனைச்
செய்யாமை செய்யும் பொழுது.

செய்தற்கு அரிய செயலாக முன் பாடலில் கூறப்பட்ட திருவருட் செயலுள் அடங்கி நிற்போருக்கு எய்தற்கு அரிய நிலை வந்து எய்தியதால் அவர்களுக்கு வழிபாட்டுக் கென நூல்களில் விதிக்கப்பட்ட நியதிகள் எதுவும் கிடையா. காலம் எதுவாயினும் இடம் எதுவாயினும் திசை எதுவாயினும் இருக்கை எதுவாயினும், அவர்கள் செயல் நன்றே ஆயினும் தீதே ஆயினும் அவர்கள் இயற்றும் வழிபாட்டினை மேற்கொள்ளுவர்.

சிவபெருமானை வழிபடுவதற்கு உரியன என்று காலம் இடம் திசை இருக்கை முதலிய நியமங்கள் நூல்களில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவ்வரையறையை மீறிச் செய்தாலும் நூல்களில் விலக்கிய வகையில் செய்தாலும் சிவ அபராதம் ஆகும். உலக வாழ்க்கையில் ஈடுபட்டு அந்தப் பிடிப்பை நீக்கிக் கொள்ள விரும்பும் மாந்தருக்காகவே விதிகளும் விலக்குகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. இத்தகைய வரையறைகள் ஆன்மபோதத்தை முற்றிலும் இழந்து திருவருளின் வழி நின்றார்க்குப் பொருந்துவனவல்ல. அவர்கள் எங்கேனும் இருந்து தங்கள் வழிபாட்டினை இயற்றுகின்ற உரிமை உடையவர்கள்.

பாசத்தை விட்டு நீங்கியவர்களுக்கு நியமத்தைக் கடைபிடிக்க வேண்டிய தேவையில்லை என்று கூறிய பொழுதே, அத்தன்மை எய்தாதவர்களுக்கு நியமத்தை விட்டு விலகுதல் சிவ அபராதம் எனவும் எதிர்மறை முகத்தால் வலியுறுத்தினர்.

61 செய்தற் கரிய செயல்பலவுஞ் செய்து சிலர்
எய்தற் கரியதனை எய்தினார் ஐயோநாம்
செய்யாமை செய்து செயல் அறுக்கல் ஆயிருக்கச்
செய்யாமை செய்யாத வாறு.

செயற்கரிய செயல்கள் பலவற்றைச் செய்து சில அடியவர்கள் எய்துவதற்கு மிகவும் அரியதாகிய சிவபரம் பொருளை எய்தி இன்புற்றார்கள். அத்தகைய வன் தொண்டுகள் நம்மால் செய்வதற்கு அரியனவேனும் நம் தன் முனைப்பே அடக்கி இறைவன் திருவடியில் ஒடுங்கி ஏதும் செய்யாமல் இருத்தாலே இறைவன் திருவருள் நம்மை ஆண்டு கொள்ளும் என்பதை அறிந்திருந்தும் நாம், செய்யாதிருக்கும் அதனைக்கூட மேற்கொள்ளாது இருக்கிறோமே? இந்நிலை இரங்கத்தக்கதாகும்.

செய்தற்கரிய செயல்கள் என்று இப்பாடலில் குறிப்பிட்ட வல்வினைகள் இந்நூலில் 18,19,20 ஆகிய பாடல்களில் எடுத்துரைக்கப்பட்ட சிறுத்தொண்டர், சண்டீசர், அரிவாட்டாயர் ஆகிய நாயன்மார்களின் செயல்களாகும், இவற்றை அப்பாடல்களில் வல்லினை என்று ஆசிரியர் குறித்தருளினார். இத்தகைய தொண்டுகள் நோற்பார் சிலரே, பலரல்லர். என்பதனையும் வலியுறுத்தினார். எய்தற்கரியது என்று இப்பாடலில் குறிக்கப்பட்டது சென்றடையாத திருவுடையானாகிய சிவபரம் பொருள்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர், செயற்கரிய செய்கலாதார் ( குறள் 26) என்பதனையும் எய்தற்கரிய இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல் (குறள்489) என்பதனையும் இணைத்து இந்த அருட்பாடல் நம்மை நெறிப்படுத்துகின்றது.

செய்யாமையே போதுமானதாக இருக்க அதனையும் செய்வதற்கு முன்வராதிருக்கிறோமே என்று இரங்கிக் கூறுகிறார். செய்யாமை என்பது தன் பணி நீத்தல் . இந்நிலைமை கைகூடுமென்றால் அப்பொழுதே இறை பணி நிற்றல் உதிக்கின்றது.

62 இப்பொருள்கள் யாதேனும் ஏதெனினும் ஒன்று செய்தல்
எப்பொருளும் செய்யா தொழிந்திருத்தல் மெய்ப்பொருளைக்
கண்டிருத்தல் செய்யாதே கண்ட மனிதரெலாம்
உண்டிருப்ப தென்னோ உரை.

இதுவரை கூறப்பட்ட பாடல்களுள் இறைவனைச் சென்று அடை வதற்குரிய நெறிகள் பல கூறப்பட்டன. சிவதருமம் என்ற முறையிலே, அரிய செயல்களாகிய வல்வினையும், எளிய செயல்களாகிய மெல்வினையும் விளக்கப்பட்டன. இவற்றுள் இரண்டனையும் பின்பற்றாது தன் செயலற்று இறைவன் திருவருளில் ஒடுங்கிச் செயல் ஏதும் செய்யாமலிருத்தல் மூலமும் சிவபரம் பொருளோடு ஒன்றிருப்பது கூடும். இவ்வாறு தன்னால் இயன்ற நெறிகளில் ஒன்றைப் பின்பற்றி சிவப் பேரின்பத்தை அனுபவிக்க வழிகள் பல இரு ப்பினும் இவற்றுள் எதனையும் பின்பற்றாது நிலையாதவற்றை நிலைத்தன என்று கருதி வாழ்நாளை வறிதே கழிக்கின்றனரே இதனால் என்ன பயன்?

பல பாடல்களில் விரிவாகக் கூறிய கருத்துக்களை சுருக்கமாகச் சுட்டுவார். இப்பொருள்கள் என்று குறித்தார். பொருள்கள் என்பது நெறிகளுள் ஒன்றைக் கடைபிடித்தல் என்பது அதன் பின்னர் வரும் யாரேனும் ஏதெனினும் ஒன்று செய்தல் என்ற சொற்றொடரால் பெறப்பட்டது.

இவற்றுள் ஏதேனும் ஒரு வழியைப் பின்பற்றினாலும் மெய்ப் பொருளைக் கண்டிருத்தல் உறுதி என உணர்த்துவதற்கு கண்டிருத்தல் செய்யாதே என்று குறித்தார்.

உண்டிருத்தல் என்பது நுகர்ந்திருத்தல் என்ற பொருளைத் தரும். சிவஞான போதத்துள் உண்டிவினை இன்மையின் என்பதும் இப் பொருட்டு ஆயினும் நிலையற்ற பொருள்களை நுகர்ந்து நிலையான பொருள்களைத் தேடாதிருப்பவர் வாழ்க்கை உண்பதும் உறங்கு வதுமாய் முடியுமேயன்றிப் பயனுள்ள வாழ்க்கை ஆகாது. எனவே அத்தகைய மக்கள் உப்பிற்கும் காடிக்கும் கூற்று உரைந்ததாகக் கொள்ளலும் பொருந்தும்.

63 வீட்டிலே சென்று வினை யொழித்து நின்றிடிலென்
நாட்டிலே நல்வினைகள் செய்திடிலென் கூட்டில்வாள்
சாத்தியே நின்றிலையேல் தக்கனார் வேள்வி செய்த
மாத்திரமேயாம் கண்டாய் வந்து.

வீட்டு நெறியிலே செல்வதற்காகத் துறவறத்தை மேற்கொண்டு இருவினைகளும் பற்றாதவண்ணம் ஒழுகினால் என்ன ? அன்றி நாட்டிடை வதிந்து இல்லற நெறியில் நின்று மனைவியுடன் நல்வினைகளைச் செய்து ஒழுகினால் தான் என்ன? இரண்டாலும் பயன் விளைய வேண்டும் என்றால் தற்போதத்தை இழந்து உயிர்எனும் உறையில் திருவடி ஞானமாகிய வாளினைச் சாத்தித் தன் முனைப்பற்று இருத்தல் வேண்டும். அவ்வாறு நில்லாவிடில் தக்கன் தன் முனைப்போடு இயற்றப் புகுந்த வேள்வி தீவினையாய் முடிந்தது போன்று, நீ மோற் கொள்ளும் முயற்சிகளும் நல்லனவே எனினும் தீயனவாய் முடியும்.

வீட்டிலே என்ற சொல் வீட்டின் பத்திலே விருப்பம் கொண்டு என்ற பொருளைத் தந்தது. நாட்டிலே நல்வினைகள் செய்தல் என்பது இல்லறத்தில் மனையாளுடன் கூடியிருந்து துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் மற்றையோர்க்கும் துணையாக நல்வினைகள் புரிவதனைக் குறித்தது.

கூட்டில் என்பது உடம்பாகிய உறையினுள் திருவடி ஞானமாகியவாளினைச் சாத்தி அருள்வழி ஒழுகுதலைக் குறித்தது. உறை கழித்த வாள் தீமை பயத்தல் உலகியலில் காணலாம். இங்கு வாள் கூட்டில் இருத்தல் தன் முனைப்பு அறுதலுக்கு எடுத்துக் காட்டு ஆயிற்று. தக்கன் செய்த வேள்வி நல்வினை எனப்படுமாயினும் அவன் செருக்கோடு இயற்றியதனால் வேள்வியும் முற்றுப் பெறவில்லை. வேள்வியில் முயன்ற அவனுக்கு, வேள்விக்கும் வந்த மற்றைய தேவர்களுக்கும் அது தீய பயனையே தந்தது.

64 சிவன் முதலே அன்றி முதலில்லை என்றும்
சிவனுடையது என்னறிவ தென்றும் சிவனவனது
என்செயல் அது ஆகின்றது என்றும் இவையிற்றைத்
தன் செயலாக் கொள்ளாமை தான்.

சிவபெருமான் ஒருவனே முழு முதற்பொருள். அவனன்றி முதற் பொருள் என்று சொல்லுவதற்குரிய பொருள் வேறு ஒன்றும் இல்லை. என்னுடைய அறிவு என்று நான் கூறுகின்ற யாவும் அப்பொருமான் அறிவிக்க அறிந்ததன்றி நானாக அறிந்தன அல்ல. அது போலவே நான் இயற்றுகின்ற எந்தச் செயலும் அப்பெருமானுடைய துணையின்றி நிகழாது என்பதை உணர்ந்து இவை அனைத்தையும் அறிபவனும் செய்பவனும் இறைவனே; நான் அல்லேன் என உணர்வதே உயிர் உய்வதற்கு உரிய வழியாகும்.

போற்றி என் வாழ் முதலாகிய பொருளே என்ற திருவாசகத்தொடர் சிவபரம் பொருளின் முதன்மைத் தன்மையையும் தலைமையையும் நான்கு விளக்குவது. உயிர், தானே அறிந்தும் தானே செய்தும் வருவதாகக் கருதுவது தவறு. இறைவன் அறிவிக்கவே உயிர் அறிகின்றது. இறைவன் இயக்கவிக்கவே உயிர் செயல்படுகிறது. உயிர்க் குயிராய் நின்ற இறைவனின் துணையின்றி உயிர்களுக்கு எச்செயலும் இல்லை,

எல்லாம் சிவன் செயல் என்ற கருத்தினைச் சிலர் பிறழ உணர்ந்து கொள்ளுகின்றனர். எல்லாம் சிவன் செயல் என்று சொன்னால் நாம் செய்கிற தவறுகளுக்கும் நாம் பொறுப்பாளி ஆக முடியாது அல்லவா? என்பது அவர்களுடைய வினா. ஆனால் இறைவன் நம் உயிருக்கு உயிராக உள்நின்று இயக்குகிறான் ஆதலினால் அவனையன்றி நமக்குச் செயல் இல்லை என்பதே எல்லாம் சிவன் செயல் என்பதன் உட்கருத்து.

நமது உடலின் துணை கொண்டும், நம் உறுப்புகளின் துணை கொண்டும் கணக்கற்ற செயல்களை நாம் செய்து வருகிறோம். ஆயினும் நம் உடலுக்குள்ளேயே நுட்பமாக இயங்குகிற இரத்தச் சுழற்சியும், உயிர் மூச்சும் , உண்ட உணவு செரிப்பதும் இன்னும் இத்தகைய எண்ணற்ற நுட்பமான செயல்கள் எல்லாம் நாம் அறிந்து செய்வதில்லை. அவற்றின் ஆதாரம் இல்லாமல் நமக்கு வேறு செயலாற்றும் வல்லமையும் இல்லை, உலகில் உயிரோடு இருப்பதே வியப்புக்குரிய. அந்த உயிரைத் தந்த இறைவன் நம்மையும் இயக்குகிறான் என்பதில் ஐயம் இல்லை.

உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகியவற்றைத் தனது பெருங்கருணையினால் வழங்கிய இறைவன் உலகியல் செயற்பாடுகளில் நமக்கு உரிமை தந்திருக்கிறான். நல்லனவற்றைத் தேர்ந்து செய்யவும் அல்லனவற்றை விலக்கவும் . அறிவையும் தந்திருக்கிறான். ஆதலால் எதனைச் செய்ய வேண்டும், எதனைச் செய்யலாகாது என்று முடிவு செய்யும் பொறுப்பு நம்முடையதே. இறைவன் அனைத்துக்கும் ஆதாரமாகிறான் என்பதே எல்லாம் சிவன் செயல் என்பதற்குக் கருத்து. இந்த அடிப்படையில் ,

உலகினில் என்செயல் எல்லாம் உன்விதியே நீயே
உள்நின்றும் செய்துவித்தும் செய்கின்றாய் என்றும்
நிலவுவதோர் செயல்எனக்கு இன்று உன் செயலே என்றும்
நினைவார்க்கு வினைகள் எல்லாம் நீங்கும் தானே ( சிந்தியார் 30)

என்று அருள் நந்தி சிவம் சிவஞான சித்தியாரில் அருளிச் செய்துள்ளார்.

65 இன்று இச்சமயத்தின் அல்லதுமற்று ஏழையுடன்
ஒன்று சொலி மன்றத்து நின்றவர் ஆர் இன்றிங்கே
அங்கம் உயிர் பெறவே பாடும் அடியவரார்
எங்குமிலை கண்டாய் இது.

உலகில் கணக்கற்ற சமயங்கள் உள. எனினும் சைவசமயம் ஒன்றில் தான் இறைவனும் இறைவியுமாகத் தில்லைப் பொன் அம்பலத் திலே ஆனந்தக் கூத்து இயற்றி இறைவன் உயிர்களுக்கு அருள் உபதேசம் செய்கிறான். அதுவும் அல்லாமல் வெறும் எலும்பு உயிர் பெற்றுப் பூம்பாவை என்னும் அழகிய பெண்ணாக வடிவெடுக்கும்படி தமிழ்ப் பதிகம் பாடிய அடியவர் சைவசமயத்திலேயன்றி வேறு எந்தச் சமயத்திலும் இலர்.

ஏழை என்ற சொல் பெண் என்ற பொருளைக் குறிக்கு மேயல்லது, இன்றைய வழக்கில் உள்ளது போல வறுமையுற்றவரைக் குறிக்காது. இங்கு இச்சொல் சிகாமியம்மையைக் குறித்தது. பொன்னம்பலத்தில் ஆனந்தக் கூத்தாடுகின்ற இறைவன் தன் அருட்கூத்தின் மூலம் உயிர்களுக்குக் குறிப்பால் அருளுபதேசம் புரிகின்றான் திருநாவுக்கரசு பெருமான் இத்திருக்குறிப்பை எங்கு வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே என்று அருளுகிறார் இறைவனது ஞான நடனம் ஊன நடனம் ஆனந்த நடனம் ஆகிய யாவும் அவன் ஐந்தொழில் இயற்றும் தன்மையையும் உயிர்களுக்கு அருள் பாலிக்கும் வண்மையையும் குறிப்பனவாக உண்மை விளக்கம் முதலிய அருள் நூல்கள் எடுத்துரைக்கின்றன. சைவ சமயத்திலன்றி வேறு எச்சயத்திலும் மன்றத்துள் நின்று ஒன்றே ஆகிய மெய்ப்பொருளை உணர்த்தியவர் யாரும் இலர் என்று ஆசிரியர் சிவ பெருமானது அருளின் திறத்தை வியந்து போற்றுகிறார்.

திருமயிலாப்பூரில் அடியவர் ஒருவரின் மகள் பாம்பு தீண்டி இறந்தனள். அவளது எலும்புகளை ஒரு குடத்திலிட்டுப் பாதுகாத்து வைத்திருந்து, திருஞான சம்பந்த நாயனார் திருமயிலைக்கு எழுந்தருளிய போது அவர் முன்னிலையில் அக்குடத்தினை வைத்தார் அந்த அடியவர். திருஞான சம்பந்த நாயனார் பணித்தபடி அக்குடத்தை திருக்கோயில் முற்றத்தில் வைத்தனர், நாயனாரும் மட்டிட்ட புன்னையம் கானல் எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி அருளினார். குடத்தினுள் இருந்த எலும்புகள் பூம்பாவை என்னும் பெண்ணாக உயிர் பெற்று எழுந்தன. இத்தகைய அற்புதம் வேறு எந்தச் சமயத்தில் நிகழ்ந்தது என்று வினவுகிறார். ஆசிரியர்.

இப்பாடலில் ஆசிரியர் சைவ சமயத்தின் சிறப்பினையும் சிவனடியார் உயர்வினையும் எடுத்துரைக்கிறார்.

கருத்துகள் இல்லை: