வியாழன், 7 நவம்பர், 2013

புகார்க் காண்டம்

1. மங்கல வாழ்த்துப் பாடல்

(சிந்தியல் வெண்பாக்கள்)


திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகுஅளித்த லான்.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு 5

மேரு வலம்திரி தலான்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான். பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் 10

வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு
ஓங்கிப் பரந்துஒழுக லான். (மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா) ஆங்கு,
பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய 15

பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே.
அதனால், 20

நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு
போகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள்,
அவளுந்தான், 25

போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும்
மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ,
ஆங்கு, 30

பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளொடு உயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்குஆர்த்தும் மாசாத்து வான்என்பான்
இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டுஆண்டு அகவையான்,
அவனுந்தான், 35

மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டுஏத்தும் செவ்வேள்என்று இசைபோக்கிக் காதலால்
கொண்டுஏத்தும் கிழமையான் கோவலன்என் பான்மன்னோ.
அவரை, 40

இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால்
மணஅணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி
யானை எருத்தத்து அணிஇழையார் மேல்இரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்.
அவ்வழி, 45

முரசுஇயம்பின, முருகுஅதிர்ந்தன, முறைஎழுந்தன பணிலம்,வெண்குடை
அரசுஎழுந்ததொர் படிஎழுந்தன,
அகலுள்மங்கல அணிஎழுந்தது.
மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வான்ஊர் மதியம் சகடுஅணைய வானத்துச் 50

சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்புஎன்னை.
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர் 55

சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்துஇள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தல் பொலன்நறுங் கொடிஅன்னார் 60

காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதுஅறுக எனஏத்திச் சின்மலர் கொடுதூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்அமளி ஏற்றினார், தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை 65

உப்பாலைப் பொன்கோட்டு உழையதா எப்பாலும்
செருமிகு சினவேல் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே.

அஃதாவது :- நூலாசிரியர் தாமியற்ற வெடுத்துக்கொண்ட சிலப்பதிகாரம் என்னும் இப்பாட்டைச் செய்யுளாலியன்ற வனப்பு நூல் இனிது நிறைவேறுதற் பொருட்டுக் கடவுளை வாழ்த்துவதும், இவ்வனப்பு நூலின் தலைவியாகிய கண்ணகியையும் தலைவனாகிய கோவலனையும் திருமண வேள்விக்கண் கட்டிலேற்றிச் சேம்முதுபெண்டிர் வாழ்த்துவதுமாகிய இருவகை வாழ்த்துக்களையும் உடைய இன்னிசைப்பாடல் என்றவாறு.

1-3 : திங்களை........அளித்தலான்

(இதன் பொருள்) திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் யாம் உலகெலாம் தண்ணொளி பரப்பும் திங்கள் மண்டிலத்தைக் கைகுவித்து வணங்குவோம்! அஃது ஏனெனின்; கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர்வெள் குடை போன்று - பூந்தாது விரிதற்கிடனான ஆத்திமாலையை யுடைய சோழமன்னனுடைய குளிர்ச்சி யுடைய வெண்கொற்றக் குடைபோன்று; இஅம கண் உலகு அளித்தலான் அஃது இந்த அழகிய இடங்களையுடைய நிலவுலகிற்குத் தண்ணொளி வழங்கிப் பாதுகாத்தலாலே; என்க.

(விளக்கம்) திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் எனவரும் அடுக்குச் சிறப்பின்கண் வந்தது; மேல் வருவனவற்றிற்கும் இஃதொக்கும்; இது பண்பும் பயனும் கூடின உவமம். கொங்கு பூந்தாது. மாலை ஆத்தி மாலை. சென்னி-சோழன். உவமத்திற்கு வந்த அடையைப் பொருளுக்கும் இயைத்துக் குளிர் வெண்திங்கள் என்க.

4-6 : ஞாயிறு...........திரிதலான்

(இதன்பொருள்) ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் யாம் ஞாயிற்று மண்டிலத்தைக் கைகுவித்து வணங்குவோம்; அஃது ஏனெனின்; காவிரி நாடன் திகிரிபோல் பொன் கோட்டு மேரு வலம் திரிதலான்-அது தான் காவிரியாறு புரக்கும் நாட்டையுடைய சோழனது ஆணைவட்டம் போன்று பொன்னாகிய கொடுமுடியையுடைய மேருமலையினை இடையறாது வலமாகச் சூழ்ந்து வருதலான் என்க.

(விளக்கம்) திகிரி ஆணைவட்டம். அரசனுடைய ஆணையை ஆழியாக உருவகித்துரைப்பது நூல் வழக்கு. இதனால் சோழமன்னனுடைய ஆணை உலகெலாம் செல்கின்ற சிறப்புடைத்தென்பது பெற்றாம். திரிதல்-இடையறாது செல்லுதன் மேற்று. இது தொழிலுவமம். ஏனைய நாட்டினும் சிறந்த நாடென்பார் அச்சிறப்பிற்குக் காரணமான காவிரியையுடைய நாடன் என்றார். என்னை?

ஏரியு மேற்றத்தி னானும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வளனெல்லாம் - தேரின்
அரிகாலின் கீழுகூஉ மந்நெல்லே சாலும்
கரிகாலன் காவிரிசூழ் நாடு

எனவரும் பழைய வெண்பாவினையும் நினைக.

7-9 : மாமழை...........சுரத்தலான்

(இதன் பொருள்) மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் - யாம் பெரிய முகிலைக் கைகுவித்து வணங்குவோம், அஃது ஏனெனின்; நாம நீர் வேலி உலகிற்கு - அச்சத்தைக் தருகின்ற கடலாற் சூழப்பட்ட இந்நிலவுலகிற்கு; அவன் அளிபோல் மேல் நின்று தான் சுரத்தலான் - அக்காவிரி நாடன தண்ணளி போன்று மேம்பட்டு நின்று பெயலாலே வளத்தைப் பெருக்குதலாலே என்க.

(விளக்கம்) மழை, ஆகுபெயர்; முகில். மா-பெருமைமேற்று. நாம நீர் வேலி என்புழி நாம் என்னும் உரிச்சொல்லீறு திரிந்தது. நாம்-அச்சம். அவன் என்னும் சுட்டு மேல் காவிரிநாடன் என்பதனைச் சுட்டியவாறு. அளி-அருள். மேனின்று என்பது அரசன் அளிக்கு மேம்பட்டு நின்று எனவும், முகிலுக்கு மேலே நின்று எனவும் பொருள் பயந்து நின்றது.

இனி, ஈண்டு அடிகளார், திங்கள் ஞாயிறு மழை எனும் மூன்று பொருள்களும் இவற்றிற்கு நிரலே உவமையாக வருகின்ற குடை திகிரி, அளி என்னும் மூன்றும் இவற்றையுடைய மன்னனும் ஆகிய இவற்றை வணங்கித் தமது காப்பியத்தைத் தொடங்குதல் அடிகளார்க்கு முன்னும் பின்னும் காணப்படாததொரு புதுமையுடைத்து. இவைதாம் இலக்கண நெறி நின்று ஆராய்வார்க்கு, ஆசிரியர் தொல்காப்பியனார் புறத்திணையியலில் பாடாண் திணையின்கண், அமரர்கண் முடியும் அறுவகை யானும் (....................-25) என்றோதினமையின் இவ்வாறு திங்கள் ஞாயிறு மழை என்னும் இவை அவ்விதி பற்றி வணங்கப்பட்டன போலும் எனவும், அன்றியும், புறத்திணைப்பாடாண் பகுதியில் தாவினல் லிசை எனத் தொடங்கும் நூற்பாவின்கண் நடைமிகுத்தேத்திய குடைநிழன் மரபு என்னும் துறைபற்றி ஈண்டுச் சென்னியின் குடை நிழன் மரபினை நடைமிகுத்து ஏத்தப்பட்டது எனவும், மரபு என்றதனால் திகிரியையும் அளியையும் மிகுந்தேத்தினார் எனவும் பண்டையுரையாசிரியர் தத்தமக்குத் தோன்றியவாறெல்லாம் கூறிப் போந்தனர்.

இன்னும் ஈண்டு அடிகளார் வணங்கிய திங்கள் முதலிய மூன்றும் ஆசிரியர் தொல்காப்பியனார் கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்னும் நூற்பாவின் பொருளோடு தொடர்புடையன என்று கொண்டு அக் கருத்திற்கேற்ப வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் இத் திங்கள் முதலிய மூன்றுமே என வுரை வகுத்தலுமாம். என்னை? கொடி நிலை என்றது திங்கள் மண்டிலம் எனவும், (நச்சினார்க்கினியர் ஞாயிற்று மண்டிலம் என்று கருதுவர்) கந்தழி என்பது ஞாயிறு மண்டிலம் எனவும், வள்ளி என்பது முகில் எனவும் கோடலுமாம் ஆகலின் என்க.

இவ்வாறு தொல்காப்பியமே முதலிய பழைய இலக்கண நூலானும் இதுதான் இஃதென அறுதியிட்டுக் கூற வொண்ணாக இம்மங்கல வாழ்த்தைப் பின்னும் கூர்ந்து ஆராயுங்கால், இவ்வாழ்த்து அடிகளார் கடவுளை வாழ்த்தும் வாழ்த்தே என்பது புலப்படும். அது வருமாறு: மாந்தர் கட்புலனாகக் காணப்படாத கடவுளை அவனுடைய படைப்புப் பொருளின் வாயிலாகவே காண்டல் கூடும் என்பது அடிகளார் கருத்து. இறைவனுடய பண்புகளில் அருட்பண்பே தலைசிறந்த பண்பாகலின் அப்பண்பு திங்கள் மண்டிலத்தும், அவனுடைய தெறற்பண்பும் அறிவு விளக்கப் பண்பும் ஞாயிற்று மண்டிலத்தும், அவனுடைய ஆக்கல் அளித்தல் அழித்தல் என்னும் மூன்றுவகைத் தொழிற்பாடும் முகிலிடத்தும் காணப்படுதலால் இவற்றின்கண் இக் கடவுட்பண்புகளையே அடிகளார் கடவுளாகக் கண்டு வழிபடுகின்றார் என்பதாம்.

இனி, உயிரில் பொருளாகிய இவற்றினும் உயிர்களிடத்தே கடவுட்பண்பு இறைமைத்தன்மை (அரசத்தன்மை)யாக வெளிப்படுதலின் இவற்றிற் குவமையாகக் காவிரிநாடன் குடை முதலியவற்றை எடுத்தோதி வணங்குகின்றனர் என்று கொள்க. இங்ஙனம் கூறவே அடிகளாருடைய கடவுட் கொள்கையையும் யாம் ஒருவாறு அறிந்து கொண்டவராகின்றோம் என்க. இவ்வாறு எப்பொருளினும் கடவுளைக் காணுமியல்பே சமயக்கணக்கர் மதிவழிச் செல்லாது உயரிய உணர்ச்சி வாயிலாய்க் கடவுளைக் கண்டு வழிபடுகின்றவுண்மை நெறியென்று கொள்க. இவற்றை,

நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள
நின், தண்மையுஞ் சாயலும் திங்கள்உள
நின், சுரத்தலும் வண்மையு மாரியுள
நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்துள

என்றற்றொடக்கத்துப் பரிபாடலானும்

தீயினுட் டெறனீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ

என்றற்றொடக்கத்துப் பரிபாடலானும் மணிவாசகம் முதலிய நூல்களானும் உணர்ந்து கொள்க. ஈண்டு வணங்கிய திங்கள் முதலியன பொதுப் பொருள்களாக இக்காப்பியத்தோடு தொடர்புண்மை கருதி அரசன் என்று பொதுவின் ஓதாது சென்னி என்றும் காவிரிநாடன் என்றும் செம்பியன் ஒருவனையே விதந்தெடுத்தோதுவாராயினர். இது தாம் வழிபடு கடவுளை வாழ்த்தி இக்காப்பியத்திற்கு அவ்வாழ்த்தினூடே கால்கோள் செய்தபடியாம் என நுண்ணிதின் உணர்க.

இனி, திங்களை முற்கூறியது இக் காப்பியத் தலைவியாகிய கண்ணகியாரைக் கருதிக் கூறியபடியாம். என்னை? திங்கள் மண்டிலம் பெண்மைத் தன்மையுடைத்தென்ப வாகலின் என்க. இக்கருத்தேபற்றி அடியார்க்கு நல்லார், இத் தொடர்நிலைச் செய்யுட்குச் சிறந்த முதன்மொழி அதுவே என்றோதினர் போலும். இனி இக் காப்பியத் தலைவியும் தலைவனும் தோன்றிய இடமாகிய பூம்புகாரை வாழ்த்திக் காப்பியக் கதையைத் தொடங்குகின்றனர் என்க.

10-12 : பூம்புகார்............. ஒழுகலான்

(இதன்பொருள்) பூம்புகார் போற்றும் பூம்புகார் போற்றுதும்-யாம் இனி அழகிய புகார் நகரத்தைக் கைகூப்பி மனத்தால் நினைந்து தலையாலே வணங்குவேம்; வீங்குநீர் வேலிக்கு - கடலை வேலியாகவுடைய இந்நிலவுலகின்கண்; அவன் குலத்தோடு ஓங்கிப் பரந்து ஒழுகலான் - அக் காவிரிநாடன் குலத்தாருடைய புகழோடு தானும் உயர்ந்து தன்புகழ் இவ்வுலகெங்கும் பரவுமாறு நடத்தலாலே என்க.

(விளக்கம்) பூ-அழகு; பொலிவு. பூப்புகார் எனற்பாலது விகாரத்தால் பூம்புகார் என நின்றது. இது செய்யுளின்பம் கருதி மெலிக்கும் வழி மெலித்தல். ஓங்கிப் பரந்து ஒழுகலான் என்னும் வினைக்கேற்பப் புகழ் என வருவித்தோதுக.

அடிகளார் இக்காப்பியஞ் செய்கின்ற காலத்தே புகார் நகரம் கடல் வயிறுபுக்கு மறைந்து போனமை கருதி அந்நகரந்தான் மறைந்து போயினும் அதன் புகழ் அக் காவிரிநாடன் புகழோடு இவ்வுலகுள்ள துணையும் பரந்து ஒழுகும் அத்துணைப் பெருமையுடைத்தாகலான் அதனைப் போற்றுதும் என்றவாறு. இதற்குப் பழைய வுரையாசிரிய ரெல்லாம் அடிகளார் கருத்துணராது வறிய சொற்பொருள் உரை மட்டும் கூறியுள்ளனர். இக் கருத்து, அடுத்துப் பின்னும் விளக்கமுறும்.

13-19 : ஆங்கு................ முழுதுணர்ந்தோரே

(இதன்பொருள்) ஆங்கு-அவ்வாறு வாழ்த்தி வணங்குதலன்றி, பொதியில் ஆயினும் இமயம் ஆயினும். தம்பால் தோன்றிய உயர்ந்தோர் புகழோடு ஓங்கிப் பரந்தொழுகும் புகழுடைய பொதியமலை யேயாதல் இமயமலையேயாதல்; பதிஎழுவு அறியாப் பழங்குடி கெழீஇய பொதுஅறு சிறப்பின் புகாரேயாயினும் - தன்கண் வாழ்வோர் பகையே பசியே முதலியவற்றால் வருந்திக்குடியோடிப் போதலை எஞ்ஞான்றும் அறிந்திலாத படைப்புக் காலந்தொட்டு நிலையுற்று வருகின்ற பழைய குடிமக்களையுடைய தனக்கேயுரிய சிறப்பினையுடைய இந்தப் புகார் நகரமேயாதல், இன்னோரன்ன விடங்களை; முடித்த கேள்வி முழுது உணர்ந்தோர்-கேட்கக்கடவன வெல்லாம் கேட்டுமுற்றிய கேள்வியறிவினாலே அறியற்பாலனவனைத்தையும் ஐயந்திரிபற அறிந்துணர்ந்த சான்றோர்; நடுக்கு இன்றி நிலைஇயர் என்பது அல்லதை - கேடின்றி எஞ்ஞான்றும் புகழுருவத்தே நிலைத்திடுக! என்று உவந்து வாழ்த்துவதல்லது; ஒடுக்கம் கூறார் - அவைதாம் இயற்கை நியதியுட்பட்டு மறைந்தொழிந்தவிடத்தும் அதனைப் பொருளாகக் கருதிக் கூறுவாரல்லர்; எற்றாலெனின; உயர்ந்தோர் உண்மையின்-அவ்விடங்களிலே தோன்றிய சான்றோர் தம் பூதவுடம்பு மறைந்த வழியும் புகழுடம்பிலே எஞ்ஞான்றும் இவ்வுலகிலே நிலைத்திருத்தலாலே; என்க.

(விளக்கம்) அவ்வுயர்ந்தோர் புகழோடு அவ்விடங்களின் புகழுமொன்றி ஓங்கிப் பரந்தொழுகலான் அவை ஒடுங்கியவிடத்தும் அவையிற்றின் ஒடுக்கத்தைப் பொருளாகக் கருதிக் கூறுவதிலர். அவற்றை வாழ்த்துவதே செய்வர் என்றவாறு. இங்ஙனம் கூறியதன் குறிப்பு அடிகளார் இந்நூல் செய்கின்ற காலத்தே புகார் நகரம் கடல் கொள்ளப்பட்டு மறைந்தொழிந்தமையால் அந்நிகழ்ச்சியை அடிகளார் வெளிப்படையானோதாமல் குறிப்பாக உணர்த்துவதாம் என்க. இக் குறிப்பின்றேல் புகார் நகரத்தின் சிறப்பறிவுறுத்த வந்த அடிகளார் நடுக்கின்றி நிலைஇயர் என்பதல்லதை ஒடுக்கங் கூறார் என்பது வெற்றெனத் தொடுத்தலும் மிகைபடக் கூறலுமே யாகும் என்க. வரலாற்றறிவின்கண் கருத்தில்லாத பழைய வுரையாசிரியர் இருவரும் ஈண்டு அடிகளார் ஒடுக்கம் கூறார் என வேண்டாகூறி வேண்டியது முடித்துள்ள அருமையை உணராது போயினர் இக்காலத்துரை செய்தோரும் கண்மூடி வழக்கமாக அப்பழைய வுரையாசிரியர் கூறியதே கூறியொழிந்தனர்.

இனி, தம் வாழ்நாளிலேயே கடல் கோட்பட்ட புகார் நகரம் உயர்ந்தோரை உலகிற்கு வழங்கிய வள்ளன்மைக்கு உவமையாகவே பொதியிலையும் இமயத்தையும் அதனோடு ஒருசேர எடுத்தோதினர்.

இனி, இதனால் உலகின்கண் மூதூர்கள் பல இருப்பினும் உயர்ந்தோரைத் தோற்றுவித்திலவாயின் அவை இருந்தும் இல்லாதவைகளே. மற்றுக் கடல்கோள் முதலியவற்றால் ஒடுங்கியவிடத்தும் சான்றோரை ஈன்ற திருவுடையூர்கள் என்றும் ஒடுங்காமல் நடுக்கின்றி நின்று நிலவுவனவேயாம் என்பது அடிகளார் கருத்தென்பதுணரப்படும். இக் கருத்துடனே,

மாய்ந்தவர் மாய்ந்தவ ரல்லர்கள் மாயா
தேந்திய கைகொ டிரந்தவ ரெந்தாய்
வீய்ந்தவ ரென்பவர் வீய்ந்தவ ரேனும்
ஈய்ந்த வரல்ல(து) இருந்தவர் யாரே? (பால-வேள்விப்-30)

எனவரும் கம்பநாடர் செய்யுள் நினைந்தின்புறற் பாலதாம்.

இனி, அடிகளார் காலத்திலேயே புகார் நகரங் கடல் வயிறு புக்கது என்னும் இவ்வரலாற்றுண்மையைத் தண்டமிழாசான் சாத்தனார் ஓதிய மணிமேகலையின்கண்; (25: 175:)

மடவர னல்லாய் நின்றன் மாநகர்
கடல்வயிறு புக்கது காரணங் கேளாய்

என்பது முதலிய பலசான்றுகளானும் உணர்க. மணிமேகலையிற் கிடைக்குஞ் சான்றுகள் இந்நூற்கு அகச்சான்றுகள் என்பது மிகையன்று. மேலும் உரைபெறு கட்டுரைக்கண் கண்ணகியார்க்குப் புகாரின்கண் பத்தினிக் கோட்டம் சமைக்கப்பட்டதெனக் கூறாமைக்கும் காரணம் அந்நகர் கடல் வயிறு புக்கமையே என்றுணர்க.

இனி, பொதுவறு சிறப்பு என்பது இஃதென்றுணர்த்துவார் அதனையே பதியெழுவறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறுசிறப்பென அடை புணர்த்து விளக்கினர். நடுக்கின்றிநிலையிய என்பதும் பாடம். அல்லதை, ஐகாரம், அசை. நிலைஇயர் - வியங்கோள்; வாழ்த்துப் பொருளின்கண் வந்தது. கேள்வியினால் முழுதுணர்ந்தோர் என்க.

உயர்ந்தோர் பொதியிலுக்கு அகத்தியனையும், இமயத்திற்கு இருடிகளையும், புகாருக்கு மன்னர்களையும் கற்புடையமகளிரையும் கொள்க. அடியார்க்கு நல்லார், இமயத்திற்கு, இறைவனைக் கொள்வர். இவ்வாறுரை கூறாக்கால் அடிகளார் கூற்று அவர் காலத்தே பொய்யாயொழிதலு முணர்க.

கண்ணகி மாண்பு

20-24 : அதனால்...........அகவையாள்

(இதன்பொருள்) அதனால் - அக்காரணத்தினாலே, நாக நீள் நகரொடும் நாகநாடு அதனொடும் போக-பவணர் வாழ்கின்ற நெடிய நகரத்தினோடும் வானவர் வாழ்கின்ற வானநாட்டினோடும் நம்மனோர் காட்சிக்குப் புலனாகாமல் கேள்விக்கு மட்டும் புலப்படுகின்றதொரு நகரமாய்ப் போகாநிற்ப; நீள் புகழ் என்னும் புகார்நகர் அது தன்னில் - காலந்தோறும் நீளுகின்ற புகழான் மட்டும் என்றென்றும் நடுக்கின்றி நிலைபெறுகின்ற புகார் நகரம் என்னும் அந்த மாநகரத்தின்கண் அக்காலத்தே வாழ்ந்திருந்த உயர்ந்தோருள் வைத்து; மாகவான் நிகர்வண் கை மாநாய்கன் குலக்கொம்பர் - வானத்து நின்று மழை பொழிந்து உலகோம்புகின்ற முகிலையே ஒத்த வண்மையுடைய கையையுடைய மாநாய்கன் என்னும் பெருங்குடி வாணிகன் மடமகளாய் அவன் குலமாகிய தருவீன்ற கொழுந்துபோல்வாளும், ஈகை வான் கொடி அன்னாள் - பொற் கொடிபோல்வாளும் ஆகிய நங்கை; ஈர்ஆறு ஆண்டு அகவையாள்-பன்னீராட்டையுட்பட்ட பருவத்தை யுடையளா யிருந்தனள் என்க.

(விளக்கம்) அதனால் என்றது தன்கட்டோன்றிய உயர்ந்தோர் உண்மையால் என்றவாறு. உயர்ந்தோர் உண்மையால் எஞ்ஞான்றும் புகழால் மன்னும் புகார் நகரது தன்னில் என இயையும்.

இனி அஃது அத்தன்மையதாகலான் போகமும் புகழும் நிலைபேறுடைய என்றவாறு என்னும் அடியார்க்குநல்லார் உரை, போகத்திற்குப் புகார் நிலைபேறுடைத்தாதல் காரணம் என்றல் பொருந்தாமையின் போலியாதலறிக. புகாரின் நிலைபேறுடைமை புகழுக்குக் காரணம் என்பதும் காரணகாரிய முறைமையிற் பிறழ்ந்தவுரையாம் என்க. என்னை? புகழே நிலைபேறுடைமைக்குக் காரணம் ஆதலே நேரிதாகலின் என்க.

கடற் கோட்பட்டமையால் புகார் நாகர் நகரோடும் நாக நாட்டோடும் ஒருதன்மையுடையதாய்ப் போக இப்பொழுது புகழான் மட்டும் மன்னுகின்ற (புகார் என்னும்) அந்த நகரிலே கடற்கோளின் முன்னர் வாழ்ந்திருந்த மாநாய்கன் என்பவனுடைய மகள் ஒருத்தி இருந்தனள், அவள் ஈராறாண்டகவையுடையள் ஆயிருந்தனள் என அடிகளார் காப்பியத்தலைவியை முதற்கண் நம்மனோர்க்கு அறிவிக்கின்றனர் என்றுணர்க.

நாகர் நகரோடு நாக நாடதனோடும் ஒருதன்மையதாய்ப் போக என்றது இவ்வுலகத்திற் காணப்படாமல் அவ்விரண்டு நகரங்களையும் போன்று இலக்கியங்களிலே மட்டும் இருக்கின்றதாகிவிட என்றவாறு.

முன்னர் உயர்ந்தோருண்மைக்குப் பொதியிலையும் இமயத்தையும் உவமை கூறினர் என்றும் ஈண்டுக் கடல் கொள்ளப்பட்ட பின்னர் இலக்கியத்தில் மட்டும் காணப்படுதற்கு நாகர் நகரையும் நாக நாட்டையும் உவமையாக எடுத்தோதினர் என்றுமுணர்க.

இனி, அடியார்க்கு நல்லார், போகம் நீள்புகழ் எனக் கண்ணழித்து இவற்றை எதிர்நிரனிறை எனக் கூறினர். ஆயின் போகம் பவணர்க்குப் பொருந்துமாயினும் சுவர்க்கத்திற்குப் புகழுண்டென்றல் வம்பே, என்னை? புகழ்தானும் ஈகைமேற்றாக அது, அறஞ்செய் மாக்கள் புறங்காத்தோம்புநர், நற்றவஞ் செய்வோர், பற்றற முயல்வோர் யாவரும் இல்லாத் தேவர் நாட்டிற்கு உண்டென்பதும் அதுதானும் புகார் நகரத்திற்குப் புகழ்பற்றி உவமையாம் என்பதும் சிறிதும் பெருந்தா வென்றொழிக.

அந்நகரம் இப்பொழுதின்மையான் புகார் நகரம் என்னும் அந்த நகரத்தில் என்பார் புகார் நகரது தன்னில் என்றார். எனவே, அந்நகரம் கடல் வயிறு புகுதற்கு முன்னர் அந்நகரத்தில் மாநாய்கன் என்றொரு பெருங்குடி வாணிகன் இருந்தான். அவனுக்கு மகள் ஒருத்தி இருந்தனள், அவள் பன்னீராண்டகவையினள் ஆயினள் என்றாருமாயிற்று. அவளே இக்காப்பியத் தலைவியாதலின் அவளை மகளாகப் பெறுதற்குரிய அவள் தந்தையின் தகுதிதோன்ற அவனை மாகவான் நிகர்வண்கையன் என்றார்; அவன்றானும் அரசனாற்சிறப்புப் பெயர் பெற்ற பெருந்தகை என்பார் அவனது இயற்பெயர் கூறாது மாநாய்கன் என்னும் சிறப்புப் பெயரால் கூறினர். என்னை? கருங்கடற் பிறப்பினல்லால் வலம்புரி காணுங்காலைப் பெருங்குளத்து என்றுந்தோன்றா எனவும், அட்டு நீர் அருவிக் குன்றக் தல்லது வைரந்தோன்றா எனவும், குட்ட நீர்க்குளத்தினல்லாற் குப்பைமேற் குவளை பூவா எனவும் வருகின்ற திருத்தக்கதேவர் திருமொழியும் காண்க.

குலக்கொம்பர் என்புழி. கொம்பர் ஆகுபெயர். கொழுந்து என்றவாறு. இனி அவளது இயற்கை எழில்தோன்ற ஈகைவான் கொடியன்னாள் என்றார். ஈகை பொன் பொன்னிறமான பூங்கொடிபோல் வாள் என்க. இனி வானவல்லி எனினுமாம். இது கற்பகத்தருவின் மேலன்றிப் பிறதருவிற் படராதென்ப. எனவே அவளது கற்புப் பண்பிற்கு இது குறிப்புவமையாகும் என்க.

ஈராறாண்டகவையாள் என்றது மணப்பருவமெய்தினள் என்றவாறு.

25-29 : அவளுந்தான்.............மன்னோ

(இதன்பொருள்) அவள்தான் - அந்நங்கைதான்; மாதரார் - அந் நகரத்தே வாழுகின்ற உயர்குலத்து மகளிர்கள், இவள் (வடிவு) போதில் ஆர் திருவினாள் புகழுடை வடிவு என்றும்-இவளுடைய அழகு செந்தாமரை மலரின்கண் எழுந்தருளியிருக்கின்ற திருமகளுடைய புகழுடைய அழகையே ஒக்கும் என்றும்; இவள் திறம்-இவளுடைய கற்புடைமை, தீது இலா வடமீனின் திறம் என்றும்- குற்றமில்லாத அருந்ததியின் கற்பையே ஒக்கும் என்றும்; தொழுது ஏத்த-தன்னைத் தொழுது பாராட்டா நிற்ப; வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் - விளங்கிய தனது பெருங்குணங்களோடு அந்நகரத்தே வாழும் ஒருவன்பால் காதலுடையவளாகவுமிருந்தனள்; மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ - அவள் கண்ணகி என்று பெயர் கூறப்படுபவள் என்க.

(விளக்கம்) இனி, இங்ஙனமன்றி அடியார்க்கு நல்லார் திருமகளுடைய வடிவு இவள் வடிவை யொக்கு மென்றும் அருந்ததியுடைய கற்பு இவள் கற்பை ஒக்கும் என்றும் மாதரார் தொழுதேத்த என்று உரை வகுப்பர். அவ்வாறு கூறினும் அமையும். என்னை? பொருளே உவமஞ் செயதனர் மொழியினும் மருளறு சிறப்பின் அஃதுவமமாகும் என்பது விதி யாகலின் (தொல்-உவம 6) என்க. விதியேயாயினும் அங்ஙனம் கூறுவதனாற் பயன் யாதொன்றுமில்லை ஆகலின் அடிகளார் கருத்து யாம் கூறியதே என்றுணர்க.

அவளும் தான் என்புழி உம்மை இசைநிறை. போது-செந்தாமரை மலர். வடமொழியாளராற் கூறப்படும் பத்தினிமகளிருள் வைத்து அருந்ததி மட்டுமே தீதிலாப் பத்தினி ஆதலால் கண்ணகிக்கு அவள் உவமையாதற்குக் காரணம் கூறுவார் தீதிலா வடமீனின் திறம் என்றார். எஞ்சிய சீதை பாஞ்சாலி முதலிய பத்தினிகள் இழுக்குடையராதல் அவரவர் வரலாற்றான் அறிக.

இனி அக்கண்ணகி தானும் தன்னெஞ்சத்தே ஒருவனைக் காதலித்திருந்தனள் என்பது போதரப் பெருங்குணத்துக் காதலாள் என்றார். இவ்வாற்றான் கண்ணகியும் கோவலனும் முற்படத் தம்முள் ஒருவரையொருவர் காதலித்திருந்தனர் என்பது அடிகளார் இப்பாட்டிடை வைத்த குறிப்புப் பொருள். உள்ளப் புணர்ச்சியளவிலேயே அவர் காதலிருந்த தென்பது தோன்றப் பெருங்குணத்துக் காதலாள் என்றார். இனி அவளால் காதலிக்கப் பட்டான் இயல்பு மேலே கூறுகின்றார். இங்ஙனம் கொள்ளாக்கால் கண்ணகி கோவலன் மணம் ஒருவரை யொருவர் காதலியாமல் தாய் தந்தையராற் கூட்டுவிக்கப்பட்ட போலி மணமாய் முடிதலறிக. அடிகளார் முன்னர்ப் புகார் நகரின் ஒடுக்கத்தைக் கூறாமல் பிறி தொன்று கூறுவார் போன்று கூறியாங்கே ஈண்டும் கண்ணகியின் காதலையும் பிறிதொன்று கூறுவார் போன்று கூறியிருத்தல் வியந்து பாராட்டற்குரியதாம். இவ்வாறு யாம் பொருள் காணா தொழியின் ஒடுக்கம் கூறார் என்று பண்டு கூறியதும் ஈண்டுக் காதலாள் என்றோதியதும் சொற்றிறந்தேறாது வாய் தந்தன கூறியவாறாம் என்றறிக. மன், ஓ. அசைச் சொற்கள்.

கோவலன்

30-34: ஆங்கு ............அகவையான்

(இதன்பொருள்) ஆங்கு-அப்புகார் நகரின் கண்; பெருநிலம் முழுது ஆளும் பெருமகன் தலைவைத்த ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான் - நெடிய நிலவுலகத்தை முழுவதும் தனது ஒரு குடை நிழலின்கண் வைத்துத் தனியே அருளாட்சி செய்கின்ற மன்னன் குடியை முதற் குடியாக வைத்து நிரலாக எண்ணுதலையுடைய ஒப்பற்ற குடிகளுள் வைத்து மிக்குயர்ந்த செல்வத்தையுடைய குடியின்கண் தோன்றிய வாணிகன் ஒருவன் உளன்; வருநிதி பிறர்க்கார்த்தும் மாசாத்துவான் என்பான்-தனக்குள வொழுக்கினின்று செய்யும் அறுவகைத் தொழிலினாலே தனக்கு ஊதியமாக வருகின்ற பொருள்களை அப்பொருளில்லாத வறியோர்க்கு வழங்கி உண்பிக்கும் அவன் மாசாத்துவான் என்று பெயர் கூறப்படுவான்; இரு நிதிக்கிழவன்-மேலும் இரு நிதிக் கிழவன் என்னும் சிறப்புப் பெயருமுடையான்; மகன் ஈர் எட்டு ஆண்டு அகவையான்-அவ்வாணிகனுக்கு மகன் ஒருவன் உளனாயினன் அவன் அப்பொழுது பதினாறாட்டை யுட்பட்ட பருவத்தை யுடையவனாயிருந்தனன்; என்க.

(விளக்கம்) பெருநிலம் என்றது சோழநாட்டை ஆளும் பெருமகன் என்றதனால் அரசன் என்பது பெற்றாம். குடியென நோக்குவார்க்கு அரசன் குடியும் ஒரு குடியே ஆகலான் ஆளும் பெருமகன்றலை வைத்த ஒரு தனிக் குடிகள் என்றார். ஒருதனிக் குடிகள் என்றது மிகவும் உயர்ந்த குடிகள் என்றவாறு. குடிகளோடு என்புழி மூன்றனுருபு ஏழாவதன்கண் மயங்கிற்று. இன்னுருபு என்பர் அடியார்க்கு நல்லார்.

வருநிதி என்றது அறத்தாற்றினின்று தன் குலத்திற்குரிய தொழில் செய்து அதற்கு ஊதியமாக வருகின்ற பொருள் என்றவாறு. முன்னர்ச் செல்வத்தான் என்றமையின் அஃதில்லாத வறியோரைப் பிறர் என்றார். ஆர்த்துதல் - ஊட்டுதல். அங்ஙனம் பிறரையூட்டுதலையே குறிக்கோளாகக் கொண்டவன் என்பது தோன்ற வருநிதி பிறர்க்கு வழங்கும் என்னாது ஆர்த்தும் என்று ஓதினார். எனவே, இவன் தன்குலத்தொழிலின்கண் வாகை சூடியவன் என்றாராயிற்று. என்னை?

உழுதுபயன் கொண் டொலிநிரை ஓம்பிப்
பழுதிலாப் பண்டம் பகர்ந்து - முழுதுணர
ஓதி அழல்வழிப்பட் டோம்பாத ஈகையான்
ஆதி வணிகர்க் கரசு (புறப்-மாலை-264)

என்பது வாணிகவாகையின் வரலாறாகலின் என்க.

மாசாத்துவான் : இயற்பெயர் இருநீதிக்கிழவன் : சிறப்புப் பெயர்.

35-39 : அவனுந்தான்...........என்பான் மன்னோ

(இதன்பொருள்) அவனுந்தான்-அம்மாசாத்துவான் மகன்றானும்; மண்தேய்த்த புகழினான் - தன் வள்ளன்மையாலே இந்நிலவுலகம் இடம் சிறிதென்னும்படி பரவிய பெரிய புகழை யுடையவனும்; பண் தேய்த்த மொழியினார்-பண்ணினது இனிமை சிறிதென்னும்படி பேரின்பம் பயக்கும் மொழியினையுடைய; மதிமுக மடவார் - நிறைவெண்டிங்கள் போன்ற அழகிய முகத்தையுடைய பொதுமகளிர் தன்னைக் கண்டுழி; காதலால் - தன்பாலெழுந்த காதல் காரணமாக; கண்டு ஏத்தும் செவ்வேள் என்று கொண்டு - இவன் நம்மனோர் கண்களாலே கண்டு வணங்குதற்பொருட்டு இவ்வாறுருவம் கொண்டு நம்மெதிரே வந்த சிவந்த திருமேனியையுடைய முருகனே என்று நெஞ்சத்திலே கொண்டு; ஆயத்து-தமது தோழியர் குழுவினிடத்தே; பாராட்டி -தனது அழகினைப் பலபடியாகப் புனைந்து; இசை போக்கி-இசை யெழீஇ; ஏத்தும் கிழமையான் - தொழற்குரிய பேரழகுடையவன்; கோவலன் என்பான் மன்னோ - கோவலன் என்று பெயர் கூறப்படுபவன் என்க.

(விளக்கம்) மண்-நிலவுலகம்; அவன் புகழ் இந்நிலவுலகின்கண் அடங்காமையின் மண்ணைத் தேய்த்தபுகழ் என்றார். புகழ் ஈகையால் வருபுகழ், அவன் அன்னாதலைப் பின்னர்க் காட்டுதும். கொடுத்தான் எனப்படும் சொல்(புகழ் அடுக்கிய மூன்றுலகும் கேட்குமே என்றார் பிறரும். மடவார் ஈண்டுப் பரத்தை மகளிர், என்னை? குலமகளிர்க்கும் பிறன் ஒருவனைப் பாராட்டுதல் ஒவ்வாமையின் என்க.

மதிமுக மடவார்.....காதலாற் கொண்டேத்தும் கிழமை கோவலனுக்கு அடிப்பட்டமைந்து கிடந்தமையை இதனால் அடிகளார் குறிப்பாக ஓதினர் என்றுணர்க. இதற்கு மாறாகக் கண்ணகியின்பால் வடமீனின் திறம் (கற்பு) அடிப்பட்டுக் கிடந்தமை முன்னர் ஓதினவையும் உணர்க.

கோவலன் புகழ் பெரிதாயினும் அவனது கண்ணோட்டமில்லாத பரத்தமை யொழுக்கமாகிய பழி தேய்த்தொழித்தமை குறிப்பாகப் புலப்படுமாறு தேய்த்தபுகழ் என்று சொற்றிறம் தேர்ந்து அடை புணர்த்தார். அதுதானும் தேய்க்கப்பட்ட புகழ் என்றும் பிறிதொரு பொருளும் தோற்றுவித்தலறிக. செவ்வேள் - முருகக் கடவுள்; கண்டேத்தும் செவ்வேள்; இல்பொருளுவமை. இசை போக்கி - இசை யெழீஇப் பாடி, இசைபோக்கி என்றது புகழைக்கெடுத்து எனவும் ஒரு பொருள் தோன்ற நிற்றலுணர்க. மன், ஓ : அசைகள்.

அடியார்க்குநல்லார்-இனி மடவார் என்பதற்குப் பூமாதும் கலைமாதும் புவிமாது மென்று கூறி இவர் அழகிற்கும் அறிவிற்கும் ஆண்மைக்கும் இவனென்று உட்கொண்டு ஏத்தும் கிழமையான் எனினும் அமையும் என்பர். இவ்வுரை அமையுமாயிற் கொள்க. மொழியினால். என்பதும் பாடம்.

கண்ணகியை முற்கூறினார் பத்தினியை ஏத்துதல் உட்கோளாகலின் என்பர் அடியார்க்குநல்லார். அவளே காப்பியத் தலைவியாதலின் முற்கூறினார் எனினுமாம்.

40-44 : அவரை................மணம்

(இதன்பொருள்) அவரை-அந்தக் காதலரிருவரையும்; இரு பெருங் குரவரும் - அவர்தம் காதற் கேண்மையைக் குறிப்பாலுணர்ந்த அவர்தம் தாயரும் தந்தைமாரும்; ஒருபெரு நாளால் மண அணிகாண மகிழ்ந்தனர்-ஒரு நல்ல நாளிலே திருமணக் கோலம் செய்வித்துப் பலருமறிய வதுவைச் சடங்காற்றிக் கண்ணாற் காணவேண்டும் என்று தம் மூட்குழீஇ உறுதி செய்து மகிழ்வாராயினர்; மகிழ்ந்துழி-அவ்வாறு மகிழ்ந்த அப்பொழுதே; அணி இழையார் யானை எருத்தத்துமேல் இரீஇ மணம் மாநகர்க்கு ஈந்தார்-அழகிய அணிகலன அணிந்த மகளிர்சிலரை யானையின் பிடரிலேற்றுவித்துத் தாம் உறுதி செய்த அத்திருமண நாளைப் பெரிய அந்நகரத்தில் வாழ்வோர்க்கெல்லாம் அவர் வாயிலாய் அறிவித்தனர் என்க.

(விளக்கம்) அவரை யென்றது தம்முட் காதல்கொண்டிருந்த அக் கண்ணகியையும் கோவலனையும் என்பதுபட நின்றது. இருபெருங்குரவர் என்றது கண்ணகியின் தாய்தந்தையரையும் கோவலன் தாய் தந்தையரையும் குறித்தவாறாம். இனி, அவ்விருவருடைய தந்தையர் எனக் கோடலுமாம். பெருநாள்-நல்லநாள். மண அணி-மணக்கோலம். மக்கள் மணக்கோலங் காணவேண்டும் என அவாவுதல் முதுகுரவர்க்கியல்பு. காணவேண்டும் எனத் தம்முட்குழீஇ உறுதிசெய்து மகிழ்ந்தனர் என்பது கருத்து. யானை யெருத்தத்து அணியிழையாரை இருத்தி அவர் வாயிலாய்த் திருமணச் செய்தியை அறிவித்தல் அக்காலத்துப் பெருநிதிக்கிழவர் வழக்கம் என்பது இதனாலறியப்படும். மணம்-மணச்செய்தி. ஈதல் - ஈண்டு அறிவித்தல்.

45-47 : அவ்வழி..........எழுந்தது

(இதன்பொருள்) அவ்வழி - அவ்வாறு திருமணச் செய்தி யறிவித்தபின்; முரசு இயம்பின - குறித்த நாளிலே முரசு முதலியன முழங்கின; முருடு அதிர்ந்தன-முழவு முதலிய இன்னிசைக் கருவிகள் முழங்கின; பணிலம் முறை யெழுந்தன - சங்குகளின் ஒலி முறைப்படி எழலாயின; வெள்குடை அரசு எழுந்தது ஓர்படி என - மங்கலமரபினவாகிய வெண்குடை முதலியன அரசன் திருவுலாப் போதரும்பொழுது எழுமாறுபோல; எழுந்தன-மிகுதியாக எழலாயின; அகலுள் மங்கல அணி எழுந்தது - இவ்வாற்றால் அப்புகாரினது அக நகரெங்கணும் திருமண விழாவினது அழகு தோன்றலாயிற்று என்க.

(விளக்கம்) இஃது இசைப்பாடலாதலால் (1) திங்களைப்போற்றுதும் என்பது தொடங்கி, (12) ஓங்கிப் பரந்தொழுகலான் என்னும் துணையும், வாரநடையாகவும் (13) ஆங்கு என்பது தொடங்கி (38) ஈந்தார் மணம் என்னுந் துணையும் கூடை நடையாகவும் (39) அவ்வழி முரசியம்பின என்பது தொடங்கித் திரணடையாகவும் படிப்படியாக வுயர்ந்து ஆரோசையாக நடத்தலறிக.

இனி, (41) நீலவிதானத்து என்பது தொடங்கி அமரோசையாய்ப் படிப்படியாக இறங்கி மீண்டும் வாரநடையாகச் செல்லுதலை அவ்வாறு பாடியுணர்க.

முரசு வல்லோசைத் தோற்கருவியாதலின் அவ்வினத்துக் கருவிகளையும், முருடு இன்னிசைக் கருவியாதலின் அவ்வினத்துக் கருவிகளையும் இனம் செப்புமாற்றாற் குறித்து நின்றன. இனி, பணிலம் வதுவைச் சடங்குகளின்கண் காப்பணிதல் முதலிய சடங்குதோறும் அவ்வச் சடங்கின் தொடக்கத்தேயும் இறுதியிலேயும் ஒலிக்கப்படுமாகலின் பணிலம் முறை எழுந்தன என்றார். இதனை,

பருத்தமணி முத்தமணல் பாய்சதுர மாகத்
திருத்தியொரு வால்வனை பயின்று திடர்சூழத்
தருப்பையினு னித்தலை வடக்கொடு கிழக்காய்ப்
பரப்பின னதற்குமொரு வால்வளை பயின்றான்

எனவருஞ் சூளாமணியானும் (1069) உணர்க.

இனி, குடை, சிறப்புப்பற்றி மங்கலப் பொருள்களைக் குறித்து நின்றது, அவையிற்றை,

அயின்முனை வாளும் வயிரத் தோட்டியும்
கொற்றக் குடையும் பொற்பூங் குடமும்
வலம்புரி வட்டமும் இலங்கொளிச் சங்கும்
வெண்கண் ணாடியும் செஞ்சுடர் விளக்கும்
கவரியுங் கயலும் தவிசுந் திருவும்
முரசும் படாகையு மரசிய லாழியும்
ஓண்வினைப் பொலிந்த வோமா லிகையுமென்
றெண்ணிரண் டாகிய பண்ணமை வனப்பின்
கடிமாண் மங்கலம் கதிர்வளை மகளிர்
முடிமிசை யேந்தினர் முன்னர் நடப்ப

எனவரும் பெருங்கதையால் (2:5:24-35) உணர்க.

அகலுள் - அகன்ற உள்ளிடம்; அஃதாவது அகநகர். மணமகள் இல்லத்திருந்து முரச முதலியன முழங்க இம்மங்கலப் பொருள் சுமந்து கதிர்வளை மகளிர் மணமகளில்லத்திற்குச் செல்லுதலையே அடிகளார் அகலுள் மங்கல அணி எழுந்தது என்றார் எனக் கோடலுமாம். இனி அரும்பதவுரையாசிரியர், மங்கல அணியெழுந்தது என்பதற்கு, மாங்கலிய சூத்திரம் (நகரை) வலஞ்செய்த தென்பர். அங்ஙனம் வலஞ்செய்தல் மரபாயின் ஆராய்ந்து கொள்க.

அவ்வழி முரசியம்பின........அணியெழுந்தது என்னும் இவ்வடிகள் தம்மோசையாலேயே திருமணவாரவாரத்தைத் தோற்றுவித்து விடுதலும் உணர்க.

48-53 : மாலை...........நோன்பென்னை

(இதன்பொருள்) மாலை தாழ் சென்னி வயிரமணித் தூணகத்து-மலர்மாலைகள் தூங்கவிடப்பட்ட உச்சியினை யுடையவாய் வயிர மணிகள் பதிக்கப்பட்டனவும் ஆகிய தூண்களையுடையதொரு அழகிய மண்டபத்தின்கண்; நீல விதானத்து நிததிலப் பூம் பந்தர்க்கீழ் - நீலப்பட்டினாலியன்ற மேற்கட்டியின் கீழே முத்து மாலைகளாலே அமைக்கப்பட்ட அழகிய திருமணப்பந்தரின் கீழே; வான் ஊர் மதியம் சகடு அணைய-வானத்திலே இயங்காநின்ற திங்கள் ஆகிய கோளானது உரோகிணி என்னும் விண்மீனைச் சேராநிற்ப அந்த நன்னாளிலே; வானத்துச் சாலி ஒரு மீன் தகையாளை - அவ்வானத்தே தோன்றுகின்ற ஒப்பற்ற புகழையுடைய அருந்ததி என்னும் மீனை ஒத்த கற்பென்னும பெருந்தகைமையுடைய அக்கண்ணகியை; கோவலன்-அம்மாசாத்துவான் என்பான் மகனாகிய கோவலன்; மாமுது பார்ப்பான் - அறனறிந்து மூத்த சிறப்புடைய பார்ப்பனன்; மறை வழிகாட்ட-திருமணத்திற்கு மறைநூலிற் சொன்ன நெறியை முன்னின்று காட்டாநிற்ப; தீவலம் செய்வது - திருமணஞ் செய்துகொண்டு அவ்விருவரும் வேள்வித்தீயை வலஞ்செய்யும் இக்காட்சியை; காண்பார் கண் - அங்கிருந்து காண்கின்றவர் கண்கள்தாம்; நோன்பு என்னை முற்பிறப்பிலே செய்த தவந்தான் என் கொலோ? (என்று அடிகளார் வியந்தார்) என்க.

(விளக்கம்) சகடு - உரோகிணி நாள். திங்கள் உரோகிணியோடு சேர்ந்த நாளைத் தமிழ்மக்கள் திருமணச் சடங்கிற்குச் சிறந்த நாளாகக் கொண்டிருந்தன என்பது இதனானும், அங்க ணிருவிசும்பு விளங்கத் திங்கட் சகட மண்டிய துகடீர் கூட்டத்துக் கடிநகர் புனைந்து கடவுட் பேணிப் படுமண முழவொடு பரூஉப் பண்ணை யிமிழ வதுவை மண்ணிய, எனவரும் அகநானூறு 139 ஆம் செய்யுளானும் உணர்க.

இனி, மாமுதுபார்ப்பான் என்பதற்கு அடியார்க்குநல்லார் பிதாமகன்: (பிரமன்) புரோகிதனுமாம் என்பர் பிதாமகன் என்பது வேண்டா கூறலாம். காண்பார்கள் எனக் கண்ணழித்துக் கோடலுமாம்.

இனி, காண்பார்கண் நோன்பென்னை? என்பது நூலாசிரியர் கூற்றாகக் கோடலே சிறப்பாம். என்னை? இம்மணமகள் போன்று வாழ்க்கைத் துணைவியானவள் தன் கற் பொழுக்கத்தின் மேன்மை காரணமாக வானவர் வந்து எதிர்கொண்டழைப்ப வானவூர்தியிற்றன் கணவனொடு விண்ணகம் புக்க திருமாபத்தினி பிறளொருத்தி உலகிலின்மையால் இவள் கணவனொடு தீவலஞ் செய்யக் கண்டவர் செய்தவம் பெரிதும் உடையராதல் வேண்டும் என அடிகளார் வியந்தவாறாம் என்க.

காண்பார் கண் நோன்பென்னை என்பதற்கு அடியார்க்கு நல்லாரை யுள்ளிட்ட உரையாசிரியர், காண்கின்றவர் கண்கள் முற்பவத்திற் செய்த தவம் யாதுகாணென்பாராயும் என வோதிய வுரைக்குச் செய்யுளிடந்தாராமை யறிக.

(1) திங்களைப் போற்றுதும் என்பது தொடங்கி; (46) காண்பார் காணோன் பெண்னை? என்பதீறாக அடிகளார் தாம் தொடங்கும் இப்பேரிலக்கியத்திற்கு ஆக்கமாகத் திங்கள் முதலியவற்றின் வாயிலாய்த் தமக்குப் புலப்படுகின்ற வழிபடுகடவுளை வாழ்த்தி இதனைத் தோற்றுவாய் செய்தமையால் இத்துணையும் கடவுளை வாழ்த்திய மங்கல வாழ்த்துப் பாடல் என்க. இனி, அடிகளார் தோற்றுவாய் செய்த கண்ணகியையும் கோவலனையும் குலமகளிர் கட்டிலேற்றி அவரை வாழ்த்திய மணமங்கல வாழ்த்தினை ஓதுகின்றார் என்று கொள்க.

54-59 : விரையினர்............முகிழ்த்த முரலர்

(இதன்பொருள்) விளங்கு மேனியர்-கண்ணகியின் கைபற்றிக் கோவலன் வேள்வித்தீயை வலஞ்செய்து தொழுத பின்னர் ஆங்குத் தளிரெனத் திகழும் மேனியையுடைய மங்கைப்பருவத்து மகளிர்கள்; விரையினர் மலரினர் உரையினர் பாட்டினர்-விரையேந்தினரும் மலரேந்தினரும் புகழெடுத்தோதுவாரும் வாழ்த்துப்பாடல் பாடுவாரும் ஆகவும்; ஒசிந்த நோக்கினர்-ஒதுங்கிப் பார்க்கும் பார்வையினையுடைய மடந்தைப் பருவத்து மகளிர்கள்; சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்-சாந்தேந்தினரும் புகையேந்தினரும் விளங்குகின்ற மலர் மாலை யேந்தினருமாகவும்; ஏந்து இளமுலையினர்-மதலையின்றமையின் தீம்பால் சுரந்து அணந்த இளமுலையினையுடைய அரிவைப் பருவத்து மகளிர்கள்; இடித்த சுண்ணத்தர் விளக்கினர் கலத்தினர்-இடிக்கப்பட்ட சுண்ணமேந்தினரும் விளக்கேந்தினரும் அணிகலன் ஏந்தினரும் ஆகவும்; முகிழ்த்த மூரலர் - தோன்றிய புன்முறுவலையுடைய தெரிவைப் பருவத்து மகளிர்; விரிந்த பாலிகை முளைக் குடம் - விரிந்த முளைகளையுடைய பாலிகை ஏந்தினரும் நிறைகுடம் ஏந்தினரும் ஆகவும்; நிரையினர் - அத் திருமண மக்களை வலம்வந்து குழீ இயினர் என்க.

(விளக்கம்) விளங்கு மேனியர், விரையினராகவும் மலரினர் ஆகவும் உரையினரும் பாட்டினரும் ஆகவும், ஒசிந்த நோக்கினர் சாந்தினர் முதலியோரும் ஆகவும், ஏந்தின முலையினர் சுண்ணத்தர் முதலியோராகவும், மூரலர் பாலிகை ஏந்தினர் முதலியோராகவும் வந்து நிரையினர் என்க. நிரையினர் நிரம்பினர். இவருள் விளங்குமேனியர் என்றது மங்கைப் பருவத்து மகளிரை; ஒசிந்த நோக்கினர் என்றது மடந்தைப்பருவத்து மகளிரை; ஏந்திள முலையினர் என்றது தாய்மை எய்திய அரிவைப்பருவத்து மகளிரை; முகிழ்த்த மூரலர் என்றது தெரிவைப்பருவத்து மகளிரை. இவ்வாறு வேறுபாடு கண்டு கொள்க.

விரை முதலியன மங்கலப் பொருள்கள். மேலே போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார் என்றது பேரிளம் பெண்டிரை. இவரைச் செம்முத பெண்டிர் என்றும் கூறுப. இச்செம்முது பெண்டிரே மணமக்களை மங்கல நல்லமளியேற்றி வாழ்த்துவோர் என்பதுமறிக. இவ்வாற்றால் அடிகளார் எழுவகைப் பருவத்துமகளிருள் வைத்துப் பேதைப் பருவத்து மகளிரையும் பெதும்பைப் பருவத்து மகளிரையும் விடுத்து, ஏனைய ஐவகைப் பருவத்து மகளிரையும் கூறி அவ்வப் பருவத்துக் கேற்ற செய்கையையும் அழகாகக் கூறியுள்ளமை ஆராய்ந்துணர்ந்து கொள்க. பேதைப் பருவத்தினர் தம் பிள்ளைமைத் தன்மையானும் பெதும்பைப் பருவத்தினர் தங் கன்னிமையின் நாணமிகுதியானும் இக்குழுவினுள் கூடவொண்ணாமை யுணர்க.

இனி, விரை முதலியன மங்கலமாக வேந்தி மகளிர் வருதலை,

ஆடி யேந்தினர் கலனேந்தினர்
அவிர்ந்துவிளங்கு மணியிழையினர்
கோடியேந்தினர் பட்டேந்தினர்
கொழுந்திரையலின் செப்பேந்தினர்
வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர்
மான்மதத்தின் சாந்தேந்தினர்
கண்ணியேந்தினர் பிணையலேந்தினர்
கவரியேந்தினர் தூபமேந்தினர்

எனவரும் வழக்குரைகாதையானும் (13-16) உணர்க.

இது திருமணவிழவாகலின் விளக்கும் பாலிகையும் நிறைகுடமும் பிறவும் கூறப்பட்டன. ஏந்தினர் என்னும் சொல் யாண்டும் தந்துரைக்க.

60-64 : போதொடு.........ஏற்றினார் தங்கிய

(இதன்பொருள்) போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடியன்னார்-இங்ஙனம் மங்கலப் பொருளேந்தி வந்த மகளிர் சூழுவொடு வந்த செம்முது பெண்டிராகிய மலரோடு விரிந்த கூந்தலையும் உடைய பொன்னிறமான நறிய வானவல்லியென்னும் பூங்கொடியையே போல்வாராகிய செம்முது பெண்டிர்; அங்கண் உலகில் அருந்ததி அன்னாளை - அழகிய இடங்களையுடைய இந்நிலவுலகத்தே தோன்றிய அருந்ததி போல்வாளாகிய கண்ணகியை நோக்கி; காதலன் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் தீது அறுக என ஏத்தி இந்நங்கை நல்லாள் தன் காதற் கணவனைக் கண்ணினும் நெஞ்சினும் எஞ்ஞான்றும் பிரியாமற் புணர்வோளாகுக என்றும் இவள் காதலன்றானும் இவளை அகத்திட்ட கை நெகிழாமல் எஞ்ஞான்றும் இவள்பாலே உறைவானாக என்றும், இவ்விருவர்பாலும் தீங்குகள் இல்லையாகுக வென்றும்; சில் மலர் தூவி சிலவாகிய மலர்களைத் தூவித் தம் வழிபடு தெய்வத்தை வாழ்த்தி; தங்கிய மங்கல நல்லமளி ஏற்றினார் - முன்னரே கோவலன் ஏறியிருந்த அழகிய திருமணக் கட்டிலின் மேலேற்றியவர் என்க.

(விளக்கம்) செம்முது பெண்டிராகலின் ஏனைய மகளிர் போலத் தம் கூந்தலைக் கை செய்யாமல் வாளா அள்ளிச்செருகி மங்கலத்தின் பொருட்டு மலர்மட்டும் அக்கூந்தலிற் செருகியிருந்தமை தோன்ற போதொடு விரிகூந்தல் பொலனறுங் கொடியன்னார் என்றனர்.

உலகின் அருந்ததி: இல்பொருளுவமை. தங்கிய நல்லமளி என்க. தங்கிய-கோவலன் ஏறியிருந்த என்க. ஏற்றியவர் - பெயர்.

65-68 : இப்பால்.............எனவே

(இதன்பொருள்) இப்பால்-பின்னர்; செருமிகு சினவேல் செம்பியன் - போரின்கண் எஞ்ஞான்றும் மேம்பட்டு விளங்குகின்ற வெகுளியையுடைய வேற்படையை உடைய நம் மன்னனாகிய சோழன், இமயத்து இருத்திய வாள் வேங்கை - தனது வெற்றிக்கறி குறியாக இமய மலையிலே பொறித்து வைத்த வாள் போலும் வரிகளையுடைய புலியிலச்சினையானது; பொற்கேட்டு உப்பாலை உழையதா-எஞ்ஞான்றும் அம்மலையினது அழகிய பொற் கோட்டினது இப்புறத்ததாயே நிலைபெறுவதாக! என்றும்; எப்பாலும் ஒரு தனி ஆழி உருட்டுவோன என - அவன்றான் எஞ்ஞான்றும் இவ்வுலகத்தின் எப்பகுதியிலும் தனது ஒப்பற்ற சிறப்புடைய ஆணைச்சக்கரத்தைச் செலுத்துவோனாகுக என்றும் வாழ்த்தா நின்றனர் என்க.

(விளக்கம்) இப்பால் என்றது ஏற்றிய பின்னர் என்றவாறு. வாள் போலும் வரிகளையுடைய வேங்கை என்க. உப்பாலை என்றது இப்புறத்தில் (தென்பாலில்) என்றவாறு. அவன் வெற்றி இமயங்காறும் நிலை பெறுக என்பது கருத்து உருட்டுவோன் ஆகுக என்று வாழ்த்தினர் எனச் சில சொற்பெய்து முடிக்க.

மடவார் கற்பும் மாதவர் நோன்பும் பிறவுமாகிய அறமெல்லாம் செங்கோன்மையால் நிலை பெறுதலின் அரசனை வாழ்த்திய வாறாம்.

காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்றமையால் உள்ளப் புணர்ச்சி யளவினமைந்த களவு மணமும் இருபெருங் குரவரும் மணவழி காணமகிழ்ந்தனர் என்றமையால் அதன் வழித்தாய கற்புமே ஈண்டுக் கூறப்பட்டன என்க. இதனை, பிரசாபத்தியம் என்பர் அடியார்க்கு நல்லார்.

பா-இது மயங்கிசைக் கொச்சகக்கலிப்பாவி னியன்ற இசைத் தமிழ்ப்பாடல்.

மங்கல வாழ்த்துப் பாடல் முற்றிற்று.

கருத்துகள் இல்லை: