குரு தட்சிணைமஹா பாரதத்தில் தெரியாத செய்தி
துரோணர் ஏகலைவனிடம் கட்டை விரலை வாங்கினார், அவர் ஒரு கொடூரக்காரர், இரக்கமில்லாதவர் என ஏக குற்றசாட்டுகள் வரும்
உண்மையில் நடந்தது என்ன? அந்த துரோணரின் நிலை பரிதாபமானது
ஆம், துரோணர் அந்த அரச குடும்பத்து ஆசிரியர், எல்லா விதத்திலும் அரசனுக்கு கட்டுபட்டவர், அவனை மீறி அவர் ஏதும் செய்துவிட முடியாது.
சுருக்கமாக சொன்னால் அரச குடும்பத்து அடிமைகளில் ஒருவர்
அந்நாளில் ராஜவம்சத்துக்கு மட்டுமே ஷத்ரிய வம்சத்துக்கு மட்டுமே சில பயிற்சிகள் கற்றுகொடுக்கபடும், எல்லோரும் எல்லாம் பயின்றால் அரசுக்கு எதிரான சக்திகள் தலையெடுக்கும் எனும் தந்திரம் அது
அவ்வகையில் பாண்டவரும், கவுரவரும் பயில்கின்றார்கள், தேரோட்டி மகனான கர்ணனும் படிக்கின்றான்
அவர்கள் அரங்கேற்றம் முடிந்தபின்புதான் ஏகலைவன் என்றொருவன் இருப்பதும் அவன் வில்வித்தையில் அர்ஜூனனையும் மிஞ்சி நிற்பதும் அறியபடுகின்றது
அரசவாரிசுகளையும் மீறி ஒரு வேட்டுவன் வித்தையில் மிஞ்சி நிற்பது அரசகுடும்பத்துக்கும் நல்லதல்ல நாட்டுக்கும் நல்லதல்ல, அவன் எதிரிகையில் வீழ்ந்தால் முடிந்தது கதை,
நாட்டு மக்களை சேர்த்து கலகம் செய்தால் இன்னும் மோசம்
அதற்காக வேட்டுவனை அரண்மனைக்கும் அழைக்கமுடியாது சட்டம் இடம் கொடாது
இப்படி ஒரு சிக்கல் இருக்க அவனை சந்திக்க கிளம்புகின்றது மேலிடமும், துரோணரும் அர்ஜூனனும்,
அர்ஜூனனை மீறி ஜொலித்து நிற்கின்றான் ஏகலைவன், அவனை விட்டுவைப்பது நல்லதலல் என மேலிடம் முடிவெடுக்கின்றது
ஏகலைவன் குரு என யார் என கேட்க அவன் துரோணர் சிலையினை காட்டுகின்றான், ஆம் துரோணரை மனதால் வணங்கி வளர்ந்து தானே வித்தை கற்றவன் ஏகலைவன்
எல்லோரும் அதிர்கின்றனர், காரணம் துரோணர் அரசகுடும்பத்துக்கு மட்டுமே ஆசிரியர்..
அப்படியானால் இவனை இவ்வளவு திறமையாக அவர் உருவாக்க காரணம் என்ன எனும் சந்தேக கேள்விகள் எழுகின்றன
துரோணர் அரச குடும்பத்துக்கு எதிராக ஒருவனை ரகசியமாக வளர்ப்பதாக சந்தேகம் அவர்மீதே படர்கின்றது,
அரசகுடும்பத்துடன் உறவாடுவது ராஜநாகத்துடன் உறவாடுவதற்கு சமம்
சிக்கலில் தவிக்கின்றார் துரோணர், ராஜதுரோக குற்றசாட்டு அவர்மேல் சுமத்தபடும் ஆபத்து நெருங்கிற்று, இதன் சூத்திரதாரி கண்ணன்
அவரை காக்கும் ஒரே நம்பிக்கையாக ஏகலைவன் நிற்கின்றான், அவன் நிச்சயம் துரோணரின் பெருமை, துரோணரின் மாபெரும் மகிழ்ச்சியும் சாதனையும் அவன்
ஆனால் விதி?
துரோணருக்கு அவனை விடவும் முடியவில்லை எடுக்கவும் முடியவில்லை, தவிக்கின்றார்.
ஆம் அரச கட்டளை மீறி அவர் என்ன செய்யமுடியும்?
அவனை கொல்லவேண்டிய இடம் அது, ஆம் அரசனின் கோபம் அவனை முதலில் கொல்லும் துரோணரை அடுத்து கொல்லும், ராஜதுரோகம் எனும் குற்றத்துக்கான தண்டனை அது
யோசித்தார் துரோணர், அந்த சீடன் அழிவதில் அவருக்கு விருப்பமில்லை அவனை பலமிழக்க வைத்தால் போதுமென குருதட்சனையாக கட்டைவிரலை கேட்கின்றார்
குரு கேட்டால் தலைகொடுக்கவும் துணியும் ஏகலைவன் கட்டை விரலை மகிழ்வாய் கொடுத்து பலமிழக்கின்றான், இனி அவனால் வில்வித்தை அவ்வளவு துல்லியமாக செய்யமுடியாது
குருவுக்கு சிஷ்யன் கொடுக்கும் காணிக்கை அவரை காக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை , கண்ணீரோடு அவனின் கட்டை விரலை தாயத்தில் வைத்து கழுத்தில் கட்டிகொள்கின்றார் துரோணர்
அந்த காட்சி உருக்கமானது, கண்ணீர் வரவழைக்கும் காட்சி அது. துரோணருக்கு அவனை போல மாணவன் இல்லை, நல்ல ஆசிரியனுக்கு சிறந்த மாணவனை விட பெருமை எது?
ஆனால் விதி?
அப்பக்கம் ஏகலவைனுக்கோ குருநாதருக்காக வித்தையினையே கொடுத்துவிட்ட தியாக மகிழ்ச்சி, தன் கட்டைவிரல் அவர் கழுத்தில் இருப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி
தானே அவரின் மார்பில் சாய்ந்ததாக மகிழ்ந்தான், துரோணர் அரண்மனை திரும்பினார்
ஆம் துரோணர் அவன் உயிரை காத்தார், அவன் துரோணர் உயிரை காத்தான்
காலங்கள் ஓடின பாண்டவருக்கும், கவுரவருக்கும் யுத்தம் நெருங்கிற்று, ஒவ்வொருவரின் பலத்தையும் அளந்த கண்ணன் துரோணர் பக்கமும் வருகின்றான், ஏற்கனவே கட்டை விரல் வாங்க காரணமே அந்த மாயவனே
(ஆம் வித்தை ஒன்றுக்காக கர்ணணையே அரசனாக்கி கைக்குள் வைத்திருக்கும் துரியன் , ஏகலைவன் கிடைத்தால் விடுவானா? கண்ணனின் கவலை அவனுக்கு)
துரோணர் கழுத்தில் இருப்பது உன்னதமான சிஷ்யனின் காணிக்கை, அது துரோரணை சாகவிடாது , அது இருக்கும்வரை துரோணர் வீழமாட்டார்
என்ன செய்யலாம்?
அதே வித்தைதான், ஏழை அந்தணராக மாறிய கண்ணன் யாசகனாய் வந்தான், தன் மகளுக்கு திருமணமென்றும் ஒரு தாலிக்கும் வழியில்லை எனவும் அழுது அந்த தாயத்தையே உற்று பார்த்தான்
குறிப்பறிந்த துரோணர் இதைவிட பெரும் தாலி இல்லை, இது ஆசிமிக்கது என அதை வழங்கினார், துரோணரின் கழுத்தில் இருந்து அந்த பெரும் கவசத்தை அகற்றினான் கண்ணன்
அதன்பின் எல்லாம் முடிந்தது, சாகும் வேளையில் துரோணர் முன் தன் புல்லாங்குழலை காட்டினான் கண்ணன், ஆம் அதில் அந்த விரலை பதித்திருந்தான்
அதை கண்டவுடன் துரோணருக்கு எல்லாம் விளங்கிற்று, மெல்ல பேசினான் கண்ணன் அவன் குரல் அந்த ஞான தத்துவத்தை போதித்தது
"துரோணாச்சாரியே.. சிஷ்யர்களில் எல்லாம் உயர்ந்தவன் ஏகலைவன், ஆசிரியரில் எல்லாம் உயந்தவன் நீ
உங்களுக்குள்ளான உணர்வும் புரிந்துணர்வும் பாசமும் எந்த குருவுக்கும் சீடனுக்கும் அமையாது
அவனை அன்றே நீ கொன்றிருந்தால் நீ பாவிபாயிருப்பாய், விட்டிருந்தால் அவனை நீனே வளர்த்தாய் என பழிசுமந்திருப்பாய் , அவன் பாண்டவர் பக்கம் வந்தாலும் கவுரவர் பக்கம் வந்தாலும் பழி உனக்கே
உன் மாணவர்களின் அர்ஜூனன் பெரும் அடையாளம் ஆனால் நீ நேரடியாக பயிற்றுவித்தாய், ஆனால் உன்னை மனதால் வணங்கி வளர்ந்த ஏகலைவனே அவனை விட உயர்ந்தவன், ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதன் அடையாளம்
அங்கு உன் உயிரை அவன் காத்து மாணவனின் கடமையினை செய்தான், நீ அவன் உயிரை காப்பாற்றி ஆசிரியனுக்குரிய கடமையினை காத்தாய்
நீ கேட்டவுடன் கொடுத்த அந்த விரல் அவனின் தியாகத்துக்கும் குருசிஷ்ய பாவத்துக்கும் என்றும் எடுத்துகாட்டாய் இருக்கும், உன் பெயர் இருக்குமிடமெல்லாம் அவனும் இருப்பான்..."
அந்த புல்லாங்குழலின் இருந்த விரலை நோக்கியபடியே உயிர்நீத்தார் துரோணர்
ஆம் நல்ல மாணவன் ஆசிரியர் அளவு வரலாற்றில் நிலைப்பான் என்பதுதான் ஏகலைவன் வாழ்வின் தத்துவம்.