வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!
இந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது பரமசிவன் கழுத்தில் இருந்தால் கருடனால் நெருங்க முடியுமா! அதுபோல் தான் ஊரில் எத்தனை யானை இருந்தாலும், ஐராவத யானை வெள்ளை நிறம் என்பதால், அதற்கு மிகவும் கர்வம்.அகம்பாவிகளுக்கு என்றாவது ஒருநாள் அடி விழும். அப்படி ஒரு சோதனை ஐராவதம் யானைக்கும் ஏற்பட்டது. இந்திரன் தேவலோகம் வந்ததும், அவனை ஏற்றிக் கொண்டு இந்திரபுரிக்குள் அட்டகாசமாக நுழைந்தது. துர்வாசர் என்ற மகரிஷி இருந்தார். அவருக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம். சிறிது பிசகலாக பேசினாலோ, நடந்தாலோ கூட மூக்கு மேல் கோபம் வந்துவிடும். அப்படிப்பட்ட கோபக்காரரிடம் அந்த யானை மாட்டிக் கொண்டது. அன்று துர்வாசர் சிவபெருமானை மலர் தூவி வணங்கினார். அவரது பக்திக்கு மகிழ்ந்த ஈசன், தன் ஜடையில் இருந்த பொற்றாமரை ஒன்றை கீழே விழும்படி செய்தார். இறைவன் தந்த அந்த பிரசாதத்தை எடுத்து முனிவர் தன் கமண்டலத்தில் வைத்துக் கொண்டார். இந்திரனை தேவர்கள் ஆரவாரமாக அழைத்து வந்து கொண்டிருந்தனர். இவ்வளவு அடிபட்டும் இந்திரனுக்கு அலட்சிய குணம் மட்டும் மாறவில்லை. மேலும் விருத்திராசுரனையே வென்று விட்டோமே என்ற மமதையுடன் வந்தான். எதிரே வந்த துர்வாசர், அவன் நீடுழி வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் கமண்டலத்தில் இருந்த பொற்றாமரையை அவனிடம் கொடுத்தார். பிரசாதம் வாங்கும் போது பணிவு வேண்டும்.
இந்திரன் சற்றும் பணிவின்றி அந்த தாமரையை அலட்சியமாக வாங்கி அதை யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். யானை அதை தும்பிக்கையால் எடுத்து கால்களில் போட்டு மிதித்து விட்டது. துர்வாசர் நெருப்பு பொங்கும் கண்களுடன் இந்திரனையும், யானையையும் பொசுக்கி விடுவது போல பார்த்தார். தேவேந்திரா... என்று அவர் கோபத்தில் எழுப்பிய சப்தம் அந்த பிரதேசத்தையே கிடுகிடுக்கச் செய்தது. விட்டது வினை என்று இங்கு வந்தால் இந்த துர்வாசரிடம் சிக்கிக் கொண்டோமே என்று இந்திரன் நடுங்கினான். அவன் எதிர்பார்த்தபடியே துர்வாசர் சாபமிட்டார். ஏ இந்திரா! கடம்பவன நாதனான எம்பிரானின் பிரசாதத்தையா அலட்சியம் செய்தாய்! அதை மரியாதையுடன் பெற்றிருந்தால், உன் நிலையே வேறு விதமாக இருந்திருக்கும்! ஆனால், கேடு கெட்ட இந்த யானையிடம் கொடுத்தாய். அது காலில் போட்டு மிதித்தது. தேவனாகிய நீ பூலோகத்தில் பாண்டிய மன்னன் ஒருவனிடம் தோற்றுப் போவாய். அவனுடைய சக்கராயுதம் உன் தலையைக் கொய்து விடும், என்றார். தேவேந்திரனும் தேவர்களும் நடுங்கி விட்டனர். யானையில் இருந்து குதித்த இந்திரன், ஐயனே! அறியாமல் செய்த பிழையை மன்னிக்க வேண்டும். ஏற்கனவே பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு பல்லாண்டுகள் பூலோகத்தில் வாடிக்கிடந்த நான் மீண்டும் பூலோகம் செல்வதா? அதிலும், ஒரு மானிடனிடம் தோற்றுப்போவதா? ஐயோ! இதை விட வேறென்ன கொடிய தண்டனையை நான் பெற முடியும்? தவங்களில் சிறந்தவரே! என்னை மன்னியும், என்றான். தேவர்கள் எல்லாருமே கிரீடங்கள் தலையில் பதியும்படி அவர் காலில் விழுந்து கிடந்தனர்.
துர்வாசர் இதுகண்டு மனம் மாறினார். கோபம் உள்ள இடத்தில் தானே குணமும் இருக்கும்! அவர் இந்திரனிடம், இந்திரா! கொடுத்த சாபத்தை திரும்பப் பெற இயலாது. இருப்பினும், பாண்டிய மன்னன் பயன்படுத்தும் சக்ராயுதம் உன் தலையைக் கொய்ய வரும்போது, அது உன் கிரீடத்தை மட்டும் பறித்துச் செல்லும் நிலை வரும். தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும், என்றவர் யானையைப் பார்த்தார். ஏ ஐராவதமே! பெரியவர்களிடம் பணிபுரிபவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கு உன் வாழ்க்கை இந்த உலகத்துக்கு பாடமாக இருக்க வேண்டும். உன் வெள்ளை நிறம் அழிந்து போகும். தேவலோக யானையான நீ, பூலோகம் சென்று காட்டுக்குள் பிற யானைகளுடன் கலந்து, புழுதி படிந்து நூறாண்டு காலம் திரிவாய். பின்னர், இந்திர லோகத்தை அடைவாய், என சாபமிட்டார். வெள்ளை யானை கண்ணீர் வடித்தது. பின்னர் அது பூலோகம் வந்து பல இடங்களிலும் சுற்றித் திரிந்தது. ஒருவழியாக நூறாண்டுகள் கடந்தன. பல வனங்களில் சுற்றிய அந்த யானை, கடம்ப வனத்துக்குள் புகுந்தது. அதுவே இந்திரனால் உருவாக்கப்பட்ட மதுரையம்பதி. அங்கிருந்த சொக்கலிங்கத்துக்கு அது பொற்றாமரைக் குளத்தில் இருந்து தும்பிக்கையில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தது. தங்கத் தாமரைகளைப் பறித்து வந்து தூவி வழிபட்டது. அந்த யானையின் மீது இரக்கம் கொண்ட சொக்கநாதர் அதன் முன் தோன்றினார். ஐராவதமே! நீ செய்த சிவஅபச்சாரம் நீங்கியது. நீ இந்திரலோகம் திரும்பலாம்,என்றார். யானை சிவனிடம், எம்பெருமானே! இந்த வனத்தின் அழகில் நான் மெய்மறந்து விட்டேன். மேலும் தங்களைப் பிரிய எனக்கு மனமில்லை. நான் இந்த வனத்திலேயே இருக்கிறேனே! தங்கள் விமானத்தை (கருவறைக்கு மேலுள்ள கோபுரம் போன்ற அமைப்பு) தாங்கும் யானைகளில் ஒன்றாக என்னையும் கொள்ள வேண்டும், என்றது. சிவபெருமான் அதனிடம், ஐராவதமே! இந்திரன் எனது பக்தன். அவனைச் சுமந்தால் என்னையே சுமப்பது போலாகும். நீ இந்திரலோகத்திற்கே செல், என்றார். மேலும், அதன் சுயவடிவத்தையும் தந்தார்.அந்த யானைக்கோ கடம்பவனத்தை விட்டு செல்ல மனமில்லை. அது கடம்பவனத்தின் ஒரு பகுதிக்குச் சென்று அங்கிருந்த ஒரு லிங்கத்திற்கு பூஜை செய்து அங்கேயே தங்கி விட்டது. வெள்ளை யானை வந்து தங்கிய அந்த இடத்துக்கு அதன் பெயரான ஐராவதநல்லூர் என்று அமைந்தது. பின்னர், இந்திரன் அந்த யானை பற்றி அறிந்து வந்து அதை அழைக்க வந்தான். சிவபெருமானிடம் யானையின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தான் எழுப்பிய விமானம் தன் பெயரால் இந்திர விமானம் என அழைக்கப்பட வேண்டும் என்றும், வெள்ளை யானை தன்னைத் தாங்குவது போல், அந்த விமானத்தையும் ஐராவதமே எட்டு வடிவங்களில் தாங்குவது போன்ற தோற்றம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அதன்படியே, எட்டு வெள்ளை யானைகள் மதுரை சொக்கநாதரின் விமானத்தை தாங்கியுள்ள காட்சியை இப்போதும் காணலாம்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
சனி, 9 நவம்பர், 2024
வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!
வியாழன், 7 நவம்பர், 2024
இராமானுஜர்...
பெரிய தம்பியிடம் நடந்ததை கூறி அவர் மனைவி வருத்தப்பட்டாள். பின் நாம், இங்கிருப்பதை விட ஸ்ரீரங்கத்தில் சென்று இருக்கலாம் என்றாள். அவரும், அதற்கு ஒப்புக் கொண்டு கிளம்பினார்.
இது எதுவும் அறியாத ராமானுஜர் குருவின் க்ருஹம் பூட்டியிருப்பதை பார்த்து, நடந்ததை விசாரித்து அறிந்து கொண்டார். மிகவும் மனம் வருந்தினார். தன் குரு தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் செல்லும் அளவிற்கு அபசாரம் நிகழ்ந்தது என வருத்தப்பட்டார். ஆனால் இதற்கு காரணம் தன் மனைவி எனத் தெரிந்தும் அவர் கோபப்படவில்லை. குரு பத்னியிடம் சண்டை போகலாமா என மனைவியிடம் கேட்கவுமில்லை. தனக்குள்ளே வருத்தப்பட்டார். மனைவியிடம் கோபப்பட வேண்டாம். மனைவி தன் குருநாதரிடம் எப்படி நடக்க வேண்டும் என்பதையாவது சொல்லி திருத்தியிருக்கலாமே... அதுவும் செய்யவில்லை. இராமானுஜர் கோபப்படவுமில்லை, தானாக அறிவுரையும் சொல்லவில்லை... ஏன்? பொதுவாக யாருக்குமே அறிவுரை சொன்னால் பிடிக்காது அறிவுரை சொன்னதற்க்காக நம்மை விட்டு விலகி விடுவார்கள்.
பலவித மக்கள், உலகம் பலவிதம், ஒவ்வொருவருக்கும் ஒரு குணம், எண்ணம் உண்டு. இதனை நாம் சம புத்தியுடன் பார்க்க வேண்டும். இந்த குணம் ஸ்ரீமந் நாராயணனுக்கு உள்ளது. தன்னை பார்க்க வரும் பக்தனை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பார்க்கிறார்.
இவன் நல்லவனா?
ஒழுக்கம் உள்ளவனா?
திட பக்தி செய்கிறானா? என்று எதையும் பார்ப்பதில்லை...
கோவிலுக்குள் வரும் அனைவரையும் ஆசையோடு பார்க்கிறார்.
என்னை கல் என்று பார்க்கிறானே? நான் இவனை மாமிச மலை என்று பார்க்கிறேன் என்று ஒரு போதும் கோபப் படுவதில்லை. தவறு செய்பவர்களை நாம் அறிவுரை மூலமோ, கோபம் கொண்ட திருத்த முயற்சித்தால் பொதுவாக அவர்கள் நம்மை விட்டு விலகுவர். இதனால் நஷ்டம் நமக்கு தான்.
மேலும் அறிவுரை கூறி திருத்த முயற்சிப்பதும் எல்லை. இவன் நம்மிடம் வந்து கொண்டிருப்பதே ஞானத்தை கொடுக்கும் என்று இருக்கிறார். நமக்கு அறிவுரை சொன்னால் கேட்கும் மனநிலை வரும்வரை பொறுமையாக தாயைப் போன்று இருக்கிறார். திட நம்பிக்கையுடன் உண்மையான சரணாகதி செய்யும் வரை நமது அபசாரங்களை பொறுத்துக் கொள்கிறார்.
விநாயக கோரக்கர்...
விநாயக கோரக்கர்...
உத்தரபிரதேசத்தில் கோரக்பூர் என்ற தலத்தில் அவதரித்த கோரக்கர், உலகெங்கும் பயணம் செய்து நிறைவாக தமிழகம் வந்து நாகப்பட்டினத்துக்கு அருகே வடக்குப் பொய்கை நல்லூரில் ஜீவ சமாதி கொண்டிருக்கிறார் .
கோயமுத்தூர் அருகில் உள்ள பேரூரில் சித்தியடைந்தார் என்றும் சொல்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு அருகே உள்ள அத்ரி மலையில் கோரக்கருக்காக அத்ரி மாமுனி வரவழைத்த கங்கை, கடனாநதி என்ற பெயரில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அந்த நீரால் அபிஷேகம் செய்து, பூஜைகளையும் மேற்கொண்டார் கோரக்கர். அந்த லிங்கம் கோரக்கநாதர் என்று வழங்கப்படுகிறது.
இப்படி, தான் சென்ற இடங்கள் பலவற்றில் தம் அம்சத்தை நிலைத்திருக்கச் செய்தவர் கோரக்கர்
கோரக்கர். சீன தேசத்தில் ஐந்தாண்டுகள் வாழ்ந்திருந்ததாகத் தம் குறிப்பில் தெரிவித்திருக்கிறார்
தன் பிறப்பிடமான மராத்திய மாநிலத்திலிருந்து யாத்திரையை மேற்கொண்ட இவருடன் பட்டாணி ராவுத்தர் என்பவரும் வந்திருக்கிறார்.
பயணத்தின்போது கோரக்கர் பாடிய பல பாடல்களை ராவுத்தரும் பிற சீடர்களும் படியெடுத்திருக்கிறார்கள்
மதுரையை அடுத்துள்ள திருப்புவனத்தில் கோரக்கர், மூலக் கடவுளான விநாயகர் ரூபத்திலேயே காட்சி தருகிறார்.
இவ்வாறு கோயில் கொண்டிருக்கும் கோரக்கர் கிழக்கு நோக்கி இருக்கிறார். சப்த கன்னியர் சந்நதியும் அதே திசை பார்த்து இருக்கிறது.
கோரக்கருடன் உடன் வந்த பட்டாணி (ராவுத்தர்) சுவாமி, புளியமர மேடை மீது அமர்ந்திருக்கிறார். வலது, இடது பக்கங்களில் மண்டபங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மடப்பள்ளி, முடி இறக்கும் பிரார்த்தனை நிறைவேற்ற, நீராட என்று தனித்தனியே மண்டபங்கள் உண்டு.
கோரக்கருக்கு தினமும் காலை 8 மணிக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது.
சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
மாலையில் சுண்டல் கடலை பிரசாதம். சங்கடஹர சதுர்த்தி மற்றும் பிற விநாயகருக்கான எல்லா விசேஷங்களும் இங்கே விநாயக கோரக்கருக்கு சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.
ஒவ்வொரு பௌர்ணமி தினமும் இங்கே திருவிழா கொண்டாட்டம்தான். எலும்பு உபாதை உள்ளவர்கள், படிப்பில் நாட்டம் இல்லாதவர்கள், பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள், தம் ஜாதகத்தில் சனிதோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து விநாயக கோரக்கரை வணங்கி தம் குறைகள் நீங்கப் பெறுகிறார்கள்.
மதுரை மானாமதுரை வழித்தடத்தில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது திருப்புவனம்.
திருப்புவனம் கோட்டை என்ற இடத்தில் அருட்பாலிக்கிறார் விநாயகர் கோரக்கர்.
ஸ்ரீமன் நாராயணனே நமக்கு நேரடியாக அனுக்கிரஹம்...
சாஃஷாத் அந்த ஸ்ரீமன் நாராயணனே நமக்கு நேரடியாக அனுக்கிரஹம் பண்ணின விஷயங்கள் நம்மளோட ஸம்ப்ரதாயத்துல நெறய்ய இருக்கு. பகவத் கீதை ரொம்ப ப்ராபல்யமானதா இருக்கு. வராஹ புராணத்துலேயும் பெருமாள் நேரடியா இன்னின்னது பண்ணலாம் இன்னின்னது பண்ணக் கூடாதுன்னு பூமிப் பிராட்டி கிட்டே சொல்றார். அப்படி அவர் சொல்றது கர்ம பத்தர்களாகிய நாமெல்லாம் உய்யனும் அப்டிங்கறதுக்காக தான். அதுலே முக்கியமான சிலவற்றை இந்தப் பதிவுல பாப்போம்.*
கோவிலுக்குள் நடக்கும் காலக்ஷேபம், வாத்திய இசை மற்றும் பாராயணம் ஆகியவற்றை தடுக்கும் விதத்தில் செயல்படுபவர்கள் அடுத்த ஏழு ஜென்மங்களில் கழுதையாக பிறப்பார்களாம்
கோவில் மதில் சுவற்றில் எச்சில் உமிழ்வது, மலம் கழிப்பது, மதில் சுவற்றை பிற விதங்களில் அசுத்தம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் புழுவாகப் பிறந்து சாணியில் நெளிவார்களாம்
கோவிலுக்குள் தமது ரோமம் மற்றும் நகத்துண்டுகளைப் போடுபவர்கள் ஈயாகப் பிறந்து குப்பைகளை மொய்ப்பார்களாம்
பெருமாள் தாயாரை மற்றும் ஆச்சார்யாள் சேவிக்க வரும்போது வஸ்திரத்தினை இடுப்பினில் உடுத்திக் கொண்டு வராமல், போர்த்திக் கொண்டு வருபவர்கள், கடுமையான தோல் நோயால் பாதிக்கப்பட்டு, எப்பொழுதும் போர்த்திக் கொள்ள வேண்டிய பிறப்பெடுப்பர்.
ஸ்மசாணத்திற்குப் (இடுகாட்டுக்கு) போய்விட்டு அன்றே கோவிலுக்கு வருபவர்கள் அடுத்த ஜென்மத்தில் ஓநாயாகப் பிறப்பராம்
கோவிலுக்குள் இருக்கும் போது பகவத் சிந்தனை இல்லாமல், இதர (மற்ற) விஷயங்கள் பேசிக்கொண்டே இருப்பவர்கள் சதா தொண்டை கிழிய கத்திக் கொண்டே இருக்கும் பறவையாகப் பிறப்பராம்
கோவிலைப் ப்ரதக்ஷிணம் பண்ணும் போது, தரையில் படும் விமானத்தின் நிழலை (நகர்ந்து செல்லாமல்) காலால் மிதிப்பவர்கள் ஒற்றை மரமாகப் பிறப்பராம்.
மற்ற தேவ்தாந்த்ரங்கள் கோவிலுக்குச் சென்று விட்டு ஸ்ரீமன் நாராயணனின் கோவிலுக்கு வருபவர்கள் பிச்சைக்காரர்களாகத் தெருக்களில் திரிவார்களாம்
பிற தெய்வங்களுக்கு சமர்ப்பித்த பொருட்களை பெருமாளுக்கு சமர்ப்பிப்பவர்கள் புத்தியில் குறைந்த மண்டூகங்களாக பிறப்பார்களாம். தவளைகளாகப் பிறப்பார்களாம்.
பெருமாளுக்கு சமர்ப்பித்த புஷ்பங்களின் வாசனையை முகர்ந்து பார்ப்பவர்கள் உடல் துர்நாற்றம் அடிக்கும் குஷ்டரோகியாக பிறவிகள் எடுப்பாராம்
கோவிலில் மற்றவர்கள் மேல் பட்டு விட்ட காரணத்தினால், கோவிலிலிருந்து அகத்திற்கு திரும்பியவுடன் ஸ்நானம் (குளிப்பது) பண்ணக் கூடாது. அப்படிப் பண்ணுவது பாவங்களில் எல்லாம் பெரிய பாவமாக தீராத துஷ் கர்மாவை சேர்க்க வல்லது.
பண்ண வேண்டியதை பண்ணாமல் இருந்தாலும் துஷ்கர்மா சேரர்து. பண்ணக் கூடாததை பண்ணினாலும் துஷ்கர்மா சேரர்து. ஸ்ரீமன் நாராயணன் தான் பரதேவதை. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தெய்வம்னு புரிஞ்சிக்காம இதர தேவ்தாந்த்ரங்களை ஸ்ரீ வைஷ்ணவாளா இருக்கறவா தேடிப் போகக் கூடாது. அப்படி போறப்போ துஷ்கர்மா சேரர்து.
ஸ்ரீமன் நாராயணன் தான் எல்லாமே அப்படின்னு ஏத்துக்கற பக்குவம் இல்லாததினால தான் ஹிரண்ய கசிபுவோட ம்ருத்யு எல்லாரும் பயப்படற விதத்துல இருந்தது. பண்ண வேண்டியதை அவன் பண்ணலை. ஸ்ரீமன் நாராயணனை தூஷனை பண்றதுங்கற தப்பை பண்ணினான். பண்ணக் கூடாததைப் பண்ணினான்.
ப்ரஹ்லாதனானவன் ஸ்ரீமன் நாராயணன் மேல அளப்பற்கரிய பக்தி கொண்டிருந்தான். நம்பிக்கை கொண்டிருந்தான். இதை தான் ஸ்ரீமன் நாராயணன் தனது பக்தாளிடத்தே எதிர்பாக்கறான். ஒசந்த சரணாகதியை பிரஹலாதன் பண்ணினதுனால (பண்ண வேண்டியதைப் பண்ணினதுனால) அவனுக்கு ப்ராப்தமானது பேர், புகழ், ராஜ்ஜியம் எல்லாம். அவனோட பக்தி காம்யார்த்தமான இத்தகைய விஷயங்களை எதிர்பார்த்து இல்லேன்னா கூட, அந்த ஸ்ரீமன் நாராயணன் அவனோட பரிபூர்ண சரணாகதியை மெச்சி அவனுக்கு அளித்த வரங்கள் இதெல்லாம். என்னே அவனுடைய கருணை.
ந்ருஸிம்ஹா... ந்ருஸிம்ஹா... உன் தாள் கண்டு கொண்டு என் சிரம் மேல் சூடிக் கொண்டேன். சரணாகதோஸ்மி. காப்பாத்து.
*dg*
பிள்ளை லோகாச்சாரியார்...
முடும்பைக் குலத்தில், ஸ்ரீவத்ஸ கோத்திரத்தில், ஐப்பசி, திருவோணத்தில் பிறந்தவர் பிள்ளை லோகாச்சாரியார். இவரது குரு, ஸ்வாமி நம்பிள்ளை. இவர் திருவரங்கத்தில் வாழ்ந்து வந்த காலத்தில் முகம்மதியர்கள். அத்தலத்தின் மீது படையெடுத்துக் கோயில்களைத் தகர்த்தனர்.
ஆசார்ய பீடத்தை அலங்கரித்த இவர், தமக்கு அதிக வயதானபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல் தாமே முன்னின்று திருவரங்கன் சன்னிதியை சுவர் எழுப்பி மறைத்து, உத்ஸவ ரோடு காட்டு வழியே சென்றார். வழியில், கள்ளர்கள் தொல்லையைப் பொறுத்து அவர் களிடம் நயமாகப் பேசி அவர்களின் மனதை மாற்றினார்.
அப்போது, கி.பி.1323ஆம் ஆண்டு. அழகிய மணவாளரை சுமந்து வந்த கூட்டம் உத்துங்கவன க்ஷேத்திரத்தை நெருங்கியது. மதுரை நகருக்குச் சிறிது தொலைவில் உள்ள இடம் அது. பிரம்மா தவமியற்றிய பதி. ஹயக்ரீவராய் தோன்றி நான்முகனிடம் வேதங்களை ஒப்படைத்த வேதநாராயணப் பெருமாள் எழுந்தருளிய க்ஷேத்திரம். ஆனைமலையின் வடகோடியில் மலையடிவாரத்தில் உள்ள ஸ்தலம். பிரம்மா நித்ய கர்மானுஷ்டங்களுக்காக ஏற்படுத்திய பிரம்ம தீர்த்தத்தில் நீராடினார் பிள்ளை லோகாச்சாரியார். புராணங்கள் இந்த இடத்தை 'ஜ்யோதிஷ் குடி என்கின்றன.
பிரம்மா தபோவனமான இப்பகுதியை, தற்போது கொடிக்குளம் என்கின்றனர். அங்கு அருளும் நின்ற கோல வேதநாராயணப் பெருமாளை தரிசித்த ஆச்சாரியார், 'என்னைப் படைத்ததற்காகத் தாங்கள் பெருமை கொள்ளும்படி அனுக்கிரகிக்க வேண்டும்" எனப் பிரார்த்தித்தார்.
பெருமாள் சன்னிதியின் பின்பக்கம் ஒரு குகை இருந்தது. அழகிய மணவாளரையும், உபய நாச்சியார்களையும் அங்கே எழுந்தருளச் செய்து நித்திய ஆராதனைகளை நடத்தி வந்தார் ஆச்சாரியார். மூன்றாண்டுகள் கழிந்தன.
ஒரு நாள் அந்நியப் படையெடுப்பாளர்களால் மதுரை மீனாக்ஷி ஆலயம் தாக்கப்படுவதாக அவருக்குச் செய்தி வந்தது. உடனே, அவர் தமது முதுகில் நம் பெருமாளைக் கட்டிக்கொண்டு மலையின் மீது ஏறி மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றிக் கழித்தார்.
மூன்று தினங்கள் மலையின் மீது கழித்த அவர், நெஞ்சின் மீது நம்பெருமாளை இறுகப் பிணைத்துக்கொண்டு, 'நீயே துணை' என்று கூறியவாறு ஆலமர விழுதைப் பிடித்துக்கொண்டு கீழிறங்கினார்.
பகிர்வுஸ்ரீராமஜயம்
சதுர்முகன் அவர் பிரார்த்தனையை நிறைவேற்ற முடிவு செய்திருக்க வேண்டும். விழுது அறுந்து விழத் தொடங்கியது. பெருமாள் திருமேனியில் அடிபடக் கூடாதென்று மல்லாந்தபடி விழுந்தார் ஆசாரியார். அவர் கீழே விழுவதைப் பார்த்த ஊரார், ஓடி வந்து அவரைத் தூக்கினர். அவர் நெஞ்சோடு தழுவிக் கொண்டிருந்த நம்பெருமாள் விக்ரஹத்தைத் தனியே எடுத்து வைத்துவிட்டு, அவர் உடல் காயங்களுக்கு மருந்திட்டனர்.
இன்னொரு முறை இப்படியொருவர் உதிப்பாரா இம்மண்ணில்! மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஆறு கி.மீ., தொலைவில் உள்ளது வேதநாராயணர் ஆலயம். 'கொடிக்குளம் பேருந்து நிறுத்தம்' என்று கேட்டு இறங்க வேண்டும். அங்குள்ள மருத்துவக் குணமுடைய பிரம்ம தீர்த்தம், ஆனைமலையின் கீழே பாறை அடியில் சுனையாகப் பெருகி வருகிறது. (அர்த்தமண்டபத்தோடு அமைந்த கருவறை) பிள்ளை லோகாச்சாரியாரின் தியாகம் சிரஞ்சீவியானது.
திங்கள், 4 நவம்பர், 2024
மூன்று வகை தவம்...
மூன்று வகை தவம்...
தவம் என்றால் ஆன்மீகப் பயிற்சி எனப் பொருள்படும். ஆழ்ந்த தியானம் மற்றும் முறையான ஒழுக்கநெறிகள் ஆகியவை “தவம்” என்று கூறப்படுகின்றன. தவம் என்பதற்கு நடைமுறையில் ‘விரதம்’ அல்லது ’நோன்பு’ எனவும் பொருள் கொள்ளலாம். தவம் மேற்கொள்பவர் “தபஸி” (ஆண்) அல்லது “தபஸ்வினி” (பெண்) என்றழைக்கப்படுவர்.
பெரும்பாலும் உடலை வருத்திக் கொள்வது தான் ‘தவம்’ என்று தவறாக கருதப்படுகின்றது. ஆயினும் இந்துதர்ம நூல்களில் உடலை வருத்தி செய்யப்படும் தவங்கள் ‘தவிர்க்கப்படவேண்டியவை’ என அறிவுரை செய்யப்படுகின்றது.
பகவத் கீதை உட்பட இதர இந்துதர்ம நூல்கள் தவமுறைகளை மூன்று வகையாகப் பகுத்துக் காட்டுகின்றன.
தூய நிலையிலான தவமுறை (சத்வம்)
ஆசை அல்லது தற்பெருமை நிலையிலான தவமுறை (ரஜஸ்)
அறியாமை மற்றும் மூட நிலையிலான தவமுறை (தமஸ்)
இவற்றுள் சத்வ தவமுறை தான் ஊக்குவிக்கப்படுகின்றது. சத்வ தவமுறையைக் கடைப்பிடிப்பவர் இறைவனின் அருளைப் பெறுவர். சத்வ தவமுறையை உடல், வாக்கு, மனம் என மூன்றாகப் பிரிக்கலாம். அவை:
*உடல்*
1) தினமும் தவறாமல் தெய்வங்களை வழிபட வேண்டும்.
2) பெற்றோர், குரு மற்றும் சான்றோர்களை மதித்து போற்றவேண்டும்.
3) உடல் தூய்மையைப் பேண வேண்டும்.
4) எளிமையான வாழ்க்கையை வாழ பழகிக் கொள்ளவேண்டும்.
5) தன்னடக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
6) மற்றவர்களுக்குக்கேடு விளைவிக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
*வாக்கு*
1) பொய்யானவற்றை தவிர்த்து உண்மையைப் பேச வேண்டும்.
2) கடுமையான சொற்களைத் தவிர்த்து இனிமையாகப்பேச வேண்டும்.
3) மற்றவர்களுக்கு நன்மை விளைவிக்கும் விஷயங்களைப் பேச வேண்டும்.
4) நல்லவர்களை நோகடிக்காமல் பேச வேண்டும்.
5) வேதங்கள் கூறும் உண்மைகளை மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
*மனம்*
1) இருப்பதைக் கொண்டு மனதில் திருப்தி கொண்டிருக்க வேண்டும்.
2) மனத்தைக் கட்டுப்படுத்த பழக வேண்டும்.
3) தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்த்து மனத்தில் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
4) எண்ணங்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
இறைவனின் அருளைப் பெறுவதற்கு இதுபோல எத்தனையோ எளிதான வழிகள் நம் இந்துதர்மத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன. எனவே, தனக்கும் மற்றவருக்கும் துன்பத்தை தரும் கடுமையான மற்றும் தவறான வழிகளில் செல்லாமல் மேற்கூறிய தவமுறைகளைக் கடைப்பிடிப்பது சாலச் சிறந்தது.
*dg*
இது 'வஜ்ர கீதா' (वज्र कीट) என்று அழைக்கப்படுகிறது.
இது 'வஜ்ர கீதா' (वज्र कीट) என்று அழைக்கப்படுகிறது.
அதன் முட்களால் பயங்கரமாகத் தெரிகிறது, ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, இது நேபாளத்தில் உள்ள கந்தகி நதியில் வசிக்கிறது மற்றும் அதன் உடல் சுரப்பு மற்றும் முட்களால் புனிதமான சாலிகிராம கற்களை செதுக்குகிறது! இந்த உயிரினம் உள்ளது. சங்கு (சங்கு), சக்கரம் (வட்டு), கட (கதாளம்) போன்ற பல்வேறு வடிவங்களைக் கொண்ட சாலிகிராமக் கற்களை செதுக்குவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது, மேலும் சில சாலிகிராம கற்களின் மேல் தங்க நிற தொப்பி உள்ளது இந்த வஜ்ர கீதாவால் உருவாக்கப்பட்டது!" வஜ்ர கீட்டா என்பது ஒரு வகை பூச்சி, இது ஒரு வண்டு, இது இந்து மதத்தில், குறிப்பாக விஷ்ணுவின் வழிபாட்டில் புனிதமான முக்கியத்துவம் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. சாலிகிராமக் கற்கள் புனிதமானதாகக் கருதப்படுகின்றன, மேலும் அவை பெரும்பாலும் விஷ்ணுவின் பிரதிநிதிகளாகப் போற்றப்படுகின்றன.
ஸ்ரீ பால தேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை அருளிய வரலாறு...
ஸ்ரீ பால தேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை அருளிய வரலாறு...
கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ பாலதேவராய சுவாமிகள். இவர் எதற்காக இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா? தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை.
வாழ்க்கையே வெறுத்துப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார். அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார். நல்ல அருட்கவியும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார்.
அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும். தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன.
அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்த, 'சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்' என்று தொடங்கும் கவசம்.
இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது. என்றாலும் ஆறு கவசத்தையும் ஒருங்கே பாடுவதே சிறப்புத்தரும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே. கந்தன் என்று சொன்னாலே, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் நீங்குமே. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் கிடைக்கும் பயனை சொல்லவும் வேண்டுமா?
இத்தனை சிறப்பு வாய்ந்தது இந்த கந்த சஷ்டி கவசம். இதனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து, அறிவு, செல்வம், சந்தானம், வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்தி வாய்ந்த கவசமாகும். பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவச நூலை முருகன்மீது பாடவேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் பாடியதுதான் 'சண்முக கவசம்'. இந்த சண்முக கவசமும் ஆறு கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. *ஓம் சரவணபவ*
சனி, 2 நவம்பர், 2024
ஸ்ரீ காஞ்சி காமகோடி இருபத்தி ஒன்றாவது பீடாதிபதி ஸ்ரீ ''ஸார்வ பௌம'' சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
ஸ்ரீ காஞ்சி காமகோடி இருபத்தி ஒன்றாவது பீடாதிபதி ஸ்ரீ ''ஸார்வ பௌம'' சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் ஆராதனை...
இருபத்தி ஒன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 437 - 447]
இவர் கொங்கண அந்தண குலத்தவர். இவரின் தந்தை பெயர் "அச்சுதன்". இவரே மூக சங்கரால் ஆட் கொள்ளப் பட்ட "மாத்ரு குப்தன்". இவர் தம் குருநாதரோடு பல விஜய யாத்திரைகள் சென்றவர். சந்திர மௌலீஸ்வரர் பூஜை செய்வதில் கை தேர்ந்தவர்.
இவர் கி.பி. 447 ஆம் ஆண்டு, விய வருடம் ஆவணி மாதம், கிருஷ்ண ஜெயந்தி அன்று காசியில் சித்தியடைந்தார். இவரின் அதிஷ்டானம் காசியில் கங்கை நதிக்கரையில் உள்ளது. இவர் 10 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
இவரின் அதிஷ்டானம் இவ்வளவு பெரிதாக இருந்தும் செடி, புல், பூண்டோடு இருப்பது வேதனையான ஒன்று. இது போல் இருக்கும் அதிஷ்டானங்களை சுத்தம் செய்து, உடைந்த பொக்கை, போறைகளை சரி செய்து ஒரு அழகான வர்ணம் பூசி பாதுகாக்க வேண்டும். கோடி கோடியாக சொத்து இருந்து பயன் இல்லை. இது போன்ற அதிஷ்டானங்களை சங்கர மடம் பராமரிக்கவும் வேண்டும். எப்பேர்ப்பட்ட இடம், எப்பேர்ப்பட்ட அதிஷ்டானம், ஒரு தீபம் கூட இல்லாமல் இருக்கிறது. இனியாவது இதை எல்லாம் பராமரித்து, அங்கே பரிமரிப்பவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்து நித்ய பூஜை செய்ய வேண்டும். சும்மாவாவது மடத்தில் ஏகப்பட்ட பேருக்கு சம்பளம் கொடுப்பதை விட இது போன்ற அதிஷ்டடானங்களை பராமரிக்க ஏற்பாடு செய்து அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்....
ஐம்பத்தி ஒன்றாவது ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியான ஸ்ரீ வித்யா தீர்த்தேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
ஐம்பத்தி ஒன்றாவது ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியான ஸ்ரீ வித்யா தீர்த்தேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளி
ன் அதிஷ்டானம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் உள்ளது. அதுகோடி சிவன் கோவிலில் சிவலிங்க சொருப்பமாக இருக்கிறது.
இவரின் அதிஷ்டானத்திற்க்கு நிரந்தரமாக ஆராதனை செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். ஒரு குடும்பத்திற்க்கு நிரந்தரமாக ஆராதனை செய்ய முதலில் முன் வருபவர்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்.
இனி வரும் நாட்களில் இது போன்ற ஆராதனை நடைபெறாமல் இருக்கு அதிஷ்டானங்களை பதிவிடுகிறோம்.
இது போல் ஆராதனை நடைபெறாத அதிஷ்டானங்களுக்கு நிரந்தரமாக ஆராதனை செய்ய முன் வருபவர்களுக்கு நீங்களே உங்கள் குடும்ப சகிதமாக ஆராதனை செய்ய அற்புதமான வாய்ப்பு உள்ளது.
விருப்பம் உள்ள குடும்பங்கள் ஆராதனை செய்ய முன் வரலாம். ஆராதனை செய்ய வேண்டிய மாதம், நாள், திதி எல்லாம் யார் ஆராதனை செய்ய விருப்பப் படுகிறார்களோ அவர்களிடம் தெரிவிக்கப்படும். கோடி ஜென்ம சுகிர்தம் இருந்தால் தான் இது போன்ற வாய்ப்பு நமக்கு கிடைக்கும்.
51 வது ஆச்சார்யாளின் அதிஷ்டானம்
இமாச்சல பிரதேசத்தில், சிம்லாவில் உள்ள அதிஷ்டான படத்தை கீழே பதிவிடுகிறேன்....
ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்...
கலிகாலத்தில் இறைவனின் நாமத்தைச் சொன்னாலே போதும் என்பதை அகிலமெங்கும் பரப்பிய பெருமை ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு உண்டு. திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாளும் இருவரும் சம காலத்தவர்கள். கும்பகோணத்துக்கு அருகே திருவிடைமருதூரை அடுத்து அமைந்திருக்கிறது கோவிந்தபுரம். இங்குதான் போதேந்திரர். அதிஷ்டானம் கொண்டுள்ளார். 22-8-2008, வெள்ளியன்று இந்த அதிஷ்டானத்துக்கு மகா கும்பாபிஷேக வைபவம் சிறப்பாக நடைபெற்றது. காஞ்சி காமகோடி ஆசார்ய பரம்பரையில் ஐம்பத்தொன்பதாவது பீடாதிபதியாக விளங்கியவர் பகவன்நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். இவரது காலம் கி.பி. 1638-1692. அன்னிய மதத்தினர் இந்துக் கோயில்களை நாசம் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் தான் இவரது நாம ஜப பிரசாரம் முனைப்புடன் துவங்கியது. நாம ஜபத்தின் மூலம் இறைவனை அடையலாம். கஷ்டங்களைப் போக்கலாம்; பிரச்னைகளைத் தீர்க்கலாம் என்று நாம ஜபத்தின் மேன்மைகளைப் பல இடங்களிலும் சொல்லி, அந்த எளிய வழிபாட்டை மேம்படுத்தினார்.
ஒரு மடாதிபதியாக காஞ்சிபுர மடத்தில் அவர் தங்கியிருந்த காலத்தைவிட வெளியே பயணித்து, நாம ஜப மேன்மையைப் பரப்பிய காலமே அதிகம் என்று சொல்லலாம். நாம பஜனை சம்பிரதாயத்தின் முதல் குரு என்று போற்றப்படுவர் அவர்.
நாம சங்கீர்த்தனம். நாம ஜபம் என்றால் என்ன?
பொதுவாக, பகவன் நாமத்தை எந்த நேரமும் உச்சரித்துக் கொண்டிருப்பது என்பதுதான் இதன் பொருள். நாம சங்கீர்த்தனம் என்றால், இறைவனின் ஒரு திருநாமத்தை வாத்திய கோஷ்டிகளின் உதவியுடன் ராகம் அமைத்துப் பாடிக்கொண்டே இருப்பது முதலில் பாடிய வரிகளையே மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டு இருப்பார்கள். பெரும்பாலும் ஆர்மோனியம் மிருதங்கம். கஞ்சிரா முதலான பக்கவாத்தியங்களை வாசித்துக்கொண்டு பக்தியில் திளைத்து ஆடிய வண்ணம் நாம சங்கீர்த்தனத்தைச் செய்வார்கள் பாகவதர்கள். இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களும் மெய்மறந்து இறை இன்பத்தில் ஐக்கியமாகி விடுவார்கள். பாகவதர்களுடன் இணைந்து பக்தர்களும் பகவானின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நாம ஜபம் என்பது தனிப்பட்ட ஒருவரோ அல்லது சிலரோ சேர்ந்து பகவன் நாமங்களை மனதுக்குள்ளோ அல்லது வாய்விட்டோ சொல்லி இறைவனை வழிபடுவது நம சிவாய நாராயணாய ராம ராம கிருஷ்ண கிருஷ்ண என்று அவரவருக்குப் பிடித்த கடவுளின் நாமத்தைச் சொல்லி வழிபடலாம்.
கலியுகத்தில் நாம ஜபத்தை யார் வேண்டுமானாலும். எப்போது வேண்டுமானாலும் உச்சரித்து இறைவனை வணங்கலாம். இதற்கு கால நேரம் கிடையாது. என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கலிகாலத்தில் பகவன் நாமங்களே நம்மைக் கரை சேர்க்கும் என்று சொன்ன போதேந்திரர் தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை ஸ்ரீராம நாமத்தைத் துதித்து வந்தார். இதிலிருந்தே அவரது பக்தியின் பெருமையை நாம் புரிந்துகொள்ளலாம். போதேந்திரர் தமிழ்நாட்டில் அவதரித்த காலத்தில்தான் நாட்டில் ஏராளமான மகான்கள் தோன்றினர். கன்னட தேசத்தில் புரந்தரதாசர். கனகதாசர் முதலானோரும் ஆந்திராவில் ராமதாசர், ஷேத்ரக்ஞர். மகாராஷ்டிரத்தில் துக்காராம் போன்றோரும் வங்களாத்தில் கிருஷ்ண சைதன்யர், நித்யானந்தர் போன்றோரும் காசியில் கபீர்தாசர், துளசிதாசர் ஆகியோரும் வடக்கே ஸ்வாமி ஹரிதாஸ், ஸ்ரீவல்லபர், குருநானக் குருகோவிந்தசிங், மீரா போன்றோரும் அவதரித்தனர். மொத்தத்தில் பார்த்தால். இவர்கள் அனைவருமே பாகவத சம்பிரதாயத்தின் மேன்மையையும் நாம ஜபத்தின் பெருமையையும் பரப்பி இருக்கிறார்கள். ஒரே காலத்தில் பல்வேறு இடங்களில் பல மகான்கள் அவதரித்துப் பக்தியைப் பரப்ப வேண்டும் என்பது இறைவனின் சங்கல்பம் போலிருக்கிறது.
போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அவதார வரலாற்றை அறிந்துகொள்வோம்? புராணம் போற்றும் புண்ணிய நகரம் காஞ்சிபுரத்தில், மண்டனமிஸ்ரர் அக்ரகாரத்தில் வசித்து வந்தவர் கேசவ பாண்டுரங்கன் என்ற அந்தணர். ஆந்திர தேசத்தில் இருந்து காஞ்சிக்கு வந்து குடியேறியவர். அவருடைய மனைவியின் பெயர் சுகுணா இந்தத் தம்பதிக்கு 1638ல் ஆதிசங்கர பகவத்பாதரின் அம்சமாக போதேந்திரர் அவதரித்தார். குழந்தை பிறந்த வேளையை வைத்து, அதன் எதிர்காலத்தையும் சிறப்பு அம்சங்களையும் கணித்த பாண்டுரங்கன் புருஷோத்தமன் என்று பெயர் சூட்டினார். அப்போது காஞ்சி காமகோடி மடத்தில் 58வது பீடாதிபதியாக விளங்கிய ஆத்மபோதேந்திரர் என்கிற விஸ்வாதிகேந்திரா சரஸ்வதி ஸ்வாமிகளிடம் உதவியாளராக இருந்து வந்தார் பாண்டுரங்கன். ஒரு நாள், தந்தை, மடத்துக்குப் புறப்படும்போது, நானும் வருவேன் என்று அடம் பிடித்தான் ஐந்தே வயதான புருஷோத்தமன், சரி என்று அவனையும் கூட்டிக்கொண்டு ஸ்ரீமடத்துக்குச் சென்றார். பீடத்தில் இருந்த ஸ்வாமிகளைக் கண்டதும். பக்தி உணர்வு மேலிட, எவரும் சொல்லாமல் தானாகவே நமஸ்காரம் செய்தான் பாலகன் புருஷோத்தமன்.
விளையும் பயிரின் சாதுர்யம், ஒரு வேதவித்துக்குத் தெரியாமல் இருக்குமா? ஸ்வாமிகள், புருஷோத்தமனைப் பார்த்து புன்னகைத்தார். ஸ்வாமிகள் முன் கைகூட்டி, வாய் பொத்தி நின்றிருந்தது குழந்தை. பாண்டுரங்கனைப் பார்த்து இந்தக் குழந்தை யாருடையது? என்றார் ஸ்வாமிகள். தங்களுடைய பரிபூரண ஆசீர்வாதத்தோடு பிறந்த இந்தக் குழந்தையும் தங்களுடையதோ.. நம்முடையது என்று நீர் சொல்வதால், இந்தக் குழந்தையை நமக்கே விட்டுத்தர முடியுமா? யதேச்சையாக, தான் சொன்ன வார்த்தைகளின் முழுப்பொருள் அப்போதுதான் பாண்டுரங்கனுக்குப் புரிந்தது. சற்றுத் தடுமாறினார். வாய் தவறி வார்த்தைகளை உதிர்த்துவிட்டோமோ என்று ஐயப்பட்டார். இருந்தாலும், வாயில் இருந்து வந்து விழுந்த வார்த்தைகள் இறைவனின் சங்கல்பத்தால் எழுந்தவையாக இருக்கும் என்று அனுமானித்தார். ஸ்வாமிகளைப் பணிந்து தங்களுடைய விருப்பமே என்று விருப்பமும் என்றார்.
இதைக்கேட்டு சந்தோஷப்பட்ட ஸ்வாமிகள், நல்லது. இன்றைய தினத்தில் இருந்து மடத்தின் குழந்தையாகவே புருஷோத்தமன் பாவிக்கப்படுவான். தைரியமாகச் செல்லுங்கள் என்றார். கணவரின் இந்தச் செயலைக் கேள்விப்பட்ட மனைவி சுகுணா கலங்கவில்லை. பகவானின் விருப்பம் அதுவானால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? என்று தன்னையும்தேற்றிக்கொண்டு கணவரையும் தேற்றினான். மடத்தில் வளர்ந்தாலும் தினமும் பெற்றோரைச் சந்தித்து நமஸ்கரித்து ஆசி பெறும் உயரிய வழக்கத்தைக் கொண்டிருந்தான் புருஷோத்தமன். ஐந்து வயதில் அட்சர அப்பியாசம்; ஏழு வயதில் உபநயனம், பதினாறு வயது முடிவதற்குள் வேதம், வேதாந்தம் போன்றவற்றைத் திறம்படக் கற்று தேர்ந்தான். சகலத்திலும் உயர்ந்தது நாராயணன் நாமமே என்று தெளிந்த புருஷோத்தமன், தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் ராம நாமத்தை ஜபிப்பதாக, ஆசார்யா சன்னிதியின் முன் அமர்ந்து சங்கல்பம் எடுத்துகொண்டான். (அதன்பின் கடைசிவரை இதைத் தவறாமல் கடைப்பிடித்தும் வந்தார்). அடுத்தடுத்து வந்த காலகட்டத்தில் புருஷோத்தமனின் பெற்றோர், ஒருவர், பின் ஒருவராக இறைவனின் திருப்பதம் அடைந்தனர்.
நாளாக நாளாக புருஷோத்தமனின் தேஜஸும் பவ்யமும் கூடிக் கொண்டே வந்தது. ஆசார்ய பீடத்தில் அமர்வதற்கு உண்டான அத்தனை தகுதிகளும் புருஷோத்தமனுக்கு இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார் விஸ்வாதிகேந்திரர். உரிய காலம் வந்ததும் அவனைப் பீடத்தில் அமர்த்தி அழகு பார்க்க விரும்பினார் ஸ்வாமிகள். அதற்குரிய வேளையும் வந்தது. ஒரு தினம் விஸ்வாதிகேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பக்தி மார்க்கத்தைப் பரப்பும் பொருட்டு காசி யாத்திரை புறப்பட்டார். அப்போது புருஷோத்தமனும் உடன் வருவதாகச் சொன்னார். காசியில் சில காலம் தங்க உத்தேசித்துள்ளேன். எனவே, நீ இப்போது என்னுடன் வர வேண்டாம். சிறிது காலத்துக்குப் பிறகு புறப்பட்டு வா என்றார் ஸ்வாமிகள். புருஷோத்தமனும் ஸ்வாமிகளைப் பிரிய மனம் இல்லாமல் ஒப்புக்கொண்டான். ஸ்வாமிகள் காசியை அடைந்தார். அப்போது, ந்ருஸிம்மாச்ரமி ஸ்வாமிகள் என்னும் மகான் காசி ஷேத்திரத்தில் தங்கி, பகவன் நாமங்களைப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். இருவரும் சந்தித்து உரையாடி, ஆன்மிக விவாதங்களை மேற்கொண்டனர். அப்போது, நாம் சங்கீர்த்தன வைபவங்கள் அதிக அளவில் காசியில் நடந்ததைப் பார்த்து ஸ்வாமிகள் பெருமிதம் கொண்டார். இந்த அளவுக்குத் தென்னாட்டில் நாம சங்கீர்த்தனம் வளர வேண்டுமானால் அது புருஷோத்தமனால்தான் முடியும். விரைவிலேயே அவனுக்கு மடாதிபதி பட்டம் சூட்டவேண்டும் என்று முடிவெடுத்தார்.
குருநாதரின் பிரிவைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் தன் நண்பனுடன் காசிக்கு யாத்திரை சென்றான் புருஷோத்தமன். அங்கே புருஷோத்தமனைப் பார்த்த மாத்திரத்தில் பெருமகிழ்வு கொண்டு, அவனை ஆனந்தமாக அணைத்து சந்தோஷப்பட்டார் ஸ்வாமிகள். இருவரும் காஞ்சிபுரம் திரும்பிய பின், ஒரு சுபதினத்தில் புருஷோத்தமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து, காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக ஆக்கினார் ஸ்வாமிகள். அப்போது புருஷோத்தமனுக்கு ஸ்வாமிகளால் சூட்டப்பட்ட திருநாமமே. போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். அதன்பின் பல இடங்களுக்கு யாத்திரை சென்று. நாம ஜபத்தின் பெருமைகளைப் பலருக்கும் போதித்தார் போதேந்திரர். ஏராளமான கிரந்தங்களை இயற்றினார். விளக்கவுரைகள் எழுதினார்.
ஒரு சமயம் விஸ்வாதிகேந்திர ஸ்வாமிகளுடன் போதேந்திரர் யாத்திரை சென்று கொண்டிருந்தார். அப்போது உடல் நலம் குன்றி மகா சமாதி அடைந்தார். விஸ்வாதிகேந்திர ஸ்வாமிகள். குருநாதருக்குச் செய்ய வேண்டிய கர்மங்களை முறையாகச் செய்து முடித்து, போதேந்திரர், காஞ்சிபுரத்துக்கே திரும்பிவிட்டார். வெவ்வேறு ஊர்களில் நடக்கும் போதேந்திரரின் நாம ஜப உற்சவங்களுக்குப் பெருமளவில் ஜனங்கள் வர ஆரம்பித்தார்கள். இதே காலத்தில்தான், போதேந்திரருக்கு திருவிசநல்லூரில் நாம ஜபத்தில் பிரபலமாக இருந்த ஸ்ரீதர ஐயாவாளுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இணைந்தே யாத்திரைகள் மேற்கொண்டனர். கிராமம் கிராமமாகச் சென்று நாம ஜபத்தின் உயர்வைச் சொன்னார்கள். ஒருமுறை போதேந்திரரும் ஸ்ரீதர ஐயாவாளும் பெரம்பூர் என்கிற கிராமத்துக்கு சிஷ்யகோடிகளுடன் வந்து சேர்ந்தனர். அந்த ஊரில் வசித்து வந்த ஆசாரமான அந்தணர் ஒருவர் தங்கள் இல்லத்துக்கு எழுந்தருளி. பிட்சை ஏற்குமாறு ஸ்வாமிகள் இருவரையும் கேட்டுக் கொண்டார். அதன்படி அவரது இல்லத்துக்கு ஸ்வாமிகளும் சிஷ்யகோடிகளும் சென்றனர்.
போதேந்திர ஸ்வாமிகள் பிட்சை எடுத்து உண்ட பிறகே ஸ்ரீதர ஐயாவாள் பிட்சை எடுத்து உண்பது வழக்கம் எனவே போதேந்திரர் முதலில் பிட்சை எடுத்துக்கொள்ள அமர்ந்தார். ஸ்ரீதர ஐயாவாளும், சிஷ்யகோடிகளும் ஊர் ஜனங்களும் ஸ்வாமிகளுக்கு எதிரே பவ்யமாக நின்று கொண்டிருந்தனர். அந்தணர் இல்லதைச் சேர்ந்தவர்கள் ஸ்வாமிகளது இலையில் பிட்சைக்காரன் பதார்த்தங்களை ஒவ்வொன்றாகப் பரிமாறத் தொடங்கினார்கள்.
அந்த அந்தணருக்கு ஒரே மகன். சுமார் ஐந்து வயது இருக்கும். ஊமை, சின்னஞ்சிறுவன் ஆனதாலும் உணவில் மேல் கொண்ட பிரியத்தினாலும் ஸ்வாமிகளின் இலையில் பரிமாறப்பட்ட பதார்த்தங்கள் தனக்கு உடனே வேண்டும் என்று ஜாடையில் சொல்லி அடம்பிடித்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் ஸ்வாமிகளுக்கு துக்கம் வந்தது. ராம நாமத்தை சொன்னால் மோட்சம் அடையலாம். அப்படி இருக்கும்போது ஊமையான இந்தச் சிறுவன் எப்படி பகவன் நாமத்தைச் சொல்ல முடியும்? எப்படி இவன் கரை ஏறுவான் என்பதே ஸ்வாமிகளின் கவலை. ஆனால், அடுத்து அங்கே என்ன நடக்கப் போகிறது என்பதை ஸ்வாமிகள் அறியாதவரா என்ன?
சிறுவனின் பரிதாப நிலையை நேராகப் பார்த்த பிறகு, ஸ்வாமிகளுடைய கவனம் பிட்சையில் செல்லவில்லை. விருப்பம் இல்லாமல் சாப்பிட்டார். பல பதார்த்தங்களை இலையில் மீதம் வைத்து விட்டு எழுந்து, வெளியே வந்து அமர்ந்தார். அப்போது ஸ்வாமிகளிடம் ஆசி பெற ஏராளமானோர் கூடினர். அந்தணரின் குடும்பத்தினரும் பவ்யமாக நின்றிருந்தனர்.
ஊமையான அந்தச் சிறுவன் மட்டும் பசியுடன் ஸ்வாமிகள் சாப்பிட்ட இலைக்கு முன் தவிப்புடன் நின்றிருந்தான். அவரது இலையில் சில பதார்த்தங்கள் மீதம் இருந்தன. அங்கே வேறு எவரும் இல்லாததால் இலைக்குமுன் அமர்ந்து ஸ்வாமிகள் உண்டது போக மிச்சம், மீதி இருந்த உணவு வகைகள் ஒன்றையும் விடாமல் பரபரவென்று உட்கொண்டான். பசி எனும் நெருப்பு தற்போது தணிந்துவிட்டதால், சிறுவனின் உள்ளத்தில் ஆனந்தம் குடிகொண்டது.
அடுத்து நடந்த நிகழ்வை ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை எந்த ஒரு வார்த்தையயுமே உச்சரிக்காமல் இருந்த அவனுடைய வாய் ஸ்ரீராம ராம என்று சந்தோஷமாக உச்சரித்தது. இதையே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். தனக்குப் பேச வந்துவிட்டதே என்கிற ஆனந்தத்தில் அவன் கூத்தாடினான். வாய் பேச முடியாத தன் மகனின் வாயில் இருந்து ஸ்ரீராம கோஷம் வருவதைக் கேட்ட அவனுடைய பெற்றோர். திகைத்துப் போய் வாசலில் இருந்து வீட்டின் உள்ளே ஓடினர்.
மகனே.. மகனே! உனக்கு பேச்சு வந்துவிட்டது. அதுவும் ராம நாம ஜபத்துடன் உன் பேச்சைத் துவக்கி இருக்கிறாய் என்று கூறி அவனுடைய பெற்றோர் கண் கலங்க அவனைக் கட்டித் தழுவினர்.
வெளியே, வாசலில் அமர்ந்திருந்த அந்த மகான் அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். இதெல்லாம் நடந்தது இவருடைய கருணையில்தானே! பேச முடியாத மகன் பேசக் காரணமாக இருந்தது இவரல்லவா? ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை, எந்த நேரமும் பகவானின் நாமத்தையே ஜபித்துக் கொண்டிருக்கும் போதேந்திரரின் நாவில்பட்ட உணவின் மீதியை உட்கொண்டதால் அல்லவா, அந்தச் சிறுவன் பேசினான்! அவன் பேச வேண்டும் என்பதற்காகத்தான். அந்த மகான் தனது இலையில் பதார்த்தங்களை மிச்சம் வைத்துவிட்டு எழுந்து சென்றாரோ? மகனுடன் சென்று, அந்த மகானின் திருப்பாதங்களில் விழுந்து தொழுதனர் பெற்றோர்.
கோவிந்தபுரத்தில் போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இருந்த இடத்துக்கு அருகில்தான் காவிரி நதி! கோடை அல்லாத காலங்களில் கொப்பளித்துக் கொண்டும் கழித்துக் கொண்டும் ஓடும் அந்த நதியின் அழகை ரசிப்பதற்கும் அங்கே கூடும் சிறுவர்களுடன் விளையாடுவதற்காகவும் காவிரிக் கரைக்கு அடிக்கடி செல்வார் ஸ்வாமிகள்.
கள்ளங் கபடம் இல்லாத அந்தச் சிறுவர்களுக்கு இணையாக வயது வித்தியாசம் பாராமல் விளையாடுவார் ஸ்வாமிகள். சிறுவர்களின் ஆனந்தம் கண்டு குதூகலிப்பார். சில சமயம் ஆற்றங்கரையில் சாகசங்கள் சிலவற்றை செய்து காண்பித்து சிறுவர்களை மகிழ்விப்பார் ஸ்வாமிகள். இது ஸ்வாமிகளுக்கும் சந்தோஷமாக இருக்கும். காவிரி ஆற்றங்கரையில் போதேந்திர ஸ்வாமிகள் இருப்பதை சிறுவர்கள் பார்த்துவிட்டால் போதும். அவர்களுக்கு குஷி பிறந்துவிடும். துள்ளிக் குதித்து ஓடிவந்து விளையாடுவதற்கென்று ஸ்வாமிகளுடன் ஒட்டிக்கொண்டு விடுவார்கள்.
அது அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்று என்றாலும், அன்றைய தினம் நடக்கப் போகும் விளையாட்டுதான் ஸ்வாமிகளின் இறுதியான விளையாட்டு என்பதை. பாவம் அந்தச் சிறுவர்கள் அறியவில்லை!
அது கோடை காலம் காவிரி ஆற்றில் தண்ணீர் வற்றிப்போய் இருந்தது. நதியின் பெரும் பகுதியில் மணல் தெரிந்தது. தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது.
மணல் பகுதியில் இருந்த குழி ஒன்றுக்குள். தான் இறங்கிக்கொண்டு மேலே மணலைப் போட்டு மூடுமாறு சிறுவர்களிடம் கூறினார் ஸ்வாமிகள். சிறுவர்கள் ஆனந்தமாக மணலை அள்ளிப் போடுகிற நேரம் பார்த்து ஏ பசங்களா! என் மேல் மணலை அள்ளிப் போட்டு மூடிவிட்டு, நீங்கள் அனைவரும் வீட்டுக்குப் போய்விட வேண்டும். வீட்டில் எவரிடமும் இந்த விஷயத்தைச் சொல்லக்கூடாது. நாளை பொழுது விடிந்ததும் இங்கே வந்து என்னைப் பாருங்கள் என்ன? என்றார்.
ஸ்வாமிகளுடனான ஒரு விளையாட்டே இது என்று நம்பிய அந்த அப்பாவிச் சிறுவர்கள் போட்டி போட்டுக்கொண்டு. குழிக்குள் மணலை நிரப்பினார்கள். ஸ்வாமிகளது உருவம் மறைந்துவிட்டது. வாங்கடா, வீட்டுக்குப் போகலாம். சாமீ ஜபம் பண்றாரு. இங்கே நாம நின்னா அவருக்குத் தொந்தரவா இருக்கும் என்று இருட்டுகிற வேளையில் அனைவரும் கலைந்துவிட்டனர். மறுநாள் காலை தங்களது அன்றாட அலுவல்களின் பொருட்டு ஸ்வாமிகளைத் தேடினர் அவரது சிஷ்யர்கள். ஆசி பெற வேண்டி. ஊர் மக்கள் ஸ்வாமிகளைத் தேடி வந்தனர். இப்படிப் பலரும் ஸ்வாமிகளைத் தேடி கொண்டிருக்க... அவரைக் காணவில்லை என்கிற தகவல் பரவியது பல இடங்களில் தேடிப் பார்ததனர்.
ஸ்வாமிகளுடன் ஆற்றங்கரையில் அடிக்கடி விளையாடும் சிறுவர்களைக் கூப்பிட்டு விசாரித்தார்கள் பெரியோர். அப்போதுதான், முந்தைய தினம் நடந்த சம்பவத்தின் வீரியம் அந்தச் சிறுவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது. கண்களில் நீர் கசிய ஸ்வாமிகளின் மேல் மணலைப் போட்டு மூடிய விவரத்தைத் தேம்பித் தேம்பிச் சொன்னார்கள்.
சீடர்களும் ஊர்க்காரர்களும் பதறிப்போய் ஆற்றங்கரைக்கு ஓடினார்கள். சிறுவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில், மேடாக இருந்த மணலைக் கைகளால் விலக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் மணலை அள்ளிக்கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் அசாரீ வாக்கு ஒன்று எழுந்தது. பக்தர்களே! நாம் இந்த இடத்திலேயே ஞானமயமான சித்த சரீரத்தில் இருந்துகொண்டு ஜீவன் முக்தராக விளங்குவோம். அதோடு, உலக நன்மைக்காக பகவன் நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டே இருப்பதால், நமக்கு எந்தத் தொந்தரவும் செய்ய வேண்டாம். தோண்டுவதை நிறுத்துங்கள் இதற்கு மேலே பிருந்தாவனம் ஒன்றை அமைத்துத் தினமும் ஆராதித்து வாருங்கள். ஒவ்வொரு நாளும் லட்சத்துக்கு எட்டாயிரம் நாம ஜபம் செய்கிற பக்தர்களுக்கு நாம் தரிசனம் தருவோம் என்று அந்தக் குரல், ஸ்வாமிகளின் மொழியாக ஒலித்தது! இந்த அசரீரி வாக்கைக் கேட்ட அவருடைய பக்தர்களும் சீடர்களும் அதற்கு மேல் குழியைத் தோண்டாமல் மண்ணைப் போட்டு மூடி விட்டார்கள். அவர் மீது கொண்ட குருபக்தி காரணமாக சில பக்தர்கள். ஆற்று மணலில் விழுந்து தேம்பி அழுதனர். இன்னும் சிலரோ, நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினர்.
ஸ்வாமிகள் நிரந்தாமாகக் குடிகொண்ட இடத்தில் அவரது அசரீரி வாக்குப்படியே ஒரு துளசி மாடம் அமைத்து, மகா அபிஷேகம் நடத்தி, தினமும் நாம சங்கீர்த்தனம் செய்து வந்தனர் அவரது பக்தர்கள். ஆற்றங்கரை மணலுக்குள் ஸ்வாமிகள் ஐக்கியமான தினம் கி.பி.1692ம் வருடம் புரட்டாசி மாதம் பவுர்ணமி. இப்போதும் ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் பவுர்ணமியில் ஆரம்பித்து. மகாளய அமாவாசை வரை பதினைந்து நாட்கள் ஆராதனை உற்சவம் பாகவதர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து குவிக்கிறார்கள். ஜீவசமாதியில் இருந்துகொண்டு போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்றைக்கும் நாமம் ஜபித்துக்கொண்டு தன்னைத் துதிக்கும் பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள்கிறார். அவரது அதிஷ்டானத்தில் இருந்து வரும் ராம நாம ஒலியைக் கேட்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை தரிசிப்போமா? பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சன்னிதி. போதேந்திரரின் அதிஷ்டானம் இவை இரண்டும்தான் இங்கே பிரதானம். ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் டிரஸ்ட் அமைப்பினர் இந்த அதிஷ்டானத்தைத் திறம்பட நிர்வகித்து வருகிறார்கள். பாலிஷ் செய்யப்பட்ட கருங்கற்களால் அதிஷ்டானத்தைப் புதுமைப்படுத்தி இருக்கிறார்கள். உயரமான தூண்கள் கொண்ட ஒரு மண்டபத்தின் நடுவே அதிஷ்டானம் இதை வலம் வரலாம்.
கும்பாபிஷேகத்தின் காரணமாக இந்த அதிஷ்டானத்தைச் சுற்றிலும் உள்ள இடங்களைச் சற்றுத் தோண்டி எடுத்து சீரமைக்க ஆரம்பித்தார்கள். அப்போது சுமார் ஆறடிக்குக் கீழே அதிஷ்டானத் தோற்றத்தில் ஓர் அமைப்பு தென்பட்டதது. இது, ஆதியில் மருதாநல்லூர் ஸ்ரீசத்குரு ஸ்வாமிகளால் அமைக்கப்பட்ட அதிஷ்டானமாக இருக்கலாம் என்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கீழே பார்த்தால், ஆற்று மணல், ஆம்! மணலுக்குள்தானே தன்னை மூடிக்கொண்டார். இந்த மகான்? மருதாநல்லூர் ஸ்வாமிகள் (இவரது காலம் கி.பி 1777-1817 என்பர்) போதேந்திரரின் அதிஷ்டானத்தை அமைத்தது பற்றி, தெரிந்து கொள்ளலாம். மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள் காலத்தில் தஞ்சையை ஆண்டு வந்த மகாராஜா, சத்ரபதி சிவாஜியின் வழி வந்தவர். ஆன்மிகத்தின் பாதையில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டவர். மகான்களைப் போற்றியவர்.
மருதநல்லூர் ஸ்வாமிகளின் காலத்தில், கோவிந்தபுரத்தில் உள்ள போதேந்திரரின் அதிஷ்டானத்தை பக்தர்கள் தரிசிக்க முடியமால் இருந்து வந்தது. காரணம், அப்போது கரை புரண்டு ஓடிய காவிரியின் வெள்ளம் போதேந்திரரின் அதிஷ்டானத்தை முழுவதும் முழ்கடித்துவிட்டது. எவரது கண்களுக்கும் அந்த அதிஷ்டானம் தென்படவில்லை. இந்த நிலையில் தஞ்சை மகாராஜாவின் விருப்பப்படி, காவிரி நதியைச் சற்றே வடக்குப் பக்கம் திருப்பி, போதேந்திரரின் அதிஷ்டானத்துக்கு எதிர்காலத்தில் எந்தவித பாதிப்பும் வராமல், தடுப்பு வேலைகளைத் திறம்பட செய்தார் மருதாநல்லூர் ஸ்வாமிகள். மக்கள் சக்தியால் முடியாத ஒரு பணியை மகான் சாதித்ததில் பெரிதும் மகிழந்த தஞ்சை மகாராஜா, மருதாநல்லூர் ஸ்வாமிகளை ஏகத்துக்கும் கவுரவித்து மகிழ்ந்தான். போதேந்திரரின் அதிஷ்டானத்தை மருதாநல்லூர் ஸ்வாமிகள் எப்படிக் கண்டுபிடித்தார். என்று தகவல் சொல்வார்கள். சுட்டெரிக்கும் காவிரியின் மணலில் படுத்துக்கொண்டே உருண்டு வருவாரார் தினமும் ஒரு நாள். மகிழ்ச்சி மேலிட ஸ்ரீபோதேந்திரரின் அதிஷ்டானம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டேன். இங்குதான் அவரது ஜீவன் உறங்கிக் கொண்டிருக்கிறது. என்று கூத்தாடினார்.
அப்போது உடன் இருந்த அரசு அதிகாரிகளும் பக்தர்களும்-அதெப்படி இங்குதான் அவரது ஜீவன் உறங்குகிறது என்பதை சர்வ நிச்சியமாகக் கூறுகிறீர்கள்? ஆற்று மணலில் எல்லாப் பகுதிகளும் எங்களுக்கு ஒரே மாதிரிதானே காட்சி தருகிறது என்று கேட்டார்கள். அதற்கு மருதாநல்லூர் ஸ்வாமிகள். பக்தர்களே! படுத்துக்கொண்டே ஒவ்வொரு பகுதியிலும் என் காதை வைத்துக் கேட்டுக் கொண்டே வந்தேன். இந்த இடத்தில் மட்டும்தான் இன்னமும் ராம ராம எனும் நாம கோஷம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இங்குதான் அவரது ஜீவன் ராம நாமாவை உச்சரித்து வருகிறது என்று தீர்மானித்தேன் என்றார். அடுத்த கணம் அங்கு கூடி இருந்தார்கள் அனைவரும் மணற்பரப்பில் விழுந்து. போதேந்திரரை மானசீகமாகத் தொழுதார்கள். அதன்பின்தான் போதேந்திரருக்கு இங்கே அதிஷ்டானம் அமைக்கப்பட்டது. கிழக்கு நோக்கிய முகப்பில் அதிஷ்டானத்தின் பிரதான வாயில். முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது நித்ய பூஜை. அன்னதானம் என்று எதற்கும் இங்கே குறைவில்லை. தினமும் காலை ஆறு மணிக்கு சுப்ரபாத சேவை. எட்டு மணிக்கு உஞ்சவிருத்தி. ஒன்பது மணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம். பதினொரு மணிக்கு அதிஷ்டான பூஜை. அதன் பிறகு சமாராதனை, அன்னதானம்.
இதேபோல் மாலை நான்கு மணிக்கு சம்பிரதாய பூஜை ஆறு மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம். ஏழு மணிக்கு அதிஷ்டான பூஜை. ஏழரை மணிக்கு டோலோற்சவம். இதுதான் போதேந்திரர் அதிஷ்டானத்தின் நித்திய வழிபாடு. சுமார் 40 பசுக்களை வைத்து ஒரு கோ சாலையையும் பராமரித்து வருகிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் பால், அதிஷ்டானத்தின் பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி. திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமியின் அர்த்தஜாம பூஜைக்கும் செல்கிறது. கலியில் நாம சங்கீர்த்தனம்தான் கதி. நமக்கு பக்தி. ஞானம், விரக்தி, கர்மயோகம், சிரத்தை, தபஸ், நன்னடத்தை சக்தி இப்படி எது இல்லாவிட்டாலும் அதற்கு காரணம் நம்மிடம் நாம ஜபம் போதவில்லை என்பதே ஆகும். ஏனெனில் நாம ஜபம் பூரணமாக இருந்தால் மேற்சொன்ன யாவும் நம்மிடம் இருக்கும். இந்த வரிகளை போதேந்திரர் அதிஷ்டான கோயிலில் எழுதி வைத்திருக்கிறார்கள். உண்மைதான்! கலியில் மோட்சத்தை அடைய இறை நாமம் ஒன்றே சிறந்தது என்பது ஆன்மிக மேன்மக்களால் சொல்லப்படுகிறது.
நாம ஜபத்தில் பேதமில்லை. அவரவர்கள் தங்களுக்குப் பிடித்தமான நாமத்தை ஜபம் செய்து வரலாம். இதற்கு விதிகளும் நியமமும் இல்லை. ஆசாரம் இல்லை; அனுஷ்டானமும் இல்லை. பூஜையறை வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எந்த சந்தர்ப்பத்திலும் எத்தகைய நிலையிலும், ஆசாரம் குறைவாக இருந்தாலும், ஆண்-பெண் ஆகிய இரு பாலாரும் தங்களுக்கு வசதியான நேரங்களில் பகவன் நாமத்தை ஜபித்துக்கொண்டே இருக்கலாம். இதற்கான புண்ணியமும் பலனும் வார்த்தைகளில் வர்ணிக்க இயலாதவை.