வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!
இந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது பரமசிவன் கழுத்தில் இருந்தால் கருடனால் நெருங்க முடியுமா! அதுபோல் தான் ஊரில் எத்தனை யானை இருந்தாலும், ஐராவத யானை வெள்ளை நிறம் என்பதால், அதற்கு மிகவும் கர்வம்.அகம்பாவிகளுக்கு என்றாவது ஒருநாள் அடி விழும். அப்படி ஒரு சோதனை ஐராவதம் யானைக்கும் ஏற்பட்டது. இந்திரன் தேவலோகம் வந்ததும், அவனை ஏற்றிக் கொண்டு இந்திரபுரிக்குள் அட்டகாசமாக நுழைந்தது. துர்வாசர் என்ற மகரிஷி இருந்தார். அவருக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம். சிறிது பிசகலாக பேசினாலோ, நடந்தாலோ கூட மூக்கு மேல் கோபம் வந்துவிடும். அப்படிப்பட்ட கோபக்காரரிடம் அந்த யானை மாட்டிக் கொண்டது. அன்று துர்வாசர் சிவபெருமானை மலர் தூவி வணங்கினார். அவரது பக்திக்கு மகிழ்ந்த ஈசன், தன் ஜடையில் இருந்த பொற்றாமரை ஒன்றை கீழே விழும்படி செய்தார். இறைவன் தந்த அந்த பிரசாதத்தை எடுத்து முனிவர் தன் கமண்டலத்தில் வைத்துக் கொண்டார். இந்திரனை தேவர்கள் ஆரவாரமாக அழைத்து வந்து கொண்டிருந்தனர். இவ்வளவு அடிபட்டும் இந்திரனுக்கு அலட்சிய குணம் மட்டும் மாறவில்லை. மேலும் விருத்திராசுரனையே வென்று விட்டோமே என்ற மமதையுடன் வந்தான். எதிரே வந்த துர்வாசர், அவன் நீடுழி வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் கமண்டலத்தில் இருந்த பொற்றாமரையை அவனிடம் கொடுத்தார். பிரசாதம் வாங்கும் போது பணிவு வேண்டும்.
இந்திரன் சற்றும் பணிவின்றி அந்த தாமரையை அலட்சியமாக வாங்கி அதை யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். யானை அதை தும்பிக்கையால் எடுத்து கால்களில் போட்டு மிதித்து விட்டது. துர்வாசர் நெருப்பு பொங்கும் கண்களுடன் இந்திரனையும், யானையையும் பொசுக்கி விடுவது போல பார்த்தார். தேவேந்திரா... என்று அவர் கோபத்தில் எழுப்பிய சப்தம் அந்த பிரதேசத்தையே கிடுகிடுக்கச் செய்தது. விட்டது வினை என்று இங்கு வந்தால் இந்த துர்வாசரிடம் சிக்கிக் கொண்டோமே என்று இந்திரன் நடுங்கினான். அவன் எதிர்பார்த்தபடியே துர்வாசர் சாபமிட்டார். ஏ இந்திரா! கடம்பவன நாதனான எம்பிரானின் பிரசாதத்தையா அலட்சியம் செய்தாய்! அதை மரியாதையுடன் பெற்றிருந்தால், உன் நிலையே வேறு விதமாக இருந்திருக்கும்! ஆனால், கேடு கெட்ட இந்த யானையிடம் கொடுத்தாய். அது காலில் போட்டு மிதித்தது. தேவனாகிய நீ பூலோகத்தில் பாண்டிய மன்னன் ஒருவனிடம் தோற்றுப் போவாய். அவனுடைய சக்கராயுதம் உன் தலையைக் கொய்து விடும், என்றார். தேவேந்திரனும் தேவர்களும் நடுங்கி விட்டனர். யானையில் இருந்து குதித்த இந்திரன், ஐயனே! அறியாமல் செய்த பிழையை மன்னிக்க வேண்டும். ஏற்கனவே பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு பல்லாண்டுகள் பூலோகத்தில் வாடிக்கிடந்த நான் மீண்டும் பூலோகம் செல்வதா? அதிலும், ஒரு மானிடனிடம் தோற்றுப்போவதா? ஐயோ! இதை விட வேறென்ன கொடிய தண்டனையை நான் பெற முடியும்? தவங்களில் சிறந்தவரே! என்னை மன்னியும், என்றான். தேவர்கள் எல்லாருமே கிரீடங்கள் தலையில் பதியும்படி அவர் காலில் விழுந்து கிடந்தனர்.
துர்வாசர் இதுகண்டு மனம் மாறினார். கோபம் உள்ள இடத்தில் தானே குணமும் இருக்கும்! அவர் இந்திரனிடம், இந்திரா! கொடுத்த சாபத்தை திரும்பப் பெற இயலாது. இருப்பினும், பாண்டிய மன்னன் பயன்படுத்தும் சக்ராயுதம் உன் தலையைக் கொய்ய வரும்போது, அது உன் கிரீடத்தை மட்டும் பறித்துச் செல்லும் நிலை வரும். தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும், என்றவர் யானையைப் பார்த்தார். ஏ ஐராவதமே! பெரியவர்களிடம் பணிபுரிபவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கு உன் வாழ்க்கை இந்த உலகத்துக்கு பாடமாக இருக்க வேண்டும். உன் வெள்ளை நிறம் அழிந்து போகும். தேவலோக யானையான நீ, பூலோகம் சென்று காட்டுக்குள் பிற யானைகளுடன் கலந்து, புழுதி படிந்து நூறாண்டு காலம் திரிவாய். பின்னர், இந்திர லோகத்தை அடைவாய், என சாபமிட்டார். வெள்ளை யானை கண்ணீர் வடித்தது. பின்னர் அது பூலோகம் வந்து பல இடங்களிலும் சுற்றித் திரிந்தது. ஒருவழியாக நூறாண்டுகள் கடந்தன. பல வனங்களில் சுற்றிய அந்த யானை, கடம்ப வனத்துக்குள் புகுந்தது. அதுவே இந்திரனால் உருவாக்கப்பட்ட மதுரையம்பதி. அங்கிருந்த சொக்கலிங்கத்துக்கு அது பொற்றாமரைக் குளத்தில் இருந்து தும்பிக்கையில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தது. தங்கத் தாமரைகளைப் பறித்து வந்து தூவி வழிபட்டது. அந்த யானையின் மீது இரக்கம் கொண்ட சொக்கநாதர் அதன் முன் தோன்றினார். ஐராவதமே! நீ செய்த சிவஅபச்சாரம் நீங்கியது. நீ இந்திரலோகம் திரும்பலாம்,என்றார். யானை சிவனிடம், எம்பெருமானே! இந்த வனத்தின் அழகில் நான் மெய்மறந்து விட்டேன். மேலும் தங்களைப் பிரிய எனக்கு மனமில்லை. நான் இந்த வனத்திலேயே இருக்கிறேனே! தங்கள் விமானத்தை (கருவறைக்கு மேலுள்ள கோபுரம் போன்ற அமைப்பு) தாங்கும் யானைகளில் ஒன்றாக என்னையும் கொள்ள வேண்டும், என்றது. சிவபெருமான் அதனிடம், ஐராவதமே! இந்திரன் எனது பக்தன். அவனைச் சுமந்தால் என்னையே சுமப்பது போலாகும். நீ இந்திரலோகத்திற்கே செல், என்றார். மேலும், அதன் சுயவடிவத்தையும் தந்தார்.அந்த யானைக்கோ கடம்பவனத்தை விட்டு செல்ல மனமில்லை. அது கடம்பவனத்தின் ஒரு பகுதிக்குச் சென்று அங்கிருந்த ஒரு லிங்கத்திற்கு பூஜை செய்து அங்கேயே தங்கி விட்டது. வெள்ளை யானை வந்து தங்கிய அந்த இடத்துக்கு அதன் பெயரான ஐராவதநல்லூர் என்று அமைந்தது. பின்னர், இந்திரன் அந்த யானை பற்றி அறிந்து வந்து அதை அழைக்க வந்தான். சிவபெருமானிடம் யானையின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தான் எழுப்பிய விமானம் தன் பெயரால் இந்திர விமானம் என அழைக்கப்பட வேண்டும் என்றும், வெள்ளை யானை தன்னைத் தாங்குவது போல், அந்த விமானத்தையும் ஐராவதமே எட்டு வடிவங்களில் தாங்குவது போன்ற தோற்றம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அதன்படியே, எட்டு வெள்ளை யானைகள் மதுரை சொக்கநாதரின் விமானத்தை தாங்கியுள்ள காட்சியை இப்போதும் காணலாம்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
சனி, 9 நவம்பர், 2024
வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக