வியாழன், 7 நவம்பர், 2024

பிள்ளை லோகாச்சாரியார்...

பிள்ளை லோகாச்சாரியார் தியாகம்!


முடும்பைக் குலத்தில், ஸ்ரீவத்ஸ கோத்திரத்தில், ஐப்பசி, திருவோணத்தில் பிறந்தவர் பிள்ளை லோகாச்சாரியார். இவரது குரு, ஸ்வாமி நம்பிள்ளை. இவர் திருவரங்கத்தில் வாழ்ந்து வந்த காலத்தில் முகம்மதியர்கள். அத்தலத்தின் மீது படையெடுத்துக் கோயில்களைத் தகர்த்தனர்.

ஆசார்ய பீடத்தை அலங்கரித்த இவர், தமக்கு அதிக வயதானபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல் தாமே முன்னின்று திருவரங்கன் சன்னிதியை சுவர் எழுப்பி மறைத்து, உத்ஸவ ரோடு காட்டு வழியே சென்றார். வழியில், கள்ளர்கள் தொல்லையைப் பொறுத்து அவர் களிடம் நயமாகப் பேசி அவர்களின் மனதை மாற்றினார்.

அப்போது, கி.பி.1323ஆம் ஆண்டு. அழகிய மணவாளரை சுமந்து வந்த கூட்டம் உத்துங்கவன க்ஷேத்திரத்தை நெருங்கியது. மதுரை நகருக்குச் சிறிது தொலைவில் உள்ள இடம் அது. பிரம்மா தவமியற்றிய பதி. ஹயக்ரீவராய் தோன்றி நான்முகனிடம் வேதங்களை ஒப்படைத்த வேதநாராயணப் பெருமாள் எழுந்தருளிய க்ஷேத்திரம். ஆனைமலையின் வடகோடியில் மலையடிவாரத்தில் உள்ள ஸ்தலம். பிரம்மா நித்ய கர்மானுஷ்டங்களுக்காக ஏற்படுத்திய பிரம்ம தீர்த்தத்தில் நீராடினார் பிள்ளை லோகாச்சாரியார். புராணங்கள் இந்த இடத்தை 'ஜ்யோதிஷ் குடி என்கின்றன.


பிரம்மா தபோவனமான இப்பகுதியை, தற்போது கொடிக்குளம் என்கின்றனர். அங்கு அருளும் நின்ற கோல வேதநாராயணப் பெருமாளை தரிசித்த ஆச்சாரியார், 'என்னைப் படைத்ததற்காகத் தாங்கள் பெருமை கொள்ளும்படி அனுக்கிரகிக்க வேண்டும்" எனப் பிரார்த்தித்தார்.

பெருமாள் சன்னிதியின் பின்பக்கம் ஒரு குகை இருந்தது. அழகிய மணவாளரையும், உபய நாச்சியார்களையும் அங்கே எழுந்தருளச் செய்து நித்திய ஆராதனைகளை நடத்தி வந்தார் ஆச்சாரியார். மூன்றாண்டுகள் கழிந்தன.

ஒரு நாள் அந்நியப் படையெடுப்பாளர்களால் மதுரை மீனாக்ஷி ஆலயம் தாக்கப்படுவதாக அவருக்குச் செய்தி வந்தது. உடனே, அவர் தமது முதுகில் நம் பெருமாளைக் கட்டிக்கொண்டு மலையின் மீது ஏறி  மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றிக் கழித்தார்.


மூன்று தினங்கள் மலையின் மீது கழித்த அவர், நெஞ்சின் மீது நம்பெருமாளை இறுகப் பிணைத்துக்கொண்டு, 'நீயே துணை' என்று கூறியவாறு ஆலமர விழுதைப் பிடித்துக்கொண்டு கீழிறங்கினார்.
பகிர்வுஸ்ரீராமஜயம்

சதுர்முகன் அவர் பிரார்த்தனையை நிறைவேற்ற முடிவு செய்திருக்க வேண்டும். விழுது அறுந்து விழத் தொடங்கியது. பெருமாள் திருமேனியில் அடிபடக் கூடாதென்று மல்லாந்தபடி விழுந்தார் ஆசாரியார். அவர் கீழே விழுவதைப் பார்த்த ஊரார், ஓடி வந்து அவரைத் தூக்கினர். அவர் நெஞ்சோடு தழுவிக் கொண்டிருந்த நம்பெருமாள் விக்ரஹத்தைத் தனியே எடுத்து வைத்துவிட்டு, அவர் உடல் காயங்களுக்கு மருந்திட்டனர்.

இன்னொரு முறை இப்படியொருவர் உதிப்பாரா இம்மண்ணில்! மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஆறு கி.மீ., தொலைவில் உள்ளது வேதநாராயணர் ஆலயம். 'கொடிக்குளம் பேருந்து நிறுத்தம்' என்று கேட்டு இறங்க வேண்டும். அங்குள்ள மருத்துவக் குணமுடைய பிரம்ம தீர்த்தம், ஆனைமலையின் கீழே பாறை அடியில் சுனையாகப் பெருகி வருகிறது. (அர்த்தமண்டபத்தோடு அமைந்த கருவறை) பிள்ளை லோகாச்சாரியாரின் தியாகம் சிரஞ்சீவியானது.

 


 

கருத்துகள் இல்லை: