இரட்டை நாயினை வாகனமாக கொண்ட ஒரே பைரவர் தலம் இலுப்பைக்குடி.
மிக பழமையான பைரவர் தலங்களுள் இதுவும் ஒன்று.
காரைக்குடியிலிருந்து மாத்தூர் செல்லும் வழியில் கிட்டதட்ட ஒரு 6 கி மீ தொலைவில் (அரியக்குடி அருகில்) இலுப்பைக்குடியில் உள்ளது ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் கோவில்.
இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த ஸ்தலம் என்பதால் இலுப்பைக்குடி என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.
சித்தர்களில் ஒருவரான கொங்கணர் மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் கோயிலில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார்.
அதனால் மாற்றூர் என்கிற மாத்தூர் இறைவன் பேயர் ஐநூற்றீஸ்வர்.
மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு சிவபெருமானை வேண்டி வேண்டினார்.
சிவன் அவருக்கு காட்சி தந்து இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார்.
பைரவர் இங்கே ஜொலிக்கிறார்.ஒரு கையில் தங்க அட்சயபாத்திரம் ஏந்தி உள்ளார்.
இங்கே வேண்டிக் கொள்ள வீட்டில் ஸ்வர்ணம் பெருகும் என்கிறார்கள்.
இரண்டு நாய்களுடன் காட்சிதருகிறார். பைரவர் சன்னதியில் எந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள். கொஞ்சம் தவத்தில் ஆழ்ந்து சொல்ல சுழலும் ஒரு அலையினை உணரலாம்.
கோவிலின் அம்பாள் சன்னதிக்கு எதிரே ஒரு மிகப்பெரிய குளம் உள்ளது.
பைரவருக்கு அருகே ஒரு சிறிய பலகையில் நாய் உருவம் உள்ளது, நாய்கடி பெற்றவர்கள் இங்கு வந்து இந்த தூணை வளம் வந்து , குளத்தில் நீராடி பைரவரை வேண்ட, பைரவர் விஷதன்மையை முறிப்பதாக சொல்கிறார்கள்.
சுயம்பிரகாசேஸ்வரர், சிவன் மிக சிறியவடிவில் உள்ளார்.தெய்வீகம் நிறைந்த அலைகள் சூழ்ந்துள்ளது.
கோயிலின் முன் மண்டபத்தூணில் ஒரு அங்குல அளவிலான விநாயகர் உள்ளார். கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கிரீடம் அணிந்த நிலையில் உள்ளார். இறைவி சன்னதியின் எதிரில் உள்ள தூணில் வராகி உள்ளார்.
குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, திருமணம் விரைவில் நடைபெற, புத்திர தோஷங்கள் நீங்க இக்கோயிலில் உள்ள பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
சிவன், அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், பைரவருக்கு வடை மாலை அணிவித்தும், விசேஷ பூஜைகள் செய்தும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றுகின்றனர்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
ஞாயிறு, 15 மே, 2022
இரட்டை நாயினை வாகனமாக கொண்ட ஒரே பைரவர் தலம் இலுப்பைக்குடி.
சிவன் தலையில் கங்கை
சிவபெருமானின் தலையில் இருக்கும் கங்கை யார்?
சிவனுக்கு இரு மனைவி என்று யாவரும் கூறுவர். சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம் கேள்வி எழும்.
அன்றைய காலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது, ஆகாய கங்கையாக ஓடி கொண்டி ருந்தது. அப்போது பகீரதன் என்ற அரசன் தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக அதன் வழி தேடி முனிவர்களை எல்லாம் ஒரு உபாதை கூறும்படி கேட்டான்.
முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர், ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அவர்களின் அஸ்தியை அதனில் கரைத்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என்று கூறினார். ஆகையால், பகீரதன் கங்கையை பூமிக்கு அழைக்க கங்கா மாதாவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.
பகீரதனின் கடுந்தவத்தை மெச்சி கங்கா மாதா அரசன் முன் எழுந்தருளினாள். “வேண்டும் வரம் கேள் பகீரதா” என்றாள். “தாயே, நீ அறியாதது எதுவும் இல்லை. என் மூதாதையரின் ஆத்மா சாந்தி அடைய அவர்களின் அஸ்தியை நான் கங்கையில் கரைக்க வேண்டும் என்பது விதி. ஆகாய கங்கையாய் ஓடும் நீ இப்புவியிலும் பெருக்கெடுத்து ஓட வேண்டும். என்னோடு இனி வரும் சந்ததியினரையும் உய்விக்க வேண்டும்.”
”வரம் தந்தேன் பகீரதா, ஆனால் ஒரு நிபந்தனை. நான் என்னுடைய வேகத்தில் இந்த பூமியை நோக்கி வந்தேன் என்றால் இந்த பூமி என் வேகம் தாங்காது வெடித்து சிதறிவிடும். ஆகவே, என் வலிமையை தாங்க கூடிய ஒருவர் என்னை அவர் தலையில் தாங்கி இந்த பூமிக்கு தருவிக்க வேண்டும். நீ தென்னாடுடைய சிவனை நோக்கி தவம் செய். பரமனால் மட்டும் தான்என் வலிமையை தாங்க முடியும்” என்று கூறி மறைந்தாள்.
பகீரதனும் சிவனை நோக்கி தவம் செய்து தான் எண்ணத்தை வேண்டி நின்றான். சிவ பெருமானும் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கையை இறங்க சொன்னார்.
சிவனின் திருமுடியை அடைந்த கங்கா, வேகம் குறைந்து திருமுடியில் இருந்து பூமிக்கு இறங்கினாள். ஆகவே தான், சிவனின் திருமுடியில் கங்கை குடியிருக்கிறாள்.
தங்கம் தோன்றிய கதை பகுதி மூன்று
தங்கம் தோன்றிய கதை 3
வஸிஸ்டர் பரசுராமர் உரையாடல் தொடர்ச்சி ;
தேவர்கள் அனைவரும் அக்னியை தேடி மறுபடியும் அலையத்தொடங்கினார்கள். அக்னி தவளைக்கு சாபம் கொடுத்துவிட்டு அரசமரத்தில் சென்று தஞ்சம் அடைந்தார். அப்போது தேவர்கள் அக்னியை தேடிவர, அங்குள்ள ஒரு யானையானது " அக்னியானார் அரசமரத்தில் இருக்கிறார் " என்று கூறிற்று. உடனே அக்னியனவர் யானைக்கு " உனது நாவானது தலைகீழாக மாறிப்போகும்" என்று சாபம் கொடுத்து விட்டு அரசமரத்தில் இருந்து வன்னிமரத்தில் புகுந்தார்.
தேவர்கள் தனக்கு உதவி செய்த யானைக்கு வரம் அளித்தனர். யானைகளே! மாறிப்போன நாவினாலும் எல்லா ஆகாரங்களையும் உண்பீர்கள். எழுத்துக்களில் தெளிவில்லாமலே உரத்தகுரலால் வாக்கை சொல்வீர்கள் என்று வரம் தந்து அக்னியை தொடர்ந்தனர்.
பின்பு வன்னிமரத்தில் புகுந்த அக்னியை ஒரு கிளியானது தேவர்களுக்கு காட்டிக்கொடுக்க மீண்டும் அக்னியானவர் கிளிக்கு வாக்கில்லாமல் போவாய் என்று சபித்தார். அதுகண்ட தேவர்கள் கிளிக்கு " நீ! அடியோடே வாக்கில்லாமல் போக மாட்டாய், உன் பேச்சு வளர்ந்த குழந்தையின் பேச்சு போல தெளிவில்லாமலே அழகாக இருக்கும் " என்று வரமளித்தனர்.
( இதுதான் கிளிபேச்சுன்னு சொல்வது).
உடனே தேவர்கள் அக்னியை வன்னிமரத்தில்கண்டு ,அந்த வன்னிமரத்தையே எல்லா கிரியைகளுக்கும் அக்னிஸ்தானமாக செய்தனர். அப்போது முதல் அக்னியானது வன்னிமரத்தில் காணப்படுகிறது.
பிறகு தேவர்கள் அக்னியிடம் உமாதேவியின் சாபம் மற்றும் தாரகன் வதம் பற்றி கூறி வேண்டிக்கொள்ள, அக்னியானவன் கங்கையின் இடத்திற்க்கு சென்று அங்கே கங்கையுடன் சேர்ந்து கர்ப்பத்தை உண்டு பண்ணினார்.கங்கை அக்னியின் வீரியத்தால் மயக்கமுற்று கொடிய தாபத்தை அடைந்து அதை தாங்கமாட்டாமல் போனாள். பின்பு அக்னியிடம் தன்னால் வீர்யத்தை தாங்க முடியவில்லை என்று கூற அக்னி சமாதானம் செய்து கர்பத்தை தாங்கும்படி செய்தார்.
ஆனால் கங்காதேவி , ருத்திரரின் வீர்யமும் கலக்கப்பட்டிருப்பதால் வீர்யத்தை தாங்காமல் மேருமலையில் விட்டாள். பிறகு , அக்னி கங்கையிடம்" உமது கர்ப்பம் ஸுகமாக வளருகிறதா! என்ன குணமுள்ளது ? எவ்வகை நிறமுள்ளது ?என சொல் என்றார்.
அதற்கு கங்கை, குற்றமற்றவனே! அந்த கர்ப்பமானது உன்னை போல பிரகாசமாகவும் தாமரை கடம்ப மலர் போல குளிர்ச்சியாகவும் இருக்கிறது. அது சூரியனொளி சேர்ந்தது போல பொன்மயமாக காணப்படுகிறது. அந்த வீரியமானது மலை அருவி நதியில் பாய்ந்ததால் மூவுலகங்களையும் ஒளியினால் விளங்க செய்கிறது. ஒளியில் உன்னையும் சூரியனையும் போலவும் அழகில் இரண்டாவது சந்திரனை போலவும் இருப்பான் என்றாள். இந்த காரியத்தாலே அக்னிக்கு ஹிரண்யரேதஸ் என்னும் பெயரை கூறுகின்றனர்.
அப்போது அந்த கர்ப்பம் தேவலோகத்தில் நாணல் காட்டை அடைந்தது.அப்போது கிருத்திகை தேவிகள் அன்பு கூர்ந்து முலைப்பால் சுரப்புகளால் வளர்த்தனர். சிறந்த ஒளியுள்ள அந்த குழந்தைக்கு கார்த்திகேயன் என்று பெயர் பெற்றது. ரேதஸ் சிந்தினதால் ஸ்கந்தன் என்றும் குகையில் இருந்ததால் குகன் என்றும் பெயர் பெற்றது. இப்படியாக பொன்னானது அக்னிக்கு பிள்ளையாக பிறந்தது.
பொன்னிலும் ஜாம்பூநதம் என்னும் தங்கம் மிகச்சிறந்தது. அதுவே தேவர்களுக்கு ஆபரணமாகுகிறது. அதனாலே பொன் ஜாதரூபம் என்று சொல்லப்படுகிறது. அது ரத்தினங்களில் பரிசுத்தம். மங்களங்களுக்கு மங்களம். அதனால் பொன் என்பது அக்னி பகவானும் சிவபெருமானும் இருப்பது.
பரிசுத்தங்களில் பரிசுத்தம் கனகமே! தங்கமானது அக்னியும் ஸோமனுமாக இருப்பதென்று சொல்லப்படுகிறது.
இப்படியாக தங்கமானது வியாபித்து நிற்கிறது.
இதே போலவே அக்னியானது அரச, வன்னி மரத்தில் நிலைத்திருப்பதும்.
#தங்கம்
#பரசுராமர்
#வசிஸ்டர்
#பீஷ்மர்
#மஹாபாரதம்
தங்கம் தோன்றிய கதை பகுதி இரண்டு
தங்கம் தோன்றிய கதை - இரண்டு
வஸிஸ்ட பரசுராம உரையாடல்.
வஸிஸ்டர் ; ஹே ராமா! உண்மையை ஆராயுங்கால் அக்னியும் சந்திரனும் சேர்ந்துதான் பொன் என்று அறி.
செம்மறியாடு அக்னி; வெள்ளாடு வருணன்; குதிரை சூரியன் ; யானைகள், மான்கள், ஸர்ப்பங்கள் ,எருமைகள் ஆகிய இவை அஸுரர்கள்.
ப்ருகு புத்திரரே! கோழிகளும் பன்றிகளும் ராக்ஷஸர்கள் ; யஜ்ஞமும் கோக்களும் பாலும் சந்திரனும் பூமி என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
உலகத்தையெல்லாம் கடைந்து ஒர் ஒளிகட்டியான பொன் உண்டாயிற்று. அதுவே சிறந்த ரத்தினம். இதை காரணம் பற்றிதான் தேவர்கள் கந்தர்வர்கள் அரக்கர்களும் மனிதர்களும் பிசாசர்களும் பல அணிகலன்களை கொள்கின்றனர். பொன்னே பூமியையும் கோக்களையும் விட சிறந்த பாவனமாக சொல்லப்படுகிறது. பொன்னை தானமாக கொடுத்தவர் எல்லாம் கொடுத்தவராகிறார். இது அக்னியின் உருவம். மேலும் உனக்கு ஒரு கதை சொல்கிறேன் ...
இது ஸ்வாயம்புமனு புராணகதை சொல்லும் போது நான் கேட்டது. அதை கேள். சிவபகவான் ஆனவர் உமா தேவியை மணம் புரிந்து கையிலையில் இருக்கையில் தேவர்கள் வந்து நமஸ்கரித்து பின்வருமாறு சிவபகவானை பார்த்து கூறலானார்கள். ஓ! தேவரே ! உமக்கு உமாதேவியினடத்தில் சேர்கை உண்டாயிற்று. இருவரும் மிக சிறந்தவர்கள். உமது வீரியம் வீணாகாது. உங்கள் இருவருக்கும் பிறக்கும் சந்ததி மிக்க வலிமையுள்ளதாக இருக்கும் . அதை மீறி ஒன்றும் செய்ய இயலாது. ஆதலால் பிரபுவே ! மூவுல நன்மை கருதி எங்களுக்கு வரம் தாரும்.
நீர் ! இந்த சிறந்த வீர்யத்தை அடக்கும். உங்களிருவருக்கும் பிறக்கும் சந்ததி தேவர்களை அழித்துவிடும். பூமி ஆகாயம் ஸ்வர்கம் ஒன்று சேர்ந்தாலும் உங்கள் இருவரின் வீர்யத்தை தாங்க முடியாமல் அதன் மகிமையால் எரிக்கப்படும் .அதனால் உமக்கு இந்த உமாதேவியினடத்தில் பிள்ளை பிறவாமல் இருக்க வேண்டும் என்றனர். அது கேட்ட சிவபகவான் "அப்படியே ஆகட்டும்" என்று வரம் கொடுத்தலால் அவர் ஊர்த்வரேதஸாக ஆனார்.
ஆனால் கோபம் கொண்ட உமை, என் சந்ததிக்கு கெடுதல் செய்ததால் தேவர்களுக்கு சந்ததி இல்லாமல் போக கடவது என்று சாபமிட்டார். அந்த சாப காலத்தில் தேவர்கள் கூட்டதில் அக்னி மட்டும் இருக்கவில்லை.
( கிளாஸ்க்கு ஆப்செண்ட் ஆயிட்டார் )
அப்போது ருத்திர தேவர் வீர்யத்தை அடக்க அதில் சிறிது சிந்தி பூமியில் விழுந்து அக்னியில் சேர்ந்தது.
இது இப்படி இருக்க , தாரகாசுரனுடைய கொடுமை தாங்காமல் தேவர்கள் பிரம்மதேவரை சரணடைந்தனர். உமாதேவியின் சாபத்தால் வீர்யமிழந்த தேவர்களை கண்டார்.
பிரம்மதேவர், தேவர்களை பார்த்து, தேவர்களே உமையின் சாபகாலத்தில் அங்கு அக்னி இருக்கவில்லை .ஆனால் ருத்திரனுடைய வீர்யம் அக்னியில் கலந்து இரண்டாவது அக்னி போல பெரும் பொருளாயிற்று. அந்த பொருளை அக்னியானவன் கங்கையிடத்தில் உண்டாக்கப்போகிறான். விரைவில் அக்னிபுத்திரன் பிறப்பான். அதனால் அக்னியை தேடி கண்டுபிடியுங்கள் என்று சொன்னார்.அந்த செயலை செய்ய ஊக்குவியுங்கள் என்றார்.
தேவர்கள் அனைவரும் அக்னியை தேடினார். ஆனால் அக்னி தன் தேகத்தை ஜலத்தில் மறைத்து வைத்திருந்தார். அக்னியை தேடி சோர்ந்து வந்த தேவர்களை நோக்கி ஜலத்தில் மறைந்திருந்த அக்னியின் வெப்பம் தாங்கமுடியாமல் இருந்த ஒரு தவளை தேவர்களை பார்த்து கூறலாயிற்று. தேவர்களே ! அக்னிபகவான் தன் ஒளிகளை ஜலத்தில் சேர்த்து அந்த ஜலத்தில் தூங்குகிறான். அவனால் நாங்கள் தாபமுண்டாக்கப்பட்டோம். அதனால் அவரை எழுப்புங்கள். அந்த ஜலத்தில் நாங்கள் வசிக்க இயலவில்லை என்றது.
இப்படியாக தன் இருப்பிடத்தை காட்டிக்கொடுத்து கோள் சொன்ன தவளையை அக்னிபகவான் சபித்தார். ஹே! மண்டூகமே ! நீ சுவைகளை அறியாமல் போவாய் என்று கூறி வேறு இடம் சென்றார்.
( இப்படி அடுத்தவங்களை காரண காரியம் இல்லாமல் கோள் சொன்னால் கடைசிகாலத்தில் உண்ணும் உணவின் சுவையறியாமல் வாக்கு தடுமாறி நோயுறுவர் என்பது விதி)
ஆனால், தனக்கு உதவி செய்த தவளைக்கு தேவர்கள் வரம் அளித்தனர். அக்னியின் சாபத்தால் சுவை மறந்தாலும் அனேக வித வாக்குகளை உச்சரிப்பீர்கள். நீங்கள் வளைக்குள் உணவே உயிரோ பிரஜ்ஞையில்லாமல் இருந்தால் இந்த பூமியே உங்களை காப்பாற்றும். இருள் மூடின இரவிலும் சஞ்சரிப்பீர்கள் என்று தவளைக்கு வரமளித்து மீண்டும் அக்னியை தேடிச்சென்றனர்.
( இதனால் தான் தவளைகளின் வாக்கு பலவிதமாக உள்ளது ,அதனால் மழையையும் வருவிக்கின்றது).
#மஹாபாரதம்
#தங்கம்
#அக்னி
இந்த கதை முதலில் பீஷ்மருக்கும் யுதிஷ்டிரருக்கும் ஏற்பட்ட உரையாடலில் பீஷ்மர் வஸிஸ்டருக்கும் பரசுராமருக்கும் நடந்த உரையடலை யுதிஷ்டிரருக்கு சொல்ல தொடங்கினார். அங்கே வஸிஸ்டர் பரசுராமருக்கு ஸ்வாயம்பு மனு தனக்கு (வஸிஸ்டர்) சொன்னதாக ஒரு கதை சொல்ல தொடங்கி உள்ளார்.
ஒரு மெயின் கதையில் உள்ள இரண்டாவது கிளைகதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
தேவர்கள் அக்னியை கண்டுபிடித்தாரா இல்லையா என்று ஒரு சின்ன commercial breakக்கு அப்பறம் நாளை பார்க்கலாம்.
ராம ராம ராம ராம
தங்கம் தோன்றிய கதை பகுதி ஒன்று...
தங்கம் தோன்றிய கதை -1
இது மூன்று பாகங்களாக வெளிவரும். அதனால் PL stay tuned with me...
பீஷ்ம யுதிஷ்டிர சம்வதே...
யுதிஷ்டிரர் : பிதாமஹ! எல்லா கர்மங்களுக்கும் எல்லா யாகங்களுக்கும் பூமி, பசு, பொன் இவைகளை தட்சிணை என்று சொல்கிறார்கள். அதில் பொன்னே முக்கியமாகவும் சிறந்த பரிசுத்தமாகவும் பசு ,பூமியை காட்டிலும் சிறந்ததாக உள்ளது. பொன் என்பது எது? அது எக்காலத்தில் உருவானது? எவ்வுருவமானது? அதன் தேவதை மற்றும் பலனென்ன ? இது எதனால் சிலாகித்து சொல்லப்படுகிறது என்று கூறும்!!!...
பீஷ்மர் : அரசனே! கேள் ! நான் எனது தந்தை சந்தனு மஹாராஜா மரணமடைந்த போது சிராத்தம் கொடுப்பதற்காக கங்கையின் உற்பத்திக்கு போனேன். அப்போது என் தாயாகிய கங்கையும் உதவி செய்தாள். அப்போது அங்கு வந்த பல ரிஷிகளை அமர வைத்து தர்ப்பண முதலிய கர்மங்களை தொடங்கினேன். முதல் கருமத்தை முடித்து பின்பு பிண்டதானம் செய்ய தொடங்கினேன்.
அரசனே! அப்போது பூமியில் இருந்து அழகான தோள் வளையையும் தொங்குகின்ற அணிகளையுமுடைய ஒருகை அந்த பரப்பின தர்பங்களை(தர்பை) ஒதுக்கி கொண்டு கிளம்பிற்று. அதை பார்த்து என் பிதாவே நேரில் வாங்கி கொள்கிறார் என்று சற்று நேரம் ஆச்சர்யமுற்றேன். அதன் பிறகு சாஸ்திரத்தை ஆராயும் போது எனக்கு திரும்பவும் வேறு எண்ணமுண்டாயிற்று..
(இப்படி நடந்திருந்தா... நாமளா இருந்தா சாஸ்திரத்தை காத்துல விட்டிருப்போம்...ஆனா பெரியவங்க அதை செய்யவே இல்லை...)
பிதாவின் கையில் பிண்டதானம் செய்யவேண்டும் என்ற விதி வேதங்களில்லை. மனிதன் கொடுக்கும் பிண்டத்தை பித்ருகள் நேரே வாங்குவதுமில்லை. தர்பங்களில் தான் பிண்டம் கொடுக்கவேண்டும் என்பதுதான் விதிக்கப்பட்டுள்ளது என்ற புத்தி உண்டாயிற்று. அதனால், சாஸ்திரத்தை மீறாமல் பிண்டத்தை தர்பங்களில் வைத்தேன். அதன் பிறகு என் தந்தையின் கை மறைந்தது.
பிறகு, என் கனவில் பித்ருக்கள் தோன்றினர். அவர்கள் என்னை பார்த்து "பரதஸ்ரேஷ்டனே! நீ தர்ம காரியத்தில் மயங்காமல் இருக்கிறாய்" இந்த நல்லறிவால் திருப்தி அடைந்தோம்.
(PL note , பிண்டத்தால் மட்டும் இல்லாமல் பித்ருகள் நம்முடைய நல்ல அறிவாலும் திருப்தி அடைகிறார்கள்)
நீ சாஸ்திர பிரகாரம் செய்ததால் உன்னுடைய தர்மமும் ஆத்மாவும் சாஸ்திர வேதங்களும் பிரம்மதேவரும் ரிஷிகளும் நம்பும்படி செய்யப்பட்டு அசைக்கப்படாமல் நிலை பெற்றனர். நீ நல்ல காரியம் செய்தாய். ஆனால், பூமிக்கும் பசுக்களுக்கும் பிரதியாக பொன்னை (தங்கம்) தானமாக கொடுக்கவேண்டும். இப்படி செய்தால் நாமும் நம்முடைய முன்னோர்களும் பரிசுத்தராவோம். பிறகு நான் கண் விழித்தவுடன் பொன்னை கொடுப்பதில் எண்ணம் வைத்தேன்.
இந்நிலையில், நான் உனக்கு பரசுராமரை பற்றியும் கூற விழைகிறேன். பகவான் பரசுராமர் பூமியை வென்ற பிறகு அசுவமேத யாகம் செய்ய விழைந்தார். அந்த யாகத்தால் சத்திரியர்களை அழித்த பாபம் விலகினாலும் அதை பரசுராமர் மனம் ஏற்க்கவில்லை. மனம் லேசாயிருப்பதாக உணரவில்லை. அதனால் அந்த மஹாத்மா ரிஷிகளிடம் சென்று கேட்டார்.
அந்த ரிஷிகள் , ஓ! (பரசு) ராமரே! எதை தானம் செய்தால் நீ பரிசுத்தம் ஆவாய் என்பதை கூறுகிறோம். பசுக்களையும் பூமியையும் கொடுத்தால் ஒருவன் பரிசுத்தன் ஆவான். மேலும் சிறந்த பாவனமாகிய மற்றொரு தானத்தை பற்றியும் கூறுகிறோம் . தேவர்களுக்குரியதும் மிக்க ஆச்சர்யமான உருவமுள்ளதும் அக்னியில் பிறந்ததுமாகிய ஸ்வர்ணமென்று பெயர் பெற்ற ஒரு பொருள் முற்காலத்தில் தன் சக்தியினால் உலகை எரித்து கிளம்பியது. அதனால் அதை கொடுப்பவன் பயன் பெறுவான் என்றனர்.
பிறகு அந்த ரிஷிகூட்டத்தில் நடுவில் இருந்த பரசு ராமரை பார்த்து வசிஷ்டர் கூறலானார், (பரசு)ராமா! அனலுக்கொப்பான ஒளியுள்ள பொன்னானது எப்படி உண்டானது என்பதை கேளும். அது நீர் நினைத்த பலன் கொடுக்கும். இவ்வுலகில் தானத்திற்க்கு முக்கியமாக சொல்லப்படுகிறது.
சிறந்த கைகளையுடயவனே! ஸ்வர்ணமானது எங்கிருந்து வந்தது எப்படி குணங்களில் சிறந்ததானது என்பதை கூறுகிறேன்...... என்று கூறலானார்.
தொடரும்...
27 நட்சத்திரத்திற்குரிய கடவுள்கள்
உங்கள் நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம் தெரியுமா? 27 நட்சத்திரத்திற்குரிய கடவுள்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய கடவுள் யார்? அந்த நட்சத்திரத்தில் வேறு யாரெல்லாம் பிறந்துள்ளார்கள் என்பதை அறியலாம்
*அஸ்வினி நட்சத்திரத்தில் அஸ்வத்தாமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீசரஸ்வதி தேவி.
*பரணி நட்சத்திரத்தில் துரியோதனன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீதுர்கா தேவி.
*கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகேயன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் முருகப் பெருமான்.
*ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் மற்றும் பீமசேனன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீகிருஷ்ணன்.
*மிருகசீரிடம் நட்சத்திரத்தில் புருஷமிருகம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான்.
*திருவாதிரை நட்சத்திரத்தில் கருடன், ருத்ரன், ஆதிசங்கரர் மற்றும் ராமானுஜர் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான்.
*புனர்பூசம் நட்சத்திரத்தில் ராமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீராமர்.
*பூசம் நட்சத்திரத்தில் பரதன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
*ஆயில்யம் நட்சத்திரத்தில் தர்மராஜா,லக்ஷ்மணன்,சத்ருகணன் மற்றும் பலராமன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத் தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஆதிசேசன் .
*மகம் நட்சத்திரத்தில் சீதை, அர்ச்சுணன் மற்றும் யமன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீசூரிய பகவான்.
*பூரம் நட்சத்திரத்தில் பார்வதி,மீனாட்சி மற்றும் ஆண்டாள் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஆண்டாள் தேவி.
*உத்திரம் நட்சத்திரத்தில் மஹாலக்ஷ்மி மற்றும் குரு பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமகாலட்சுமி தேவி.
*அஸ்தம் நட்சத்திரத்தில் நகுலன்-சகாதேவன், மற்றும் லவ-குசன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீகாயத்ரி தேவி.
*சித்திரை நட்சத்திரத்தில் வில்வ மரம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீசக்கரத்தாழ்வார்.
*சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மர் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீநரசிம்மமூர்த்தி.
*விசாகம் நட்சத்திரத்தில் கணேசர் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமுருகப் பெருமான்.
*அனுசம் நட்சத்திரத்தில் நந்தனம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீலட்சுமி நாரயணர்.
*கேட்டை நட்சத்திரத்தில் தர்மன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீவராஹ பெருமாள்.
*மூலம் நட்சத்திரத்தில் அனுமன் மற்றும் ராவணன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஆஞ்சநேயர்.
*பூராடம் நட்சத்திரத்தில் பிரகஸ்பதி பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஜம்புகேஸ்வரர்.
*உத்திராடம் நட்சத்திரத்தில் சல்யன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீவிநாயகப் பெருமான்.
*திருவோணம் நட்சத்திரத்தில் வாமனன், விபீசனன் மற்றும் அங்காரகன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஹயக்கிரீவர்.
*அவிட்டம் நட்சத்திரத்தில் துந்துபி வாத்தியம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள்.
*சதயம் நட்சத்திரத்தில் வருணன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் .
*பூரட்டாதி நட்சத்திரத்தில் கர்ணன், மற்றும் குபேரன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஏகபாதர்.
*உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஜடாயு மற்றும் காமதேனு பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமகாஈஸ்வரர்.
*ரேவதி நட்சத்திரத்தில் அபிமன்யு மற்றும் சனிபகவான் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஅரங்கநாதன்
தசரத மன்னன் இயற்றிய சனி பகவான் ஸ்தோத்திரம்
தசரத மன்னன் இயற்றிய சனி பகவான் ஸ்தோத்திரம்
""""""""""""""""""""""""""
தசரத மகாராஜா அயோத்தியை ஆண்ட வேளை அது. அப்போது சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தை கடக்க இருந்தார். இதனால் தேசத்துக்கு ஆபத்து வரும் என்று மந்திரி பிரதானிகளெல்லாம், தசரதரிடம் முறையிட்டனர். என் தேசத்துக்கு ஒரு கிரகத்தால் ஆபத்தா? அதைத் தடுத்து என் மக்களைக் காப்பாற்ற அதற்காக என்ன விலையும் கொடுப்பேன்?' என்று ஆர்த்தெழுந்தார் தசரதர். உடனே தன் பறக்கும் தேரை எடுத்தார். வில் அம்பு ஏந்தி சனியின் லோகத்திற்கே சென்று விட்டார். அதிர்ந்து போனார் சனீஸ்வரர்.
""என்னைப் பார்த்தாலே எல்லாரும் ஓடும் வேளையில் நீர் இங்கே வந்திருக்கிறீரே! யார் நீர்? எப்படி வந்தீர்! எதற்காக வந்தீர்?'' என்று கேள்விகளை அடுக்கினார் சனீஸ்வரர். சனீஸ்வரரே! உம் மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை. உம்முடைய கிரக சஞ்சாரத்தால் எமது தேசத்துக்கு ஆபத்து என்று மந்திரிகள் உரைத்தார்கள். அதைத் தடுக்கவே உம்மைத் தேடி வந்தேன் என்றார் தசரதர்.
சனீஸ்வரர் மகிழ்ந்து போனார். தசரதரே! என் கிரக சஞ்சார காலத்தில் எவரொருவர் பொதுநலன் கருதி பணி செய்கிறாரோ பிறருக்கு நன்மை செய்கிறாரோ கடமையைக் கருத்துடன் செய்கிறாரோ... அவர்களை நான் அண்டவே மாட்டேன். மக்களுக்காக இங்கே வந்து என்னுடன் போரிடவே துணிந்து விட்ட உம்மை வாழ்த்துகிறேன். உம் தேசத்தை ஏதும் செய்ய மாட்டேன் என்றார். தசரதர் மகிழ்ந்தார். தனக்கு அருள் செய்த சனீஸ்வரரை நோக்கி ஸ்லோகங்களால் அர்ச்சித்தார். அந்த ஸ்லோகங்களின் தமிழாக்கத்தை தந்துள்ளோம். இதைப் பக்தியுடன் படிப்பதுடன் பிறருக்கு நன்மையும் செய்தால் ஏழரை, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டகச்சனியால் பீடிக்கப்படும் ராசியினருக்கு நிவாரணம் கிடைக்கும்.
ரவுத்திரன், இந்திரியத்தை அடக்குபவன், பப்ரு, கிருஷ்ணன், சனி, பிங்களன், மந்தன், சூரியபுத்திரன் என்னும் பலவித திருநாமங்களை கொண்ட சனீஸ்வரரே! சகல பீடைகளையும் போக்குபவரே! சூரிய புத்திரரே! உமக்கு நமஸ்காரம்.
கெட்ட ஸ்தானங்களில் இருக்கும் போது தேவர்கள், அசுரர்கள், கிங்கரர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், பன்னகர்கள் முதலியோரையும் துன்புறுத்தும் சூரியனின் மைந்தனே! உம்மை வணங்குகிறேன்.
மனிதர், அரசர், பசுக்கள், சிங்கங்கள், காட்டிலுள்ள புழுக்கள், பறவைகள், வண்டுகள் முதலிய அனைத்துமே உம்மால் பீடிக்கப்படுகின்றன. அத்தகைய சக்தி படைத்த சனீஸ்வரரே! உமக்கு என் வணக்கம்.
நீங்கள் கெட்ட ஸ்தானத்தில் இருக்கும் காலத்தில் நாடு, நகரம், காடு, படை என அனைத்தும் துன்பத்திற்கு ஆளாகின்றன. அத்தகைய
ஆற்றல் மிக்க சக்தி படைத்தவரே! உம்மைப் போற்றுகிறேன்.
சனிக்கிழமையில் எள், உளுந்து, சர்க்கரை அன்னம் இவற்றை தானம் அளிப்பதாலும், இரும்பு, கருப்பு வஸ்திரம் இவற்றை தர்மம்
செய்வதாலும் மகிழ்ச்சி அடைபவரே! சூரிய குமாரனே! உம்மைத் தியானிக்கிறேன்.
சூட்சும வடிவிலும், பிரயாகை என்னும் திருத்தலத்திலும், யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிக்கரைகளிலும், குகைகளிலும் இருக்கும் யோகிகளின் தியானத்திற்கு காரணமானவரே! உம்மை வணங்குகிறேன்.
சனிக்கிழமையில் வெளி இடத்தில் இருந்து தன் வீட்டை அடைபவன் சுகம் அடைவான். சனியன்று வீட்டை விட்டுக் கிளம்ப முடிவெடுத்திருப்பவர், திரும்பவும் அந்த செயலுக்காக செல்லும் தேவை உண்டாகாது. (அதேநாளில் அந்தச் செயல் வெற்றிகரமாக முடிந்து விடும்) இத்தகைய சக்தியைத் தந்துள்ள சனீஸ்வரரே! உம்மைப் போற்றுகிறேன்.
படைப்புக் கடவுளான பிரம்மாவாகவும், காத்தல் கடவுளான விஷ்ணுவாகவும், சம்ஹாரம் செய்யும் சிவனாகவும், ரிக், யஜூர், சாம வேதங்களின் வடிவமாகவும் விளங்குபவரே! உம்மை வணங்குகிறேன்.
திருக்கோணத்தில் இருப்பவரே! பிரகாசம் மிக்கவரே! கருப்பு நிறம் உடையவரே! பயங்கரமானவரே! அழிவைச் செய்பவரே! அடக்குபவரே! சூரியனின் மகனே! ராசிகளில் தாமதமாக சஞ்சரிப்பவரே! மந்த கதி உள்ளவரே! பிப்பலாதரால் துதிக்கப்பட்டவரே! இந்த திருநாமங்களால், காலையில் எழுந்ததும் சொல்லி உம்மை வணங்குபவர்க்கு தோஷம் நீங்குவதோடு சகல சவுபாக்கியமும் தர வேண்டும்.
* சனீஸ்வரரே! தசரதனாகிய என்னால் பாடப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலை வேளையில் நீராடி மனத்தூய்மையுடன் சொல்பவர்களுக்கு, நல்ல குழந்தைகள், பசுக்கள்,செல்வம், சொந்தபந்தம் என சகல சவுபாக்கியத்துடன் வாழும் பேறைத் தர வேண்டும். வாழ்வுக்குப் பின், மோட்சம் அளிக்க வேண்டும்.
மாம்பழ கவிச்சிங்கர் நாவலர்
மாம்பழக் கவிச்சிங்கம் நாவலர்...
கண் இழந்தவரான இவர், அதீத முருக பக்தர்.
சேய் தொண்டர்களில் ஒருவர்.
பழனியில் வாழ்ந்த முத்தையா
இவர் சிற்பி
இவரின் மகனே மாம்பழக் கவிச்சிங்கம்.
முத்தையா ஆசாரி – அம்மணியம்மாள் தம்பதிக்கு 1836 இல் கவிராயர் பிறந்தார்.
இவரது இயர் பெயர் பழனிச்சாமி.
மாம்பழம்
என்னும் பட்டம் அவர்க்கு முந்திய தலைமுறையினர் திருமலை மன்னரிடம் பெற்றதாகும்.
செல்லமாக அவரது பெற்றோர் மாம்பழம் என அழைத்தனர்.
மூன்றாம் வயதில்,
அம்மை நோயால் கண்பார்வையை இழந்தார்
மாம்பழக் கவிச்சிங்கம்.
முத்தையா தீவிர முருக பக்தர்.
தனது மகனுக்கு கண் போய்விட்டதே
எப்படி அவன் முருகனை காண்பான்
எப்படி வாழ்வான் என
நினைத்து வருத்தப்பட்டு இருந்தார்.
ஓர் நாள்,
முத்தையா உறங்கும்போது கருணைக் கடவுள் கந்தபிரான் காட்சித்தந்து, ‘உன் மகனுக்கு புறக்கண் பார்வைதான் இல்லையே தவிர, அந்த கண்களுக்கு நான் ஒளி என்னும் ஞானத்தை தந்துள்ளேன் கவலை வேண்டாம்’ என்று கூறி மறைந்தார்.
தூக்கத்தில் இருந்து எழுந்த முத்தையா மகிழ்ந்து, கவலையின்றி மகனை ஆர்வத்தோடு வளர்த்தார்.
முத்தையாவே தம் மகனுக்கு முதல் ஆசிரியராக இருந்து கல்வி போதித்தார்.
தொடர்ந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களை பழனி மாரிமுத்துக் கவிராயரிடம் கற்றுத் தெளிந்தார்.
கவிபாடும் ஆற்றல் இவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்தது.
மாம்பழக் கவிச்சிங்கம்
மற்றவர்களின் உதவியுடன் வடமொழியையும் கற்றார்.
ஒரு முறை காதால் கேட்டவற்றை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் திறமை பெற்றிருந்தமையால் இவரை ஏகசந்தக் கிரஹி என்றழைத்தனர்.
ஆண்டுகள் செல்ல, மாம்பழம் கல்வியில் சிறந்து விளங்கியதோடு மட்டுமல்லாது, மேலவர்களிடம் வாதிடும் புலமையும் பெற்றிருந்தார்.
இதைக் கண்ட தந்தை, தன் கனவில் இறைவன் கூறியது பலித்ததென்று என நினைத்து மகிழ்ந்தார்.
மாம்பழத்தை யாரும் கண் பார்வையற்றவன் என்று கூறிவிட முடியாது.
காரணம்,
சாதாரணமான மனிதர்களை காட்டிலும் இயல்பாக அனைத்து வேலைகளையும் செய்யக்கூடியவராக இருந்தார்.
மாம்பழம் எப்போதும் பழனி ஆண்டவனைப் போற்றித் தமிழில் இனிய கீதங்களைப் பாடி மகிழ்ந்தார்.
மாம்பழக் கவிராயர் முதன்முதலில் பழனியை அடுத்துள்ள பாப்பம்பட்டி மிராசுதார் வேங்கடசாமி நாயக்கர் ஆய்குடி ஓபுளக்கொண்டம நாயக்கர் துளசிமாணிக்கம் பிள்ளை ஆகியோரைப் பற்றிப் பாடி மனம் களிக்கச் செய்தார்.
புகழும் புலமையும் நிறைந்திருந்த போதும் மாம்பழக் கவிராயர், தம் மூதாதையர்களைப் போன்று தாமும் தமிழ்ப் பற்றும் கொடை நலமும் வாய்க்கப்பெற்ற தமிழரசர் அவைகளுக்குச் சென்று தமிழ்ப் புலமையைக் காட்ட வேண்டும் என்னும் தீராத வேட்கை கொண்டிருந்தார்.
அவர் காலத்தில் தென் தமிழ் நாட்டில் மன்னர் என்ற பெயருக்கேற்ற சகல தகுதிகளையும் அதிகாரத்தையும் கொண்டு விளங்கியவர்கள் இராமநாதபுரத்தையாண்ட முத்துராமலிங்க சேதுபதியும் அவர் தமையனார் பொன்னுச்சாமித் தேவரும் ஆவர்.
ஓர் நாள் இவர்களை காண சென்றவரை அவர்களை பார்க்க முடியாமல் காவலர்களால் திருப்பி அனுப்பப்பட்டார்...
கண் தெரிந்தவர்கள் பாடுவதே மிக கடினம், அந்த மிகக் கடினமான சதுரங்க பந்தத்தை நன்கு பாடியவர்களுள் ஒருவர் மாம்பழக் கவிச்சிங்க நாவலர்.
ஒருநாள், பழநி ஆண்டவனுக்குக் காவடி கொண்டு செல்லும் பக்தர்களுடன் மாம்பழக் கவிராயரும் படி ஏறிச் சென்று இறைவன் சந்நதியை அடைந்தார்.
பக்தர்களின் 'அரகரா' கோஷம்.
கேட்டுத் தானும் இறைவன் திருமுன் அமர்ந்தார்.
அருகிலிருந்த சிலர் கண் உள்ள நமக்கே பழநி பதியை காண்பது அரிதானது அப்படியிருக்கும் போது கண்ணில்லாத இவர் என்ன பார்க்கப் போகிறாரோ’ என்று சிரித்தனர். மனம் நொந்த கவிச்சிங்கர் பழனாபுரி மாலை எனும் நூலைப் பாடினார். விசயகிரி துரை என்பவர் பழநியில் இருந்த நாள், முருகன் பற்பல அற்புதம் காட்டி அருளினான் என்ற செய்தி அவருக்கு நினைவு வந்தது.
‘விசயகிரி துரையின் காலத்தில் இங்கு வெகு அற்புதம் செய்தது சத்தியமாயின் இழித்துப் பேசும் கயவர் சூட்டும் வகைகளை நீக்கி என்னைக் காத்தல் உனக்குப் பெரும் காரியமோ? பழனாபுரி ஆண்டவனே!’’ என்று உள்ளம் உருகப் பாடினார் கவிச்சிங்கர்.
உடனே கவிச்சிங்கரின் மனக்கண்முன், கருவறையில் பழநி நாதனுக்குச் செய்யப்படும் பாலாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், விபூதிக்காப்பு, அலங்காரவகை அனைத்தும் தோன்றலாயின. கவிஞர், அங்கு நடக்கும் ஒவ்வொன்றையும் பெருத்த குரலெடுத்து கூறிக்கொண்டே வந்தார்.இதனைக் கண்டு கேளி பேசியோர் நாணித் தலை குனிந்தனர். அவர் காலத்தில் தென் தமிழ் நாட்டில் மன்னர் என்ற பெயருக்கேற்ற சகல தகுதிகளையும் அதிகாரத்தையும் கொண்டு விளங்கியவர்கள் இராமநாதபுரத்தை ஆண்ட முத்துராமலிங்க சேதுபதியும் அவர் தமையனார் பொன்னுச்சாமித் தேவரும் ஆவர். இராமநாதபுரத்தை அடைந்த கவிராயருக்குப் பல நாள்களாகியும் இராஜதரிசனம் கிடைக்கவில்லை. இவரது வருகையைப் பற்றிப் புலவர்களும் சேதுபதிக்குத் தெரிவிக்கவில்லை. இறுதியாக ஒரு புலவரின் உதவியால் சேதுபதியின் அவைக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது.
அவையில்
பொன்னுச்சாமித் தேவர், அவரின் சகோதரர் முத்துராமலிங்கத்தேவர் இருவர் மீதும் மாம்பழக் கவிராயர் வாழ்த்துக் கவிகளைப் பாடினார்.
கவிராயரின் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த பொன்னுசாமித்தேவர் கவிராயரை நோக்கி, "கிரியில் கிரியுருகும் கேட்டு" என்பதை ஈற்றடியாகக் கொண்டு வெண்பாப் பாடுமாறு வேண்டினார்.
கவிராயர்,
"மாலாம் பொன்னுச்சாமி மன்னர்பிரான் தன்னாட்டில்
சேலாங்கண் மங்கையர் வாசிக்கு நல்யாழ் – நீலாம்
பரியில் பெரியகொடும் பாலை குளிரும் ஆ
கிரியில் கிரியுருகும் கேட்டு."
எனப் பாடினார் .
கவிராயரின் இயற்றமிழ், இசைத்தமிழ்ப் புலமையைக் கண்டு வியந்த தேவர்,
.
மேலும் பல ஈற்றடிகளைக் கொடுத்துப் பாடக் கேட்டார். அனைத்திற்கும் கவிராயர் பொருத்தமான பாடல்களைப் பாடி மகிழ்வித்தார்.
தமிழ்ப் பற்றாளரான பொன்னுச்சாமித் தேவர் கவிராயரின் புலமையை மேலும் அறிய விரும்பி, "புலவரே, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாசுரத்தில் "முத்தைத் தரு" எனத்தொடங்கி "ஓது" என்பது வரை உள்ள பகுதியை ஒரு வெண்பாவில் அமைத்துப் பாடுங்களா" என்றார்.
உடனே கவிராயர்
"வரமுதவிக் காக்கு மனமே வெண்சோதி பரவிய" எனும் தொடரை முதலில் சேர்த்துக் கொள்ளுங்கள்,
அது வெண்பாவாகிவிடும் எனக் கூறி,
"வரமுதவிக் காக்கு மனமே வெண்சோதி
பரவிய முத்தைத்தரு பத்தித் – திருநகையத்
திக்கிறை சத்திச் சரவணமுத்திக் கொருவித்
துக் குருபரனெனவோது."
என்று கவிராயர் பாடிய பாடலைக் கேட்டு மகிழ்ந்தார் தேவர்.
கண் தெரியாமலேயே இவ்வளவு
அற்புதமாக பாடல்களை கொடுக்கிறாரே என ஆச்சரியமானார்.
தமிழ்ப் புலவர்களில் இவரைப் போலத் தாம் எங்கும் எப்போதும் கண்டதில்லை எனக்கூறி, தம் ஆசனத்திலிருந்து எழுந்து வந்து, அவரது வலது கரத்தைப் பற்றிக் குலுக்கி, "சபாஷ், சபாஷ்" எனப் பலமுறை கூறிப் பாராட்டினார்.
அத்துடன், "புலவரீர், உமது புலமை அளவிடற்கரியது. அழகும், சுவையும் ஒருங்கே சிறக்கக் கவிபாடும் திறமை வியக்கத்தக்கது. கலை மடந்தையின் பீடமெனத் திகழும் தங்களுக்கு இப்பேரவையில்
."கவிச்சிங்கம்"
எனும் விருதுப் பெயரைச் சூட்டுகிறேன்" என்று கூறி, மேலும் அவரை கெளரவிக்கும் வகையில் சேது சமஸ்தானத்துப் புலவராகவும் நியமித்தார்.
வாயிற் காவலர் ஒருவர் புதிதாக வேலைக்கு வந்தவர்
கவிச் சிங்கத்துக்கு அரசவைக்குள் நுழைய அனுமதி
மறுத்துவிட்டார்.
இதற்குள் வேறு ஒரு காவலர் வந்து புலவரைப்பற்றி
எடுத்துச் சொல்லி உள்ளே அனுமதிக்கச் செய்தார்.
கவிச்சிங்கம் சிறிது
தாமதமாக அரசவைக்குள் நுழைந்த காரணம் பற்றிப் பொன்னுச்சாமித்
தேவர் வினவ, அவர் நடந்த நிகழ்வை ஒரு பாடலில் கூறினார்.
பாடல் வருமாறு:
"தருமகுண மிகுமுனது சமுகமுறார் வறுமையெனச்
சலிக்கக் காய்ந்துவருமிரவி வெயிலதனால் மயங்கியின்று யானிங்கு
வந்த போழ்தில்
அருமை தவிர் பாராச்சே வகர்தமது பெயர்ப்பொருளை
அறியக் காட்டிக்
கருவமொடு தடு ப்பதென்னே காமர்பொன்னுச் சாமியெனும்
கருணை மாலே!"
பொருள்:
அழகிய பொன்னுச்சாமி என்னும் பெயருடைய கருணை மிக்க
திருமாலின் அம்சமானவரே!
தருமகுணம் மிகும் உமது சமுகத்தை
அடையார் வறுமையால் சலித்து வாடுவர். நான் தங்களை நாடி
ஏறு வெயிலில் வரும்போது வெயில் கொடுமையால் மயக்க
நிலையை அடைவதுபோல் இருந்தேன். வாயில் காக்கும் பாராச்
சேவகர் என்னை நுழைய விடாமல் தடுத்தார்.
(இருந்தாலும் வேறு
காவலர் ஒருவர் வந்து விளக்கிச் சொல்லியதன் பேரில் என்னை
அனுமதித்தார்.).
.
மன்னர் தவறு செய்த காவலரை அழைத்து வர
உத்தரவிட்டார்.
உடனே கவிச்சிங்கம் "ஐயா! அவர் இதற்குமுன்
என்னைப் பாராச் சேவகர்(பார்த்திராத சேவகர்) தானே; எனவே,பாராச் சேவகர் பணியில் கடுமையாக நடந்து கொண்டார். அவர்
தம் கடமையைச் சரியாகச் செய்தார். எனவே அவர்க்கு யாதொரு
தண்டனையும் தேவையில்லை"என்றார்.
பாரா என்னும் சொல்
தமிழ்ச் சொல் அன்று. ஆனால் அதன் பொருள் காவல் என்னும்
பொருளில் கையாளப் பட்டுள்ளது.
பாராச் சேவகன்=என்னை
இதற்குமுன் பார்த்திராத சேவகர்; பாராச் சேவகன்=காவல் காக்கும்
சேவகன் என்று இருபொருள்படப் புலவர் கையாண்டுள்ளார்.
ஒருமுறை பொன்னுச்சாமித்தேவர் மாம்பழக் கவிச்சிங்கத்துக்குப்
பரிசு அளிக்கும் போதில் ஓர் அழகிய வெள்ளித்தட்டில் வைத்துக்
கொடுத்தார்.
புலவருக்குத் துணையாய் வந்த சிறுவன் வெள்ளித்
தட்டின் அழகைப் பற்றி விவரித்துச் சொன்னான்.
உடனே புலவருக்குத்
தட்டின் மீது பெருவிருப்பம் உண்டாயிற்று.
நேரடியாகத் தேவரிடம் தமக்குத்
தேவை என்று சொல்வதற்கும் கூச்சமாக இருந்தது. எனவே, '"பணத்தட்டு
எவ்விடம்?" என்று வினவினார்.
பணத்தட்டு என்பதற்குப் பணத்தையுடைய
தட்டு என்றும் பணத்துக்குத் தட்டு(தட்டுப்பாடு) என்றும் பொருள்படும்.
இக்
கேள்வியை எதிர்பாராத தேவர் சமஸ்தானத்துக்குப் பணத் தட்டுப்பாடு
வந்தால்(ஏற்பட்டால்) பொதுமக்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுவர்;
புலவருக்குப் பணத்தட்டு வந்தால் அவர் சமாளித்துக் கொள்வார்
என எண்ணி
"பணத்தட்டு
அவ்விடத்துக்கே" என்று விடையிறுத்தார்.
புலவரும் ஆசைப்பட்ட படியே
வெள்ளித் தட்டையும் பரிசையும் எடுத்துச் சென்றார்.
அட்டநாக பந்தம், சதுரங்க பந்தம் முதலியவற்றிற்கு இலக்கணம் வகுத்துள்ளார்.
சிலேடை பாடுவதில் வல்லவர்.
தேவாங்கு புராணம், பழநித் திருவாயிரம் என்ற நூல்களும் சில சிற்றிலக்கியங்களும் பாடியுள்ளார். அவை மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பிரபந்தத் திரட்டு என்ற பெயரில் தொகுக்கப் பெற்று வெளியாகி உள்ளன.
பழனி முருகன் மேல்
திருப்பழநி வெண்பா,
பழநிப்பதிகம்,
சிவகிரி யமக அந்தாதி,
திருப்பழநி சிலேடை வெண்பா ஆகியவற்றை உளம்முருக பாடினார்.
‘‘வேற்று மருந்து ஏன்?
விபூதி யொன்றேபோ தாதோ
தேற்று உன்னருள் மாத்திரமிருந்தால் காற்றுலவு
பஞ்சாமே நோயனைத்தும் பார்த்துப் பழநிவள்ளால
அஞ்சாமே ஆள்வது அறன்.’’
பழநி வெண்பா அந்தாதி.
‘‘வாழ்க்கைச் சூழலாலும், வயது மூப்பாலும் வரும்
நோய்தீர வேறு எந்த மருந்தையும் நாட
வேண்டியதில்லை; உன் விபூதி மட்டும் போதும்,
காற்றில் பறக்கும் பஞ்சுபோல் நோயனைத்தும் ஓடிவிடும்.
பழநி வள்ளலே!
தண்டபாணித் தெய்வமே!
என்னை உன்னருளால் காக்க வேண்டும்!’’
என்று பழநி ஆண்டவனின் விபூதி மகிமையை போற்றுகிறார்.
‘‘திளைத்துணை யேனும் நின்சித்தம் என்பக்கம் திரும்பி விட்டால்
வினைத்துயர் தீர்வதரிதோ? பனிவெவ் வெயிலிலுண்டோ?
நினைத்த வரம் தமியேற்கருள் செய்து முன்னின்றிரட்சி
அனைத்துலகும் பணியும் பழனாபுரி ஆண்டவனே!’’
பழனாபுரி மாலை.
பழநி மலை வாழும் பாலதண்டாயுதா! தானியங்களில் சிறிய அளவான தினையளவிலாவது உன் அருள் எனக்குக் கிடைத்துவிட்டால் போதும், முன் வினையால் ஏற்பட்ட துயரம் எல்லாம் ஆதவன் ஒளிபட்டு உருகி அகலும் பனிபோல மறைந்துவிடும். அகிலமெலாம் போற்றி வணங்கும் பழநியிலே ஆட்சிபுரியும் ஆண்டவனே! முருகா! எனக்கு அருள் செய்து ஆண்டருள வேண்டும்.’’
48 வயது வாழ்ந்து 1884ம் ஆண்டு மாசி மாதம் இறைவன் திருவருளால் தனது இறுதிக் காலத்தை உணர்ந்து,‘‘என்ன பிழை யான் செய்திருந்தாலும் எண்ணாமல்
அன்னபிழை எல்லாம் அகற்றி இன்னே நின்உபய பாதநிழல் நல்கி எனைப் பாவித்துக் கொள்
சமயம்
நீ குகனே நம்பினேன்‘‘
என்ற பாடலைப் பாடி முருகன் திருவடியடைந்தார்
*This is the continuation of yesterday's post on the subject*
*ஓம் சரவண பவாய நம:*
புல் சாப்பிட்ட நந்தி
புல் சாப்பிட்ட கல் நந்தி!
கல் நந்தி புல் சாப்பிட்டு மெய்ப்பிக்கச் செய்ய வேண்டும் என்று ஹரதத்தர் மனமுருக வேண்டினார்.
கஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் இருந்தான். அவன் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை, அறியாமலும்.. தெரியாமலும் ஒரு பசுங்கன்றின் மீது போட்டு விட, அந்தக் கன்று துடிதுடித்து இறந்து போனது. அந்தக் கன்று, சிறந்த பக்திமானான ஹரதத்தர் என்பவருக்குச் சொந்தமானது.
பசுங்கன்றைக் கொன்றதால், அவனை மகாபாவி என்று பலரும் ஒதுக்கினார்கள். இந்த நிலையில் நடந்த விபரீதத்தை எடுத்துக் கூறுவதற்காக, பசுங்கன்றின் உரிமையாளரான ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்றான், தேவசர்மா. அங்கு வீட்டுக்குள் நுழைந்தபோது, வாசல்படி தலையில் இடித்து ‘சிவ.. சிவா’ என்று கத்தினான்.
குரல் கேட்டு வெளியே வந்த ஹரதத்தர், தேவசர்மா பற்றியும், அவன் வந்த நோக்கம் பற்றியும் அறிந்து கொண்டார். பின்னர், ‘நீ சிவ என்று சொன்னதுமே, பசுவைக் கொன்ற உன்னுடைய பாவம் நீங்கிவிட்டது. இரண்டாவதாக சிவா என்று கூறியதற்காக, உனக்கு கயிலாய பதவியும் கிடைக்கப் போகிறது’ என்று தேவசர்மாவுக்கு ஆறுதல் கூறினார்.
ஆனாலும் கூட ஊர்மக்கள் பலரும் தேவசர்மாவை மனதார மன்னிக்கவில்லை. ஊரைவிட்டு விலக்கியே வைத்திருந்தார்கள்.
ஒரு நாள் ஹரதத்தர், கஞ்சனூரில் உள்ள அந்தணர்கள் அனைவரையும், அங்குள்ள ஈசன் எழுதருளியுள்ள அக்னீஸ்வரர் ஆலயத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படியே ஊர் மக்கள் அனைவரும் ஆலயத்தில் கூடியிருந்தனர்.
அப்போது ஹரதத்தர், தேவசர்மாவிடம் ஒரு புல் கட்டைக் கொடுத்து, ‘நீ சிவ.. சிவா என்று சொன்னதுமே உன்னுடைய பசுவைக் கொன்ற பாவம் நீங்கிவிட்டதாக நான் கூறினேன். ஆனால் அதை ஊர் மக்கள் யாரும் நம்பவில்லை. எனவே நீ இங்குள்ள கல் நந்திக்கு இந்தப் புல்லைக் கொடு. அது அதை சாப்பிட்டால் உன்னுடைய பாவம் நீங்கிவிட்டதாக இங்கிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்’ என்றார்.
அதைக் கேட்டு கூடியிருந்த மக்கள் அனைவரும் எள்ளி நகையாடினர். ‘கல் நந்தி எப்படி புல் சாப்பிடும்’ என்பதால் வந்த நகைப்பு அது.
ஆனால் ஹரதத்தரோ இறைவன் மீதான நம்பிக்கையில், ‘இறைவா! உன்னுடைய நாமத்தை ஒரு முறை சொன்னாலே பசுங்கன்றை கொன்ற பாவம் நீங்கிவிடும் என்று நான் சொன்னது உண்மையானால், கல் நந்தியை புல் சாப்பிட்டு மெய்ப்பிக்கச் செய்ய வேண்டும்’ என்று மனமுருக வேண்டினார்.
என்ன ஆச்சரியம்.. தேவசர்மா கொடுத்த புல்லை அந்த கல் நந்தி சாப்பிட்டது. அங்கிருந்த அனைவரும் சிவ நாமத்தின் உயர்வையும், பக்திக்கு கிடைக்கும் பலனையும் கண்டு இறைவனை மனதார வழிபட்டனர்.
இந்த கல் நந்தி, கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கிறது. கும்பகோணம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் ஆடுதுறையில் இருந்து உள்ளே சென்று கஞ்சனூர் ஐ அடையலாம் .
🔆🔆🔆🔆🔆🔆 சர்வம்சிவார்ப்பணம்
வைத்தியநாத தேசிகர்
வைத்தியநாத தேசிகர்
17ஆம் நூற்றாண்டில் திருவாரூரில்
வான்மீக நாதர், உலகம்மை தம்பதியருக்கு மகனாக வைத்தியநாத தேசிகர் பிறந்தார்.
முருகபத்தியில் மிகச் சிறந்தவர் இவர் சேய்தொண்டர்களில் ஒருவர். தினமும் முருகப்பெருமானை நினைத்து வணங்கி வாழ்ந்து வந்தார் வைத்தியநாத தேசிகர், அருணகிரிநாதர் மீது அளவிலா அன்புக்கொண்டவர்.
ஓர் நாள், வைத்தியநாத தேசிகரின்
கனவில் வந்த முருகப்பெருமான்
பிள்ளைக் கவி பாடு என கூறினார். காலையில் முருகப்பெருமானை நினைத்து பிள்ளை தமிழ் பாடினார்.
பின்னர் ஓர் நாளில், மயிலம் முருகன் ஆலயத்திற்குச் சென்றார். அந்த ஆலயத்தில் குடிக்கொண்டிருந்த முருகனை தரிசித்து ``மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்’’ பாடினார்.
மேலும், சில நாள் அங்குத்தங்கி இனிய பல தமிழ்மாலைகள் சூட்டி மகிழ்ந்தார்.
தமிழகத்தில் எண்ணற்ற முருகன் ஆலயங்களை தரிசித்து பின்னர் திருவாரூர் திரும்பினார். வைத்தியநாத தேசிகர், படிக்காசுப் புலவரின் ஆசிரியர். தருமபுரம் ஆதினத்தைச் சார்ந்த வைத்தியநாத தேசிகர்
பாசவதை பரணி, நல்லூர் புராணம்,
திருவாரூர் பன் மணிமாலை முதலிய நூல்களை இயற்றினார்.
இலக்கண விளக்கம் எழுதியுள்ளார்.
இது ஒரு தமிழ் இலக்கண நூல் ஆகும்.
இந்நூல் ஐந்திலக்கணங்களையும் கூறுவதுடன் பாட்டியல் பற்றியும் விளக்குகிறது.
தமிழ் இலக்கணத்தை விரிவாகவும் முழுமையாகவும் கூறுவதால் இந்நூலைக் குட்டித் தொல்காப்பியம் என்றும் குறிப்பிடுவதுண்டு.
நரசிம்ம ஜெயந்தி
நரசிம்ம ஜெயந்தி
அதாவது பிரகலாதன் அழைத்த குரலுக்கு தூணை பிளந்து கொண்டு அதர்மமே உருவான இரண்யகசிபுவை வதம் செய்ய 16 கரங்களுடனும் சிம்ம முகத்துடனும் கூரிய நகங்களுடனும் நரசிம்மராய் அவதாரம் செய்த தினம்
பகவான் விஷ்ணுவின் நான்காம் அவதாரமான நரசிம்ம அவதாரத்தை வணங்கிட பிறவித்துன்பங்களும் சத்ரு தொல்லைகளும் மனபயங்களும் ருணபீடைகளும் நீள் பிணிகளும் விலகி நல்வாழ்வமைந்திடும் நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.
நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் “சிங்கவேள்குன்றம்“ என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.
நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள்.
இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்பட வில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள். நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான். திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், “இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்” என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப் பட்டுள்ளது. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.
நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.
“எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்” என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம். திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர். நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம். பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.
சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்.
அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும். வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.
நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும். நரசிம்மரை வழிபடும் போது “ஸ்ரீநரசிம்ஹாய நம” என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும். “அடித்த கை பிடித்த பெருமாள்” என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள். நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும்.
அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ம்ருத்யுவேஸ்வாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.
*ஓம் நரசிம்ஹாய நம.*