அருள் மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில் (அந்தியூர்)
தமிழகத்தில் கொங்கு நாட்டில் அமையப்பெற்ற அற்புதத் தலம்.மாட்டு சந்தைக்கு பெயர் பெற்ற அந்தியூரில் அமையப்பெற்ற மகிமை வாய்ந்த திருத்தலம்.சுமார் 1000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தலம்.பங்குனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வழிபடும் புண்ணிய திருத்தலம்.இவ்வாறு ஏராளமான பெருமைகளை உள்ளடக்கிய அழகான திருத்தலம் இதுவாகும்.
கொங்கு நாடு:முற்காலத்தில் கொங்கு நாடு தனக்கென்று தனியான எல்லைகள் வரலாறு கலை பண்பாடு நாகரிகம் பழக்க வழக்கம் ஆகியவைகளைக் கொண்டிருந்தது.இதனைப் பழங்கால இலக்கியங்களும் கல்வெட்டுக்களும் உறுதிப்படுத்துகின்றன.
நீலகிரி கோவை ஈரோடு நாமக்கல் சேலம் தருமபுரி ஆகிய மாவட்டங்களும் திண்டுக்கல் மாவட்டம் பழனிமலைப் பகுதியும் மற்றும் கரூர் மாவட்டம் குழித்தலைப் பகுதிகளுமே கொங்கு நாடாகும்.அக்கொங்கு நாடு 24 உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தது.அவற்றுள்"வடகொங்கு வடகரை நாடு" என்பது ஒன்றாகும்.அதாவது பவானி ஆற்றின் வடக்கில் உள்ள பகுதியே வடகரை நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது.அந்த வடகரை நாட்டின் தலைநகராக விளங்கியது"அத்தியூர்" ஆகும்.தற்போது ஈரோடு மாவட்டத்தின் ஒரு பகுதியே அந்தியூர் ஆகும்.
தொண்மைச் சிறப்பு:தமிழில் மிக தொண்மையான இலக்கியங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது "அகநானூறு"ஆகும். அவ்வாறு சிறப்புமிக்க அகநானூற்றின் 71 ஆம் பாடலைப் பாடிய"அந்தி இளங்கீரனார்"என்ற புலவர் அந்தியூரைச் சார்ந்தவர் என்பதன் மூலம் இவ்வூரின் தொண்மைச் சிறப்பை அறிய முடிகிறது.
காளிதேவி வழிபாடு:தமிழகத்தில் காளிதேவி வழிபாடு என்பது சங்ககாலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்துள்ளது.தட்சன் தாருகாசூரன் மகிடாசூரன் ஆகியோரை அழித்தவள் காளி என்பதாக சங்ககாலத்தின் பல இலக்கியங்கள் கூறுகின்றன.இதை ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான இளங்கோவடிகள் இயற்றிய "சிலப்பதிகாரம்"வழக்குரைக் காதை பகுதியில் மிக அழகாக கூறுகிறது.
அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள்;அறுவர்க்கு இளைய நங்கை இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு, சூர்உடைக் கானகம் உகந்த காளி தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்; (இளங்கோவடிகள்)
காளிதேவி பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் அழைக்கப் படுகிறாள்.மாகாளி உச்சினி மாகாளி ஓம் காளி எண்ணை முத்துக்காளி காளியம்மன் சீலக்காளி கல்கத்தா காளி கடுக்காளி கரிய காளியம்மன் பாதாள காளி பத்ரகாளி வீரகாளி வீரசூரகாளி வீரமாகாளி போன்காளியம்மன் போன்றவை ஆகும். அதில் பத்ரகாளி வழிபாடு தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
"பத்ரம்"என்ற சொல்லுக்கு"இலை அழகிய உருவம் பாதுகாப்பு"என்று பல அர்த்தங்கள் உள்ளது.இலை வடிவ தோடை காதில் அணிந்து கொண்டு அழகிய வடிவத்தில் இந்த புவனத்தை காக்கின்றாள் என்ற அர்த்தத்தை உள்ளடக்கி"பத்ரகாளி"என்ற திருநாமம் பெற்றாள்.
தல வரலாறு:கன்று ஈன்ற ஐந்து மடிகளைக் கொண்ட பசு ஒன்று காட்டில் மேய்ந்து விட்டு தினசரி பாலின்றி வெற்று மடியோடு வீட்டுக்கு வந்துள்ளது.பசுவின் உரிமையாளர் அப்பசுவைத் தொடர்ந்து சென்று கண்காணித்தார்.அப்போது ஒருபுற்று அருகே பசு சென்றது. புற்றிலிருந்து ஐந்து தலை நாகமொன்று வெளிப்பட்டு பசுவின் ஐந்து மடிகளிலிருந்தும் பாலைக் குடித்தது.இதைப்பார்த்ததும் பசுவின் உரிமையாளர் அதிர்ச்சியுற்றார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய அம்மன் தான் பத்ரகாளி என்றும் தன்னை இவ்விடத்திலேயே வைத்து வழிபடுக என்றும் கூறி மறைந்தாள். அம்மனின் அருள்வாக்கை ஏற்று அந்த இடத்தில் பக்தர்கள் கோயில் அமைத்து அம்பாளுக்குப் பத்ரகாளி என்ற திருநாமம் சூட்டி வழிபடத் துவங்கினர்.
காளியின் தோற்றம்:கருவறையில் பத்ரகாளியம்மன் எட்டு கைகளுடன் அருள்பாலிக்கிறாள்.சுடர் விட்டு பரவும் சுவாலை கொண்ட தலை மண்டை ஓட்டு கீரிடம் எட்டு கைகளில் உடுக்கை கட்கம் கபாலம் சூலம் மகிடனின் தலைமேல் கால் வைத்திருக்கும் பாவனை, விஸ்மய ஹஸ்தம்(செயற்கரிய செயல்களை செய்யும் போது வியந்து பாராட்டும் சிறப்பம்சம்)நாகம் மணி கிண்ணத்துடன் அம்மன் அருள்பாலிக்கிறாள்.
பகைவர்களின் தலைகளை மாலையாக தொடுத்து அதையே மார்புக்கச்சாக கட்டியிருக்கிறாள். மகிடனின் தலையில் கால் வைத்துள்ளதால் நவராத்திரி நாயகியான மகிடாசுரமர்த்தினியாகவும் கருதப்படுகிறாள்.
இக்கோயிலில் பத்ரகாளியம்மனின் காவல் தெய்வமாக மகாமுனி திகழ்கிறார்.இக்கோவிலைச் சுற்றிலும் மகாமுனி உருவங்கள் ஏராளமாக உள்ளன.போர்களத்தில் வெற்றியடைந்து அதன் விளைவாக காளிதேவிக்கு தன்னையே களபலி கொடுத்த வீரர்கள் சிற்பங்கள் இக்கோயிலில் நிரம்பியுள்ளன. அக்காலத்தில் நம் நாட்டு மக்களும் மன்னர்களும் போரில் பகைவர்களை அழித்து வெற்றி பெற வேண்டும் என்று எண்ணிய வீரர்கள் வெற்றி வாகை சூடிய பின் தன் காவல் தெய்வமாகிய காளிதேவிக்கு தம்மைத்தாமே பலியிட்டுக் கொள்ளும் வழக்கம் நிலவி வந்தது.இச்சம்பவத்தை செயங்கொண்டார் கலிங்கத்துபரணியில் கோயில் பாடியது பகுதியில் மிக அழகாக பாடியுள்ளார்.
அடிக்கழுத்தி னெடுஞ்சிறப்பை யாரிவ ராலோ
அரிந்தசிர மணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரங் கொற்றவையைப் பரவு மாலோ
குறையுடலங் கும்பிட்டு நிற்கு மாலோ
-செயங்கொண்டார்
தீமிதி திருவிழா:ஆண்டுதோறும் பங்குனி மாதம் பத்ரகாளியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.
முதல் வியாழக்கிழமை–பூச்சாட்டுதல்
இரண்டாவது புதன்கிழமை-மகிடாசூரன் வதம்
மூன்றாவது புதன்கிழமை -கொடியேற்றம்
நான்காவது புதன்கிழமை-தீமிதி திருவிழா.பூச்சாட்டுதல் முதல் தீமிதி திருவிழா வரை அன்னை பத்ரகாளியம்மன் ஏழு நாட்களும் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வந்து அருள் பாலிக்கிறாள்.அதில் ஏழாம் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து வழிபடுகின்றனர்.
பிரார்த்தனை:இங்கு வீரஆஞ்சநேயரின் சன்னதியும் இருப்பதால் சனிதோடம் உள்ளவர்களும் பிரார்த்தனைக்கு வருகின்றனர்.பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க தங்கள் தாலியையே காணிக்கையாக தருவதாக அம்பாளிடம் வேண்டுகின்றனர்.குறிப்பாக உயிருக்கு போராடும் கணவருக்காக இத்தகைய பிரார்த்தனையைச் செய்வது மரபாக உள்ளது.
ராகுவின் அதிதேவதையாக காளி விளங்குவதால் செவ்வாய் வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி திருமணத்தடை விலக கன்னியர்கள் வாலிபர்கள் வேண்டுகின்றனர். குழந்தை பாக்கியம் கிடைக்க தொட்டில் கட்டும் வழிபாடு நடக்கிறது.கல்வி செல்வம் வீரம் ஆகியவற்றை வழங்கும் பத்ரகாளி இங்கே தைரிய லட்சுமி அவதாரமாக இருக்கிறாள்.
தரிசனம் நேரம்:காலை 06.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை.மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 வரை.
கோயில் அமைவிடம்: ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் அந்தியூர் உள்ளது. அந்தியூர் பேருந்து நிலையத்தின் மிக அருகாமையில் கோயில் உள்ளது.
திருக்கோயில் முகவரி:நிர்வாக அதிகாரி, அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில், அந்தியூர், ஈரோடு – 638 501, தொடர்புக்கு: 04256 261774