சபரிமலை ஐயப்பன் வரலாறு
ஓம் அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும் செய்த
ஸகல குற்றங்களையும் பிழைகளையும்
பொறுத்துக்காத்து ரட்சிக்க வேண்டும்
ஓம் ஸ்ரீ ஸத்யமான பொன்னு பதினெட்டாம்படி
மேல் வாழும் வில்லாளி வீரன் வீரமணி கண்டன்
காசி இராமேஸ்வரம் பாண்டி மலையாளம்
அடக்கி ஆளும் ஓம் ஸ்ரீ ஹரிஹரசுதன்
ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா..
ஐயப்பன் வரலாறு : ஐயப்பன் அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன்.
ஐயப்பன் வரலாறு பற்றி கூறப்படுவதாவது: கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார் அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார். குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும் தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம்உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொரளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர். வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும்தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா என மகிழ்ந்து அந்த குழந்தையை அரண்மனை கொண்டு சென்றான். அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள். ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால் குழந்தைக்கு மணிகண்டன் என்றுபெயரிட்டு ன பெயரிடலாம் என்று முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர். இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும்குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.
குருகுல வாசம்: தன்னிடம் கல்வி பயில வந்திருக்கும் மணிகண்டன் சாதாரணச் சிறுவனல்ல ஓர் அவதார புருஷன் என்பதை முனிவர் தனது தபோ பலத்தால் உணர்ந்து கொண்டார். இந்தச் சிறுவனுக்கு தான் குருவாக இருந்து கல்வி கற்றுத் தருவது தனது பூர்வஜென்ம புண்ணியம் தான் என்பதும் அவருக்குப் புரிந்தது. மணிகண்டன் சூட்டிகையாய் இருந்தான் கல்வி கேள்வியுடனான அறுபத்து நான்கு கலைகளையும் விரைவிலேயே கற்றுத் தேர்ந்தான். அரசகுமாரர்களுக்குத் தேவையான அனைத்து ஆயுதப் பயிற்சிகளையும் அஸ்திர வித்தைகளையும் வெகு விரைவாகவும் சிறப்பாகவும் கற்றுக் கொண்டான். குருகுல வாசம் சிறப்புற முடிந்தது மணிகண்டன் அரண்மனைக்குச் செல்ல விடைபெறும் நேரம் வந்தது. குருவுக்கு தகுந்த மரியாதை செய்வதற்காக எண்ணற்ற பரிசுகளையும் பொன்னையும் பொருளையும் அனுப்பி வைத்திருந்தார் மன்னர். அனைத்தையும் குருவின் பாதங்களில் சமர்ப்பித்த மணிகண்டன் குருவே தங்களின் திருவருளால் நான் நிறைந்த கல்வியைப் பெற்றேன். இந்த பொன்னையும் பொருளையும் தவிர இன்னும் வேறு ஏதேனும் வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றான். முனிவர் தயக்கத்துடன் மணிகண்டா மனிதர்களின் சக்திக்கு மீறிய ஒன்றை உன்னிடம் கேட்கப் போகிறேன் முடியுமானால் நிறைவேற்று இல்லாவிட்டால் மனம் வருந்த வேண்டாம் என்றார். உங்களின் விருப்பத்தை நிறை வேற்றுவது எனது பாக்யம். நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் என்று பணிவாகக் கேட்டான் மணிகண்டன். குருபத்தினி கண்களில் நீருடன் மணிகண்டனிடம் ஐயனே எங்களுக்கு ஒரு மகன் இருப்பதும் அவன் பிறவியிலிருந்தே ஊமை என்பதும் உனக்கு தெரியாததா என்ன அவனை நினைத்துத்தான் நாங்கள் மிகுந்த கவலையுடன் இருக்கிறோம். நீதான் அந்த ஊமைப் பிள்ளையின் குறை தீர்த்து அருள் புரிய வேண்டும் என்று வேண்டினாள். பெற்றவர்களது தவிப்பைப் புரிந்து கொண்ட மணிகண்டன் அப்படியே ஆகட்டும் அம்மா என்றான். குருவின் மகனை அருகில் அழைத்தான் பழத் தட்டிலிருந்த கனி ஒன்றை கொடுத்து உண்ணச் சொன்னான். பின் அந்த சிறுவனிடம் கண்ணா இங்கே என்னையே பார் நான் சொல்வதை நம்பிக்கையுடன் திரும்பச் சொல் என்று கூறி பஞ்சாட்சர மந்திரத்தையும் அஷ்டாக்ஷர மந்திரத்தையும் ஓதினான் மணிகண்டன். ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய எங்கே சொல் அங்கே ஒரு அற்புதம் நடந்தது மணிகண்டன் சொல்லச்சொல்ல குரு மைந்தனும் அந்த மந்திரத்தைச் சேர்த்து சொன்னான் தெளிவாக உச்சரித்தான் ஊமைச் சிறுவன் பேசத் தொடங்கி விட்டான். குரு தம்பதியினர் மெய் சிலிர்த்துப் போயினர். கை குவித்து வணங்கினர் மணிகண்டா உலகில் எந்த சீடனும் குருவுக்கு செய்ய முடியாத ஒன்றை எனக்கு நீ தந்தருளினாய். இந்த அற்புதத்தை நிகழ்த்திய நீ சாதாரண மானிடன் இல்லை என்பதை அறிவோம் நீ யார் ஐயனே என்று குரு வேண்டினார். மணிகண்டன் தனது அவதார ரகசியத்தை குருவிடம் கூறினான். பின் குருவே இது தங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கட்டும். எனது அவதார நோக்கம் முடிந்ததும் ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தில் நான் தங்களுக்கு ஜோதிஸ்வரூபனாக காட்சி தருவேன். இதுவே நான் தங்களுக்கு அளிக்கும் குருதட்சணை என்று சொல்லி வணங்கி விடை பெற்றுக் கொண்டான். குருகுலத்திலிருந்து மணிகண்டன் அரண்மனைக்குத் திரும்பி விட்டான் இப்போது மணிகண்டன் பன்னிரெண்டு வயதுச் சிறுவன். மன்னனும் மக்களும் மற்ற மந்திரி பிரதானிகளும் சேவகர்களும் மணிகண்டனை வரவேற்று மகிழ்ந்தார்கள்.
ராணி கோப்பெருந்தேவியின் மன மாற்றம்: ராஜ்ஜியத்திலோ அரண்மனையிலோ எந்த மாற்றமும் இல்லை, எல்லாம் அப்படியப்படியே இருந்தன. ஆனால் கண்ணே மணியே மணிகண்டா எப்படியடா உன்னைப் பிரிந்திருப்பேன் என்றெல்லாம் வருத்தப்பட்டுக் கொஞ்சிச் சீராட்டி குரு குலத்திற்கு அனுப்பி வைத்த ராணி கோப்பெருந்தேவியின் மனத்தில் மட்டும் இந்த சில வருடங்களில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருந்தது. அவள் இப்போது மணிகண்டனை வேம்பாக வெறுக்கும் நிலைக்கு வந்திருந்தாள். காரணம் அரசுரிமை பந்தள நாட்டின் மந்திரி அந்த அளவுக்கு மகாராணியின் மனதை விஷமாக்கி இருந்தான். மணிகண்டன் வருவதற்கு முன்பு தங்களுக்கு குழந்தையில்லை இப்போதுதான் உங்களுக்கென்று மகன் ராஜராஜன் பிறந்து விட்டானே இனி இந்த ராஜ்ஜியத்திற்கு அவன்தானே உண்மையான வாரிசு அதை விடுத்து காட்டிலிருந்து எடுத்துவளர்த்த குழந்தையை அரச வாரிசு என்று சொல்லித் திரிவது என்ன நியாயம் அரசி. எக்காரணம் கொண்டும் அரசுரிமையை வேறு யாருக்கும் விட்டுத் தராதீர்கள் என்று உபதேசம் செய்து, அவளை கைப்பாவை போலவே மாற்றி வைத்திருந்தான். பேருக்கு மணிகண்டன் மேல் பாசம் பொழிந்து உள்ளுக்குள் மனத்தில் வஞ்சம் வைத்துக் காத்திருந்தான். இம்மாதிரியான சூழ்நிலையில்தான் மன்னன் ராஜசேகரன் மணிகண்டனுக்கு இளவரசுப் பட்டம் கட்டத் தீர்மானித்தான். அரண்மனை புரோகிதரிடம் முகூர்த்தநாள் கணிக்கச் சொன்னான். ராணி கோப்பெருந்தேவி பதறிப் போனாள். இனியும் காலம் கடத்தக்கூடாது உடனடியாக மணிகண்டனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தாள். அமைச்சனும் அவளும் சேர்ந்து திட்டம் தீட்டினார்கள். அரண்மனை வைத்தியரையும் தங்கள் சதிக்கு கூட்டுச் சேர்த்துக் கொண்டார்கள். அன்றைய தினமே ராணிக்குத் தாளமுடியாத பொய்த் தலைவலி உண்டானது. ஐயோ தலைவலி தாங்க முடியவில்லையே செத்துப் போய்விடலாம் போல் இருக்கிறதே. நான் என்ன செய்வேன் என்று துடித்தாள். கண்ணீர் விட்டாள் திறமையாக நடித்தாள். ராணியின் வலியை நிஜமென்று நம்பிய மன்னன் வைத்தியரிடம் சினந்தான். என்ன வைத்தியரே ஒரு தலைவலியை உங்களால் சரிப்படுத்த முடியவில்லையா இதற்கு உங்களிடம் மருந்தே இல்லையா? ராணி வலியால் துடிப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை ஏதாவது செய்யுங்கள் வைத்தியரே என்றார். வைத்தியர் ஏற்கனவே தாங்கள் பேசிக்கொண்ட சதித் திட்டத்தின்படி விபரீதமான ஒரு விஷயத்தைக் கூறினார். மன்னா இது சாதாரண தலைவலி இல்லை. இந்தக் கொடுமையான தலைவலிக்கு ஒரேயொரு மருந்துதான் உண்டு. அந்த மருந்தைத் தயாரிக்கத் தேவையான மூலிகைகள் எல்லாம் என்னிடம் உள்ளன. ஆனால் என்று அரண்மனை வைத்தியர் தான் சொல்ல வந்ததைச் சொல்லாமல் தயங்கினார். என்ன ஆனால் என்ன வேண்டும்? அந்த மூலிகையை அரைத்துக் கலக்கி பற்றுப்போட பால் வேண்டும் அதுவும் குட்டி போட்ட புலியின் பால். என்ன குட்டி போட்ட புலியின் பாலா விளையாடுகிறீர்களா? வைத்தியரே காட்டுக்குப் போய் பெண் புலியை வேட்டையாடி அதுவும் அதன் மடியில் பால் கறப்பதெல்லாம் முடிகிற காரியமா? குட்டி போட்ட புலி எவ்வளவு உக்கிரமாக இருக்கும் தெரியுமா என்று கோபப்பட்டார். ஐயோ வலி தாள முடியவில்லையை உயிர் போகிறதே. மன்னர் சொல்வது சரிதான் புலிப்பால் கொண்டு வருவதெல்லாம் சாத்தியமா என்ன விடுங்கள். நான் செத்துப் போகிறேன் இந்த வலியோடு என்னால் வாழமுடியாது என்று மகாராணி நடிப்பின் உச்சம் தொட்டாள்.
மணிகண்டன் அவதார நோக்கம்: மணிகண்டன் அனைத்தையும் உணர்ந்திருந்தான். ஆனாலும் தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான காலம் நெருங்கி விட்டதால் அந்த நிகழ்வுக்கு ராணியின் இந்த நாடகத்தை பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தான். மன்னன் ராஜசேகரன் முன்பு வந்து தந்தையே கவலைப்பட வேண்டாம் அன்னையின் துன்பத்தைப் போக்க வேண்டியது எனது கடமை. அனுமதி கொடுங்கள் நான் சென்று புலிப்பால் கொண்டு வருகிறேன் என்றான் ராணியும் மந்திரியும் மகிழ்ந்தார்கள் அவர்கள் எதிர்பார்த்தது நடந்து விட்டது. மன்னனோ பதறினான். மணிகண்டா நீ பாலகன் இது மிகவும் ஆபத்தான காரியம் நான் வேறு ஆட்களின் மூலம் முயற்சிக்கிறேன் இந்த விபரீதத்தில் நீ இறங்கவேண்டாம் என்றான். அப்பா என்னை நம்புங்கள் என் திறமையின் மீது உங்களுக்கே நம்பிக்கையில்லையா? தயவுசெய்து என்னைச் செல்ல அனுமதியுங்கள். வெற்றியோடு திரும்புகிறேன் என்று வேண்டினான். மணிகண்டனின் உறுதியும் கட்டளைக் குரலும் மன்னனை மறுக்க முடியாமல் செய்தன. துணைக்கு நமது படையை அழைத்துச் செல் மணிகண்டா. வேண்டாம் அப்பா கூட்டமாக சென்றால் புலிகள் மிரண்டு ஓடி ஒளிந்து கொள்ளும். நான் ஒருவனாகவே சென்று முடித்து வருகிறேன். தைரியமாக விடை கொடுங்கள். போய் வெற்றியுடன் வா மணிகண்டா என்று வாழ்த்திய மன்னன் ராஜசேகரன் தனது குலதெய்வமான சிவபெருமானுக்கு பூஜித்த முக்கண்ணனின் தேங்காய் ஒன்றையும் கூடவே பயணத்தில் உண்பதற்கான உணவுப் பொருள்களுமாக ஒரு துணியில் இருபுறமும் முடிச்சுகளாகக் கட்டி மணிகண்டனிடம் கொடுத்து வழியனுப்பி வைத்தான். இந்த நிகழ்வின் காரணமாகத்தான் சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி சுமந்து செல்லும் வழக்கம் உண்டானது. பந்தள நாட்டின் எல்லையைக் கடந்து மணிகண்டன் காட்டுக்குள் பிரவேசித்த போது, இந்திரன் முதலான தேவாதி தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பூதகணங்களும் மணிகண்டனை எதிர்கொண்டு வரவேற்றனர்.
மகிஷியின் வதம்: மகிஷியின் வதத்துக்கான நேரம் நெருங்கிவிட்ட மகிழ்ச்சியுடன் மணிகண்டனைப் போற்றித் துதித்து அவனை அழைத்துச் சென்று மலையுச்சியின் உயர்ந்த சிம்மாசனத்தில் அமர வைத்துப் பூஜித்தனர். தேவர்கள் அன்று மணிகண்டனை அமர வைத்துத் தொழுத அந்த இடமே "பொன்னம்பலமேடு" எனவும், அந்த மலையே "காந்தமலை" எனவும் அழைக்கப்படுகிறது. இதை "தக்ஷிண கைலாயம்" எனவும் இங்கிருந்து உற்பத்தி ஆகும் நதி " தக்ஷிண கங்கை" என்றும் அழைப்பதுண்டு. தன்னை அழிப்பதற்காக ஒரு பாலகன் தலைமையில் தேவர்கள் படை திரட்டியிருக்கிறார்கள் என்கிற தகவல் அதற்குள் மகிஷியின் காதுகளை எட்டியிருந்தது. மணிகண்டனை தேவர்கள் தொழுது கொண்டிருந்த சமயத்தில் அரக்கி மகிஷி அங்கே வந்து குதித்தாள். அவளது அசுரர் படை கூப்பாடு போட்டபடி பின் தொடர்ந்து வந்தது. யாரடா அவன் பொடியன் என்னைக் கொல்ல வந்திருப்பவன் என்று கர்ஜித்தவள். பாலகனான மணிகண்டனைப் பார்த்ததும் வியந்து போனாள். அடுத்த நொடி வயிறு குலுங்கச் சிரித்தவள், கோபம் கொப்பளிக்க அடேய் சிறுவா பிள்ளைப்பூச்சி போலிருக்கும் நீயா என்னை எதிர்க்க வந்திருக்கிறாய். இன்றோடு உன் ஆயுள் முடிந்தது என் சுண்டுவிரலால் உன்னை நசுக்கி விடுகிறேன் பார் என்றபடி மணிகண்டனை நோக்கிப் பாய்ந்தாள். அடுத்த நொடி போர் தொடங்கியது. மகிஷியின் அசுரர் படைகளும் தேவேந்திரனும் படைகளும் அவர்களுக்கு துணையாக பூதகணங்களும் மோதின. தேவர்களும் பூதகணங்களும் ஆக்ரோஷமாகப் போர் புரிந்து ஆயிரக்கணக்கான அசுரர்களைக் கொன்று குவித்தார்கள். மகிஷமுகி தன்னுடைய மாயா சக்தியினால் பல்லாயிரக்கணக்கான பாணங்களை எய்தாள். மகிஷியின் அத்தனை பாணங்களையும் அஸ்திரப் பிரயோகங்களையும் மணிகண்டன் அநாயசமாகத் தடுத்து தவிடுபொடியாக்கினான். இறுதிக் கட்டம் நெருங்கிக் கொண்டிருந்தது. மணிகண்டனின் பாணங்களால் அடிபட்டு மகிஷியின் உடலெல்லாம் ரத்தம் பீறிட்டுச் சிதறியது. பலம் குன்றிப் போனாள் மகிஷமுகிக்குத் தனது முடிவு தெரிந்து விட்டது. அவள் புரிந்து கொண்டாள் தெய்வாம்சம் பொருந்திய இந்தச் சிறுவன் நிச்சயம் ஹரிஹரனின் புத்திரனாகத்தான் இருக்கவேண்டும். வயதும் பன்னிரெண்டுதான் இருக்கும் தேஜஸ் அவனை பிரம்மச்சாரி என்றே உணர்த்துகிறது. அப்படியானால் நான் பிரம்மாவிடம் கோரிய வரம் பலிக்கப் போகிறதா என் விதி முடியும் தருணமா இது. மகிஷி தனது மரணத்தை உணர்ந்த தருணமே மணிகண்டன் அவளை நெருங்கி தலையின் இரு கொம்புகளைப்பற்றிப் பிடித்துத் தூக்கி கரகரவென்று சுழற்றித் தூக்கியெறிந்தான். மகிஷியின் உடல் " அழுதா" நதிக்கரையில் வந்து விழுந்தது. அவள் மீண்டும் எழும் முன் ஸ்ரீ தர்மசாஸ்தாவாகிய மணிகண்டன் அவள் உடல் மீது ஏறி நின்று நர்த்தனமாடினார். மகிஷியின் உயிர் மெல்லப் பிரிந்தது. மகிஷியின் உடலின் மீது மணிகண்டன் நர்த்தனமாடி சம்ஹாரம் செய்ததைக் கண்டு மகிழ மேலுலகில் இருந்து முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள், கந்தவர்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள், அஷ்டதிக் பாலகர்கள், யட்சர்களுடன், சிவபெருமானும் விஷ்ணுவும் கூட வந்திருந்தனர். அப்போது அங்கே ரிஷப வாகனத்தில் வந்த சிவபெருமான் மணிகண்டன் நடனத்தைக் காண்பதற்காக தனது காளையைப் பக்கத்தில் உள்ள ஆசிரமத்தில் கட்டி வைத்தாராம். அந்த புனிதமான இடமே சபரிமலையில் செல்லும் வழியில் உள்ள " காளை கட்டி " ஆசிரமம் ஆகும். தேவர்கள் பூமாரி பொழிந்து வெற்றி முழக்கமிட்டனர். அப்போது அங்கே ஓர் ஆச்சர்யம் நிகழ்ந்தது மண்ணில் மலை போல வீழ்ந்து கிடந்த மகிஷியின் உடலிலிருந்து விடுதலையாகி சாப விமோசனம் பெற்று எழுந்தாள் லீலாவதி அவள். மணிகண்டனை நெருங்கி அவனது பாதத்தில் வீழ்ந்து பணிந்தாள். ஐயனே தங்களின் புனிதக் கரங்கள் என் மீது பட்டதால் சாப விமோசனம் பெற்றேன். இனி நான் தங்களுக்கே சொந்தம் என்னைத் திருமணம் செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் ஸ்வாமி என்று வேண்டினாள். மணிகண்டன் புன்முறுவல் பூத்தான். லீலாவதி இந்த அவதாரத்தில் நான் நித்ய பிரம்மச்சாரியாகவே இருப்பதென்று தீர்மானித்திருக்கிறேன். எனவே என்னை அடைய வேண்டுமென்ற உன் எண்ணம் நிறைவேறாது. ஐயனே தாங்கள் இப்படி என்னை ஒரேயடியாக நிராகரிக்கக்கூடாது, கருணை காட்டுங்கள் ஸ்வாமி என்று லீலாவதி தழுதழுத்தாள். அப்படியெனில் ஒரேயொரு வாய்ப்பை உனக்கு அளிக்கிறேன். இங்கே மலையில் எனக்கென்று அமைக்கப்படும் கோவிலில்தான் நான் வீற்றிருக்கப் போகிறேன். என்னை தரிசிக்க வருடந்தோறும் கோடானுகோடி பக்தர்கள் வருவார்கள் அப்படி இங்கே வரும் ஒவ்வொரு பக்தரும் அடுத்தமுறை வரும்போது மற்றொரு பக்தரைத் தன்னுடன் அழைத்து வருவர். இதனால் ஆண்டுக்காண்டு என் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகும். ஒவ்வொரு வருடமும் புதிதுபுதிதாகப் பக்தர்கள் கன்னிச்சாமி என்ற பெயரோடு என்னை தரிசிக்க வருவார்கள். இந்த நியதி எப்போதாவது மாறி ஏதாவது ஒரு வருடத்தில் கன்னிச்சாமிகள் யாரும் வரவில்லை என்றால், அப்போது கண்டிப்பாக உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் அதுவரைக் காத்திரு என்று பதிலுரைத்தவன் மேலும் தொடர்ந்து சொன்னான். என்னுடைய கோவிலுக்கருகிலேயே உனக்கும் ஒரு கோவிலை எழுப்பச் செய்கிறேன். நீ எனது இடப்பக்கத்தில் மாளிகைபுரத்து அம்மன் என்ற பெயரோடு கோவில் கொண்டு வீற்றிரு. மக்கள் உன்னை மஞ்சமாதா என்று வழிபடுவார்கள். என்னை தரிசனம் செய்ய வரும் எல்லா பக்தர்களும் உன்னையும் தரிசித்து விட்டுத்தான் செல்வார்கள் என்று அருள் புரிந்தான். தர்மசாஸ்தா அருகிலேயே இருப்பது சாதாரண பாக்கியமா என்ன மஹா பாக்யம் ஆயிற்றே. மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டாள் லீலாவதி இவ்வாறாக மஞ்சமாதா ஐயப்பனின் அருகில் இடம் பிடித்தாள். மணிகண்டனின் அவதாரநோக்கம் நிறைவடைந்தது. ஆனால் காட்டுக்கு வந்த காரியம் முடிவடையவில்லேயே தாயின் தலைவலிக்குப் புலிப்பால் கொண்டு செல்ல வேண்டுமே. தேவேந்திரன் ஒரு பெண் புலியாகவும், மற்ற தேவர்கள் அனைவரும் புலிக் கூட்டங்களாக உருமாறினார்கள் மணிகண்டன் கம்பீரமாக அந்த வேங்கையின் மீது அமர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கான புலிகள் கொண்ட புலிக்கூட்டம் அவனைப் பின் தொடர்ந்தது. அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பாக இன்னொரு காரியம் செய்ய வேண்டியிருந்தது. வதம் செய்த மகிஷியின் உடலைக் கற்களைப் போட்டு மூடும் வேலை. இறந்த மகிஷியின் உடல் உயிரற்றதாக இருந்தாலும் அரக்க உடல் என்பதால் மலை போல் வளரத் தொடங்கி விடும். எனவே மணிகண்டன் மகிஷியின் உடலைப் பாதாளத்தில் தள்ளிக் கற்களால் மூடினான். மற்றவர்களும் ஐயனுடன் சேர்ந்து ஆளுக்கொரு கல் எடுத்து வீசி கற்குவியலுக்குள் மகிஷியின் உடலைப் புதைத்தனர்.
அப்படிக் கற்களால் மூடப்பட்டு மகிஷி அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் " கல்லிடும் குன்று" என்று வழங்கப்படுகிறது. மணிகண்டன் பெண்புலியின் மீது கம்பீரமாக அமர்ந்து புலிக்கூட்டம் பின் தொடர பந்தள ராஜ்ஜியத்துக்குள் நுழைந்தான். நகர மக்கள் உறுமியபடி வந்த ஆயிரக்கணக்கான புலிகளையும் பிரம்மாண்ட வேங்கையின் மீது கோடி சூர்ய பிரகாசத்துடன் அழகுற ஆரோகணித்து வந்த மணிகண்டன் திருவுருவத்தையும் கண்டு திகைத்தனர் வியந்தனர் பயந்தனர் ஒளிந்திருந்து கண்குளிர தரிசித்தனர்.
அரண்மனையிலோ மன்னன் ராஜசேகரன் கண்களில் தாரை தாரையாக ஆனந்தக்கண்ணீர், அரசி கோப்பெருந்தேவியோ திடுக்கிட்டுப் போனாள். புலிப்பால் கொண்டு வர கானகம் போனவன் கொடிய மிருகங்களால் தாக்கப்பட்டு சின்னாபின்னமாகி விடுவான் என்று நினைத்திருந்தவளுக்கு மணிகண்டன் ஒட்டுமொத்த புலிக் கூட்டத்துடனே வந்தது அதிர்ச்சியாக இருந்தது. அம்மா தங்களது தலைவலியைப் போக்க இதோ புலியுடனேயே வந்துவிட்டேன் தாயே. தாங்கள் வேண்டிய அளவு பாலைக் கறந்து கொள்ளலாம் என்று அன்னையிடம் புன்னகையுடன் கூறிய மணிகண்டன் தந்தையிடம் திரும்பி அப்பா வைத்தியரை அழைத்து வரச் சொல்லுங்கள். உடனே சிகிச்சையை தொடங்கட்டும் என்றான்.
மன்னன் ராஜசேகரன் மணிகண்டனை மார்புறத் தழுவினான். மணிகண்டா இது நிச்சயமாக மானிடர் செய்யக்கூடிய காரியமே இல்லை. நீ புலிப்பால் கொண்டுவர கானகம் சென்றதுமே, உன் அன்னைக்கு தலைவலி தீர்ந்துவிட்டது உண்மையைச் சொல் நீ யார் என்று தழுதழுத்த குரலில் கேட்டார்.
கோப்பெருந்தேவியோ மணிகண்டனின் காலடியில் சரிந்தாள் அவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. மணிகண்டா என்னை மன்னித்து விடப்பா. நீ தாய் என்றழைக்கத் தகுதியில்லாதவள், நான் என் வயிற்றில் பிறந்த பிள்ளை ராஜ்ஜியத்தை ஆளவேண்டும் என்ற ஆசையில் கடவுள் எனக்களித்த தெய்வமகனான உன்னைக் காட்டுக்கு அனுப்பிவைத்த பாவி நான். போலியாக நடித்து புலிப்பால் கேட்ட எனது ஈனச் செயலை மன்னித்துவிடு மகனே என்று கதறினாள். மன்னன் ராஜசேகர பாண்டியன் உண்மையை உணர்ந்தான் கோபம் கொண்டான். வீரர்களே அந்த அயோக்கிய மந்திரியையும் சதிக்கு உடந்தையாக இருந்த அரண்மனை வைத்தியரையும் உடனடியாக கட்டி இழுத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். வேண்டாம் தந்தையே எல்லோரையும் மன்னித்து விடுங்கள். விதி இழுத்துப் போன பாதையில் தங்களையுமறியாமல் தவறிழைத்தவர்கள் அவர்கள்.
நான் இந்த பூமிக்கு வந்த அவதார நோக்கத்தை நிறைவேற்ற அவர்களும் இவ்வாறாக எனக்கு உதவியிருக்கிறார்கள் என்று தடுத்துப் பேசினான் மணிகண்டன். பின்னர் புலிகளிடம் திரும்பி இந்திரனே தேவர்களே நீங்கள் செய்த உதவிக்கு நன்றி இனி நீங்கள் தேவலோகம் செல்லலாம் என்று சொல்ல அடுத்த நொடியே புலிக்கூட்டங்கள் மறைந்தது. மன்னன் ராஜசேகர பாண்டியன் ஏதும் விளங்காதவனாய் மணிகண்டா யாரப்பா நீ என்ன இந்தத் திருவிளையாடல் என்று கேட்டான்.
அதை நான் சொல்கிறேன் மன்னா என்றபடி உள்ளே வந்தார் அகத்திய மாமுனிவர். மன்னன் ராஜசேகர பாண்டியனுக்கும் அரசி கோப்பெருந்தேவிக்கும் மணிகண்டனின் அவதார நோக்கத்தின் மகிமையை ஆதி முதல் அந்தம் வரை விளக்கிக் கூறினார். மன்னரும் அரசியும் மெய் சிலிர்த்துப் போனார்கள்.
ஹரிஹர புத்ரனா இத்தனை நாட்கள் தங்கள் வீட்டில் வளர்ந்து தங்கள் மடியில் தவழ்ந்து விளையாடியது. ஆஹா நாங்கள் எத்தனை பாக்யசாலிகள். மகனே மணிகண்டா உன் அவதார நோக்கம் முடிந்து விட்டாலும் எங்களுக்கு செய்யவேண்டிய இன்னொரு கடமை மிச்சம் உள்ளது. நாளையே உனக்கு பட்டாபிஷேகம் செய்வித்து விடுகிறேன் பந்தள தேசத்திற்கு மன்னனாகி இனி நீதான் நாட்டைப் பரிபாலிக்க வேண்டும் என்றான் ராஜசேகரன். ஆம் கண்ணே அப்பா சொல்படி உடனே ராஜ்ஜியத்தை ஏற்றுக்கொள் என்றாள் கோப்பெருந்தேவி. தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள் மகிஷியை அழிக்கும் அவதார நோக்கத்திற்குப் பிறகு இந்தக் கலியுகத்தில் மக்களை நல்வழிப்படுத்தி அவர்களைக் காக்க வேண்டியது என் கடமை. அதுவே எனது அவதாரத்தின் நோக்கமாகும். அதற்காகவே எனக்கென்று ஓரிடத்தை அமைத்துக் கொண்டு அங்கிருந்தே என்னை நாடி வரும் பக்தர்கள் துயர் தீர்த்து அவர்களுக்கு அருள்பாலிக்க விரும்புகிறேன். தாங்கள் எனக்களிப்பதாகச் சொல்லும் சிம்மாசனத்தை விட என்னைத் தேடி வரும் பக்தர்களின் இதய சிம்மாசனமே எனக்கு விருப்பமானது என்று முடிவாகச் சொன்னான் மணிகண்டன். மன்னன் ராஜசேகரன் மனம் வருந்தினாலும் எல்லோருக்குமான இறைவனை தன் சுயநலத்திற்காகப் பிடித்து வைத்துக்கொள்வது சரியல்ல என்று உணர்ந்தான். அவன் மணிகண்டனிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொண்டான். மகனே உனது பட்டாபிஷேகத்திற்காகவே நான் ஆசை ஆசையாக ஆடை ஆபரணங்களைச் சேகரித்திருக்கிறேன் அவற்றை எனக்காக ஒருநாளாவது அணிந்து சிம்மாசனத்தில் அமர்ந்து எங்களுக்கு காட்சி தர வேண்டும் பகவானே என்று இறைஞ்சினான். ஐயனும் மன்னன் ராஜசேகரின் அன்புக்கு கட்டுப்பட்டு ஆகட்டும் தந்தையே நான் கோயில் கொண்ட பிறகு அந்த ஆடை ஆபரணங்களை மகர சங்கராந்தி தினத்தன்று அணிந்து தங்களுக்குக் காட்சி தருவேன் என்று உறுதியளித்ததோடு அந்த திருவாபரணப் பெட்டி எவ்வாறு யாரால் சபரிமலைக்கு எடுத்து வரப்பட வேண்டும் எந்தெந்த ஆலயங்களில் இறக்கி பூஜை செய்து ஆசீர்வாதம் பெற வேண்டும் என்பதையும் மன்னனுக்கு எடுத்துரைத்தான்.
சபரிமலை ஆலயம்: மணிகண்டன் மன்னனிடம் தந்தையே தங்களது ராஜ்ஜியத்தில் எனக்கென்று கொஞ்சம் நிலத்தை தர முடியுமா என வினவினான். உனக்கு எவ்வளவு இடம் வேண்டுமோ எடுத்துக் கொள் மகனே என்றான் மன்னன். மறுகணம் ஐயன் தந்தையே நான் இப்போது வில்லில் அம்பு பூட்டித் தொடுக்கப் போகிறேன். அந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அந்த இடத்தை எனக்களித்தால் போதும். அங்கே எனக்கு ஆலயம் எழுப்புங்கள். அங்கிருந்து நான் அருள்பாலிக்கிறேன் என்றான் மணிகண்டன் பின் வில்லெடுத்து அம்பு தொடுத்தான் அம்பு சென்று விழுந்த இடம் சபரிமலை. அக்கணமே ஐயன் அனைவரின் கண்ணெதிரே ஜோதிப் பிழம்பானான். விண்ணுக்கும் மண்ணுக்குமாக விஸ்வரூபம் எடுத்து ஒளிர்ந்தான். அந்த ஜோதியானது சபரிமலையில் சென்று இறங்கியது. கோடி சூரியப் பிரகாசத்துடன் அந்தப்பகுதி ஜொலித்தது கலியுகத்தின் மனித மனங்களின் இருளைக் கிழித்தெறியத் தொடங்கியது. ஐயன் சொற்படி ஆலயத்தை உருவாக்க முனைந்தான் மன்னன். அவனுக்கு பக்கபலமாக நின்று ஆலோசனைகளை அள்ளி வழங்கினார் அகத்திய மாமுனிவர். கோயிலின் ஒவ்வொரு அமைப்பையும் அகத்தியருடன் கலந்தாலோசித்து அவரது ஆலோசனைப்படியே கிழக்கு நோக்கி பதினெட்டுப் படிகளுடன் கூடிய கோயிலைக் கட்டி முடித்தான் ராஜசேகர பாண்டியன்.
பதினெட்டுப்படிகள்: பதினெட்டுப்படிகள் தாத்பர்யம் என்ன அகத்திய மாமுனிவர் மன்னன் ராஜசேகரனுக்கு விளக்கினார். இந்தப் பதினெட்டுத் திருப்படிகளும் பதினெட்டுத் தத்துவங்களைக் குறிக்கின்றன. மெய் ; வாய் ; கண் ; மூக்கு ; செவி ஆகிய ஐந்து இந்திரியங்களும்
காமம் ; குரோதம் ; லோபம் ; மோகம் ; மதம் ; மாச்சர்யங்கள் ; திதிஷை ; டம்பம் ; ஆகிய அஷ்ட ராகங்களும்
சத்வ ; இராஜஸ ; தாமஸ குணங்களும் வித்யையும் அவித்யையும் சேர்த்து தத்துவங்கள் பதினெட்டாகும்.
தத்வாதீனாகப் பகவான் இருக்கிறான் என்பதை உணர்த்தும் விதம்தான் இந்த பதினெட்டுப்படிகள்.
அகத்திய மாமுனிவரின் இந்த விளக்கம் கேட்டு மனம் மகிழ்ந்தான் மன்னன் ராஜசேகரன்.
கோயில் கட்டி முடித்ததும் சாஸ்தாவுக்கு எந்த வகையிலான விக்ரஹம் அமைப்பது என்ற கேள்வி எழுந்தது? கேரளப் பிரதேசத்தை உருவாக்கியவரான பரசுராமரே அதைத் தீர்மானித்தார்.
சாஸ்தாவின் பலவித ரூபங்களில் இரு கால்களையும் குத்திட்டு யோக பட்டத்துடன் பந்தனம் செய்த வண்ணம் தத்வமஸி என்னும் சின் முத்திரையுடன் கூடிய பகவானின் திருவுருவமே ஏற்றது என்று சொன்னார் பரசுராமர். ஒரு மார்கழி மாதக் கடைசி நாளில் சபரிமலையில் ஆலயத் திருப்பணிகள் இனிதே முடிந்தது. மகா சங்கராந்தி தினமான தை மாதப்பிறப்பு நன்னாளில் ( கிருஷ்ண பக்ஷம் ; பஞ்சமி திதி ; உத்திரம் நக்ஷத்திரம் கூடிய சுப யோக சுப தினத்தில் ) பரசுராமர் ஸ்ரீ தர்மசாஸ்தாவைப் பிரதிஷ்டை செய்தார்.
இனி ஸ்வாமியை எப்படி அழைப்பது : ஐயனை அன்னையாகவும் அப்பனை தந்தையாகவும் கொண்டதனால் அவன் ஐயப்பன் ஆகிறான். மேலும் ஐயன் என்றால் உயர்ந்தவன் பெரியவன் என்றெல்லாம் பொருள் உண்டு. மேலும் பரசுராம க்ஷேத்ரமான கேரளாவில் எல்லாமே அப்பன்தான். உதாரணமாக குருவாயூரப்பன், ஏற்றுமானூரப்பன் வைக்கத்தப்பன், காக்கரையப்பன் அந்த வகையில் ஐயனுடன் அப்பனைச் சேர்த்து ஐயப்பன் என்று அழைக்கிறார்கள். குலகுருவாம் அகத்திய மாமுனிவர் துணையிருந்து பூஜை விதிகளை கிரமமாக நிறைவேற்றி வைத்தார். அன்றிலிருந்து ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி ஸ்வரூபத்தில் காட்சியளித்து அருள் பாலித்து வருகிறார். அதே போல் தனது குருவுக்கு வாக்களித்தபடி மணிகண்டன் குரு தட்சணையாக ஆண்டுதோறும் மகரஜோதியாக காட்சி தருகிறார்.
இவ்வாறாக கலியுகத்தின் உன்னத புனிதத் தலமாக பூலோக சொர்க்கம் சபரிமலை ஆலயம் உருவானது.
ஐயனே வேதம்
ஐயனே யாகம்
ஐயனே மோக்ஷம்
ஐயனே ப்ராணம்
ஐயனே தத்வம்
ஐயனே நித்யம்
ஐயனே ஜீவணம்
ஐயனே லோகம்
ஐயனே ஸகலம்
ஐயனே ஸ்மரணம்
ஐயனே சரணம்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
திங்கள், 16 நவம்பர், 2020
ஐயப்பன் வரலாறு
சாஸ்தா வழிபாடு
சாஸ்தா வழிபாடு!
அஷ்டசாஸ்தா வழிபாடு
யுகம் கடந்த புருஷனாக விளங்குபவர் சாஸ்தா. கிருதயுகத்தில் கந்த புராணக் கூற்றுப்படி சூரபதுமனுக்காகவும் அசுரர் குலத்துக்காகவும் பயந்து பூமியில் பாரத தேசத்தில் தமிழ்நாட்டில் குடகு முதல் காவிரி பாயும் தீர்த்தக்கரைவழியே வந்து வேணுபுரம் என்று வடமொழியில் கூறப்படும் சீர்காழிப் பகுதியில் தேவேந்திரன் தன் மனைவி சசிதேவியுடன் மறைந்து வாழ்ந்திருந்த போது தேவர்கள் அவனைத் தேடிக் கண்டுப்பிடித்து சூரபதுமன் அழிய வேண்டுமானால் முருகப் பெருமான் அவதாரம் ஆக வேண்டும் என்று சிவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோரி இந்திரனையும் கயிலாயம் அழைத்துச் சென்றனர். தனித்துவிடப்பட்ட இந்திராணியை சூரபதுமன் சகோதரி அஜமுகி என்ற அரக்கியிடமிருந்து சாஸ்தா காத்தருளினார். (இடம் தென்பாதிகிராமம், சீர்காழி) என்று கந்தபுராணம் கூறுகிறது. எனவே முருகனுக்கும் மூத்தோன் என்று சாஸ்தா கூறப்படுகிறார். அதேபோல, சிவபுராணத்தில் சிவனை மதியாது யாகம் நடத்திய ரிஷிகளுக்கும், ரிஷி பத்னிகளுக்கும் சிவன் மகிமையை வெளிப்படுத்த சிவன் பிக்ஷாடனராகவும், திருமால் மோகினியாவும் உருமாறி அவர்களை மாயையிலிருந்து விடுபடச் செய்து நல்வழிப்படுத்திய பின் சிவ-விஷ்ணு சேர்க்கையில் அயோனிஜனாக சாஸ்தா அவதரித்ததாக வழுவூர் மகாத்மியம் கூறுகிறது. (இடம் கழினிவாசல், வழுவூர்) பத்மாசுரன் தலையில் கைவைத்து மோகினி மாலும் சிவனும் கூடி சாஸ்தா அவதாரமானது மரக்காணம் பாண்டிச்சேரி அருகில் உள்ள புத்துப்பட்டு என்னும் கிராமம் என்று கூறப்படுகிறது. (பத்மபுராணம்)
லலிதோ பாக்யானத்திலும் கந்த புராணத்திலும் பாற்கடல் கடைந்த சமயத்தில் மோகினி அவதாரம் எடுத்த திருமாலுக்கும் சிவனுக்கும் ஹரிஹரபுத்திரர் அவதரித்தார் என்று கூறப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் கிருதயுகத்தைச் சார்ந்தவையாகும். த்ரேதாயுகத்தில் இராமவதாரம் நடைபெற்றுது. புத்ரகாமேஷ்டி யாகத்தை தசரதன் நடத்திய போது யாககுண்டத்திலிருந்து கையில் பாயச பாத்திரத்துடன் ஓர் யுகபுருஷன் வெளிவந்தான் எனவும் மஹத்பூதம் என்றும் வால்மீகி வர்ணிப்பது சந்தானப்ராப்தி யருளும் மாணிக்க பாத்திரம் கையிலேந்தி இருக்கும் சாஸ்தாவையே குறிப்பதாகும். இராமன் தரிசனம் பெற்ற சபரி முக்தி அடைந்தது சாஸ்தாவின் அருளினால் என்பதால் தான் மதங்கமலை என்று வழங்கப்பட்ட இடம் இன்று சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இராமர் முறித்த சிவதனுசு வில் சாஸ்தாவின் ஆவேச சக்தி ஆவிர்பாகம் ஆகியிருந்ததாகவும் சாந்த மூர்த்தியான இராமன் அந்த வில்லைத் தொட்டவுடன் சாஸ்தாவின் ஆவேச சக்தி இராமரிடம் குடி புகுந்து பிற்காலத்தில் இராவணனை அழிக்க உதவியது என்று சமூக வரலாறு நூல் ஒன்று தெரிவிக்கிறது.
துவாபர யுகத்தில் (மஹாபாரத காலம்) அரக்குமாளிகையிலிருந்து பாண்டவரைக் கைப்பற்றினார் சாஸ்தா என்று ஓர் செவி வழிக்காதை உண்டு. அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் கொடுக்கும் முன்பு அவனது வீரத்தைப் பரிட்சிக்க பரமேச்வரன் வேடுவனாகத் தோன்றி ஒரு பன்றியை வில்லால் அடித்துக் கொன்றது யார் என்று பிரச்சினை எழுப்பி போர் தொடுத்து முடிவில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் கொடுத்தார் பரமேச்வரன். அந்த பிரச்சினைக்குக் காரணமாயிருந்த முள்ளம் பன்றியை உசுப்பி விட்டவர் சாஸ்தா என்று கூறுகிறார்கள் (ஆதாரம் : சிதம்பரம் அருகே உசுப்பூர் சாஸ்தா கோயில்) கலியுகத்தில் பம்பையில் தவழ்ந்து பந்தள பாலகனாக வளர்ந்து மகிஷி ஸம்ஹாரம் செய்து வன்புலி வாகனனாகத் தோன்றி பூதநாத கீதை உபதேசம் செய்தருளி சபரிமலையில் கோயில் கொண்டான் சாஸ்தா என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
இந்தியா முழுவதும் ஐயப்பன் வழிபாடு தற்போது பிரபலமாகி வருகிறது. இதில் ஐயப்பன், சாஸ்தா, ஐயனார் என பல உருவங்களில் ஐயப்பன் வழிபாடு நடைபெறுகிறது. இது தவிர ஆதிபூத நாதர், கல்யாண வரதர், மஹா சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, சந்தான பிராப்தி சாஸ்தா, வீர சாஸ்தா, ஞான சாஸ்தா, வேத சாஸ்தா என எட்டு வகையான சாஸ்தா இருப்பது பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி அனைவரும் தெரிந்து கொள்வதற்காக இந்த அஷ்ட சாஸ்தா வழிபாடு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நடமாடும் தெய்வமாம் காஞ்சி மஹா முனியின் அருளானையின்படியும், சிருங்கேரி ஆச்சார்யாளின் அனுக்ரஹதினாலும் ஐயப்ப வழிபாட்டில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து கலிகாலத்திற்கு உகந்தவாறு எட்டு வித அவதாரங்களை வடிவமைத்து கொடுத்து ஐயப்பனின் பதமலர்களை அடைந்தவர் குருசாமி பிரம்மஸ்ரீ விஸ்வநாத சர்மா. அவரது முயற்சியின் பலனாக திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம், பாலாஜி நகர்-சாய் நகரில் அஷ்டசாஸ்தா திருக்கோயில் விரைவில் கட்டப்பட இருக்கிறது. கோயில் திருப்பணிக்கு நன்கொடை தர விருப்பமுள்ளவர்கள், பொருளாகவோ, பணமாகவோ வழங்கலாம்.
தொடர்புக்கு:வில்லிவாக்கம் ஸ்ரீ விஸ்வநாத சர்மா அஷ்டசாஸ்தா ட்ரஸ்ட்
29, வடக்கு மாட வீதி, ஐயப்பன் கோயில் அருகில்,
வில்லிவாக்கம், சென்னை-600 049.
போன் : +91-44-2617 3963, 99625 62067, 99625 62068.
email: sasthakalyan@gmail.com
அஷ்டசாஸ்தா வழிபாடு - 1
ஸ்வாமியே சரணம் ஐயப்பா சபரிமலை யாத்திரை பகுதி ஒன்பது. சாஸ்தா வழிபாடு!
அஷ்டசாஸ்தா வழிபாடு - 1
யுகம் கடந்த புருஷனாக விளங்குபவர் சாஸ்தா. கிருதயுகத்தில் கந்த புராணக் கூற்றுப்படி சூரபதுமனுக்காகவும் அசுரர் குலத்துக்காகவும் பயந்து பூமியில் பாரத தேசத்தில் தமிழ்நாட்டில், குடகு முதல் காவிரி பாயும் தீர்த்தக்கரைவழியே வந்து வேணுபுரம் என்று வடமொழியில் கூறப்படும் சீர்காழிப் பகுதியில் தேவேந்திரன் தன் மனைவி சசிதேவியுடன் மறைந்து வாழ்ந்திருந்த போது தேவர்கள் அவனைத் தேடிக் கண்டுப்பிடித்து சூரபதுமன் அழிய வேண்டுமானால் முருகப் பெருமான் அவதாரம் ஆக வேண்டும் என்று சிவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோரி இந்திரனையும் கயிலாயம் அழைத்துச் சென்றனர். தனித்து விடப்பட்ட இந்திராணியை சூரபதுமன் சகோதரி அஜமுகி என்ற அரக்கியிடமிருந்து சாஸ்தா காத்தருளினார். {இடம் தென்பாதிகிராமம், சீர்காழி} என்று கந்தபுராணம் கூறுகிறது. எனவே முருகனுக்கும் மூத்தோன் என்று சாஸ்தா கூறப்படுகிறார். அதேபோல சிவபுராணத்தில் சிவனை மதியாது யாகம் நடத்திய ரிஷிகளுக்கும் ரிஷி பத்னிகளுக்கும் சிவன் மகிமையை வெளிப்படுத்த சிவன் பிக்ஷாடனராகவும், திருமால் மோகினியாவும் உருமாறி அவர்களை மாயையிலிருந்து விடுபடச் செய்து நல்வழிப்படுத்திய பின் சிவ விஷ்ணு சேர்க்கையில் அயோனிஜனாக சாஸ்தா அவதரித்ததாக வழுவூர் மகாத்மியம் கூறுகிறது. {இடம் கழினிவாசல், வழுவூர்}
பத்மாசுரன் தலையில் கைவைத்து மோகினி மாலும் சிவனும் கூடி சாஸ்தா அவதாரமானது மரக்காணம் பாண்டிச்சேரி அருகில் உள்ள புத்துப்பட்டு என்னும் கிராமம் என்று கூறப்படுகிறது. {பத்மபுராணம்} லலிதோ பாக்யானத்திலும் கந்த புராணத்திலும் பாற்கடல் கடைந்த சமயத்தில் மோகினி அவதாரம் எடுத்த திருமாலுக்கும் சிவனுக்கும் ஹரிஹரபுத்திரர் அவதரித்தார் என்று கூறப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் கிருதயுகத்தைச் சார்ந்தவையாகும்.
த்ரேதாயுகத்தில் இராமவதாரம் நடைபெற்றுது. புத்ரகாமேஷ்டி யாகத்தை தசரதன் நடத்திய போது யாககுண்டத்திலிருந்து கையில் பாயச பாத்திரத்துடன் ஓர் யுகபுருஷன் வெளிவந்தான் எனவும் மஹத்பூதம் என்றும் வால்மீகி வர்ணிப்பது சந்தானப்ராப்தி யருளும் மாணிக்க பாத்திரம் கையிலேந்தி இருக்கும் சாஸ்தாவையே குறிப்பதாகும். இராமன் தரிசனம் பெற்ற சபரி முக்தி அடைந்தது சாஸ்தாவின் அருளினால் என்பதால் தான் மதங்க மலை என்று வழங்கப்பட்ட இடம் இன்று சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இராமர் முறித்த சிவதனுசு வில் சாஸ்தாவின் ஆவேச சக்தி ஆவிர்பாகம் ஆகியிருந்ததாகவும் சாந்த மூர்த்தியான இராமன் அந்த வில்லைத் தொட்டவுடன் சாஸ்தாவின் ஆவேச சக்தி இராமரிடம் குடி புகுந்து பிற்காலத்தில் இராவணனை அழிக்க உதவியது என்று சமூக வரலாறு நூல் ஒன்று தெரிவிக்கிறது.
துவாபர யுகத்தில் {மஹாபாரத காலம்} அரக்குமாளிகையிலிருந்து பாண்டவரைக் கைப்பற்றினார் சாஸ்தா என்று ஓர் செவி வழிக்காதை உண்டு. அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் கொடுக்கும் முன்பு அவனது வீரத்தைப் பரிட்சிக்க பரமேச்வரன் வேடுவனாகத் தோன்றி ஒரு பன்றியை வில்லால் அடித்துக் கொன்றது யார் என்று பிரச்சினை எழுப்பி போர் தொடுத்து முடிவில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் கொடுத்தார் பரமேச்வரன். அந்த பிரச்சினைக்குக் காரணமாயிருந்த முள்ளம் பன்றியை உசுப்பி விட்டவர் சாஸ்தா என்று கூறுகிறார்கள் {ஆதாரம் : சிதம்பரம் அருகே உசுப்பூர் சாஸ்தா கோயில்}
கலியுகத்தில் பம்பையில் தவழ்ந்து பந்தள பாலகனாக வளர்ந்து மகிஷி ஸம்ஹாரம் செய்து வன்புலி வாகனனாகத் தோன்றி பூதநாத கீதை உபதேசம் செய்தருளி சபரிமலையில் கோயில் கொண்டான் சாஸ்தா என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்தியா முழுவதும் ஐயப்பன் வழிபாடு தற்போது பிரபலமாகி வருகிறது. இதில் ஐயப்பன், சாஸ்தா, ஐயனார் என பல உருவங்களில் ஐயப்பன் வழிபாடு நடைபெறுகிறது. இது தவிர ஆதிபூத நாதர், கல்யாண வரதர், மஹா சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, சந்தான பிராப்தி சாஸ்தா, வீர சாஸ்தா, ஞான சாஸ்தா, வேத சாஸ்தா என எட்டு வகையான சாஸ்தா இருப்பது பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி அனைவரும் தெரிந்து கொள்வதற்காக இந்த அஷ்ட சாஸ்தா வழிபாடு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
நடமாடும் தெய்வமாம் காஞ்சி மஹா முனியின் அருளானையின் படியும், சிருங்கேரி ஆச்சார்யாளின் அனுக்ரஹதினாலும் ஐயப்ப வழிபாட்டில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து கலிகாலத்திற்கு உகந்தவாறு எட்டு வித அவதாரங்களை வடிவமைத்து கொடுத்தார்கள். [தொடர்ச்சி நாளை]
_________________________________________________________________
கார்த்திகை மாதம் சபரிமலை போகிறவர்களுக்கு
கார்த்திகை மாதம் ஆரம்பம் சபரிமலை போறீங்களா... முதல்ல இதப்படிங்க!
கார்த்திகை மாதம் துவங்கியதும் இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்;கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டு தோறும் இருமுடி ஏந்தி சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன் சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால் பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்!
1. சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளே மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள் மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.
2. மாலை துளசி மணி 108 கொண்டதாகவோ உருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.
3. தாய் தந்தையின் நல்லாசியுடன் குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று கடவுள் பாதத்தில் மாலையை வைத்து அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம்.
4. இவ்வாறு மாலை அணிந்த பின்பு கோபதாபம் குரோதம் விரோதம் கொள்ளக்கூடாது. அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து சிநேகம் பாராட்டி பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.
5. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும் மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி கோவில்களிலோ வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வணங்க வேண்டும்.
6. கருப்பு, நீலம், காவி, பச்சை நிற வேட்டி, சட்டை அணிய வேண்டும்.
7. பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
8. மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.
9. ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
10. ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது.
11. பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.
12. மது மாமிசம் புகைபிடித்தலை விட்டுவிட வேண்டும்.
13. மாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம்.மற்றவர்கள் வீட்டில் பால் பழம் சாப்பிடலாம்.
14. வீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால் ஏழுநாட்கள் கழித்த பின்னர் தான் அவர்கள் சமைத்த உணவை உண்ணவேண்டும்.
15. காலணிகள் பயன் படுத்தக்கூடாது.
16. கன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்விக்கலாம்.
17. எதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும் பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதிப் பழக வேண்டும்.
18. மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் எனத் தொடங்கி விடைபெறும் பொழுது சாமி சரணம் எனக் கூற வேண்டும்.
19. இருமுடிக்கட்டு பூஜையை வீட்டிலோ குருசாமி இடத்திலோ கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.
20. சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.
21. பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடன்களைச் செய்து நீராட வேண்டும்.
22. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்திய படியே வீட்டு வாசல் படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.
23. வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து கட்டினைப் பிரித்து பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும்.
24. யாத்திரை இனிய முறையில் நிறைவுற்ற பின் குருநாதர் அல்லது தாயார் மூலம் மாலை கழற்ற வேண்டும். ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு முன்னால் வைத்து விட்டு தீபாராதனை காட்டி விரதம் முடிக்க வேண்டும்.
தெரிந்து கொள்ள வேண்டியவை:
1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை முடிவெட்டுதல் சவரம் செய்துகொள்ளுதல் கூடாது.
2.மெத்தை தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல் தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும்.
3. பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம்.
4. மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும்.பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது.
5. விரத நாட்களில் பெண்களை சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும்.
6. வீட்டிலிருக்கும் பெண்கள் மாதவிலக்கானால் அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருத்தல் வேண்டும்.அப்படி வசதி இல்லாவிடில் மாலை அணிந்தவர்கள் வெளியில் எங்காவது தங்கியிருத்தல் நல்லது.
7. விரத சமயத்தில் மாலை அணிந்தவர்களுக்கு மிகவும் துன்பங்கள் ஏற்படும் என்பதும் சோதனைகளுக்கு உள்ளாவார்கள் என்பதும் தவறான கருத்துகளாகும்.
8. ஒருவேளை அணிந்திருக்கின்ற ஒரே மாலை தவறுதலாக அறுந்துபோக நேரிட்டால் அதைச் செப்பனிட்டு அணிந்துகொள்ளலாம்.இதில் தவறு ஏதுமில்லை.எந்தவிதமான தவறும் செய்யாமல் விரதத்தைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில் இப்படி மாலை அறுந்துவிட்டதே என்ற வீண் மன சஞ்சலமும் அடைய வேண்டியதில்லை.
9. மாலை போடும் சமயத்தில் எந்தவிதமான பயமோ சந்தேகமோ குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது.அப்படி மனசஞ்சலம் ஏதாவது இருந்தால் மாலை போடுவதை தள்ளிப்போடுதல் நல்லது.
10. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் அப்பழுக்கற்ற பக்தியும் மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும்.
11. இருமுடி கட்டும் வைபவத்தை தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது.வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.
12. மாலையணிந்து சபரிமலைக்குச் செல்லும் நோக்கங்கள் மூன்று : தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்; தன் புலன்களை எல்லாவகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம் உடல் இவற்றைத் தூய்மைப்படுத்துதல் தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல் வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்கவைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்.
13. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து முழு சரணாகதி அடைந்து ஒருமுகமாக வழிபட்டால் இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும்.படிகள் ஏற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்!
வியாழன், 12 நவம்பர், 2020
அஞ்சுவட்டத்துக் காளி அம்மன்
சுற்றிலும் மேற்புறமும் எனக் கவசமாய் நின்றுக் காத்தருளும் அஞ்சு''''கீழ்வேளூர் (கீவளூர்) வனமுலை நாயகி உடனுறை கேடிலியப்பர் (அட்சய லிங்கசுவாமி) திருக்கோயில் ''நாகப்பட்டினம்
மாவட்டம் சிக்கல் திருத்தலத்தில் இருந்து எட்டாவது கிலோ மீட்டரில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற திருத்தலம். அருணகிரிநாதர் திருப்புகழ் வைப்புத்தலம்.
கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோவில்களுள் இத்தலம் ஒன்றாகும். இத்தலத்தில் தான் அகத்தியருக்கு நடராஜப்பெருமான் தமது வலது பாத தரிசனம் தந்தருளினார். குபேரனுக்கும் இத்தலத்தில் தனி சன்னிதி இருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.
திருச்செந்தூரில் சூரபத்மனை அழித்து அவனை ஆட்கொண்டு தேவர்களை காத்து அபயம் அளித்தான் முருகப்பெருமான். சூரபத்மனை அழித்ததால் முருகப்பெருமானை வீரகத்தி தோஷம் (கொலைபாவம்) சூழ்ந்தது. இதனால் முருகப்பெருமானின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருந்து வந்தது. இதனை விலக்க முருகப் பெருமான் சிவாலயங்களில் சிவபூஜை செய்து வழிபட்டு வந்தார். அங்கெல்லாம் அவருடைய சிவபூஜை நிறைவுறாத வண்ணம் முருகப் பெருமானின் மனதை வாட்டி வந்தது வீரகத்தி தோஷம். அதுமட்டுமல்ல முருகப்பெருமான் சிவபூஜை செய்யும் இடங்களில் எல்லாம் மாயமாய் இருந்து வீரகத்தி துர்சக்திகள் சிவபூஜையை நிறைவேற விடமால் தடுத்தன. முருகனைச் சுற்றி பல பயங்கர முகங்கள் தாண்டவமாடின. எல்லாம் பார்க்க முடியாத படி கோர உருவங்கள். இதனால் பொறுத்துப் பார்த்த முருகப் பெருமான் சிவபெருமானிடம் அய்யனே! சிவபூஜை நிறைவேற்றிட துணை புரிய வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார். உடனே சிவபெருமான் தோன்றி ''முருகா! உந்தனுக்கு அம்மை அருளிய நமது சிவசக்தி வேல் பெற்ற சிக்கல் திருத்தலம் அருகில் உள்ள இலந்தை வனத்திற்கு வந்து சிவபூஜை செய்திடுக! அங்கே உந்தன் சிவபூஜை நிறைவேற சிக்கலில் சிவசக்திவேல் அளித்து சூரபத்மனை அழிக்க உந்தனுக்கு துணை புரிந்த அம்மை இலந்தைவனத்தில் சிவபூஜை செய்யும் போது உந்தனுக்கு துணை புரிவாள்'' என அருளி மறைந்தார். அதற்கேற்ப முருகப்பெருமானும் தாம் சூரனை வதைக்க சிவசக்தி வேல் பெற்ற சிக்கல் திருத்தலத்திற்கு வந்து அதன் அருகில் உள்ள இலந்தைவனம் வந்து அங்கு சுயம்புவாய் அரும்பியிருந்த சிவலிங்கத்திற்கு சிவபூஜை செய்தார். அபிஷேகத்துக்கு தீர்த்தம் வேண்டி அருகில் பூமியில் தன் வேலை ஊன்ற அதிலிருந்து தீர்த்த நீர் பீச்சி வந்து அதுவே இத்தல சரவணப்பொய்கை தீர்த்தமானது. முருகப் பெருமான் ஈசன் கூறியபடி தமக்கு சூரனை வதைக்க சிவசக்திவேல் கொடுத்த அன்னையை தம் சிவபூஜை இலந்தைவனத்தில் சிறப்புடன் நிறைவேறிடத் துணைக்கு அழைத்தார். சிவபூஜை செய்யத் துவங்கினார். அப்போது அவரை சுற்றி மாயமாய் வீரகத்தி துர்சக்திகள் தோன்றி சிவபூஜைக்கு இடையூறு செய்தன. இதனைக்கண்ட அன்னை உமையவள் மனம் கொதித்தாள். தாம் கொடுத்த சிவசக்தி வேல் கொண்டு சூரபத்மனை அழித்து தேவரைக் காத்த முருகனை இந்த துர்சக்திகள் சுற்றி நின்று சிவபூஜை நிறைவேற விடாமல் ஆர்பரிக்கின்றனவே எனக் கொதித்து அக்கொடிய வீரகத்தி துர்சக்திகளை அழித்து ஒழிக்க தம்மிலிருந்து மிகப்பெரிய தோற்றத்தில் காளியை உதிர்த்தாள். சிவபூஜைக்கு இடையூறு செய்யும் வீரகத்தி துர்சக்திகளை நோக்கி தம் கண்களை சுழற்றினாள் காளி. நான்கு புறமும் முருகனைச் சுற்றி இடைஞ்சல் கொடுத்த துர்சக்திகளை அகற்ற காளியானவள் சிவபூஜை செய்யும் முருகனை அந்த வீரகத்திகள் அண்டாமல் இருக்க நான்கு புறமும் ஒரு கவசம் ஏற்படுத்தினாள் காளி. அப்போது வீரகத்தி துர்சக்திகள் நான்கு பக்கமும் அன்னையின் கவசத்தால் புகமுடியாமல் நிற்க ஆகாயம் வழி வந்து இடைஞ்சல் கொடுத்தன. இதனைக் கண்ட காளி நான்கு பக்கமும் மற்றும் ஆகாயம் என ஐந்து கோணத்திலும் முருகப்பெருமானைச் சுற்றிலும் வட்டமாய் ஒரு கவசம் ஏற்படுத்தினாள். காளியின் அதிகோர உருவையும் உக்கிரத்தையும் கண்ட வீரகத்தி தோஷ துர்சக்திகள் ஓட்டமெடுத்தன. முருகப்பெருமானின் சிவபூஜையும் சிறப்புற நிறைவேறியது. தம்மை சுற்றி நான்கு புறமும் மற்றும் ஆகாயம் என ஐந்து கோணத்திலும் வட்டமாய் கவசம் ஏற்படுத்தி அருளிய தமது அன்னையை ''அஞ்சுவட்டத்தம்மா'' எனப்போற்றித் துதித்தார் முருகப்பெருமான். முருகப்பெருமானை வீரஹத்திதோஷங்களில் இருந்து காத்த காளிஅன்னை இத்தலத்தில் ''அஞ்சு வட்டத்தம்மன்'' என்னும் திருநாமத்திலேயே அருள் பாலிக்கிறார். அஞ்சு வட்டத்தம்மன் இங்கு சுதைவடிவில் பெரிய திரு உருவுடன் பத்து திருக்கரங்களுடன் வடக்கு திசை நோக்கி அருள் பாலிக்கிறார். இங்கு அமாவாசை மற்றும் ராகு காலங்களில் எலுமிச்சை தீபம் ஏற்றி கருவறை தீபத்தில் எள் எண்ணெய் சேர்த்து ஒன்பது உதிரி எலுமிச்சை பழங்களை சமர்ப்பித்து குங்குமார்ச்சனை செய்து அஞ்சுவட்டத்துக் காளி அம்மனை வழிபட்டு வர நம்மை பிடித்த நோய்கள் தீராத நோய்கள், தரித்திரம், வறுமை, ஏவல், பில்லி, சூன்யம், மாந்திரீகம் என அத்தனை பீடைகளும், தீவினைகளும், தோஷங்களும் விலகி ஓடும். கருக்கலைப்பு செய்ததால் வந்த கொடிய பாவம் மற்றும் பிறரது சாபங்கள் பிற தோஷங்கள் யாவும் அஞ்சு வட்டத்துக் காளியம்மனை தொடர்ந்து நாம் வழிபட்டு வர விலகும். தொடுவதால், காற்று மூலம் பரவுவதால் என பரவும் தொற்றுக்கிருமிகளையும், தொட்டு தொடரும் பற்றிப்படரும் தொற்று நோய்களையும் அடியோடு துடைத்தெறியும் வல்லமை படைத்தவள் அஞ்சுவட்டத்து அம்மன். ஆம்! காற்றின் மூலம் பரவும் தொற்றுக் கிருமிகளானாலும் எந்தவிதத்திலும் எந்தப்பக்கமிருந்தும் அண்டாமல் காத்திடும் அதியற்புத வல்லமைபடைத்த அன்னையே அஞ்சு வட்டத்து அம்மன்.
அது போல சில நேரங்களில் பலருக்கு தங்கள் பிரச்சனைகளுக்கு பரிகாரம் செய்திட நினைத்து பரிகாரம் செய்திட எண்ணும் பொழுது அப்பரிகாரத்தை நாம் செய்து நிறைவேற்றிட முடியாமல் நிறைய தடங்கல்கள் வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இத்தலம் வந்து முறைப்படி விநாயகர், நந்தி, சுவாமி அம்பாள், முருகப் பெருமான் வழிபட்டு அஞ்சுவட்டத்துக் காளியம்மனை வழிபட்டு வந்தால் அந்த தடங்கல்கள் விலகும். இதனால் வாழ்வின் சகல தோஷங்களும் அகலும். பித்ரு தோஷம், குலதெய்வ சாபம் உள்ளவர்களும் இத்தல அஞ்சுவட்டத்துக் காளியம்மனை கெட்டியாகப் பிடித்து கொண்டால் சகல சாபங்கள், தோஷங்களையும் விலக்கி கொள்ளலாம். அது போல இன்றைய நாளில் நிறைய பேருக்கு அவர்களின் குலதெய்வம் சரியாகத் தெரியாமல் உள்ளது. இப்படிப் பட்டவர்கள் தங்கள் குலதெய்வமாக அஞ்சு வட்டத்துக் காளியம்மனை குலதெய்வமாக கருதி வழிபடலாம். அதற்கு முன்பு இத்தலம் வந்து அஞ்சு வட்டத்துக் காளியம்மனை முறைப்படி வழிபட்டு, இத்தல ஈசன் கேடிலியப்பரையும் வழிபட்டு அஞ்சு வட்டத்தம்மனை தங்கள் குலதெய்வமாக ஏற்றுக் கொள்ளலாம். இத்தல முருகப் பெருமான் சிலையையும் திருச்செந்தூர் முருகப் பெருமான் சிலையையும் ஒரே சிற்பி செய்ததாகக் கூறுகிறார்கள். மூலவர் கேடிலியப்பர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவருக்கு புனுகு சட்டம், சாம்பிராணித் தைலமுமே சார்த்தப்படுகிறது. இவர் தம்மை அண்டியவர்களின் தீவினைகள், கெடுதல்கள், கிரக தோஷங்கள், கர்ம வினைகள், கேடுகள் அகற்றி இன்பம் அருள் வதால் கேடிலியப்பர் ஆனார். ''கீழ்வேளூர் ஆளும் கோவைக் கேடிலியை நாடும்
அவர்கேடு இலாரே'' என்கிறார் அப்பர் திருநாவுக்கரசர். ஆம்! இத்தல கேடிலியப்பரை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் எந்தஒரு கேடும் அண்டாது என தமது பதிகம் மூலம் உறுதிபட கூறுகிறார் அப்பர். இத்தல வழிபாடு செய்யும் முன் அருகில் உள்ள சிக்கல் வேல் நெடுங்கண்ணி உடனுறை வெண்ணை நாதர் திருக்கோயில் வழிபாடு செய்து, இத்தலம் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகக் கூறுகிறார்கள். தொற்று நோய்களையும், கொள்ளை நோய்களையும், தீராத நோய்களையும் விரட்டும் அதிசக்தி படைத்தவளாக கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் அருள் பாலிக்கிறார். இன்று உலகினையே மிரட்டும் கோரோனோ நான்கு திசைகள் ஆகாயம் என எந்தவழியிலும் வந்து அண்டாமல் இருக்கவும் அண்டிய கொரோனாவை விரட்டி அகற்றவும் சரணடைய வேண்டிய பத்ரகாளி தான் கீழ்வேளூர் அஞ்சு வட்டத்தம்மன். உண்மை தான் சமயபுரம் மாரியம்மன் போல தக்கச்சமயத்தில் வந்துகாக்கும் அஞ்சு வட்டத்தம்மன் திருப்பாதம் பணிவோம். தம்மை பணிந்தோர்களை தாமதிக்காமல் கவசமாய் காத்துநிற்கும் அஞ்சு வட்டத்தம்மனை அனுதினமும் மனத்திற்குள்ளிருத்தி வழிபட்டு கீழ்வேளூர் சென்று அன்னையையும் அம்மையப்பனையும் பணிந்தெழுவோம்.
திருஞானசம்பந்தர் தமது பதிகத்தில் இத்தல அம்மையப்பனை வழிபட்டால் துன்பங்களும் வினைகளும் பிணிகளும் அகன்றோடும் என்கிறார். நிலைத்த இன்பவாழ்வு கிட்டுவது மட்டுமின்றி, திருஞானசம்பந்தரின் இத்தலத் திருப்பதிகத்தைத் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் சிவகதி கிட்டுவது உறுதி என்கிறார். ஆம்! 'வினை ஓடிட வீடு ஆமே பிணியொடு வினை போமே,வினை தேய்வது திணம் ஆமே முடுகிய இடர்போமே வினை போமே வல்வினை போமே' என தமது 'மின் உலாவிய சடையினர் விடையினர்' பதிகத்தில் உறுதியளிக்கும் திருஞானசம்பந்தர் முத்தாய்ப்பாக 'சிவகதி பெறுவது திடம் ஆமே' என திண்ணம், உறுதி என்கிறார். எனவே நல்லருள் கிட்டி நல்வாழ்வு வாழ கீழ்வேளூர் செல்வோம். அனுதினமும் இத்தல திருஞானசம்பந்தர், அப்பர் திருப்பதிகத்தை பாராயணம் செய்வோம். கீழ்வேளூர் திருத்தலம் வந்து அஞ்சு வட்டத்து அம்மனை சரணடைந்து சிவசக்தியை வழிபட்டால் துன்பங்கள், வினைகள், பிணிகள் அடியோடு அகன்று விடும். இதனைத்தான்'' நடலைகள் நணுகாவே'' அதாவது துன்பங்கள் அடையாது என்றும்,''முடுகிய இடர்போமே'' அதாவது வலிந்து வரும் இடர் போகும் என்றும்''பிணியொடு வினைபோமே'' அதாவது பிணிகளும் வினைகளும் போகும் என்றும் திருஞானசம்பந்தர் தமது பதிகத்தில் உறுதிபடக் கூறியுள்ளார். அஞ்சு வட்டத்து அம்மனை கந்தர் சஷ்டி, நவராத்திரி நாட்களில் வழிபடுவது பாவங்கள், தோஷங்களை அகற்றி நல்வாழ்வு வாழவைக்கும். "நானேயோ தவம் செய்தேன்? சிவாய நம' எனப் பெற்றேன்?"."நேற்றைய வாழ்வு அலங்கோலம் அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம் வரும் காற்றில் அணையாச் சுடர்போலும், அருள் கந்தன் தருவான் எதிர்காலம், எனக்கும் இடம் உண்டு அருள் மணக்கும் முருகன் மலரடிநிழலில்"
செவ்வாய், 10 நவம்பர், 2020
துலா ஸ்நானம்
துலா ஸ்நானம் (கங்கையே காவிரிக்கு வந்து தன் பாபங்களை போக்கிகொள்கிறாள்)
கங்கை புனித நதி. கங்கையில் மூழ்கினால் பாவங்கள் தொலையும் என்பது புராணங்கள் கூறும் செய்தி. சிவபெருமானின் ஜடாமுடியினுள் கங்கை இருக்கிறாள். அதனால் சிவனுக்கு “கங்காதரன்” என்றும் ஒரு பெயர் உண்டு. கங்கையைக் கடவுள் நதி என்று கம்பன் போற்றுகிறான். கங்கையை விடப் புனிதமான ஒரு நதி இருக்கிறது என்று புராணங்களும் மகரிஷிகளும் கூறுகிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா ஆனால் அதுதான் உண்மை.
“கங்கையிற் புனிதமாய காவிரி” என்கிறார் ஆழ்வார். சேர நாட்டினரான இளங்கோவடிகள்
“மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்தும்
கருங்கயற்கண் விழித்து ஓல்கி
நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஓல்கி
நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி!”
இதன் பொருள் என்ன தெரியுமா?
“காவிரி நடை பயின்று வருகின்ற வழியெல்லாம் கழனிகள் எல்லாம் பச்சைப் பசுங் கம்பளங்கள் போல் திகழ்கின்றன. புனல் பெருகும் வழியெல்லாம் புது வெள்ளத்தினைக் கண்டு களித்து பூஞ்சோலையிலே மயில்கள் நாட்டியங்கள் புரிய இன்னிசை பாடுகின்ற குயில்களும்” என்று சேர நாட்டினரான இளங்கோவடிகளும் கம்பனுக்கு இணையாக ரசித்திருக்கிறார். காவேரி தீரமு நன்னு பாவனமு ரங்க புரிநீ” என்று தியாகய்யர் தமது கிருதியில் பாடியுள்ளார். காவேரிக்கும் கொள்ளிடத்திற்கும் நடுவே ஸ்ரீரங்கம் இருக்கிறது. இங்கு சுகமாக ஸ்ரீ ரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கிறார். “அவத்தடா காவேரி இவத்தடா கொள்ளிடம்” என்ற வார்த்தை சரியானதுதானே? இவளுக்கு அருமையான கதை ஒன்றும் உண்டு.
அகஸ்திய மாமுனிவர் விந்திய மாமலையின் செருக்கை அடக்க இறைவனின் கட்டளையை ஏற்றுப் புறப்பட்டார். அவர் சிறந்த சிவபக்தர். இறைவனின் பூஜைக்கு அபிஷேக ஜலத்திற்கு என்ன செய்வது என்று இறைவனிடம் கேட்டார். இறைவன் காவிரியைக் கமண்டலத்தினுள் அடக்கிக் கொண்டு போகச் சொன்னார். ஆனால் காவிரி தயங்கினாள். “நான் எப்பொழுது திரும்பிப் போவது” என்று கேட்டாள். “காவிரியே இவர் ஐம்புலன்களையும் அடக்கிய மாமுனிவர். நீ எப்பொழுது இவர் “போ”என்று சொல்லுகிறாரோ அப்பொழுது நீ பிரவாகித்து போய் விடலாம் ”என்று திருவாக்கருளினார் இறைவன்! விந்திய மலையின் செருக்கை அடக்கிய மாமுனிவர் காவிரி அடங்கிய கமண்டலத்துடன் குடகு மலையில் சிவ பூஜையில் ஈடுபட்டார். சீர்காழிப் பதியில் சூரபத்மனுக்குப் பயந்த தேவேந்திரன் மூங்கிலாக மறைந்திருந்த பொழுது நாரதர் அங்கே வந்தார். தேவேந்திரன் இறைவனின் பூஜைக்குத் தண்ணீர் இல்லாத குறையைச் சொல்லி அழுதான். நாரதர் குடகில் அகஸ்தியரின் கமண்டலத்தில் காவிரி நீர் இருப்பதைக் கூறினார். காவிரி நீர் வெளியே வர வினாயகரின் உதவியை நாடினான் தேவேந்திரன். காக்கை வடிவம் எடுத்த வினாயகர் கமண்டலத்தின் மீது அமர அகஸ்தியர் “போ… போ” என்று விரட்ட காக்கை கமண்டலத்தைக் கவிழ்த்தது. காவிரியோ மாமுனிவர் தன்னைத்தான் போகச் சொல்கிறார் என்று எண்ணி பிரவாகித்து சோழவள நாட்டைப் புனிதப்படுத்தினாள். இவளுக்குப் பொன்னி என்று ஒரு பெயரும் உண்டு. தான் பாயும் இடங்களைப் பொன் மயமாக்கி வளப்படுத்துவதினால் அவளுக்கு இப்பெயர் வந்தது. ஐப்பசி மாதத்தைத் துலா மாசம் என்று கூறுவார்கள். தீபாவளியும் கந்த சஷ்டிப் பெருவிழாவும் நடந்தாலும் ஐப்பசி மாதம் முழுவதுமே மிகவும் விசேஷமானது. துலா என்றால் தராசு. துலா மாதத்தில் காவிரியில் நீராடுவது மிகவும் விசேஷம். தலைக் காவிரியில் `துலா ஸ்நானம்’ செய்வது மிகவும் விசேஷம். தலைக்காவிரியில் பாகமண்டலம் என்னும் இடத்தில் காவிரியுடன் கனகா என்ற நதியும் இணைகிறது. கண்ணுக்குப் புலப்படாத சுஜ்ஜோதி என்ற மூன்றாவது நதியும் இணைகிறது. ஐப்பசி மாத துலா ஸ்நானத்தின் பொழுது காவிரி பேரொலி எழுப்பிக் கொண்டு ஓடும் அழகைக் காணலாம். அடுத்து காவிரி ஓடும் அழகை ஸ்ரீரங்கத்தில் பார்க்கலாம்.
காவிரிக்கு ஒரு வரலாறு உண்டு.
லோபா முத்திரை பிரம்மாவின் புத்ரி. லோபா முத்திரை தான் காவிரி நதி என்று வரலாறுகள் சொல்லுகின்றன. காவிரி நதியான பின்பு அகஸ்தியர் அவளை மணக்க ஆசை கொண்டாராம். காவிரி ஒரு நிபந்தனை போட்டாளாம். முனிவர் தன்னை விட்டுப் போகக் கூடாது என்று சொன்னாளாம். அகஸ்தியரும் ஒப்புக் கொண்டாராம். வெளியே சென்ற முனிவருக்கு ஒரு நாள் நேரம் அதிகமாகி விடவே மாலைக் கடன்களை வரும் வழியில் உள்ள கனகா நதியில் முடித்துக் கொண்டார். இதைக் கண்டு கோபம் கொண்ட காவிரி மலையடிவாரத்தில் உள்ள ஹோம குண்டத்தில் குதித்து விட்டாள். இதைக் கண்டு அகஸ்தியரின் சீடர்கள் கத்தவே அகஸ்தியர் ஓடி வந்தார். இதற்குள் காவிரி மறைந்து சற்று தொலைவில் வெளியேறினாள். அகஸ்தியர் என்ன சமாதானம் கூறியும் அவள் கேட்காமல் ஓடினாள்.
இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது.
காவிரி உற்பத்தியாகும் இடத்தருகே தாத்ரிபுரம் என்ற ஊரில் சுயஜ்னா என்ற முனிவர் இருந்தார். அவர் தமக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று கேட்டு தவம் இருந்தார். மஹா விஷ்ணு தோன்றி வரம் அளித்தார். “உனக்குப் பிறக்கும் பெண் மகவை பருவமடைந்ததும், பக்கத்திலுள்ள அக்னி மலையில் சந்திக்கும் கனகாவிடம் ஒப்படைத்து விடு என்றார். அதன்படியே முனிவருக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு சுஜ்ஜோதி என்று பெயரிடப்பட்டது. பிறந்தது முதல் நாராயணனின் நினைவாகவே இருந்து அவரையே தன் நாயகனாக எண்ணினாள். அவளை முனிவர் அக்னி மலைக்கு அழைத்துச் சென்று கனகாவிடம் ஒப்படைத்தார். ஆனால் அவளை இந்திரன் அடையத் துடித்தான். சுஜ்ஜோதியோ நாராயணனை நோக்கித் தவம் இருந்தாள். ஸ்ரீமந் நாராயணன் அவள் முன்பு தோன்றினார்.
சுஜ்ஜோதி கவலைப் படாதே.பிரம்ம கிரியிலிருந்து காவேரி தோன்றி இந்த மண்ணைப் புனிதப்படுத்தப் போகிறாள். அவளுடன் கலந்து கொள்ள ஏதுவாக உன்னையும், கனகாவையும் நதிகளாக மாற்றி அவளுடன் கலக்க வைத்து விடுகிறேன். உலகின் கண்களுக்கு கனகா மட்டுமே தெரிவாள். நீ சுந்தரவாஹினியாகத்தான் காவிரியுடன் இருப்பாய். தேவேந்திரன் உன்னைக் கண்டு கொள்ள மாட்டான். இருவரும் பாக மண்டலத்தில் காவிரியுடன் இணைந்து உலகை வலம் வாருங்கள் என்றார். அகஸ்தியரிடம் கோபித்துக் கொண்டு ஓடி வந்த காவிரியுடன் இந்த இரு நதிகளும் இணைந்து விடுகிறார்கள். ஸ்ரீரங்கத்தின் புகழ் பெற்ற காவிரி, மூன்றாவதாக மாயூரத்தில் அகண்ட காவிரியாக பிரவாகித்து ஓடுகிறாள். இதற்கு `மயிலாடுதுறை’ என்னும் ஒரு பெயருண்டு. “ஆயிரம் ஆனாலும் மாயூரம் போல ஆகுமா?” என்பார்கள். இங்கு வேத நாயகன் விநாயகப் பெருமான், முருகன் வந்து பூஜித்திருக்கிறார்கள். நந்தி தேவரின் சாபம் விலகிய ஸ்தலம். திருமகளும், கலைமகளும் தொழுத தலம். இதன் வழியே பெருகி ஓடிய பொன்னி நதி பூம்புகாரில் கடலோடு சங்கமிக்கிறாள். ஐப்பசி திங்கள் (மாதம்) முதல் துலாக்காவிரி நீராடுவது தலை சிறந்தது. குடகில் பிறந்த காவிரிப் பெண் அகண்ட காவிரியாக ஏறத்தாழ 1760 அடி அகலத்தில் பரந்து விரிந்து ஓடுவதை திருச்சி அருகில் திருப்பராய்த்துறையில் காணலாம். இந்தத் தலத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாத முதல் நாள் அன்று திருப்பராய்த்துறை நாதர் கோயிலிலிருந்து அகண்ட காவிரிக்கு எழுந்தருளிதீர்த்தம் வழங்குவது இன்றைக்கும் வரலாற்றில் சொல்லப்படும் நிகழ்ச்சியாகும். இங்கு காவிரியில் நீராடுவது மாயூரத்தில் நீராடுவதற்குச் சமம் என்பார்கள். துலா மாதத்தில் இருபத்தொன்பது நாட்கள் நீராட முடியா விட்டாலும் முப்பதாவது நாளாகிய கடைசி நாளில் நீராடுவது முப்பது நாட்களும் காவிரி நதியில் நீராடுவதற்குச் சமமான புண்ணியத்தையும் பெறலாம் என்பார்கள்.
இதற்கு ஒரு சம்பவம் இருக்கிறது.
கண்வ மகரிஷி கங்கையில் நீராடச் செல்லுகிறார். வழியில் மூன்று சண்டாளக் கன்னிகைகளைக் காண்கிறார். இவர்கள் இந்த மண்ணில் உள்ளவர்களின் பாபங்களைத் தன்னுள் கரைத்துக் கொண்டு புண்ணியத்தை வாரி வழங்கியவர்கள். இதனால் மற்றவர்களின் பாபம் இவர்கள் மீது விழுந்து விடுகிறது. பாபச் சுமைகளைச் சுமந்து நிற்கும் இவர்களின் பாபங்களை யார் கழுவுவது? இவர்கள் தான் கங்கை, யமுனை, சரஸ்வதி. தங்கள் பாவங்களைக் கழுவும் பேராற்றல் படைத்தவரைத் தேடி வந்தவர்களை வழியில் கண்வ மகரிஷி சந்திக்கிறார். எல்லோரது பாவங்களையும் நீக்கி முக்தி அருள வல்ல புனிதத்தையே மாயூரத்தில் ஓடும் காவிரி நதி செய்கிறாள். இவர்களுடன் கண்வ மகரிஷியும் காவிரியை நோக்கி வருகிறார். ஐப்பசி மாதம் முழுதுமே புண்ணிய தினங்கள். உண்ணாமல், உறங்காமல் நோன்பு நோற்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிற்கு வரும் சுமங்கலிக்கு தாம்பூலம், ரவிக்கைத் துணி வைத்துத் தந்தாலே புண்ணியம் தான். காவிரியில் நீராடுபவர்கள் போகும் போதே ஒரு பையில் தாம்பூல வகைகளை எடுத்துச் செல்வார்கள். நீராடிய பின்னர் அங்கு நீராடிய சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் தருவார்கள். சில வயதானவர்கள் நீராடி விட்டு வீட்டுக்கு வந்து ஒரு சுமங்கலியை வரச் சொல்லி முறத்தில் தாம்பூலம், ரவிக்கை, (முடிந்தால் புடவை) பழங்கள், இனிப்பு என்று வைத்துத் தருவார்கள். தினமும் சிலர் முறத்தில் புடவையைத் தவிர தாம்பூலம், ரவிக்கை, பழங்கள் இனிப்பு வைத்து ஒரு சுமங்கலிக்குத் தருவார்கள். துலா மாதம் காவிரி இல்லாத இடத்தில் இருப்பவர்கள் காவிரியைப் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
திபாவளி ஸ்ரீ ரங்கம்
திபாவளி @ ஸ்ரீ ரங்கம் - பூலோக வைகுண்டம் என்று போற்றப் படும் ஸ்ரீரங்கம் திருத்தலம் நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது.
இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் பெரியாழ்வாரின் மாப்பிள்ளை என்று புராணம் கூறுகிறது. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கநாதர் தீபாவளி கொண்டாடும் விதம் அலாதியானது. தீபாவளியை முன்னிட்டு முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம் மேளதாளத்தோடு பெரிய பெருமாளுக்கு கண்டருளப் பண்ணு வார்கள். மேலும் கோவில் சிப்பந்திகளுக்கு நல்லெண்ணெய் சீகைக்காய் தூள் ஆகியவற்றை பெருமாள் சார்பாக வழங்குவார்கள்.
தீபாவளிக்கு முந்தைய இரவு உற்சவர் நம்பெருமாளுக்கும் எண்ணெய் அலங்காரம் நடைபெறும். அதைத் தொடர்ந்து கோவிலில் அருள் பாலிக்கும் ஆழ்வார் ஆச்சாரியர் சந்நிதி களுக்கு நல்லெண்ணெய் சீகைக்காய்த் தூள் விரலிமஞ்சள் ஆகியவை பெருமாள் சார்பாக அந்தந்த சந்நிதிகளில் உள்ள அர்ச்சகர் மூலம் அனுப்பி வைக்கப்படும். தீபாவளியன்று அதிகாலை தாயார் மற்றும் ஆழ்வார் ஆச்சாரியர் சந்நிதிகளில் எண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்குப் புத்தாடை மலர் மாலை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். அலங்காரம் முடிந்ததும் ஆழ்வார்கள் ஆச்சாரியர்களின் உற்சவமூர்த்திகள் அனைவரும் புறப்பட்டு பெரிய சந்நிதிக்குக் கிழக்கில் உள்ள கிளிமண்டபத்துக்கு வந்து பெருமாள் வருகைக்காகக் காத்திருப்பார்கள்.
அப்போது பெருமாளின் மாமனார்- பெரியாழ்வாரும் மாப்பிள்ளை ஸ்ரீரங்கநாதருக்காக தீபாவளி சீர் தருவதற்காகக் காத்திருப்பார். பெரிய சந்நிதியில் அருள் புரியும் உற்சவர் நம்பெருமாள் காலை பத்து மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றதும் சிறப்பு அலங்காரத் துடன் பக்தர்களுக்கு அருள் புரிவார். இந்த நிகழ்ச்சி எல்லாம் முடிந்த பின் ஸ்ரீரங்கநாதரை மாப்பிள்ளையாக அடைந்த பெரியாழ்வார் (ஸ்ரீஆண்டாளின் வளர்ப்புத் தந்தை தான் பெரியாழ்வார் என்பது குறிப்பிடத்தக்கது.)தீபாவளி சீர் தரும் நிகழ்ச்சி நடைபெறும்.
பெரியாழ்வாரின் பிரதிநிதிகளாக அரையர்கள் சீர் வழங்கும் வழக்கம் இன்று வரை மிகச்சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நம்பெருமாள் திருவடிகளைச் சுற்றி சீர்வரிசையான நாணய மூட்டைகள் வைக்கப்படும். அப்போது வேதபாராயணங்கள் முழங்க, மங்கள வாத்தியம் வாசிக்கப்படும்.இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர். ஜாலி அலங்காரம் என்பது ஆயிரம் ஒரு ரூபாய் நாணங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது. இந்த நிகழ்ச்சி நடைபெற்றதும் பெருமாள் கோவிலின் இரண்டாம் பிராகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். தீபாவளி சீர் பெற்ற பெருமாள் மீண்டும் சந்தனு மண்டபம் வருவார். மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை பக்தர் களுக்குக் காட்சி கொடுத்து அருள்வார். அதன்பின் கிளிமண்டபத்தில் காத்திருக்கும் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் அனைவரும் ஒவ்வொருவராக பெருமாள் முன் எழுந்தருளி பெயர் சொல்லி அழைக்கப்படுவார்கள். அப்போது பெருமாள் அவர்களுக்குப் புது வஸ்திரம் சந்தனம் தாம்பூலம் மலர் பழங்கள் ஆகியவற்றை தீபாவளிப் பரிசாகக் கொடுத்து கௌரவிப்பார். பெருமாளிடம் தீபாவளிப் பரிசு பெற்ற ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்கள் பெருமாளிடம் விடை பெற்றுக் கொண்டு தங்கள் சந்நிதிக்குத் திரும்புவார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கநாயகித் தயார் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் கலந்து கொள்ள மாட்டார்கள்.
இந்தத் திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடை களுக்கும் பணவரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது என்பது நம்பிக்கை
உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்!
உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்!
ஈசன் அதற்கு ஏதும் பதில் சொல்லாவிட்டாலும், தடாதகை பிராட்டியாருக்கு அருள் செய்ய மனதில் எண்ணிவிட்டார். தன் மகன் முருகப்பெருமானை அழைத்தார். ஏறுமயிலேறி விளையாடியபடியே ஆறுமுகன் அவர் முன் வந்துநின்றான். தந்தையே! என்னைத் தாங்கள் அழைத்த காரணம் என்ன? என்றான். முருகனைத் தன் மடியில் அமர்த்திக்கொண்டார் ஈசன். சரவணா! அன்றொரு நாள் எனது நெற்றிக்கண்ணில் இருந்து பறந்த சுடரில் பிறந்த நீ, மக்கள் நலனுக்காக இந்த மதுரையில் பிறக்க வேண்டும். தடாதகைபிராட்டியாரின் வயிற்றில் நீ கருவாவாய், என்றார். முருகப்பெருமானும் தந்தையின் கட்டளைக்கு பணிந்து, தடாதகைபிராட்டியாரின் மணிவயிற்றில் குழந்தையாகத் தங்கினார். தான், கர்ப்பமுற்றதை அறிந்த தடாதகை மிகுந்த மகிழ்ச்சியுடன் கணவரின் மார்பில் சாய்ந்து, இந்த விஷயத்தை தெரிவித்தாள். அரசி தடாதகை கர்ப்பமுற்றதை அறிந்த அமைச்சர் சுமதி அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. அவர் இந்த விஷயத்தை மக்களுக்கு தெரிவிக்க உத்தரவிட்டார். மக்கள் தங்கள் எதிர்கால மன்னர் மதுரையில் பிறக்கப்போவதை எண்ணி மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர். மீனாட்சி கல்யாண உற்சவம் போல, ஊரெங்கும் மாவிலை தோரணம் கட்டி, இனிப்புகள் சமைத்து, தானம் செய்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். கர்ப்பஸ்திரீக்கு என்னென்ன தேவையோ அவையெல்லாம் செய்து கொடுக்கப்பட்டன. கர்ப்பவதிக்கு புளிப்பு வகை மிகவும் பிடிக்குமே! இதனால் ருசியான புளியோதரையை சமைத்துக் கொடுத்தனர். குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டுமே என்பதற்காக குங்குமப்பூ கலந்த பால், விதவிதமான பழரசங்கள் கொடுக்கப்பட்டன.
மிக முக்கியமாக வேத விற்பன்னர்கள் காலையும் மாலையும் வரவழைக்கப் பட்டு அரிய ஆன்மிகத் தத்துவங்கள், போதனைகள், கதைகள், இறைவனின் திருநாமங்களின் மகிமை ஆகியவை சொல்லப்பட்டன. இது மிகவும் முக்கியமான விஷயம். இந்தக் காலத்தில் கர்ப்பவதிகள் டிவியின் முன்னால் அமர்ந்து, கண்ட கண்ட நாடகங்களைப் பார்த்து கண்ணீர் வடிப்பதும், உணர்ச்சிவசப் படுபவதும், ஆபாசமும், வன்முறையும் கலந்த பாடல்கள், திரைப்படங் களைப் பார்த்து அவற்றையே விரும்பும் குழந்தைகளைப் பெறுகிறார்கள். தாங்கள் தவறு செய்துவிட்டு, பிள்ளைகள் கெட்டலையும் போதும், ஒழுங்காகப் படிக்காமல் இருக்கும்போதும் அவர்கள் மீது தங்கள் கடமையைச் சரிவர செய்யவில்லை என பழி போடுகிறார்கள். கர்ப்பவதிகள் தயவுசெய்து டிவி பார்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். சிறந்த ஆன்மிக நூல்களைப் படிக்க வேண்டும். யாருடைய துணையுடனாவது கோயில்களுக்குச் சென்று ஆன்மிக சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டும். இப்படி செய்தால் மிகச்சிறந்த குழந்தைகள் பிறக்கும். இப்படியாக, தடாதகை பிராட்டியாரின் கர்ப்ப கால முடிவில், அவளுக்கு வளைகாப்பு, பூச்சூடல் ஆகிய மங்கள நிகழ்ச்சிகள் மிகுந்த ஆடம்பரத்துடன் நடத்தப் பட்டன. மதுரை வாழ் மக்கள் தங்கள் அரசியாருக்கு விதவிதமான கொழுக்கட்டைகள், வடை வகைகளை கொண்டு வந்து கொடுத்தனர். ஒரு திங்கள்கிழமை, நிறைந்த திருவாதிரை நட்சத்திரம், சகல கிரகங்களும் சுபவீட்டில் இருந்த சுபயோக சுபவேளையில் தடாதகை பிராட்டியார் தன் செல்வமகனைப் பெற்றெடுத்தாள். அவள் மட்டுமா! ஊரும் உலகமும் மகிழ்ச்சியடைந்தது. சுந்தரேச பாண்டியன் தன் மகனை பார்க்க வந்த போது, மரகதவல்லியான தடாதகை பிராட்டியாரின் பச்சைக் கன்னங்களில் சிவப்பு இழையோடியது. வெட்கமும், மகிழ்ச்சியும் ஒன்றுசேரும் நேரத்தில் தான் பெண்களுக்கு அழகே கூடும் போலும்!
சுந்தரேச பாண்டியன் தன் மனைவியின் பேரழகையும், செக்கச் சிவக்க பிறந்த மகனின் பேரழகையும் ஒருசேர ரசித்தார். குறிப்பிட்ட நாட்கள் கடந்த பிறகு குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. உக்ரவர்மன் என்று பெயர் சூட்டினர். பெயர் சூட்டு விழாவுக்கு தாய்மாமன் வந்தாக வேண்டுமே! திருமால் தன் கருட வாகனத்திலும், பிரம்மா அன்னவாகனத்திலும் அவரவர் தேவியரான ஸ்ரீதேவி, பூதேவி, சரஸ்வதியுடன் வந்து சேர்ந்தனர். தேவ குரு பிரகஸ்பதி குழந்தையை ஆசிர்வதித்து, உரிய வயது வந்ததும் தானே நேரில் வந்து குழந்தைக்கு பாடங்களைக் கற்றுக்கொடுப்பதாகவும் சுந்தரேச பாண்டியனிடம் தெரிவித்தார். ஐந்து வயதில் உக்ரவர்மனுக்கு பூணூல் அணியும் வைபவம் நடந்தது. தேவகுரு பிரகஸ்பதி பாடங்களை ஆரம்பித்தார். எட்டுவயதிலேயே சகல கலைகளையும் கற்றான் உக்ரவர்மன். தந்தை சுந்தரேசபாண்டியன், அவனுக்கு பாசுபதாஸ்திரம் எய்யும் முறையை கற்றுக் கொடுத்தார். உக்ரவர்மனுக்கு 16 வயதானது. அவனுக்கு திருமணம் செய்து வைப்பதா அல்லது பட்டம் சூட்டுவதா என்று சுந்தரேசபாண்டியனும், தடாதகை பிராட்டியாரும் யோசிக்க ஆரம்பித்தனர். அமைச்சர் சுமதியுடனும், வேத பண்டிதர்களுடனும் இதுபற்றி கலந்தோலசித்தனர். திருமணமே சிறந்த வழி என அவர்கள் ஒருமித்த முடிவெடுத்துக் கூறவே பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது.
மலையத்துவஜனை அழைத்த படலம்!
மலையத்துவஜனை அழைத்த படலம்!
காஞ்சனமாலைக்கு வருத்தம். ஏழுகடல் வந்தாயிற்று, புனித நீரும் ஆடலாம். ஆனால், சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா? தீர்த்தமாடினாலும் சரி, கோயிலுக்கு போனாலும் சரி...திருமணத்துக்குப் பிறகு தம்பதி சமேதராகச் சென்றால் தான் சிறந்த பலன் உண்டு. மலையத்துவஜனோ இந்த பூமியிலேயே இல்லை. காஞ்சனா என்ன செய்வாள்? இவ்வளவு செய்தும், கணவரின்றி நீராடி பயனில்லாமல் போய்விடுமே! அவளது கண்களில் நீர் முட்டியது.சிவனடியார்களை அழைத்த காஞ்சனமாலை, திருநீறு போல் வெள்ளை உள்ளம் படைத்த அடியவர்களே! அடியவளுக்காக எம்பெருமான், எழுகடலை வரவழைத்துள்ளார். அதில் நீராட வேண்டுமானால், கணவருடன் இணைந்தே நீராட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அது என்னால் இயலாது என்பதை தாங்கள் அறிவீர்கள். இதற்கு மாற்று வழியிருக்கிறதா? எனக்கேட்டாள். அடியவர்கள் அவளது கவலையை உணர்ந்து, இதற்காக வாட வேண்டாம் தாயே! புனிததீர்த்தங்களுக்கு செல்லும் கணவனை இழந்த பெண்கள், தங்கள் புத்திரர்களின் கையைப் பிடித்தபடியே மூழ்கி எழுவதற்கு அனுமதியளிக்கிறது சாஸ்திரம். தங்களுக்கு புத்திரன் இல்லை என்பதும், ஒரே புத்திரி என்பதையும் நாங்கள் அறிவோம். இவ்வாறான சமயங்களில் பசுக்கன்றின் வாலை பிடித்தபடி நீராடுவது போதுமானதென்றும், அத்தகைய நீராடலுக்கும் புண்ணிய நீராடலின் முழுபலனும் கிடைக்கும் என்றும் சாஸ்திரம் தெரிவிக்கிறது.
தாங்கள் அதற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்,என்றனர். காஞ்சனமாலைக்கு கண்ணீர் இன்னும் அதிகமானது. தன் மகள் தடாதகையிடம் சென்று, மகளே! நான் கொடுத்து வைக்காத பாவியாகி விட்டேன். கணவரை இழந்தேன், ஆண் குழந்தைகளைப் பெறவில்லை. ஒரு பசுக்கன்றின் வாலைப் பிடித்தபடி நீராடும் நிலைக்கு ஆளானேன். என்னவோ என் மனம் இதற்கு ஒப்பவில்லை. உன் மணாளரிடமே கேட்டு, இதையும் விட சிறந்த உபா யத்தை அறிந்து சொன்னால், அந்த ஈசனின் கட்டளையை நிறைவேற்ற சித்தமாயிருக் கிறேன், என்றாள். தாயின் வருத்தம் மகளைக் கலக்கியது. மீன் தன் குஞ்சுகளைக் காப்பது போல், மக்களைக் காக்கும் மாதரசி மீனாட்சியான தடாதகை பிராட்டியார் தன் கணவரிடம் சென்று, ஈசனே! என் தாய் நீராடுவதற்காக மதுரைக்கு புனித தீர்த்தங்களை வரவழைத்தீர்கள். ஆனால், கணவனை இழந்து, புத்திரனைப் பெறாத அவள், பசுக்கன்றின் வாலைப்பிடித்தபடி நீராடுவது குறித்து வருந்துகிறாள். இந்நிலைக்கு மாற்று ஏற்பாட்டைத் தாங்களே செய்ய வேண்டும், என்றாள். தன்னை முழுமையாக நம்புவர்க்கு கேட்டதை கேட்டபடி தரும் ஈசன் அவளுக்கு அருள்புரிய மனம் கொண்டார். தேவாதி தேவனான இந்திரனை நோக்கிப் பார்த்தார். அவன் ஓடோடி வந்தான். இந்திரா! என் மாமியார் புனித தீர்த்தமாட விரும்புகிறார். கணவனுடன் இணைந்து தீர்த்தமாடினால் தான் புண்ணியபலம் கிடைக்கும் என்பதால், சொர்க்கத்தில் இருக்கும் மலையத்துவஜ பாண்டியனை புஷ்பகவிமானத்தில் ஏற்றி தக்க மரியாதைகளுடன் மதுரைக்கு அனுப்பி வை, என்றார். அதன்படியே அவன் செய்ய, மலையத்துவஜன் எழுகடல் தீர்த்தக்கரையில் வந்து இறங்கினான்.
ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ என்ற பழமொழி ஈசனின் திருவருளால் பொய்யானது. காஞ்சனமாலை தன் கணவனைக் கண்டு கதறியழுது அவன் பாதம் பற்றி வணங்கினாள். தடாதகைபிராட்டியாரோ தன் தங்கத்தந்தையைப் பார்த்ததும் உணர்ச்சிப்பூர்வமானாள். மலையத்துவஜபாண்டியன் ஈசனை வணங்கினான். பெருமானே! எனக்கு ஆண்மகன் இல்லை என்ற வருத்தமே இல்லை. ஏனெனில், பெண்ணைப் பெற்றதால் பெருமையடைந்தவன் நான். ஈசனாகிய தாங்களே எனக்கு மருமகனாகக் கிடைத்ததை என்னவென்று சொல்வேன்! தங்கள் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும், எனச் சொல்லி அவரது பாதத்தில் விழச்சென்றான். சிவபெருமான் அதைக்கண்டு பின்வாங்கினார். மாமனாரே! நான் பூமிக்கு மானிட அவதாரம் எடுத்து வந்துள்ளேன். தாங்கள் எனக்கு மாமனார். மாமன் என்பவர் தந்தைக்குச் சமமானவர். எனவே, தங்களுக்குத்தான் நான் மரியாதை செய்யவேண்டும். ஈசன் என்ற அந்தஸ்துடன் என் பாதத்தில் விழ தங்களை அனுமதிக்கமாட்டேன், என பணிவுடன் சொன்னார். மருமகன்கள் தங்கள் மாமனாருக்கு செய்ய வேண்டிய மரியாதையை, இந்த இடத்தில் தெளிவாக நடத்திக் காட்டியுள்ளார் ஈசன். பின்னர் சிவனடியார்களை அழைத்த அவர், அடியவர்களே! முறைப்படி இவர்களுக்கு தீர்த்த ஸ்நானம் செய்து வையுங்கள், என்றார். இறைவனின் கட்டளைக் கேற்ப சிவனடியார்களே அவர்களுக்கு தீர்த்தஸ்நானம் செய்வித்தனர். பின்னர் காஞ்சனமாலையும், மலையத்துவஜனும் பிறவாப்பெருவாழ்வு பெற்றனர். அவர்கள் சிவபெருமானுடன் ஜோதியில் கலந்தனர். என்னதான் பெருவாழ்வு பெற்றாலும், தாயையும், தந்தையையும் பிரிந்த மகளுக்கு வருத்தம் இருக்காதா என்ன! தடாதகைப் பிராட்டியாருக்கு கண்ணீர் முட்டிநின்றது. இருப்பினும், தன் மணாளனின் பாதம் பணிந்து தன் பெற்றோருக்கு நற்கதி கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தாள்.பின்னர் சுந்தரபாண்டியனான தன் கணவரிடம்,அன்பரே! என் தாய் தந்தை சிவலோகம் அடைந்து விட்டனர். எனக்கு சகோதரர்கள் இல்லை. பாண்டியவம்சம் நம்மோடு முடிந்து விடக்கூடாது. தாங்கள் தான் நம் வம்சவிருத்திக்கு அருளவேண்டும், எனக் கேட்டுக் கொண்டாள்.
ஏழுகடல் அழைத்த படலம்!
ஏழுகடல் அழைத்த படலம்!
கவுதமர் என்னும் மகரிஷி, அரசி காஞ்சனமாலையைச் சந்தித்தார். ஸ்ரீராமபிரானால் கல்லாய் இருந்து சுயரூபம் பெற்றாளே அகலிகை, அவளது கணவரே இந்த கவுதமர். தேவேந்திரன் தப்பு செய்தாலும் அவனையே சபிக்கும் ஆற்றலுள்ளவர், மிகப் பெரிய தபஸ்வி. மீனாட்சி திருமணத்திற்கு வந்திருந்த அவர், சிவபெருமானிடம் விடை பெற்ற பிறகு, மரியாதை நிமித்தமாக காஞ்சனமாலை அம்மையாரையும் சந்தித்து விடை பெற்றுக் கொள்ள வந்தார். அவரை அரண்மனைக்குள் அழைத்து வந்த காஞ்சனமாலை தகுந்த மரியாதை செய்தாள். உயர்ந்த ஆசனத்தில் அவரை அமர செய்து, சிறிய ஆசனம் ஒன்றில் தான் அமர்ந்து கொண்டாள். பெரியவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் போது, சிறியவர்கள் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். பெரியவர்களுக்கு தரப்படும் மரியாதை மிகப்பெரிய புண்ணியத்தையும், அவர்களின் ஆசியையும் நமக்குத் தரும். அவரிடம் காஞ்சனமாலை, மாமுனிவரே! என் மகள் மீனாட்சியின் திருமணம் நல்லபடியாக முடிந்து விட்டது. என் மருமகனாக அந்த ஈசனே வந்துவிட்டார். இனி மதுரையின் காலம் பொற்காலமாகவே திகழும். எனவே, நான் பிறவாப் பெருநிலை அடைய விரும்புகிறேன். அதற்கு என்ன வழி என்று தாங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றாள். குழந்தைகளுக்கு திருமணம் முடிந்தபிறகும், அவர்கள் விஷயத்தில் தலையிடாமல், அதன் பிறகு முக்திக்குரிய நிலையாகிய தெய்வ வழிபாட்டை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. பிள்ளைகளுக்கு திருமணமான பிறகும், வீட்டுக்கு வந்த மருமகள், மருமகனின் செயல்பாடுகளில் தலையிட்டால் நிம்மதியின்மையே ஏற்படும் என்பது இதன்மூலம் கிடைக்கும் அறிவுரையாக இருக்கிறது.காஞ்சனமாலையின் மன ஓட்டத்தை கவுதமரும் புரிந்து கொண்டார்.
அரசியாரே! உமையவளை மகளாகவும், ஈசனையே மருமகனாகவும் அடைந்த பெறற்கரிய புண்ணியத்தைப் பெற்ற மகராசியான உங்களுக்கு உபதேசிக்கும் தகுதி எனக்கில்லை. இருப்பினும், ஞானத்தை யாசிக்கும் போது அதை அருள்வதே ஒருவரின் கடமை. இதோ! பிறப்பற்ற நிலையடைய மூன்று வழிகளைச் சொல்கிறேன். தர்மம் செய்தல், உண்மையை மட்டுமே பேசுதல், இறைவனைத் தியானம் செய்தல், நம் மனத்தைக் கட்டுப்படுத்தி ஆசைகளைக் குறைத்தல் ஆகியவை ஒரு ரகம். சிவாயநம என்னும் மந்திரத்தை தினமும் ஓதுவது, வேதநூல்களை படிப்பது, யாகங்கள் செய்வது ஆகியவை இரண்டாவது ரகம். சிவபெருமானை வில்வத்தால் அர்ச்சனை செய்வது, கோயிலை வலம் வருவது, தல யாத்திரை செல்வது, தீர்த்தங்களில் நீராடுவது ஆகியவை மூன்றாவது ரகம். இதில், கடல் உள்ள இடத்தில் நீராடுவது மேலும் நலம் பயக்கும், என்றார். அவர் சென்றபிறகு, காஞ்சனமாலை தன் மகளிடம் வந்தாள். மீனாட்சி! எனக்குள் ஒரு ஆசை, பிறப்பற்ற நிலையடைய விரும்புகிறேன். கவுதம மகரிஷியின் அறிவுரைப்படி பார்த்தால் தீர்த்தமாடுவதே முக்திநிலைக்கு முதல் பாதையாக இருக்குமென கருதுகிறேன். அதிலும் ஆறும் கடலும் இருக்குமிடத்தில் நீராடுவது மிகப்புண்ணியமானதென்று அவர் கூறினார். நம் மதுரை நகரில் உன் கணவரின் அருளால் வைகை என்னும் மலர்க்கொடியாள் மலர்ந்து பரந்து ஓடுகிறாள். ஆனால், இங்கே கடல் இல்லையே! கடல் இங்கிருந்தால் நான் அதில் நீராடி பிறப்பற்ற நிலைக்கு பாதை காண்பேன், என்றாள். தாயின் விருப்பத்தை ஆண் பிள்ளைகள் இருந்தால் நிறைவேற்றி வைப்பார்கள். மீனாட்சியோ ஆணுக்கு ஆணாகவும், பெண்ணுக்கு பெண்ணாகவும் இருக்கிறாள்.
திருமணத்துக்குப் பிறகும் கூட கணவர் வீடான இமயத்துக்குச் செல்லாமல், கணவரையும் இங்கேயே தங்க வைத்து விட்டாள். மணாளனோ மகாதேவன். அவர் உத்தரவிட்டால் கடல்களே விழுந்தடித்துக் கொண்டு இங்கே வராதா என்ன! தன் அன்னையின் விருப்பத்தை அவள் தன் நாதனிடம் சொன்னாள். மாமியின் விருப்பத்தை நிறைவேற்ற அந்த சாமியும் முடிவு செய்து விட்டார். கடல்களே! மதுரைக்கு வாருங்கள், என்றார். ஒன்றல்ல, இரண்டல்ல...ஏழு கடல்களும் மதுரைக்கு வந்து சேர்ந்தன. எங்கும் பேரிரைச்சல்... அலைகள் நர்த்தனமாடின. அவற்றில் கிடந்த சங்குகளும், முத்துச் சிப்பிகளும் ஒன்றோடொன்று உரசி எழுப்பிய ஓசை எல்லையே இல்லாமல் விரிந்து சென்றது. மக்களின் கண்களுக்கு கடல்கள் தெரியவில்லையே ஒழிய கடல் ஓசை தெளிவாகக் கேட்டது. அவர்கள் குலை நடுங்கிப் போனார்கள். அவர்கள் ஓடோடி வந்து மன்னர் சுந்தரேசரை வணங்கி, எம்பெருமானே! எங்கள் மன்னனே! இதென்ன ஓசை... கடல் அலைகளின் பேரிரைச்சல் கேட்கிறதே! என்ன இது! ஊழிக்காலமாகிய உலகம் அழியும் காலம் வந்துவிட்டதா! என பலவாறாகக் கேட்டனர். சுந்தரேசர் அந்தக் கடல்களை அடக்கினார். அமைதியாயிருங்கள்! நீங்கள் மீனாட்சி ஆலயத்தின் வெளிப்புறமுள்ள கிணற்றில் சென்று அடக்கமாய் இருங்கள், என்று கர்ஜித்தார். அவ்வளவுதான்! சத்தமே வரவில்லை. மக்கள் மகிழ்ந்தனர். சுந்தரேசர் குறிப்பிட்ட இடத்தில் சென்று பார்த்தனர். கிணற்றில் நீர் நிரம்பிக் கிடந்தது. கருணை வடிவான ஈசனை மனதார துதித்த காஞ்சன மாலை பரிவாரங்களுடன் கிணற்றுக்குச் சென்றாள். மதுரை மீனாட்சி கோயில் கிழக்கு கோபுரம் எதிரேயுள்ள புதுமண்டபத்தைக் கடந்தால் வரும் தெருவுக்கு எழுகடல் தெரு என்று இப்போதும் பெயர் இருக்கிறது.
அன்னக் குழியும் வையையும் அழைத்த படலம்!
அன்னக் குழியும் வையையும் அழைத்த படலம்!
நாதா! இதென்ன அதிசயம்! பல லட்சக்கணக்கானோருக்கான உணவை இவன் ஒருவன் சாப்பிட்டு விட்டானே! இன்னும் இவனை விட்டால் சமையல்காரர்களையும், பாத்திரங்களையும் கூட தின்று விடுவான் போலிருக்கிறதே! அதற்கும் பசி அடங்கா விட்டால் உலகையை விழுங்கி விடுவானோ! ஐயனே! இதென்ன சோதனை! என்றாள்.மீனாட்சியை அமைதிப்படுத்திய சுந்தரேசர், நான்கு குழிகளை வரவழைத்தார். அவற்றில் பால் சோறு, தயிர்ச்சோறு உள்ளிட்ட அன்னவகைகள் குறைவின்றி கிடைக்க ஏற்பாடு செய்தார். குண்டோதரன் அவற்றைச் சாப்பிட்டு சாப்பிட்டு களைத்துப் போனான். அந்தக் குழியில் இருந்து வந்த சாப்பாடு குறையவே இல்லை. பசி தணியவே, தண்ணீர் குடிக்க நீர்நிலைகளை தேடியலைந்தான். மதுரையில் இருந்த பல குளங்களின் நீரும் வற்றும் வகையில் தண்ணீர் குடித்தும் தாகம் அடங்கவில்லை. ஐயனே! என் தாகத்தையும் தீர்க்க வேண்டும், என சுந்தரேசரிடம் வேண்டினான். அவர் தன் தலைமுடியைச் சாய்த்து கங்கையை கீழே இறங்கச் சொன்னார். கங்கா! நீ பிரவாகமெடுத்து ஆறாக இந்நகரின் வழியே ஓடிவா, என்றார்.
அவள் சுந்தரேசரிடம், சுவாமி! தங்கள் சித்தப்படியே செய்கிறேன். உங்கள் திருமணநாளன்று உருவாகும் பாக்கியம் பெற்ற என்னில் மூழ்கி எழுபவர்கள் பிறப்பற்ற நிலையாகிய மோட்சத்தை அடைய அருள்பாலிக்க வேண்டும், என வேண்டினாள். கங்கா! மோட்சத்தலங்களான வைகுண்டத்தின் முதல் எழுத்தாகிய வை கைலாயத்தின் முதல் எழுத்தாகிய கை இவை இரண்டையும் இணைத்து நீ வைகை என வழங்கப்படுவாய். உன்னில் குளிப்பவர்கள், தீர்த்தமாகப் பருகுபவர்களுக்கு மோட்சம் கிட்டும். அவர்கள் சகல செல்வங்களோடும் வசிப்பார்கள், என்றார். பின்னர் கங்காதேவி, ஆறாக வேகமாக ஓடிவந்தாள். அவளுக்கு வேகவதி என்ற பெயர் உண்டாயிற்று. குண்டோதரன் அந்த ஆற்றின் இருகரைகள் மீதும் கைகளை விரித்து வைத்துக் கொண்டு ஆற்றின் போக்கை தடுத்து தண்ணீர் அருந்தி தாகம் தீர்ந்தான். இதனாலும் இந்த நதிக்கு வைகை என்று பெயர் வந்ததாக சொல்வர். தன் தாகம் தீர்த்த வைகை சிவனின் தலையில் இருந்து தோன்றிய தால் அதற்கு சிவதீர்த்தம் என்னும் புனித பெயரும் வைத்தான். சிவனின் திருமணத்திற்கு வந்து, திருமணப்பணிகளை சிறப்பாக செய்த அவனுக்கு பூதகணங் களின் தலைமைப் பதவியை சுந்தரேசப் பெருமான் அளித்தார்.