செவ்வாய், 10 நவம்பர், 2020

துலா ஸ்நானம்

துலா ஸ்நானம் (கங்கையே காவிரிக்கு வந்து தன் பாபங்களை போக்கிகொள்கிறாள்)

கங்கை புனித நதி. கங்கையில் மூழ்கினால் பாவங்கள் தொலையும் என்பது புராணங்கள் கூறும் செய்தி. சிவபெருமானின் ஜடாமுடியினுள் கங்கை இருக்கிறாள். அதனால் சிவனுக்கு “கங்காதரன்” என்றும் ஒரு பெயர் உண்டு. கங்கையைக் கடவுள் நதி என்று கம்பன் போற்றுகிறான். கங்கையை விடப் புனிதமான ஒரு நதி இருக்கிறது என்று புராணங்களும் மகரிஷிகளும் கூறுகிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா ஆனால் அதுதான் உண்மை.

“கங்கையிற் புனிதமாய காவிரி” என்கிறார் ஆழ்வார். சேர நாட்டினரான இளங்கோவடிகள்

“மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்தும்
கருங்கயற்கண் விழித்து ஓல்கி
நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஓல்கி
நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி!”

இதன் பொருள் என்ன தெரியுமா?

“காவிரி நடை பயின்று வருகின்ற வழியெல்லாம் கழனிகள் எல்லாம் பச்சைப் பசுங் கம்பளங்கள் போல் திகழ்கின்றன. புனல் பெருகும் வழியெல்லாம் புது வெள்ளத்தினைக் கண்டு களித்து பூஞ்சோலையிலே மயில்கள் நாட்டியங்கள் புரிய இன்னிசை பாடுகின்ற குயில்களும்” என்று சேர நாட்டினரான இளங்கோவடிகளும் கம்பனுக்கு இணையாக ரசித்திருக்கிறார். காவேரி தீரமு நன்னு பாவனமு ரங்க புரிநீ” என்று தியாகய்யர் தமது கிருதியில் பாடியுள்ளார். காவேரிக்கும் கொள்ளிடத்திற்கும் நடுவே ஸ்ரீரங்கம் இருக்கிறது. இங்கு சுகமாக ஸ்ரீ ரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கிறார். “அவத்தடா காவேரி இவத்தடா கொள்ளிடம்” என்ற வார்த்தை சரியானதுதானே? இவளுக்கு அருமையான கதை ஒன்றும் உண்டு.

அகஸ்திய மாமுனிவர் விந்திய மாமலையின் செருக்கை அடக்க இறைவனின் கட்டளையை ஏற்றுப் புறப்பட்டார். அவர் சிறந்த சிவபக்தர். இறைவனின் பூஜைக்கு அபிஷேக ஜலத்திற்கு என்ன செய்வது என்று இறைவனிடம் கேட்டார். இறைவன் காவிரியைக் கமண்டலத்தினுள் அடக்கிக் கொண்டு போகச் சொன்னார். ஆனால் காவிரி தயங்கினாள். “நான் எப்பொழுது திரும்பிப் போவது” என்று கேட்டாள். “காவிரியே இவர் ஐம்புலன்களையும் அடக்கிய மாமுனிவர். நீ எப்பொழுது இவர் “போ”என்று சொல்லுகிறாரோ அப்பொழுது நீ பிரவாகித்து போய் விடலாம் ”என்று திருவாக்கருளினார் இறைவன்! விந்திய மலையின் செருக்கை அடக்கிய மாமுனிவர் காவிரி அடங்கிய கமண்டலத்துடன் குடகு மலையில் சிவ பூஜையில் ஈடுபட்டார். சீர்காழிப் பதியில் சூரபத்மனுக்குப் பயந்த தேவேந்திரன் மூங்கிலாக மறைந்திருந்த பொழுது நாரதர் அங்கே வந்தார். தேவேந்திரன் இறைவனின் பூஜைக்குத் தண்ணீர் இல்லாத குறையைச் சொல்லி அழுதான். நாரதர் குடகில் அகஸ்தியரின் கமண்டலத்தில் காவிரி நீர் இருப்பதைக் கூறினார். காவிரி நீர் வெளியே வர வினாயகரின் உதவியை நாடினான் தேவேந்திரன். காக்கை வடிவம் எடுத்த வினாயகர் கமண்டலத்தின் மீது அமர அகஸ்தியர் “போ… போ” என்று விரட்ட காக்கை கமண்டலத்தைக் கவிழ்த்தது. காவிரியோ மாமுனிவர் தன்னைத்தான் போகச் சொல்கிறார் என்று எண்ணி பிரவாகித்து சோழவள நாட்டைப் புனிதப்படுத்தினாள். இவளுக்குப் பொன்னி என்று ஒரு பெயரும் உண்டு. தான் பாயும் இடங்களைப் பொன் மயமாக்கி வளப்படுத்துவதினால் அவளுக்கு இப்பெயர் வந்தது. ஐப்பசி மாதத்தைத் துலா மாசம் என்று கூறுவார்கள். தீபாவளியும் கந்த சஷ்டிப் பெருவிழாவும் நடந்தாலும் ஐப்பசி மாதம் முழுவதுமே மிகவும் விசேஷமானது. துலா என்றால் தராசு. துலா மாதத்தில் காவிரியில் நீராடுவது மிகவும் விசேஷம். தலைக் காவிரியில் `துலா ஸ்நானம்’ செய்வது மிகவும் விசேஷம். தலைக்காவிரியில் பாகமண்டலம் என்னும் இடத்தில் காவிரியுடன் கனகா என்ற நதியும் இணைகிறது. கண்ணுக்குப் புலப்படாத சுஜ்ஜோதி என்ற மூன்றாவது நதியும் இணைகிறது. ஐப்பசி மாத துலா ஸ்நானத்தின் பொழுது காவிரி பேரொலி எழுப்பிக் கொண்டு ஓடும் அழகைக் காணலாம். அடுத்து காவிரி ஓடும் அழகை ஸ்ரீரங்கத்தில் பார்க்கலாம்.

காவிரிக்கு ஒரு வரலாறு உண்டு.

லோபா முத்திரை பிரம்மாவின் புத்ரி. லோபா முத்திரை தான் காவிரி நதி என்று வரலாறுகள் சொல்லுகின்றன. காவிரி நதியான பின்பு அகஸ்தியர் அவளை மணக்க ஆசை கொண்டாராம். காவிரி ஒரு நிபந்தனை போட்டாளாம். முனிவர் தன்னை விட்டுப் போகக் கூடாது என்று சொன்னாளாம். அகஸ்தியரும் ஒப்புக் கொண்டாராம். வெளியே சென்ற முனிவருக்கு ஒரு நாள் நேரம் அதிகமாகி விடவே மாலைக் கடன்களை வரும் வழியில் உள்ள கனகா நதியில் முடித்துக் கொண்டார். இதைக் கண்டு கோபம் கொண்ட காவிரி மலையடிவாரத்தில் உள்ள ஹோம குண்டத்தில் குதித்து விட்டாள். இதைக் கண்டு அகஸ்தியரின் சீடர்கள் கத்தவே அகஸ்தியர் ஓடி வந்தார். இதற்குள் காவிரி மறைந்து சற்று தொலைவில் வெளியேறினாள். அகஸ்தியர் என்ன சமாதானம் கூறியும் அவள் கேட்காமல் ஓடினாள்.

இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது.

காவிரி உற்பத்தியாகும் இடத்தருகே தாத்ரிபுரம் என்ற ஊரில் சுயஜ்னா என்ற முனிவர் இருந்தார். அவர் தமக்கு ஒரு  வாரிசு வேண்டும் என்று கேட்டு தவம் இருந்தார். மஹா விஷ்ணு தோன்றி வரம் அளித்தார். “உனக்குப் பிறக்கும் பெண் மகவை பருவமடைந்ததும், பக்கத்திலுள்ள அக்னி மலையில் சந்திக்கும் கனகாவிடம் ஒப்படைத்து விடு என்றார். அதன்படியே முனிவருக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு சுஜ்ஜோதி என்று பெயரிடப்பட்டது. பிறந்தது முதல் நாராயணனின் நினைவாகவே இருந்து அவரையே தன் நாயகனாக எண்ணினாள். அவளை முனிவர் அக்னி மலைக்கு அழைத்துச் சென்று கனகாவிடம் ஒப்படைத்தார். ஆனால் அவளை இந்திரன் அடையத் துடித்தான். சுஜ்ஜோதியோ நாராயணனை நோக்கித் தவம் இருந்தாள். ஸ்ரீமந் நாராயணன் அவள் முன்பு தோன்றினார்.
சுஜ்ஜோதி கவலைப் படாதே.பிரம்ம கிரியிலிருந்து காவேரி தோன்றி இந்த மண்ணைப் புனிதப்படுத்தப் போகிறாள். அவளுடன் கலந்து கொள்ள ஏதுவாக உன்னையும், கனகாவையும் நதிகளாக மாற்றி அவளுடன் கலக்க வைத்து விடுகிறேன். உலகின் கண்களுக்கு கனகா மட்டுமே தெரிவாள். நீ சுந்தரவாஹினியாகத்தான் காவிரியுடன் இருப்பாய். தேவேந்திரன் உன்னைக் கண்டு கொள்ள மாட்டான். இருவரும் பாக மண்டலத்தில் காவிரியுடன் இணைந்து உலகை வலம் வாருங்கள் என்றார். அகஸ்தியரிடம் கோபித்துக் கொண்டு ஓடி வந்த காவிரியுடன் இந்த இரு நதிகளும் இணைந்து விடுகிறார்கள். ஸ்ரீரங்கத்தின் புகழ் பெற்ற காவிரி, மூன்றாவதாக மாயூரத்தில் அகண்ட காவிரியாக பிரவாகித்து ஓடுகிறாள். இதற்கு `மயிலாடுதுறை’  என்னும் ஒரு பெயருண்டு. “ஆயிரம் ஆனாலும் மாயூரம் போல ஆகுமா?” என்பார்கள். இங்கு வேத நாயகன் விநாயகப்  பெருமான், முருகன் வந்து பூஜித்திருக்கிறார்கள். நந்தி தேவரின் சாபம் விலகிய ஸ்தலம். திருமகளும், கலைமகளும் தொழுத தலம். இதன் வழியே பெருகி ஓடிய பொன்னி நதி பூம்புகாரில் கடலோடு சங்கமிக்கிறாள். ஐப்பசி திங்கள் (மாதம்) முதல் துலாக்காவிரி நீராடுவது தலை சிறந்தது. குடகில் பிறந்த காவிரிப் பெண் அகண்ட காவிரியாக ஏறத்தாழ 1760 அடி அகலத்தில் பரந்து விரிந்து ஓடுவதை திருச்சி அருகில் திருப்பராய்த்துறையில் காணலாம். இந்தத் தலத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாத முதல் நாள் அன்று திருப்பராய்த்துறை நாதர் கோயிலிலிருந்து அகண்ட காவிரிக்கு எழுந்தருளிதீர்த்தம் வழங்குவது இன்றைக்கும் வரலாற்றில் சொல்லப்படும் நிகழ்ச்சியாகும். இங்கு காவிரியில் நீராடுவது மாயூரத்தில் நீராடுவதற்குச் சமம் என்பார்கள். துலா மாதத்தில் இருபத்தொன்பது நாட்கள் நீராட முடியா விட்டாலும் முப்பதாவது நாளாகிய கடைசி நாளில் நீராடுவது முப்பது நாட்களும் காவிரி நதியில் நீராடுவதற்குச் சமமான புண்ணியத்தையும் பெறலாம் என்பார்கள்.

இதற்கு ஒரு சம்பவம் இருக்கிறது.

கண்வ மகரிஷி கங்கையில் நீராடச் செல்லுகிறார். வழியில் மூன்று சண்டாளக் கன்னிகைகளைக் காண்கிறார். இவர்கள் இந்த மண்ணில் உள்ளவர்களின் பாபங்களைத் தன்னுள் கரைத்துக் கொண்டு புண்ணியத்தை வாரி வழங்கியவர்கள். இதனால் மற்றவர்களின் பாபம் இவர்கள் மீது விழுந்து விடுகிறது. பாபச் சுமைகளைச் சுமந்து நிற்கும் இவர்களின் பாபங்களை யார் கழுவுவது? இவர்கள் தான் கங்கை, யமுனை, சரஸ்வதி. தங்கள் பாவங்களைக் கழுவும் பேராற்றல் படைத்தவரைத் தேடி வந்தவர்களை வழியில் கண்வ மகரிஷி சந்திக்கிறார். எல்லோரது பாவங்களையும் நீக்கி முக்தி அருள வல்ல புனிதத்தையே மாயூரத்தில் ஓடும் காவிரி நதி செய்கிறாள். இவர்களுடன் கண்வ மகரிஷியும் காவிரியை நோக்கி வருகிறார். ஐப்பசி மாதம் முழுதுமே புண்ணிய தினங்கள். உண்ணாமல், உறங்காமல் நோன்பு நோற்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிற்கு வரும் சுமங்கலிக்கு தாம்பூலம், ரவிக்கைத் துணி வைத்துத் தந்தாலே புண்ணியம் தான். காவிரியில்  நீராடுபவர்கள் போகும் போதே ஒரு பையில் தாம்பூல வகைகளை எடுத்துச் செல்வார்கள். நீராடிய பின்னர் அங்கு நீராடிய சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் தருவார்கள். சில வயதானவர்கள் நீராடி விட்டு வீட்டுக்கு வந்து ஒரு சுமங்கலியை வரச் சொல்லி முறத்தில் தாம்பூலம், ரவிக்கை, (முடிந்தால் புடவை) பழங்கள், இனிப்பு என்று வைத்துத் தருவார்கள். தினமும் சிலர் முறத்தில் புடவையைத் தவிர தாம்பூலம், ரவிக்கை, பழங்கள் இனிப்பு வைத்து ஒரு சுமங்கலிக்குத் தருவார்கள். துலா மாதம் காவிரி இல்லாத இடத்தில் இருப்பவர்கள் காவிரியைப் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.



கருத்துகள் இல்லை: