திங்கள், 16 நவம்பர், 2020

கார்த்திகை மாதம் சபரிமலை போகிறவர்களுக்கு

கார்த்திகை மாதம் ஆரம்பம் சபரிமலை போறீங்களா... முதல்ல இதப்படிங்க!

கார்த்திகை மாதம் துவங்கியதும் இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்;கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டு தோறும் இருமுடி ஏந்தி சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன் சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால் பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்!

1. சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளே மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள் மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.

2. மாலை துளசி மணி 108 கொண்டதாகவோ உருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.

3. தாய் தந்தையின் நல்லாசியுடன் குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று கடவுள் பாதத்தில் மாலையை வைத்து அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம்.

4. இவ்வாறு மாலை அணிந்த பின்பு  கோபதாபம் குரோதம் விரோதம் கொள்ளக்கூடாது. அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து சிநேகம் பாராட்டி பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.

5. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும் மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி கோவில்களிலோ வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வணங்க வேண்டும்.

6. கருப்பு, நீலம், காவி, பச்சை நிற வேட்டி, சட்டை அணிய வேண்டும்.

7. பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

8. மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.

9. ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

10. ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது.

11. பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.

12. மது மாமிசம் புகைபிடித்தலை விட்டுவிட வேண்டும்.

13. மாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம்.மற்றவர்கள் வீட்டில் பால் பழம் சாப்பிடலாம்.

14. வீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால் ஏழுநாட்கள் கழித்த பின்னர் தான் அவர்கள் சமைத்த உணவை உண்ணவேண்டும்.

15. காலணிகள் பயன் படுத்தக்கூடாது.

16. கன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்விக்கலாம்.

17. எதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும் பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதிப் பழக வேண்டும்.

18. மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் எனத் தொடங்கி விடைபெறும் பொழுது சாமி சரணம் எனக் கூற வேண்டும்.

19. இருமுடிக்கட்டு பூஜையை வீட்டிலோ குருசாமி இடத்திலோ கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.

20. சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.

21. பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடன்களைச் செய்து நீராட வேண்டும்.

22. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்திய படியே வீட்டு வாசல் படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.

23. வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து கட்டினைப் பிரித்து பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும்.

24. யாத்திரை இனிய முறையில் நிறைவுற்ற பின் குருநாதர் அல்லது தாயார் மூலம் மாலை கழற்ற வேண்டும்.  ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு முன்னால் வைத்து விட்டு தீபாராதனை காட்டி விரதம் முடிக்க வேண்டும்.

தெரிந்து கொள்ள வேண்டியவை:

1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை முடிவெட்டுதல் சவரம் செய்துகொள்ளுதல் கூடாது.

 2.மெத்தை தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல் தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும்.

3. பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம்.

4. மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும்.பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது.

5. விரத நாட்களில் பெண்களை சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும்.

6. வீட்டிலிருக்கும் பெண்கள் மாதவிலக்கானால் அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருத்தல் வேண்டும்.அப்படி வசதி இல்லாவிடில் மாலை அணிந்தவர்கள் வெளியில் எங்காவது தங்கியிருத்தல் நல்லது.

7. விரத சமயத்தில் மாலை அணிந்தவர்களுக்கு மிகவும் துன்பங்கள் ஏற்படும் என்பதும் சோதனைகளுக்கு உள்ளாவார்கள் என்பதும் தவறான கருத்துகளாகும்.

8. ஒருவேளை அணிந்திருக்கின்ற ஒரே மாலை தவறுதலாக அறுந்துபோக நேரிட்டால் அதைச் செப்பனிட்டு அணிந்துகொள்ளலாம்.இதில் தவறு ஏதுமில்லை.எந்தவிதமான தவறும் செய்யாமல் விரதத்தைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில் இப்படி மாலை அறுந்துவிட்டதே என்ற வீண் மன சஞ்சலமும் அடைய வேண்டியதில்லை.

9. மாலை போடும் சமயத்தில் எந்தவிதமான பயமோ சந்தேகமோ குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது.அப்படி மனசஞ்சலம் ஏதாவது இருந்தால் மாலை போடுவதை தள்ளிப்போடுதல் நல்லது.

10. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் அப்பழுக்கற்ற பக்தியும் மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும்.

11. இருமுடி கட்டும் வைபவத்தை தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது.வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.

12. மாலையணிந்து சபரிமலைக்குச் செல்லும் நோக்கங்கள் மூன்று : தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்; தன் புலன்களை எல்லாவகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம் உடல் இவற்றைத் தூய்மைப்படுத்துதல் தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல் வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்கவைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்.

13. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து முழு சரணாகதி அடைந்து ஒருமுகமாக வழிபட்டால் இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும்.படிகள் ஏற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்!


கருத்துகள் இல்லை: