அன்னக் குழியும் வையையும் அழைத்த படலம்!
நாதா! இதென்ன அதிசயம்! பல லட்சக்கணக்கானோருக்கான உணவை இவன் ஒருவன் சாப்பிட்டு விட்டானே! இன்னும் இவனை விட்டால் சமையல்காரர்களையும், பாத்திரங்களையும் கூட தின்று விடுவான் போலிருக்கிறதே! அதற்கும் பசி அடங்கா விட்டால் உலகையை விழுங்கி விடுவானோ! ஐயனே! இதென்ன சோதனை! என்றாள்.மீனாட்சியை அமைதிப்படுத்திய சுந்தரேசர், நான்கு குழிகளை வரவழைத்தார். அவற்றில் பால் சோறு, தயிர்ச்சோறு உள்ளிட்ட அன்னவகைகள் குறைவின்றி கிடைக்க ஏற்பாடு செய்தார். குண்டோதரன் அவற்றைச் சாப்பிட்டு சாப்பிட்டு களைத்துப் போனான். அந்தக் குழியில் இருந்து வந்த சாப்பாடு குறையவே இல்லை. பசி தணியவே, தண்ணீர் குடிக்க நீர்நிலைகளை தேடியலைந்தான். மதுரையில் இருந்த பல குளங்களின் நீரும் வற்றும் வகையில் தண்ணீர் குடித்தும் தாகம் அடங்கவில்லை. ஐயனே! என் தாகத்தையும் தீர்க்க வேண்டும், என சுந்தரேசரிடம் வேண்டினான். அவர் தன் தலைமுடியைச் சாய்த்து கங்கையை கீழே இறங்கச் சொன்னார். கங்கா! நீ பிரவாகமெடுத்து ஆறாக இந்நகரின் வழியே ஓடிவா, என்றார்.
அவள் சுந்தரேசரிடம், சுவாமி! தங்கள் சித்தப்படியே செய்கிறேன். உங்கள் திருமணநாளன்று உருவாகும் பாக்கியம் பெற்ற என்னில் மூழ்கி எழுபவர்கள் பிறப்பற்ற நிலையாகிய மோட்சத்தை அடைய அருள்பாலிக்க வேண்டும், என வேண்டினாள். கங்கா! மோட்சத்தலங்களான வைகுண்டத்தின் முதல் எழுத்தாகிய வை கைலாயத்தின் முதல் எழுத்தாகிய கை இவை இரண்டையும் இணைத்து நீ வைகை என வழங்கப்படுவாய். உன்னில் குளிப்பவர்கள், தீர்த்தமாகப் பருகுபவர்களுக்கு மோட்சம் கிட்டும். அவர்கள் சகல செல்வங்களோடும் வசிப்பார்கள், என்றார். பின்னர் கங்காதேவி, ஆறாக வேகமாக ஓடிவந்தாள். அவளுக்கு வேகவதி என்ற பெயர் உண்டாயிற்று. குண்டோதரன் அந்த ஆற்றின் இருகரைகள் மீதும் கைகளை விரித்து வைத்துக் கொண்டு ஆற்றின் போக்கை தடுத்து தண்ணீர் அருந்தி தாகம் தீர்ந்தான். இதனாலும் இந்த நதிக்கு வைகை என்று பெயர் வந்ததாக சொல்வர். தன் தாகம் தீர்த்த வைகை சிவனின் தலையில் இருந்து தோன்றிய தால் அதற்கு சிவதீர்த்தம் என்னும் புனித பெயரும் வைத்தான். சிவனின் திருமணத்திற்கு வந்து, திருமணப்பணிகளை சிறப்பாக செய்த அவனுக்கு பூதகணங் களின் தலைமைப் பதவியை சுந்தரேசப் பெருமான் அளித்தார்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
செவ்வாய், 10 நவம்பர், 2020
அன்னக் குழியும் வையையும் அழைத்த படலம்!
குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்!
குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்!
அனைத்து மக்களும் சாப்பிட்டாயிற்று. லட்சக்கணக்கில் திருமணத்துக்கு வந்திருந்த மக்களும் சாப்பிட்டாலும், சமைத்ததில் பெரும் பங்கு மிஞ்சிவிட்டது. எவ்வளவு பரிமாறினாலும், உணவின் அளவு அப்படியே இருப்பது போல் தெரிகிறதே! இது ஏதோ மாயவித்தை போல் தெரிகிறதே! சமையல் குழுவினர் பிரமித்தனர். இதுபற்றி முறையிட அரசி மீனாட்சியிடம் அவர்கள் ஓடினர். மீனாட்சி மடப்பள்ளியில் சென்று பார்த்தாள். சமைத்த உணவில், லட்சக்கணக்கானவர்கள் சாப்பிட்டிருந்தும் கூட, சற்று கூட குறையாமல் அப்படியே இருந்தது. இது இறைவனின் லீலை என்பதை அவள் எப்படி அறிவாள்? சுந்தரேசர் ஏதும் அறியாதவர் போல் இருந்தாள். மீனாட்சி தன் கணவரிடம் நாணத்துடன் சென்றாள். சுவாமி! எங்கள் இல்லத்தில் நாங்கள் சமைத்த உணவு அப்படியே மீந்துவிட்டது. லட்சக் கணக்கானவர்கள் மாப்பிள்ளை இல்லம் சார்பாக வந்திருந்தும் அப்படியே இருப்பது ஆச்சரியமூட்டுவதாக உள்ளது. உணவை வீணடிப்பது மகாபாவம் என்பது தாங்கள் அறியாததல்ல! அது அன்னபூரணிக்கு மாசு கற்பித்தது போல் ஆகும். இந்த உணவு காலியாக தாங்கள் தான் அருள்புரிய வேண்டும், என்றாள்.
அவளது பேச்சில் சற்றே ஆணவம் தொனித்தது போல் தெரிந்தது. மனிதனுக்கு சிறிதளவு ஆணவம் இருந்தாலும் இறைவனை அடைய முடியாது. அந்த ஆணவத்தைக் களைய அவன் சோதனைகளைத் தருவான். தன் மனைவியிடமும் விளையாடிப் பார்க்க இறைவன் திருவுளம் கொண்டார். அப்படியா! ஏராளமாகவா சமைத்தீர்கள்! எல்லோரும் சாப்பிட்டாயிற்றே! சரி...என் பூதகணங்கள் சாப்பிட்டதா என விசாரித்து விடுகிறேன், என்றவர், பூதகணங்களை அழைத்து விசாரிப்பவர் போல் நடித்தார். குண்டோதரன் என்ற பூதகணத்தை தவிர மற்றவர்கள் சாப்பிட்டாயிற்று என்றனர். குண்டோதரனுக்கு திருமணப்பணிகள் அதிகமாக இருந்ததால், பிறகு சாப்பிடலாம் என இருந்துவிட்டான். குண்டோதரா! சாப்பிடாமல் அப்படி என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய்! போ போ, முதலில் சாப்பாட்டை முடி! அப்புறம், பணிகளை செய்யலாம், என செல்லமாகக் கடிந்துகொண்டார் மாப்பிள்ளை சுந்தரேசர். குண்டோதரன் சாப்பிடச் செல்லும் போது மீனாட்சி அவரிடம், சுவாமி! இவன் ஒருவன் சாப்பிடுவதால் உணவு தீர்ந்துவிடுமா! இன்னும் சாப்பிடாதவர்கள் நிறைய இருப்பார்கள். அவர்களையும் வரச்சொல்லுங்கள், என்றாள்.
புன்னகையை உதிர்த்த சுந்தரேசர், இவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கட்டும், இன்னும் யார் யார் சாப்பிடவில்லை என விசாரித்து அனுப்பி வைக்கிறேன், என்றார். குண்டோதரன் மடப்பள்ளிக்குள் நுழைந்தானோ இல்லையோ, அவனது வயிற்றில் வடவைத்தீ எனப்படும் கொடும் பசித்தீயை எரிய வைத்தார் சுந்தரேசன். மடப்பள்ளிக்குள் நுழைந்த குண்டோதரன் ஒரு நிமிடத்தில் அனைத்தை யும் சாப்பிட்டு விட்டு, ஐயோ! பசி பொறுக்க முடியவில்லையே! திருமண வீட்டுக்கு வந்தவர்களுக்கு வயிற்றுக்குச் சோறிட வேண்டாமோ, என புலம்பினான். மீண்டும் சமையல் செய்யப்பட்டது. அதுவும் கணநேரத்தில் காலியாகி விட்டது. மீனாட்சியும் அரண்மனையில் இருந்த மற்றவர்களும் அதிசய அதிர்ச்சியை அடைந்தனர்.இதென்ன புதுமை! ஒரு தனிநபரால் இப்படி உணவுண்ண முடியுமா! இவன் வாயைத் திறந்ததும் எல்லாமே தானாக வயிற்றுக்குள் போய் விடுகிறதே! மீண்டும் மீண்டும் சமைத்து ஓய்ந்துவிட்டனர் சமையல்காரர்கள். அரண்மனையில் வாங்கி வைத்திருந்த சமையல் பொருட்கள் அத்தனையும் காலி. மீனாட்சிக்கு இதில் ஏதோ சூட்சுமம் இருப்பது புரிந்து விட்டது.
வெள்ளியம்பல திருக்கூத்தாடிய படலம்!
வெள்ளியம்பல திருக்கூத்தாடிய படலம்!
எம்பிரானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் திருமணம் இனிதே நிறைவுபெற்ற பின் திருமண விருந்து துவங்கியது. திருமணத்துக்கு வந்தவர்களையெல்லாம் விருந்துண்ண சுந்தரேசர் அழைத்தார். இருவரை தவிர எல்லோரும் விருந்துண்ண சென்றனர். அவர்கள் தான் சாஸ்திரங்களில் தேர்ந்த பதஞ்சலி முனிவரும், பக்தியில் முதிர்ந்த வியாக்ரபா முனிவரும்! அவர்கள் சிவபெருமானின் பாதம் பணிந்தனர். பதஞ்சலி முனிவர் சிவனிடம், சோமசுந்தரப் பெருமானே! நாங்கள் ஒரு உறுதி எடுத்துள்ளோம். அதாவது, தில்லையம்பலமாகிய சிதம்பரத்தில் நாங்கள் தங்கள் திருநடனக்கோலத்தை தரிசித்த பிறகே உணவு உண்போம். இங்கு என்ன செய்வதென தெரியவில்லை, என்றதும், அதற்கென்ன! அங்கு ஆடிய நடனத்தை இங்கும் ஆடுகிறேன். தாங்கள் இருவரும் கண்டுகளித்த பின் உணவருந்துங்கள், என்றார். முனிவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சிவபெருமான் அவர்களை அழைத்துக் கொண்டு மதுரை கோயிலுக்குள் சென்றார். மேலும் சிவபெருமான் உலகனைத்தும் வடிவான விராட்புருடனுக்குத் தில்லைப் பதி இதயமாகும். மதுரையோ துவாத சாந்தத் தானம் என மொழிந்தார். இதைக் கேட்டு மகிழ்வுற்ற முனிவர்கள் வேந்தர் வேந்தே! பிறஉறுப்புகள் எது என தெளிவாக விளக்குங்கள் என கூறினர்.
இறைவடிவான சுந்தர பாண்டியர் கூறியதாவது மூலதாரமான இப்பூவுலகிலே எல்லையற்ற இறைத்தன்மைத் தானங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைக் கேளுங்கள். திருவாரூர் மூலதாரத் தானம், திருவானைக்கா சுவாதிட்டானத் தானம், திருவண்ணாமலை நாபி, தில்லைபதி இதயம், திருக்காளத்தி கண்டம், காசித் தலம் புருவமத்தியம், திருக்கயிலாயம் பிரமநாடி, இந்த மதுரைப் பதி துவாத சாந்தத்தானம். இது எவ்வாறு சிறந்ததென்று கேட்பீர்களானால், அது முன்னர் தோன்றிய முறையால் என்று தெளிந்த விளக்கத்தினை எடுத்து இயம்பினார். அதன் பின் அனைவரும் கோயிலுக்குள் சென்றார்கள். அங்கே ஓர் அற்புதத்தை அவர்களுக்கு நிகழ்த்திக் காட்டினார் சிவபெருமான். இந்திரனால் அமைக்கப்பட்ட தங்க விமானத்தின் கீழ், ஒளி பொங்கும் வெள்ளி அம்பலம் ஒன்றை உருவாக்கினார். பளபளவென மின்னிய அந்த அரங்கத்தில் மாணிக்க பீடம் ஒன்று வந்து அமர்ந்தது. கோடி சூரியர்கள் ஒரே சமயத்தில் உதித்தாற் போல் குருபரன் தோன்றினார். மனம், மொழி, பக்கம், மேல், கீழ், முன், பின் என்ற இவைகளைக் கடந்த மெய்ஞ்ஞானப் பேரொளி வடிவே அது. சிவகணங்கள் முழக்க, நந்தி தேவர் மத்தளம் அடிக்க, திருமால் இடக்கை முழக்க, தும்புரு நாரதர் இசைபாட தேவர்கள் பூமழை பொழிய, கடல்நிற மேனி படைத்த செந்தீப்புறமயிர் முயலகண் மேல் வடவைத் தீப்போல் அவனது செங்கண்கள் பிதுங்கவும், சினங்கொள்ளவும் முதுகு முறியவும் வலது திருவடியை ஊன்றி சிவபெருமான் அந்த பீடத்தில் நின்று நடனமாடினார்.
திருக்கூத்தாடும் இடது திருவடித் தாமரையும், பத்துத் திருக்கரங்களும், வலக்கரம் ஐந்தில் அபய அத்தத்திலே சூலமும், மற்ற நான்கு கரங்களில் உடுக்கை, அம்பு, வாள், மழு என்பனவும் இடக்கரம் ஐந்தில் வரத அத்தத்திலே பாம்பும், மற்றைய நான்கு கரங்களில் அக்கினி, வில், கேடகம், தண்டு என்பனவும், திருநீலகண்டமும், சங்க குண்டலம் பூண்ட திருச்செவியும், விரித்த செஞ்சடையும், வெள்ளிய திருநீற்றொளித் திருமேனியும், முக்கண்களும், அரவக் கச்சையும், அம்மையார் ஒதுங்கி நிற்கும் பக்கமும், அவ்வம்மையார் மேல் வைத்த திருநோக்கமும் திருநகையும் தோன்றத் திருநடனம் செய்தருளினார். அந்த முனிவர்களும் மதுரை மாநகர மக்களும் இறைவனின் நடன காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர். பின்னர் பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்கள் கருணாமூர்த்தியைப் பாக்களால் பலபடப் பூசித்துப் போற்றி மகிழ்ந்தனர். பரந்தாமன் அம்முனிவர்களிடம் நீங்கள் இன்னும் விரும்பியது யாது? அதை யாம் நிறைவேற்றி வைப்போம் என வினவினார். உடனே அவ்விருவரும், எந்தையே! இத்திருக்கூத்துடனம் எப்பொழுதும் இவ்வெள்ளியம்பலத்துள்ளே நின்று எல்லோருடைய பாச பந்தங்களையும் போக்கி அருள் செய்தல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். திருமண விழாக்களில் பிறர் நடனமாடி நாம் ரசிப்பது வழக்கம் தான்! ஆனால், இங்கோ மணமகனே நடனமாடினார். அந்தக் காட்சியைக் கண்ட பிறகு முனிவர்கள் உணவருந்தச் சென்றனர்.
தடாதகையாரின் திருமணப் படலம்!
தடாதகையாரின் திருமணப் படலம்!
உலகத்துக்கே ஒரு தாயை ஈன்றெடுத்துக் கொடுத்த காஞ்சனமாலையும், உலகத்தாயான தடாதகைபிராட்டியும் தங்கள் குல தலைமையை இழந்து அடைந்த கவலைக்கு அளவே இல்லை. அவருக்குரிய ஈமச்சடங்குகளை தடாதகையே முன்னின்று செய்தாள். தந்தையில்லாத வீடு... மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் வீட்டுக்கு மருமகன் வந்துவிடுவார். தடாதகையை நல்லபடியாக பார்த்துக் கொள்வார். இவளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் நல்லதென முடிவெடுத்து, மகளிடம் சொன்னாள் காஞ்சனமாலை. மகள் அவளிடம், அம்மா! ஒரு தாயாக இருந்து உனக்குரிய கடமையை நீ சொன்னாய். ஆனால், தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது எனது கடமை. தந்தையார் என்னிடம் சொன்னபடி நான் உலகமெங்கும் சுற்றி, அனைத்து தேசங்களையும் என் ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டியிருக்கிறது. நீ என்னை வாழ்த்தி வழியனுப்பு! திரும்பி வந்ததும், உன் விருப்பப்படியே திருமணம் நடக்கும், என்றாள். மகளின் விருப்பத்திற்கு தாயும் குறுக்கே நிற்கவில்லை. அமைச்சர் சுமதி போருக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். போர்க்கோலம் பூண்ட தடாதகை பிராட்டி, தாயிடம் நல்லாசி பெற்று புறப்பட்டாள். தாரை, தப்பட்டை ஆர்ப்பரிக்க, சங்குகள் முழங்க அவளது நால்வகைப் படையும் கிளம்பியது.
இவர்களது படையைப் பார்த்தவுடனேயே எதிரிகளெல்லாம் அஞ்சி, நடுங்கி அவளை சரணடைந்தனர். பூவுலகில் வெற்றிக்கொடி நாட்டி தடாதகை பிராட்டியார், தேவலோகத்திற்குச் சென்றாள். புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால், குழந்தை பிறக்குமென மலையத்துவஜனுக்கு வாக்களித்த இந்திரன், கலங்கிப் போனான். நமது யோசனையால் பிறந்த குழந்தையே, நம்மை நோக்கி படையெடுத்து வருகிறதே என அஞ்சி நடுங்கினான். பதவியை விட்டுவிட்டு, ஓடி ஒளிந்து கொண்டான். தடாதகை பிராட்டியார் தேவேந்திரனுக்குச் சொந்தமான சங்கநதி, பதுமநிதி, சிந்தாமணி, காமதேனு, கற்பகதரு போன்ற மிகப் பெரிய செல்வங்களையெல்லாம் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டாள். தேவ கன்னியர்களை தனக்கு பணிபுரிவதற்காக தன்னோடு வரச்சொன்னாள். பிறகு, கயிலை மலையையும் தன் வசமாக்கிக் கொள்வதற்காக படைகளுடன் அங்கு புறப்பட்டாள். தடாதகை பிராட்டியார் வாழ்க! அமைச்சர் சுமதி வாழ்க! என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.கயிலையை அவள் அடைந்ததும், சிவபெருமான் அவளை முகம் மலர வரவேற்றார். தடாதகை பிராட்டியார் மதுரையிலிருந்து கிளம்பியபோதே, சுந்தரேஸ்வர பெருமானும் அவள் அறியாவண்ணம் அவளது தேரிலேயே அமர்ந்து வந்தார் என்பதை, அவளால் உணர முடியவில்லை. இதை அறியாத நந்திதேவர், பிராட்டியாரின் படை கண்டு நடுங்கி நின்றார். இப்படி ஒரு படை வந்திருக்கிறதே! நம்மையே அடிமைப் படுத்த வந்துள்ள இந்தப் பெண் மணியை நீங்கள் வரவேற்கிறீர்களே! என் கட்டுக்காவலை மீறி இவர்கள் உள்ளே வந்துள்ளார்கள். இப்போது நாம் என்ன செய்வது? என சிவனிடம் யோசனை கேட்டார்.
சிவபெருமான் அவரிடம், போருக்கென வந்தவர்களிடம் மோதிப்பார்த்து விட வேண்டியதுதான். நீ நம் படைகளுடன் புறப்படு, என்றார். சக்திதேவியான தடாதகை பிராட்டியாரின் வீரத்தை உலகுக்கு உணர்த்துவதற்காக, சிவபெருமான் இப்படியொரு நாடகம் ஆடினார். நந்தி தேவரின் தலைமையில் புறப்பட்ட படைகள் அனைத்தும் தடாதகை பிராட்டியால் விரட்டியடிக்கப்பட்டன. சிவகணங்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். சூரியன், சந்திரன், அக்னி, வருணன் முதலான தேவர்களின் அஸ்திரங்களை எல்லாம் தடாதகை பிராட்டியார் அழித்தாள். பூதங்களின் வலிமை பிராட்டியின் வலிமை முன்னால் எடுபடவில்லை. வேறு வழியின்றி சிவபெருமானே அவளுடன் போர் செய்ய கிளம்பினார். அவர் அன்னையின் முன் வந்து நின்றதும், அந்த அதிசயம் நிகழ்ந்தது. அவளது தனங்களில் ஒன்று மறைந்தது. மன்மதனின் கணைகள் அவளைத் தாக்கியது போன்ற உணர்வு ஏற் பட்டது. ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, நாணத்தால் தலை குனிந்து நின்றாள் தடாதகை. அமைச்சர் சுமதி ஆச்சரியப் பட்டார். அவருக்கு தான் மீனாட்சியின் தன ரகசியம் தெரியுமே! எதிரே நிற்பது சிவபெருமான் என்பதும், அவளே அவரை மணந்து கொள்வார் என்பதும் தெரிந்து விட்டது. தடாதகை பிராட்டியார் குனிந்த தலைநிமிராமல், அவரது பாதத்தில் விழுந்தாள். அதுவரையில் இருந்த வீரம், காதலாக மாறிவிட்டது.
உலகையே வென்று நம் கைக்குள் கொண்டு வந்தாலும், மனிதன் இறைவனிடமே அடைக்கலமாக வேண்டும் என்பதை உணர்த்தியது இந்தக் காட்சி. சிவபெருமான் அவளைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். பின்னர் மீனாட்சி மதுரை திரும்பினாள். தாய் காஞ்சனமாலை வெற்றிக்கனி பறித்து வந்த மகளை வரவேற்றாள். உலகை வென்றதுடன், ஈசனின் இதயத்தையும் தன் மகள் வென்று வந்தாள் என்ற செய்தியறிந்து, மகளுக்கு மணநாள் குறிக்க ஏற்பாடு செய்தாள். இறைவனுக்கே திருமணம் நடத்தி வைக்கும் பாக்கியம் கிடைத்தது குறித்து அமைச்சர் சுமதி ஆனந்தம் கொண்டார். திருமண பட்டோலை எழுதி, பல தேசத்து மன்னர்களுக்கும் அனுப்பினார். மதுரை மக்களுக்கு தடாதகை பிராட்டி யாருக்கு திருமணம் நடக்க இருப்பது குறித்து முரசறைந்து அறிவிக்க ஏற்பாடு செய்தார். மக்கள் மகிழ்ந்தனர். தங்கள் வீட்டு திருமணம் அல்லவா? நகரை அவர்கள் அலங்கரித்த விதம் அலாதியாக இருந்தது. தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வண்ண ஓவியங்களைத் தீட்டினர். நகர் முழுவதும் கமுகு, வாழை மரத்தோரணங்களைக் காண முடிந்தது.இறைவனுக்கு அம்பாளின் அவதாரமான தடாதகை பிராட்டியுடன் நடக்கப் போகும் திருமணத்துக்கு முனிவர்களும், தேவர்களும் வந்து சேர்ந்தனர். சிவபெருமானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் செய்யப் பட்ட அலங்காரத்தை சொல்லி மாளாது. தடாதகை பிராட்டி தன் மக்களை மீன் போல் பாதுகாத்தவள். அதாவது, மீன்கள் தங்கள் கண்களாலேயே குஞ்சுகளுக்கு உணவூட்டுபவை. சற்றும் இமைக்காதவை. இக்காரணத்தால், எங்கள் மீனாட்சிக்கு கல்யாணம் என மக்கள் ஆரவாரம் செய்தனர்.
அந்த மீனாட்சிக்கு சரஸ்வதியும், லட்சுமியும் வந்திருந்து அலங்காரம் செய்தனர். ஊர் மகிழ்ந்திருந்த வேளையில், காஞ்சனமாலைக்கு மட்டும் கண்ணீர் வழிந்தது. இதையெல்லாம் பார்க்க தன் கணவர் மலையத்துவஜன் இல்லையே என்று! தந்தையில்லாத மீனாட்சிக்கு தந்தையாயும், தமையனாயும் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க அந்த மகாவிஷ்ணுவே வந்துவிட்டார். ஈசனுக்கு பட்டு அங்கவஸ்திரம், விதவிதமான நகைகள் அணிவிக்கப்பட்டு மிக அழகாக இருந்தார். இவரல்லவோ சுந்தரன் என்று மக்கள் ஆனந்தமாகப் பேசினர். சுந்தர ஈஸ்வரன் எங்கள் மீனாட்சியின் கரம் பற்ற வந்துள்ளான், என புகழ்ந்தனர். இதனால் சிவபெருமானுக்கு சுந்தரேஸ்வரன் என்ற பெயர் உண்டாயிற்று. அமைச்சர் சுமதி ஆனந்தக் கண்ணீர் வழிய நின்றிருந்தார். மணமேடைக்கு மணமக்கள் வந்தனர். அவர்கள் மாலை மாற்றி கொண்டனர். பிரம்மா வேதமந்திரம் முழங்க, திருமால் தாரை வார்த்துக்கொடுக்க, மணமகளுக்கு திருமாங்கல்யத்தை அணிவித்தார் சுந்தரேசர். அவளது பாதத்தில் மெட்டி அணிவித்தார். எங்கும் பூ மழை பொழிந்தது. மீனாட்சி அம்மியில் கால் வைக்கவும், திருமணத்துக்கு வந்திருந்த வசிஷ்டரின் மனைவி அருந்ததி தேவி, மீனாட்சியின் முன்னால் வந்து நின்று, தங்களின் பார்வை என் மீது பட நான் இங்கே காத்திருக்கிறேன், என்று தலை வணங்கி கைகூப்பி நின்றாள். அருந்ததிக்கு ஈசனும், பிராட்டியும் அருள் செய்தனர். மதுரையிலேயே தங்கி, தன் மகளுடன் நல்லாட்சி செய்ய வேண்டுமென காஞ்சனமாலை இறைவனிடம் வேண்டிக் கொண்டாள். இறைவனும் அந்தக் கோரிக்கையை ஏற்றார். மீனாட்சியுடன் இணைந்து மதுரை நகரை அரசாள முடிவெடுத்தார்.
வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!
வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!
இந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது பரமசிவன் கழுத்தில் இருந்தால் கருடனால் நெருங்க முடியுமா! அதுபோல் தான் ஊரில் எத்தனை யானை இருந்தாலும், ஐராவத யானை வெள்ளை நிறம் என்பதால், அதற்கு மிகவும் கர்வம்.அகம்பாவிகளுக்கு என்றாவது ஒருநாள் அடி விழும். அப்படி ஒரு சோதனை ஐராவதம் யானைக்கும் ஏற்பட்டது. இந்திரன் தேவலோகம் வந்ததும், அவனை ஏற்றிக் கொண்டு இந்திரபுரிக்குள் அட்டகாசமாக நுழைந்தது. துர்வாசர் என்ற மகரிஷி இருந்தார். அவருக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம். சிறிது பிசகலாக பேசினாலோ, நடந்தாலோ கூட மூக்கு மேல் கோபம் வந்துவிடும். அப்படிப்பட்ட கோபக்காரரிடம் அந்த யானை மாட்டிக் கொண்டது. அன்று துர்வாசர் சிவபெருமானை மலர் தூவி வணங்கினார். அவரது பக்திக்கு மகிழ்ந்த ஈசன், தன் ஜடையில் இருந்த பொற்றாமரை ஒன்றை கீழே விழும்படி செய்தார். இறைவன் தந்த அந்த பிரசாதத்தை எடுத்து முனிவர் தன் கமண்டலத்தில் வைத்துக் கொண்டார். இந்திரனை தேவர்கள் ஆரவாரமாக அழைத்து வந்து கொண்டிருந்தனர். இவ்வளவு அடிபட்டும் இந்திரனுக்கு அலட்சிய குணம் மட்டும் மாறவில்லை. மேலும் விருத்திராசுரனையே வென்று விட்டோமே என்ற மமதையுடன் வந்தான். எதிரே வந்த துர்வாசர், அவன் நீடுழி வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் கமண்டலத்தில் இருந்த பொற்றாமரையை அவனிடம் கொடுத்தார். பிரசாதம் வாங்கும் போது பணிவு வேண்டும்.
இந்திரன் சற்றும் பணிவின்றி அந்த தாமரையை அலட்சியமாக வாங்கி அதை யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். யானை அதை தும்பிக்கையால் எடுத்து கால்களில் போட்டு மிதித்து விட்டது. துர்வாசர் நெருப்பு பொங்கும் கண்களுடன் இந்திரனையும், யானையையும் பொசுக்கி விடுவது போல பார்த்தார். தேவேந்திரா... என்று அவர் கோபத்தில் எழுப்பிய சப்தம் அந்த பிரதேசத்தையே கிடுகிடுக்கச் செய்தது. விட்டது வினை என்று இங்கு வந்தால் இந்த துர்வாசரிடம் சிக்கிக் கொண்டோமே என்று இந்திரன் நடுங்கினான். அவன் எதிர்பார்த்தபடியே துர்வாசர் சாபமிட்டார். ஏ இந்திரா! கடம்பவன நாதனான எம்பிரானின் பிரசாதத்தையா அலட்சியம் செய்தாய்! அதை மரியாதையுடன் பெற்றிருந்தால், உன் நிலையே வேறு விதமாக இருந்திருக்கும்! ஆனால், கேடு கெட்ட இந்த யானையிடம் கொடுத்தாய். அது காலில் போட்டு மிதித்தது. தேவனாகிய நீ பூலோகத்தில் பாண்டிய மன்னன் ஒருவனிடம் தோற்றுப் போவாய். அவனுடைய சக்கராயுதம் உன் தலையைக் கொய்து விடும், என்றார். தேவேந்திரனும் தேவர்களும் நடுங்கி விட்டனர். யானையில் இருந்து குதித்த இந்திரன், ஐயனே! அறியாமல் செய்த பிழையை மன்னிக்க வேண்டும். ஏற்கனவே பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு பல்லாண்டுகள் பூலோகத்தில் வாடிக்கிடந்த நான் மீண்டும் பூலோகம் செல்வதா? அதிலும், ஒரு மானிடனிடம் தோற்றுப்போவதா? ஐயோ! இதை விட வேறென்ன கொடிய தண்டனையை நான் பெற முடியும்? தவங்களில் சிறந்தவரே! என்னை மன்னியும், என்றான். தேவர்கள் எல்லாருமே கிரீடங்கள் தலையில் பதியும்படி அவர் காலில் விழுந்து கிடந்தனர்.
துர்வாசர் இதுகண்டு மனம் மாறினார். கோபம் உள்ள இடத்தில் தானே குணமும் இருக்கும்! அவர் இந்திரனிடம், இந்திரா! கொடுத்த சாபத்தை திரும்பப் பெற இயலாது. இருப்பினும், பாண்டிய மன்னன் பயன்படுத்தும் சக்ராயுதம் உன் தலையைக் கொய்ய வரும்போது, அது உன் கிரீடத்தை மட்டும் பறித்துச் செல்லும் நிலை வரும். தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும், என்றவர் யானையைப் பார்த்தார். ஏ ஐராவதமே! பெரியவர்களிடம் பணிபுரிபவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கு உன் வாழ்க்கை இந்த உலகத்துக்கு பாடமாக இருக்க வேண்டும். உன் வெள்ளை நிறம் அழிந்து போகும். தேவலோக யானையான நீ, பூலோகம் சென்று காட்டுக்குள் பிற யானைகளுடன் கலந்து, புழுதி படிந்து நூறாண்டு காலம் திரிவாய். பின்னர், இந்திர லோகத்தை அடைவாய், என சாபமிட்டார். வெள்ளை யானை கண்ணீர் வடித்தது. பின்னர் அது பூலோகம் வந்து பல இடங்களிலும் சுற்றித் திரிந்தது. ஒருவழியாக நூறாண்டுகள் கடந்தன. பல வனங்களில் சுற்றிய அந்த யானை, கடம்ப வனத்துக்குள் புகுந்தது. அதுவே இந்திரனால் உருவாக்கப்பட்ட மதுரையம்பதி. அங்கிருந்த சொக்கலிங்கத்துக்கு அது பொற்றாமரைக் குளத்தில் இருந்து தும்பிக்கையில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தது. தங்கத் தாமரைகளைப் பறித்து வந்து தூவி வழிபட்டது. அந்த யானையின் மீது இரக்கம் கொண்ட சொக்கநாதர் அதன் முன் தோன்றினார். ஐராவதமே! நீ செய்த சிவஅபச்சாரம் நீங்கியது. நீ இந்திரலோகம் திரும்பலாம்,என்றார். யானை சிவனிடம், எம்பெருமானே! இந்த வனத்தின் அழகில் நான் மெய்மறந்து விட்டேன். மேலும் தங்களைப் பிரிய எனக்கு மனமில்லை. நான் இந்த வனத்திலேயே இருக்கிறேனே! தங்கள் விமானத்தை (கருவறைக்கு மேலுள்ள கோபுரம் போன்ற அமைப்பு) தாங்கும் யானைகளில் ஒன்றாக என்னையும் கொள்ள வேண்டும், என்றது. சிவபெருமான் அதனிடம், ஐராவதமே! இந்திரன் எனது பக்தன். அவனைச் சுமந்தால் என்னையே சுமப்பது போலாகும். நீ இந்திரலோகத்திற்கே செல், என்றார். மேலும், அதன் சுயவடிவத்தையும் தந்தார்.அந்த யானைக்கோ கடம்பவனத்தை விட்டு செல்ல மனமில்லை. அது கடம்பவனத்தின் ஒரு பகுதிக்குச் சென்று அங்கிருந்த ஒரு லிங்கத்திற்கு பூஜை செய்து அங்கேயே தங்கி விட்டது. வெள்ளை யானை வந்து தங்கிய அந்த இடத்துக்கு அதன் பெயரான ஐராவதநல்லூர் என்று அமைந்தது. பின்னர், இந்திரன் அந்த யானை பற்றி அறிந்து வந்து அதை அழைக்க வந்தான். சிவபெருமானிடம் யானையின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தான் எழுப்பிய விமானம் தன் பெயரால் இந்திர விமானம் என அழைக்கப்பட வேண்டும் என்றும், வெள்ளை யானை தன்னைத் தாங்குவது போல், அந்த விமானத்தையும் ஐராவதமே எட்டு வடிவங்களில் தாங்குவது போன்ற தோற்றம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அதன்படியே, எட்டு வெள்ளை யானைகள் மதுரை சொக்கநாதரின் விமானத்தை தாங்கியுள்ள காட்சியை இப்போதும் காணலாம்.
ஆண்டாள்
ஆழ்வார்களும் அவதாரமும்
6. ஆண்டாள்
பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : பெரியாழ்வார் (வளர்ப்புத்தந்தை)
பிறந்த காலம் : 9ம் நூற்றாண்டு நள ஆண்டு ஆடி மாதம்
நட்சத்திரம் : ஆடி பூரம் (வளர்பிறை சதுர்த்தசி திதி)
கிழமை : செவ்வாய்
எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
பாடிய பாடல் : 173
சிறப்பு : கரும்பார் குழல் கோதை என்ற சிறப்பு பெயர் பெற்றவள், திருமாலின் மனைவியாகும் பாக்கியம் செய்தவள். (பூமிப்பிராட்டியாம்சம்)
பிற பெயர்கள் : கோதைப்பிராட்டி, சூடிக்கொடுத்த நாச்சியார்
ஸ்ரீ வில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஒரு துளசி செடியின் அடியில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியே ஆண்டாளாக அவதாரம் செய்தார். பெரியாழ்வார் இந்த நந்தவனத்திற்கு வந்தபோது ஆண்டாளை எடுத்து சுரும்பார் குழற்கோதை என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார். அந்த நந்தவனத்தின் மலர்களை தினமும் பறித்து மாலையாக தொடுத்து ரெங்கமன்னாருக்கு வழங்குவது ஆழ்வாரின் முக்கியப்பணியாகும். மாதவனின் தோளைத் தழுவும் அந்த மாலையை அவர் மீது கொண்ட காதலால் ஆண்டாள் தம் கழுத்தில் அணிந்து அழகு பார்த்து அதன் பின் பெருமாளுக்கு அனுப்பி வைப்பாள். ஒரு முறை பெருமாள் அணிந்திருந்த மாலையில் நீண்ட முடி இருப்பதை கண்ட அர்ச்சகர்கள் அதை எறிந்து விட்டு வேறுமாலை கொண்டு வரும் படி ஆழ்வாரிடம் கூறிவிட்டனர். பகவானின் சேவையில் தவறு வந்து விட்டதே என்று ஆழ்வார் வருந்தினார். மறுநாளும் மாலை தொடுத்து ஆண்டவனுக்கு அனுப்பும் சமயத்தில் அந்த மாலையை ஆண்டாள் அணிவதை கண்டார். ஆண்டாளை கண்டித்தார். அன்று இரவே பெருமாள் ஆழ்வாரின் கனவில் தோன்றி ஆண்டாள் சூடிய மாலையையே தனக்கு அணிவிக்கும்படி கூறினார். அது முதல் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் பூமாலை மட்டுமின்றி பாமாலையும் சூடி மகிழ்ந்தாள். ஸ்ரீ ரங்கப்பெருமாளை திருமணம் செய்வதற்காக ஆண்டாள் மார்கழியில் நோன்பிருந்து பக்தியின் சாரமாக திருப்பாவையும். காதலின் வரமாக நாச்சியார் திருமொழியையும் காதலின் வீரமாக நாச்சியார் திருமொழியையும் பாடினார். தன் தந்தையிடமும் இந்த தெய்வீக திருமணம் பற்றி கூறினார். ஆழ்வாரும் ஆண்டாளை பல்லக்கில் ஏற்றி வந்தார். இதைக்கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் ஆண்டாள் திருமணத்தை சிறப்பாக நடந்த ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரை அலங்கரிக்க ஏற்பாடு செய்தார். காவிரியின் தென்கரையில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்ல ஆண்டாள் விருப்பப்பட்டாள். ஆண்டாள் பாதம் வலிக்குமே என்றெண்ணிய ரெங்கநாதர் அவளை தன் மார்பில் வீற்றிருக்கும்படியாக செய்தார். பங்குனி உத்திர நன்னாளில் ஆண்டாள் ரெங்கநாதர் திருமணம் சிறப்பாக நடந்தது. பெருமாளின் 108 திருப்பதிகளில் ஆண்டாள் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 10 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
திங்கள், 9 நவம்பர், 2020
பெரியாழ்வார்
ஆழ்வார்களும் அவதாரமும்
5. பெரியாழ்வார்
பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : முகுந்தர்
தாய் : பதுமவல்லி
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டு குரோதன ஆண்டு ஆனி மாதம்
நட்சத்திரம் : ஆனி சுவாதி (வளர்பிறை ஏகாதசி திதி)
கிழமை : திங்கள்
எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி
பாடிய பாடல் : 473
சிறப்பு : திருமாலின் வாகனமான கருடனின் அம்சம்
பிற பெயர்கள் : பட்டநாதன், பட்டர்பிரான், விஷ்ணுசித்தன், ஸ்ரீவில்லிபுத்தூரார், ஸ்ரீரங்கநாதஸ்வஸுரர்
பெரியாழ்வாரின் இயற்பெயர் விஷ்ணு சித்தர். ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ரசாயிக்கு தினமும் மாலை தொடுத்து சூட்டுவதை தன் முக்கிய பணியாக கொண்டிருந்தார் இவர். அக்காலத்தில் மதுரையில் அரசனான வல்லபதேவ பாண்டியன் நகர சோதனை வரும் போது ஒரு வேதியர் திண்ணையில் படுத்திருப்பதை கண்டு ஒரு நல்ல வார்த்தை சொல்லும் படி கேட்டார். அந்த வேதியரும் மழைக்காலத்துக்காக மற்ற எட்டு மாதங்களிலும் இரவுக்காகப் பகலிலும். கிழப்பருவத்திற்காக வாலிபத்திலும், மறுமைக்காக இம்மையிலும் முயற்சிக்க வேண்டும் என்ற சுலோகத்தை சொன்னார். மன்னனும் தம் அரசவையிலுள்ள செல்வ நம்பி என்ற அந்தணரிடம் இது பற்றி கூறினார். அதற்கு செல்வ நம்பி பரத்வ நிர்ணயம் பண்ணி அதனடியாகப் பேறு பெற வேண்டும் என்று கூறினார். ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெருமாள் விஷ்ணு சித்தர் கனவில் தோன்றி மதுரையில் நடந்த சம்பவத்தை கூறி உனக்குத்தான் பொற்கிழி சென்று வாரும் என்றார். அதற்கு விஷ்ணு சித்தர் கல்லாதவனான என்னால் முடியுமா ? என்று கேட்க பெருமாளும் இதற்கு நானே பொறுப்பு என்றார். விஷ்ணு சித்தர் மதுரை சென்று பாண்டியன் அரசவையில் வேதங்கள் பாடி ஸ்ரீமன் நாராயணனே பரன் (முதல்வன்) என்று நிலை நாட்டினார். பொற்கிழி தோரணம் தாழ அதனை எடுத்துக் கொண்டார். எல்லோரும் பாராட்டி ஆழ்வாரை யானை மீது ஏற்றி வீதி வலம் வந்த போது இக்கோலத்தை ரசிக்க பெருமாள் பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து ஆகாயத்தில் தோன்றி ஆழ்வாருக்கு காட்சியளித்தார். ஆழ்வார் மருண்டார். நல்ல காலத்திலேயே இம் மண்ணுலகில் தீங்கு செய்வர். இக்கலியிலே முகம் காட்டுகிறானே, இதனால் கண்திருஷ்டி பட்டு விடுமோ என்று பொங்கும் பரிவால். யானை மீதுள்ள மணிகளை ஒலித்து கொண்டு பல்லாண்டு பல்லாண்டு என்று மங்களாசாசனம் பண்ணினார். எனவே தான் ஆழ்வார்களிலே பெரியாழ்வார் எனப்பட்டார். பொற்கிழியை கொண்டு ஸ்ரீ வில்லிபுத்தூர் பெருங்கோயிலுக்கு சமர்ப்பித்து மீண்டும் தொண்டு செய்தார். கண்ணன் லீலையை முற்றும் அனுபவித்து அதன் விளைவாக பெரியாழ்வார் திருமொழி என்ற பிரபந்தத்தை வெளியிட்டார். பெரியாழ்வாரின் வம்சத் தோன்றல்கள் வேதப்பிரான் பட்டர்கள் என்ற திருநாமத்துடன் இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வருகிறார்கள். பெருமாளின் 108 திருப்பதிகளில் பெரியாழ்வார் தனியாக சென்று 2 கோயில்களையும் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 17 கோயில்களையும் என மொத்தம் 19 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
அப்பர்
இவர் சொல்றத கொஞ்சம் கேளுங்க
யார் அவர்? அவர் தான் அப்பர் பிரான். இரவும், பகலும் எந்நேரமும் ஏதோ ஒன்றின் பின்னால் அலைந்து கொண்டு இருக்கிறோம். பணம், புகழ், ஆசை, பொறாமை, காமம், பதவி என்று ஐந்து புலன்களும் நம்மை அங்கும் இங்கும் அலைக்கழிக்கின்றன. ஒரு நிமிடம் நிற்க விடுவது இல்லை.
என்ன தான் செய்வது? எல்லாவற்றையும் விட்டு விடலாம் என்றால் அதுவும் முடிவது இல்லை. வைத்துக் கொண்டு அல்லாடாவும் முடியவில்லை. ஒரு சில சமயம் இன்பமாக இருப்பது போல இருந்தாலும், துன்பமே மிகுதியாக இருக்கிறது. இப்படி கிடந்து உழல்வது தான் நமக்கு விதித்த விதியா? இப்படியே போய் கொண்டிருந்தால் இதற்கு என்ன தான் முடிவு.
நாவுக்கரச பெருமான் சொல்கிறார்...
"இரவும் பகலும் ஐந்து புலன்கள் நம்மை அரித்துத் தின்ன இந்த துன்பத்தில் இருந்து எப்படி விடுபடுவோம் என்று நினைத்து ஏங்கும் மனமே உனக்கு ஒன்று சொல்வேன் கேள். "திருச்சிராப்பள்ளி" என்று சொல். நீ செய்த தீவினை எல்லாம் உன்னை விட்டு முன்னே நடந்து போய் விடும்" என்று.
பாடல்
அரிச்சி ராப்பக லைவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திருச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே.
சீர் பிரித்த பின் அரித்து இராப் பகல் ஐவரால் ஆட்டுண்டு சுரிச்சிராது நெஞ்சே ஒன்று சொல்லக்கேள்
திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை நரிச்சு இராது நடக்கும் நடக்குமே.
பொருள்
அரித்து = அரித்து
இராப் பகல் = இரவும் பகலும்
ஐவரால் = ஐந்து புலன்களால்
ஆட்டுண்டு = ஆட்டப்பட்டு
சுரிச்சிராது = துக்கப்படாமல்
நெஞ்சே = நெஞ்சே
ஒன்று சொல்லக்கேள் = ஒன்று சொல்வேன் கேள்
திருச்சிராப்பள்ளி = திருச்சிராப்பள்ளி
என்றலும் = என்று சொன்னால்
தீவினை = செய்த தீய வினைகள் எல்லாம்
நரிச்சு இராது = கூடவே இருக்காமல்
நடக்கும் நடக்குமே = மெல்ல மெல்ல நடந்து சென்று விடும் (உன்னை விட்டு)
"திருச்சி" அப்படினு சொன்னா போதுமா? ஏன் திருச்சி, வேற ஊர் பேர் சொல்லக் கூடாதா ?
பெயர் அல்ல முக்கியம். எப்போதும் புலன்கள் பின்னால் அலைவதை விடுத்து மனதை நல்ல வழிகளில் திசை திருப்பச் சொல்கிறார். புலன் இன்பம் மட்டுமே வாழ்க்கை அல்ல. அது கொஞ்சம் கொஞ்சமாக நம் வாழ்வை அரித்து விடும். துன்பத்தையே தரும். அதை அறிந்து கொண்டு, மனதை திசை திருப்பச் சொல்கிறார். பெரியவர்கள் சொல்லும் போது ஏதோ ஒரு மந்திரத்தைச் சொல் கடவுள் பெயர், ஊர் பெயர், என்று ஏதாவது ஒன்றை பிடித்துக் கொள் என்பார்கள்.
நம்மவர்கள் உடனே ஏன் அந்த சாமிப் பெயர், எதுக்கு அந்த ஊர், அதில் இன்னார் பெரிய உயர்வு என்று சண்டை பிடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஏதாவது ஒரு ஊர் பெயரைச் சொல் என்றால் எந்த ஊர் என்ற கேள்வி வரும். இப்படி மனம் கிடந்து அலைந்து திரியும். காரியம் நடக்காது. எனவே தான், ஒன்றை பிடித்துக் கொள் என்கிறார்கள். அது உயர்ந்தது என்பதற்காக அல்ல. எல்லாவற்றையும் தூக்கிப் போட்டால் எதை எடுப்பது எதை விடுவது என்று நாம் குழம்பிப் போவோம் என்பதற்காக. உங்கள் மனதில் எது படுகிறதோ எது இலயிக்கிறதோ அதைச் சொல்லுங்கள்.
"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்"
தான் உள்ளே இருக்கும் படி இந்த உலகைச் செய்தான். அனைத்திலும் அவன் இருக்கிறான் என்கிறபடியால், எதை வேண்டுமானாலும் நினைக்கலாம்.
எளிமையான பாடல்கள் என்பதால், நாம் சிலவற்றை கடந்து போய் விடுகிறோம். எல்லாவற்றிலும் பொருள் உண்டு.
"முறுக வாங்கிக் கடைய, முன் நிற்குமே"
நம்பிகள் நாமம் வளர்க
ஞாயிறு, 8 நவம்பர், 2020
உயிர் பிரியும் போது தச வாயுக்களின் பங்கு
உயிர் பிரியும் போது தச வாயுக்களின் பங்கு :
உடலை விட்டு
இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் உயிர் உடலை விட்டு பிரியும்.
மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு . இவை தச வாயுக்கள் எனப்படும்.
1. உயிர் காற்று. (பிராணன்)
2. மலக்காற்று. (அபானன்)
3. தொழில் காற்று. (வியானன்)
4. ஒலிக்காற்று. (உதானன்)
5. நிரவுக்காற்று.( சமானன்)
6. தும்மல் காற்று. (நாகன்)
7. விழிக்காற்று. (கூர்மன்)
8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)
9. இமைக் காற்று. (தேவதத்தன்)
10. வீங்கற் காற்று. (தனஞ்சயன்)
உயிர் வெளியே புறப்படும் நாள் , நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு, எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.
உதாரணமாக . . . .
ஒரு வீட்டை நாம் காலி செய்யும்போது எப்படி எல்லா பொருள்களையும் ஒழுங்காக அடுக்கி கட்டி கொண்டுவந்து நடு வீட்டில் வைத்து பின் அங்கிருந்து சரியாக எண்ணி ஒவ்வொன்றாக வெளியே கொண்டு செல்வது போல , நமது அனைத்து அவயங்களும் ஒவ்வொன்றாக முழுச் செயலையும் , ஒவ்வொன்றாக நிறுத்தி , நமது நடுநெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும்.
சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும் , இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும் , மூத்திர வாசல் வழியாகவும் , காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும் .
ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு , அவயங்களும் முழு நிறுத்தம் கண்டு , எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழியாக தனஞ்சயன் என்ற அந்த வாயு மற்றவற்றையும் வெளியே அழைத்து செல்லும்.உயிர் பிரியும் .
மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும்போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் வேலையும் அந்த தனஞ்சயன் செய்வது தான் .
உயிரற்ற உடல்களை ஸ்ரீராகவேந்திரர் போன்ற மகான்கள் பிழைக்க வைப்பதுவும் இந்த தனஞ்சயனை தம் யோக சக்தியால் ஊக்கி விட்டு மற்ற ஒன்பது வாயுக்களை அழைத்து வரச்செய்து உடலினுள் புகுத்தி உயிர் அளிப்பதே ஆகும் .இவ்வாறாக புனரபி ஜனனம் , புனரபி மரணம் .
என்ற நிலை அமைகிறது .
பிறப்பின் துவக்கம் ஆசையின் தூண்டலால் அமைகிறது.
பாபங்களும் , புண்ணியங்களும் அற்ற சம நிலையை அடைவதே பிறப்பற்ற நிலையைத் தரும் , அதுவே ஒவ்வொரு மனிதரும் காண வேண்டிய உன்னதமான முக்தி நிலையாகும்.
#தச_வாயுக்களின்_சுற்று:
1. பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல்வளையில் உள்ளது. கை,கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.
2. அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்.குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.
3. வியானன் - தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையாபொருளில் உருப்புக்களைநீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.
4. உதானன் - உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.
5. சமானன் - நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.
6. நாகன் - அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.
7. கூர்மன் - மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண்திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.
8. கிருகரன் - நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டுபண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.
9. தேவதத்தன் - சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.
10. தனஞ்செயன் - மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல், இறந்த மூன்றாம் நாள் தலை வழியாகவெழியே செல்லுதல்.
குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள்தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன.
#ஹரிஓம்.#ஓம்நமசிவாய!
சனி, 7 நவம்பர், 2020
திருமழிசையாழ்வார்
4. திருமழிசையாழ்வார்
பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : தை மகம் (தேய்பிறை பிரதமை திதி)
கிழமை : ஞாயிறு
தந்தை : பார்க்கவ முனிவர்
தாய் : கனகாங்கி
எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
பாடல்கள் : 216
சிறப்பு : திருமாலின்ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம்,
பிற பெயர்கள் : மழிசைப்பிரான், மஹீஸாபுரீஸ்வரர், பக்திஸாரர், பார்க்கவர்.
சக்கரத்தாழ்வாரின் அம்சமான திருமழிசை ஆழ்வார் பார்க்கவ மகரிஷியின் மகனாக திருமழிசை என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர். பிரம்பறுக்க வந்த திருவாளன் என்பவர் இவரை எடுத்துச்சென்று வளர்த்தார். ஆனால் ஆழ்வார் பிறந்தது முதல் பால் கூட குடிக்கவில்லை. இதைக்கேள்விப்பட்ட வேளாளர் ஒருவர் தன் மனைவியுடன் பசும்பாலை காய்ச்சி எடுத்து வந்து இவருக்கு கொடுத்து அருந்தக் கூறினார். இப்படியே தினமும் வேளாளர் கொடுத்த பாலை குடித்து வந்த ஆழ்வார். ஒரு நாள் சிறிது பாலை மட்டும் அருந்தி விட்டு மீதியை அவர்களிடமே அருந்தக் கூறினார். மனைவியுடன் அந்த பாலை அருந்திய வேளாளர் தன் முதுமை நீங்கி இளமை பெற்றார். பாலின் மகிமையால் இவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு கனிக்கண்ணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். களிக்கண்ணனும் திருமழிசை சீடர் ஆனார். பல சமயங்களில் உள்ள குறைபாடுகளை அறிந்த ஆழ்வார் கடைசியில் சைவ சமயத்தை சார்ந்திருந்தார். ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார், திருமழிசை ஆழ்வாரை வைணவ சமயத்தை ஏற்கச் செய்ததுடன் திருமந்திர உபதேசம் செய்தார். ஒருமுறை காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார் அங்குள்ள திருவெங்குடி திருத்தல பெருமாளுக்கு பல ஆண்டுகள் தொண்டாற்றி வந்தார். அங்கு ஆசிரமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டியின் விருப்பப்படி அவளுக்கு இளமை வரம் கொடுத்தார். இவளின் அழகில் மயங்கிய பல்லவ மன்னன் இவளை தன் மனைவியாக்கினான். தனக்கும் இளமை வரம் வேண்டும் என்று விருப்பப்பட்ட மன்னன். ஆழ்வாரின் சீடனான களிகண்ணனிடம் தனக்கும் இளமை வரம் கேட்டான். ஆனால் எல்லோருக்கும் ஆழ்வார் வரம் தர மாட்டார் என களிக்கண்ணன் கூறியதால் அவனை நாடு கடத்த மன்னன் உத்தரவிட்டார். இதையறிந்த ஆழ்வார் சீடனுடன் தானும் வெளிறே முடிவு செய்து காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் நாங்கள் இல்லாத இடத்தில் உனக்கும் வேலை இல்லை எனவே நீயும் எங்களுடன் வந்து விடு என அழைத்தார். பெருமாளும் தன் பாம்பணையை சுருட்டிகொண்டு ஆழ்வாருடன் சென்றார். இதனால் இந்த பெருமாளுக்கு சொல் வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் வழங்கப்படுகிறது. அதன் பின் கும்பகோணம் வந்த ஆழ்வார் நீண்ட காலம் அங்கிருந்து பெருமாளுக்கு சேவை செய்து திருவடியை அடைந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமழிசை ஆழ்வார் தனியாக சென்று 2 கோயில்களையும் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 11 கோயில்களையும் என மொத்தம் 13 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்
பேயாழ்வார்
3. பேயாழ்வார்
பிறந்த ஊர் : மயிலாப்பூர்
பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி சதயம் (வளர்பிறை தசமி திதி)
கிழமை : வியாழன்
எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சம் (நந்தகாம்சம்)
பிற பெயர்கள் : கைரவமுநி, மஹதாஹ்வயர்
இவர் சென்னையிலுள்ள ஆதிகேசவப்பெருமாள் கோயில் அருகிலுள்ள குளத்தில் அதிசயமாக மலர்ந்த செவ்வரளிப்பூவில் பிறந்தவர். சிறுவயது முதல் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அவர் மனம் எப்போதும் பரமனின் திருவடியையே நாடி நின்றது. திருமாலின் திருப்புகழை பாமாலையாக்கி நாள்தோறும் தொடுப்பார் இவர். அப்பொழுது இவர் கண்களில் ஆனந்த வெள்ளம் கரை புரண்டோடும். திருமாலின் திருப்பாதம் பணியுங்கள். உங்கள் வினைகள் ஓடிப்போகும். அத்துடன் மீண்டும் உங்களை தொடாது. இதையே
அகநன்று, இது தீது என்று ஐயப்படாதே
மது நன்று தண் துழாய் மார்வன்-பொது நின்ற
பொன்அம் கழலே தொழுமின் ! முழு வினைகள்
முன்னம் கழலும் முடிந்து
என்ற பாடலால் உணர்த்தியுள்ளார். இவர் நூறு பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதியை அருளினார். முதலாழ்வார்கள் எனப்பட்ட பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரில் இவர் தான் அதிகமான ஸ்தலங்களைப்பாடியுள்ளார். அத்துடன் பதினைந்து திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். திருக்கோவிலூரில் உள்ள ஒரு வைணவரின் வீட்டில் விளக்கு வெளிச்சத்தில் நாராயணன் நிற்பது முதலில் பேயாழ்வாருக்கு தான் தெரிந்தது. இப்படி பரமனைக் கண்ட பரவசத்தில் திருக்கண்டேன். பொன்மேனி கண்டேன் என்று துவங்கி நூறு பாடல்களை பாடினார். மேலும் திருவேங்கடம் சென்ற இவர் பெருமானை சிவனும், விஷ்ணுவும் கலந்த உருவாக கண்டார். பெருமாள் மேல் ஆராக்காதல் கொண்டு வேறு எதையும் நினைக்காமல் வாழ்ந்தார். பேயனாயொழிந்தே ஏனம்பிரானுக்கே என்று பாடியருளினார். பக்தி பரவசத்தில் அதுவே ஒரு வெறிபோல் தோன்றும்படி அவர் அழுவார். தொழுவார். ஆடிக் காண்பார் இறை பக்தியில் தன்னை முழுதும் மறந்து போனதால் இவர் பேயர் போலும் பித்தர் போலும் திரிந்தார். இதனாலேயே இவர் பேயாழ்வார் என் அழைக்கப்பட்டார். பெருமாளின் 108 திருப்பதிகளில் பேயாழ்வார் தனியாக சென்று 1 கோயிலையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 11 கோயில்களையும் என மொத்தம் 12 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.