தடாதகையாரின் திருமணப் படலம்!
உலகத்துக்கே ஒரு தாயை ஈன்றெடுத்துக் கொடுத்த காஞ்சனமாலையும், உலகத்தாயான தடாதகைபிராட்டியும் தங்கள் குல தலைமையை இழந்து அடைந்த கவலைக்கு அளவே இல்லை. அவருக்குரிய ஈமச்சடங்குகளை தடாதகையே முன்னின்று செய்தாள். தந்தையில்லாத வீடு... மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் வீட்டுக்கு மருமகன் வந்துவிடுவார். தடாதகையை நல்லபடியாக பார்த்துக் கொள்வார். இவளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் நல்லதென முடிவெடுத்து, மகளிடம் சொன்னாள் காஞ்சனமாலை. மகள் அவளிடம், அம்மா! ஒரு தாயாக இருந்து உனக்குரிய கடமையை நீ சொன்னாய். ஆனால், தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது எனது கடமை. தந்தையார் என்னிடம் சொன்னபடி நான் உலகமெங்கும் சுற்றி, அனைத்து தேசங்களையும் என் ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டியிருக்கிறது. நீ என்னை வாழ்த்தி வழியனுப்பு! திரும்பி வந்ததும், உன் விருப்பப்படியே திருமணம் நடக்கும், என்றாள். மகளின் விருப்பத்திற்கு தாயும் குறுக்கே நிற்கவில்லை. அமைச்சர் சுமதி போருக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். போர்க்கோலம் பூண்ட தடாதகை பிராட்டி, தாயிடம் நல்லாசி பெற்று புறப்பட்டாள். தாரை, தப்பட்டை ஆர்ப்பரிக்க, சங்குகள் முழங்க அவளது நால்வகைப் படையும் கிளம்பியது.
இவர்களது படையைப் பார்த்தவுடனேயே எதிரிகளெல்லாம் அஞ்சி, நடுங்கி அவளை சரணடைந்தனர். பூவுலகில் வெற்றிக்கொடி நாட்டி தடாதகை பிராட்டியார், தேவலோகத்திற்குச் சென்றாள். புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால், குழந்தை பிறக்குமென மலையத்துவஜனுக்கு வாக்களித்த இந்திரன், கலங்கிப் போனான். நமது யோசனையால் பிறந்த குழந்தையே, நம்மை நோக்கி படையெடுத்து வருகிறதே என அஞ்சி நடுங்கினான். பதவியை விட்டுவிட்டு, ஓடி ஒளிந்து கொண்டான். தடாதகை பிராட்டியார் தேவேந்திரனுக்குச் சொந்தமான சங்கநதி, பதுமநிதி, சிந்தாமணி, காமதேனு, கற்பகதரு போன்ற மிகப் பெரிய செல்வங்களையெல்லாம் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டாள். தேவ கன்னியர்களை தனக்கு பணிபுரிவதற்காக தன்னோடு வரச்சொன்னாள். பிறகு, கயிலை மலையையும் தன் வசமாக்கிக் கொள்வதற்காக படைகளுடன் அங்கு புறப்பட்டாள். தடாதகை பிராட்டியார் வாழ்க! அமைச்சர் சுமதி வாழ்க! என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.கயிலையை அவள் அடைந்ததும், சிவபெருமான் அவளை முகம் மலர வரவேற்றார். தடாதகை பிராட்டியார் மதுரையிலிருந்து கிளம்பியபோதே, சுந்தரேஸ்வர பெருமானும் அவள் அறியாவண்ணம் அவளது தேரிலேயே அமர்ந்து வந்தார் என்பதை, அவளால் உணர முடியவில்லை. இதை அறியாத நந்திதேவர், பிராட்டியாரின் படை கண்டு நடுங்கி நின்றார். இப்படி ஒரு படை வந்திருக்கிறதே! நம்மையே அடிமைப் படுத்த வந்துள்ள இந்தப் பெண் மணியை நீங்கள் வரவேற்கிறீர்களே! என் கட்டுக்காவலை மீறி இவர்கள் உள்ளே வந்துள்ளார்கள். இப்போது நாம் என்ன செய்வது? என சிவனிடம் யோசனை கேட்டார்.
சிவபெருமான் அவரிடம், போருக்கென வந்தவர்களிடம் மோதிப்பார்த்து விட வேண்டியதுதான். நீ நம் படைகளுடன் புறப்படு, என்றார். சக்திதேவியான தடாதகை பிராட்டியாரின் வீரத்தை உலகுக்கு உணர்த்துவதற்காக, சிவபெருமான் இப்படியொரு நாடகம் ஆடினார். நந்தி தேவரின் தலைமையில் புறப்பட்ட படைகள் அனைத்தும் தடாதகை பிராட்டியால் விரட்டியடிக்கப்பட்டன. சிவகணங்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். சூரியன், சந்திரன், அக்னி, வருணன் முதலான தேவர்களின் அஸ்திரங்களை எல்லாம் தடாதகை பிராட்டியார் அழித்தாள். பூதங்களின் வலிமை பிராட்டியின் வலிமை முன்னால் எடுபடவில்லை. வேறு வழியின்றி சிவபெருமானே அவளுடன் போர் செய்ய கிளம்பினார். அவர் அன்னையின் முன் வந்து நின்றதும், அந்த அதிசயம் நிகழ்ந்தது. அவளது தனங்களில் ஒன்று மறைந்தது. மன்மதனின் கணைகள் அவளைத் தாக்கியது போன்ற உணர்வு ஏற் பட்டது. ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, நாணத்தால் தலை குனிந்து நின்றாள் தடாதகை. அமைச்சர் சுமதி ஆச்சரியப் பட்டார். அவருக்கு தான் மீனாட்சியின் தன ரகசியம் தெரியுமே! எதிரே நிற்பது சிவபெருமான் என்பதும், அவளே அவரை மணந்து கொள்வார் என்பதும் தெரிந்து விட்டது. தடாதகை பிராட்டியார் குனிந்த தலைநிமிராமல், அவரது பாதத்தில் விழுந்தாள். அதுவரையில் இருந்த வீரம், காதலாக மாறிவிட்டது.
உலகையே வென்று நம் கைக்குள் கொண்டு வந்தாலும், மனிதன் இறைவனிடமே அடைக்கலமாக வேண்டும் என்பதை உணர்த்தியது இந்தக் காட்சி. சிவபெருமான் அவளைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். பின்னர் மீனாட்சி மதுரை திரும்பினாள். தாய் காஞ்சனமாலை வெற்றிக்கனி பறித்து வந்த மகளை வரவேற்றாள். உலகை வென்றதுடன், ஈசனின் இதயத்தையும் தன் மகள் வென்று வந்தாள் என்ற செய்தியறிந்து, மகளுக்கு மணநாள் குறிக்க ஏற்பாடு செய்தாள். இறைவனுக்கே திருமணம் நடத்தி வைக்கும் பாக்கியம் கிடைத்தது குறித்து அமைச்சர் சுமதி ஆனந்தம் கொண்டார். திருமண பட்டோலை எழுதி, பல தேசத்து மன்னர்களுக்கும் அனுப்பினார். மதுரை மக்களுக்கு தடாதகை பிராட்டி யாருக்கு திருமணம் நடக்க இருப்பது குறித்து முரசறைந்து அறிவிக்க ஏற்பாடு செய்தார். மக்கள் மகிழ்ந்தனர். தங்கள் வீட்டு திருமணம் அல்லவா? நகரை அவர்கள் அலங்கரித்த விதம் அலாதியாக இருந்தது. தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வண்ண ஓவியங்களைத் தீட்டினர். நகர் முழுவதும் கமுகு, வாழை மரத்தோரணங்களைக் காண முடிந்தது.இறைவனுக்கு அம்பாளின் அவதாரமான தடாதகை பிராட்டியுடன் நடக்கப் போகும் திருமணத்துக்கு முனிவர்களும், தேவர்களும் வந்து சேர்ந்தனர். சிவபெருமானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் செய்யப் பட்ட அலங்காரத்தை சொல்லி மாளாது. தடாதகை பிராட்டி தன் மக்களை மீன் போல் பாதுகாத்தவள். அதாவது, மீன்கள் தங்கள் கண்களாலேயே குஞ்சுகளுக்கு உணவூட்டுபவை. சற்றும் இமைக்காதவை. இக்காரணத்தால், எங்கள் மீனாட்சிக்கு கல்யாணம் என மக்கள் ஆரவாரம் செய்தனர்.
அந்த மீனாட்சிக்கு சரஸ்வதியும், லட்சுமியும் வந்திருந்து அலங்காரம் செய்தனர். ஊர் மகிழ்ந்திருந்த வேளையில், காஞ்சனமாலைக்கு மட்டும் கண்ணீர் வழிந்தது. இதையெல்லாம் பார்க்க தன் கணவர் மலையத்துவஜன் இல்லையே என்று! தந்தையில்லாத மீனாட்சிக்கு தந்தையாயும், தமையனாயும் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க அந்த மகாவிஷ்ணுவே வந்துவிட்டார். ஈசனுக்கு பட்டு அங்கவஸ்திரம், விதவிதமான நகைகள் அணிவிக்கப்பட்டு மிக அழகாக இருந்தார். இவரல்லவோ சுந்தரன் என்று மக்கள் ஆனந்தமாகப் பேசினர். சுந்தர ஈஸ்வரன் எங்கள் மீனாட்சியின் கரம் பற்ற வந்துள்ளான், என புகழ்ந்தனர். இதனால் சிவபெருமானுக்கு சுந்தரேஸ்வரன் என்ற பெயர் உண்டாயிற்று. அமைச்சர் சுமதி ஆனந்தக் கண்ணீர் வழிய நின்றிருந்தார். மணமேடைக்கு மணமக்கள் வந்தனர். அவர்கள் மாலை மாற்றி கொண்டனர். பிரம்மா வேதமந்திரம் முழங்க, திருமால் தாரை வார்த்துக்கொடுக்க, மணமகளுக்கு திருமாங்கல்யத்தை அணிவித்தார் சுந்தரேசர். அவளது பாதத்தில் மெட்டி அணிவித்தார். எங்கும் பூ மழை பொழிந்தது. மீனாட்சி அம்மியில் கால் வைக்கவும், திருமணத்துக்கு வந்திருந்த வசிஷ்டரின் மனைவி அருந்ததி தேவி, மீனாட்சியின் முன்னால் வந்து நின்று, தங்களின் பார்வை என் மீது பட நான் இங்கே காத்திருக்கிறேன், என்று தலை வணங்கி கைகூப்பி நின்றாள். அருந்ததிக்கு ஈசனும், பிராட்டியும் அருள் செய்தனர். மதுரையிலேயே தங்கி, தன் மகளுடன் நல்லாட்சி செய்ய வேண்டுமென காஞ்சனமாலை இறைவனிடம் வேண்டிக் கொண்டாள். இறைவனும் அந்தக் கோரிக்கையை ஏற்றார். மீனாட்சியுடன் இணைந்து மதுரை நகரை அரசாள முடிவெடுத்தார்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
செவ்வாய், 10 நவம்பர், 2020
தடாதகையாரின் திருமணப் படலம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக