JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
திங்கள், 9 நவம்பர், 2020
அப்பர்
இவர் சொல்றத கொஞ்சம் கேளுங்க
யார் அவர்? அவர் தான் அப்பர் பிரான். இரவும், பகலும் எந்நேரமும் ஏதோ ஒன்றின் பின்னால் அலைந்து கொண்டு இருக்கிறோம். பணம், புகழ், ஆசை, பொறாமை, காமம், பதவி என்று ஐந்து புலன்களும் நம்மை அங்கும் இங்கும் அலைக்கழிக்கின்றன. ஒரு நிமிடம் நிற்க விடுவது இல்லை.
என்ன தான் செய்வது? எல்லாவற்றையும் விட்டு விடலாம் என்றால் அதுவும் முடிவது இல்லை. வைத்துக் கொண்டு அல்லாடாவும் முடியவில்லை. ஒரு சில சமயம் இன்பமாக இருப்பது போல இருந்தாலும், துன்பமே மிகுதியாக இருக்கிறது. இப்படி கிடந்து உழல்வது தான் நமக்கு விதித்த விதியா? இப்படியே போய் கொண்டிருந்தால் இதற்கு என்ன தான் முடிவு.
நாவுக்கரச பெருமான் சொல்கிறார்...
"இரவும் பகலும் ஐந்து புலன்கள் நம்மை அரித்துத் தின்ன இந்த துன்பத்தில் இருந்து எப்படி விடுபடுவோம் என்று நினைத்து ஏங்கும் மனமே உனக்கு ஒன்று சொல்வேன் கேள். "திருச்சிராப்பள்ளி" என்று சொல். நீ செய்த தீவினை எல்லாம் உன்னை விட்டு முன்னே நடந்து போய் விடும்" என்று.
பாடல்
அரிச்சி ராப்பக லைவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திருச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே.
சீர் பிரித்த பின் அரித்து இராப் பகல் ஐவரால் ஆட்டுண்டு சுரிச்சிராது நெஞ்சே ஒன்று சொல்லக்கேள்
திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை நரிச்சு இராது நடக்கும் நடக்குமே.
பொருள்
அரித்து = அரித்து
இராப் பகல் = இரவும் பகலும்
ஐவரால் = ஐந்து புலன்களால்
ஆட்டுண்டு = ஆட்டப்பட்டு
சுரிச்சிராது = துக்கப்படாமல்
நெஞ்சே = நெஞ்சே
ஒன்று சொல்லக்கேள் = ஒன்று சொல்வேன் கேள்
திருச்சிராப்பள்ளி = திருச்சிராப்பள்ளி
என்றலும் = என்று சொன்னால்
தீவினை = செய்த தீய வினைகள் எல்லாம்
நரிச்சு இராது = கூடவே இருக்காமல்
நடக்கும் நடக்குமே = மெல்ல மெல்ல நடந்து சென்று விடும் (உன்னை விட்டு)
"திருச்சி" அப்படினு சொன்னா போதுமா? ஏன் திருச்சி, வேற ஊர் பேர் சொல்லக் கூடாதா ?
பெயர் அல்ல முக்கியம். எப்போதும் புலன்கள் பின்னால் அலைவதை விடுத்து மனதை நல்ல வழிகளில் திசை திருப்பச் சொல்கிறார். புலன் இன்பம் மட்டுமே வாழ்க்கை அல்ல. அது கொஞ்சம் கொஞ்சமாக நம் வாழ்வை அரித்து விடும். துன்பத்தையே தரும். அதை அறிந்து கொண்டு, மனதை திசை திருப்பச் சொல்கிறார். பெரியவர்கள் சொல்லும் போது ஏதோ ஒரு மந்திரத்தைச் சொல் கடவுள் பெயர், ஊர் பெயர், என்று ஏதாவது ஒன்றை பிடித்துக் கொள் என்பார்கள்.
நம்மவர்கள் உடனே ஏன் அந்த சாமிப் பெயர், எதுக்கு அந்த ஊர், அதில் இன்னார் பெரிய உயர்வு என்று சண்டை பிடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஏதாவது ஒரு ஊர் பெயரைச் சொல் என்றால் எந்த ஊர் என்ற கேள்வி வரும். இப்படி மனம் கிடந்து அலைந்து திரியும். காரியம் நடக்காது. எனவே தான், ஒன்றை பிடித்துக் கொள் என்கிறார்கள். அது உயர்ந்தது என்பதற்காக அல்ல. எல்லாவற்றையும் தூக்கிப் போட்டால் எதை எடுப்பது எதை விடுவது என்று நாம் குழம்பிப் போவோம் என்பதற்காக. உங்கள் மனதில் எது படுகிறதோ எது இலயிக்கிறதோ அதைச் சொல்லுங்கள்.
"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்"
தான் உள்ளே இருக்கும் படி இந்த உலகைச் செய்தான். அனைத்திலும் அவன் இருக்கிறான் என்கிறபடியால், எதை வேண்டுமானாலும் நினைக்கலாம்.
எளிமையான பாடல்கள் என்பதால், நாம் சிலவற்றை கடந்து போய் விடுகிறோம். எல்லாவற்றிலும் பொருள் உண்டு.
"முறுக வாங்கிக் கடைய, முன் நிற்குமே"
நம்பிகள் நாமம் வளர்க
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக