JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
சனி, 7 நவம்பர், 2020
பேயாழ்வார்
3. பேயாழ்வார்
பிறந்த ஊர் : மயிலாப்பூர்
பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி சதயம் (வளர்பிறை தசமி திதி)
கிழமை : வியாழன்
எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சம் (நந்தகாம்சம்)
பிற பெயர்கள் : கைரவமுநி, மஹதாஹ்வயர்
இவர் சென்னையிலுள்ள ஆதிகேசவப்பெருமாள் கோயில் அருகிலுள்ள குளத்தில் அதிசயமாக மலர்ந்த செவ்வரளிப்பூவில் பிறந்தவர். சிறுவயது முதல் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அவர் மனம் எப்போதும் பரமனின் திருவடியையே நாடி நின்றது. திருமாலின் திருப்புகழை பாமாலையாக்கி நாள்தோறும் தொடுப்பார் இவர். அப்பொழுது இவர் கண்களில் ஆனந்த வெள்ளம் கரை புரண்டோடும். திருமாலின் திருப்பாதம் பணியுங்கள். உங்கள் வினைகள் ஓடிப்போகும். அத்துடன் மீண்டும் உங்களை தொடாது. இதையே
அகநன்று, இது தீது என்று ஐயப்படாதே
மது நன்று தண் துழாய் மார்வன்-பொது நின்ற
பொன்அம் கழலே தொழுமின் ! முழு வினைகள்
முன்னம் கழலும் முடிந்து
என்ற பாடலால் உணர்த்தியுள்ளார். இவர் நூறு பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதியை அருளினார். முதலாழ்வார்கள் எனப்பட்ட பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரில் இவர் தான் அதிகமான ஸ்தலங்களைப்பாடியுள்ளார். அத்துடன் பதினைந்து திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். திருக்கோவிலூரில் உள்ள ஒரு வைணவரின் வீட்டில் விளக்கு வெளிச்சத்தில் நாராயணன் நிற்பது முதலில் பேயாழ்வாருக்கு தான் தெரிந்தது. இப்படி பரமனைக் கண்ட பரவசத்தில் திருக்கண்டேன். பொன்மேனி கண்டேன் என்று துவங்கி நூறு பாடல்களை பாடினார். மேலும் திருவேங்கடம் சென்ற இவர் பெருமானை சிவனும், விஷ்ணுவும் கலந்த உருவாக கண்டார். பெருமாள் மேல் ஆராக்காதல் கொண்டு வேறு எதையும் நினைக்காமல் வாழ்ந்தார். பேயனாயொழிந்தே ஏனம்பிரானுக்கே என்று பாடியருளினார். பக்தி பரவசத்தில் அதுவே ஒரு வெறிபோல் தோன்றும்படி அவர் அழுவார். தொழுவார். ஆடிக் காண்பார் இறை பக்தியில் தன்னை முழுதும் மறந்து போனதால் இவர் பேயர் போலும் பித்தர் போலும் திரிந்தார். இதனாலேயே இவர் பேயாழ்வார் என் அழைக்கப்பட்டார். பெருமாளின் 108 திருப்பதிகளில் பேயாழ்வார் தனியாக சென்று 1 கோயிலையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 11 கோயில்களையும் என மொத்தம் 12 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக