நவராத்திரியின் மகிமையை விளக்கும் இந்தக் கதை தேவி பாகவதம்- 5-வது ஸ்கந்தத்தில் உள்ளது.
தேவி மஹாத்மியத்திலும் இடம் பெற்றுள்ளது.
மனிதர்களில் துயரப்படுபவர்கள் இரண்டு வகை.
ஒன்று, சொத்து- சுகங்களை இழந்து துன்புறுவோர். அடுத்தது, குழந்தைகள், உறவினர் மற்றும் சுற்றத்தாரின் செயல்களால் துயரப்படுபவர்.
இவர்களது துயரைப் போக்கும் விதம்... முனிவர் ஒருவர், அம்பாளின் வழிபாட்டு மகிமையைச் சொல்லும் முகமாக உள்ளது இந்தக் கதை.
சுரதன் என்ற அரசன் மிக நல்லவன்; குடிமக்களை நன்கு வாழவைத்தான். இவனது ராஜ்ஜியத்தைக் கவர நினைத்த மலைவாசிகள், திடீரென படையெடுத்து வந்து போரிட்டு வெற்றியும் பெற்றனர்.
தோல்வியுடன் அரண்மனை திரும்பிய மன்னன், தன் மந்திரிகளும் பகைவர்களின் கைக்கூலிகளாக இருப்பதை அறிந்து மனமுடைந்தான். அரண்மனையில் இருந்தால் தனக்கு ஆபத்து என்று உணர்ந்தவன், காட்டுக்குச் சென்றான்.
"என் பெயர் சமாதி. செல்வத்துக்குக் குறைவில்லை. தர்மத்தில் நாட்டம் உள்ளவன். ஆனால் பொருளாசை மிகுந்த என் பிள்ளைகளும் உறவினர்களும் வஞ்சனை செய்து காட்டுக்குத் துரத்தி விட்டனர். அவர்கள் தீமை செய்தாலும் என் மனம் அவர்களை நினைத்தே ஏங்குகிறது’’ என்று வருந்தினான் வியாபாரி.
அவனுக்கு ஆறுதல் சொன்ன மன்னன், ‘’வருந்தாதே; நானும் உன்னைப்போன்று பாதிக்கப் பட்டவன்தான். வா... இருவரும் சுமேதஸ் ரிஷியிடம் சென்று, நமது துயரம் தீர வழி கேட்கலாம்’’ என்று வியாபாரியை ரிஷியிடம் அழைத்துச் சென்றான்.
இருவரது வேண்டுதலையும் கேட்ட ரிஷி, ‘’நவராத்திரியில் விரதம் இருந்து அம்பாளை பூஜியுங்கள். அவள் அருளால் உங்களின் துயரம் விலகும்!’’ என்றார்.
அம்பாளின் மகிமைகளையும் நவராத்திரி வழிபாடுகளையும் விவரித்து, மந்திர உபதேசமும் செய்தார்.
அதன்படியே அரசனும் வியாபாரியும், மந்திர ஜபம் செய்து, கடுந்தவத்தில் ஆழ்ந்தனர்.
நவராத்திரி பூஜையையும் முறைப்படி செய்தனர். இதன் பலனாக இருவருக்கும் காட்சி தந்தாள் அம்பிகை.
‘‘மன்னா, உன் பகைவர்கள் உன்னைச் சரண் அடைவர். நீ பல்லாண்டு காலம் நல்லாட்சி புரிவாய்!’’ என்று அருள் புரிந்தாள்.
வியாபாரியின் பிரார்த்தனை வேறுவிதமாக இருந்தது. ‘’தாயே, எனக்கு ஞானத்தைக் கொடு! நான், பிறவிப் பெருங்கடலைத் தாண்ட விரும்புகிறேன்!’’ என்றான்.
‘‘அப்படியே ஆகும்’’ என்று வரமளித்து மறைந்தாள் அம்பிகை.
மன்னனும் வியாபாரியும் சந்தோஷத்துடன் திரும்பி வந்து, வாட்டம் போக்க வழிகாட்டிய முனிவரை வணங்கி ஆசிபெற்றனர். அம்பிகை வரமளித்த படியே, அவர்களது பிரார்த்தனைகளும் பலித்தன.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
செவ்வாய், 22 செப்டம்பர், 2020
நவராத்திரி மகிமை
அகிலாண்டேஸ்வரி
ஈஸ்வரி என்றாலே ஜகதீஸ்வரி, அகிலாண்டேஸ்வரி
தான் ஞாபகத்துக்கு வரும்.
திருச்சிக்கு அருகில் இருக்கும் திருவானைக்காவல் கோவிலில் குடிகொண்டு இருப்பவள்.
அம்பாள் மிக அழகு! அதுவும், அர்த்த ஜாம பூஜைக்கு அலங்கரிக்கப்பட்ட அகிலாண்டேசுவரியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அவ்வளவு களை, அழகு, கம்பீரம். அகிலாண்டேசுவரி மிக உக்ரமான அம்பாள் என்றே கூறுவார்கள்.
நடு இரவில், சலங்கை ஒலி 'ஜல் ஜல்' என ஒலிக்க, அவள் கோவில் பிரகாரங்களை வலம் வருவதாக ஐதீகம்.
இரு காதுகளிலும் ஆதி சங்கரர் அணிவித்த ஸ்ரீசக்ரத்தை தாடங்கம் என்கிற காதணிகளைஅணிந்து எதிரில்அமர்ந்து இருக்கும் ஆனைமுகத்தோனுக்கும்,அடியவருக்கும் அருள்பாலிப்பவள்.
பார்க்கப் பார்க்க திகட்டாத ஜ்வலாமுகி ,வாராஹி அவள்.
அம்மா அம்மா அம்மா
எனக் கபயம் அருள்வாய் அகிலாண்டேஸ்வரி
ஸிம்ஹ வாஹினி ஸ்ரீ லலிதே பவானி
நம்பினோரைக் காக்கும் செம்மல்ர் வதனி
மங்கள நாயகி மதுரை மீனாஷி
திங்களை சூடியோன் தேவி ஸ்ரீ காமாஷி கங்கை நதிக் கரை காசி விசாலாஷி
இங்கு ஏலகனோடு எனக்குக் கொடு காஷி
நவராத்திரி ஸ்பெஷல்
காளிதாசரின் குமார சம்பவம்... சிறு குறிப்பு. [ நவராத்திரி ஸ்பெஷல் ]
பார்வதி தேவியின் மனதில் சிவபெருமானை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆழத்தை அளப்பதற்கு வந்ததுபோல். சிவபெருமானே பிரம்மச்சாரி வேடத்தில் வந்து தேவியை பரிக்ஷை செய்கிறார். அது மட்டுமல்லாமல் சிவபெருமான் மீது அன்னைக்கு இருக்கும் அளவிடமுடியாத அன்பை தேவியே திருவாய் மலர்ந்து அருள வேண்டும். அதைக்கேட்டு பேரானந்தம் அடைய வேண்டும் என்று நினைத்து பிரம்மச்சாரி வேடத்தில் வந்தாரோ என்று நாம் நினைக்க தூண்டுவது போல இருந்தது அவரது பேச்சு.
பிரம்மச்சாரி – பார்வதி தேவியின் வாத – பிரதிவாதங்களுக்கு இடையில் தேவி அவரின் கூற்றை இவ்வாறு ஏளனம் செய்கிறாள். சிவபெருமானைப் பற்றிய உண்மையான ஞானமும் இல்லாத நீங்கள். அவரைப்பற்றிய விஷயம் கூறுவதில் மட்டும் சிறந்து விளங்குபவரா நீங்கள். உங்களையும் அறியாமல், ஈசனைப் பற்றி ஒரே ஒரு உண்மையைக் கூறியுள்ளீர்கள்! சிவபெருமானைப் பற்றிய குலமோ, அவருடைய பெற்றோர்களைப் பற்றிய விவரமோ எதுவும் யாரும் அறியமாட்டார்கள். எனவே அவரைத் திருமணம் செய்ய நினைப்பது தவறு என்று கூறினீர்கள் அல்லவா?! அது முற்றிலும் உண்மையே!! ஏனென்றால் எந்த வேதங்கள் சிவபெருமானை, பிரம்மனுக்கே கர்த்தா: அதாவது பிரம்மனையே சிருஷ்டி செய்தவர் என்று கூறுகின்றனவோ, எந்த சிவபெருமான் இந்த உலகில் உள்ள அனைத்துக்கும் சிருஷ்டி கர்த்தாவாக இருக்கிறாரோ. அவரைப் பற்றிய, ஆதி அந்தம் இல்லாத அவரை, பெருமைப்பற்றிய குலமோ, கோத்ரமோ அறிவது என்பது இயலாத காரியம்தான்!!! ஜகத்பிதாவான அவர் இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்.
இப்படி பேசிக் கொண்டு வந்த பார்வதிதேவி. பிரம்மச்சாரியுடன் பேசி. அவருக்கு சிவனுடைய பரதத்துவத்தைப் புரிய வைப்பது இயலாத காரியம் என்பதை அறிந்து இவ்வாறு சொல்கிறாள். உங்களுடன் இப்படி விவாதம் செய்வது போதும்” நீங்கள் சிவபெருமானைப்பற்றி எப்படியெல்லாம் கேள்விப்பட்டீர்களோ அப்படியே ஒன்றுக்கூட குறையாமல் அவர் இருந்து விட்டு போகட்டும். ஆனால் சிவனின் பேரில் என் மனதில் இருக்கக்கூடிய அபரிமிதமான அன்பு. மற்றவர்களுடைய நிபந்தனையோ, பாராட்டுதலையோ கேட்டு மாறப் போவது இல்லை. எனவே இந்த வீண் வாதம் இனி தேவையில்லை.”
பார்வதிதேவி இவ்வாறு கூறிய பின்பும் தன்னுடைய கருத்துக்களை சொல்ல விழைகின்ற பிரம்மச்சாரியை அங்கிருந்து எப்படியாவது வெளியேற்ற சொல்லி தன தோழிக்கு உணர்த்துகிறாள் தேவி. பின் அதிதியாக வந்த ஒரு பிரம்மச்சாரியை வெளியேறும்படி சொல்வது முறையல்ல என்று நினைத்து. தேவி தானே அந்த இடத்திலிருந்து செல்ல முற்படுகிறாள். அதற்கான காரணத்தையும் சொல்கிறாள். பெருமானைப் பற்றி அவதூறு பேசுவது மட்டுமல்ல அதனைக் கேட்டுக் கொடிருந்தாலும் பாவம் நம்மை சேரும்” இப்படி சொல்லி அங்கிருந்து அவசரமாக வெளியேற முயற்சி செய்யும் போது. தன்னுடைய உத்தரீயத்தின் நுனியை யாரோ பிடித்து இழுப்பதை உணர்ந்து மிகவும் கோபமுற்றவலாய் யாரென்று திரும்பிப் பார்க்கிறாள் தேவி. பிரம்மச்சாரி மறைந்து, சிவபெருமான் தன ஸ்வய ரூபத்தில் புன்னகையுடன் காட்சி தருவதை கண்டாள் அன்னை.
சிவபெருமானைப் பற்றி சிவபெருமானுக்கே புரிய வைக்க பாடுபட்டதையும், தன்னுடைய ஆழ்ந்த காதலை அவரிடமே தெரியப்படுத்தியதையும் எண்ணி, வெட்கம், துக்கம், சந்தோஷம், ஆனந்தம், திகைப்பு இவை அனைத்தும் ஒருங்கப் பெற்றவளாய் வெளியே செல்வதற்காக மேலே தூக்கப்பட்ட பாதத்தை கீழே வைத்து.செல்வதா அல்லது அங்கயேஇருப்பதா என்ற தடுமாற்றத்தில், காட்டாறு நடுவில் மலையினால் தடுக்கப்படும்போது. போகும் திசையறியாமல் சுழன்று சுழன்று ஆரவாரம் செய்வது போல். ஆர்ப்பரிக்கின்ற தன் மனதை அடக்க முடியாமல் சந்தோசத்தில் செய்வதறியாமல் நின்றாள் பார்வதி தேவி!!!
“ ஹே தேவி!! நான் இன்று முதல் உனது அடிமை! உன்னுடைய தவத்தினால் என்னை வென்று விட்டாய்” என்று சொல்லும் பிறைச்சந்திரனை தலையில் சூடிய பெருமானின் வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் அவரை அடைய தான் பட்ட எல்லா கஷ்டங்களுக்கும் பலன் கிடைக்கப்பெற்று மீண்டும் புத்துணர்ச்சி அடைந்தாள் பார்வதி தேவி!! இப்படி சொல்லும் பொருளும் போல் என்றும் சேர்ந்தே இருக்கின்ற சிவனும், பார்வதியும் நம் எல்லோரையும் காக்கட்டும்!!
அம்பாளை விட மங்கள வஸ்து ஒன்றும் இல்லை
அம்பாளைவிட மங்கள வஸ்து இல்லை. ஸர்வ மங்கள மாங்கல்யே என்பார்கள். அவளுடன் சேர்ந்திருப்பதாலே பரமேசுவரனும் மங்கள ஸ்வரூபியாகிறார்.
மங்களமே வடிவான அம்பிகை மகா சுமங்கலி. அவளுடைய சௌமங்கலியத்துக்கு எப்படி பங்கம் உண்டாக முடியும்? இதனால்தான் ஆலஹால விஷம் சாப்பிட்டுக்கூடப் பரமேசுவரன் சௌக்கியமாகவே இருக்கிறார் என்று ஆச்சாரியாள் ஸெளந்தரிய லஹரியில் கூறுகிறார்.
காதில் தோடு, நெற்றியில் குங்குமம், கழுத்தில் கருகுமணி இத்யாதி மங்கள சின்னங்களெல்லாம் சுமங்கலி லக்ஷணம். அம்பாளும் காதில் தாடங்கம் அணிந்திருக்கிறாள். சாதாரண பனை ஒலையைத்தான் தாடங்கமாகப் போட்டுக் கொண்டிருக்கிறாள். தாலீபலாச தாடங்கம் என்று இதை ஸ்தோத்திரங்கள் சொல்கின்றன.
பழைய காலத்தில் எல்லோருமே படாடோபம் இல்லாமல் எளிமையிலேயே சுபிக்ஷமாக இருந்தார்கள் என்பதற்கு இது ஒரு திருஷ்டாந்தமாகத் தோன்றுகிறது. அம்பாளைப் போலவே எல்லா ஸ்திரீகளும் பனை ஒலையைத்தான் போட்டுக் கொண்டிருக்கவேண்டும். இதனால்தான் பிற்காலத்தில் வைரத்தோடு போட்டுக் கொள்கிற டாம்பீகம் வந்தபின்கூட, அதை வைர ஒலை என்றே சொல்கிற வழக்கம் உண்டாகியிருக்கிறது.
அம்பாளுடைய தாடங்கத்துக்கு வருவோம். மங்களச் சின்னமான தாடங்கம் அவள் காதிலிருந்து இறங்கக்கூடாது.அப்படியானால் பரமேசுவரன் எக்காலத்திலும் ஜீவிக்கத்தான் வேண்டும். இதனால்தான் அவள் ஆலஹால விஷம் உண்டும்கூட அது அவரைப் பாதிக்கவில்லை. இது உன் தாடங்க மகிமையம்மா!என்கிறார் ஆசாரியாள்.
திருவானைக்காவில் அகிலாண்டேசுவரியின் தாடங்கத்திலேயே ஸ்ரீ சக்ர, சிவ சக்ரப் பிரதிஷ்டை செய்து, அவளை ஸெளம்ய மூர்த்தியாக்கின ஆசாரியாள், இப்படி இங்கே தவ ஜனனி தாடங்க மஹிமா என்கிறார்.
விஷத்தைச் சாப்பிட்டும் பரமேசுவரன் சொஸ்தமாக இருப்பதற்குக் காரணம், எந்த விஷத்தையும் முறிக்கிற மருந்தாக, அமிருத்தமாக, அம்பிகை அவரோடு சேர்ந்து இருப்பதுதான்.
வேத வாக்கியமான ஸ்ரீ ருத்திரத்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது. ருத்திரனாக கோரமாக இருக்கிற உனக்கு சிவா என்று ஒரு மங்கள சரீரம் இருக்கிறது. இந்த சிவாதான் லோகம் முழுவதற்கும் மருந்து. (சிவா விச்வா ஹபேஷஜீ) லோகத்துக்கு மட்டும்தான் அது மருந்தா?இல்லை. ருத்திரனாக உனக்கும்கூட சிவாதான் மருந்து. (சிவா ருத்ரஸ்ய பேஷஜீ) என்று வேதம் சொல்கிறது.
கோர ஸ்வரூபியையும் தன் பதிவிரத்யத்தால் மங்களமாக்கி, அவரை என்றென்றும் ஜீவிக்கும்படி செய்கிறவளை ஸ்திரீகள் ஆராதித்தால் பதிபக்தியும், தீர்க்க ஸெளமங்கல்யமும் ஸித்திக்கும்.
நவராத்திரி சிறப்பு பதிவு
நவராத்திரியில் சஹஸ்ரநாமமும் தேவி உபாஸனை வழிபாடு நீண்ட சிறப்பு பதிவு :-
அம்பாளை ஆராதிப்பதற்கு ரொம்ப உத்க்ருஷ்டமான சாஸ்த்ரத்திலே சொல்லி இருக்கிற சம்ப்ரதாயத்தை அனுசரித்து எல்லோரும் அனுஷ்டானம் செய்து கொண்டு வருகிறோம். அம்பாளை நாம் சாதாரணமாக ஸஹஸ்ர நாமங்கள் சொல்லி ஆராதிப்பது உண்டு. ஸஹஸ்ர நாமங்கள் என்று சொன்னால் நாம் சொல்லி வருவது சாதாரணமாக லலிதா ஸஹஸ்ர நாமம்தான். அந்த லலிதா ஸஹஸ்ர நாமத்தைச் சொல்லி நாம் அம்பாளை ஆராதிப்போம். நிஜமாக அந்த ஸஹஸ்ர நாமத்தினுடைய அர்த்தத்தை நாம் புரிந்து கொண்டால் அது ஒரு ரொம்பப் பெரிய விஷயம். அது புரிந்து கொண்டு அதன்படி நாம் நடந்துகொண்டால் நாம் அம்பாளுடைய பரிபூரண க்ருபைக்குப் பாத்ரமாவோம். ஸஹஸ்ர நாமங்களில் அம்பாளுடைய மகிமை எவ்வளவு? என்பதைச் சொல்லியிருக்கிறது. அம்பாளுடைய பூஜை பண்ணக் கூடியவன் எப்பேர்ப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறது.
வேதாந்தத்து சித்தாந்தம் என்ன என்பதையும் இங்கு சொல்லியிருக்கிறது. எல்லாமே சொல்லி இருக்கிறது. அம்பாளுடைய மகிமை என்ன என்பதன் விஷயம் வரும்போது “பவதாவ ஸூதா வ்ருஷ்டி: பாபாரண்ய தவானனா
தௌர்பாக்ய தூல வாதூனா
ஜராக் வாந்த ரவிப்ரபா
பாக்யாப்தி சந்த்ரிகா
பந்த சித்த கேகி கனாகனா
போக பர்வத தம்தூளி;
ம்ருத்யு தாரு குடாரிகா
என்று சொல்லியிருக்கிறது. அவளை (அம்பாளை) பூஜித்தால் என்ன வெல்லாம் கிடைக்கும்? என்றால் கிடைக்காதது ஒண்ணுமில்லை. “பவதாவ ஸுதா வ்ருஷ்டி; ‘பவம்’ என்று சொன்னால் இந்த ஒரு சம்சார சக்கரம். சம்சார சக்ரம் என்று சொன்னால் ஜனன மரணாத்மக ஒரு ப்ரவாகம். பிறக்கிறோம். கொஞ்சம் வருஷம் இந்தப் பூமண்டலத்தில் இருக்கிறோம். திரும்ப இந்த சரீரத்தை விட்டு விடுகிறோம். இன்னொரு சரீரம் வருகிறது. அந்த சரீரத்துலே கொஞ்சம் சுகமோ, துக்கமோ அனுபவிக்கிறோம். போய் விடுகிறோம். திரும்ப இன்னொரு சரீரம். இந்த ஒரு சக்ரம், இது தான் சம்சார சக்ரம் என்பது. எத்தனை காலம் இந்த சக்ரத்தில் சுற்றிக் கொண்டு இருப்பது? இதில் என்ன சௌக்யம் இருக்கிறது? பார்த்தால் இதில் ஒரு சௌக்யமும் இல்லை. இந்த சக்ரத்திலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்று சொன்னால் அம்பாளுடைய தயவு வேண்டும். அதிலிருந்து விடுதலை கொடுக்கக் கூடியவள் அம்பாள். “பவதாவ ஸூதா வ்ருஷ்டி;” அதாவது அந்த நாமத்துக்கு நேரடியாக அர்த்தம் சொல்ல வேண்டும் என்று சொன்னால் காட்டிலே தீப்பிடித்து விட்டால் அந்தத் தீ அணைய வேண்டும் என்று சொன்னால் நாம் ஒரு குடம் ஜலம் கொண்டு போனால் அது ஒண்ணும் அணையாது. ஆனால் ஆகாசத்துலேருந்து பெரிய வ்ருஷ்டி: (மழை)வந்தால்தான் அந்தக் காட்டுத் தீ அணையும். இந்த சம்சார சக்ரம் என்கிற இந்த காட்டுத் தீக்கு அவளுடைய அனுக்ரஹம் என்பது ஒரு பெரிய மழை. அப்பேர்ப்பட்டவள் என்று சொன்னால் இந்த சம்சார பயத்தை போக்கக் கூடியவள்.
இரண்டாவதாக “பாபாரண்ய தாவன லா” என்று சொல்லி இருக்கிறது. பாபங்கள், பாபங்கள் செய்து கொண்டே இருக்கிறோம். பாபங்கள் செய்யாதவன் யார்? என்று கேட்டால் யாருமே இல்லை. எல்லாரும் ஏதோ ஒரு விதமாக பாபங்கள் செய்து கொண்டே இருக்கிறோம். சிலர் சொல்வார்கள். நான் ஒரு பாபமும் செய்யவில்லை என்று சொல்வார்கள். அது சும்மா நீங்கள் சொல்வதோடு சரி. செய்கையிலே உங்களுக்கு அப்படி இருக்க முடியாது. அது தான் பகவத் பாதாள் ஓர் இடத்திலே, மனிதன் பிறந்த அன்றிலிருந்து சாகிற வரையிலும் ஒரு விதமான பாபமும் செய்யவில்லை என்று நெஞ்சு தட்டிக் கொண்டு சொல்ல முடியுமா? சொல்ல முடியாது.
“வாசா’ ஜன்ம ப்ராயண யோஹோ
அந்த ராளே காம்ய ப்ரதி ஸித்த போஹோ
ஸர்வாத் மனா வர்ஜனம்
கேனி சித் ப்ரதிக்ஞாதம் அசக்யம்”
பகவத் பாதருடைய வாக்யம் இது. “ஸ்வநிபுணானாம் அபி ஸுஷ்மா பராத தர்சனா”
அதாவது சம்ஸ்க்ருதத்துலே அவருடைய வார்த்தைக்கு அர்த்தம். எவனுமே பிறவியிலிருந்து சாவதற்குள்ளே அந்த சமயத்துலே எந்த விதமான ஒரு காம்ய கர்மத்தையோ, நிஷித்த கர்மத்தையோ அதாவது பாபத்தையோ செய்யவில்லை என்று “ப்ரதிக்ஞா’ செய்ய முடியாது. எவ்வளவு பெரிய கெட்டிக்காரர் என்று நினைத்துக் கொள்ளும் நபர்களுக்கும், தனக்குத் தெரியாமலே சில தப்பிதங்கள் நடந்து போய் விடும். அதனாலே நம்மால் பாபங்கள் நடக்கவில்லை என்று நாம் சொல்லவே முடியாது. பின்பு என்ன சொல்லலாம்? நான் தெரிந்து ஒரு தப்பிதமும் செய்யவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். தெரியாமல் எவ்வளவு தப்பிதங்கள் நடக்கிறதோ தெரியாது. தெரியாமல் தப்பிதம் நடந்தால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளலாமோ என்று யாரும் சொல்லக் கூடாது. ஏனென்றால்
“அனிச்ச யாபி ஸம்ஸ்ப்ருஷ்டோ
தஹத்யே விஹி பாவத:
நெருப்பு இருக்கிறது. ஒரு சின்னக் குழந்தை நெருப்பைத் தொட்டால் சுடும் என்பது தெரியாது. நெருப்பைத் தொட்டு விட்டது. அப்போது அந்த நெருப்பு அந்தக் குழந்தையின் கையில் சுடாமல் விடுமா? சுடும். அப்போது நாம் போய் அதுகிட்ட “என்ன குழந்தை தெரியாமல் தொட்டு விட்டால் அதையே நீ சுட்டு விட்டாயே!” என்று நாம் யாராவது அந்த நெருப்பை சத்தம் போடலாமா?
அதே போல் நாம் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பாபத்துக்குப் பலன் இருக்கவே இருக்கிறது. அதேபோல் புண்யத்துக்கும் பலன் இருக்கிறது.
ஒருவனுக்குத் தெரியவில்லை. அது புண்யம் என்று சொல்லி பண்ணி விட்டான். ஆனாலும் அந்த புண்யத்துடைய பலன் கிடைக்கத்தான் செய்யும்.
அதாவது ஓர் இடத்துலே இந்த மாதிரி ஒரு ஸத்காலட்சேபம் நடந்து கொண்டு இருந்தது. ஒருவன் வந்தான். இங்கு காலட்சேபம் நடக்கிறது என்பதே தெரியாது. அந்த இடத்துலே உட்கார்ந்தான். ஸ்வாமிதர்சனம் பண்ணினான். போய் விட்டான். அவனுக்கு அந்த பலன் இருக்கவே இருக்கும். பஜனை நடந்து கொண்டு இருந்தது. அவனும் அவர்களோடு சேர்ந்து அந்த பஜனை நாமத்தை உச்சரித்தான். அதனுடைய பெருமை என்ன என்பது தெரியாது. எல்லாரும் பகவான் நாமா சொல்கிறார்கள். அவனும் சொல்லிவிட்டான். அந்த பலன் அவனுக்கு இருக்கவே இருக்கும். அதுதான் பூர்வார்த்தத்துலே சொன்னார், “தஹரர் ஹரதி பாபானே
திஷ்ட தித்மதர விஸ்ம்ருத:
என்று சொன்னார். அதனால் நாம் பாபங்கள் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பாபம் பாபம்தான். அதற்கு பலனை அனுபவிக்க வேண்டியது உண்டு. அப்போது எத்தனையோ பாபங்கள் நடக்கிறதே இந்த எல்லாப் பாபங்களுக்கும் நாம் ப்ராயச்சித்தத்துக்கு எங்கே போவது? அந்த ப்ராயச்சித்தங்கள் நமக்குத் தெரியவும் தெரியாது. அதனால் இந்த இத்தனை பாபங்களுக்கும் ப்ராயச்சித்தம் தேவியினுடைய நாமத்தை உச்சாரணம் செய்தால், தேவியினுடைய மகிமையைச் சொல்லும் போது ஏகஸ்ய நாம்ணே
ஞான சக்தி:
பாப கானான் நிவர்த்தயே
தன் நிவர்த்ய மதே கர்த்தம்
மானன் லோகாய் ஸதுர்தசே”
இந்தப் பதினான்கு லோகங்களிலே இருக்கக் கூடிய ஜனங்கள் அத்தனை பேரும் செய்த பாபங்கள் எல்லாவற்றையும் தேவியுடைய ஒரு நாமமே போக்கும் என்று அதற்கு அர்த்தம். அப்பேர்ப்பட்ட மகிமை பகவன் நாமாவுக்கு இருக்கிறது. அதெல்லாம் வெறும் கதை. நாம் எப்படி நம்ப முடியும் என்று சொன்னால் நாம் எப்படி நம்ப முடியும் என்று சொல்லிக் கொண்டு இருப்பவன் அப்படியே உட்கார்ந்து கொண்டு இருக்க வேண்டியதுதான். வந்து இவன் விஞ்ஞானம் ரொம்ப வராத சந்தர்ப்பத்துலே இந்த காலத்திலே ரேடியோ என்று ஒரு கருவி இருக்கிறதாமே! அதிலே பேச்சு வந்து கொண்டிருப்பதைப் பார்த்துட்டு அந்த பழைய காலத்து ஆட்கள் சொல்லிக் கொண்டு இருந்தார்களாம், ஏய்! அதிலே எவனோ உட்கார்ந்து கொண்டு பேசறாண்டா! இல்லாவிட்டால் எப்படி சப்தம் கேட்கும்? இல்லை ஓய்! அது எங்கேயோ டெல்லியிலோ எங்கோ என்றால் டேய்! டெல்லியிலே பேசுவது இதற்குள் எப்படி கேட்கமுடியும்? அதற்குள்ளே எவனோ உட்கார்ந்து பேசுகிறான். நீ நம்பா விட்டால் நான் என்ன பண்ணுவது ஐயா! அது விஷயம் அப்படித்தான். என்று இவன் சொல்கிறான். அதே போல் சாஸ்த்ரம் சொல்கிறது.அதில் நமக்கு சந்தேக ப்ரவிருத்தி இருந்தால் நமக்குத்தான் அதனுடைய பலத்தை அடைய முடியாதே தவிர சாஸ்த்ரத்தினுடைய தப்பு ஒண்ணும் இல்லை.
அதனால் பகவன் நாமத்துக்கு இவ்வளவு மகிமை இருக்கு என்று சாஸ்த்ரம் சொல்கிறது. இருக்கிறது வாஸ்தவம்தான். நாம் தினமும் பூஜை எல்லாம் செய்து முடித்தபிறகு கடைசிலே ஒரு ஸ்லோகம் சொல்கிறோம். ஏதோ அவர்கள் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். நாம் சொல்கிறோம் என்பதைத் தவிர அர்த்தத்தை யாரும் கவனிப்பது கிடையாது.
“யஸ்ய ஸ்ம்ருத்யாச நாமோத்யா
தபப் பூஜா க்ரியா திஹு
மோனம் சம்பூர்ணதாம்
யாதி சத்ய வந்தே தவஸ்யதம்
அந்த பரமாத்மாவின் ஸ்மரண மந்திரத்திலேயும் எந்த பரமாத்மாவின் நாமத்தை உச்சாரணம் செய்த மாத்திரத்திலேயே நாம் செய்யக் கூடிய கர்மாவில் ஏதோவகையில் ஒரு சிறிய கம்மி இருந்தாலும் அதாவது மந்த்ரம் சரியாக சொல்லவில்லை, அல்லது சரியாக அந்த தந்த்ரம் செய்யவில்லை. அல்லது பதார்த்தங்கள் சரியாகக் கொண்டுவரவில்லை. அல்லது தப்புத் தப்பாக நடந்து விட்டது, என்று எந்த ஒரு குறை இருந்தாலும், அந்தக் குறை அவ்வளவும் எந்த பரமாத்மாவின், நாமோச்சாரணத்தினாலேயே எந்த பரமாத்மாவின் ஸ்மரணத்தினாலேயே நீங்குமோ அப்பேர்ப்பட்ட பரமாத்மாவை நமஸ்கரிக்கிறேன் என்று அந்த ஸ்லோகத்தில் இருக்கிறது. “ஸ்ம்ருதி:” என்றால் ஸ்ரேணம் = நினைவு, பரமாத்மாவின் நாமத்தை உச்சரிப்பு = நாமோத்யா, நாமோத்தி: என்பதற்கு, உச்சரிப்பினாலேயும், தபப் பூஜா க்ரியா திஷு = நாம் செய்யக் கூடிய பூஜையிலே நாம் செய்யக் கூடிய இன்னும் எல்லா ஸத்கர்மாக்களிலேயும் ஊனம், அதில் என்னவெல்லாம் குறைவு வருகிறதோ அது எல்லாம் சம்பூர்ணமாகிறது. அது எப்போது? சத்ய = உடனே. தவச்சிதம் வந்தே = அந்தப் பரமாத்மாவை நமஸ்கரிக்கிறேன்.
பகவானுடைய மகிமையைச் சொல்வதற்கு இப்பேர்ப்பட்ட ஸ்லோகங்களை முன்னோர்கள் நமக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த அர்த்தத்தை நாம் அனுசந்தானம் செய்வதில்லை. அப்பேர்ப்பட்ட மகிமை பகவானுடைய நாமோச்சாரணத்துக்கு இருக்கிறது என்பதைச் சொல்கிறபோது இனி நாம் அதில் சந்தேகப்பட்டால் என்ன ப்ரயோஜனம்? ‘ஸம்சயாத்மா வினஸ்ய தி’ என்று பகவான் சொன்னார். சந்தேகம், சந்தேகம் என்று இருப்பவனுக்கு நாசம் தான். அவனுக்கு எதற்கெடுத்தாலும் சந்தேகம் தானே!
“நாயம் லோபோஸ்தி
நபரோ ஸம்சயா த் மன”
அந்த ஸம்சயாத்மா ஆனவனுக்கு இக பரலோகத்துலேயும் சுகம் கிடையாது. பரலோகத்துலேயும் சுகம் கிடையாது. இனி எதற்கெடுத்தாலும் அவனுக்கு சந்தேகம் ஆனதினாலே நீ சாப்பிடு! சாப்பிட்டால் வயிறு நிறையும் என்றால் நிறையுமோ, நிறையாதோ நான் எப்படி சாப்பிடுவது? இதில் என்ன போட்டிருக்குகிறார்களோ என்னவோ? நான் எப்படி சாப்பிடுவது? பால் கொண்டு கொடுத்தால் பாலில் என்ன சேர்த்திருக்கிறார்களோ? நான் எப்படி சாப்பிடுவது? நீ ஸ்கூலுக்கு போ! ஸ்கூலில் அங்கே பாடம் சொல்லிக் கொடுப்பார்களோ, மாட்டார்களோ, நான் ஏன் போகணும்? இந்த மாதிரி ஆரம்பித்துவிட்டால் அவனுக்கு இங்கேயும் சுகமில்லை. ஜன்மாந்தரத்திலேயும் சுகமில்லை என்பது தீர்மானம். அதனாலே நாம் இந்த விஷயத்துலே பகவானுடைய நாமத்துக்கு அபாரமான மகிமை உண்டு என்கிற விஷயத்துலே சந்தேகப்படக் கூடாது. அதற்காகத்தான் அங்கே தேவியைச் சொல்கிற போது,”பாபாரண்ய தவானலா” எப்படி காட்டுக்கு ஒரு தீ பிடித்து விட்டால் அந்தக் காட்டை முழுவதும் பஸ்பமாக்கி விடுமோ, அதேபோல் நம்முடைய பாபங்கள் எல்லாவற்றையும் பஸ்மமாக்கக் கூடிய பவித்ரமான நாமம் தேவியினுடையது. அதேபோல் “தௌர்பாக்ய தூல வாதூலா” நம்முடைய தாரித்ரியத்தை மரணம் பண்ணக்கூடிய சக்தி அவருக்கு இருக்கிறது. “ஜராத்ராந்த ரவிப்ரபா” வயசு ஆகி ரொம்ப முடியாத நிலைமை இருந்து அந்த அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிற சமயத்துலே அந்த தேவியுடைய ஸ்மரணம் அந்த தேவியுடைய நாமோச்சாரணம் மனத்திற்கு வந்தால் நாம் சௌக்யமாக இருக்க முடியும். “பாக்யாப்த சந்த்ரிகா” = சகல சௌபாக்யங்களும் அவருடைய தயவினாலே ப்ராப்த்திக்கும். ‘பக்தி சித்த கேகி கனா கனா” = பக்தர்களுடைய மனத்திற்கு அந்த தேவியினுடைய ஸ்வரூபம் வந்தால் அத்யந்த ஆனந்தமாக இருக்கும்.
“ரோக பர்வததம் போளிர் மீருத்யு” தாரு குடாரிகா = சகல ரோகங்களையும் தேவி நிவர்த்தி ஆக்குவாள். எந்த விதமான அப ம்ருத்யுக்களும் தேவி உபாசகர்களுக்கு வராது.
இப்பேர்ப்பட்ட மகிமை பரதேவதைக்கு இருப்பதனாலே நாம் அந்தப் பரதேவதையை ஆராதிக்கிறோம். அதேபோல் அவளைப் பூஜிக்கிறவருடைய விஷயத்தைச் சொல்கிறபோது ஓர் இடத்திலே அதே சஹஸ்ர நாமத்திலே சொல்கிறது, “அந்தர்முக சமாராத்யா பஹிர் முக ஸுதுர் லபா”
அந்தர் முகன், பஹிர் முகன் என்று சொன்னால் எவனுடைய மனத்திலே அந்தப் பரதேவதையைத் தவிர வேறு எதையும் நினைக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் இல்லையோ அவன் உத்தமன் = அந்தர் முகன். எவனுக்கு பூஜைக்கு உட்கார்ந்தாலும் மனது அங்கே இல்லையோ அவன் பஹிர்முகன். நமக்கு உட்கார்ந்தோம் என்ற பெயரே தவிர அங்கே டெலிபோன் வந்திருக்கிறதே அதை அட்டென்ட் பண்ணனும், இங்கே இன்று ரேடியோவில் (ஸீமீஷ்s) செய்தி என்ன வருகிறது? அதைக் கேட்கணும். ஏனென்றால் சரியாக பூஜைக்கு உட்கார்ந்த போதுதான் அது வருமாம். அதனால் அதையும் விட முடியாது. அதனால் அதைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும். ஒருபக்கம் டெலிபோன், மறுபக்கம் ரேடியோ நடுவிலே பூஜை. அப்பேர்ப்பட்ட பஹிர்முகர்களுக்கு தேவி அத்யந்த துர்லபமானவள். நமக்கு பூஜை என்று சொன்னால் மனசு அங்கே லயித்திருக்கிறதா இல்லையா என்பது நமக்கு அத்யந்த அவச்யகமானது.
“அந்தர்முக சமாராத்யா”
அதனால்தான் அப்பேர்ப்பட்ட அந்தர்முகமானவன், அதாவது பகவத் விஷயத்துலே மனசு லயித்திருப்பவன் அவன் பூஜை செய்ய வேண்டும்.
அதேபோல் இன்னோர் இடத்திலே சொல்லியிருக்கிறது. “பௌத்ரியாதி வாசனா லப்யா” என்று சொல்லியிருக்கிறது. சில வாசனைகள் வாசனை என்றால் புஷ்பத்தினுடைய வாசனை என்று அர்த்தம் இல்லை. சில ஸம்ஸ்காரங்கள். என்ன என்றால் மத்ரி, கருணா, மோதித, உபேக்ஷா, சுக, துக்க, புண்யா புண்ய விஈயானாம் பாவானாத: சித்தப் ப்ரஸாதனம்” என்று வேத சாஸ்த்ரத்திலே சொல்லியிருக்கிறது. அதாவது உலகத்துலே சிலருக்கு ரொம்ப சுகம் கிடைக்கிறது. சிலருக்கு ரொம்ப துக்கம். சிலர் எப்போதும் நல்ல கார்யங்கள் பண்ணுகிறார்கள். சிலர் கெட்ட கார்யங்கள் பண்ணுகிறார்கள். அப்பேர்ப்பட்ட ஆட்களைப் பார்க்கும்போது நம்முடைய மனசுலே எப்படி இருக்கணும் என்கிற ஒரு ப்ரச்னை, நமக்கு சாதாரணமாக எப்படி வருகிறது என்று கேட்டால் மனுஷ்யனுக்கு இயற்கையாக ஒருத்தன் ரொம்ப சௌக்யமாக இருக்கிறான் என்று சொன்னால் அவனைப் பார்த்தால் வயிற்றெரிச்சல்! என்ன சௌக்யமாக இருக்கிறான் என்று கேட்டால் “சார்! அவன் எப்படி வந்தான் என்று தெரியும் ஓய்! எல்லாம் கள்ளப் பணம் தானே! (உடனே) சௌக்யமாக இருக்கான். புண்யம் பண்ணியிருக்கிறான், ரொம்ப சௌக்யமாக இருக்கிறான் என்று சொன்னால் போதாதா? அது இல்லை, ஒருத்தன் ரொம்பக் கஷ்டப் படுகிறான். படட்டும். இன்னும் கஷ்டப் படட்டும். அதைப் பார்த்தால் ஒரு கருணை உண்டாக வேண்டாமா? அது கிடையாது. ஒருத்தன் ரொம்ப நல்ல கார்யங்கள் பண்ணுகிறான். அதைப் பார்த்து சந்தோஷப்படக் கூடாதா? ஒருத்தன் நல்ல கார்யங்களைச் செய்கிறான் என்று சொன்னால் அங்கே ஏதாவது ஒரு குற்றம் கண்டு பிடிக்கிறதே தவிர அங்கே சந்தோஷப்படுவது என்பதே கிடையாது. அதேபோல் ஒருத்தன் தப்பிதம் பண்ணுகிறான் என்று சொன்னால் நமக்கு முடிந்தால் அவனுக்கு புத்திமதி சொல்லுவது இல்லை என்றாலும் பேசாமல் இருக்கலாம். அது போதும். எப்போதும் அவனைப்பற்றித் திட்டிக் கொண்டே இருப்பது அது எதற்கு? அதுவும் கூடாது. அதுதான் அங்கே சொல்லியிருக்கிறது. மைத்ரி, கருணை, முதிதா உபேக்ஷா. ரொம்ப சௌக்யமாக இருக்கிறான் என்று சொன்னால் அவன் விஷயத்துலே வயித்தெரிச்சல் பட வேண்டாம். ஸ்நேகத்தோடு இரு. ரொம்ப சந்தோஷம் ஓய்! சௌக்யமாக இருக்கிறீர்கள். சந்தோஷம். ஒருத்தன் ரொம்ப கஷ்டத்துலே இருக்கிறான் என்று கேட்டால் அவன் விஷயத்துலே கருணையோடு இரு. துக்கத்திலே இருக்கான் என்று சொன்னால் அவன் விஷயத்துலே ஒரு கருணை வேணும். கருணை என்று சொன்னால் இன்னொருத்தனுடைய துக்கத்தை நீக்க வேண்டும் என்ற விருப்பம் மனத்திலே உண்டாவது. அப்படிப்பட்ட ‘தயை’ என்பது உனக்கு வரவேண்டும். “என்னப்பா! ரொம்ப கஷ்டப் படுகிறாய். எனக்கு முடிந்த அளவுக்கு நான் உனக்கு உதவி செய்கிறான்.”
ஒரு ‘ஜீவித வாகனன்’ என்கிற ஒரு வித்யாதரனுடைய கதை இருக்கிறது. அது ஸம்ஸ்க்ருதத்துலே’ நாகானந்தம்’ என்கிற ஒரு நாடகத்துலே எழுதியிருக்கிறார்கள். ஒரு கருணருசிப்ரதானமான கதை. அதைப் படித்தால் கண்ணிலே ஜலம் வராதவனே கிடையாது. அப்பேர்ப்பட்ட ‘கருணாரசம்’ ரொம்ப இருக்கும் அந்த நாடகத்துலே. அதாவது இந்த கருடன் வந்து சர்பங்களை, தினமும் ஒரு சர்பத்தை சாப்பிடுவேன் என்று ப்ரதிக்ஞை பண்ணிக் கொண்டான். இல்லாவிட்டால் சர்ப குலத்தையே நாசம் பண்ணுவேன் என்று சொல்லி விட்டான். அப்போது அவர்கள் எல்லாரும் என்ன பண்ணினார்கள் என்று கேட்டால் “நாங்களே உனக்கு தினம் ஒரு சர்ப்பத்தை (பாம்பை) அனுப்புகிறோம். நீ எங்கள் குலத்தை நாசம் செய்யாதே” என்று சொன்னார்கள். அதே போல் தினமும் ஒரு சர்ப்பம் வரவேண்டியது, அதை கருடன் சாப்பிட்டு விட்டுப் போவது என்று இருந்தது. இந்த ஜீவித வாகன்’ என்ற வித்யாதரன் ஒருதடவை அந்தப் பக்கத்துக்கு வந்தான். அங்கே வந்து பார்க்கும் போது அன்று ஒரு பாம்பு “சங்கசூடன்’ என்று பெயர். அன்று அதனுடைய சர்த்தை. கருடன் அங்கே வரணும் அந்த ‘சங்க சூடனை’ சாப்பிட வேண்டும். அப்போது அந்த வித்யாதரன் ‘ஜீவித வாகனன்’ கேட்டார். “என்னப்பா இங்கு வந்திருக்கிறாய்? இன்று என்னைத் தான் கருடனுக்கு ஆஹாரமாக எங்கள் வாசுகி அனுப்பியிருக்கிறார். வந்திருக்கிறேன். அது என்னப்பா? உன்னை கருடன் சாப்பிடவேண்டுமா? ஆமாம்! சரி இன்று என்னைச் சாப்பிடட்டும். கருடன் நீ உயிரோடு இருந்து கொள். “என்றானாம், சாத்யமில்லையே சாத்யமில்லை. நான்தான் இன்று கருடனுக்கு ஆஹாரம். அதுதான் அங்கே என்ன ஒரு திட்டம் பண்ணியிருக்கிறார்கள் என்று கேட்டால் ஒரு சிவப்பு துணியை மாலை போட்டுக் கொள்ள வேண்டியது. மேலே போட்டுக் கொண்டு அங்கே ஒரு சில ஒரு கல் இருக்கிறது. அந்தக் கல்லில் உட்கார வேண்டியது. உடனே அந்த கருடன் வருவான். அந்தத் துணியை எடுத்து விட்டு அந்தப் பாம்பை சாப்பிட்டு விட்டுப் போய் விடுவான். இந்த ஜீவித வாகனன் கேட்டான் “அந்த சிவப்புத் துணியை எனக்குக் கொடு. நான் மேலே போட்டுக் கொண்டு உட்காருகிறேன். இதற்கு வத்தி சிலை என்றுபெயர். அந்த ‘வத்தி சிலை மேல் உட்காருகிறேன்” சாத்யமே இல்லை என்று அந்தப் பாம்பு சொன்னதாம். “இல்லை நான் உன்னைக் காப்பாற்ற வேண்டும். ஏய் எனக்காக நீ உயிரை விட்டால் என்ன ப்ரயோஜனம்?” என்று பாம்பு கேட்டதற்கு ஜீவித வாகனன் சொல்கிறான், “இந்த உயிரைக் கொடுத்தால் ஒருவனைக் காப்பாற்ற முடியும் என்று சொன்னால் அவச்யம் அதைக் கொடுக்க நான் தயார். இதை வைத்துக் கொண்டு என்ன பண்ணுவது?” அவன் அப்படியே அந்த ஜீவித வாகனன் அந்த வத்தி சிலையிலே உட்கார்ந்தான் கருடன் வந்தான். வரும்போது இவனுக்கு சந்தோஷம். முதல்நாள்வரை அந்த பாம்புகள் நடுங்கிக் கொண்டு இருந்தன (கருடன் வரும்போது) இன்று இவன் மிக சந்தோஷத்துடன் வாருங்கள் என்னுடைய புண்யத்தினால நீங்கள் வந்திருக்கிறீர்கள் சாப்பிடுங்கள் என்னை” என்றானாம். அதைக்கேட்டு கருடனுக்கு அபரிமிதமான ஆச்சர்யம். இன்று வரை யாரும் இந்த வார்த்தை சொல்லவில்லையே! நான் வரும்போது நடுங்கிக் கொண்டு இருந்தார்களே இவன் வந்து என்னை சாப்பிடுங்கள் என்று சொல்கிறானே! என்று நினைத்துக் கொண்டு “என்ன யோசனை பண்ணுகிறீர்கள்.? என்ன! என்னை சாப்பிட உங்களுக்கு பிடிக்கவில்லையா? தாராளமாக சாப்பிடுங்கள்” என்றானாம். பின்பு கடைசியிலே கருடனுக்கு “ஏய்! இப்படிப்பட்ட ஒரு பவித்ர ஆத்மா இருக்கிறானே! தன்னுடைய உயிரைக் கொடுத்து இன்னொருவனுடைய உயிரைக் காப்பாற்றுவதற்கு இருந்தானே! அப்போது இத்தனை நாள்கள் நான் என்ன பாவம் பண்ணினேன்?” என்று கருடனுக்கு பச்சாதாபம் வந்து விட்டது என்று சொல்வார்கள்.
அதாவது கருணை என்று சொன்னால் இன்னொருத்தனுக்கு எப்படியாவது நாம் உதவி செய்ய வேண்டும் என்கிற ஒரு பாவம். அந்த பாவத்தை விட்டு விட்டு அவன் கஷ்டத்தில் இருக்கிறான் என்று சொன்னால், இருக்கட்டும் என்று சொன்னால் அது என்ன குணம்? அதேபோல் ஒருத்தன் புண்யம் பண்ணுகிறான் என்று சொன்னால் அங்கு சந்தோஷத்தைக் காட்ட வேண்டும். ஓ! பெரிய கார்யம் பண்ணுகிறீர்கள். இன்னும் பண்ணுங்கள். சந்தோஷம். உங்கள் மாதிரி தர்மிஷ்டங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லவேண்டாமா? அதை விட்டு விட்டு அவர் எப்படி பண்ணுகிறார் எனக்கு தெரியாதா? என்று சொல்லவேண்டுமா? அவர் எந்த பக்கத்திலிருந்து வருகிறார் என்று தெரியுமா? எந்த பக்கத்திலிருந்து வந்தால் என்ன? அவன் செய்கிற நல்லகாரியத்தைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டாமா? இன்று ஒருவர் என்னிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.
ஸ்வாமிஜி! உலகத்துலே ஒரு பெரிய ஆச்சர்யம் என்ன பார்க்கிறோம் என்று கேட்டால் (சாதாரணமான மனிதர்கள் சொல்வது தான்) பெரிய, பெரிய தணிகர்கள் அதாவது ஒரு நாளுக்கு பத்து லட்க்ஷம், இருபது லட்க்ஷம் வியாபாரம் பண்ணிக் கொண்டு இருக்கக் கூடிய தணிகர்கள் (பணக்காரர்கள்) இருக்கிறார்களே! அவர்களுக்கு வருஷத்துக்கு ஒரு லக்ஷம் ரூபாய் தர்மம் பண்ண வேண்டும் என்று கூட மனசு வர மாட்டேன் என்கிறது. அந்த விஷயம் (தர்மம்) வரும்போது நான் கொஞ்சம் கஷ்டத்தில் இருக்கிறேன் என்று சொல்லி விடுகிறார்கள். ஒரு நாளுக்கு 10,20 லக்ஷம் ரூபாய் வியாபாரம் நடந்து கொண்டு இருக்கிறது என்பது சரி. என்றைக்காவது ஒரு நாள் ஒரு பெரிய காரியம் பண்ணவேண்டும் என்று யாராவது போனால் நீங்கள் மன்னிக்க வேண்டும். கஷ்டத்தில் இருக்கிறேன். இதோ 100 ரூபாய் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த காரியத்தை முடித்து விடுங்கள் என்று சொல்லி விடுகிறார்கள். உலகத்துலே இது ஒரு பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது என்று சொன்னார்.
அப்படி நாம் இல்லாமல் ஒருத்தன் வந்து அந்த விஷயத்துலே நல்ல மனசோடு தர்மத்தைச் செய்கிறான் என்று சொன்னால் அவன் விஷயத்தில் நம் சந்தோஷத்தைத் தெரிவிக்க வேண்டியது நம் கடமை. அதை விட்டு விட்டு அவன் விஷயத்துலே கேவலம் ஆட்ஷேபத்தையே நாம் தெரிவித்தோமானால் அது அர்த்தம் இல்லாத கார்யம். அதேபோல் ஒருத்தன் ரொம்ப தப்பிதம் பண்ணுகிறான் என்று சொன்னால் அவனுக்கு புத்திமதி சொல்லலாம். நீ இந்த மாதிரி இருக்கக் கூடாது. இன்னும் என்னவென்றுகேட்டால் அது அவனுடைய ப்ராப்தம் என்று சொல்லி விட்டு விடுகிறோமே தவிர, அவனைப் போய் வார்த்தைக்கு வார்த்தை, திட்டிக் கொண்டே இருந்தால் என்ன ப்ரயோஜனம்?
அதனால் உனக்கு ஒண்ணும் நல்லது ஆகாது. அவனுக்கும் ஆவது இல்லை. இனி உனக்கு ஸ்ரமம் ஒண்ணுதான் பலன். அதனால் இந்த ஒரு நான்கு வாசனை? என்ன வாசனை? ஸம்ஸ்காரங்கள். என்ன ஸம்ஸ்காரம்? சுகத்துலே இருக்கிறவன் விஷயத்துலே ஸ்நேகத்தோடு இருக்கிறதும், துக்கத்துலே இருக்கிறவனோட விஷயத்துலே. கருணையோடு இருக்கிறதும், புண்யம் செய்கிறவன் விஷயத்துலே சந்தோஷமாக இருக்கிறதும், பாபி விஷயத்துலே உபேக்ஷையாக இருக்கிறதும், இந்த ஸம்ஸ்காரங்கள் எவனுக்கு இருக்கிறதோ அவன் உத்தமமானவன். அவன் தேவி பூஜை செய்வதற்குத் தகுதியானவன் என்று சொல்லியிருக்கிறார்கள். அதாவது நாம் அப்பேர்ப்பட்ட ஓர் உத்தமமான ஸம்ஸ்காரங்களை சம்பாதிக்கனும் என்பதற்கு முயற்சி செய்ய வேண்டுமே தவிர எனக்கு அதெல்லாம் கிடையாது நான் ஒண்ணும் தேவி பூஜை செய்ய வேண்டியதில்லை என்று யாரும் நினைத்துக் கொள்ளக் கூடாது. நாம் அந்த ஸம்ஸ்காரங்களை சம்பாதிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதேபோல் தேவி “ஸதாசார ப்ரவர்த்திகா” ஸதாசாரத்தை அவள் ஸர்வத்ரா தினங்களுக்கு ப்ரேரணையை, ஸதாசாரத்தில் இருப்பதற்கு ஒரு ப்ரேரணையைக் கொடுப்பாள். “துராசாரசமனீ” துராசாரங்களை நாசமாக்கக் கூடியவள்.
நம்முடைய முக்யமான ஒரு விஷயம், ஒரு ‘ஸதாசாரம்’ = பவித்ரமான ஆசரணம் என்பது நமக்கு வேண்டும். ஆசரணத்துலே ஒரு பாவித்ரியம் இல்லா விட்டால் இனி நாம் என்ன செய்தாலும் என்ன ப்ரயோஜனம்? அநேகம் பேருக்கு வேதங்கள் விஷயத்துலே ஓர் அபாரமான மதிப்பு, உண்டு. ஆனால் வேதத்துலே இருக்கக் கூடிய ஒரு ‘வைசிஷ்டம்’ ஓர் இடத்துலே சொல்லி இருக்கிறது. “ஆசாரஹீனம் நபினந்தி வேதா: ஆசாரமே இல்லாவனுக்கு அவனை வேதங்கள் கூட பவித்ரம் ஆக்காது. அதனால் ஆசாரம் என்பது ரொம்பவும் முக்யம். ஆசாரம் என்று சொன்னால் அது ஸதாசாரம். துராசாரம் அல்ல. அப்பேர்ப்பட்ட ஸதாசாரத்துலே நாம் இருக்கணும் என்று சொன்னால் நமக்கு தேவியினுடைய அருள் வேண்டும். ஏனெனில் அவள்தான் “ஸதாசார ப்ரவ்ருத்திகா” நமக்கு இருக்கிற துராசாரங்கள் தூரமாகனும் என்று சொன்னால் அவளுடைய அருள்தான் வேணும். அவள்தான் “துராசார சமனி” இப்பேர்ப்பட்ட மகிமை தேவிக்கும் அபாரமாக சொல்லியிருக்கிறது. அதே ஸஹஸ்ர நாமங்களிலே. அது மட்டும் இல்லை. அவளை நாம் ஸ்ரத்தையோடு ஆராதித்தால் “ஸத்ய ப்ரஸாதினீ” = உடனே அனுக்ரஹம் செய்வாள். அது ஒண்ணும் தாமதமே இருக்காது. ஆனால் நம்முடைய பக்தி என்பதை மட்டும் அவள் ரொம்பவும் எதிர் பார்ப்பாள். “பக்தி ப்ரியா பக்தி கம்யா பக்தி வச்யா பயா பஹா” பக்தியை அவள் ரொம்பவும் எதிர் பார்ப்பாள். அதுதான் பகவான் கீதையிலே சொல்கிற போது “ஏமே பக்த்யா ப்ரயச்சதி” நாம் பகவானுக்குக் கொடுக்கக்கூடிய பதார்த்தம் பெரிசா என்பது ப்ரச்னை அல்ல. நாம் அதை பக்தியோடு கொடுக்கிறோமா இல்லையா என்பது தான் ப்ரச்னை. பக்தியோடு நாம் எதைக் கொடுத்தாலும் பகவான் ஸ்வீகரிப்பான்.
அதேதான் பகவத் பாதாள் சொல்கிறபோது
“பக்தி கின்ன துரோத்யஹோ
வனசரோ பக்தா வதம் சாயதே”
ஏய்! பக்தி ஒண்ணுதான் முக்யம். பக்தி வேண்டுமே தவிர பெரிய பண்டிதர்கள் பூஜை பண்ணினால் தான் பகவான் ஏற்றுக் கொள்வார். பெரிய பணக்காரர்கள் பூஜை பண்ணினால்தான் பகவான் ஏற்றுக் கொள்வார் என்கிற அர்த்தம் இல்லை. ப்ரச்னை இல்லை. வெறும் பக்தி என்கிற ஒண்ணு இருந்தால் அது ஒரு காட்டு மனுஷன் ஆனாலும் அவனுடைய பூஜையை பகவான் பஹூஸந்தோஷத்தோடு ஸ்வீகரிப்பான் என்று சொல்லியிருக்கிறது. அதனால் தான் ஸம்ஸ்கிருதத்துலே ஒரு ஸ்லோகம் இருக்கிறது “ ஒரு பண்டிதர் தினமும் பகவான் சந்நிதிக்குப் போய்” விஷ்ணவேநம: என்று சொன்னார். இன்னொருத்தனுக்கு பாவம் ஒரு ‘ராமசப்தம்’ தவிர வேறு எந்த சப்தமும் தெரியாது. விஷ்ணாய நம: என்றான். இந்த பண்டிதருக்கு வந்து என்னடா இவன் தினம் வந்து “அபசப்த ப்ரயோகம்’ பண்ணுகிறான் என்று தோன்றும். விஷ்ணாய நம: இந்த இருவருக்கும் பக்தி ரொம்ப உண்டு. ஆனால் அவன் அபசப்தம் பண்ணுகிறானே இப்படி ப்ரயோகம் பண்ணுகிறவனுக்கு என்ன கிடைக்கப் போகிறது? என்று தோன்றும். கடைசியிலே இவரும் பகவத் சாகித்யத்துக்குப் போனார். அவனும் அங்கே தயாராகி விட்டான். “ஏய் நீ எப்படி யடா வந்தாய் இங்கே! என்று கேட்டால் பகவானுக்கு விஷ்ணாயா! சொன்னால் என்ன விஷ்ணவே சொன்னால் என்பது ப்ரச்னை இல்லை. இரண்டு பேருடைய மனசுலே பக்தி இருந்ததா என்று பார்த்தார். இரண்டு பேருக்கும் பக்தி இருந்தது. இரண்டு பேருக்கும் சாயித்யம் கொடுத்து விட்டான். “மூர்க்கோவததி விஷ்ணாயா”
“ வித்வான் வததி விஷ்ணவே
உபயோ சதுர்சம் புண்யம்
பாவக்ராஹி ஜனார்த்தன:”
அதனால் நம்முடைய பக்திக்குத்தான் பகவான் மதிப்பு கொடுப்பானே தவிர இவன்பெரிய பண்டிதனா? இவன் பெரிய பணக்காரனா? இவன் பெரிய அதிகாரியா? என்று பகவான் பார்க்க மாட்டான். அதனால் நாம் எல்லாரும் பக்தியோடு பகவானைப் பூஜித்தால் ஸ்ரேயஸை அடைய முடியும். அப்பேர்ப்பட்ட மகிமை தேவிக்கு இருக்கிறது. அந்த தேவியை பக்தியோடு நாம் உபாஸிக்க வேண்டும். சமீபத்திலே யாரோ என்னிடம் கேட்டார்கள். ஸ்வாமிகளே! அம்பாள் பூஜை செய்ய வேண்டும் என்றால் எல்லாருக்கும் எப்படி முடியும்? எல்லாருக்கும் சாத்யமில்லையே என்ன சாத்யம் இல்லையப்பா! என்ன வேணும்? அம்பாளுக்கு வேண்டியது, உன்னுடைய பக்தி ஒண்ணுதான் வேணும். அந்த பக்தி இருந்தால் வேறு ஒண்ணும் செய்ய வேண்டியதில்லை அம்பாளுடைய உருவம் வைத்துக் கொண்டு நாமத்தைச் சொல்லிக் கொண்டு வா. போதும். அதிலேயே நீ ஸ்ரேயஸை அடைய முடியும். அதனால் அம்பாளை பூஜை செய்வதற்கு பூஜிப்பதற்கு எல்லோருக்கும் யோக்யதை இல்லை என்று மட்டும் நினைத்துக் கொள்ளவே வேண்டாம். எல்லாருக்கும் யோக்யதை இருக்கிறது. அதனால் அப்பேர்ப்பட்ட பக்திப் பாவத்தோடு நாம் தேவியை ஆராதித்து ஸ்ரேயஸை அடைய வேண்டிய ஒரு பவித்ரமான சமயம் இது. இந்த சமயத்தை நாம் வ்யர்த்தமாக்கக்கூடாது. வீணாக்கக் கூடாது. இந்த சமயத்தை சார்த்தகப் படுத்த வேண்டும்.
எங்க சச்சிதானந்த சிவாபிநவ நரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் (பரமேஷ்டி குருநாதர்) தேவியை அநேக விதமாக ஸ்துதித்திருக்கிறார். பகவத் பாதாள் எப்படி தேவீஸ்தோத்ரங்கள் அநேக ஸ்தோத்ரங்கள் செய்தாரோ அதே போல் எங்க சச்சிதானந்த சிவாபிநவ நரஸிம்ம பாரதீ ஸ்வாமிகளும் அம்பாளை அநேக விதமாக ஸ்துதித்து இருக்கிறார். அவர் அம்பாள் சந்நிதியிலே ஒரு ப்ரார்த்தனை நாம் எல்லோரும் பண்ணவேண்டும் என்று சொன்னார்.
“வித்யாம் சுத்தாம் ச புத்திம்
கமல ஜதயிதே ஸத்வரம்
தேஹி விஸ்யம்
(கமலஜதியிதா அஷ்டகம்).
முக்யமாக நமக்கு வேண்டியது. வித்யையும், பரிசுத்தமான புத்தியும். நம்முடைய மனசுலே கல்மிஷம் இருந்து விட்டால் நாம் எவ்வளவு படித்தாலும் சுகம் இல்லை. மனசு நிர்மலமாய் இருக்க வேண்டும். அந்த ஒரு நிர்மலமான மனசு இருந்தால் நம்முடைய ஜென்மம் க்ருதார்த்மாகி விடும். அதே போல் இந்த சம்சார பந்த நிவர்த்தகமான ஞானத்தையும் தாயே! நமக்கு கொடு என்று சொன்னார் அவர். அதேபோல்.
“பாபம் ஹம்ஸயித்வா
பஹூ ஜனி ரஜிதம்
கிம்ஜதே அணி மாராத் சம்பாத்யா
அஸ்திக்ய வித்யம்”
ஸ்ருதி குரு வசனஷ்வாகரம் பக்தி தாட்யம்
பாபத்தைப் போக்க வேண்டும். அநேக ஜென்மங்களில் பாபத்தைச் செய்திருக்கிறோம். ‘பஹுஜனிரசிதம் பாப விஹம் தம் யித்வா” இந்த ஜென்மம் மட்டுமில்லாமல் எத்தனையோ ஜென்மங்களிலே பாபம் நடந்திருக்கிறது. அதெல்லாம் நீதான் போக்க முடியும் என்று “பாபாரண்ய தவானலா” என்று வேண்டினார். அதனால் நீ இந்த பாபத்தைப் போக்கி. புண்யத்தை எனக்கு வரும்படி செய்து ஆஸ்திக்யத்தை உண்டாக்கி ஆசார்யாள் விஷய (குரு) பேச்சுலேயும் சாஸ்த்ரத்தின் வாக்கிலேயும் விஸ்வாசத்தை உண்டாக்கி என்னைக் காப்பாற்ற வேண்டும். ஆஸ்திக்யம் வேணும் என்று அங்கே சொல்லிஇருக்கிறார். அந்த ஆஸ்திக்யம் இல்லாமல் கேவலம் நாஸ்திகன் மாதிரி நாம் வாழ்க்கை நடத்தினால் இந்த வாழ்க்கையும் அந்த நாஸ்திகர்கள் வாழ்க்கைக்கும் நாலுகால் ப்ராணிகள் வாழ்க்கைக்கும் வித்யாஸம் இல்லை. அப்பேர்ப்பட்ட வாழ்க்கையை நாம் நடத்தக் கூடாது. அதனால் அங்கே ஆஸ்திக்யத்தை உண்டாக்கும் என்று தாயாரை (தேவியை) வேண்டிக் கொண்டார் அவர். அப்பேர்ப்பட்ட மகான்கள் எல்லாரும் அதிஸ்ரத்தையோடு இந்த பவித்ரமான சமயத்தில் தேவியை ஆராதித்தார்கள் என்கிறபோது அதே மகான்களுடைய பரம்பரையில் வந்து இருக்கிற நாம் எல்லோரும் கூட அந்த தேவியை அதே பக்தி ஸ்ரத்தைகளோடு ஆராதித்து ஸ்ரேயஸை அடைய வேண்டியது கர்தவ்யம் (கடமை)
திருப்போரூர் கந்த ஸ்வாமி முருகன் கோவில்
ஆணவத்தை அழிக்கும் அருள்மிகு திருப்போரூர் கந்த ஸ்வாமி முருகன் திருக்கோவில்
ஸ்தல வரலாறு...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது திருப்போரூர் திருத்தலம். சுமார் 700 வருடப் பழைமையான ஆலயம் எனும் பெருமை மிக்க திருத்தலம் இது.
முருகப்பெருமான், அசுரர்களை எதிர்த்து நிலம், நீர், ஆகாயம், ஆகிய மூன்று பகுதிகளில் நின்று போரிட்டு வெற்றி கண்டார். அசுரர்களின் கர்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கினார். அவர்களின் மாயையை கடலில் நின்று போரிட்டு திருச்செந்தூரிலே வெற்றி கண்டார். இவ்வகையில் அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று முருகப்பெருமான் அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் திருத்தலம் ஆகும்.
கந்தசுவாமி திருக்கோவில் :
அசுரர்களுடன் முருகப்பெருமான் போரிட்ட போது, மாய வித்தைகள் மூலம் மறைந்திருந்து அசுரர்கள் போர்புரிந்தனர். இதனை தனது ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணையோடும் கண்டறிந்து முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இவ்வாறு மறைந்திருந்த அசுரர்கள், முருகப் பெருமானின் கண்களில் அகப்பட்ட இடமே இன்றும், கண்ணகப்பட்டு (கண் அகப்பட்டு) என்ற இடமாக திருப்போரூர் அருகில் உள்ளது.
அருணகிரிநாதர் இந்தத் தலத்துக்கு வந்து, முருகப்பெருமானைத் தரிசித்து திருப்புகழ் பாடியிருக்கிறார்.
முருகப் பெருமானுக்கு அப்பனுக்கே பாடம் சொன்னவன் என்றும் ஞானகுரு என்றும் பெயர்கள் உண்டு. திருப்போரூர் முருகப்பெருமான், மற்ற தலங்களைப் போல் அல்லாமல், பிரம்மாவுக்கு உரிய அட்சரமாலையை கையில் ஏந்தியபடி, திருமாலைப் போல இடது கரத்தை தொடையில் வைத்தபடி சிவனாருக்கே உரிய அபய ஹஸ்த முத்திரையுடன் மும்மூர்த்திகளின் அம்சமாத் திகழ்கிறார்.
தந்தை ஈசனைப் போலவே இங்கே சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர் கந்தபெருமான் என்கிறது ஸ்தல புராணம். எனவே, மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் கிடையாது. மாறாக, ஸ்ரீசுப்ரமண்யர் யந்த்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த யந்த்ரத்துக்கே அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
இந்த யந்த்ரத்தில் கந்த சுவாமி கடவுளின் திருநாமங்கள் சுமார் 300க்கும் மேலாகப் பொறிக்கப்பட்டு உள்ளன.
பிரளயத்தால் ஆறு முறை அழிவைச் சந்தித்து, ஏழாவது முறை கட்டப்பட்டதாம் இந்தக் கோயில். அதுவே இன்றளவும் நிலைத்து, கம்பீரத்துடன் காட்சி தருகிறது!
ஓம்கார அமைப்பில் அமைந்த ஆலயம். சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும் போது சந்நிதியில் இருந்து பார்த்தால், முன்னே தரிசித்துச் செல்பவர்களைப் பார்க்க முடியாதபடி அமைக்கப்பட்டு உள்ளது.
எல்லாக் கோயில்களிலும் கோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும் கொடிமரம் அமைந்திருக்கும். ஆனால் இங்கே, கோபுரத்திற்கு வெளியே இருக்கிறது கொடிமரம்..
திருத்தணி, சுவாமிமலை தலங்களில் முருகக் கடவுளின் சந்நிதிக்கு எதிரில் ஐராவதம் எனும் வெள்ளை யானை வாகனமாக நிறுத்தப்பட்டிருக்கும். அதேபோல், மயில்வாகனனின் வாகனமாக, இங்கு ஐராவத யானை சிலையாக அமைக்கப்பட்டு உள்ளது.
ஸ்தல வரலாறு :
மதுரையில் சங்கப்புலவர் மரபில் அவதரித்தவர் சிதம்பர சுவாமிகள். இவர் மதுரை மீனாட்சியம்மனையும் சொக்க நாதரையும் அனுதினமும் உள்ளத்தில் இருத்தி தியானித்து வந்தார். மீனாட்சி அம்மனின் மீது கலிவெண்பாவும் பாடியுள்ளார்.
அன்னை மீனாட்சியின் அருளுரை :
ஒருமுறை சிதம்பர சுவாமிகள் தியானத்தில் அழகிய மயிலொன்று தோகை விரித்து ஆடுவதைக் கண்டு மகிழ்ந்தார். கூடவே அன்னை மீனாட்சி தோன்றி, ‘சிதம்பரா! மதுரைக்கு வடக்கே, காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் உள்ளது. அங்கே குமரக் கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து, அழகிய திருக்கோவில் நிர்மாணித்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்து. அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிட்டும்’ என்று அருளுரைத்து மறைந்தார்.
மதுரையில் இருந்து அன்னை மீனாட்சி காட்டிய திசையில் பயணித்து, யுத்தபுரி, சமராபுரி, போரிநகர் என்றெல்லாம் அழைக்கப்படும் திருப்போரூரை அடைந்தார் சிதம்பர சுவாமிகள். அப்போது அங்கு ஒரு வேம்படி விநாயகர் ஆலயம் மட்டுமே இருந்தது. மற்ற பகுதிகள் பனங்காடாக காணப்பட்டது. அந்தப் பகுதியில் முருகப்பெருமான் திருவுருவத்தை தேடித் திரிந்தார். இறுதியில் ஒரு பனை மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக கந்தப்பெருமான் காட்சியளிப்பதைக் கண்டு மகிழ்ந்தார்.
கோவில் கட்டும் பணி :
சுயம்பு மூர்தமாக வெளிப்பட்ட முருகப்பெருமானை அங்குள்ள வேம்படி விநாயகர் கோவிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் சிதம்பர சுவாமிகள் தியானத்தில் இருந்த போது அந்த சுயம்பு வடிவ கந்தப் பெருமானின் உருவில் இருந்து முருகப் பெருமான் தோன்றி, சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து ‘சிவாயநம’ ஓதி மறைந்தார். அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோவிலின் தோற்றமும், அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் என்பதை உணர்ந்தவர், மனதில் தோன்றிய கோவில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.
ஒருமுறை திருப் பணிக்காக வைத்திருந்த பொருட்களை திருடர்கள் கவர முயற்சிக்க, அவர்கள் பார்வை இழந்து வருந்தினர். சுவாமிகளை வணங்கி மீண்டும் கண் பார்வை பெற்ற கள்வர்கள், தாங்கள் வைத்திருந்த பொன், பொருட்களை திருப்போரூர் ஆலய திருப்பணிக்கு கொடுத்து விட்டு சென்றனர்.
கோவிலுக்கு நிலம் தானம் :
அந்த காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட ஆற்காடு நவாப் மன்னனின் மனைவி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர்கள் சிதம்பர சுவாமிகளின் தெய்வீக சக்தியை உணர்ந்து இங்கு வந்தபோது, நவாப் மனைவிக்கு திருநீறு பூச, அவரது வயிற்று வலி நீங்கியது. மகிழ்ச்சி அடைந்த நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் எழுப்பும் முருகன் கோவிலுக்காக 650 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். கோவில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று அழகிய திருக்கோவில் எழுந்தது. அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில் ஆகும்.
ஆலயத்தின் தெற்கே அமைந்துள்ள திருக்குளமான ‘வள்ளையார் ஓடை’ என்னும் சரவணப் பொய்கையில் நீராடி, கிழக்குப் பார்த்த ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் கருவறையில் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கீழே ஒரு சிறு பீடத்தில் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம், அபய வரத திருக்கரங்களுடன் பிரம்ம சாஸ்தா வடிவில் வள்ளி- தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். மூலவர் சுயம்பு என்பதால் இந்த சிறிய மூர்த்தியை சிதம்பர சுவாமிகள், அபிஷேக வழிபாட்டிற்காக அமைத்துள்ளார்.
உபதேச மூர்த்தி :
கருவறையில் உள்ள மூலவருக்கு புனுகுச் சட்டம் சாத்தி, கவசம், திருவாபரணம் முதலியன அணிவிக் கிறார்கள். எதிரில் யானை வாகனமும், பலிபீடமும் உள்ளன. கணபதி, தண்டாயுதபாணி, பிரம்ம சாஸ்தா, துர்க்கை, அகத்தியர், நாகராஜர், வீரபாகு, வீரபத்திரர் சன்னிதிகளும் ஆலய உட்பிரகாரத்தில் உள்ளன. கருவறை பின்புறம் பஞ்சலோகத்தில் அமைந்த விநாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், பிரம்மா, தேவேந்திரன், நந்தி, த்வனி சண்டேசர், மாத்ரு சண்டேசர், அஸ்திரதேவர், உபதேச மூர்த்தி சன்னிதிகளும் அமைந்துள்ளன.
சிவபெருமானது மடியில், தந்தையின் திருமுகத்தைப் பார்த்தபடி முருகன் அமர்ந்திருக்க, சிவபெருமானோ தன் குழந்தையிடம் பிரணவப் பொருளை உபதேசம் பெறும் அதி அற்புத திருவடிவே உபதேச மூர்த்தி ஆகும். இந்த உபதேச மூர்த்தி திருவுருவுக்கு மரிக்கொழுந்து சாத்தி, நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
கோவில் அமைப்பு :
ஆலயத்தில் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் திரு வடிவம் வலது காலை மயில் மேல் ஊன்றி, வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளது. இந்த சம்ஹார மூர்த்தியை தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து, 6 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எதிரிகள், பகைவர்கள் தொல்லை விலகும்.
கோவில் வெளிப்பிரகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர், தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். எனவே இத்தல விநாயகரையும், சனீஸ்வரரையும், கந்தசுவாமியையும், பைரவரையும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 8 சனிக் கிழமைகள் வழிபட்டு வந்தால், சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகன்று விடும் என்று கூறப்படுகிறது.
ஆலய தலமரமான வன்னி மரத்தின் அருகே வன்மீகநாதர், புண்ணியகாரணி அம்பாள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வன்னிமர விநாயகர் சன்னிதிகள் உள்ளன. மேலும் இடும்பன், சூரியன் சன்னிதிகளும் இருக்கின்றன. இத் தலத்தில் பைரவர் நாய் வாகனம் இல்லாமல், தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் எழுந்தருளியிருப்பது சிறப்பு அம்சமாகும்.
கந்தசஷ்டி விழா இங்கு விசேஷமாக நடக்கும். இந்த வேளையில் கஜமுகன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன், அஜமுகி, தாரகன் ஆகிய அசுரர்களை வதம் செய்வார். மாசி பிரம்மோற்ஸவத்தின் போது, முருகன் பிரம்மாவிற்கு பிரணவ உபதேசம் செய்யும் வைபவம் நடக்கும்.
கந்தசஷ்டி விரத நாளில், அல்லது செவ்வாய்க் கிழமையில், கிருத்திகை மற்றும் விசாக நட்சத்திர நாட்களில், திருப்போரூர் கந்தவேலனை, தரிசியுங்கள். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்கள் நிச்சயம்!
திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மாமல்லபுரம் முதலிய இடங்களில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தூரத்தில் திருப்போரூர் அமைந்துள்ளது.
வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா 🙏🙏🙏
தரிகொண்ட வெங்கமாம்பா!
தரிகொண்ட வெங்கமாம்பா!
ஆந்திரமாநிலம் தரிகொண்டா என்ற சிறிய கிராமத்தில் பிறந்து, சதா சர்வகாலமும் திருவேங்கடவனை நினைத்து உருகி தன்னை அர்ப்பணித்து, திருவேங்கடமுடையானையே தன் கணவனாக பாவித்து, திருமலையில் ஸ்ரீவாரி சேவை செய்து பரந்தாமனை அடைந்தவள் மாத்ருஸ்ரீதரிகொண்ட வெங்கமாம்பா.
ஆந்திர மாநிலத்தில் ஒரு காலத்தில் கடும் வறட்சி ஏற்படவே ராய துர்க்க பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியே கிளம்பி பிரத்தமிட்டா என்ற கிராமத்தில் ஒரு நாள் இரவு தங்கினர். காலையில் அங்கு லட்சுமி நரசம்மா என்ற அந்தணப் பெண்மணி தயிர்ப்பானையில் தயிர் கடைந்து கொண்டிருந்தாள். (தயிர்ப்பானைக்கு தெலுங்கில் தரிகொண்ட என்பது பெயர்.) அங்குள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மரிடம் பஞ்சத்தில் அடிபட்ட மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தவாறே அந்தப் பெண்மணி தயிர் கடைந்து கொண்டிருக்கையில் திடீரென்று தயிர் மத்து நின்று விட்டது. துணுக்குற்ற அவள் மீண்டும் தயிர் கடைய மீண்டும் மத்து சுழலாது நின்றது. மத்தை ஓடவிடாமல் ஏதாவது தடை செய்கிறதா என்றே கையை உள்ளே விட்டுப் பார்க்க ஏதும் இல்லாததும் கண்டு அவள் திகைத்தாள். மீண்டும் மத்து நின்ற போது, தன் கணவனை அழைத்துப் பார்க்கச் சொல்ல, கணவர் வந்து பார்த்தபோது ஸ்ரீலட்சுமிநரசிம்ம சிலை ஒன்று தயிர்பானையில் இருப்பதை அவர் கண்டார். தனக்கு கோவில் கட்டி வழிபட நல்ல காலம் பிறக்கும் என்ற அசரீரி கேட்க, ஊர் மக்கள் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு கோயில் எழுப்பி பெருமாளுக்கு தரிகொண்ட நரசிம்மர் (தயிர்ப்பானை நரசிம்மர்) என்று திருநாமம் இட்டு வழிபட்டு வந்தனர். கிராமத்தின் பெயரும் தரிகொண்ட என்று ஆயிற்று.
தரிகொண்ட கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சாந்த சொரூபராக எழுந்தருளியிருக்கிறார். ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம், அகலமான பிரகாரம் ஆககியவற்றோடு கூடிய இந்த கோயிலில் பாஞ்சராத்ர ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. நீதிமன்றம், வழக்கு என்று செல்லாமல் மக்கள் இங்குள்ள பலிபீடத்தை வலம் வந்து ஆரத்தி செய்து சத்ய பிரமாணம் எடுத்துக் கொள்வது வழக்கம். எனவே தரிகொண்ட கிராமம் சத்ய ப்ரமாண க்ஷேத்ரமாகத் திகழ்கிறது. இந்த கோயிலில் செஞ்சு லட்சுமி, ஆதிலட்சுமி சன்னதிகளும், அனுமனுக்குச் சன்னதியும் உள்ளன. மேலும் இங்கு அவதரித்த பக்தை தரிகொண்ட ஸ்ரீவெங்கமாம்பாவுக்கு தனிச் சன்னதி உள்ளது. ஆந்திர மாநிலம் வாயல்பாடு என்ற ஊரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் தரிகொண்ட கிராமம் அமைந்துள்ளது. லட்சுமி நரசிம்மா வம்சத்தில் வந்தவர்கள் நியோகி அந்தணர்களான கிருஷ்ணய்யா மங்கமாம்பா தம்பதியர் குழந்தைப் பேற்றுக்காக வருந்தி திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அனவரதமும் அவர்கள் வேண்டி கொண்டிருக்கையில் ஒரு நாள் மங்கமாம்பாவிடம் ஒரு சிறு குழந்தை ஓடி வந்து தயிர் சாதம் கேட்க, அவள் தயிர்சாதம் எடுத்துக் கொண்டு குழந்தைக்கு ஊட்ட முற்பட்டபோது, அக்குழந்தை தயிர்சாதப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஓடி மறைந்தது. கிருஷ்ண பரமாத்வே தன்னிடம் வந்து தயிர் சாதம் பெற்றுச் சாப்பிட்டதாக மங்கமாம்பா மெய்சிலிர்த்தாள். ஸ்ரீவேங்கடேசப்பெருமாளையும் மனமுருகி அவர்கள் வேண்டிக்கொண்டனர். திருமலை வேங்கடவன் பெண் அம்சமாக தனக்குக் குழந்தையாகப் பிறக்கபோவதாக மங்கமாம்பா கனவு கண்டாள். அவள் கண்ட கனவு பலித்து, திருவேங்கடவன் அருளால் ஒரு பெண் குழந்தை (1730ம் ஆண்டு) அந்த தம்பதியருக்குப் பிறக்க, வேங்கடேசர், அலமேலுமங்கா ஆகிய பெயர்களை இணைத்து வெங்காம்பா என்று பெயரிட்டு அக்குழந்தையை அவர்கள் போற்றி வளர்த்தனர்.
இயற்கையாகவே சிறுவயதிலேயே இறைப்பற்று கொண்டிருந்த ஸ்ரீவெங்கமாம்பா தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலுக்குச் சென்று கோயில்க் கைங்கர்யங்கள் செய்வதில் ஈடுபட்டாள். சுப்ரமண்ய ஆச்சார்யர் என்பவரிடம் ராமாயணம், பாரதம், பாகவதம் போன்றவற்றைப் பயின்றாள். திருமண வயது வந்தவுடன் பெற்றோர் வெங்கமாம்பாவுக்கு தக்க வரணைத் தேடி திருமணம் செய்து வைத்தனர். ஆனால் வெங்கமாம்பாவோ இல்லறத்தில் ஈடுபாடின்றி, பக்தி மேலீட்டால் திருவேங்கடமுடையானே தன்னுடைய பதி என்று கூறி பரவசப்பட்டு வந்தாள். நோய்வாய்ப்பட்டு அவள் கணவன் இறந்தபோது, தன்னுடைய மணாளன் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் என்றும், தான் நித்ய சுமங்கலி என்றும் கூறிய வெங்கமாம்பா தன்னிடமிருந்து மங்கலப்பொருட்கள் அகற்றப்படுவதைத் தடுத்தாள். அவளது பக்தியைக் கண்ட கிராம மக்கள் வெங்கமாம்பா அலிமேலுமங்கா (அலர்மேல் மங்கா) அவதாரம் என்று கூறி, அவளை தேவுடம்மா என்று வழிபட்டனர். தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலில் கைங்கர்யங்கள் செய்வதிலும், இறைவன் மீது கீர்த்தனைகள் இயத்துவதிலும், பாடுவதிலும், ஆடுவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மாத்ருஸ்ரீ வெங்கமாம்பா திருமலையானைத் தரிசக்க பயணம் மேற்கொண்டாள்.
திருவேங்கடவன் மீது 36000 கீர்த்தனைகள் எழுதி இறவாப் புகழ் பெற்ற தாளப்பாக்கம் அன்னமய்யா (1408-1503) அவர்களின் சந்ததியினர் -ஸ்ரீவெங்கமாம்பாவின் மகிமை அறிந்து அவளை வரவேற்றனர். முதலில் ஸ்ரீவெங்கமாம்பவை கோயிலுற்குள் அனுமதிக்க மறுத்த அர்ச்சகர்களும் அவள் மகிமை அறிந்து ஏற்றுக் கொண்டனர். திருவேங்கடவன் மீது ஆறாத காதல் கொண்ட ஸ்ரீவெங்கமாம்பா ஏராளமான கீர்த்தனைகளை இயற்றினாள். தன்னை மறந்து கோயில்க் கைங்கர்யங்களில் ஈடுபட்டு வந்த அவள், ஸ்ரீவேங்கடாசல மஹாத்மியம், தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சதகம், நரசிம்மர் விலாச கதை, சிவ நாடகம், பாலகிருஷ்ண நாடகம், விஷ்ணு பாரிஜாதம் போன்ற பல முக்கியமான நூல்களை இயற்றியதோடு யோகக் கலையையும் நன்கு பயின்று அஷ்டாங்க யோக சாரம் என்ற நூலையும் இயற்றி பெருமையடைந்தாள். திருமலையையும், திருவேங்கடமுடையானையும் பற்றி ஏராளமான கவிகள் இயற்றி தலைசிறந்த கவியத்ரியாகத் திகழ்ந்த மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாதான் இயற்றிய கீர்த்தனைகளில் முத்திரையாக கிருஷ்ணமய்யாவின் மகள் வெங்கமாம்பா என்று பதிஷ செய்திருக்கிறாள்.
தன் உடல், ஆவி அனைத்தையும் திருவேங்கடவனுக்கே அர்ப்பணித்த ஸ்ரீவெங்கமாம்பா ஒவ்வொரு நாள் இரவும் ஏகாந்தசேவை ஆரத்தி கைங்கரியத்தின்போது தட்டில் முத்துக்களை வைத்து வேங்கடவனை வணங்கி வந்தாள். தினந்தோறும் காலையில் ஸ்ரீவேல்கடவன் சன்னிதிக் கதவுகள் திறக்கப்படும்போது அங்கு சிதறிக் கிடந்த முத்துக்களைக் கண்டு துணுக்குற்ற அர்ச்சகர்கள், வெங்கமாம்பாவே இதற்குக் காரணம் என்றறிந்து வெங்கமாம்பாவை கோயிலிலிருந்து தொலைவில் உள்ள தும்புரகோணா என்ற குகைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வேங்கடவன் அருளால் அங்கிருந்து ஒரு குகைப் பாதையின் வழியாக தன் ஆரத்தி சேவையை அவள் மீண்டும் தொடர்ந்தாள். பெருமாளும் தன் பக்தை வெங்கமாம்பாவின் ஆரத்தியுடன் தான் தனக்கு இரவு பூஜை முடிய வேண்டும் என்று அர்ச்சகர்களின் கனவில் கட்டளையிட அர்ச்சகர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து ஏகாந்த சேவையின்போது வெங்கமாம்பாவை அனுமதித்தனர். தன்னுடைய ஆரத்தியில் திருவேங்கடமுடையானையே அவள் கண்டு மெய்மறந்தாள்.
அன்று முதல் தொடர்ந்து, திருமலை திருவேங்கடவன் திருக்கோவிலின் கடைசி சேவையான ஏகாந்த சேவையின் போது மாத்ருஸ்ரீவெங்கமாம்பாவின் சந்ததியினர் இந்த ஆரத்திக் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெங்கமாம்பா முத்துக்களைக் காணிக்கையாக்கியதால் இந்த ஆரத்தி முத்தியா<லு ஆரத்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆரத்தியின் போது ஒரு வெள்ளத்தட்டில், வெற்றிலை, பாக்குதூள் ஆகியவற்றோடு மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் இஷ்ட தெய்வமான முத்துமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சிலை ஆகியவை வைக்கப்படுகின்றன. தினந்தோறும் கடைசி சேவையான ஏகாந்த சேவை அதிகாலை 1.30 மணி அளவில் முடிந்து, திருக்காப்பிடப்பட்டு, மீண்டும் 3.00 மணிக்கு ஸ்ரீவாரி சுப்ரபாத சேவையுடன் அடுத்த நாள் பூஜைகள், வழிபாடுகள் துவங்குகின்றன. 1730ஆம் ஆண்டு வேங்கடவன் அருளால் அவதரித்த ஸ்ரீவெங்கமாம்பா, எண்ணற்ற கீர்த்தனைகளையும், நூல்களையும் இயற்றி, இறுதியில் 1817 ஆம் ஆண்டு தனது 87வது வயதில் தன் பெருமானுக்காக அமைத்த துளசி வனத்தில் ஜீவசமாதி அடைந்தார். ஒரு பள்ளிக் கூட வளாக்ததிற்குள் அமைந்திருக்கும் பக்தை ஸ்ரீவெங்கமாம்பாவின் சமாதி பக்தர்களின் பார்வைக்காகத் தினமும் திறந்து வைக்கப்படுகிறது. மேலும் திருப்பதியில் மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் சிலை ஒன்றும் இரயில்வே பாலத்தின் கீழ் உள்ள சந்திப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் திருமலையில் கவியத்ரி மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் 285வது ஜயந்தி நாள் கொண்டாடப்படுகிறது. வெங்கமாம்பாவின் ஜயந்தி மற்றும் நினைவு நாட்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். கூர்ம ஜயந்தி இதே நாளில்தான் தாளப்பாக்க அன்னமய்யாவின் ஜயந்தி நாளும் கொண்டாடப்படுகிறது.
பராசர பட்டர்
பராசர பட்டர்!
எம்பெருமானார் எதிராஜர், உடையவர், பாஷ்யக்காரர், பெரும்பூதூர் முனிவர் என்று ஆறாத அன்பினால் அடியார்கள் போற்றும் ஸ்ரீராமானுஜரின் பவித்திரமெனப் போற்றப்பட்டவர் கூரத்தாழ்வான். கூரம் என்ற ஊரில் சிற்றரசர் போல் செழிப்புடன் வாழ்ந்தவர். அவருக்கேற்ற குணவதியான பத்தினி ஆண்டாள். பவிஷ்யாச்சாரியார் என்று அடையாளம் கண்டு போற்றப்படும் சிறப்பினுக்குரிய லட்சுமணமுனி யான திருப்பாவை ஜீயரின் குணப்பண்புகளில் உளம் தோய்ந்து, பக்தியினால் ஆழங்கால் பட்டு அவரையே தன் ஆசாரியனாக வரித்து அவர் சரண் புகுந்தார் கூரத்தாழ்வான். தன் சுகபோகங்கள் அனைத்தையும் மனைவியுடன் இளையாழ்வாரேசரண் என்று வந்தடைந்தவர் ஆழ்வான்.
ஓரிரவு நகர்வலமாக வந்த கூரத்தாழ்வான், ஒரு வீட்டில் நடந்த துயரமான வாக்குவாதங்களைக் கேட்க நேர்ந்தது. ஆண்டாளை மணந்து கொள்பவன் முதல் இரவில் மரித்து விடுவான் என்று அவள் ஜாதகத்தில் இருந்ததால், அவளது திருமணம் தடைபட்டுவந்தது. காலமெல்லாம் கண்ணீருடன் தன் அருமை மகள் வருந்துவதைச் சகியாது அவளது பெற்றோர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் கடைசி முடிவுக்கு வந்து விட்டனர். மறுநாள் கூரத்தாழ்வான் அவர்களை வரவழைத்து ஆண்டாளைத் தான் மணமுடித்து அவளை மகிழ்ச்சியோடு வாழ வைப்பதாகக் கூறி, பலவிதங்களிலும் அவர்களைச் சமாதனப்படுத்தி, ஸ்ரீஎம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனை,
அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்
ஒத்தொவ்வாத பல்பிறப்பொழிந்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முன் மேவினார்!
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே.
என்று உறுதிபூண்டு, ஒத்தொவ்வாத பல் பிறப்பையும் அளித்து ஆட்கொள்வன்- அவன்தானே! என்று ஞானத்தால் தேறி ஆண்டாளை தன் துணைவியாக ஏற்றார். எம்பெருமானின் அருளால் இந்த திவ்விய தம்பதிகள் 80 பிறை கண்டு நிறைவாழ்வு வாழ்ந்தனர். ஒருமுறை உணவு இடுவதற்கு முன் வாழை இலை வெட்டியபோது வாழை இலை வெட்டிய இடத்திலிருந்து நீர் வருவதைக் கண்டு, கண்ணீர் விட்டு அழுதார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலாருக்கு இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் வாத்ஸல்ய பாவத்தில். ஒரு மழை காலத்தில் வெளியில் பிட்சைக்கு போகாமல் இரவில் கண்ணயர தர்மபத்தினியான ஆண்டாள் ஒருக்கணம் எண்ணினால், ஏவலர்கள் எடுபிடியாக ஏவல் செய்ய, தங்கத் தட்டில் பலவிதமான உயர்ந்த உணவு வகைகளை உண்டுகளித்த என் கணவர் இன்று பட்டினியோடும் படுக்க நேர்ந்ததே! ரங்கா, உன் பக்தன் பட்டினி புலம்பவும் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அரங்கன் அர்ச்சாரூபமாக ஆழ்வானுக்கு பிரசாதங்கள் அனுப்பி வைக்க உத்திரவிட, அதன்படி உத்தமநம்பிகள் என்பவர் பெருமாள் பிரசாதங்களுடன் ஆழ்வான் இல்லத்துக்கு வந்து பிரசாதங்களைத் தந்தார்.
ஆழ்வான் ஆண்டாளை அழைத்து நீ ஏதாவது பெருமானிடம் குறைப்பட்டுக் கொண்டதுண்டோ என்று வினவ, நீங்கள் பசியோடிருப்பதைக் கண்டு மனம் பொறாமல், நான் பெருமானிடம் முறையிட்டது உண்மைதான் என்று கூறி மன்னிப்பு வேண்டினாள். ஆழ்வான் அந்த அமுதத்தை மூன்றில் ஒரு பங்கு கொடுத்து சாப்பிடச் சொல்லி விட்டு தானும் ஒரு பங்கை உண்டு உறங்கச் சென்றார். ஆண்டாள் எம்பெருமானின் அருளால் கருவுற்று இரண்டு ஆண்மகவுகளைப் பெற்றெடுத்தாள். ஆழ்வானும் தாம் பெற்ற குழந்தைகளுக்கு நாமகரணம் செய்ய ஆசாரியனை வேண்டினார். எம்பார் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வர வேதவியாச பட்டர், பராசர பட்டர் என்னும், திருநாமங்களை எதிராசன் சூட்டி மகிழ்ந்தார். வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த சிசுக்களில் பராசரபட்டர் என்ற குழந்தையை ஸ்ரீரங்கநாதர் தமது சுவிகாரபுத்திரனாக ஏற்றுக் கொண்டார்.
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்றபடி பட்டர் ஐந்து வயதிலேயே திருவாய்மொழியில் வரும் சிறு மாமனிசர் என்ற பதத்தைக் கூறி சிறு என்பது சிறியது. மா என்றால் பெரியது. எப்படி எதிர்மறையான இவை ஒருவரிடம் ஒன்றாகப் பொருந்தியிருக்கும்? என்று பட்டர் கேள்வி கேட்டபோது வியப்படைந்த தந்தை கூரத்தாழ்வான் அதற்குரிய விளக்கங்களையும் எடுத்துக் கூறினார். ஆகிருதியில் (உருவத்தில்) பெரியவராக இருப்பவரை அப்படிக் கூறி வணங்குகிறோம் என்று கூறினார். ஒரு சமயம் மற்ற பையன்களுடன் மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார் பட்டர். அப்போது சர்வக்ஞபட்டர் என்பவர் பல்லக்கில் பவனி வந்து கொண்டிருந்தார். அவருடைய சீடர்கள் விருதுகள் சொல்லிக் கொண்டு பின்னே வந்தனர். பட்டர் தன் சிறு கரங்களில் மண்ணை அள்ளி வைத்துக் கொண்டு இதற்குள் எவ்வளவு மண் இருக்கிறது என்று கூற முடியுமா? என்று கேட்க, சர்வக்ஞரும் சிரித்து விட்டு பதில் பேசாதிருந்தார். பையன் ஒரு கைப்பிடி மண் என்று கூறத் தெரியாமல் சர்வக்ஞர் பட்டர் என்று பெயர் கொண்டு, செல்லுதல் தகுமோ? என்று கேட்கவும் பையன் யார் குழந்தை என்று விசாரித்து மகிழ்ந்து பல்லக்கில் ஏற்றி வீட்டுவாசலில் இறக்கி விட கண்ணே என்று ஆண்டாள் உட்சென்று திருஷ்டி கழித்தார்.
மகாபுத்திசாலியாகவும், ஏகசந்தக்கிரகியாகவும் (தன் தந்தையைப் போல) விளங்கிய பட்டருக்கு ஆழ்வானும் எம்பாருமேவேதம் முதல் அனைத்து சாஸ்திரங்களையும் கற்பிக்க எதிராஜர் நியமனம் செய்தார். ஒரு சமயம் பட்டர் பகவத் சந்நிதியில் திரைசாத்தியிருக்கும் போது, நெருங்கி சமீபம் வரும் ஒரு குரல் யாரது? வெளியே போ என்று ஆணையிட பட்டரும் உடன் விலகி வெளியே வந்து விட்டார். சில நொடியில் மீண்டும் யாரது பட்டரா? உள்ளே வர வேண்டும் என்று குரல் ஒலித்தது. வெளியே போம் என்று சொன்னபோது நினைத்ததென்ன? என்று பெருமாள் வினவ, இன்று பகவானும், பிராட்டியும் ஏகாந்தமாக இருக்கிறார்கள் என்று எண்ணினேன். இதற்கு முன் நினைத்தது என்ன? என்று விடாப்பிடியாக எம்பெருமானும் வினவ, ஆழ்வானும் ஆண்டாளுமாக எண்ணினேன் என்றார் பட்டர். பட்டரே இது நம் ஆணை எப்பொழுதும் இதுபோலவே நினைத்து இருக்கக்கடவீர் என்று நியமித்தருள, பட்டர் பெருமாளின் சத்புத்திரர் என்ற விஷயம் மேலும் உறுதியாயிற்று.
பட்டருக்கு வயது வந்தவுடன் விவாகம் செய்து வைக்க எண்ணினார் ஆழ்வானும் ஆண்டாளும் பெரியநம்பிகள் <உறவினரின் பெண்ணை பராசரபட்டருக்கு திருமணம் முடிக்க அவர்கள் முனைந்தபோது, புது சம்பந்தமாக இது இருப்பதால் எனக்கு சம்மந்தமில்லை என்று பெண்ணைப் பெற்றவர் மறுத்துவிட்டார். ஆண்டாள் மனம் நொந்து பெருமாளிடம் விண்ணப்பம் செய்தாள். ஆழ்வான் நிச்சிந்தையாக ஈச்வரனின் குடும்பக் கவலைகளை ஏன் இழுத்துப் போட்டுக் கொண்டு, கவலைப் படுகிறாய்? எல்லாம் எம்பெருமானே பார்த்துக் கொள்வார் என்று கூறிவிட்டார்.
அன்று இரவே, அரங்கன் பெண்ணைப் பெற்றவர் கனவில் தோன்றி உமது இரண்டு பெண்களையும் பட்டருக்கே மனம் முடியுங்கள், பட்டர் என்னுடைய ஸ்வீகாரப்புத்திரன் என்பதால் எங்கள் குலமரபுப்படி, உபயநாச்சியாரோடு இருக்கும்படித் திருக்கல்யாணத்தை முடித்து வையுங்கள் என்றார். அதன்படி தனது இரு குமாரத்திகளையும் பட்டருக்கே துணைவியாகத் திருமணம் செய்து மகிழ்ந்தார். ஆழ்வான் பட்டினி கிடந்து அன்று நாம் அனுப்பிய பிரசாதத்தை உண்ட இந்த தம்பதிகள் நமது சங்கல்பத்தால் இரண்டு குமாரர்களைப் பெற அவற்றில் ஒன்றை நமக்காக்கிக் கொண்டோம் என்று உகப்புடன் பெருமாள் கூறிய செய்திகள் அனைத்தையும் எதிராஜர் சந்நிதியில் ஆழ்வான் விஞ்ஞாபனம் செய்ய குருநாதரும் அகமகிழ்ந்தார்.
ஒரு சமயம் ஸ்ரீரங்கத்தில் வைணவர்கள் பட்டரை எதிர்கொண்டு அரங்க நகரப்பன் சன்னதிக்கு அழைத்துச் சென்றார்கள். அரங்கனை மங்களாசாசனம் பண்ணிய பின் மாலை பரிவட்டம் முதலிய மரியாதைகள் செய்து அவர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். தாயாகிய ஆண்டாளைச் சேவித்து ஆசி பெற்ற பின் எப்பவும் போல, சிஷ்யர்களுக்கு தர்சன கிரந்த <உபதேசங்களைச் செய்து கொண்டிருந்தார். இதற்கிடையில் கங்கோத்தரியில் வேதாந்த மார்க்கம் மாறியபின் பரம வைஷ்ணவரான பட்டர் திருவடிகளே கதியெனயிருந்த தானிஜ், ஒருநாள், இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் மிகுந்த பசியோடு அவர் கிருஹத்திற்குச் செல்ல, உணவிட மறுத்த அவரது மனைவிமார்கள் அங்கு அன்னமில்லை நீராடும் இடத்திற்குச் செல்லுங்கள். அங்கே உங்கள் வேதாந்தி இருக்கிறார் என்று நிஷ்டூரமாகச் சொல்ல, வேதாந்தி மனம் கலங்கினார். தமது சொத்துக்களை மூன்று பாகமாக்கி அதில் இரண்டு பங்கை தன் மனைவியர் இருவருக்கும் தந்து விட்டு தன்னுடைய பங்கை ஓர் ஒட்டகத்தில் ஏற்றிக் கொண்டார்.
சன்யாச ஆசிரமத்தையும் ஏற்றுக் கொண்டு ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் சிறுபுத்தூருக்கு எழுந்தருளினார். பரமபாகவத சிகாமணியான அனந்தாழ்வான் முன்பு பட்டரை எதிர்கொண்டது போலவே இவரையும் எதிர் கொண்டு வரவேற்றார். ஸ்வாமி சுகுமார மனோகரனாக இருந்த தேவரீர் இப்படிச் செய்யலாமே? வேர்த்தபோது நீராடி, பசித்தபோது அமுதுண்டு. பட்டர் திருவடிகளே சரணம் என்று இருந்ததால் உம்மைப் பரமபதத்திலிருந்து தள்ளி விடுவார் உண்டோ? என்று கேட்டு அளவளாவி உணவிட்டு உபசரித்து மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார்.வேதாந்தி தனது மூட்டை முடிச்சுகளுடன் பயணகதியில் பட்டர் திருமாளிகை அடைந்து தனது குரு நாதரைத் தண்டனிட்டு, தான் கொண்டு வந்த தனங்களை அவரது திருவடிகளில் சமர்ப்பித்தார். பட்டர் இதெல்லாம் என்ன? என்று கேட்டார். வேதாந்தி வீட்டு விஷயங்களையெல்லாம் விஸ்த்தாரமாக எடுத்துக்கூறி பசியோடு வந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அன்னம் மறுக்கப்படும்போது, அந்த கிருகஸ்தாஸ்ரமத்தில் என்ன பயன் என்று தேடி அவர்களின் பங்கை அளித்து விட்டு அடியேன் துறவு பூண்டு வந்துள்ளேன் என்று விண்ணப் பித்தார். அதை ஸ்வாமியின் திருவுள்ளப்படியே உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று விண்ணப்பித்தார். அதை ஸ்வாமியின் திருவுள்ளப்படியே உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று விண்ணப்பித்தார். வேதாந்தியும் அவ்விதம் செய்ய அந்தத் திரவியம் சீண்டுவாரின்றி அங்கே போட்டபடியே கிடந்தது. ஒரு நாள் பட்டர் நீராடச் சென்றபோது, இந்தத் திரவியக் குவியல் ஏது? என்று வினவ, வேதாந்தியும் விபரம் கூறினார்.
இந்தத் திரவியம் கொண்டு நந்தவனம் அமைத்து, மேற்கொண்டு பணம் இருந்தால், ததியாராதனம் செய்யக்கடவீர் என்று நியமிக்க அதன்படி நந்தவனம் அமைத்து பகவானுக்கு ததியாராதனம் செய்து வந்தார். அவரது குருபக்தியையும், வைணவ நெறியின் பால் கொண்டிருந்த எல்லையற்ற பக்தி விசுவாசமும் கண்ட பட்டர் அவரை அன்போடு அணைத்து நம் ஜீயர் என்ற நாமம் சூட்டினார். அவரை எக்கணமும் தம்முடன் பிரியாமல் இருக்க பணித்து சகல சாஸ்திரங்களையும் குளிரக் கடாக்ஷித்து, பட்டரைப் பற்றிக் கூறும்போது நஞ்சீயர் பட்டர் பிரபாவமும் நஞ்சீயரைப் பற்றி நவிலும் போது பட்டரின் ஆசாரிய விசேஷமும் வெளிப்படுகின்ற அதிசய குருபரம்பர வைபவமாகும். நஞ்சீயர் ஒருமுறை ஒரு சந்தேகம் கேட்டார். நம் பெருமாள் இங்கே சந்திரப்புஷ்கரணிக்கரையிலே கண் வளர்கிறாரே அதன் திருவுள்ளக்கிடக்கை என்ன வென்று, பட்டர் மறுமொழி பகர்ந்தார். நாராயணா, மணிவண்ணா என்று கூக்குரலிட்டபின் கஜேந்திரனைக் காக்க எழுந்தருளி வந்தார் எம்பெருமான். இங்கே நான் கூப்பிடுவதற்கு முன்னாலேயே தயாராக அவர் ரட்சகம் செய்யக் காத்துக் கண்வளர்கிறார் என்றார்.
பின்னொரு சமயம் பட்டரும் நஞ்சீயருடன் சேதுஸ் நானம் செய்ய எண்ணினார். செல்லும் வழியில், ஓர் இரவு களைப்பு மிகுதியினால் பட்டர் நஞ்சீயரின் மடியில் தலை வைத்து கண் துயின்றார். குருநாதர் தூக்கம் கெடுக்கக் கூடாது என்பதற்காக நஞ்சீயர் கால் களையோ உடம்பையோ சிறிதும் அசைக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார். ஒரு சிஷ்யன் தன் ஆசானிடம் எப்படியிருக்க வேண்டுமென்ற உதாரண புருஷராயிருந்தார். ஆளவந்தாருக்கு ராமானுஜமுனி ஏகலைவன் என்று எம்பார் ஒருமுறை கூறியது இங்கும் பொருத்தமாக (வேறு ஒரு பொருளில்) பட்டரின் ஏகலைவனாக நஞ்சீயர் திகழ்ந்தார் எனலாம். கூரகுலோத்மம் என்ற ஊரிலே பட்டர் ஒரு சமயம் தங்கியிருந்தபோது அங்கு கூரகுலோத்மதாசரின் நந்தவனத்தில் பட்டரின் குடும்பத்தார் புழங்க, அதைப் பராமரிக்கும் காவலர்கள் அதைத் தடுத்தனர். அதைக் கேட்ட கூரகுலோத்தமதாசர் (இவர் கூரத்தாழ்வாருக்கும் பட்டருக்கும் சிஷ்யராக இருந்த பெரியவர். இந்த நந்தவனத்தை ஏற்படுத்தி நிர்வகிப்பவர். ஏகாங்கிகளை கோபித்து இது முற்றிலும் ஆசாரியர் குடுப்பத்தின் உகப்பிற்காகவே உள்ளது பட்டர் விரும்புவதால் பெருமாள் கைங்கரியத்துக்கும் பயன்படுகிறது என்று கூறினாராம். (வார்த்ததாமாலை-177ம் வார்த்தை)
திரிபுவன வீரதேவன் என்கிற காஞ்சிமன்னர் பட்டரின் வாக்குவன்மை மற்றும் ஆன்மீக மேன்மையை உணர்ந்து தமது அரண்மனைக்கு வந்து போகுமாறு தன் விருப்பத்தைத் தெரிவிக்க பட்டரும் அன்புடன் சிறிய பதிலை அந்த மணிப்பிரவாளத் தமிழிலே தருகிறோம் படித்துச் சுவையுங்களேன். திரிபுவன வீரதேவன் பட்டருடைய சபிஜாத்யம் கண்டு நீர் நம் பக்கல் ஒருநாள் வந்து போவீர் என்று அபேக்ஷிக்க பள்ளி கொள்ளுகிறவர் கை மறுத்தால், உன்னுடைய வாசலொழியப் போக்குண்டோ? என்றருளினார். எவ்வளவு சமத்காரமான பதில்கள். அரங்கன் கைவிட்டு விட்டால், நீதானே கதி என்று உயர்த்துவது போல் மன்னனைக் கூறி தனது மறுப்பையும் அதிலேயே தெரிவித்த நேர்த்தி, குரு மணிக்கு மேல் பதக்குண்டு என்று கூறிய கூரேசரின் அருமைப்புதல்வரல்லவா பட்டர்?
குருபரம்பரா பிரபாவத்திலும், வார்த்தா மாலையிலும் இடம்பெற்றுள்ள ஸ்ரீவைஷ்ணவ லட்சணத்தைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வது சுவையானது. பட்டரை ஆச்ரியித்த ஆர்வமுடைய ஸ்ரீவைஷ்ணவரை நோக்கி, நீர் அனந்தாழ்வானிடம் சென்று ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் இருக்கும்படி என்ன வென்று தெரிந்து வாரும் எனப் பட்டர் ஆக்ஞாபித்தார். அந்த அடியாரும் அதைச் சிரமேற் கொண்டு அனந்தாழ்வான் திருமாளிகைக்குச் செல்ல அப்பொழுது ததியாராதனை நடைபெற்று வந்தது. வந்தவர் பெருமையுடன் ஒரு பக்கம் காத்திருந்தார். பந்தி முடிந்தவுடன் வந்த விருந்தினரை ஆழ்வான் உள்ளே அழைத்துச் சென்று அன்புடன் அமுது படைத்து விபரம் கேட்டார். வைணவர் நான் பட்டரால் அனுப்பப் பட்டேன் என்றும் வைஷ்ணவ லட்சணங்களைக் கேட்டு உம்மிடம் தெரிந்து வரச் சொன்னார். ஆசாரியர் பவ்வியமாக மொழிந்தார்.
அனந்தாழ்வான் ஒரு புன்முறுவலுடன் இது மொழிந்தார். கொக்கு போல, கோழி போல, உப்பு போல உம்மைப் போல இருக்கும் என்று அவரிடம் விண்ணப்பம் செய்யுமென்று அருளினார். இதன் பொருள் நீர்க்கரையில் நின்று கொண்டிருக்கும் கொக்கு தனக்கு ஏற்ற மீனுக்காக காத்திருக்குமாப் போல, நீர் வண்ணனிடம் ஆசார அபசாரங்களை ஒதுக்கி, பாகவத கைங்கரியமென்ற பரம புருஷார்த்தத்தையே வைஷ்ணவன் கேட்டுப் பெறுவான். கோழி எப்படி குப்பையைக் கிளரி வேண்டாத விஷயங்களைத் தள்ளி தனக்கு ஏற்ற நெல்மணிகளையே தெரிந்து எடுத்துக் கொள்வது போல அவனும் சாஸ்திரங்களைத் துருவித் துருவி தனக்கு உரியத் தரமான ஸத் விஷயங்களையே ஸ்வீகரித்து பலன் பெறுவான்.
உப்பும் தான் சேர்ந்த உணவின் சுவையைக் கூட்டி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுவது போல, ஸ்ரீவைஷ்ணவர்களும் தன்னைச் சார்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் தன்னைச் சார்ந்த அடியார்களுக்கும் ப்ரயோஜனவஸ்து வாக விளங்கித் தன்னை முன்னிருந்துக் காட்டிக் கொள்ளாமல் பாகவத சேவையில் கரைந்து விடுவர் என்றும் கூறி, அனந்தாழ்வான் இவைகளுக்கு திருஷ்ட்டாந்தமாக உம்மைப் போல் இருப்பான் என்று வந்தவரைக் குறிப்பிட்டு இந்த மூன்று நியமங்களும் பொருந்திய உத்தம ஸ்ரீவைஷ்ணவராக அவரை மேம்படுத்தி உரைத்தது மிகவும் விசேஷமாகும்.
வீரசுதந்தரபிரம்மராயன் என்கிற கூரத்தாழ்வானின் சிஷ்யன், மதில்சுவர் எழுப்பும்போது பட்டரின் ஆணையையும் மீறி, பிள்ளை பிள்ளையாழ்வான் என்கிற இன்னொரு கூரத்தாழ்வான் சிஷ்யரின் கிருஹத்தை இடித்து விட்டுக் கட்டிவிட, மனம் வருந்திய பட்டர், ஸ்ரீரங்கத்தை விட்டு திருக்கோட்டியூர் சென்று அங்கு பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் வீரசுதந்தர பிரம்மராயன் இறந்துவிட பட்டருடைய தாயார் ஆண்டாள் மிக வருந்தினார். ஆழ்வாரின் சம்பந்தமுடைய பிரம்மராயன் இகலோக வாழ்விலும் சுகப்படாது பரலோகத்திலும் நரகம் சென்று துன்பப்படயிருப்பதை எண்ணியே வருந்தினார். பட்டரின் சர்வக்ஞ அறிவைப் பரிசோதிக்கவே பல வித்வான்கள் கூடி, விவாதம் செய்தனர். ஆனால் வெற்றி கிடைக்காமல் தோல்வியைத் தழுவி மேலும் பட்டரைச் சோதிக்க ஒரு குடத்தில் பாம்பை விட்டு அழைத்துக் கொண்டு வந்து, இதில் என்ன இருக்கிறது என்று கேட்க, அவர்கள் குடத்தின் வாயைக் கவிழ்த்ததும் ஒரு பாம்பு வெளியே சீரிக் கொண்டு வெளி வந்தது. இது கொற்றக் குடையா? என்று கேலியாகக் கேட்டனர். பட்டர் சொன்னார். ஆம் அதிலென்ன ஐயப்பாடு? சென்றால் குடையாம் என்றல்லவா ஆழ்வார் பாசுரம் உள்ளது என்று கூறியவுடன் அவர்கள் யாவரும் வெட்கித் தலை குனிந்தனர்.
திரிபுவன வீரதேவன் என்ற காஞ்சி மன்னன் பட்டரின் வாக்குவன்மை மற்றும் ஆன்மீக மேன்மையை உணர்ந்து தனது அரண்மனைக்கு வந்து தமது விருப்பத்தைத் தெரிவிக்கப் பட்டரும் அன்புடன் கூறிய பதிலை அந்த மணிப்பிரவாள நடையிலே தருகிறோம் படித்துச் சுவையுங்களேன் என்றார். ஒரு சமயம் பட்டர் திரும்பும் வழியில் ஓர் வேடன் குடிலுக்கும் இருவரும் சென்றபோது, அவன் அவர்களுக்கு உபசரனை செய்தான். அப்பொழுது பட்டர் கூறினார். ஐயரே இவன் நம்மை உபசரிப்பது நம் பெருமையை உணர்ந்தோ வேறுலாபங்கள் கருதியோ இல்லை. சரண்யனான பகவான் தன் அபிமானத்தால் ஒதுங்கினவரை ஏற்றுக்கொள்ளாமல்யிருப்பானா? என்று கூறி வேடனிடம் வேறு ஏதாவது விஷயம் உண்டா எனக் கேட்டபோது அவன் கூறினான். சாமி இன்று ஓர் அதிசயம் நடந்தது. வழக்கம் போல் நான் வேட்டையாடும்போது ஒரு முயல்குட்டியைப் பிடித்து விட்டேன் என்றான் வேடன். அவர்கள் இருவருக்கும் இது ஆச்சர்யம் விளைவித்தது. மாமேகம் சரணம் வ்ரஜ என்ற இந்த முயலுக்கும் யாரும் உபதேசிக்கவில்லை. ஆனாலும் சரணாகதியும், ரக்ஷணமும், இரண்டுமே பலிதமானது. என்னே! என்று பட்டர் நஞ்சீயரிடம் கூறி சந்தோஷம் கொண்டார்.
எம்பெருமானார் நியமனப்படி பட்டர் சாரதா பீடத்திற்குச் சென்று ஸ்ரீபாஷ்யத்தை ஸ்ரீசாரதாதேவிக்கு காட்டி அவள் அனுக்கிரகம் பெற்று மீண்டதும் திரும்பி வரும் வழியில் திருவேங்கடமுடையானைச் சேவித்து வரும் வழியில் மனநிலை சரியில்லாத பெண்ளுக்கும் அனுக்கிரகம் செய்திருக்கிற செயல்களை குருபரம்பரை நூல்கள் தெரிவிக்கின்றன. பட்டருக்கு இரண்டு தேவியர்கள். இப்படி இருபக்கமும் இருசர்ப்பங்களை வைத்துக் கொண்டு சம்சாரமாகிய கடலை எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று குரு பக்தர் கேலியாகக் கேட்க பட்டரும் அயராமல் அந்த இரண்டு சர்ப்பங்கள் சீறும்போது அவைகளின் செருக்கை அடக்க வானத்தில் பறக்கும் வைனதேயன் இருக்கிறான். நம்மால் ஆவதென்ன? என்று கூறி பெருமாளைப் பரவினார்.
ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்திலே கைசிக துவாதசி நாளில் கைசிக புராணத்தை பட்டர் உபன்யாசம் செய்த போது பெரியபெருமாள் மிகவுகந்து திருமாலை திருப்பரிவட்டம் திருவாபரணம் இவற்றை அருளியதோடு உமக்கு நாம் மேலை வீடு தந்தோம் என்றிட, மகா பிரசாதம் என்று பட்டர் அதனை ஏற்றுக் கொண்டார். பெரிய பெருமாளையும் எம்பெருமாளையும் சேவித்து நியமனம் பெற்று தம் திருமாளிகைக்கு எழுந்தருள தாயார் அரங்கனைச் சேவிக்க, அவரும் நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் என்று ஆசிர்வதிக்க பட்டர், யாம் வேண்டுவதும் அதுவே எனக் கூறி அமைந்தார். பட்டர் திருமாளிகைக்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் கூடி அமுது செய்ய பெருந்திரளாகக் குழுமினர். பட்டர் திருநெடுந்தாண்டகத்துக்கு அர்த்தம் அருளிச் செய்தார். அஞ்சிறைப்புள்ள என்கிற பாசுரத்தை அனுசந்திக்கும்போது திருவேங்கட முடையான் கருடாரூடராய் வானில் காட்சியளித்தருள, பட்டரும் ஆனந்தப்பட்டார். பறவை ஏறும் பரம் புருடா என்கிற பாசுரத்தை இருமுறை அநுசந்தானம் செய்து சிரசின் மீது கைகூப்பிக் கபாலம் வெடித்து திருநாட்டிற்கு எழுந்தருளினார். தாயார் ஓடோடி வந்து அவரைத் தாங்கிப்பிடித்தார். நஞ்சீயரும் மற்றய சீடரும் வேரற்ற மரம் போல் சாய்ந்து கண்ணீர் பெருக்கினார். ஸ்ரீராமப்பிள்ளையக் கொண்டு சரமக்கிரியைகளை முறையாக நஞ்சீயர் செய்தார். பட்டர் அருளிச் செய்த கிரந்தங்கள், விஷ்ணு சகஸ்ரநாம பாஷ்யம், அஷ்டச்லோகி, ஸ்ரீகுணரத்ன கோசம், ஸ்ரீரங்கராஜஸ்தவம் முதலியன.
திங்கள், 21 செப்டம்பர், 2020
விநாயகரின் எட்டு அவதாரங்கள்
விநாயகரின் எட்டு அவதாரங்கள் என்ன என்பது தெரியுமா?
விநாயகரின் எட்டு அவதாரங்கள் என்ன என்பது தெரியுமா?
நம்முடைய முதன்மைக் கடவுளான "விநாயகரின் எட்டு அவதாரங்களையும் முட்கல புராணம்" கூறுவது என்னவென்று இப்பதிவில் பார்ப்போம்.
விநாயகரை வக்ரதுண்டா, லம்போதரா, கஜனம் என பல பெயர்களைக் கொண்டு அவர்களை அழைக்கப்படுகிறது. இவ் வடிவங்களை இந்தியாவில் பல இடங்களில் அவர்களை வைத்து வழிபாடு இன்றுவரை செய்து வருகிறார் ,ஆனால் இருப்பினும் விநாயகரின் வடிவங்களைப் பற்றி பல கருத்துக்கள் இன்று வரை நிலவி வருகிறது ,விநாயகர் "புராணத்தின்" படி விநாயகர் நான்கு வடிவங்களைக் கொண்டுள்ளார். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு யுகத்தை சார்ந்தது ஆகும். இருப்பினும் அவை எட்டு உருவடிவங்களைக் கொண்டுள்ளார், என்றும் அதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட வழிபாடு உள்ளது என்று முட்கல புராணம் கூறுகிறது .
8 வடிவிலான விநாயகருக்கு வெவ்வேறு விசேஷங்கள் உள்ளது, அதில் ஒவ்வொரு வடிவத்தில் மாறுபட்ட வடிவம் கொண்டவை அதில் சரும நிறம், வாகனம் அவர் கைகளில் வைத்திருக்கும் சில பொருட்கள் இது போன்ற அனைத்துமே வேறுபட்டிருக்கும், ஒவ்வொரு உருவத்திற்கும் மாறுபட்டு வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இந்த எட்டு வடிவத்திற்கும் உண்டான காரணங்களையும் என்னவென்று இப்பதிவில் காணலாம்.
அசுரர்கள் அல்லது நம்மை சுற்றி உள்ள எதிர்மறை ஆற்றல்களை அளிப்பதற்கு விநாயகரின் இந்த எட்டு வடிவமும் ஒவ்வொரு கணங்களையும் பெற்றிருக்கும்.
வக்ரதுண்டா
வக்ரதுண்டா என்பதுதான் விநாயகரின் முதல் வடிவம் வக்ரதுண்டா என்றால் "வளைந்த தும்பிக்கையை" குறிப்பதாகும். இது மட்சர்யசுரா என்றால் அரக்கனை கொல்லவே இந்த அவதாரத்தை எடுத்தார் , விநாயகர் மட்சர்யசுரா என்றால் மனிதர்களில் உள்ள பொறாமை குணத்தை குறிப்பதாகும், அந்த பொறாமையை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவது எப்படி என்று இவ்வடிவம் குறிக்கும். இந்த அவதாரம் அவர் சிங்கத்தின் மீது வீற்றிருப்பார்.
ஏகடண்டா
இது விநாயகரின் இரண்டாவது வடிவமாகும். ஏகடண்டா என்றால் "தந்தம்"என்று பொருளாகும். இந்த அவதாரம் மடசுரா என்ற அரக்கனை கொல்லவே இந்த அவதாரத்தையும் விநாயகர் எடுத்தார். இதில் சக்தி மற்றும் இதர காரணங்களால் மனிதர்கள் மனதில் குடிபுகும் நஞ்சை குறிப்பதாகும். மனிதர்களில் உள்ள நஞ்சை நீக்கி வெற்றிப்பெற ஏகடண்டா பிறந்தார். இந்த அவதாரம் எலியின் மீது வீற்றிருப்பார்.
மகோதரா
இதுதான் விநாயகரின் மூன்றாவது பெரிய தந்தையை கொண்ட வடிவமாகும் இதில் எண்ணமயக்கத்தின் அரக்கனான மோஹசுராவை கொல்வதற்காகவே இந்த அவதாரம் எடுக்கப்பட்டது .
இதில் "அறியாமையை ஒழித்து எதிர்மறையான எண்ணங்களை அழித்து விடவே இந்த வடிவம்" எடுக்கப்பட்டது .
இந்த அவதாரமும் எலியின் மீது வீற்றிருப்பார்.
கஜானன்
கஜானம் என்றால் "யானை முகத்தனை " குறிப்பதாகும். இந்தத் தோற்றம் "பேராசையின் அரக்கனை அழிக்கவே" இந்த அவதாரத்தை எலியின்மீது வீற்றிருப்பார்.
லம்போதரா
இதுதான் விநாயகரின் ஐந்தாவது வடிவமாகும் லம்போதரா என்பது "பானை தந்தத்தை" கொண்டதாகும். இந்த வடிவம் கொண்ட விநாயகர் கோபத்தில் அசுரனான க்ரோதாவை அழித்தார், இந்த அவதாரமும் எளிய மீது தான் வீட்டில் இருப்பார்.
விகடா
விகடா என்றால் எப்போதும் இல்லாததை போன்ற வடிவம் கொண்டதாக இருக்கும், இந்த வடிவமானது "காமவெறி அரக்கர்களை அழிக்க" இந்த அவதாரம் எடுத்து வைத்தார். இந்த அவதாரத்தில் மயிலின் மீது அவர் அமைந்திருப்பார்.
விக்னராஜா
இந்த தோற்ற அமைப்பு கொண்டது ஈகோவின் அரக்கனான "மாமாவை" அழிக்கவே இந்த அவதாரம் எடுத்துரைத்தார். விநாயகர் விக்னராஜா என்றால் தங்களை நீக்குபவர் என்று பொருள் ஆகும். இது சேஷா
என்ற நாகத்தின் மீது அமர்ந்திருப்பார்.
தும்ரவர்ணா
இதுதான் விநாயகர் "எட்டாவது அவதாரம்" ஆகும் தும்ரவர்ணா என்றால் "புகை நிறம்" கொண்ட வடிவமாகும், இந்த அவதாரம் ஆணவ அரக்கர்களை அபிமனராசுவை அழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தார், இந்த அவதாரமும் எலியின் மீது தான் அமைந்திருப்பார்.
சற்குருதாசன்
ராமமூர்த்தி BSNL
நாடி ஜோதிடர்
9444113777
9790901567
வரகூர் ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோவில்
தஞ்சாவூருக்கு அருகில் உள்ளது வரகூர். இங்கே அற்புதமான கோயிலில் அழகுற வீற்றிருக்கிறார் பெருமாள். ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள், ஸ்ரீவராகமூர்த்தி, ஸ்ரீகண்ணபிரான் என மூன்று திருக்கோலங்களில் இங்கே அருள்புரிகிறார். பிரசித்தி பெற்ற திருத்தலம் இது.
பிள்ளை பாக்கியம் இல்லையே என்று ஏங்குவோர், வழிபடக்கூடிய திருத்தலம். இங்கே சுவாமியின் பாதத்தில் வெள்ளிக்காப்பு வைத்து வேண்டிக்கொள்வது வழக்கம். விரைவில் குழந்தைபாக்கியம் கிடைக்கப் பெறலம் என்பது ஐதீகம்.
மூலவர் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள். இடது மடியில் மகாலட்சுமித் தாயாரை அமர்த்திக்கொண்டு, காட்சி தருகிறார். உத்ஸவரின் திருநாமம் - ஸ்ரீவெங்கடேசப் பெருமாள். ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் காட்சி தருகிறார். உத்ஸவரே பிரசித்தம் என்பதால், வெங்கடேச பெருமாள் கோயில் என்றே அழைக்கின்றனர் பக்தர்கள். இந்தக் கோயிலின் இன்னொரு விசேஷம்... துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், ஜாதிக்காய் மற்றும் கிராம்பு முதலான மூலிகைகளைக் கொண்டு இடித்துச் செய்த பொடியானது, பெருமாளின் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இங்கே, கிருஷ்ணரும் விசேஷமானவர். நாராயண தீர்த்தருக்கு பெருமாள் ஸ்ரீகிருஷ்ணரூபமாக காட்சி தந்தருளியதால், மேலும் கிருஷ்ண ஜயந்தி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் ஆச்சரியம்... கிருஷ்ணருக்கு சந்நிதி இல்லை.
அப்படியெனில் கிருஷ்ணரே இல்லாமல் கிருஷ்ண ஜயந்தி விழா எப்படி?
ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாளையே கிருஷ்ணராக பாவித்து வழிபடுகின்றனர். ஜயந்தி விழாவின் போது, சுவாமியின் மடியில் குழந்தை கிருஷ்ணரை கிடத்துவதும் பெருமாளையே, யசோதையாக அலங்கரிப்பதும் வேறு எந்தத் தலத்திலும் காணக் கிடைக்காத ஒன்று.
வரகூர் லட்சுமி நாராயணப் பெருமாளை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் தகையவில்லையே என வருந்துவோர், பெருமாளை நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். துளசி தீர்த்தம் பருகுங்கள். புளியோதரை நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். முடிந்தால், நான்கு குழந்தைகளுக்கு புத்தாடை, நோட்டு பேனா வழங்குங்கள்.
உங்கள் சந்ததியை சிறக்கச் செய்வார். சந்தான பாக்கியம் தந்தருள்வார்.
சுமங்கலி பாக்யம்
சுமங்கலி பாக்யம்
திலிபச்சக்கரவர்த்தி ஆழ்ந்த வேதனையடைந்தார். காட்டுக்கு வேட்டைக்கு வந்த அவர், பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். ஆனால், அது ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினி (ரிஷியின் மனைவி) வடிவெடுத்தது. அந்தப்பெண், அவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட ராஜா, அவளருகே ஓடிவந்தார். ""அம்மா! மான் என்று நினைத்தே அம்பெய்தேன். இப்படி ஆகிவிட்டதே! அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே! '' என்று கண்ணீர் வடித்தார்.
அதுகேட்ட ரிஷிபத்தினி, ""மன்னா! இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும், என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள்,'' என்று அழுதாள்.
மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை... அதிலும் அந்தணப் பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா! ஐயையோ! என்ன செய்வேன்! என் குலகுருவே! வசிஷ்ட மகரிஷியே! தாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்,'' என்று வேண்டினான். வசிஷ்டர் அங்கு தோன்றினார். அந்தப் பெண் அவரது பாதங்களில் விழுந்தாள்.
என்ன நடந்ததென்பதை அறியாத வசிஷ்டர்,""தீர்க்க சுமங்கலி பவ'' என அவளை வாழ்த்தினார்.
""மாமுனிவரே! இதோ! இங்கே இறந்து கிடப்பவர் என் கணவர். அவர் இறந்த பிறகு அபாக்கியவாதியாக நிற்கிறேன்! தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே! இதெப்படி சாத்தியம்!'' என்று வருத்தமாகக் கேட்டாள். வசிஷ்டருக்கு இப்போது தான் நிலைமை புரிந்தது. "தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும், இந்தப்பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும். என்ன செய்யலாம்?' அவர் யோசித்தார். ""பெண்ணே! காவிரிக்கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அருகில் அம்பாள் சிலையும் இருக்கும். அங்கே நீ செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள். அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள். அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் உடலில் தெளி. அவர் பிழைத்து எழுவார். அந்தக் கோயிலில் ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணி, இதே போல உயிர் போன தன் கணவனை எழுப்பினாள். அசுரனுக்கே அருளிய அந்த இறைவன் உனக்கு நிச்சயம் உதவுவான் கிளம்பு என்றார். அந்தப் பெண் மகிழ்ந்தாள். ரிஷிபத்தினி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர். அப்போது அம்பாளும், சிவனும் அவர்கள் முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி, ""அன்னையே! என்னைப் போலும் ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல் நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும் என வேண்டினாள். அம்பாளும் அப்படியே செய்வதாக வாக்களித்தாள். ரிஷிபத்தினியும், முனிவரும் மீண்டும் திலீபனைச் சந்தித்தனர். தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும் படி கூறினர். மன்னனும் அவ்வாறே செய்தான். அதுவே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.
திருவாரூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. இந்தக் கதையைப் படித்தவர்களின் குடும்பத்தில் அகால மரணம் நிகழாது என்பது ஐதீகம். தம்பதி சமேதராய் இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெறுங்கள்..