#நாராயண_பட்டத்ரி
1560 ஆம் ஆண்டு கேரளா பாரதப் புழா ஆற்றின் வடகரையில் திருநாவா என்ற ஊர் அருகே உள்ள மேல்புத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவரது தந்தை மாத்ருதத்தர்
சிறு வயதில் தந்தையே கல்வியை கற்றுக் கொடுத்தார்.
பிறகு
நாராயண பட்டத்ரி ரிக் வேதத்தை மாதவாச்சாரியாரிடத்திலும் தர்க்க சாஸ்திரத்தை தாமோதராச்சாரியாரிடமும் பயின்றார். வ்யாகரணம் என்று சொல்லப்படுகின்ற சமஸ்கிருத இலக்கணத்தை அச்யுதபிஷாரடி என்பவரிடம் பயின்றார்.
குரு
அச்யுதபிஷாரடிக்கு வாதரோகம் இருந்தது.
அவரால் தன் கை கால்களை நகர்த்தக் கூட முடியாது.
அப்படிப்பட்ட நிலையிலும் அவர் தன் சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்.
தினமும் அவரை சீடர்கள் குளிக்க வைத்து அவரைக் கொண்டு வந்து உட்கார வைப்பார்கள்.
அந்த நிலையிலேயே அவர் தன் சீடர்களுக்குப் பாடம் நடத்துவார்.
ஒரு நாள் இவரது குருவான அச்யுதபிஷாரடி இவரை அழைத்து இன்றோடு உன் குருகுல வாசம் முடிகிறது.
உனக்கு சமஸ்கிருதத்தில் அனைத்தும் கற்றுக் கொடுத்து விட்டேன். இனி நீ உன் இல்லத்திற்குச் சென்று திருமணம் செய்து நல்லபடியாக கடவுள் துணையோடு வாழ்வாயாக என்றார்.
பட்டத்ரி அவர் காலில் விழுந்து வணங்கி உங்களுக்கு நான் குருதட்சணையாக எதையாவது தரவேண்டும்? என்றார்.
அப்பொழுது அச்யுதபிஷாரடி எனக்கு எந்த குருதட்சணையும் வேண்டாம். குருவுக்கு யாரும் தட்சணை கொடுக்க முடியாது.
ஒரு குருவுக்கு அவர் சீடன் கொடுக்கும் சிறந்த தட்சணை அவன் கற்ற பாடத்தை மற்றவருக்கும் குற்றம் இல்லாமல் கற்றுக் கொடுப்பதுதான்.
அப்படியும் நீ குருதட்சணை கொடுக்க நினைத்தால், நீ கற்ற சமஸ்கிருதத்தை தட்சணை வாங்காமல் எல்லோருக்கும் கற்றுக் கொடு, அதுவே எனக்குப் போதும் என்று கூறினார்.
பட்டத்ரி குருவிடம், குருவே, நீங்கள் சொன்னது போலவே நான் செய்கிறேன்.
ஆயினும் நான் தங்களுக்கு ஏதாவது குரு தட்சணை தர விரும்புகிறேன் என்றார்.
இதைக் கேட்ட குரு, உன்னால் எனக்கு என்ன தர முடியும் என்று சொல், அதை வாங்கிக் கொள்ள முடியுமா முடியாதா என்று நான் சொல்லுகிறேன் என்று கூறினார்.
குருவே உங்கள் வாத நோயை எனக்கு ஆவாகனம் செய்து கொடுங்கள் வாத ரோக நிவர்த்தி என்ற குருதக்ஷணையை நான் உங்களுக்குத் தர விரும்புகிறேன் என்று கூறினார்.
இதைக் கேட்ட குரு சிரித்துக் கொண்டு ஒரு குருவானவன் தன் சிஷ்யனுக்கு ஆத்ம ஞானத்தையும் கல்வி கேள்விகளையும், சாஸ்திரங்களையும், சகல வித்தைகளையும், கடவுள் பக்தியையும், புராணங்களையும் போதிக்க வேண்டுமே தவிர நீ கேட்டாய் என்பதற்காக நான் என் நோயைத் தரக் கூடாது.
குருவானவர் தன் சீடனை சொந்த மகனாக பாவிக்க வேண்டும். எந்த தந்தையாவது தன் குழந்தைக்கு வியாதியைத் தருவாரா?
என்னுடைய கர்ம பலனால் வந்த இந்த நோய் என்னுடனே போகட்டும். இதை வாங்கிக் கொண்டு நீ அவஸ்தைப் பட வேண்டாம்.
அது மட்டுமில்லை. நான் உனக்கு என் நோயைக் கொடுத்தால் இந்த உலகம் என்னை திட்டும்
எனக்கு உள்ள நல்ல பெயர் அனைத்தும் கெட்டுவிடாதா
ஆகையால் நீ இங்கிருந்து புறப்படு என்றார்.
ஆனால் பட்டத்ரி அதெல்லாம் இல்லை. நீங்கள் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று அவரை வற்புறுத்தினார்.
அதற்கு குரு நீ வியாதியால் கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நீ என்னை விடச் சிறியவன். உன் ஆச்சார்ய பக்தியைக் கண்டு என் மனம் மகிழ்கிறது. உன்னைப் போல் ஒரு சிஷ்யன் கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இருந்தாலும் இது தர்மம் கிடையாது. ஆகையால் நீ கிளம்பு என்று கூறுகிறார்.
அதற்கு பட்டத்ரி குருவே, எனக்கும் உங்களுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது.
நான் உங்களை விட வயதில் சிறியவன். அதனால் இந்த ரோகத்தைத் தாங்கும் சக்தி உங்களை விட எனக்கு அதிகம் இருக்கும்.
அது மட்டுமில்லை, நீங்கள் இந்த வியாதியை எனக்குக் கொடுத்தாலும் கூட நான் இதனால் கஷ்டப்பட மாட்டேன், ஏனென்றால் நீங்கள் ஆச்சார ஸ்ரேஷ்டராக இருக்கிறீர்கள்.
நீங்கள் வைத்தியரிடம் செல்வது கிடையாது. இதற்கு எந்த மருந்து, மாத்திரையும் எடுத்துக் கொள்வது கிடையாது. ஆனால் நான் அப்படி இல்லை. சிறந்த வைத்தியரிடம் காட்டி என் நோயை குணப்படுத்திக் கொள்வேன். அதனால் உங்கள் நோய் என்னிடம் வெகு நாட்கள் இருக்கும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் இன்னும் ஒரு வாரத்தில் நன்கு குணமாகி உங்களை வந்து நமஸ்கரிப்பேன். அதற்கு எனக்கு ஆசிர்வதியுங்கள்.
பட்டத்ரியின் பிடிவாதமான வார்த்தைகளைக் கேட்ட அச்யுதபிஷாரடி தன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்தார். தன்னுடைய ஆத்ம பலத்தால் வருங்காலத்தை நினைத்துப் பார்த்தார்.
சிருஷ்டியின் சூட்சுமம் புரிந்துவிட்டது அவருக்கு. இவையெல்லாம் அந்த இறைவனின் திருவிளையாடலே.... இவனின் பிடிவாதத்திற்குக் காரணம் அந்த குருவாயூரப்பனே என்று அவர் நினைக்கையில் அவர் மனக்கண் முன் கிருஷ்ணன் வந்தான். தலையில் மயில் பீலி அணிந்து பட்டுப் பீதாம்பரம் உடுத்தி, புல்லாங்குழலுடன் நின்று புன்முறுவல் புரிந்தான்.
தான் கண்ட காட்சியைக் கண்டு அச்யுத பிஷாரடி மெய் சிலிர்த்துப் போனார்.
தன் பக்தனுக்காக அந்த மாயக் கண்ணன் என்ன லீலை வேண்டுமானாலும் செய்வான் என்று நினைத்தார்.
அதனால் இதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. இது தெய்வ சங்கல்பம் என்று புரிந்து கொண்டார்.
எனவே, தன் கையில் ஜலத்தை எடுத்து அவருக்கு தன் ரோகத்தை தத்தம் செய்து கொடுத்து விட்டார்.
அடுத்த நிமிஷம் குரு எப்படி இருந்தாரோ அப்படி பட்டத்ரியும், பட்டத்ரி எப்படி இருந்தாரோ அப்படி குருவும் ஆகி விட்டனர்.
உடனே குரு தன் மற்ற சீடர்களிடம், இவனைக் கொண்டு போய் இவனது வீட்டில் சொல்லி விட்டுவிட்டு வாருங்கள்.
ஏனென்றால் படிக்கச் சென்ற பிள்ளை வியாதியோடு வந்தால் அந்த பெற்றோர் மனம் எவ்வளவு பாடுபடும்?
குரு எவ்வளவு சொல்லியும் கேளாமல் குருவை நிர்பந்தப்படுத்தி அவரின் வியாதியை இவன்தான் வாங்கிக் கொண்டு விட்டான் என்று கூறுங்கள்.
அவர்கள் என்னை தப்பாக நினைக்கக் கூடாது என்றார்.
பட்டத்ரியை ஒரு பல்லக்கில் வைத்து தூக்கிக் கொண்டு வந்து அவரது வீட்டில் விட்டனர் சிஷ்யர்கள்.
வீட்டுக்கு வந்த பட்டத்ரியைப் பார்த்த குடும்பத்தினருக்கு குரு மீது மிகுந்த கோபம்.
இவன்தான் கேட்டான் என்றால் அந்த குரு எப்படி ரோகத்தைத் தன் சீடனுக்குக் கொடுக்கலாம்.
மற்ற சீடர்களுக்கு இல்லாத அக்கறை இவனுக்கு ஏன்?
படிக்கச் சென்ற பிள்ளை இப்படி வியாதியுடன் வந்து விட்டானே! என
இவரை அழைத்துக் கொண்டு பிரபல வைத்தியர்களிடம் சென்றனர்.
ஆனால் எங்கு சென்றாலும் அவரது நோயின் வலிமை கூடியதே அன்றி ஒரு துளியும் குறையவில்லை.
அவர் சாப்பிட்ட மருந்து, மாத்திரைகள், சூர்ணத்தினால் எல்லாம் எந்த ஒரு பலனும் இல்லை.
மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டால் உடலில் உள்ள வியாதியின் வலி குறையும் ஆனால் இவருக்கு நாளுக்கு நாள் வலி கூடியது.
கை, கால்களை துளிக் கூட அசைக்க முடியவில்லை. வைத்தியத்தினால் அவர் உடலில் ஒரு முன்னேற்றமும் இல்லை. அவர் குருவிடம் இருந்து எப்படி அந்த ரோகத்தை வாங்கினாரோ அப்படியே இருந்தது.
எல்லா வைத்தியர்களிடமும் காட்டி விட்டு இனி செல்ல கேரளாவில் வைத்தியரே இல்லை என்ற நிலைமைக்கு வந்தாகிவிட்டது.
ஆனாலும் அவர் ரோகம் குணமாகவில்லை.....
இப்பொழுது பட்டத்ரி சிந்திக்க ஆரம்பித்தார்.
நாம் நல்ல சிந்தனையோடுதானே நம் குருவிடம் இருந்து இந்த வியாதியை வாங்கிக் கொண்டோம். ஆனாலும் ஏன் குணமாகவில்லை?!
அதற்கு ஒரே காரணம் நாம் குருவிடம் கர்வமாகப் பேசி விட்டோம். வியாதி போகாததற்கு உங்கள் ஆசாரம் தான் காரணம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. வைத்தியரிடம் சென்றால் தீர்ந்து விடும். ஒரு வாரத்தில் வந்து உங்களை நமஸ்கரிக்கின்றேன் என்று கூறி விட்டேன்.
பகவானிடம் கூட கர்வமாகப் பேசலாம். ஆனால் குருவிடம் கர்வமாகப் பேசக் கூடாது. நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது.
நான் மாபெரும் தவறு அல்லவா செய்திருக்கிறேன்? அதனால்தான் என் வியாதி இன்னும் தீரவில்லை.
தன் குருவை தவறாக பேசியதற்காக பட்டத்ரி மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டார்.
இனி நாம் என்ன செய்வது? இந்த நோயை எப்படிப் போக்குவது? என்று தன் மனதினுள் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
எப்பொழுதுமே வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுபவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போது தான் தன் ஜாதகத்தை நினைப்பார்கள்.
எந்த ஜோசியரிடம் போவது, என்ன பரிகாரம் செய்வது என்று சிந்திக்கத் தொடங்குவார்கள்.
அதுபோலத்தான் இவரும் நினைத்தார்.அதே ஊரில் எழுத்தச்சன் என்று ஒரு பிரபல ஜோசியர் இருந்தார்.
அவர் யார் வீட்டுக்கும் போய் ஜோதிடம் பார்க்க மாட்டார். அவர் வீட்டிற்கு நாம் சென்றால் மட்டுமே ஜோதிடம் பார்ப்பார்.
அவர் #அஷ்ட_மங்கல_ப்ரஸனம் என்று எட்டு விதமான மங்கலப் பொருட்களை வைத்துக் கொண்டு சோழி உருட்டி, அவர்கள் வந்த நேரத்தையும் கணக்கில் வைத்து, அவர்கள் கஷ்டத்தையும் மனதில் நினைத்து அது தீர ஜோதிடம் பார்த்துச் சொல்வார்.
பட்டத்திரியும் செல்ல முடியாது. அவரும் வர மாட்டார். என்ன செய்வது என்று யோசித்தார்.
அவர் தம் குடும்பத்தினரிடம் தன்னை அழைத்துக் கொண்டு செல்லும்படி கேட்டதற்கு, வைத்தியருக்கு செலவு செய்ததே போதும். இன்னும் ஜோதிடருக்கு வேறு செலவா? நீங்கள் இப்படியே இருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி விட்டனர்.
ஆனால் நாளுக்கு நாள் அவரது வியாதியின் தன்மை அதிகரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களில் ஒருவன் கோபால குட்டன்.
சிறு வயது முதலே அந்த வீட்டில் வேலை செய்பவன் அவனுக்கு பட்டத்ரி மீது மிகுந்த பாசம் உண்டு.
அவருக்காக நாம் சென்று அவரது ஜாதகத்தைக் காட்டி பார்த்துக் கொண்டு வரலாம். என்று நினைத்தான்.
ஐயா, நான் வேண்டுமானால் உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் ஜோசியர்கிட்ட காட்டி கேட்டுக் கொண்டு வருகிறேன் என்றான்.
இதைக் கேட்ட பட்டத்ரி மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டு என் குடும்பத்தாரும் உறவினர்களும் கூட முடியாது என்று சொல்லி விட்டபோது நீ எனக்காக செல்கிறேன் என்று சொல்கிறாயே! எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது என்று கூறி தன் ஜாதகத்தை அவனிடம் கொடுத்து அனுப்பினார்.
அவன் சென்று அந்த ஜோதிடரின் காலில் விழுந்து நமஸ்கரித்து, பட்டத்ரியைப் பற்றி முழுமையாகக் கூறி அவருடைய ஜாதகத்தைக் காட்டி, இது என் எஜமானரின் ஜாதகம். அவர் வாத நோயால் வாடுகிறார். அவரால் வர இயலாது. அவர் குடும்பத்தாரும் வர மறுக்கின்றனர். அதனால்தான் நான் வந்தேன். இவர் நோய் தீருமா என்று பார்த்துச் சொல்லுங்கள் என்று கேட்டான்.
அவனுடைய எஜமான விஸ்வாசத்தைப் பார்த்த ஜோதிடர். உனக்காக நான் பார்த்துச் சொல்கிறேன் என்று கூறி பட்டத்ரியின் ஜாதகத்தைப் பார்த்தவர் பிரமித்துப் போனார்.
பின் அவர் சோழியைப் போட்டுப் பார்த்து, அஷ்ட மங்கல ப்ரஸனம் பார்த்து. அவன் வந்த நேரத்தையும் பார்த்து, அவனது உள்ளக் கிடக்கையும் அறிந்து சொல்லலானார்.
உன் எஜமானனுக்குக் கண்டிப்பாக இந்த வியாதி நீங்கும். இதற்குப் பரிகாரம் இருக்கிறது. ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றார்.
உடனே அந்த வேலைக்காரன் ஆவலோடு அப்படியா? என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா, நான் உடனே செய்கிறேன் என்றார்.
அதற்கு எழுத்தச்சர் இந்த பரிகாரத்தை நீ செய்ய வேண்டாம் உன் எஜமானார் தான் செய்ய வேண்டும். திருச்சூர் அருகில் குருவாயூர் என்றொரு பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது. கிருஷ்ணன் பிரத்யக்ஷ பேசும் தெய்வமாக விளங்குகின்ற தலம். குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்த தெய்வம், பெரும் அதிசயங்கள் நிகழ்ந்த தலம். கிருஷ்ணரே ஸ்நானம் செய்த புண்ணியக் குளமான நாராயண சரஸ் உள்ள தலம். அப்பேர்ப்பட்ட குருவாயூருக்கு இவரை நேரே அழைத்துச் செல்.
அங்கு கோயிலுக்கு அருகில் உள்ள நாராயண சரஸ் என்னும் தீர்த்தத்தில் நீராட வைத்து பின் புது வஸ்திரம் அணிவித்து கொடிக்கம்பமாகிய ஜ்வஜஸ்தம்பம் தாண்டி உள்ளே நுழையும் இடத்தில் பகவானுக்கு வலது பக்கம் நமக்கு இடது பக்கம் உள்ள திண்ணையில் அவரை உட்கார வைத்து மத்ஸ்யம் தொட்டுப் பாட சொல் என்று கூறினார்.
இதைக் கேட்ட அந்த வேலைக்காரன் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து விட்டான்.
பட்டத்தரியிடம்
ஐயா, அவர் உங்களுக்கு வியாதி குணமாகும். கண்டிப்பாகப் பரிகாரம் இருக்கிறது என்று கூறினார்.
அதுவும் ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றும் கூறினார்.
ஆனால் அதற்குப் பிறகு அவர் சொன்ன பரிகாரம் தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது என்றான்.
அதற்கு பட்டத்ரி அப்படி என்ன சொல்லி விட்டார்?
என்று ஆர்வமாகக் கேட்க,
அவன் ஜோதிடர் சொன்ன விவரமெல்லாம் சொல்லி புனிதமான குருவாயூரில் தங்களை மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடச் சொல்கிறார்.
அந்தக் கோயிலில் ஒரு சின்னக் குழந்தை அசுத்தம் செய்து விட்டாலே மூன்று மணி நேரத்திற்குக் கோயில் கதவை மூடி புண்யாகவாசனம் என்ற சுத்தி செய்துவிட்டுத்தான் பிறகு திறப்பார்கள்.
அப்பேர்ப்பட்ட பெருமை மிகுந்த கோயிலில், உங்களை மீனை நாக்கில் தொட்டுப் பாடச் சொல்கிறார். அப்படிச் செய்வதற்கு நீங்கள் மேல்புத்தூரிலேயே உங்கள் வாத ரோகத்துடன் இருக்கலாம். நானே உங்களைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஜோசியர் இப்படிச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நான் போயே இருக்க மாட்டேன்.
நான் ஏன் தான் அந்த ஜோசியரிடம் போனேனோ என்று வருத்தப்படுகிறேன் என்றான்.
ஜோசியர் கூறியதன் உட்பொருளைப் புரிந்து கொண்டார் பட்டத்ரி.
நாம் இன்றே குருவாயூர் செல்ல வேண்டும். அதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்யுங்கள் என்றார். இதைக்கேட்ட வேலைக்காரன் நான் கூட வர முடியாது. குருவாயூர் போன்ற புண்ணிய தலத்தை நீங்கள் அசுத்தம் செய்வதை நான் விரும்பவில்லை. நீங்கள் உங்கள் வியாதி குணமாக வேண்டும் என்பதற்காக இதைச் செய்யலாம். ஆனால் இதற்கு உடன்பட என்னால் முடியாது என்று மிகவும் கோபமாகக் கூறினான். அவனை சாந்தப்படுத்திய பட்டத்ரி அப்பா அதற்கு அர்த்தம் அதுவல்ல. மத்ஸ்யம் தொட்டுப் பாடணும் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? சாதாரண மீன் என்று நீ ஏன் நினைத்துக் கொள்கிறாய்? பகவான் குருவாயூரப்பனின் அவதாரங்களில் முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம். அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான். மத்ஸ்யம் தொட்டு என்றால் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரம் முழுவதையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார். அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவ தாரங்களைப் பற்றி குருவாயூரில் பாட வேண்டும். அதனால் இப்பொழுதே என்னை குருவாயூருக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்.
இவருடைய வியாதியால் ஏற்கெனவே நொந்து போயிருந்த உறவினர்கள் இது வேறா என்ற வெறுப்புடன் வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர்.
ஒரு பத்துப் பதினைந்து பேர் அவரை ஒரு பல்லக்கில் வைத்துத் தூக்கிக் கொண்டு குருவாயூர் சென்றனர்.
பட்டத்ரியின் மனம் பல்லக்கை விட வேகமாகச் சென்றது. அந்த குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக அவர் மனம் ஏங்கியது. அவர் மனத்தில் இருந்த பயம் விலகியது.
அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர்.
அவரை அழைத்து வந்தவர்கள் அவரை நாராயண சரஸில் குளிக்க வைத்து புதிய வேஷ்டி உடுத்தி அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி, பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர்.
கிருஷ்ணரை அழகாக தரிசித்தார். பின் அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் பகவானுக்கு வலப் பக்கம் தமக்கு இடப்பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர்.
வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தி கண்ணனிடம், நீ ஒன்றுமே செய்ய வேண்டாம். என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய். உன்னைப் பார்க்க அனுகிரகம் செய். உன் சௌந்தர்ய ரூபத்தை அடிக்கடி பார்க்காமல் நான் எப்படி உன் பெருமையைப் பாட முடியும்? உன் புராணமாகிய நாராயணியம் எழுத முடியும்? அதனால் நீ தரிசனத்தைத் தா என்றார் நாராயண பட்டத்ரி.
என்னால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது. என்று நீ வந்த காரியம் முடிவடைகிறதோ, அன்று தான் உன் வியாதி நீங்கும். நீ மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு கழுத்தை சாய்த்துதான் என்னைப் பார்க்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். எனக்குக் கழுத்தின் இரு பக்கமும் நன்றாகத்தான் இருக்கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும். நான் என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன். என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்து, நீ நாராயணியம் ஆரம்பித்துக் கொள் என்று கூறினார் கிருஷ்ணர்.
இப்பொழுதும் நாராயண பட்டத்ரி மண்டபத்தில் உட்கார்ந்து பார்த்தால் நமக்கு அந்த குருவாயூரப்பன் தெரிய மாட்டான். ஆனால் குருவாயூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து நம்மைக் காணமுடியும். அப்பேர்ப்பட்ட புனிதமான இடமானதால் இப்பொழுது அங்கு ஒரு செப்புப் பட்டயம் வைத்து, நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம் என்று எழுதி வைத்திருக்கின்றனர்
பட்டத்ரி நாராயணியம் எழுதி முடித்தவுடன், இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம். ஆனால் இன்று முதல் இந்த இடம் மட்டும் உனக்கு சொந்தம். இது இனிமேல் பட்டத்ரி மண்டபம் என்று அழைக்கப்படும் என்று கூறினார்.
ஸ்ரீமத் பாகவத சரித்திரத்தை வடமொழி சுலோகங்கள் மூலம் விளக்கிக் கூறி வழிபட்டுத் துதி செய்தார்.
குருவாயூரப்பனே
தன் தலையைச் சாய்த்து பட்டத்ரியை பார்த்து “மீனைத் தொட்டுப் பாட ஆரம்பிக்கலாம்!” என்று உத்தரவு வழங்க, மத்ஸ்யாவதாரம் தொடங்கி, திருமாலின் அவதாரங்களை எல்லாம் தொகுத்து ‘நாராயணீயம்’ என்ற நூலாகப் பாடினார் நாராயண பட்டத்ரி.
நோயின் தாக்கத்தினால் கைகள் எழுத முடியாத நிலையில் பட்டத்திரி சொல்லச் சொல்ல அவரது தம்பி ஓலைச்சுவடியில் எழுதி நமக்கு அளிக்கப்பட்டதே ஸ்ரீ மந்நாராயணீயம் என்னும் வரப்பிரசாதம் ஆகும்.
அவரது பக்திக்கு கட்டுண்ட ஸ்ரீகுருவாயூரப்பன் அவ்வப்போது தன் தலை அசைப்பின் மூலம் அவரது தோத்திரங்களை அங்கீகாரம் செய்தாராம்.
அதுவும் பிரகலாத சரித்திரத்தை, பட்டதிரி வர்ணிக்கும்போது
மூலஸ்தானத்திலிருந்து சிங்கத்தின் கர்ஜனைக் கேட்டதாம். (நரசிம்மனாகக் காட்சியளித்ததாகவும் கூறப்படுவது உண்டு).
1034 வடமொழி சுலோகங்களால் ஆனது ஸ்ரீமந்நாராயணீயம்.
தினமும் பத்து சுலோகங்கள் வீதம் (ஒரு தசகம்) 100 தசகங்களில் நாராயணீயத்தை பாடி முடித்தார் நாராயண
பட்டதிரி. சில நேரங்களில் ஒன்றுஇரண்டு என கூடுதலாகவும் பாடினார்.
நாராயணீயம் நூலை அவர் நிறைவு செய்த வேளையில், குருவாயூரப்பன் அருளால் அவரது வாத நோயும் பூரணமாகக் குணமானது.
1586ஆம் ஆண்டு விருச்சிகம் 28ஆம் நாளில் ஸ்ரீ பட்டதிரி அவர்கள் ஸ்ரீமந்நாராயணீய காவியத்தை கிருஷ்ணன் பாதங்களில் சமர்ப்பித்து அனைவருக்கும் பெருமை கொடுத்த நாள் .
எந்த காவியத்துக்கும் இல்லாத பெருமை இந்த நாராயணியத்திற்கு உண்டு. என்ன வென்றால், இந்த நாராயணியம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது.
ஸ்ரீகுருவாயூரப்பன் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்திர உற்சவ தினங்களில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஸ்ரீமந் நாராயணீய தினம் என்று விசேஷமாக கொண்டாடப்படுகின்றது.