வெள்ளி, 29 மே, 2020

பூஜையில் மணி அடிப்பது ஏன்?🔔🙏🔔

🔔கோவிலிலும் சரி,வீட்டிலும் சரி பூஜை செய்யும் போது மணி அடிப்பது வழக்கம்.சாதாரண மணி தானே என நாம் எண்ணிவிடக் கூடாது மணி அடிப்பதால் உள்ள நன்மை மற்றும் அதன் முக்கியத்துவம் பல உண்டு.மணி அடிப்பதிலும் பல வகை உண்டு.
🔔மணி அடிப்பதிலும் ஒரே மாதிரியாக மணியை அடிக்கக் கூடாது.மெதுவாகா மணியை அடித்தால் அகர்பத்தி சமர்பிக்கப்படுகிறது என்று பொருள்.கணகணவென்று அடித்தால் சாமிக்கு தீபம் அல்லது தூபம் காட்டப்படுகிறது என்று பொருள்.இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிரது என்று பொருள்.மெதுவாக சீராக அடித்தால் இறைவனுக்கு அமுது படைக்கப்படுகிறது என்று பொருள்
மணி அடிப்பதன் தொனியை வைத்தே கோவிலில் நடக்கும் பூஜைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
🔔மணியை எப்போதும் நம் இடது கையால் எடுக்கக் கூடாது.மணியை வலது கையில் எடுத்து பின்னர் இடது கையில் மாற்றிக் கொண்டு,வலது கையால் கற்பூர தட்டை எடுத்து ஆரத்தி காட்ட வேண்டும்.அதே போல் மணியை கீழே வைக்கும் போதும் இடது கையால் வைக்காமல் வலது கையில் மாற்றி கீழே வைக்க வேண்டும்.
🔔மணியின் கண்டை என்பது சாதாரணமானதல்ல.மணிகளில் #ஓம் என்ற பிரணவம் ஒளிந்திருக்கிறது.தேவதைகளை வரவழைத்து துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகின்றது.பகவானுக்கு அமுது படைக்கும் போது நிசப்தமாக இருக்க வேண்டும்.அமங்கல பேச்சுக்கள் காதில் விழக்கூடாது என்பதற்காக மணி அடிப்படுகிறது.அதனால் அப்படிப் பட்ட பேச்சுக்கள் காதில் விழாது.
🔔பூஜையின் போது அடிக்கப்படும் காண்டமணி மிக சப்தமாக ஒலித்து பிற தீங்கான சப்தங்கள் அழுத்திப் போகச் செய்யும்.
🔔உலக வாழ்க்கையிலிருந்து இறைவன் தன் பக்கம் அழைக்கும் ஒலியை எழுப்புகின்றது மணியோசை.இதனால் திருநாவுக்கரசர்,“ஓசை ஒலியெல்லாம் ஆனாய் போற்றி”என சிவபெருமானை போற்றி பாடியுள்ளார்.மணியோசை எழுப்பும் இடத்தில் தீய சக்திகள் அண்டாது என்பது ஐதீகம்.
🔔வழிபாட்டின் போது வீட்டிலும் பூஜை மணி ஒலிப்பது நன்மை தரும்.
🔔பூஜைப் பொருளில் ஒன்றான மணியை இஷ்டம் போல நினைத்த நேரமெல்லாம் அடிக்கக் கூடாது.அதற்குரிய நேரத்தில் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்கிறது பரசுராம கல்ப சூத்திரம்.
🔔அபிஷேகத்தின் போதும்,சாம்பிராணி காட்டும் போதும்,தீபாராதனை வேளையிலும்,நைவேத்யம் செய்யும் போதும்,ஆபரணம் அணிவித்து அலங்கரிக்கும் போதும்,நீராஞ்ஜனம் என்னும் கற்பூர ஆரத்தியின் போதும் மணியோசை எழுப்ப வேண்டும்.
🔔வீட்டில் கற்பூர ஆரத்தி காட்டும் போது மணியடிப்பது நல்லது.

வியாழன், 28 மே, 2020

திருஷ்டிக்கு பூசணிக்காயை உடைப்ப‍து ஏன்?

கூச்மாண்டன். அரக்கர் குலத்தில் பிறந்த அரும் தவ புதல்வன். அரக்கர்களுக்குள்ள குலவழக்கப்படி வலிய வம்புக்கு போய், தேவர்களை சண்டைக்கு இழுத்தான்.

அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் தப்பி பிழைக்க ஒரே வழி, வைகுண்டனை சரணடைவது தான் என்று எண்ணி வைகுண்டம் சென்றார்கள்.

புண்ணியதேவனே... தேவர்கள் இனமே அழிந்து விடும் போலிருக்கிறது. தாங்கள்தான் காத்தருள வேண்டும் என்று கதறினார்கள்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மமே வெல் லும் என்ற பழமொழிக்கு ஏற்ப, அசுரனின் கதை முடியும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார் நாராயணன்.

உடன் அரக்கன் இருப்பிடம் நோக்கி சென்றார். வந்திருப்பது நாராயணன் என்பதை மறந்தான். தன் பலத்திருக்கு முன் யாரும் வரமுடியாது என்ற ஆணவத்தில் கொக்கரித்தான் கூச்மாண்டன். சண்டைக்கும் தயாரானான்.

அதுசரி.. அழிவுகாலம் வந்துவிட்டால், அறிவு தான் வேலை செய்யாதே.

யுத்தத்தின் இறுதியில் வேரறுந்த மரம் போல் விழுந்தான்.

கூச்மாண்டா.. நல் வழியில் செல்வதற்கு வழி இருந்தும் அழிவை நீயே தேடிக்கொண்டாய். இது உன்பாவத்தின் சம்பளம்.

வேண்டுபவர்களுக்கு எல்லாம் வேண்டும் வரம் தரும் பெருமானே. இனி நான் பிழைக்க போவதில்லை.

எனது கடைசி ஆசையை நீங்கள்தான் வர மாக தர வேண்டும் என்று மரண வாயில் நின்று மண்டியிட்டான்.

சரி கேள். என்ன வரம் வேண்டும்?

நான் மறைந்தாலும். என் புகழ் அழியாத வரம் வேண்டும்.

இதுவரை. உன் வாழ்நாளில் எந்த நன்மையை யும் செய்யாத உனக்கு அழியாத புகழை எப்படி தருவது?

பெருமானே.. நான் இறப்பதை பற்றி கவலைப்படவில்லை. உங்கள் கை யால் மரணம் எய்வதே நான் செய்த பாக்கியம். இருப்பினும் நான் உயிரோடு இருந்த வகையில் எந்த நன்மையையும் செய்ததில்லை.

இறந்த பிறகாவது பிறருக்கு பயன்பட வேண்டும். அதற்கு நீங்கள் தான் அருள வேண்டும்.

சரி.. நீ பூசணிக்காயாக பிறவி எடுப்பாய். உன்னை வாசலில் வைத்தால் சகல தோஷமும் மறையும். கண் திருஷ்டி மறையும். பில்லி சூன்யம், ஏவல் கூட பாதிக்காது. அதோடு நீ யாருக்கு தானமாக போகிறாயோ.. அதை தந்தவருக்கு நம்மைகள் கிட்டும்.

அதோடு உன்னை யாராவது பிறர் அறியாமல் திருடி சென்றால் சகல தோஷமும் அவர்களை பிடித்து கொள்ளும்.

அதனால், இன்றும்கூட கிராமங்களில் உரியவர் இல்லாமல் பூசணிக்காயை பறித்து சென்றால் அதற்குரிய பணத்தை பக்கத்தில் வைத்து விட்டு பறித்து செல்வார்கள்.

கண் திருஷ்டி மறைய பூசணிக்காயை வைக்கும் நடைமுறையில் இதனா ல் வந்தது. அந்த பூசணிக்காயை உடைத்தால் சகலதோஷமும் மறைந்து விடும்.
"வைரக்குஞ்சிதபாதம் திருவாதிரை அன்று சமர்ப்பித்த பெரியவா"

(பொள்ளாச்சி ஜெயம் பாட்டிக்கு கிடைத்த அற்புத அனுபவம்)

நன்றி-மகாபெரியவா புராணம்.+திரு இந்திரா சௌந்தர்ராஜனும் புதுயுகம் டி.வி.யில் 21-12-2018 அன்று சொன்னார்

சிதம்பரம் நடராஜரின் குஞ்சித பாதத்திற்கு வைரத்தால் கவசம் செய்து வைரக் குஞ்சித பாதம் அணிவிக்க வேண்டும் என்று ஶ்ரீ பெரியவா விரும்பினார்கள். நடராஜருக்கு வைரக்குஞ்சித பாதம். பெரியவா எது செய்தாலும் அது அவர் வழிச்செல்லும் அன்பர்களுக்காகத்தானே! அவரே ஸர்வேச்வரன். அவர் ஏன் கோவிலுக்குப் போகவேண்டும். ராமர் விஷ்ணுவின் அவதாரம். மானுஷ்ய தர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லையா? அது போலத்தான்.

சரி. குஞ்சித பாதம் செய்வதென்று தீர்மானித்துவிட்டார்கள். மடத்தில் ஶ்ரீகார்யம், மற்றும் சில முக்யமானவர்களை அழைத்து discussion முடிந்து decision எடுக்கப்பட்டது. அடுத்த step…..அளவு வேண்டும். யாரிடம் இந்தப் பணியை ஒப்படைக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்து எல்லோரும் காத்திருந்தார்கள். அன்றைய தினம் அம்மா தரிசனத்திற்குச் சென்றிருந்தாள்.(பொள்ளாச்சி ஜெயம் பாட்டி)

“இங்கே வா”. பெரியவா அழைக்கிறார்கள்.

“இங்கே பேசினதெல்லாம் கேட்டுண்டிருந்தயோனோ”.

அம்மா “ஆமாம் கேட்டேன்”…

“சரி சிதம்பரத்துக்குப் போய் நடராஜர் குஞ்சித பாதத்தோட அளவை எடுத்துண்டு வா”.

அம்மாவிற்கு ஒரே shock. எவ்வளவோ விஷயம் தெரிஞ்சவாளெல்லாம் இருக்கும்போது தன்னைப் போகச் சொல்றாளே என்று தயக்கம். மெள்ள மறுபடியும் கிட்டப் போய் “நானா போகணும்” என்று அம்மா கேட்டாள்.

உடனே பெரியவா “ஆமாம் ஆமாம் நீதான் போகணும். போ !!!”

கூட நின்றுகொண்டிருந்த ஒரு பெரியவர் நான் வேணா கூடப் போகட்டுமா என்று கேட்க, ” வேணாம் வேணாம் அவளே போகட்டும்.” என்று சொல்லிவிட்டார். பெரியவா Supreme Court. அப்பீலே கிடையாது. சொன்னா சொன்னதுதான். அம்மா சிதம்பரத்திற்குக் கிளம்பிவிட்டாள்.

சிதம்பரம் நடராஜா ஸன்னிதியில் நின்று கொண்டு சிலரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள். யாரும் கண்டு கொள்ளவில்லை. ஒரு நாள் பூராவும் ஒன்றும் நடக்கவில்லை. மறு நாள் காலை ஸ்ன்னிதியில் நின்று கொண்டிருந்தபோது ஒரு வயஸான தீக்‌ஷிதர் “என்னம்மா நேற்றிலிருந்து நிக்கறையே. உனக்கு என்ன வேணும்”. என்று கேட்க அம்மா விஷயத்தைச் சொன்னாள். என்னடா இது மடிசார் கட்டிக்கொண்டு ஒரு பெண்மணி பெரியவாள் அனுப்பினார் எனறு வந்து நிற்கிறாளே உண்மையாக இருக்குமா என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. இங்கே வா என்று சித்சபைக்கு அழைத்துச் சென்றார். ஒரு வாழை நாரை எடுத்து நடராஜரின் குஞ்சித பாதத்தை கணக்காக அளவெடுத்து அம்மாவிடம் கொடுத்து, பெரியவாளுக்கு நடராஜாவின் ப்ரசாதத்தையும் கொடுத்தனுப்பினார். அம்மாவுக்கு ஒரே ஸந்தோஷம். பெரியவா சொன்ன வேலை நல்லபடியாக முடிந்துவிட்டதே!

பிறகு, யாரென்றே தெரியாத இந்த மடிசார் மாமியை அழைத்துச்சென்று ஸ்வாமி மற்றும் அம்பாளுடைய நகைகளையெல்லாம் காண்பித்து , ஒரு தீக்‌ஷிதர் இல்லத்தில் ஸ்வாமி ப்ரஸாதங்களை ஆகாரமாக அளித்து அனுப்பி வைத்தார்கள். ஒரு நாள் பூராவும் யாரென்றே கண்டுகொள்ளப்படாதவளுக்கு ராஜ மரியாதை. பெரியவாளுடைய representative எனறு தெரிந்துவிட்டதே.

மறு நாள் பெரியவாளிடம் அளவைக் கொடுத்துவிட்டு, வைரக்குஞ்சிதபாதத்திற்கு தன்னுடைய காணிக்கையாக ஒரு வைரத்தையும் அம்மா பெரியவாளிடம் ஸமர்ப்பித்தாள். பெரியவா ஆக்ஞைப்படி செய்யப்பட்ட வைரக்குஞ்சித பாதத்திற்கு பலரிடமிருந்து பெறப்பட்ட வைரங்களில் முதல் வைரம் அம்மாவுடையதுதான். அன்று மாலை பெரியவா விச்ராந்தியாக இருந்த சமயம் அருகில் சென்று அம்மா கேட்டாள்.

“மடத்திற்கு வேண்டிய, விஷயம் தெரிஞ்ச எவ்வளவோ பேர் இருக்கா. பெரியவா ஒரு வார்த்தை சொன்னா உடனே செய்து கொடுக்க எவ்வளவோ பேர் இருக்கா. இந்தக்காரியத்திற்கு என்னை ஏன் பெரியவா அனுப்பினா-ன்னு தெரிஞ்சுக்கலாமா”. உடனே பெரியவா அம்மாவைப் பார்த்து “அவசியம் தெரிஞ்சுக்கணுமோ”. என்று. கேட்க, “பெரியவா தெரிஞ்சுக்கலாம்னு சொன்னா தெரிஞ்சுக்கறேன்” என்றாள்.

பெரியவா: “குஞ்சித பாதம் எந்த காலில் இருக்கு””.

அம்மா: “இடதுகாலில்”

பெரியவா: இடது கால் யாருடையது ?

அம்மா: யோசித்தாள். ஆஹா சிவன் அர்த்தனாரி அயிற்றே என்று நினைவிற்கு வந்தது. உடனே “இடது கால் அம்பாளோடதுதான்.” என்றாள்.

பெரியவா: உடனே பெரியவாள், ” ஒரு பெண்ணோட பாதத்தை அளவெடுக்க ஒரு ஆம்பளையையா அனுப்பறது. அதான் உன்னை அனுப்பினேன். இப்பொ புரிஞ்சுதா”.
*லிங்க புராணம் ~ பகுதி — 02*

        அஷ்டாங்க யோகம்
=======================

ஈசன் திருவருளால் தெளிந்த ஞானத்தைப் பெற்று., அதனால் யோகத்தைக் கடைப்பிடித்தால் பிறவாப் பேரின்பமாகிய முக்தி கிட்டும். ஈசன் சனகாதி முனிவர்களுக்கு கூறிய யோக சாரம் ஜனகர்., அத்திரி., வியாசர்., முதலியோரால் உலகில் பிரசித்தமாயிற்று.

01. *பிரம்மச்சரியம்* : பற்றின்றி இருத்தல் இயமம். இது உண்மை பேசுவதாலும் ஒழுக்கம் வழுவாமையாலும் பற்றற்ற தன்மையாலும் ஏற்படும். மனம்., வாக்கு., காயம் (உடம்பு) இந்த மூன்றாலும் பெண்களைத் தீண்டாது இருப்பது பிரம்மச்சரிய நெறி. தூய்மையாக இல்லறத்தை நடத்துவதும் பிரம்மச்சரிய நெறியைச் சேர்ந்ததே. வானப்பிரஸ்த ஆசிரமம் கடைபிடிப்போர் முற்றும் துறந்த சந்நியாசிகள்., மனைவியருடன் காட்டில் உறைவர்.

02. *நியமம்* :  பற்றற்று இருக்குமாறு உள்ளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது நியமம். இதன் மூலம் மகிழ்ச்சி., சவுசம்., தவம்., ஜபம்., சிவ பிரணிதானம் ஆகியவற்றை அடையலாம். ஆசையின்மை என்ற மண்ணால்., ஞான நீரில் உள்ளத்தை நீராட்டித் தூய்மை செய்தல் அகச்சவுசம் எனப்படும். புனித நீராடி., திருநீறு அணிதல் புறச்சவுசமாகும். தவம் என்பது சாந்திராயண விரதம் அனுஷ்டிப்பதாகும். அதாவது., அமாவாஸை அன்று உபவாசம் இருந்து மறுநாள் முதல் நாள் ஒரு கவளம்., இரண்டாம் நாள் இரண்டு கவளம்., என்று கூட்டிக் கொண்டே சென்று பௌா்ணமி அன்று மறுபடியும் உபவாசம் இருக்க வேண்டும். பின்னர் பௌா்ணமிக்கு பிறகு பிரதமை அன்று 14 கவளம் உண்டு பின்பு நாளொன்றுக்கு ஒரு கவளமாக குறைத்துக் கொண்டே வந்து அமாவாஸை தினம் திரும்பவும் உபவாசம் இருக்க வேண்டும். மறை நெறிகளில் நின்று ஆசிரம நிலைகளுக்கு ஏற்ப இருப்பது மகிழ்ச்சியாகும். ஈசனைத் தியானித்தல் சிவப்பிரணிதானம் ஆகும்.

03. ஆசனம் : யோக நிலைக்கான அங்கங்களில் ஆசனமும் ஒன்று. அது பத்மாசனம் போன்ற பல..... அவற்றில் ஒன்றைக் கடைபிடிக்க வேண்டும்.

04. *பிராணாயாமம்* : ஏதேனும் ஒரு பொருத்தமான ஆசனத்தில் அமர்ந்து பிராணாயாமம் செய்ய வேண்டும். அது மூன்று வகை. பிராணாயாமம் செய்யும் போது வியர்வை தோன்றினால் அதமம்., மனதில் சஞ்சலம் இருந்தால் மத்திமம்., சிந்தையில் மகிழ்ச்சி ஏற்படின் உத்தமம். ரேதஸ் மேல் நோக்கி எழும் மந்திரம் ஜபித்துப் பிராணாயாமம் செய்வது சகற்பம் என்றும்., இன்றி செய்வது விகற்பம் என்றும் பெயர் பெறும். நம் உடலில் பத்து வித வாயுக்கள் உள்ளன....
அவை.....

04.a) உயிருக்கு அத்தியாவசியமானதால் இதயத்தில் தங்குவது *பிராண வாயு.*

04.b) கீழ்நோக்கிப் பிரிவது *அபான வாயு.*

04.c) உடலெங்கும் நிறைந்து இரத்த ஒட்டம்., சீரணமான உணவு உடலில் பரவ உதவுவது *வியான வாயு.*

04.d) உறுப்புகளின் சந்திகளில் தங்குவது *உதான வாயு.*

04.e) உடலைச் சமனப்படுத்தவது *சமன வாயு.*

04.f) விக்கல்., கக்கல் ஏற்படக் காரணமானது *கூர்ம வாயு.*

04.g) தும்மலை உண்டாக்குவது *கிரிகா வாயு.*

04.h) கொட்டாவிக்கு உதவுவது *தேவதத்த வாயு.*

04.i) உடலை வீங்கச் செய்வது *தனஞ்செய வாயு.*

04.j.) பாடுதல்., கண் சிமிட்டல்., மயிர்க் கூச்சலுக்கு உதவுவது *நாகன் வாயு.*

இந்தப் பத்து வித வாயுக்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளல் மிகவும் அவசியம்.

05. *பிரத்தியாகாரம்* : இச்சைகளினால் பாதிக்கப்படும் ஐம்புலன்களைத் தடுத்து நிறுத்துவது இது.

06. *தாரணை* : புலன்களை அடக்கி மனதில் தெளிவை ஏற்படுத்தி ஒரு நிலையில் நிறுத்துவது.

7. *தியானம்* : ஆதியந்தமில்லாப் பரம்பொருளை மனக்கண்முன் நிறுத்தி நிலைப்பது தியானம் ஆகும்.

08. *சமாதி* : ஈசனைத் தியானித்து மனம் உருகி மெய்மறந்த நிலையில் இருப்பது சமாதி ஆகும்.

இந்த எட்டும் யோகமும் அங்கங்கள் ஆகும்.

யோகம் கடைப்பிடிக்கும் போது பல இடையூறுகள் ஏற்படும். அவை... *நோய்., ஐயுறல்., சிரத்தையின்மை., பிரமாதம்., விஷயங்களில் இச்சை., துன்பம்., அப்பிரதிஷ்டை., பிராநிதி தரினம்* என்று கூறப்படும்., ஆதிதெய்வீகம்., ஆதிபௌதிகம்., ஆத்யாத்மிக துக்கங்கள் என்பன. இவையன்றி குறிப்பாக உணரக்கூடிய உபசருக்கம் ஆறு உள்ளன. அவை முறையே பிரதிபை., தேவதரிசனம்., சிரவணம்., வார்த்தை., சுவாதம்., ரசனை ஆகும். மேலும் பஞ்சபூதத்தின் குணங்கள்., பிரம்மத்தின் குணங்கள் என்று பல குணங்களும் விளக்கப்பட்டன. யோகியானவ(ள்)ன் தன் முயற்சிக்கு ஏற்படும் இடையூறுகளை நன்குணர்ந்து அவற்றை விலக்கி., எம்பெருமான் திருவடிகளை சேவித்தால் அவர் அருளைப் பெற்று முக்தி அடைவா(ள்)ன்.

யோகத்தைக் கடைப்பிடித்து ஈசன் அருள் பெறலாம். அதுமட்டுமின்றி நல்லறத்தைக் கடைபிடித்து அவ்வழி நின்றோர்க்கும் ஈசன் அருள் கிட்டும். ஒரு சமயம் பார்வதி தேவி சிவபெருமானிடம்., எந்த வழியில் வழிபட்டால் அவரது அருள் கிடைக்கும் என்று கேட்டார். ஒரு சமயம் பிரம்மனிடம் தான் கூறியதைப் பார்வதிக்கு எடுத்துரைத்தார். மஹாமேரு முதல் மாந்தர்கள் வரை எவராக இருந்தாலும் உள்ளம் கனிந்து மனமுருகி என்னிடம் செலுத்தும் பக்திக்கு நான் அருள் செய்வேன் என்றார்.

தொடரும்.....

🕉️ *ஓம் நமச்சிவாய* 🕉️

*தேவமுனி ப்ரவரார்சித லிங்கம்.,*
*காமதஹன கருணாகர லிங்கம் |*
*ராவண தர்ப வினாஸன லிங்கம்.,*
*தத்-ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||*
*"பசுவும் மாற்றுக் கன்றும்"*

ஒரு பசுமாட்டையும் கன்றையும் ஓட்டிக்கொண்டு வந்து ஸ்ரீமடத்துக்கு சமர்ப்பித்தார் ஒரு பக்தர்.

பெரியவாள் வெளியே வந்து மாடு-கன்றைப் பார்வையிட்டார்கள். பக்தரைப் பார்த்து, "இந்தப் பசு மடத்துக்கு வேண்டாம்" என்று சொன்னார்கள்.

அன்று வெள்ளிக்கிழமை. அந்த நல்ல நாளில் வந்திருக்கும் கோமாதாவை "வேண்டாம் என்கிறார்களே பெரியவாள் என்று மனசுக்குச் சஞ்சலம்.

பெரியவாளிடம் மெல்ல வினயமாகச் சொன்னார் மானேஜர், "இன்னிக்கு வெள்ளிக்கிழமை. பசுமாடு கொண்டு வந்திருப்பவர், ரொம்ப நாளா மடத்து பக்தர், திருப்பி அனுப்பறது நியாயமில்லையோன்னு."

"நீங்க சொல்றது சரிதான் வெள்ளிக்கிழமை அன்னிக்கு ஒரு பக்தர் மனப்பூர்வமாகக் கொடுக்கிற பசுமாடு-கன்றை ஏற்றுக்கொள்வதுதான் நியாயம்.."

மானேஜருக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.

"ஆனால், இந்தக் கன்றுக்கு, இந்த மாடு தாய் இல்லை"

எப்படி? எப்படி?

"பாருங்கோ.. கன்னுக்குட்டி, பசுமாடுகிட்டே போய் ஒட்டிக்க மாட்டேங்கிறது. பசுமாடு கன்னுக்குட்டியை நக்கிக் கொடுக்கல்லே... தங்கிட்ட சேர்த்துக் கொள்ளல்லே...."

"ஆமாம்...ஆமாம் கன்றுக்குட்டி, நாலு அடி தள்ளி சிவனே'என்று நிற்கிறது.

பக்தர் மாடு வாங்கிய இடத்திற்குப் போய் விசாரித்தார். மாட்டு வியாபாரி உண்மையை ஒப்புக்கொண்டார். ஒரு கன்றின் தாய் இறந்து விட்டது; ஒரு மாட்டின் கன்று இறந்து விட்டது. இந்தக் கன்றையும் அந்தத் தாயையும் சேர்த்துவிட்டார் மாட்டு வியாபாரி.

குறைகளில்லாத வேறொரு பசு-கன்றை ஓட்டிக் கொண்டு வந்தார் பக்தர்.

பெரியவாள் மாட்டைச் சொறிந்து கொடுத்து, பசு, கன்றை வலம் வந்து ஏற்றுக்கொண்டார்கள்.

மனித இயல்புகள் பெரியவாளுக்குத் தெரியும் என்றால் ஆச்சரியமில்லை. மாட்டு இயல்புகளை எந்த கால்நடைக் கல்லூரியில் கற்றுத் தேறினார்கள்.?

ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர.
எது தானம்? எது தர்மம்?

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது. சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார். சூரியனே, என்ன தடுமாற்றம் உன் மனதில் ? என ஈசன் கேட்க,
பரம்பொருளே! இல்லை என கூறாமல் சகல விதமான தான தருமங்களையும் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன். ஆனால், எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.

சிரித்துக்கொண்டே ஈசன், சூரியனே, நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள். தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில், இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.

ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா ?

இதைக்கேட்ட சூரிய தேவன் " இறைவா! நன்கு புரிந்தது! தானமும் , தர்மமும் , பாவமும் , புண்ணியமும் எல்லாமும் நீயே என்பதை உணர்ந்தேன்!"

ஈசன் சொன்ன விளக்கம் சூரிய தேவனுக்கு மட்டுமல்ல நமக்கும் நன்றாக புரிந்திருக்கும்!

கேட்டு கொடுப்பது தானம்! கேட்காமல் கொடுப்பது தான் தர்மம்!

புதன், 27 மே, 2020

மரப்பாச்சி பொம்மை மகிமை

அந்தக்காலத்தில் வீட்டில் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் ஆகவில்லை திருமணதடை உள்ளது என்றால் இந்த மரப்பாச்சி பொம்மையை வைத்து பொம்மை கல்யாணம் என்றுசெய்து தெரிந்தவர்களை அழைத்து சாப்பாடு போடுவார்கள் அன்னதானத்தை விட சிறந்த தானம் இல்லை.ஆகையால் பொம்மைக்கல்யாணம் மூலம் அன்னதானம் செய்வதன் பலன் உடனே திருமணம் கை கூடும். அதை அடியேன் பார்த்திருக்கிறேன். சரி திருமணம் ஆகிவிட்டது.பெண்னுக்கு சீர் கொடுக்கும்போது  மரப்பாச்சி பொம்மைகள் வைப்பார்கள். காரணம்
அந்தப்பெண் அந்த பொம்மைகளையே தன் தாய் தந்தையாக நினைத்து அவர்கள் கூட இருப்பதாக உணர்வாள் காரணம் அந்தக்காலத்தில் போட்டோக்கள் கிடையாது. சரி குழந்தை பிறந்துவிட்டது அந்த குழந்தைக்கு ஜலதோஷம் பிடித்தால் மரப்பாச்சி பொம்மையை சந்தணக்கல்லில் வைத்து தேய்த்து அதை தாய்ப்பாலில் குழைத்து விளக்கில் சூடு காட்டி அதை நெற்றியில் பத்து போட்டால் ஜலதோஷம் நீங்கி குழந்தை அயர்ந்து தூங்கும்.பெரியவர்களுக்கு கட்டி வந்தால் கூட இது போல் தேய்த்து கட்டி மேல் தடவுவார்கள். சரி குழந்தை வளர்ந்து பல்லால் கடிக்கும்நிலை வரும் போது பல மருத்துவ குணங்கள் உள்ள பல்வேறு மரங்களால் ஆன மரப்பாச்சியை குழந்தையிடம் விளையாடக்கொடுப்பார்கள்.அதை குழந்தை கடிக்கும் போது அதன் மருத்துவகுணம் உள்ளே சென்று நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.
சரி அடுத்தது இனிமரப்பாச்சி பொம்மையை மற்றவர்களுக்கு பரிசாக
வாங்கிக்கொடுங்கள்.வீட்டில் அலங்காரப்பொருளாக அலமாரியில் வாங்கி வையுங்கள்.


லலிதா ஸகஸ்ரநாமத்தில் கூறும் அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்....

சக்திதேவிக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அந்தப் பெயர்களால் அவளை அர்ச்சிக்கும் மந்திரங்கள் அடங்கிய நூலே லலிதா சகஸ்ரநாமம். இந்த நூலிலேயே தேவிக்கு பிடித்த நைவேத்ய வகைகள் சொல்லப்பட்டுள்ளன.

இந்த நூல் தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது.

பெருமாளின் அவதாரமாகக் கருதப்படுபவர் ஹயக்கிரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். கல்விக்கு அதிபதி. இவரது தரிசனம் ஒருமுறை அகத்திய முனிவருக்கு கிடைத்தது. கல்விக்கதிபதியான அவரை தன் குருவாகவே பார்த்தார் அகத்தியர். அதன் காரணமாக சக்தியின் வரலாற்றை அறிந்தார். சக்திக்கு "லலிதா' என்ற திருநாமம் சூட்டி, அவளது கதையைக் கூறினார் ஹயக்கீரிவர்.

அதைக் கருத்துடன் கேட்டு மகிழ்ந்த அகத்தியர், "குருவே! தாங்கள் எனக்கு லலிதா தேவியின் சரித்திரத்தை மட்டும் கூறினீர்கள். அவளுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே! அதையும் சொல்லுங்கள்!' என்றார்.

"அது மிக, மிக ரகசியம். தேவியின் அனுமதியின்றி யாருக்கும் சொல்லக் கூடாது. இருந்தாலும் தேவியின் அதிதீவிர இறைபக்தர்களுக்கு இதைச் சொல்வதில் தவறில்லை!' என்று கூறிய ஹயக்கிரீவர், ஆயிரம் நாமங்களையும் கற்றுக் கொடுத்தார். அதில் வரும் 480வது ஸ்லோகமான, "பாயஸான்ன ப்ரியாயை' என்பதற்கு, "பால் பாயசத்தை விரும்புபவள்' எனப் பொருள்.

501வது ஸ்லோகமான, "குடான்ன ப்ரீத மானஸாயை' என்பதற்கு, "அம்பிகை சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள்' என்று அர்த்தம்.

526வது ஸ்லோகமான, "ஹரித் ரான்னைக ரஸியை' என்ற ஸ்லோகத்திற்கு, "மஞ்சள் பொடி கலந்த எலுமிச்சை சாதத்தை ரசித்து உண்பவள்' என பொருள் வருகிறது.

அம்பிகை குறித்த இன்னொரு ஸ்லோகமான, "தத்யான்ன ஸக்த ஹ்ருதயாயை' என்ற ஸ்லோகத்திற்கு, "இவள் தயிர் சாதம் என்றால் இதயத்தையே கொடுப்பவள்!' என்று பொருள்.

"முத் கௌத நாஸக்த...' என்ற ஸ்லோகத்திற்கு, "பாசிப்பருப்பு, அரிசியில் சமைத்த வெண்பொங்கலை விரும்புபவள்!' என்று அர்த்தம்.

"ஸர்வெளதன ப்ரீதசித்தா' என்ற ஸ்லோகத்திற்கு, "அம்பிகை கதம்ப சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றை உண்ணும் மனதைக் கொண்டவள்!' எனப் பொருள்.

இதையெல்லாம் முடித்த பிறகு 559வது ஸ்லோகத்தில், "தாம்பூல பூரிதமுகிச்யை' என்ற ஸ்லோகம் வருகிறது. இதற்கு, "தாம்பூலம் தரித்ததால் லட்சணமாக இருக்கும் முகத்தைக் கொண்டவள்!' எனப் பொருள்.

"தாம்பூலம்' என்பது வெற்றிலை, பாக்கைக் குறிக்கும். எனவே தான் கடவுளுக்கு நாம் நிவேதனம் படைத்து வழிபடுகிறோம்.

இதைத்தவிர அவரவருக்கு என்ன நைவேத்யமாக வைத்து பூஜிக்க முடியோமோ அதை வைத்து வணங்கலாம். அம்பாள் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான, ஆத்மார்த்தமான பக்தியே!

நாமும் நமக்கு தெரிந்த முறையில் அம்பாளை மனதார நினைத்து, துதித்து, தாயின்  அருளை  பெறுவோம்....
#படித்ததில்_நெகிழ்ந்தது

நான் சந்தித்த வித்தியாசமான மனிதர்கள், சம்பவங்கள் ..........

ஒரு நாள், பார்த்த சாரதி கோவிலுக்கு போனேன்.

பக்தி ரசத்தில் அல்ல; ரசம் வைக்க ஈயச்சொம்பும், வத்தக் குழம்புக்கு கல் சட்டியும் வாங்க

கோவிலை ஒட்டிய ஒரு சிறிய சந்தில், வரிசையான, ஸ்ட்ரீட் ஹவுசஸ். எல்லாம் பழைய வீடுகள்.

அந்த தெருவில் ஒரே ஒரு வீட்டில் தான் கல் சட்டி வியாபாரம்.

அந்த தெருவிற்கு போனதும், என்னை முதலில் கவர்ந்தது, ஒரு திண்ணை வைத்த வீடு.

அந்த திண்ணையில் ஒரு மிக வயதான பாட்டி -

உட்கார்ந்த வாக்கில் கை பம்ப் அடிக்கிறார்.

அவர்களை விட சற்றே சிறிய மாமி, குடத்தில் அதை பிடித்து, நாலு படி ஏறி உள்ளே கொண்டு நிரப்புகிறார்.

கல் சட்டி வியாபாரத்தை சட்டென்று முடித்து, சுவாதீன மாக அந்த திண்ணையில் போய் உக்கார்ந்தேன்.

பேச்சுக் கொடுத்தேன்.

இனி எங்கள் உரையாடல் :-

நான்... "பாட்டி, இந்த வயதில், நடமாட்டம் கூட இல்லாத நீங்கள், தண்ணீர் அடிக்கிறீர்கள்?"

பாட்டி : "அதனால் என்னம்மா? நம் வீட்டு வேலை தானே. இதோ எதிர்த்தார்ப் போல் நாராயணன்.. அவன் பார்த்துப்பான். நானா அடிக்கிறேன்; அவன் ன்னா என் கையில் புகுந்து அடிக்கிறான்"

நான் - "பாட்டி, தண்ணீர் பிடித்து நடையாய் நடந்து ரொப்புவது யார்?"

பாட்டி - "அவள் என் சின்ன ஒர்ப்பிடி. அவள் மூலமாகத்தான் நாராயணன் எனக்கு பிடி சாதம் தினமும் தருகிறான்"

நான் - "வேறு யார் யார் இருக்கிறார்கள்?"

பாட்டி - எனக்கு ரொம்ப சின்ன வயதில் கல்யாணமாகி, இந்தாத்துக்கு வந்தேன்.

என் ஆத்துக்காரர், பெருமாளுக்கு சேவை செய்த குருக்கள். இந்த வீடு அப்போ, வாடகை இல்லாமல் கொடுத்தார்கள்.

எனக்கு குழந்தை பிறக்க வில்லை. அதைப் பற்றி எனக்கு வருத்தம் இல்லை.

இவருக்கு கீழ் கடையில் மூன்று தம்பி, மூன்று தங்கைகள்.

எல்லாரும் என் குழந்தைகளாக வளர்த்தேன்.

நிறைய கஷ்டம் தான். ஆனால், அந்த பெருமாள் கோவில் கோபுரத்தை பார்த்தால் எதுவுமே கஷ்டமாக தெரியாது.

எல்லாரும் கல்யாணம் பண்ணி, விட்டுச் சென்றார்கள்.

என் கணவரும் சீக்கிரமே இறக்க, நான் தனித்து விடப்பட்டேன்...

இல்லை இல்லை... நாராயணன் துணை என்னிக்கும் உண்டு.

"எனக்கு இப்போது 87 வயது.

ஒருவருமே என்னை வைத்துக்கொள்ளத பொது, என் கடைசி ஓர்ப்படி, என்னை பார்த்துக் கொள்கிறாள்.

அவளுக்கு ஒரே பெண். காலில் ஊனம். கஷ்டப்பட்டு வேலைக்குப் போய் சம்பாதித்து வருகிறாள்;

கல்யாணம் வேண்டாம் என்று தீர்மானமாக இருக்கிறாள்.

என் ஒர்ப்படிக்கு (சுமார் 20 குடம் உள்ளே கொண்டு கொட்டியவருக்கு) 77 வயது.

நான் திண்ணையிலே தான் வாசம்.

என்னால் முடிந்தது, பகவான் தெம்பு கொடுத்திருக்கும் கையால் தண்ணி அடிப்பது.

சமையல் எல்லாம் ஒர்ப்படிதான்.

எனக்கு ஒரே வேளை, 12 மணிக்கு கொஞ்சம் மோர் சாதம். அவ்வளவு தான் என்னால் சாப்பிட முடியும்.

ராத்திரி ஒண்ணும் சாப்பிட மாட்டேன்"

"எனக்கு என்ன குடுப்பினை பாரும்மா...

நாள் முழுதும், கோவில் தரிசனம். அவன் வந்து அழைத்துப் போவான். அது வரை இப்படியே என் காலம் ஓடும்"

நான் ... "பாட்டி, உங்களுக்கு ஒருத்தரும் செய்ய வில்லை என்ற வருத்தம் இல்லையா ?"

பாட்டி... "கண்ணம்மா.. யார் செய்தா, யார் செய்யாட்டா என்ன.

பெருமாள் என்னை இங்கு அனுப்பிய காரணம் , இந்த வீட்டை சேர்ந்தவர்களுக்கு செய்ய வேண்டும் என்பது.

எல்லாம் செய்து விட்டேன்.

திருப்தி தான்; குறை இல்லை.

அதே பெருமாள், என்னை பாத்துக்க ஒரு ஒர்ப்படியையும், ஒரு பெண்ணையும் கொடுத்திருக்கான்.

நீயும், வாழ்க்கையில் எந்த நேரத்திலும் குறை, கவலை படாதே.

எல்லாம் பெருமாள் பாத்துப்பான்.

நீ செய்யும் செயல் அத்தனையும் நீ செய்ய வில்லை. கோவிந்தன் செய்ய வைக்கிறான்.

இதில் பிற மனுஷாளை எப்படி குத்தம் சொல்ல முடியும்?" நிம்மதியாக இரு.

பாட்டி இன்னும் ஏதேதோ... பாசிடிவாக பேசினாள் -

இத்தனைக்கும் பள்ளிக்குப் போய் படித்தவள் இல்லை. அனுபவப்பாடம்;

புரிந்து கொண்ட வாழ்க்கை தத்துவம்.

கடைசியாக நான், "பாட்டி பணம் தரேன்; வாங்கிக்கறேளா" என்றேன்...

பாட்டி சிரித்தாள். அர்த்தம் பொதிந்த சிரிப்பு.

"பணமா, எனக்கா, எதுக்கு; நான் என்ன பண்ணப் போறேன்"

"பாட்டி, உங்களுக்கு வேண்டியது ஏதாவது, அல்லது சாப்பிட... " என்று இழுத்தேன். அதற்கும் சிரிப்பு.

"கோவிந்தன் என் பெண் மூலமாக என்னை பார்த்துப்பான். இதே திண்ணையில், அவனை பார்த்துக்கொண்டே ஒரு நாள் போய் சேருவேன்.

அந்த நாளைக்காக நான் நொந்து போய் காத்திருக்க வில்லை.

அதுவும் பெருமாளுக்கு தெரியும் என்னும் போது, நான் எதுவுமே யோசனை செய்ய அவசியம் என்ன.

எனக்கு பணமெல்லாம் வேண்டாம்"

என் புத்தி...உள்ளே போய், (ரொம்ப சிறிய போர்ஷன்) ... ஒரே ரூம்; கொஞ்சம் தடுத்து சமையல் அறை.

"மாமி, உங்க கிட்ட பழைய நாள் பாத்திரம் எல்லாம் இருக்கா ? எனக்கு ஆசை " என்றேன்.

மாமி சிரித்துக் கொண்டே, "நானே பாத்திரம் தேய்ப்பதால், அதெல்லாம் கட்டி ஆளமுடியாமல் எல்லா வற்றையும் போட்டு விட்டேன். தேவைக்கு வேண்டியது மட்டும் இருக்கு"

பாட்டியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன்; கிளம்ப மனமே வரல்ல;

"பாட்டி, உங்க கிட்ட பேசினா, மனது லேசாகிறது !!"

"முடிந்தால் வாயேன்; எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசு" என்று வழி அனுப்பினாள்.

ஒரு சலிப்பு, அலுப்பு கிடையாது;

ஆசைகள் கிடையாது;

அந்த திண்ணையில் ஒரு தவம் மாதிரி இருக்கிறாள்.🙏🙏🙏
யார் சொன்னது ரிஷிகள் காட்டில் தான் வாழ்கிறார்கள் என்று. 🙏🙏
கும்பகோணம் திருநாகேஸ்வரம் திருவிண்ணகரம் ஸ்ரீ ஒப்பிலியப்பன் பெருமாள் திருவடிகளே சரணம் ... !!!

பெருமாளுக்கு பக்தர்களை சோதித்து தடுத்தாட் கொள்வதில் அலாதி விருப்பம்.
துளசிவனத்தில் தோன்றிய குழந்தையை பூதேவி என்ற திருநாமமிட்டு வளர்த்துவந்தார் மார்க்கண்டேய முனிவர்.
பெண் சற்று வளர்ந்ததும் பெருமாள் கிழவர் வேடத்தில் வந்தார்.
மார்கண்டேயரிடம் " உங்கள் பெண் அழகாக இருக்கிறாள் . அவளை எனக்கு மனம் முடித்து வையுங்கள் " என்கிறார்.

என்னடா இது கிழவர் வந்து பெண் கேட்கிறாரே என்று திடுக்கிட்டார். சமாளித்து கொண்டு " பெரியவரே ! என் பொண்ணுக்கு உப்பு போட்டுக்கூட சமைக்க தெரியாது ... அவளை எப்படி திருமணம் செய்வீர்கள் ? " என்கிறார் .

" பரவாயில்லை ... நான் உப்பில்லாமல் சாப்பிடுகிறேன் சீக்கிரம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் " என்கிறார் கிழவர் ஆகிய பெருமாள்..

இவரை எப்படி சமாளிப்பது என்று மார்கண்டேயே முழித்தபோது ஸ்ரீ நிவாஸர் தம் திரு உருவத்தை காண்பித்து தான் சாட்ஷாத் மகாவிஷ்ணுவே என்று அருளி முன்பு வாக்கு கொடுத்தபடி திருமகளை திருமணம் செய்யவே எழுந்தருளியதாக கூறினார்.

மகா சந்தோஷத்துடன் மார்க்கண்டேயர் சம்மதித்தார். பெருமாளுக்கு வலது புறம் கீழே மண்டியிட்டு வணங்கும் திருக்கல்யாண கோலத்துடன் அருளும் (தனி சன்னதி கிடையாது) தாயார் பூமா தேவி பூமி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர்களுக்கு இடது புறம் பெருமாளுக்கு கன்னிகாதானம் செய்து வைத்த மார்க்கண்டேய மகரிஷி அமர்ந்த நிலையில் வணங்கும் நிலையில் உள்ளார்.

இத்தலத்தில் இன்றும் பிரசாதங்களில் உப்பு சேர்ப்பதில்லை. எனவே உப்பு சுவையை நீக்கிய பெருமாள் என்ப தால் " லவண வர்ஜித வேங்கடேசன்" (உப்பினை விலக்கிய பெருமாள் ) என்கிறது புராணம். உப்பு இல்லாத பெருமாள் - உப்பில்லா அப்பன் - உப்பிலியப்பன் என்று அழைக்கப்படுகிறார்.
108 திவ்ய தேசங்களில் இந்த திவ்ய தேசத்தில் மட்டும் தான் உப்பில்லாத பிரசாதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#கைகேயி கொடியவளா?

ராமாயணம், நம் எல்லோருக்கும் தெரிந்த பக்தி கதை. அதில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் நமக்கு மிகப் பரிச்சயமானவர்கள்தான். ஆனால், அந்தக் கதையில் இடம்பெறும் சம்பவங்கள், அவற்றில் பொதிந்து கிடக்கும் அர்த்தங்கள், கதாபாத்திரங்களின் உண்மைப் பரிமாணம் ஆகியவை பல்வேறு காலங்களில், பல்வேறு காவிய கர்த்தாக்களாலும் உபன்யாசகர்களாலும் நமக்குப் பலவிதமான முறைகளில் விவரித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு புதிய கோணத்தில் சொல்லப்பட்ட கைகேயியின் கதையைப் பார்ப்போமா?

தசரதனின் மூன்று மனைவியரில் இளையவள், கைகேயி. #அழகே உருவானவள். வீரமும் #விவேகமும் கொண்டவள். தன் அன்பாலும் பாசத்தாலும் தசரதன் உள்ளத்தில் மட்டும் அல்லாமல், அனைவரின் உள்ளத்திலும் இடம்பெற்றவள். எல்லாவற்றுக்கும் மேலாக, தன் மகன் பரதனிடத்தில் காட்டும் அன்பையும், பரிவையும்விட, #ஸ்ரீராமனிடம் அவள் அதிக அளவு அன்பும் #பாசமும் கொண்டிருப்பதை நினைத்துப் பெரிதும் மகிழ்ந்தான் தசரதன். ஆகவே, அவளிடம் அதிக மதிப்பு வைத்திருந்தான் தசரதன்.

இத்தனை உண்மைகளுக்கு நடுவில், ஒரே இரவில் அவள் மனம் மாறி, 'ராமனுக்குப் பதிலாக என் மகன் பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும்’ என்றும், '14 வருடங்கள் ஸ்ரீராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும்’ என்றும் தசரதனிடம் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்றாள் கைகேயி. ராமனுக்கு மட்டுமின்றி, தன் மகன் பரதனுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு கொடிய செயலை கைகேயி செய்திருப்பாளா என நினைத்துப் பார்த்தால், அதனை அப்படியே ஏற்க மனம் வரவில்லை.

மந்தரை என்றொரு #கூனி. கைகேயியின் தாதியாக இருந்தவள். அவளிடம் அரை மணி நேரம் பேசியதன் விளைவு... விவேகம் மிக்க கைகேயி மனம் மாறி, ஸ்ரீராமனைக் காட்டுக்கு அனுப்ப விரும்பினாள் என்பது உண்மையானால், அவளது தாய்மையின் உயர்வே அழிந்துவிடுகிறதே!

ஏதோ பேராசையின் காரணமாகத் தன் மகனுக்கு அரசு பதவி தேடித் தரவேண்டும் என்று விரும்பி, அதன் பொருட்டு, கைகேயி தசரதனிடம் வரம் கேட்டிருக்கலாம்; வாதாடி, பரதனுக்கு முடிசூட்ட நினைத்திருக்கலாம் என்பதையாவது ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளலாம். ஆனால், பிரியத்துக்குகந்த ராமனைக் காட்டுக்கு அனுப்பும்படி சொல்ல, அந்தத் தாய்க்கு எப்படி மனம் வந்திருக்கும்? சற்றே சிந்தித்துப் பார்க்க, கைகேயி எத்தகையவள் என்பதை விளக்கும் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

சம்பராசுரன் என்ற அசுரனுடன் தசரதன் ஒருமுறை போர் புரிந்தான். அப்போது, அவனுடைய தேருக்குச் சாரதியாக இருந்தாள் வீராங்கனை கைகேயி. தேரின் அச்சு முறிந்த நிலையில், தன் விரலையே அச்சாணியாகக் கொடுத்து, தன்னுயிரைப் பணயம் வைத்து, தசரதன் உயிரைக் காத்தாள். அவளின் #பதிபக்தி மற்றும் தியாகத்தில் சிலிர்த்த தசரதன், இரண்டு வரங்களை அவளுக்கு அளித்தான். பேராசைக்காரியாக அவள் இருந்திருந்தால்... 'தானே பட்ட மகிஷியாக வேண்டும்’ என்றும், 'தனக்குப் பிறக்கும் குழந்தைக்கே முடிசூட்ட வேண்டும்’ என்றும் அப்போதே வரம் கேட்டிருக்கலாம். ஆனால், அவள் அப்படிச் செய்யவில்லை. கணவனுக்குச் செய்த சேவை, தன் #கடமைதானே என்று உணர்ந்து, 'வரங்கள் இப்போது வேண்டாம். தேவைப்பட்டால் பின்பு எப்போதாவது கேட்டுப் பெற்றுக்கொள்கிறேன்’ என்று பெருந்தன்மையாகக் கூறிவிட்டாள். அப்படிப்பட்டவளா இந்தக் கொடிய வரங்களைக் கேட்டிருப்பாள்?

ஆராய்ந்து பார்த்தால், இதற்கு ஏதோவொரு மூல காரணம் இருந்திருக்க வேண்டும், அதற்குப் பின்னே எவரும் அறியாத சம்பவங்கள் சில புதைந்து கிடக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஒரு முறை தசரதன் வேட்டையாடச் சென்றபோது, தடாகம் ஒன்றில் தண்ணீர் முகந்து செல்ல வந்திருந்த சிறுவன் சிரவணகுமாரன் என்பவன் மீது, தெரியாமல் அம்பு எய்திவிட்டான். கமண்டலத்தில் தண்ணீர் முகந்த சப்தம், யானை தண்ணீர் குடிப்பது போலக் கேட்டது. அதனால் தூரத்திலிருந்து தசரதன் எய்த 'சப்தவேதி’ என்ற பாணம், ஒலி வந்த திக்கை நோக்கிச் சென்று, சிறுவன் உயிரைப் போக்கிவிட்டது. உயிர் துறக்குமுன் அந்தச் சிறுவன் வேண்டிக்கொண்டது போல, அவன் சடலத்தை எடுத்துக்கொண்டு, கண்ணில்லாத அவனுடைய வயோதிகத் தாய்- தந்தையிடம் சென்று, நடந்ததைக் கூறினான் தசரதன். மகனை இழந்த துயரத்தில் அந்தப் பெற்றோர் தசரதனுக்குக் கடும் #சாபமிட்டுவிட்டு, உயிர் துறந்தனர். 'எங்களைப் போலவே புத்திரனைப் #பிரிந்து, அந்தச் சோகத்தில் நீ உயிர் துறப்பாய்’ என்பதே அந்தச் சாபம். தசரதன் உள்ளத்தைக் கரையான் போல் அரித்துக் கொண்டிருந்த சம்பவம் இது.

வேட்டைக்குச் சென்று திரும்பிய தசரதன், சொல்லவும் மெல்லவும் முடியாமல், கலங்கித் தவித்ததை தனது விவேகத்தால் ஊகித்த கைகேயி, தசரதனின் தேர்ப் பாகன், அந்தரங்கக் காவலன் ஆகியோரைக் கூப்பிட்டு, சாமர்த்தியமாக விசாரித்து, நடந்த உண்மைகளை ஓரளவு தெரிந்து கொண்டாள்; சாபம் பற்றிய உண்மை தெரிந்து, கைகேயி பதறினாள்; #துடித்தாள்.

புத்திரன் எனப் பொதுப்படையாகவே குறிப்பிட்டதால், அது தசரதன் பெற்ற புதல்வர்களில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், அல்லவா? இதன் உண்மைகளை இன்னும் ஆராய்ந்து அறிய விரும்பினாள் கைகேயி. அந்தரங்கமாக, ஆஸ்தான ஜோதிடர்களை அழைத்தாள். தசரதனின் ஜாதகத்தையும், குழந்தைகளின் ஜாதகத்தையும் கொடுத்து ஆராயச் சொன்னாள். பொதுவாக, விண்ணில் உள்ள கிரகங்களது அமைப்பின்படி, நாட்டின் நிலை குறித்தும் விளக்கப் பணித்தாள். அந்தக் கால கட்டத்தின்படி, கிரக நிலைப்படி, அயோத்தி சிம்மாசனத்தில் எவர் அமர்ந்தாலும், அவர்கள் சில நாட்களில் மரணம் அடைய நேரும் என ஜோதிடர்கள் கூறினார்கள்.

'புத்திரனைப் பிரிந்து’ என்கிற சாபம் 'புத்திரன் இறந்து’ என்கிற அர்த்தத்தில் இடப்பட்டாலும், இது குறித்து சாஸ்திர விற்பன்னர்கள் மற்றொரு விளக்கமும் பரிகாரமும் சொன்னார்கள். ஒருவேளை, புத்திரன் தந்தையை விட்டு வெகுதூரம் பிரிந்து சென்றுவிட்டால், அதனால் புத்திரன் உயிர் பிழைத்துவிடுவான்; தந்தை மட்டும் அந்தப் பிரிவால் உயிர் துறக்க நேரிடும் எனும் விளக்கம், ஜோதிட பண்டிதர்களால் தரப்பட்டது. ஆக, தசரதன் உயிர் துறப்பது சாபத்தால் ஏற்பட்ட, தவிர்க்க முடியாத நியதி எனும் உண்மையை உணர்ந்தாள் கைகேயி. அதே நேரம், மைந்தன் ஸ்ரீராமனையாவது #காப்பாற்றியாக வேண்டும் என நினைத்தாள்.

மனைவியின் கடமையைவிட, #தாய்மையின் அன்புதான் அங்கே தலை தூக்கி நின்றது. ஸ்ரீராமனை மட்டும் தசரதனிடமிருந்து பிரிக்க நினைத்தால், அதற்குச் சரியான காரணம் காட்ட வேண்டுமே? அதற்காகத் தியாகமும் அன்பும் உருவான அந்தத் தாய், தன்னை இந்த உலகம் 'பேராசைப் பேய்’ என்று நிந்தித்தாலும் பரவாயில்லை என மனத்தை திடப்படுத்திக் கொண்டு, ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாள். பரதனுக்கு முடிசூட்ட வேண்டினாள்; அதற்குத் தடையில்லாதபடி, ஸ்ரீராமனை காட்டுக்கு அனுப்பச் சொல்வது போல் இருக்கட்டும் என முடிவு செய்தாள். அப்படியே வரமும் கேட்டாள். அது மட்டுமா? ஒருவேளை, சக்கரவர்த்தியாக தசரதனே தொடர்ந்து நீடித்தால், ஜோதிடப்படி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மன்னன் உயிர் துறக்க நேரிடுமே?! அதையும் எப்படியாவது தடுத்துவிட முடியாதா என ஏங்கினாள். எனவே, கணவனையும் ஸ்ரீராமனையும் காப்பதற்குத் தன் மகனைத் தியாகம் செய்யத் துணிந்தாள். ஆகவே, பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வலியுறுத்தினாள்.

'பரதனுக்கு முடிசூட்டிவிடுகிறேன். ஆனால், ஸ்ரீராமனை #காட்டுக்கு அனுப்ப வேண்டாமே’ எனக் கெஞ்சினான் தசரதன். ஆனால், கைகேயியோ பிடிவாதமாக இருந்தாள். ஸ்ரீராமன், அவளுக்கு மட்டும் குழந்தை அல்ல; அயோத்தியின் குழந்தை. அவன் அவதாரப் பணி நிறைவேற வேண்டும். ராவணனைப் போன்ற அரக்கர்களை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட அவதரித்தவன் அல்லவா ஸ்ரீராமன்! ஆகவே, அவன் காக்கப்பட வேண்டும். எனவே, #விதிப்படி தனக்கு இடப்பட்ட பணியைச் செய்தாள் கைகேயி.

'பாவி கைகேயி சதி செய்து விட்டாளே!’ என்று எல்லோரும் அவளை நிந்தித்தனர். சீதையும் லட்சுமணனும் பின் தொடர, மரவுரி தரித்து, அயோத்தியை விட்டு ஸ்ரீராமன் தவக் கோலத்தில் கானகம் புறப்பட்டான். அவனைக் காட்டில் விட்டுவர, ஒரு ரதம் புறப்பட்டது. அந்த ரதம், வீதியில் நகர முடியாதபடி மக்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டு, அழுது புலம்பியது. ஊரே அழுது கொண்டிருந்தது. ஒருத்தியின் மனதில் மட்டும் ஸ்ரீராமனைக் #காப்பாற்றிவிட்ட பெருமிதம் நிலைத்திருந்தது. அவள் கண்களிலிருந்தும் #கண்ணீர் சிந்தியது. அது ராமனுக்காக அல்ல; புத்திர சோகத்தால் உயிர் நீத்து, தன்னை நிரந்தரமாகப் பிரியப் போகும் கணவன் தசரதனுக்காக!

ஸ்ரீராமன், அவதாரப் பணியைத் தொடங்கி விட்டான்; ராவணன் #அழிவான்; துயர் தீரும் நேரம் வந்துவிட்டது என தேவர்களெல்லாம் பூமாரிப் பொழிந்தனர். அரக்கர்கள் அழிந்து, ராமனால் நல்லோர் காக்கப்படுவர் என்பதால், அவனைக் காட்டுக்கு அனுப்பிய கைகேயியை அவர்கள் மனதார, மானசிகமாக #வாழ்த்தினர்.

ஊரார் பழித்தனர்; உலகோர் நிந்தித்தனர்; பெற்ற மகன் பரதனோ, தாயின் தியாகம் தெரியாமல், அவளை வெறுத்தான். ஏசினான். ஆனால், ஸ்ரீராமனுக்கு மட்டும் தன் அன்புத் தாய் கைகேயி செய்த தியாகம் #தெரியும். ஆரண்ய முனிவர்களுக்கெல்லாம் அவள் பெருமை தெரியும். தேவர்களுக்கெல்லாம் அவள் செய்த உதவி புரியும்!

இப்போது சிந்தியுங்கள்... கைகேயி #கொடியவளா..?