புதன், 27 மே, 2020

#படித்ததில்_நெகிழ்ந்தது

நான் சந்தித்த வித்தியாசமான மனிதர்கள், சம்பவங்கள் ..........

ஒரு நாள், பார்த்த சாரதி கோவிலுக்கு போனேன்.

பக்தி ரசத்தில் அல்ல; ரசம் வைக்க ஈயச்சொம்பும், வத்தக் குழம்புக்கு கல் சட்டியும் வாங்க

கோவிலை ஒட்டிய ஒரு சிறிய சந்தில், வரிசையான, ஸ்ட்ரீட் ஹவுசஸ். எல்லாம் பழைய வீடுகள்.

அந்த தெருவில் ஒரே ஒரு வீட்டில் தான் கல் சட்டி வியாபாரம்.

அந்த தெருவிற்கு போனதும், என்னை முதலில் கவர்ந்தது, ஒரு திண்ணை வைத்த வீடு.

அந்த திண்ணையில் ஒரு மிக வயதான பாட்டி -

உட்கார்ந்த வாக்கில் கை பம்ப் அடிக்கிறார்.

அவர்களை விட சற்றே சிறிய மாமி, குடத்தில் அதை பிடித்து, நாலு படி ஏறி உள்ளே கொண்டு நிரப்புகிறார்.

கல் சட்டி வியாபாரத்தை சட்டென்று முடித்து, சுவாதீன மாக அந்த திண்ணையில் போய் உக்கார்ந்தேன்.

பேச்சுக் கொடுத்தேன்.

இனி எங்கள் உரையாடல் :-

நான்... "பாட்டி, இந்த வயதில், நடமாட்டம் கூட இல்லாத நீங்கள், தண்ணீர் அடிக்கிறீர்கள்?"

பாட்டி : "அதனால் என்னம்மா? நம் வீட்டு வேலை தானே. இதோ எதிர்த்தார்ப் போல் நாராயணன்.. அவன் பார்த்துப்பான். நானா அடிக்கிறேன்; அவன் ன்னா என் கையில் புகுந்து அடிக்கிறான்"

நான் - "பாட்டி, தண்ணீர் பிடித்து நடையாய் நடந்து ரொப்புவது யார்?"

பாட்டி - "அவள் என் சின்ன ஒர்ப்பிடி. அவள் மூலமாகத்தான் நாராயணன் எனக்கு பிடி சாதம் தினமும் தருகிறான்"

நான் - "வேறு யார் யார் இருக்கிறார்கள்?"

பாட்டி - எனக்கு ரொம்ப சின்ன வயதில் கல்யாணமாகி, இந்தாத்துக்கு வந்தேன்.

என் ஆத்துக்காரர், பெருமாளுக்கு சேவை செய்த குருக்கள். இந்த வீடு அப்போ, வாடகை இல்லாமல் கொடுத்தார்கள்.

எனக்கு குழந்தை பிறக்க வில்லை. அதைப் பற்றி எனக்கு வருத்தம் இல்லை.

இவருக்கு கீழ் கடையில் மூன்று தம்பி, மூன்று தங்கைகள்.

எல்லாரும் என் குழந்தைகளாக வளர்த்தேன்.

நிறைய கஷ்டம் தான். ஆனால், அந்த பெருமாள் கோவில் கோபுரத்தை பார்த்தால் எதுவுமே கஷ்டமாக தெரியாது.

எல்லாரும் கல்யாணம் பண்ணி, விட்டுச் சென்றார்கள்.

என் கணவரும் சீக்கிரமே இறக்க, நான் தனித்து விடப்பட்டேன்...

இல்லை இல்லை... நாராயணன் துணை என்னிக்கும் உண்டு.

"எனக்கு இப்போது 87 வயது.

ஒருவருமே என்னை வைத்துக்கொள்ளத பொது, என் கடைசி ஓர்ப்படி, என்னை பார்த்துக் கொள்கிறாள்.

அவளுக்கு ஒரே பெண். காலில் ஊனம். கஷ்டப்பட்டு வேலைக்குப் போய் சம்பாதித்து வருகிறாள்;

கல்யாணம் வேண்டாம் என்று தீர்மானமாக இருக்கிறாள்.

என் ஒர்ப்படிக்கு (சுமார் 20 குடம் உள்ளே கொண்டு கொட்டியவருக்கு) 77 வயது.

நான் திண்ணையிலே தான் வாசம்.

என்னால் முடிந்தது, பகவான் தெம்பு கொடுத்திருக்கும் கையால் தண்ணி அடிப்பது.

சமையல் எல்லாம் ஒர்ப்படிதான்.

எனக்கு ஒரே வேளை, 12 மணிக்கு கொஞ்சம் மோர் சாதம். அவ்வளவு தான் என்னால் சாப்பிட முடியும்.

ராத்திரி ஒண்ணும் சாப்பிட மாட்டேன்"

"எனக்கு என்ன குடுப்பினை பாரும்மா...

நாள் முழுதும், கோவில் தரிசனம். அவன் வந்து அழைத்துப் போவான். அது வரை இப்படியே என் காலம் ஓடும்"

நான் ... "பாட்டி, உங்களுக்கு ஒருத்தரும் செய்ய வில்லை என்ற வருத்தம் இல்லையா ?"

பாட்டி... "கண்ணம்மா.. யார் செய்தா, யார் செய்யாட்டா என்ன.

பெருமாள் என்னை இங்கு அனுப்பிய காரணம் , இந்த வீட்டை சேர்ந்தவர்களுக்கு செய்ய வேண்டும் என்பது.

எல்லாம் செய்து விட்டேன்.

திருப்தி தான்; குறை இல்லை.

அதே பெருமாள், என்னை பாத்துக்க ஒரு ஒர்ப்படியையும், ஒரு பெண்ணையும் கொடுத்திருக்கான்.

நீயும், வாழ்க்கையில் எந்த நேரத்திலும் குறை, கவலை படாதே.

எல்லாம் பெருமாள் பாத்துப்பான்.

நீ செய்யும் செயல் அத்தனையும் நீ செய்ய வில்லை. கோவிந்தன் செய்ய வைக்கிறான்.

இதில் பிற மனுஷாளை எப்படி குத்தம் சொல்ல முடியும்?" நிம்மதியாக இரு.

பாட்டி இன்னும் ஏதேதோ... பாசிடிவாக பேசினாள் -

இத்தனைக்கும் பள்ளிக்குப் போய் படித்தவள் இல்லை. அனுபவப்பாடம்;

புரிந்து கொண்ட வாழ்க்கை தத்துவம்.

கடைசியாக நான், "பாட்டி பணம் தரேன்; வாங்கிக்கறேளா" என்றேன்...

பாட்டி சிரித்தாள். அர்த்தம் பொதிந்த சிரிப்பு.

"பணமா, எனக்கா, எதுக்கு; நான் என்ன பண்ணப் போறேன்"

"பாட்டி, உங்களுக்கு வேண்டியது ஏதாவது, அல்லது சாப்பிட... " என்று இழுத்தேன். அதற்கும் சிரிப்பு.

"கோவிந்தன் என் பெண் மூலமாக என்னை பார்த்துப்பான். இதே திண்ணையில், அவனை பார்த்துக்கொண்டே ஒரு நாள் போய் சேருவேன்.

அந்த நாளைக்காக நான் நொந்து போய் காத்திருக்க வில்லை.

அதுவும் பெருமாளுக்கு தெரியும் என்னும் போது, நான் எதுவுமே யோசனை செய்ய அவசியம் என்ன.

எனக்கு பணமெல்லாம் வேண்டாம்"

என் புத்தி...உள்ளே போய், (ரொம்ப சிறிய போர்ஷன்) ... ஒரே ரூம்; கொஞ்சம் தடுத்து சமையல் அறை.

"மாமி, உங்க கிட்ட பழைய நாள் பாத்திரம் எல்லாம் இருக்கா ? எனக்கு ஆசை " என்றேன்.

மாமி சிரித்துக் கொண்டே, "நானே பாத்திரம் தேய்ப்பதால், அதெல்லாம் கட்டி ஆளமுடியாமல் எல்லா வற்றையும் போட்டு விட்டேன். தேவைக்கு வேண்டியது மட்டும் இருக்கு"

பாட்டியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன்; கிளம்ப மனமே வரல்ல;

"பாட்டி, உங்க கிட்ட பேசினா, மனது லேசாகிறது !!"

"முடிந்தால் வாயேன்; எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசு" என்று வழி அனுப்பினாள்.

ஒரு சலிப்பு, அலுப்பு கிடையாது;

ஆசைகள் கிடையாது;

அந்த திண்ணையில் ஒரு தவம் மாதிரி இருக்கிறாள்.🙏🙏🙏
யார் சொன்னது ரிஷிகள் காட்டில் தான் வாழ்கிறார்கள் என்று. 🙏🙏

கருத்துகள் இல்லை: