வியாழன், 28 மே, 2020

*லிங்க புராணம் ~ பகுதி — 02*

        அஷ்டாங்க யோகம்
=======================

ஈசன் திருவருளால் தெளிந்த ஞானத்தைப் பெற்று., அதனால் யோகத்தைக் கடைப்பிடித்தால் பிறவாப் பேரின்பமாகிய முக்தி கிட்டும். ஈசன் சனகாதி முனிவர்களுக்கு கூறிய யோக சாரம் ஜனகர்., அத்திரி., வியாசர்., முதலியோரால் உலகில் பிரசித்தமாயிற்று.

01. *பிரம்மச்சரியம்* : பற்றின்றி இருத்தல் இயமம். இது உண்மை பேசுவதாலும் ஒழுக்கம் வழுவாமையாலும் பற்றற்ற தன்மையாலும் ஏற்படும். மனம்., வாக்கு., காயம் (உடம்பு) இந்த மூன்றாலும் பெண்களைத் தீண்டாது இருப்பது பிரம்மச்சரிய நெறி. தூய்மையாக இல்லறத்தை நடத்துவதும் பிரம்மச்சரிய நெறியைச் சேர்ந்ததே. வானப்பிரஸ்த ஆசிரமம் கடைபிடிப்போர் முற்றும் துறந்த சந்நியாசிகள்., மனைவியருடன் காட்டில் உறைவர்.

02. *நியமம்* :  பற்றற்று இருக்குமாறு உள்ளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது நியமம். இதன் மூலம் மகிழ்ச்சி., சவுசம்., தவம்., ஜபம்., சிவ பிரணிதானம் ஆகியவற்றை அடையலாம். ஆசையின்மை என்ற மண்ணால்., ஞான நீரில் உள்ளத்தை நீராட்டித் தூய்மை செய்தல் அகச்சவுசம் எனப்படும். புனித நீராடி., திருநீறு அணிதல் புறச்சவுசமாகும். தவம் என்பது சாந்திராயண விரதம் அனுஷ்டிப்பதாகும். அதாவது., அமாவாஸை அன்று உபவாசம் இருந்து மறுநாள் முதல் நாள் ஒரு கவளம்., இரண்டாம் நாள் இரண்டு கவளம்., என்று கூட்டிக் கொண்டே சென்று பௌா்ணமி அன்று மறுபடியும் உபவாசம் இருக்க வேண்டும். பின்னர் பௌா்ணமிக்கு பிறகு பிரதமை அன்று 14 கவளம் உண்டு பின்பு நாளொன்றுக்கு ஒரு கவளமாக குறைத்துக் கொண்டே வந்து அமாவாஸை தினம் திரும்பவும் உபவாசம் இருக்க வேண்டும். மறை நெறிகளில் நின்று ஆசிரம நிலைகளுக்கு ஏற்ப இருப்பது மகிழ்ச்சியாகும். ஈசனைத் தியானித்தல் சிவப்பிரணிதானம் ஆகும்.

03. ஆசனம் : யோக நிலைக்கான அங்கங்களில் ஆசனமும் ஒன்று. அது பத்மாசனம் போன்ற பல..... அவற்றில் ஒன்றைக் கடைபிடிக்க வேண்டும்.

04. *பிராணாயாமம்* : ஏதேனும் ஒரு பொருத்தமான ஆசனத்தில் அமர்ந்து பிராணாயாமம் செய்ய வேண்டும். அது மூன்று வகை. பிராணாயாமம் செய்யும் போது வியர்வை தோன்றினால் அதமம்., மனதில் சஞ்சலம் இருந்தால் மத்திமம்., சிந்தையில் மகிழ்ச்சி ஏற்படின் உத்தமம். ரேதஸ் மேல் நோக்கி எழும் மந்திரம் ஜபித்துப் பிராணாயாமம் செய்வது சகற்பம் என்றும்., இன்றி செய்வது விகற்பம் என்றும் பெயர் பெறும். நம் உடலில் பத்து வித வாயுக்கள் உள்ளன....
அவை.....

04.a) உயிருக்கு அத்தியாவசியமானதால் இதயத்தில் தங்குவது *பிராண வாயு.*

04.b) கீழ்நோக்கிப் பிரிவது *அபான வாயு.*

04.c) உடலெங்கும் நிறைந்து இரத்த ஒட்டம்., சீரணமான உணவு உடலில் பரவ உதவுவது *வியான வாயு.*

04.d) உறுப்புகளின் சந்திகளில் தங்குவது *உதான வாயு.*

04.e) உடலைச் சமனப்படுத்தவது *சமன வாயு.*

04.f) விக்கல்., கக்கல் ஏற்படக் காரணமானது *கூர்ம வாயு.*

04.g) தும்மலை உண்டாக்குவது *கிரிகா வாயு.*

04.h) கொட்டாவிக்கு உதவுவது *தேவதத்த வாயு.*

04.i) உடலை வீங்கச் செய்வது *தனஞ்செய வாயு.*

04.j.) பாடுதல்., கண் சிமிட்டல்., மயிர்க் கூச்சலுக்கு உதவுவது *நாகன் வாயு.*

இந்தப் பத்து வித வாயுக்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளல் மிகவும் அவசியம்.

05. *பிரத்தியாகாரம்* : இச்சைகளினால் பாதிக்கப்படும் ஐம்புலன்களைத் தடுத்து நிறுத்துவது இது.

06. *தாரணை* : புலன்களை அடக்கி மனதில் தெளிவை ஏற்படுத்தி ஒரு நிலையில் நிறுத்துவது.

7. *தியானம்* : ஆதியந்தமில்லாப் பரம்பொருளை மனக்கண்முன் நிறுத்தி நிலைப்பது தியானம் ஆகும்.

08. *சமாதி* : ஈசனைத் தியானித்து மனம் உருகி மெய்மறந்த நிலையில் இருப்பது சமாதி ஆகும்.

இந்த எட்டும் யோகமும் அங்கங்கள் ஆகும்.

யோகம் கடைப்பிடிக்கும் போது பல இடையூறுகள் ஏற்படும். அவை... *நோய்., ஐயுறல்., சிரத்தையின்மை., பிரமாதம்., விஷயங்களில் இச்சை., துன்பம்., அப்பிரதிஷ்டை., பிராநிதி தரினம்* என்று கூறப்படும்., ஆதிதெய்வீகம்., ஆதிபௌதிகம்., ஆத்யாத்மிக துக்கங்கள் என்பன. இவையன்றி குறிப்பாக உணரக்கூடிய உபசருக்கம் ஆறு உள்ளன. அவை முறையே பிரதிபை., தேவதரிசனம்., சிரவணம்., வார்த்தை., சுவாதம்., ரசனை ஆகும். மேலும் பஞ்சபூதத்தின் குணங்கள்., பிரம்மத்தின் குணங்கள் என்று பல குணங்களும் விளக்கப்பட்டன. யோகியானவ(ள்)ன் தன் முயற்சிக்கு ஏற்படும் இடையூறுகளை நன்குணர்ந்து அவற்றை விலக்கி., எம்பெருமான் திருவடிகளை சேவித்தால் அவர் அருளைப் பெற்று முக்தி அடைவா(ள்)ன்.

யோகத்தைக் கடைப்பிடித்து ஈசன் அருள் பெறலாம். அதுமட்டுமின்றி நல்லறத்தைக் கடைபிடித்து அவ்வழி நின்றோர்க்கும் ஈசன் அருள் கிட்டும். ஒரு சமயம் பார்வதி தேவி சிவபெருமானிடம்., எந்த வழியில் வழிபட்டால் அவரது அருள் கிடைக்கும் என்று கேட்டார். ஒரு சமயம் பிரம்மனிடம் தான் கூறியதைப் பார்வதிக்கு எடுத்துரைத்தார். மஹாமேரு முதல் மாந்தர்கள் வரை எவராக இருந்தாலும் உள்ளம் கனிந்து மனமுருகி என்னிடம் செலுத்தும் பக்திக்கு நான் அருள் செய்வேன் என்றார்.

தொடரும்.....

🕉️ *ஓம் நமச்சிவாய* 🕉️

*தேவமுனி ப்ரவரார்சித லிங்கம்.,*
*காமதஹன கருணாகர லிங்கம் |*
*ராவண தர்ப வினாஸன லிங்கம்.,*
*தத்-ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||*

கருத்துகள் இல்லை: