செவ்வாய், 15 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 64 ॐ

        {சரித்திரத் தகவல்கள்}

நந்திவர்ம பல்லவன் வழிபட்ட இடத்திலேயே அவனுக்குப் பின்னர் பல நூறு ஆண்டுகள் கழித்து அச்சுதராயன் பிரதிஷ்டை செய்தான் எனவும் அதன் பின்னரே 1597ல் கொண்டம நாயக்கனால் விரிவு செய்யப்பட்டது என்பதையும் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் திரு C.S.ஸ்ரீநிவாசாச்சாரியார் என்பவர் எழுதி இருப்பதாயும் தெரிய வருகின்றது. இதற்கும் பின்னர் கி.பி.1643ல் 3ம் ஸ்ரீரங்கராயன் என்பவனால் பெருமாள் கோயிலை மேலும் விரிவு படுத்த எண்ணி அவனாலேயே புண்டரீகவல்லித் தாயார் சந்நிதியும் அமைக்கப்பட்டது. அப்போது சில சிவ சந்நிதிகள் இடிக்கப் பட்டதாயும் அதனால் தீட்சிதர்களுக்கும் விஷ்ணு கோயிலின் பட்டாச்சாரியார்களுக்கும் ஏற்பட்ட பகைமை முற்றிப் போய் அது வெகு காலம் நீடிக்க கூடாது என இரு தரப்புமே ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாயும் தெரிய வருகின்றது. அதன் படி இனி பெருமாள் கோயிலை விரிவு படுத்தும் பணியை வைணவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் பெருமாளுக்கு என தனியாக பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் தனித்துச் செய்யப்படமாட்டாது எனவும் இருதரப்பிலும் நடந்த பேச்சு வார்த்தைகளில் உறுதி செய்யப் பட்டிருக்கின்றதாயும் சொல்லப் படுகின்றது. ஆனாலும் இதற்கான ஆதாரம் என்று சொல்ல முடிவதோ கி.பி.1862ல் வைணவர்களுக்கும் தீட்சிதர்களுக்கும் ஏற்பட்ட வழக்கின் ஆதாரமே கிடைக்கின்றது என்றும் நம்பப்படுகின்றது. இதற்கான நீதிமன்றத் தீர்ப்பும் கி.பி.1867-ல் கிடைத்துள்ளது எனவும் சொல்கின்றார்கள். இந்தத் தகவல்கள் கலைமாமணி பேராசிரியர் திரு.க.வெள்ளைவாரணனார் எழுதிய "தில்லைப் பெருங்கோயில் வரலாறு" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய வேண்டுவோர் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம். மேற்கண்ட தகவல்கள் அதாவது நந்திவர்மபல்லவனால் தான் முதலில் பெருமாள் கோயில் கட்டப்பட்டது என்று எழுத ஆரம்பித்த சிதம்பர ரகசியம் பதிவுகள் அனைத்தும் நண்பர் ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டது. என்றாலும் இவை மிகுந்த விவாதத்துக்கு உள்ளானது. முதலில் சொன்ன விஷ்ணு தான் சிவனின் நாட்டியத்தைக் காண சிதம்பரம் வந்தார் என்ற என்னுடைய கூற்றையே நான் மறந்து விட்டேன். சிவன் கோயில்களில் விஷ்ணு கட்டாயமாய் இடம் பெறுவார் என்பதையும் நன்கு அறிவேன். புராணக் கதையையும் மறக்கவில்லை. மற்றும் நான் எழுதிய எதையும் மறக்கவில்லை அதே சமயம் நான் சிதம்பரம் சென்றிருந்தபோது கோயிலில் விஷ்ணு சுற்றுப் பரிகார தேவதையாக இருந்தவர் தனி இடம் பெற்றது நந்திவர்மபல்லவனாலேயே என்று தீட்சிதர் உறுதி செய்ததையுமே எழுதி உள்ளேன். சிதம்பரம் கோயிலில் விஷ்ணு முதலிலேயே இல்லை என சொல்லவில்லை. மற்ற படி இதன் மூலம் யார் மனமாவது புண்பட்டிருக்குமானால் என்னுடைய மன்னிப்பையும் கோருகின்றேன். பொதுவாகக் கோயில் வரலாறு என எழுதும் போது சிதம்பரம் கோயிலுக்குக் கட்டுமானப் பணிகளில் உதவிகள் செய்த அரசர்கள் பற்றியும் இதற்கு முன்னர் எழுதினேன். அந்தமாதிரியே இப்போது விஷ்ணு கோயிலின் திருப்பணிகள் செய்த அரசர்களைப் பட்டியலிட வேண்டி அம்மாதிரிச் செய்தேன். என்னைப் பொறுத்தவரை எனக்கு இதில் எந்தவிதமான வித்தியாசமோ அல்லது தவறாகவோ தெரியவில்லை. அம்மாதிரி நான் எழுதியதாய் ஒரு கருத்து யாருக்கானும் இருந்தால் அது அவர்கள் சொந்தக் கருத்து. என்னை எவ்விதத்திலும் பாதிக்காது. எனக்குக் கிடைத்த தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன். அவ்வளவே! இன்னும் சில தகவல்கள் கிடைத்ததும் இதை முடித்துவிடுவேன்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
மொத்தம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

1. பெண் சாபம்,
2. பிரேத சாபம்,
3. பிரம்ம சாபம்,
4.  சர்ப்ப சாபம்,
5. பித்ரு சாபம்,
6.  கோ சாபம்,
7. பூமி சாபம்,
8. கங்கா சாபம்,
9.  விருட்ச சாபம்,
10. தேவ சாபம்
11. ரிஷி சாபம்
12. முனி சாபம்,
13. குலதெய்வ சாபம்

அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1. பெண் சாபம் :

இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

2. பிரேத சாபம் :

இறந்த மனிதனின் உடலை வைத்துக் கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

3. பிரம்ம சாபம் :

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

4. சர்ப்ப சாபம் :

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

5.  பித்ரு சாபம் :

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும்,பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

6.  கோ சாபம் :

பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும்போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

7. பூமி சாபம் :

ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமி சாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

8. கங்கா சாபம் :

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.
கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

9. விருட்ச சாபம் :

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

10. தேவ சாபம் :

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

11. ரிஷி சாபம் :

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

12. முனி சாபம் :

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

13. குலதெய்வ சாபம் :

இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.

திங்கள், 14 அக்டோபர், 2019

சிதம்பர ரகசியம் பகுதி : 63 ॐ

{சில தகவல்களும் பதில்களும்}

பல புத்தகங்களும் வாங்கிப் படிக்க முடிய வில்லை தான் இல்லை என்று சொல்ல வில்லை ஆனால் அதற்காகச் சான்றுகள் ஏதும் இல்லாமலும் எதுவும் எழுதவில்லை. என்னிடம் இருக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே எழுதுகின்றேன். இதில் காய்தல் உவத்தல் பார்ப்பது அவரவர் கண்ணோட்டமே அன்றி என் தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. காதில் காலிப்ளவர் வைக்க முடியாட்டாலும் குறைந்த அளவுக்கு ஒரு கனகாம்பரமாவது வைக்கலாம் என்று எண்ணம். மற்றபடி இங்கே தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அனைத்துக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு மேலே தொடருகின்றேன்.

இரண்டாம் குலோத்துங்கன் மகாவிஷ்ணு சிலையை அப்புறப்படுத்தியது பற்றிப் பார்த்தோம். இது பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரை இருப்பது பற்றி நண்பர் கொடுத்த தகவல்களிலேயே இருக்கின்றது. என்னுடைய வேலைப் பளுவினால் என்னால் முடிந்த அளவுக்கு பதிவிடுகிறேன். மேற்கண்ட தகவல்கள் இருப்பது இவற்றால் சிற்றம்பலமான சிவாலயவழிபாட்டையும் தெற்றியம்பலமான சித்திர கூட வழிபாட்டையும் முறைப்படி புரிந்து வந்தவர்கள் தில்லை மூவாயிரவர் என்பது விளக்கமாம் (சென்னைப் பல்கலைக் கீழ்த்திசை மொழி ஆராய்ச்சித்துணர் தொகுதி III (1938-39) பகுதி I) என்று ஆராய்ச்சியாளரும் வைணவரும் ஆன திரு மு.ராகவ ஐயங்கார் அவர்கள் எழுதி இருப்பதாய்த் தெரிய வருகின்றது. குலோத்துங்கன் விஷ்ணு சிலையை அப்புறப்படுத்தியதை வைத்து அவன் வைணவத்துக்கு எதிரி எனச் சித்திரிக்கப்பட்டதும் தவறு என்று (பிற்காலச் சோழர் சரித்திரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு பக்கம் 95,96 பார்க்க).சொல்லுவதாய்த் தெரிய வருகின்றது. கிருஷ்ணதேவராயர் காலத்திற்குப் பின்னர் அச்சுதராயர் காலத்தில் மறு பிரதிஷ்டை செய்யப்பட்டதும் அரசனால் நியமிக்கப்பட்ட வைணவர்களே விஷ்ணுவுக்குப் பூஜை வழிபாடுகளை நடத்த ஆரம்பித்தனர். அப்போதில் இருந்து இங்கே வைகானசமுறையில் வழிபாடுகள் நடை பெறுகின்றன. பின்னர் கொண்டம நாயக்கன் காலத்தில் இந்த சந்நிதித் தனிக்கோயிலாக மாறும் பெருமையப் பெற்றது. தில்லை வாழ் அந்தணர்களான தீட்சிதர்கள் இதை ஆட்சேபித்து நடராஜருக்கே என உரிய கோயிலில் விஷ்ணுவிற்குத் தனிக் கோயில் வேண்டாம் எனச் சொல்லியும் போராட்டங்கள் நடத்தியும் கொண்டம நாயக்கன் கோயிலைக் கட்டினான் என்றும் தீட்சிதர்கள் சிலர் அப்போது நடந்த போராட்டத்தில் கொண்டமநாயக்கனின் வீரர்களால் சுடப்பட்டு இறக்க நேரிட்டது எனவும் அதை நேரில் பார்த்த ( Jesuit Father N. Pimenta) என்னும் பாதிரியார் கொண்டம நாயக்கன் செய்த இக்கொடுங்கோன்மையை நேரில் கண்டு வருந்தியதுடன் இக்கொடுஞ் செயலைத் தம்முடைய யாத்திரைக் குறிப்பிலும் குறித்துள்ளார்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 62 ॐ

{பெருமாள் கோயில் சில தகவல்கள்}

சிதம்பரம் கோயில் எப்போது எனக் காலம் நிர்ணயிக்க முடியாத கால கட்டத்தில் இருந்தே ஈசன் கோயிலாகவே இருந்து வந்தது. சிவனடியார்கள் போற்றிப் பாடும் இடமாகவும் சிவனடியார்களால் கோயில் எனக் குறிப்பிடப்படும் இடமாகவுமே இருந்து வந்தது. தேவார மூவர் காலத்திலேயும் மாணிக்கவாசகர் காலத்திலேயும் இங்கே ஈசன் மட்டுமே அன்னையோடு குடி இருந்து வந்ததாயும் தெரிய வருகின்றது. பல தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் இந்தக் கோயிலையே தலைமைக் கோயில் எனச் சிறப்பித்துச் சொல்லியும் இருக்கின்றன. திரு ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய தேவாரத் திருப்பதிகங்களும் மாணிக்கவாசகர் அருளிய திரு வாசகம் திருச்சிற்றம்பலக் கோவையாகிய அருள் நூல்களும் திரு மூலர் திருமந்திரம் முதல் திருத்தொண்டர் புராணம் போன்றவைகளும் சிதம்பரம் கோயில் சைவத்தின் தலைமைக் கோயில் எனச் சிறப்பித்துச் சொல்லி இருக்கின்றன. பல கல்வெட்டுக்களும் அவ்வாறே குறிப்பிட்டு வருகின்றன. இந்நிலையில் தில்லைக் கோயிலில் கோவிந்தராஜப் பெருமாள் வந்த வரலாறு என்ன? நண்பர் ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும் சமீபத்தில் சிதம்பரத்தில் தீட்சிதரிடம் பேசி உறுதி செய்து கொண்டதும் ஆன அந்தத் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதன் முதல் நந்திவர்ம பல்லவன் காலத்திலேயே கோவிந்தராஜப் பெருமாளுக்கு எனத் தனியாக ஒரு சன்னதி ஏற்படுத்தப்பட்டது என்று தெரியவருகின்றது. கி.பி726-775 வரை ஆட்சி செய்த நந்திவர்ம பல்லவன் தன் ஆட்சியின் ஆரம்ப காலத்திலே சைவ வைணவ மதங்களை ஒன்றாகக் கருதி வந்தாலும் பின்னர் திருமங்கை ஆழ்வாரால் பரம வைணவன் ஆகிவிட்டான் என வரலாறு கூறுகின்றது. அவன் வேண்டுகோள் பேரிலும் மன்னனுக்கே இயல்பாக எழுந்த ஆசையினாலுமே தில்லையில் கோவிந்தராஜப் பெருமாளுக்கு எனத் தனியாக சன்னதி எழுப்பப்பட்டு அங்கே பிரதிஷ்டையும் செய்யப் பட்டிருக்கின்றார். இதைத் திருமங்கை ஆழ்வார் தன் பாசுரத்தில் இவ்வாறு கூறுகின்றார்.

"பைம் பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படைமன்னவன் பல்லவர்கோன்பணிந்த
செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச் சித்திரகூடம் சென்று சேர்மின்களே"
(பெரிய திருமொழி 3-2-3)

இதிலே சித்திரகூடம் என்பதற்குத் தெற்றியம்பலம் என அர்த்தம் வருவதாயும் தெற்றி=திண்ணை எனப் பொருள் கொள்ள வேண்டும் எனவும் தமிழறிஞர்கள் சொல்கின்றனர். தெற்றியம்பலம் என்பது சிறிய திண்ணை எனப் பொருள் எனவும் சிறிய திண்ணை போன்ற இடத்திலேயே பெருமாள் கோவில் கொண்டிருந்திருக்கின்றார் எனவும் சொல்லப்படுகின்றது. இந்த அரசன் பற்றிய பட்டயச் செய்திகளில் இறைவன் திருவடிகளைத் தவிர வேறொன்றுக்கும் இவன் தலை வணங்கியதில்லை என்று இருப்பதில் இருந்தே இவன் வைணவனாக மாறியது புலனாகின்றது. தவிர இங்கே பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டதில் இருந்தே தில்லையம்பல நடராஜரைச் சுற்றி இருக்கும் பரிவார தேவதைகளில் ஒருவராகவே இருந்து வந்திருக்கின்றார். ஆகவே இந்த கோவிந்தராஜரின் வழிபாடுகளையும் தில்லை மூவாயிரவர் எனப்படும் தீட்சிதர்களே செய்து வந்திருக்கின்றார்கள் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இன்றியே! இது போலவே காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலிலும் பரிவார தெய்வமாகவே பெருமாள் எழுந்தருளி இருக்கின்றார் என்பதும் "நிலாத்திங்கள் துண்டத்தான்" என அதே திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்டிருப்பதும் அங்கே இன்றளவும் சிவாச்சாரியார்களாலேயே பெருமாள் பூஜிக்கப் படுகின்றார் என்பதும் கவனிக்கத் தக்கது.

"மூவாயிரநான் மறையாளர் முறையால் வணங்க
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரகூடம்" (பெ.தி. 3.2-8)

"தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்" (குல.தி. 10.2)

என்று பெரிய திருமொழியிலும் குலசேகர ஆழ்வாராலும் பாடப் பட்டு வந்தது. பின்னாட்களில் வைணவர்கள் கைக்குப் போனதும் அப்போது நடந்தவை பற்றியும் இனி வரும் நாட்களில்  பார்ப்போம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 61 ॐ
அரியும், சிவனும் ஒண்ணுதாங்க!!!!

தனக்கென ஒரு மகன் இல்லையே என வருந்திய மகாவிஷ்ணுவானவர் இறைவனைக் குறித்துத் துதிக்க தன்னை ஒதுக்கிவிட்டாரோ என நினைத்த தேவியானவள் மனம் வருந்த விஷ்ணுவுக்குப் பிள்ளைப் பேறும் கூடவே சிவனையும் தேவியையும் வணங்கித் துதிக்கும்படியான கட்டளையும் கிடைக்கின்றது. அப்போது தனக்குப் பிள்ளைப் பேறு அளித்த சிவனையும் குடும்பத்தோடு பார்க்க விரும்பிய விஷ்ணு அவ்விதமே இறைவனை வேண்ட இறைவன் காட்சி அளித்த கோலமே சோமாஸ்கந்த கோலம். நடுவிலே ஸ்கந்தன் அமர்ந்திருக்க இரு பக்கமும் தாய் தந்தையர்கள் இருக்கக் காட்சி கொடுத்த அந்த விக்ரகத்தைப் பூஜித்து விஷ்ணு பெற்ற பிள்ளையே மன்மதன் ஆவான். இந்த மகாவிஷ்ணு எந்நேரமும் இறைவனைத் தன் மூச்சிலேயே நிலை நிறுத்தி இதயத்திலே வைத்து மானசீகப் பூஜை செய்ய இறைவன் மகாவிஷ்ணுவின் இதயத்திலே ஆனந்த நடனம் ஆடினார். அப்போது அதற்குத் தாளம் விஷ்ணுவின் மூச்சுக் காற்றே சற்றும் சத்தமே இல்லாத இந்த மூச்சுக்காற்றின் தாளத்திற்கு ஏற்ப இறைவன் ஆடிய நடனமே "அஜபா நடனம்" என்று சொல்லப் படுகின்றது.
பின்னர் மகாவிஷ்ணு இறைவனின் ஆனந்தத் தாண்டவத்தைக் காணவிரும்ப இறைவன் தான் சிதம்பரம் க்ஷேத்திரத்திலே ஆடப்போவதாயும் ஆகவே அங்கே வந்து காணுமாறும் சொல்லத் தன் பரிவாரங்களோடு சிதம்பரத்திலே எழுந்தருளினார் மகாவிஷ்ணு. இவரே இன்றளவும் கோவிந்தராஜர் என்ற பெயரோடு சிதம்பரம் என்று சைவர்களாலும் திருச்சித்திர கூடம் என்று வைஷ்ணவர்களாலும் அழைக்கப் படும் சிதம்பரத்தில் கோயில் கொண்டுள்ளார். இருவரும் ஒருவரே என்பதே பெரும்பாலான பக்தர்களின் கூற்றும் கூட. இதை மெய்ப்படுத்துவதே போல் பல பக்திமான்களும் பாடியுள்ளனர், போற்றித் துதித்துள்ளனர் இருவரையும் பற்றி. முதலாழ்வார்களின் பாசுரத்தில் காணப்பட்டபடி அரன் நாரணன் நாமம் ஆன் விடை யுன்னூர்தி உரைநூல் மறை உறையும் கோயில் வரை நீர் கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி உருவமெரி கார்மேனி ஒன்று எனப் பொய்கை ஆழ்வாரும்,

ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்றனும் மனத்து வைத்து உள்ளலும் இருபசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே!"
என்று நம்மாழ்வாரும் சொன்னபடிக்குக் காட்சி அளிக்கின்றனர், சிதம்பரத்தில் நடராஜரும், கோவிந்தராஜரும். சில கேள்விகளுக்குப் பதிலுக்காகக் காத்திருத்தலில் பல நாட்கள் ஆகிவிட்டன. ஆகவே பதில் வரும் போது வரட்டும் என இதை முடிக்க எண்ணி உள்ளேன். பல மன்னர்களின் திருப்பணிகளாலும் பல பக்தர்களின் பெரும் முயற்சியாலும் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகள் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எப்போது ஆரம்பித்தது, எப்போது கட்டப்பட்டது என்று நிர்ணயம் செய்யமுடியாத காலத்தில் இருந்தே இருப்பதாய்ச் சொல்லப் படும் இந்தக் கோயிலின் திருப்பணிகள், நாளடைவில் ஒவ்வொரு பாகமாய்ச் சேர்க்கப் பட்டு ஒவ்வொரு பாகமும் ஒவ்வொருவரால் கட்டப் பட்டு இன்று முழுப் பூர்த்தி அடைந்த கோயிலாகக் காட்சி அளிக்கின்றது. மாணிக்க வாசகரின் திரு அகவல் ஒன்றிலே அவர் பாடிய வண்ணம்.

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி!
நீரிடை நான்காய்த் திகழ்ந்தாய் போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!
என்னும்படிக்கு, இந்தப் பூமியானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், நாற்றம் என்ற ஐந்து குணங்களையும், நீரானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் என்ற நான்கு குணங்களையும், தீயானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம் என்ற மூன்று குணங்களையும், வளியென்று சொல்லப் படும் காற்றானது சப்தம், ஸ்பரிசம் எனப்படும் இரு குணங்களையும் அண்டவெளியெனப்படும் ஆகாசம் ஆனது சப்தங்களால் மட்டுமே நிறைந்த ஒரே குணம் உடையதாகவும் காணப்படுகின்றன. இந்த அண்டவெளியின் சப்தம் இந்த ஆடலரசனின் ஆட்டத்தால் மட்டுமே நிறைந்து காணப்படுகின்றது. ஆகவே பஞ்சபூதங்களில் ஆகாயம் எனப்படும் ஆகாயமாகச் சிதம்பரம் க்ஷேத்திரத்தில் நடராஜர் ஆடலரசனாய்க் காணப்படுகின்றார். இந்த ஆடலரசனின் ஆட்டத்தைக் காண வந்த விஷ்ணுவும் இங்கே நிரந்தரமாய்க் கோயில் கொண்டு தினம் தினம் ஆடலரசனின் ஆட்டத்தைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கின்றார். திருவீழிமிழலைப் பதிகம் ஒன்றிலே சொன்னாற்போலே அரியும் சிவனும் ஒன்றே என்னும் கருத்தைப் பக்தர்களுக்கு நிலைநாட்டவே இவ்விதம் கோயில் கொண்டுள்ளனர் என்றும் சொல்லலாமோ????

"மண்ணினை உண்ட மாயன் தன்னைப் பாகங்கொண்டார்
பண்ணினைப் பாடி ஆடும்பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றுங்கொண்டார் காஞ்சிமாநகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தாரிலங்கு மேற்றளியனாரே!

(இது அப்பர் தேவாரம், குறிப்பிட மறந்திருக்கின்றேன், சுட்டிக் காட்டிய ஜீவாவுக்கு நன்றி)

ஓருருவம் மூவுருவம் ஆன நாளோ
நாரணனை இடப்பாகத்து அடைந்தார் போலும்."
என்றும்,
"அரியாகிக் காப்பான், அயனாய்ப் படைப்பான்,
அரனாயழிப்பவனுந்தானே!"

என்று அனைத்துமே அவன் ஒருவனே எனச் சொல்கின்றனர். அரியின் இதயத்தில், அரனும், அரனின் இதயத்தில் அரியும் குடி இருக்கின்றார்கள். இருவரும் ஒருவரே என்பதைச் சொல்லும் வண்ணம், "அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு" என்றும் சொல்லுவதுண்டு. சிவன் எந்தவிதமான அடையாளமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம் "அலிங்கம்" எனவும், விஷ்ணு எந்தவிதமான ரூபமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம், "அமூர்த்தி" எனவும் சொல்லப் படுகின்றனர்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.

அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்

வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்

தங்கம் தானம் தர தோஷம் விலகும்

பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்

தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்

நெய் தானம் தர நோயைப் போக்கும்

பால் தானம் தர துக்கநிலை மாறும்

தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்

நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்

தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்

தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்

கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்

பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்

ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்

அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.
குளிகன் கொடுப்பான்..!! குளிகன் கெடுப்பான்..!!!எப்போது..!  அறிவோமா..!!

குளிகை நேரம் கிடைக்க கொடுத்து வைத்திருத்திருக்க வேண்டும்.

தினமும் ராசி பலன் பார்த்து இன்றைய நாள் எப்படி இருக்கும் என தெரிய அனைவரும் ஆசை படுகிறோம்.

தினசரி பத்திரிக்கையில் ராசி பலன் பகுதியிலோ அல்லது காலண்டரிலோ குளிகை என்ற பகுதி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.

ராகு காலம்., எமகண்டம் தெரிந்த அளவு குளிகை பற்றி பலருக்கு தெரிவதில்லை.

வார நாட்கள் 7

நவகிரகம் 9

7 கிரகங்களுக்கு 7 நாட்கள்.

ஆனால் ராகு, கேதுவிற்கு தினசரி 1½ மணி நேரம் ராகு காலம்., எமகண்டமாக பிரித்து கொடுக்கப்படுகிறது. அதனால் ராகு., கேதுவிற்கு கிழமை கிடையாது.

ஆனால் குளிகை யார்.?

குளிகன் சனி—ஜேஷ்டா தேவியின் புதல்வன்.

ராகு., கேதுவை போல் தினமும் பகலும்., இரவும் 1½., 1½ மணி நேரம் இவருக்கும் பிரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த காலத்தில் செய்யும் செயல்கள் பெரும் வளர்ச்சி பெறும் என்பதால் #அசுப காரியங்களை தவிர்ப்பது நல்லது.

ஆனால்., எந்த நல்ல செயல் செய்தாலும் நல்ல வளர்ச்சியை கொடுக்கும்.

குறிப்பாக கடன் கழுத்தை நெரிப்பவர்கள் குளிகை காலத்தில் கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் விரைவில் அடைபடும்.

*"சுப செயலான நகை வாங்குவது., தொழில் தொடங்குவது., நடவு செய்வது போன்ற சுப நிகழ்ச்சிகள் தாராளமாக செய்யலாம்."*

*"அது போல் கடன் வாங்குவது., பிரேதத்தை தூக்குவது போன்ற அசுப நிகழ்ச்சியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்."*

கிழமைகள் ~~
பகல் பொழுது
மற்றும்
இரவுப் பொழுது

ஞாயிறு ~~
பகல் ~ 03:00 — 04:30
மற்றும்
இரவு ~ 09:00 — 10:30

திங்கள் ~~
பகல் ~ 01:30 — 03:00
மற்றும்
இரவு ~ 07:30 — 09:00

செவ்வாய் ~~
பகல் ~ 12:00 — 01:30
மற்றும்
இரவு ~12:00 — 01:30

புதன் ~~
பகல் ~ 10.30 — 12.00
மற்றும்
இரவு ~ 03.00 — 04.30

வியாழன் ~~
பகல் ~ 09.00 — 10.30
மற்றும்
இரவு ~ 01.30 — 03.00

வெள்ளி  ~~
 பகல் ~ 07.30 — 09.00
மற்றும்
இரவு ~12.00 — 01.30

சனி ~~
பகல் ~ 06:00 — 07:30
மற்றும்
இரவு ~ 10:30 — 12:00

மேலே குறிப்பிட்டுள்ள தினசரி குளிகை கால காலத்தை பயன்படுத்தி முன்னேற்றம் பெறுங்கள்.

கடன் தொல்லை கடுமையாக இருப்பவர்கள் செவ்வாய்கிழமை பகல் 12:00 — 01:30குள் கடனில் சிறுபகுதியை கொடுங்கள்.

நீங்களே ஆச்சிரியபடும் அளவிற்கு கடன் அடைபடுவதை கண் முன் காணலாம்.

பலரும் பயன் பெற்ற மிக எளிய பரிகாரம்.

முதலில் கொடுத்திருக்கும் நேரம் பகல் பொழுது இரண்டாவது இரவு பொழுது குளிகன் நேரம் .

மொத்தம் நவ கிரஹங்கள் அதாவது நவ என்றல் ஒன்பது. ஆனால் ஏழு கிரஹங்களுக்கும் அதன் பெயரிலேயே ஒரு நாள் இறைவனால் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது .

ராகுவுக்கு கேதுவுக்கும் நாள் கொடுக்கப்படவில்லை என்றாலும் வாரத்தின் ஏழு நாளிலும் ஒரு முகூர்த்த நேரம் ( 1½ ஒன்றரை மணி நேரம் ஒரு முகூர்த்த நேரம் ) கொடுக்க பட்டுள்ளது.

அதேபோன்று குளிகனுக்கும் வாரத்தில் ஏழு நாட்களிலும் காலை மற்றும் இரவு என்று இரண்டு வேளையும் ஒரு முகூர்த்த நேரம் கொடுக்கப் பட்டுள்ளது.

எல்லா நாட்களும் இரண்டு வேளையும் ஒரு முகூர்த்த நேரம் பரிசாக பெற்றுள்ள குளிகன் மிகவும் சக்தி வாய்ந்தவன் என்பது இதிலிருந்து புலனாகிறது..!

ஓம் ஸ்ரீ மஹா பைரவாய நமஹ..! என்று எவனொருவன் பைரவர் சன்னதி முன் ஜபிப்பதற்கு முன் விளக்கேற்றி செவ்வரளி மலர் சாற்றி அவர் முன் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் மாலை 3 முதல் 4.30 வரை குளிகன் காலத்தில் ஜபித்தால் கோடி மடங்கு பலன்.

ஏனென்றால் குளிகனுக்கு ஒன்றை., பல மடங்காக ஆக்கும் சக்தி உண்டு. அது அந்த நேரத்தில் நல்ல காரியங்கள் செய்தாலும் சரி., கெட்ட காரியங்கள் செய்தாலும் சரி., அது பல்கி பன் மடங்காக பெருகும் என்பது நிதர்சனமான உண்மை .

அனால் இந்த குளிகன் சூட்சும நேர மகிமை பலருக்கும் தெரியவில்லை.

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 60 ॐ

{நடராஜனும் & கோவிந்த ராஜனும்}

மாணிக்க வாசகர் காலம் பற்றிய கேள்விகளுக்கு இன்னும் பதில் வரவில்லை. வந்தால் தனிப்பதிவாய்ப்போடுகின்றேன். இப்போது நடராஜரும், கோவிந்தராஜரும் சேர்ந்தே தில்லையில் காட்சி அளிப்பதன் தாத்பரியத்தைப் பார்ப்போம். இதைப் பற்றி ஜெயஸ்ரீசாரநாதன் தன் பதிவில் மிக மிக அருமையாக எழுதி இருக்கின்றார். இங்கே ஜெயஸ்ரீ அந்த அளவுக்கு அழகாயோ விபரங்கள் கொடுத்தோ எழுத முடியா விட்டாலும் ஓரளவுக்கு அனைவருக்கும் புரியுமாறு எடுத்துச் சொல்லுகின்றேன். நமது முன்னோர்களால் இயற்கையே வணங்கப்பட்டு வந்தது. மழை பொழியச் செய்யும் வருணனும், இந்திரனும், வாயுவும், அக்னியும், நீரும் வணங்கப்பட்டது. எனினும் வேதங்களிலும், உபநிஷத்துக்களிலும் இவை அனைத்துக்கும் மேலே ஒன்று எல்லாவற்றிலும் சிறந்த ஒன்று படைப்புக்கும் அதைச் சேர்ந்த இருப்புக்கும் அழிவுக்கும் காரணம் என்று சொல்லி வந்தது வருகின்றது. எவராலும் காணமுடியாத இந்தப் பரப்பிரும்மத்தைக் காண ஞானமும் தேவை அனைவராலும் காணமுடியாது. இருந்தும் இல்லாதது. இல்லாமலும் இருப்பது போல் இருப்பது. இந்தப் பரப்பிரும்மத்தையே நாளாவட்டத்தில் மனிதர்கள் பல உருவங்களில் வணங்க ஆரம்பித்தனர். அவரவர்களின் வசதிக்கும் வணங்கும் செளகரியத்துக்கும் உணர்வுகளுக்கும் ஏற்ப இந்தக் கடவுள் பலவிதங்களில் உருவெடுக்க ஆரம்பித்தார். என்றாலும் வேதங்கள் சொல்லுவதோ ஒன்றே கடவுள் என்பது மட்டுமே. புராண காலங்களில் கடவுள் வழிபாடு பிரம்மா, விஷ்ணு, சிவன், கணபதி, ஸ்கந்தன், தேவி எனப் பல உருவங்களில் வழிபட ஆரம்பித்தனர். எனினும் அனைவருக்கும் அதிபதியும் அனைத்துக்கும் ஆதாரமும் ஆனவன் அந்தச் சர்வேஸ்வரனே என்பதில் சந்தேகம் இல்லை. அந்தப் பரமேஸ்வரனே பிரக்ருதியின் துணை கொண்டு இம்மூவரையும் சிருஷ்டி செய்ததோடு அல்லாமல் தன்னிலிருந்து தேவையான சக்தியையும் கொடுத்து இம்மூவரையும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்ய வைக்கின்றான். மனித வாழ்வின் மூன்று முக்கிய குணங்களையும் குறிக்கவல்லது அத்தொழில்கள். அம்மூன்று குணங்கள் : சத்வ குணம், ராஜச குணம், தமோ குணம் ஆகியவை ஆகும். இம்மூன்று குணங்களின் அடிப்படையிலேயே இம்மூர்த்திகளும் அமைந்தனர் என்பதும் உண்மை. இவர்களில் யார் பெரியவர் யார் சிறியவர் என்பதொன்றும் இல்லை. சில சமயம் விஷ்ணுவே பெரியவர் எனவும் சிலசமயம் பிரம்மா எனவும் சில சமயம் சிவன் எனவும் சொல்லலாம். ஒரே சக்தியின் வெவ்வேறு வடிவங்களே இவை. இவற்றுக்கென்று தனி உருவம் நாமாக அமைத்துக் கொண்டது தானே தவிர இவற்றில் பேதம் ஏதும் இல்லை. முத்தொழிலைச் செய்யும் ஈசன் அந்தத் தொழிலைச் செய்யும்போது தன் இடை விடாத ஆட்டத்தின் மூலம் இவ்வுலகின் ஒவ்வொரு இயக்கத்துக்கும் காரணம் ஆகின்றான். ஈசன் தன் நெஞ்சத்தில் விஷ்ணுவின் மூச்சுக்காற்றைச் சக்தியாய்க் கொண்டே இயங்குகின்றான். அதே போல் விஷ்ணுவாகிய கோவிந்தராஜரோ நடராஜனின் ஆட்டத்தின் தாளத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மூச்சு விட்டுக் கொண்டே அவனைத் தன் இதயத்தில் சுமந்து கொண்டு இவ்வுலகைக் காக்கின்றார். அந்த ஆட்டமும் தாளமும் இல்லை எனில் இவ்வுலகு இயங்குவது எங்கே? இருவரும் ஒருவரே. ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை. உண்மையான சிவசக்தி ஐக்கியம் சிவவிஷ்ணு சேர்ந்தே இருப்பதில் தான் உள்ளது. இந்த சிவ சக்தி ஐக்கியமே இந்தப் பிரபஞ்சத்தின் மூலகர்த்தாவும் ஆகும்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

சனி, 12 அக்டோபர், 2019

20:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

            20:ஸ்ரீ மூக சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                          (கி.பி. 398 -கி.பி.437 வரை)
ஸ்ரீ மூக சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்'நான்காம் சங்கரர்'என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்இவரின் தந்தை பெயர் வித்யாவதி,வானவியல் வல்லுனர் பிறவி ஊமையாக இருந்த ஸ்ரீ சங்கரேந்திரருக்கு ஸ்ரீவித்யா கநேந்திரர் அருளாள் பேச்சு வந்தது!
உடனே,'மூகபஞ்ச சதீ'என்னும் ஐநூறு அருட் பாடல்களைப் பொழிந்தார். நன்றிக் கடனாக மடத்துக்கே இவரைக் கொடுத்து விட்டனர் இவரின் பெற்றோர்.ஸ்ரீ மூகசங்கரர் காலத்தில் பேரரசனாக இருந்தவன்'சஹாரி விக்ரமாதித்யன்'.அவனது ஆட்சிகாலம் கி.பி.375-413 என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன.அவனுக்குக் கப்பம் கட்டிய வேந்தர்கள் காஷ்மீரப் பகுதிகளை ஆண்ட மாத்ருகுப்தனும்,ப்ரவரசேனனுமாவர்.இருவருமே ஸ்ரீ மூக சங்கரரிடம் பெரும் பக்தி உண்டு.வேலைக்காரனான மாத்ருகுப்தன் அரசனான கதையை சுருக்கமாக பார்ப்போம்.சிருவயதில் மாத்ருகுப்தன்,சஹாரி விக்ரமாதித்யன் அரண்மனையில் சந்தனம் அரைக்கும் தொழிலை செய்து கொண்டிருந்தான்.விக்ரமாதித்யன் காஷ்மீரத்தை வென்று அங்கு முகாமிட்டிருந்த இரவு நேரம்.நள்ளிரவு எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்க,மாமன்னன் திடிரென விழித்தான்
விளக்குகளெல்லாம் அனைந்திருந்தன.வேந்தன் விளக்கேற்ற காவலரை அழைத்தான்.மாத்ரு குப்தன் விளக்குடன் வந்தான்.நீ ஏன் தூங்கவில்லை என்று கேட்டான் அரசன்"புதிதாக வெற்றி பெற்ற அரசர் அலுப்பில் உறங்கலாம்.இப்படி உறங்கிய பாண்டவர்களின்
மைந்தர்களையும்,மைத்துனனையும் எதிரிகளின் தளபதியான அச்வத்தாமன் வெட்டியது இரவில்தான்"எனப்பொருள்படும்.
 ஸமஸ்கிருதக் கவிதையைச் சொல்லியபடியே விளக்கேற்றினான் சிறுவன்.மன்னன் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!சிருவனுக்கு வெகுமதி தர விரும்பி அவனை காஷ்மீரத்தின் மன்னனாக்க ரகசியமாக அரசாணை பிறப்பித்தான்.பிறகு மாத்ருகுப்தனிடம் தனது முத்திரை மோதிரத்தை அளித்து காஷ்மீர் தலைநகருக்கு அனுப்பினான்.நகர எல்லையில் தனக்களிக்கப்பட்ட அரச மரியாதைகளைக் கண்டு திக்குமுக்காடிப் போனான் மாத்ருகுப்தன்.சஹாரி விக்ரமாதித்யன் எதிர்பார்த்தும் இதைத்தானே!இப்படி எதிர்பாராத விதமாக மணிமுடி சூட்டப்பட்ட மாத்ருகுப்தனுக்கு நாளடைவில் கர்வம் மிகுந்தது.அதனால் எவரையும் மதிப்பதில்லை ஸ்ரீ மூக சங்கரருக்கு இச்செய்தி எட்டியது.அவனது குறையை உணர்த்தத் திருவுள்ளம் கொண்டார்.அரசன் இருப்பிடம் சென்றார்.ராமிலன் என்கிற குதிரை மாவுத்தனையும்,
மேது(மெந்தன்)என்கிற யானைப் பாகனையும் அழைத்து தனது அருள் நோக்கால் நினைத்தார்.இருவரும் கவி பாடும் ஆற்றல் பெற்றனர்.ராமிலன்,'மணிப்ரபா'என்ற கவிதை நாடக நூலையும்,மேது'ஹயக்ரீவ வதம்'என்கிற நாடக நூலையும் படைத்தனர்.
கவிதைத்திறன் என்பது'கர்வம் கொள்வதற்கல்ல'என்று புரிந்து கொண்டான் மாத்ருகுப்தன்.அவனது செருக்கு இருந்த இடம் தெரியாது மறைந்தது.மூக சங்கரரின் திருப்பாதங்களைப் பணிந்தான்.
ஸ்வாமி! தங்கள் கட்டளைப்படி ஏதாவது செய்தால் தான் மனம் சமாதானமாகும்"என்று வேண்டினான்.மன்னா!ஜீலம் நதி முதல் சிந்து நதி வரை அடர்ந்த காட்டுப்பகுதியாக இருக்கிறது.கொடிய மிருகங்கள் வாழ்கின்றன.முட்செடிகள் அடர்ந்துள்ளன.ஜனங்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.காட்டைத் திருத்திப் பாதை
அமைத்துக்கொடு"என்றார் ஜகத் குரு.அதை சிரமேற்க்கொண்டு நிறைவேற்றினான் மாத்ரு குப்தன் அந்த நெடுஞ்சாலை'சுஷ்மா'என அழைக்கப்படுகிறது.மாத்ரு குப்தன் ஸேது பந்தம் என்ற காவியத்தைப் படைத்து ஆசார்யாளுக்கு அர்ப்பணித்தான்.அரசாட்சியை ராஜ உரிமை பெற்ற ப்ரவரசேனனிடம் ஒப்படைத்து ஆசார்ய ஸ்வாமிகளிடம் உபதேசம் பெற்று'ஸார்வ பௌமன்'என்னும் நாமத்தோடு"இளைய குரு"ஆனார்.ப்ரவரசேனன் ஸார்வபௌமர் ஜீ விதகாலம் வரை காஷ்மீர் நாட்டின் வரி வருமானம் முழுவதையும் ஸ்ரீ காமகோடி பீடத்துக்கு அனுப்பி வந்ததாய் ராஜதரங்கணீயம் கூறுகிறது.இப்படி செயற்ரிய செயல்களைச் செய்த மூக சங்கரர் கி.பி.437-ஆம் ஆண்டு,தாது வருடம்,ஆவணி மாதம்,பௌர்ணமியன்று கோதாவரி தீரத்தில் சித்தியடைந்தார்.
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 59 ॐ
   {கோவிந்தராஜப் பெருமாள்!}

அடுத்ததாய் நாம் காணப் போவது சிதம்பரம் கோயிலுக்கு உள்ளேயே அமைந்திருக்கும் கோவிந்தராஜப் பெருமாள் பற்றிய சில தகவல்கள். ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தை மனதுக்குள்ளேயே கண்டு களித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு பின்னர் தான் தினமும் நேரில் கண்டு ஆனந்திக்க வேண்டியே இங்கே கோயில் கொண்டாரோ எனச் சொல்லும்படிக்கே ஈசனின் தாண்டவக் கோலத்தைப் பார்த்தபடிக்கு கோவிந்தராஜப் பெருமாளின் சன்னதி அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒரு கொடிமரம் கருடனுக்கு ஒரு சன்னதி பலிபீடம் முதலியன உள்ளன. சிறிய ஒரு பிரகாரமும் உள்ளது. நிருத்த சபைக்கு அடுத்து மகாலட்சுமிக்கு எனத் தனியாக ஒரு சன்னதி உள்ளது. இந்தக் கோயிலை ஸ்ரீவைஷ்ணவர்கள் புண்டரீகபுரம் என அழைப்பதால் அன்னையின் திருநாமம் இங்கே புண்டரீகவல்லித் தாயார் ஆகும். விஷ்ணுவின் சன்னதியையும் இந்த விஷ்ணுவின் கோயிலையும் திருச்சித்திரகூடம் என வைஷ்ணவர்கள் அழைக்கின்றனர். முதன் முதலில் இந்தக் கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனால் 8ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டிருக்கலாம் எனச் சரித்திரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. காஞ்சியின் வைகுந்தபெருமாள் கோயிலைக் கட்டிய இவனே இந்தக் கோயிலையும் எழுப்பியதாயும் ஆதாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பர், சுந்தரர், சம்மந்தர் காலத்தில் இங்கே விஷ்ணுவுக்கெனக் கோயில் இல்லை எனவும் சொல்லும் இந்தத் தகவல் மாணிக்கவாசகர் காலத்திலேயே இந்தக் கோயில் எழுப்பப் பட்டிருக்கவேண்டுமென்றும் சொல்கின்றது.

"பைம்பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த
செம்பொன்மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச்சித்திர கூடஞ்சென்று சேர்மின்களே!" என திருமங்கை ஆழ்வாரும்

"செந்தளிர் வாய் மலர் நகைசேர் செழுந்தண்சோலைத் தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள அந்தணர்களோடு மூவாயிரவரேத்த
வணிமணியாசனத்தமர்ந்த வம்மான்றானே!" எனக் குலசேகர ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்வித்திருக்கின்றார்கள் இந்தத் தில்லை கோவிந்தராஜருக்கு. ஆனால் தீவிர சைவர்கள் ஆன சோழமன்னர்கள் காலத்தில் 12ம் நூற்றாண்டில் ஆண்ட 2ம் குலோத்துங்கன் காலத்தில் விஷ்ணு கோயிலில் இருந்து விஷ்ணு விக்ரஹம் எடுக்கப்பட்டுக் கடலில் வீசி எறியப் பட்டதாயும் தெரிய வருகின்றது. பின்னர் அந்த விக்ரஹம் வைஷ்ணவ பக்தர்களால் எடுக்கப்பட்டு திருமலையின் கீழே திருப்பதிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கே ராமானுஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுக் கோயிலும் கட்டப்பட்டதாய்ச் சரித்திரம் கூறுகின்றது. அதன் பின்னர் வந்த கிருஷ்ண தேவராயரின் குலத்தைச் சேர்ந்த அச்சுதராயன் என்பவன் மகாவிஷ்ணுவின் ஆலயத்தைத் திரும்பக்கட்டிய தோடல்லாமல் விஷ்ணுவின் விக்ரஹத்தையும் அங்கே பிரதிஷ்டை செய்ய ஆவன செய்தான். இது தவிரவும் வைகானச முறைப்படி கோயிலில் தினசரி வழிபாடுகள் நடத்தவும் அதற்கான நிதி உதவியும் அச்சுதராயனால் செய்யப் பட்டது. பின்னர் வந்த வேலூரை ஆண்ட ரங்கராயன் என்பவனால் கோயில் மேலும் புதுப்பிக்கப் பட்டு புண்டரீகவல்லித் தாயாருக்கு விமானமும் எழுப்பப்பட்டு கோவிந்தராஜரின் சன்னதிக்கு முன்னால் இருக்கும் மண்டபமும் புதுப்பிக்கப் பட்டது. 5 கிராமங்களுக்கு வரிவிலக்கு அளித்து அவற்றின் வருமானத்தை விஷ்ணு கோயிலின் வழிபாடுகளுக்கும் கொடுத்தான். தற்காலத்தில் சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கும் விஷ்ணு கோயில் அறங்காவலர்களுக்கும் உள்ள பிரச்னை செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் சுமுகமாய்த் தீர்த்து வைக்கப் பட்டு ராஜா சர் செட்டியார் அவர்கள் விஷ்ணு கோயிலின் திருப்பணிகளையும் செய்து கொடுத்தபின்னர் 1934க்குப் பின்னர் விஷ்ணு கோயிலின் அறங்காவலர்களுக்கும் நடராஜர் கோயிலின் தீட்சிதர்களுக்கு சுமுகமான உறவே இருந்து வருகின்றது. விஷ்ணு கோயிலின் வழிபாட்டு விஷயங்களில் தீட்சிதர்கள் தலை இடுவதில்லை. வைகானஸ முறைப்படியே வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலவேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

ஒவ்வொருவரும் தாங்கள் கருதிய கருத்துக்களை நிலை நாட்டுவதற்கு பலவேறு ஆதாரங்களைக் காட்டுகின்றனர். எல்லோருடைய ஆராய்ச்சியும் அடிகளார் கடைச் சங்க காலத்திற்கு பின் தொடங்கி 11ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலங்களில் ஏதேனும் ஒருகாலம் மணிவாசகர் வாழ்ந்த காலம் என முடிவு செய்கின்றது. இக்கால ஆராய்ச்சிகளைத் தொகுத்து ஆராய்ந்து மணிவாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என முடிவு செய்து தருமை ஆதீனத் திருவாசக நூல் வெளியீட்டில் மகாவித்துவான் திரு. ச.தண்டபாணி தேசிகர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களுடைய கால ஆராய்ச்சித் தொகுப்புரையின் ஒரு பகுதியைச் சுருக்கித் தருகின்றோம்.

திருமலைக் கொழுந்துப் பிள்ளை அவர்கள் முதல் நூற்றாண் டாகவும் பொன்னம்பலப் பிள்ளை அவர்கள் இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டாகவும் மறைமலையடிகளார் அவர்கள் மூன்றாம் நூற்றாண்டாகவும் வில்ஸன்வுட் என்பவர் ஏழாம் நூற்றாண்டு என்றும் G.U.. போப் ஏழு எட்டு அல்லது 9  ஆம் நூற்றாண்டு என் றும், சூலின் வின்ஸன் 9 அல்லது 10 - நூற்றாண்டு என்றும் Mr. கௌடி 8 லிருந்து 10 ஆம் நூற்றாண்டுக்குள் என்றும் Dr. ரோஸ்ட்டு 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு என்றும், நெல்ஸன் 9 ஆம் நூற்றாண்டு என்றும் K.G. சேஷய்யர் 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் சீனிவாசப் பிள்ளை 9 ஆம் நூற்றாண்டு என்றும் C.K.சுப்பிரமணிய முதலியார் மூவர்க்கும் முந்தியவர் என்றும் கூறுகின்றனர்.

மூவர்க்கு முந்தியவர் மணிவாசகர் என்ற கருத்து பொருத்த முடையதாகத் தோன்றுகிறது. மணிவாசகர் காலத்தில் நம் நாட்டில் தலையெடுத்திருந்த புறச்சமயம் பௌத்தம் ஒன்றே எனத் தெரிகிறது. மூவர் காலத்தில் பௌத்தம் ஓரளவிலும் சமணம் சிறப்புற்றும் இருந்தன. மணிவாசகர் வாக்கில் சமண் சமயக் குறிப்பேதும் காணப் பெறவில்லை. திருவாசகத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப் பெறவில்லை. இன்ன பல காரணங்களால் மணிவாசகர் மூவர்க்கும் முந்தியவர் என்று கொள்ளலாம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 58 ॐ

மேலும் தகவல்கள் கொடுக்கின்றார் வெங்கட்ராம் திவாகர்!
சிம்மவர்மன், மகேந்திர பல்லவனின் தாத்தா அதாவது சிம்ம விஷ்ணுவின் தந்தை. சிம்மவர்மனுக்கு தோல் நோய் கண்டவர். இந்நோய் தீர தில்லையில் உள்ள சிவகங்கை குளத்தில் மூழ்கி பெரும் பலன் பெற்றதாக பழைய தகவல்கள் உள்ளன. இவர் ஆண்ட காலம் ஏறத்தாழ கி.பி.550 ஆகும். சைவத் திருமரபில் புகழ்பெற்ற ஐய்யடிகள் காடவர்கோன் சிம்மவர்மன் காலத்தவர். இவர்தான் சிம்மவர்மனை சிதம்பரத்திற்கு இழுத்ததாக சரித்திர ஆசிரியர் (என். சுப்பிரமணியன்-Social and Cultural History of Tamilnadu) எழுதியுள்ளார். ஐய்யடிகள் காடவர் கோனும் ஒரு பல்லவ மன்னர் தாம் என்றாலும் இவர் சிம்மவர்மனுக்கு கீழாகவோ அல்லது உறவாகவோ இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இவர் எழுதிய 24 பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை. க்ஷேத்திர திருவெண்பா எனும் பெயர் கொண்ட இப்பாடல்கள் தான் தமிழின் முதல் கோயில் பயண நூல். 24 கோயிலகளில் குடி கொண்ட சிவ பெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்களை இம்மையிலும் மறுமையிலும் பெறலாம் என எழுதியுள்ளார். 11 ஆவது திரு முறையில் சேர்க்கப்பட்டுள்ள இந்தப் பாடல்களைப் படித்தாலே தமிழும் தேனும் ஏன் ஒரே வகையில் சேர்க்கப்பட்டது என்பது புரியும். சுந்தரப் பெருமானும் நம்பியாண்டார் நம்பியும் மற்றும் சேக்கிழார் பெருமானும் இப்பெருமானைப் பற்றி எழுதியுள்ளார்கள். அடுத்து கோப்பெருஞ்சிங்கன் (பதிமூன்றாம் நூற்றாண்டு) பிற்காலப் பல்லவ அரசன். மீண்டும் பல்லவ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க ஆசை கொண்டு தோற்றுப் போனவன்) இவன் முதலில் சேந்தநல்லூரை தலை இடமாகக் கொண்டு ஆண்டு வந்த சிற்றரசன் தான். ஆனால் காலம் செல்ல செல்ல இவன் சோழப் பேரரசனாக இருந்த மூன்றாம் குலோத்துங்கனையும் மீறி பலம் பெற்றவன். ஏறத்தாழ ஒரு சக்கரவர்த்தி போல ஆட்சி செய்தவன். தில்லை அம்பலத்து கீழவாசல் கோபுரம் இவனால் கட்டப்பட்டது என்பார்கள் சரித்திர ஆசிரியர்கள். இந்த அரசனைப் பற்றிக் காவியமே எழுதப்பட்டது.(காத்யகர்ணாம்ருதம்-சமுஸ்கிருத நூல்) சிதம்பரம் கோயிலைப் பற்றி ஆய்வாளர்கள் எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் (ஏறத்தாழ 2000 பக்கங்கள் கொண்டது) மற்றும் குடவாயில் பாலசுப்ரமணியம் ஆய்வுப் புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.

சம காலத் திருப்பணிகள் : விஜயநகர சாம்ராஜ்யத்தில் கிருஷ்ணதேவராயருக்குப் பின்னர் வந்த அச்சுத தேவ ராயர், ஸ்ரீரங்க ராயர், வெங்கட ராயர் போன்றவர்களுக்குப் பின்னர் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த திருமலை ராயன், வீரப்ப நாயகன் போன்றவர்களும் பெருமளவில் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள். சேர நாட்டை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் நாயனாரும் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர். ஆனால் இவர் காலத்தில் சற்றே குழப்பம் ஏற்படுகின்றது. சேர நாட்டின் கொல்லம் ஆண்டை ஒட்டி இவர் 9ம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இவரும் சுந்தரரும் சமகாலத்தவர். இவர் காலத்தைப் பற்றி www.thevaaram.org என்ன சொல்கின்றது என்று பார்த்தால்:
சுந்தரரும் சேரமான் பெருமாளும் சமகாலத்தவர். சேரமான் பெருமாள் சுந்தரர் இருவரும் பாண்டிய நாடடைந்த போது பாண்டிய மன்னனும் சோழனும் வரவேற்றனர். கொல்லம் ஆண்டின் தொடக்கத்தோடு சேரமான் பெருமாளின் ஆட்சிக் காலத்தை இணைத்து கி.பி. 825க்கு முன்னும் பின்னும் எனக் கூறுதல் பொருந்தாதெனப் பலரும் மறுத்துள்ளனர். சுந்தரரை வரவேற்ற பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் (கி.பி. 670-710). ஆகவே இவர் காலம் 7-ம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 8ம் நூற்றாண்டின் முற்பகுதியுமாக இருக்கலாம். இவர் எழுதிய "திருக்கைலாய ஞான உலா" திரு கைலையிலேயே ஈசன் முன்னால் அரங்கேற்றப்பட்டுப் பின்னர் மாசாத்துவான் என்பவரால் திருப்பிடவூரில் அரங்கேற்றப்பட்டது என்று சொல்வதுண்டு. பாடல் பக்கம் திறக்க முடியவில்லை. பின்னர் கேரளத்தின் கொச்சியில் ஆண்டு வந்த மகாராஜா ராமவர்மனாலும் கட்டளை மேற்கொள்ளப்பட்டு கொண்டமநாயகன் கட்டளை என்ற பெயரால் நிறைவேற்றப் பட்டது எனவும் அறிகின்றோம். இப்போது பதினெட்டாம் நூற்றாண்டின் காலங்களில் செய்யப்பட்ட திருப்பணிகள் காஞ்சியைச் சேர்ந்த பச்சையப்ப முதலியாரால் கோயிலின் திரு விழாக்களில் முக்கியமான பிரம்மோற்சவம் முறைப்படுத்தப் பட்டதோடு அல்லாமல் திருவாதிரைத் திரு நாளைப் போன்ற முக்கியத்துவம் ஆனித் திருமஞ்சனத்துக்கும் அளிக்கப்பட்டுப் பெரிய அளவில் கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டது. நடராஜரின் ரதம் இருக்கும் பீடம் உள்பட ரதங்களையும் மராமத்து செய்து கிழக்குக் கோபுரத்தின் திருப்பணியையும் ஏற்றுச் செய்ய ஆரம்பித்தார் பச்சையப்ப முதலியார். அது பூர்த்தி அடைவதற்குள் இறந்து போகவே அவரின் மனைவியும் சகோதரியும் சேர்ந்து அவர் ஆவலைப் பூர்த்தி செய்தனர். இவரின் தூண்டுதலின் பேரில் மணலியில் வாழ்ந்து வந்த சின்னையா முதலியாரும் சிதம்பரம் கோயிலுக்கு நந்தவனங்களைச் செப்பனிடுதல் மற்றும் கோயிலின் பல திருப்பணிகள் எல்லாவற்றுக்கும் மேல் சித்சபையின் படிக்கட்டுகளை வெள்ளியால் அமைத்தல் போன்றவற்றைச் செய்து கொடுத்தார். நாட்டுக் கோட்டை நகரத்தார் என அழைக்கப்படும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்களாலும் சிதம்பரம் கோயிலின் பல திருப்பணிகள் செய்யப் பட்டிருக்கின்றன. செட்டி நாட்டு ராஜாவான சர் அண்ணாமலைச் செட்டியார் அவரின் சகோதரர் திவான் ராமசாமிச் செட்டியார் போன்றவர்களும் நாலு கோபுரங்களின் திருப்பணிகள் கனகசபையின் கூரையை மறு செப்பனிடுதல் சுற்றுச் சுவர்களைச் செப்பனிடுதல் பிரகாரங்களில் கல்லால் ஆன பாதை அமைத்தல் சிவகங்கைக் குளத்துப் படிக்கட்டுகளைக் கல்லால் செப்பனிடுதல் திரு வீதி உலாவுக்கான வாகனங்களைச் செய்து அளித்தல் விளக்குகள் பாத்திரங்கள் போன்ற முக்கியமான தேவைகளை அளித்தல் போன்றவற்றைச் செய்து கொடுத்து மிகப் பெரிய அளவில் கும்பாபிஷேகமும் செய்து வைத்ததாயும் தெரிய வருகின்றது. 1891ல் இவை நடந்ததற்குப் பின்னர் கிட்டத் தட்ட 64 வருடங்கள் சென்ற பின்னரே 1955ல் திரு ரத்னசபாபதிப் பிள்ளையும் திரு ரத்னசாமிச் செட்டியாரின் முயற்சியாலும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாயும் தெரிய வருகின்றது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம்