திங்கள், 14 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 62 ॐ

{பெருமாள் கோயில் சில தகவல்கள்}

சிதம்பரம் கோயில் எப்போது எனக் காலம் நிர்ணயிக்க முடியாத கால கட்டத்தில் இருந்தே ஈசன் கோயிலாகவே இருந்து வந்தது. சிவனடியார்கள் போற்றிப் பாடும் இடமாகவும் சிவனடியார்களால் கோயில் எனக் குறிப்பிடப்படும் இடமாகவுமே இருந்து வந்தது. தேவார மூவர் காலத்திலேயும் மாணிக்கவாசகர் காலத்திலேயும் இங்கே ஈசன் மட்டுமே அன்னையோடு குடி இருந்து வந்ததாயும் தெரிய வருகின்றது. பல தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் இந்தக் கோயிலையே தலைமைக் கோயில் எனச் சிறப்பித்துச் சொல்லியும் இருக்கின்றன. திரு ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய தேவாரத் திருப்பதிகங்களும் மாணிக்கவாசகர் அருளிய திரு வாசகம் திருச்சிற்றம்பலக் கோவையாகிய அருள் நூல்களும் திரு மூலர் திருமந்திரம் முதல் திருத்தொண்டர் புராணம் போன்றவைகளும் சிதம்பரம் கோயில் சைவத்தின் தலைமைக் கோயில் எனச் சிறப்பித்துச் சொல்லி இருக்கின்றன. பல கல்வெட்டுக்களும் அவ்வாறே குறிப்பிட்டு வருகின்றன. இந்நிலையில் தில்லைக் கோயிலில் கோவிந்தராஜப் பெருமாள் வந்த வரலாறு என்ன? நண்பர் ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும் சமீபத்தில் சிதம்பரத்தில் தீட்சிதரிடம் பேசி உறுதி செய்து கொண்டதும் ஆன அந்தத் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதன் முதல் நந்திவர்ம பல்லவன் காலத்திலேயே கோவிந்தராஜப் பெருமாளுக்கு எனத் தனியாக ஒரு சன்னதி ஏற்படுத்தப்பட்டது என்று தெரியவருகின்றது. கி.பி726-775 வரை ஆட்சி செய்த நந்திவர்ம பல்லவன் தன் ஆட்சியின் ஆரம்ப காலத்திலே சைவ வைணவ மதங்களை ஒன்றாகக் கருதி வந்தாலும் பின்னர் திருமங்கை ஆழ்வாரால் பரம வைணவன் ஆகிவிட்டான் என வரலாறு கூறுகின்றது. அவன் வேண்டுகோள் பேரிலும் மன்னனுக்கே இயல்பாக எழுந்த ஆசையினாலுமே தில்லையில் கோவிந்தராஜப் பெருமாளுக்கு எனத் தனியாக சன்னதி எழுப்பப்பட்டு அங்கே பிரதிஷ்டையும் செய்யப் பட்டிருக்கின்றார். இதைத் திருமங்கை ஆழ்வார் தன் பாசுரத்தில் இவ்வாறு கூறுகின்றார்.

"பைம் பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படைமன்னவன் பல்லவர்கோன்பணிந்த
செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச் சித்திரகூடம் சென்று சேர்மின்களே"
(பெரிய திருமொழி 3-2-3)

இதிலே சித்திரகூடம் என்பதற்குத் தெற்றியம்பலம் என அர்த்தம் வருவதாயும் தெற்றி=திண்ணை எனப் பொருள் கொள்ள வேண்டும் எனவும் தமிழறிஞர்கள் சொல்கின்றனர். தெற்றியம்பலம் என்பது சிறிய திண்ணை எனப் பொருள் எனவும் சிறிய திண்ணை போன்ற இடத்திலேயே பெருமாள் கோவில் கொண்டிருந்திருக்கின்றார் எனவும் சொல்லப்படுகின்றது. இந்த அரசன் பற்றிய பட்டயச் செய்திகளில் இறைவன் திருவடிகளைத் தவிர வேறொன்றுக்கும் இவன் தலை வணங்கியதில்லை என்று இருப்பதில் இருந்தே இவன் வைணவனாக மாறியது புலனாகின்றது. தவிர இங்கே பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டதில் இருந்தே தில்லையம்பல நடராஜரைச் சுற்றி இருக்கும் பரிவார தேவதைகளில் ஒருவராகவே இருந்து வந்திருக்கின்றார். ஆகவே இந்த கோவிந்தராஜரின் வழிபாடுகளையும் தில்லை மூவாயிரவர் எனப்படும் தீட்சிதர்களே செய்து வந்திருக்கின்றார்கள் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இன்றியே! இது போலவே காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலிலும் பரிவார தெய்வமாகவே பெருமாள் எழுந்தருளி இருக்கின்றார் என்பதும் "நிலாத்திங்கள் துண்டத்தான்" என அதே திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்டிருப்பதும் அங்கே இன்றளவும் சிவாச்சாரியார்களாலேயே பெருமாள் பூஜிக்கப் படுகின்றார் என்பதும் கவனிக்கத் தக்கது.

"மூவாயிரநான் மறையாளர் முறையால் வணங்க
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரகூடம்" (பெ.தி. 3.2-8)

"தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்" (குல.தி. 10.2)

என்று பெரிய திருமொழியிலும் குலசேகர ஆழ்வாராலும் பாடப் பட்டு வந்தது. பின்னாட்களில் வைணவர்கள் கைக்குப் போனதும் அப்போது நடந்தவை பற்றியும் இனி வரும் நாட்களில்  பார்ப்போம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

கருத்துகள் இல்லை: