செவ்வாய், 30 ஜூலை, 2019


274 சிவாலயங்கள் :அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : கோடீஸ்வரர் (வேத்ரவனேஸ்வரர்) கோடிகாநாதர்

அம்மன் : திரிபுர சுந்தரி, வடிவாம்பிகை,
தல விருட்சம் : பிரம்பு
தீர்த்தம் : சிருங்கோத்பவ தீர்த்தம், காவிரிநதி
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வேத்ரவனம்
ஊர் : திருக்கோடிக்காவல்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர்
இன்று நன்று நாளை நன்று என்று நின்று இச்சையால் போன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல் கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே. திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 37 வது ஸ்தலம்.
 
விழா : நான்கு கால பூஜை, சித்திரை, பௌர்ணமியன்று உற்சவம் நடைபெறுகிறது.  
      
சிறப்பு : இது 1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதே போல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர். இங்குள்ள சனிபகவான் "பாலசனி' என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது. மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். இவ்வூரை ஒட்டி காவேரி நதி, "உத்திரவாஹினி' யாக (தெற்கிலிருந்து வடக்காக) பாய்கிறது.  
      
திறக்கும் நேரம் : காலை 06:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,(வழி) நரசிங்கன் பேட்டை : 609 802. திருவிடை மருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன் :+91-0435 - 2450 595, +91-94866 70043, 



     
தகவல் : இத்தல விநாயகர் கரையேற்று விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார். இங்குள்ள மூலவர் ஐந்து நிலை ராஜகோபுரத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். உள் பிரகாரத்தில் கரையேற்று விநாயகர், கற்சிலை நடராஜர், சப்தரிஷிகள், அகத்தியர், சித்திரகுப்தர், யமன் முதலிய சன்னிதிகள் உள்ளன. இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளிலிருந்தும் கோயில் அமைப்பிலிருந்தும் கீழ்க்கண்ட விபரங்கள் அறிய வருகிறது. சுமார் 1250 வருடங்களுக்கு முன்பு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் (750) தமிழகத்தில் பல்லவர்களுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். நந்திவர்ம பல்லவன் காலத்தில் இக்கோயிலின் கர்ப்பகிரஹம் மட்டும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. பின் கி.பி. 950 - 957க்கு இடைப்பட்ட காலத்தில் தஞ்சையை உத்தமசோழ மன்னர் ஆண்ட சமயம்  அவருடைய தாயாரும் கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன் மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கருங்கற்களால் திரும்பக்  கட்டப்பட்டது. அதற்குப் பிறகு வழி வழியாக நாட்டை ஆண்ட மன்னர்களால் இக்கோயிலின் மற்றப்பகுதிகள் பல்வேறுகால கட்டத்தில் கட்டப்பட்டன.
ராஜராஜசோழன் காலத்தில் மூன்று நிலைக் கோபுரமும் பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலமான 13ம் நூற்றாண்டில் முன்வாயில் ஐந்து நிலை ராஜகோபுரமும் கட்டப்பட்டு திருப்பணிகள் நடத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு 16ம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்கர் மன்னர் காலத்தில் பாழ்பட்ட பகுதிகள் திருத்தம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டதோடு முன் கோபுரமும் இக்காலத்தில் புதியதாக மறுபடியும் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனத்தெரிகிறது. செம்பியன் மாதேவியார் கருங்கற் கோயிலாக திருப்பணி செய்த சமயம் மற்றொரு சிறந்த சேவையும் செய்தார். கோயிலில் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்த பழைய கல்வெட்டுகளைத் திரட்டி எடுத்து அதிலுள்ள விபரங்களை புதியதாகக் கட்டிய கருங்கற் சுவற்றில் திரும்பவும் செதுக்கச் செய்தார். இவ்வாறு மொத்தம் 26 கருங்கற் பலகைகளைப் பதித்து வருங்கால சந்ததியினர் இக்கோயிலின் வரலாறு அறிந்து கொள்ள பேருதவி செய்துள்ளார். பல்லவர்கால கல்வெட்டுக்கள் தஞ்சை மாவட்டத்தில் வேறு எங்கும் காணப்படவில்லை என்ற சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கூற்று இங்கே குறிப்பிடத்தக்கது. கல்வெட்டுச் செய்திகள் இத்திருக்கோயிலில் மூன்று நிலைக் கோபுர நுழை வாயிலின் தென்புரம் மதிற்சுவற்றிலும் வாகன மண்டபத்தில் காட்சி கொடுத்த அம்பாள் சிலையின் வடபுறத்திலும் ஸ்வாமியின் கருவறை வெளிப்புற சுவற்றிலும் காணலாம். செம்பியன் மாதேவியார் அவ்வாறு பாதுகாத்த கல்வெட்டுச் செய்திகளிலிருந்து தான் அவருக்கும் முந்தைய காலமான பல்லவர் ஆட்சியில் இக்கோயிலில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் நமக்குத் தெரிய வருகிறது. கி.பி. 850 ல் காஞ்சியை ஆண்ட நிருபதுங்கவர்ம பல்லவனின் மனைவி வீரமகாதேவியார் ஸ்ரீ திருக்கோடீஸ்வரருக்கு துலாபார நோன்பும் ஹிரண்யகர்ப்ப பூஜையும் செய்து தங்கம் தானமாக அளித்தார் என்றும் மற்றும் ஸ்வாமிக்கு எதிரில் ஒரு தூங்கா விளக்கு ஏற்பாடு செய்து அதற்கு வேண்டிய பொருளுதவியும் செய்தார் என்றும் தெரிகிறது.

கி.பி. பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டிய மன்னன் வரகுண பாண்டியன் இக்கோயிலில் உள்ள லெஷ்மி, சரஸ்வதி, கணபதி சன்னிதியில் மூன்று தீபங்கள் ஏற்றுவதற்காக தங்கக் காசுகள் வழங்கினான் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கி.பி. 1264ம் ஆண்டு கல்வெட்டுகள் இரண்டு உள்ளது. அது பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வரசன் தஞ்சையை ஆண்ட மன்னன் மூன்றாம் இராசராசனைத் தோற்கடித்துச் சிறை பிடித்தவன். மாறவர் மன் சுந்தரபாண்டியன் காலத்தவன். இவ்விருகல்வெட்டுகளில் இவ்வரசன்மாணிக்க வாசக ஸ்வாமிகளின் உலோக சிலையொன்றை இக்கோயிலுக்கு அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலே கூறிய செய்திகளை தவிர இக்கோயிலில் காணப்படும் மொத்தம் 50 கல்வெட்டுகளிலிருந்தும் மேலும் பல விபரங்களை அறிய முடிகிறது.

கி.பி. 950ல் செம்பியன் மாதேவியால் கட்டப்பட்ட இக்கோயிலை அவர் காலத்திற்குப் பிறகு நாட்டை ஆண்ட சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் நாயக்கர் அரச பரம்பரையினர் இக்கோயிலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வழிபாடுகள் செய்து போற்றிப் பாதுகாத்து வந்துள்ளனர். கோயிலைப் பராமரிக்கவும் 6 கால பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் சிறந்த முறையில் நடைபெறும் பொருட்டும் ஏராளமான நிலங்களை இக்கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளனர். தினமும் ஐந்து குடம் தண்ணீர் காவிரி நதியிலிருந்து எடுத்து வந்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யவும் அவ்வப்போது ஸ்வாமிக்கு புனுகு காப்பு செய்யவும் அதற்காக புனுகு பூனைகள் கோயிலில் வளர்த்து வருவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவந்ததும் மற்றும் பூஜைக்கு வேண்டிய புஷ்பங்கள், மாலைகள் ஆகியவற்றிற்காக தனியாக நந்தவனங்கள் ஏற்படுத்தி பராமரிக்கப்பட்டதும் மேற்கூறிய கல்வெட்டுகளிலிருந்து அறியப்படுகிறது.
பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் காணப்படும் சுதை வேலைபாடுகள் எதுவும் இக்கோயிலில் கோபுரத்திலோ அல்லது மதிற்சுவர்களிலோ காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரகாரத்தின் தளவரிசை சுமார் 1000  வருடங்களுக்கு முன்னால் செங்கற்களால் வேயப்பட்டிருந்தாலும் இன்றும் உபயோகத்திற்கு தகுதியுடையதாய் உள்ளது. மேலும் மழைக்காலத்தில் கோயிலின் உள்ளே தங்கும் நீர் அருகில் உள்ள திருக்குளத்தில் சேரும்படியாக அமைந்துள்ள வடிகால்களைப் பார்க்குமிடத்து பண்டைக்கால நம் முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவு நம்மை வியக்க  வைக்கிறது. கோயிலின் உள்ளே அஷ்டாஷ்டக விக்ரகங்கள் எனப்படும் சிவபெருமானின் 64 லீலைகளில் பெரும்பான்மைகளை மிக நுட்பமாக பல்லவகால சிற்ப அமைவில் திருச்சுற்றிலும் ஏனைய பல இடங்களிலும் காண முடிகிறது. சிற்பங்கள் யாவும் வெகு அற்புதமாய் கண்ணைக்கவரும் விதத்தில் அமைத்திருக்கின்றன. ராஜ கோபுர வாயிலில் காமதேனு, கற்பக விருட்சம், குதிரை மற்றும் யானை வீரர்களின் போர்க்காட்சிகள் மனுநீதி சோழன், நீதிவரலாறு கண்ணனின் கோகுல லீலைகள் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட 22 விதவிதமான வாத்தியங்களை இசைக்கும் மாந்தர்கள் யாவும் கண்ணிற்கு விருந்தாய் அமைந்துள்ளன. இதே போன்று திருக்கோடீஸ்வரரின் கருவறை வெளிச்சுவற்றிலும் அழகிய சிற்ப கோலங்கள் உள்ளன. தெற்குச் சுவரில் முதலில் கூத்தபிரான் உள்ளார். ஊன்றிய கால் தனியாகவே உள்ளது. இடப்புறம் சிவகாமி நின்ற கோலத்தில் திருபங்க நிலையில் உள்ளாள். வலப்பக்கம் காரைக்கால் அம்மையார் பேய் உருவில் தலைவிரி கோலமாய் தாளமிட்டப்படி சிவனது கூற்றினைக் கண்டு ஆனந்திக்கிறாள். திருவடியின் கீழ் இசைபாடுவோர், மத்தளம் அடிப்போர், தாளமிடுவோர் என மூன்று கணங்கள் உள்ளனர். அடுத்து வரிசையாக பிட்சாடனர் விஷ்ணுவின் மோகினி அவதாரம் ஒரு குள்ள பூதம் அமர்ந்த நிலையில் மஹா கணபதி, அகத்திய முனிவர், தட்சிணாமூர்த்தி, அத்ரி முனிவர், பிருகு முனிவர் உள்ளார்கள். விமானத்தில் பிட்சாடனர் உருவம் எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தியாய் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. ஸ்வாமியின் கருவறை மேற்குச் சுவற்றில் லிங்கோத்பவர் மகா விஷ்ணு நின்ற கோலம் அவருக்கு இருபுறமும் குத்ச முனிவரும் வசிஷ்டமுனிவரும் உள்ளனர். விமானத்தில் மகா விஷ்ணு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். வடக்குத் கருவறை சுவற்றில் முதலில் கௌதம மகரிஷியும் அடுத்து அக்கமாலை, கரகம், அபயஹஸ்தம், தொடையில் ஊன்றிய கைகளோடு பிரம்மாவும், தொடர்ந்து காஸ்யப ரிஷி அஷ்டபுஷ துர்க்கை அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். விமானத்தில் பரமேஸ்வரன் காட்சி அளிக்கிறார். கிழக்கு புற விமானத்தில் ஸ்வாமி மற்றும் அம்பாள் சிற்பம் அமைந்துள்ளது.

பிரார்த்தனை : இங்குள்ள உத்திரவாஹினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது நம்பிக்கை.
     
ஸ்தல பெருமை : இத்தலத்தில் நவக்கிரகம் கிடையாது. விதியின் பயனை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் குறைக்க முடியும். விதியினால் கஷ்டப்படுபவர்கள் இத்தலம் வந்து தரிசித்தால் அதன் பாதிப்பு குறையும்.

1) "கா' என்றால் சோலை எனப் பொருள்படும். "கா' என முடியும் ஐந்து சிவத்தலங்களை "பஞ்ச காக்கள்' என அழைப்பர். அவை திரு ஆனைக்கா (திருவானைக்காவல்). திருக்கோலக்கா (சீர்காழி சட்டநாதர் கோவில் எதிரில்), திருநெல்லிகா, (திருத்துறைப் பூண்டி), திருகுறக்குக்கா (நீடுர் அருகில்), மற்றும் திரு கோடிக்கா, ஆகும். சோலைகளுக்கு இடைய அமைந்து ஊர் என பொருள் கொள்ளலாம்.

2) "திரிகோடி' என்றால் மூன்றுகோடி என்று பொருள் ஆகவே, மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் நீங்கியதால், "திரிக்கோடிக்கா' என்ற காரணப்பெயர் ஏற்பட்டு, நாளடைவில் "திருக்கோடிக்காவல்' என்று மருவி இருக்கலாம்.

யமபயம் இல்லை : சிவபுராணத்தில் பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படும் மற்றொரு நிகழ்ச்சி இத்தலத்தின் மகிமைக்கு மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது. தன் கணவனைக் கொன்று விட்டு நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்த லோக காந்தா என்ற பெண்மணி வாழ்க்கையின் இறுதிகாலத்தில் திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும் யமன் அவளைத் தண்டிக்க நரக லோகம் அழைத்துச் செல்லுகிறான். சிவ தூதர்கள் இதை வன்மையாக கண்டிக்கின்றனர். யமதர்மராஜன் சிவ பெருமானிடம் வந்து முறையிடுகிறார்.
தமது தலமான திருக்கோடிக்காவோடு சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும் காலதேச வர்த்தமானங்களால் இங்கு வந்தவர்களை எமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும் அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிடுகிறார். பாவக க்ஷேத்திரமான திருக்கோடிக்காவில் ஸ்நான, ஜப, தப, தியானங்கள் செய்கிறவர்களை நான் எதுவுமே செய்ய முடியாது என்று யமதர்மராஜன்  யமலோகத்தில் முழக்கமிடுகிறான். லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டு விட்டதால் யமனிடமிருந்து விடுபட்டு பின் முக்தி அடைகிறாள். காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது.  இந்த நம்பிக்கையை உறுதி செய்வது போல இவ்வூரில் ருத்ரபூமி (மயானம்) தனியாக இல்லை. இவ்வூரில் மறிப்பவர்களை காவிரி நதியின் மறுகரைக்கு கொண்டு சென்று தகனம் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு இன்று வரை தொடர்கிறது. வைணவருக்கு அருள் பாலித்த ஈஸ்வரன் இவ்வூருக்கு மேற்கே அமைந்துள்ள சுக்ரத்தலமான கஞ்சனூர் கிராமத்தில் ஹரதத்தர் என்ற பெரியவர் வாழ்ந்து வந்தார். பிறப்பால் வைணவரானாலும் இவர் தீவிர சிவபக்தர். கண்பார்வைக் குறைவு உள்ளவர். தினமும் காலையில் கஞ்சனூரிலிருந்து கிளம்பி திருமாந்துறை, திருமங்கலக்குடி, திருக்குரங்காடுதுறை, திருவாவடுதுறை, திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு அர்த்த ஜாம பூஜைக்கு தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பி விடுவதை தினம் தனது வழக்கமாகக் கொண்டவர். ஒரு நாள் மாலை திருக்கோடிக்கா ஆலயத்தில் ஸ்ரீ திருக்கோடீஸ்வரர் தரிசனத்தை முடித்துக் கொள்ளும் சமயம் பேய்மழை அடிக்க ஆரம்பித்து விட்டது. வெளியே புறப்பட முடிய வில்லை. ஒரே இருட்டு வேறு அவருக்கு நல்ல பார்வையும் கிடையாது. அர்த்த ஜாமம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கஞ்சனூர் போயாக வேண்டுமே? ஈஸ்வரா இப்படி ஏன் சோதனை செய்கிறாய் என்று துயரப்பட்டுக்கொண்டே நடுங்கும் குளிரில் கோபுர வாசலில் காத்துக் கிடந்தார். அக்கணம் அவ்வழியே ஒர் அரிஜனன் வந்தார். சுவாமி இதோ இந்தக் கம்பைப் பிடித்து கொள்ளுங்கள். உங்களை நொடியில் கஞ்சனூர் கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறேன் என்றார். ஹரதத்தருக்கு சந்தோஷம் தாங்க முடிய வில்லை. தெய்வாதீனமாக அங்கு வந்த அரிஜனன் நீட்டிய கம்பைப் பற்றி கொண்டு வேகமாக நடந்து கஞ்சனூரை அடைந்து. அங்கு கோயில் அர்த்தஜாம வழிபாட்டை இனிதாக முடித்தார். தக்க சமயத்தில் வந்த தனக்கு உதவி புரிந்த அந்த அரிஜனனுக்கு கோயிலில் தனக்கு பிரசாதமாகக் கிடைத்த அன்னத்தையும், சுண்டலையும் வழங்கினார். அரிஜனனும் நன்றி சொல்லி அதைப் பெற்றுக் கொண்டு போய் விட்டார். மறுநாள் காலை திருக்கோடீஸ்வரர் ஆலயத்தில் நந்தி, அம்பாள், சுவாமி, விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சந்நிதிகளில், அன்னமும், சுண்டலும் காணப்பட்டன. முதல் நாள் இரவு அரிஜனனாக வந்து ஹரதத்தருக்கு கை கொடுத்து உதவியவர் திருக்கோடீஸ்வரர்தான் என்பதில் சந்தேகம்  இருக்க முடியுமா?

காட்சி கொடுத்த அம்பாள் : ஸ்ரீ திருக்கோடீஸ்வரரைப் போல் ஸ்ரீ திரிபுரசுந்தரி  அம்பாளும் அருள் பாலித்த விபரம் வருமாறு.

1. ஆழ்வாருக்கு காட்சி கொடுத்தல்: ஆழ்வார்கள் வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக திருப்பதி சென்றார்கள். அங்கு இறைவன் அவர்களுக்கு காட்சி தரவில்லை மாறாக திருக்கோடிக்காவில் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் நீங்கள் விரும்பும் தரிசனம் கொடுப்பாள் அங்கே செல்லுங்கள் என்று அசரீரியாக உத்தரவு பிறந்தது. ஆழ்வார்களும் ஆவலுடன் புறப்பட்டு திருக்கோடிக்காவை அடைந்தனர். ஊரை நெருங்கிய போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதை கடந்து வரமுடியாமல் ஆழ்வாராதிகள் சிரமப்பட்ட போது அகத்திய முனிவர் அவர்கள் முன் தோன்றி ஆலயத்திலுள்ள கரையேற்று விநாயகரை மனதில் பிரார்த்தித்துக் கொள்ளும் படி கோரினார். அவர்களும் அவ்வாறே செய்ய காவிரியில் வெள்ளம் குறைந்தது. ஆழ்வாராதிகள் கரையைக் கடந்து ஆலயத்தினுள் வர அங்கு அம்பாள் அவர்களுக்கு வெங்கடாஜலபதியாக தரிசனம் தந்தருளினாள்.

2. துர்வாசருக்கு காட்சி கொடுத்தல்: காட்சி கொடுத்த அம்பாளாக திருக்கோடீஸ்வரர் சந்நிதியில் வீற்றிருக்கும் இந்த அம்பாளைக் குறித்து வேறொரு கதையும் சொல்லப்படுகிறது. அதைக் கூறுவதற்கு முன்னால் பிருங்கிமஹரிஷியின் கதையை தெரிந்து கொள்வது அவசியம். பிருங்கி மஹரிஷியானவர் தனித்த சிவமே பரம் பொருள் என்று துணிந்து சக்தியின்றி சிவனை மட்டுமே வழிபடலானார். இதைக் கண்டு கோபம் கொண்ட அன்னை அவருடைய கால்கள் இரண்டையும் செயலிழக்கச் செய்தாள். ஆனால் பிருங்கி முனிவர் சிவ பெருமானிடம் முறையிட்டு மூன்றாவதாக ஒரு காலைப் பெற்றுச் சிவனை சுற்றி வரலானார். இதைப் பார்த்த அன்னை மேலும் கோபம் கொண்டு அவரை நடக்கவே முடியாத படி முற்றிலும் சக்தி அற்றவராகச் செய்தார். மனம் தளராத பிருங்கி சிவ பெருமானைத் துதித்து வேண்டி ஒரு வண்டாக உருப்பெற்று ஸ்வாமியை மட்டும் சுற்றிப் பறந்தார். இதைக் கண்ணுற்ற அன்னை ஸ்வாமியிடம் வரம் பெற்று அவர் உடம்பில் பாதி ஆனார். (அர்த்த நாரீஸ்வரர்). இதைச் சகிக்காத வண்டு உருவில் உள்ள பிருங்கி அர்த்த நாரீஸ்வரரின் உடலில் பாதியை துளைத்து சிவனைதனிமைப்படுத்தும் காரியத்தில் இறங்கினார். இத்துடன் தனது சோதனையை நிறுத்திக்கொண்ட பரம்பொருள் அன்னையின் கோபத்தை தணித்து பிருங்கியின் தீவிர சிவபக்தியை நிலைநாட்டி அவரை ஆட்கொண்டார்.

துர்வாச மகரிஷி, தக்ஷின சிதம்பரம் என அழைக்கப்படும் "திருக்களர்' ஊரில் பாரிஜாதவனேஸ்வரரை தரிசித்து விட்டு ஆருத்ரா தரிசனத்தன்று ஸ்ரீ நடராஜரை வணங்கி விட்டு திருக்கோடிக்கா வந்தடைந்தார். வேத்ரவனேஸ்வரரான ஸ்ரீ திருகோடீஸ்வரரை தரிசிக்க ஆலயத்தில் வேகமாக பிரவேசிக்கையில் அம்பாளின் சந்தியைத்தாண்டிச் சென்று விடுகிறார். இதைக் கண்ட திரிபுர சுந்தரி அன்னை எங்கே பிருங்கி முனிவர் போல் துர்வாசரும் சிவன்வேறு சக்தி வேறு எனப் பிரித்து எண்ணிவிடுவாரோ என அஞ்சி அதற்கு சந்தர்ப்பமே  கொடுக்கக்கூடாது என்று எண்ணி தானே வலியச் சென்று திருக்கோடீஸ்வருக்கு முன்னால் துர்வாசருக்கு காட்சி கொடுக்கிறாள் என்று ஒரு புராணக்கதையும் கூறப்படுகிறது.

திருக்கோயிலில் ஸ்வாமி சந்நிதியில் ஸ்ரீ திருக்கோடீஸ்வரருக்கும், துர்வாசர் சிலைக்கும் நடுவில் மகா மண்டபத்தில் காட்சி கொடுத்த அம்பாள் சிலை இருப்பது இக்கதைக் கருத்துக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. மேற்கு திருச்சுற்றில் முதலில் உள்ள அறையில் நாகலிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் மனோன்மணி அம்பாள் விக்ரகங்கள் உள்ளது. அடுத்து முருகன் சந்நிதி ஆறுமுகம், பன்னிரண்டு கைகள். கைகளில் நாககனி, வில், பாணம் மற்றும் பிற படைக்கலங்களோடு வள்ளி, தேவானையுடன் அசுரமயில் வாகனத்தில் காட்சியளிக்கிறார். இதை அடுத்து ரிக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேத சிவலிங்கங்கள் காணப்படுகிறது. அதையடுத்து கஜலட்சுமி விக்ரகம் இரு கால்களையும் தொங்க விட்டுக் கொண்ட நிலையில் உள்ளது. இறுதியில் சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டா தேவி தன் மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும், மாந்தியின் முகம் ரிஷப முகமாயும் இம் மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது.

இனி வடபுற திருச்சுற்று சன்னதிகளைப் பார்ப்போம். முதலில் திருக்கோடீஸ்வர் கருவறைச் சுற்றின் அருகில் கோயிலின் தல விருட்சமான பிரம்பு மரம் உள்ளது. அடுத்து அஷ்டபுஜ துர்க்கை வலக்கைகளில் சூலம், பாணம், கட்கம்(கத்தி), சங்கு, இடக்கைகளில் சக்ரம், வில், கேடயம் ஆகியவையும் உள்ளன. இடக்கை ஒன்றை தொடையில் ஊன்றி உள்ளார். துர்க்கையை ஒட்டி சண்டிகேஸ்வரர் தனிச்சன்னதியும் அருகில் புஷ்கரணியும் (கிணறு) உள்ளது. இதை கடந்து சென்றால் பிரம்மாவுக்கு என்று ஒரு சிறு தனிச்சன்னதி உள்ளது.

ஸ்தல வரலாறு : மந்திரங்கள் தவறான கொள்கைக்கு பயன்படுத்தப்பட்டதால் மந்திரங்கள் மீதே கோபப்பட்ட துர்வாசர் மந்திரத்திற்கு சாபம் கொடுத்தார். மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக உச்சிக்கப்பட்டு சாபவிமோசனம் பெற்றன. அதே போல் மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை செய்துள்ளனர். எனவே இத்தல இறைவனின் திருநாமம் கோடீஸ்வரர் என்றும் ஊர் திருக்கோடிக்கா அழைக்கப்பட்டது.

திரிகோடி மந்திரங்களுக்கு சாயுஜ்ய முக்தி கிடைத்தல் இத்தலத்தின் மகிமையை விளக்கும் வரலாறு  ஆதிசைவ ருத்ரகோடி ஸம்ஹிந்தை என்ற சிவபுராணத்தில் சாயுஜ்ய காண்டத்தில் முப்பத்தி மூன்று அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. நைமிசாரணியத்தில் சனகாதி முனிவர்களுக்கு சூத பௌராணிகர் நிகழ்ச்சிகளை விவரிப்பதாக அமைந்துள்ளது. அதைச் சுருக்கமாகக் காண்போம்.

க்ரத யுகத்தில், பன்னீராயிரம் ரிஷிகளும் (வாலகில்ய மற்றும் வைகானஸ் முனிவர்கள்) மூன்று கோடி மந்திர தேவதைகளும் "சாயுஜ்'  முக்தி (ஞானமுக்தி) அடையும் பொருட்டு வேங்கடகிரியில், திருவேங்கடமுடையான் (வெங்கடேசப் பெருமாள்) திருச்சன்னதியில் மந்திரங்களைக் கோஷித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் அங்கு வந்த துர்வாச மகரிஷி இவர்களின் நோக்கத்தை அறிந்து பரிகசித்தார். பின் அவர்களைப் பார்த்து சாயுஜ்ய முக்தியை தவத்தாலோ அல்லது மந்திர சக்தியாலோ பெற முடியாது. ஞானத்தால் மட்டும் தான் பெற முடியும் குருவிற்கு பணிவிடை செய்து அவரது ஆசியைப் பெற்ற அத்யாத்ம வித்தையைப் பயின்று பிரம்ம ஞானம் பெற்று பின் பரமேஸ்வரனின் அனுக்கிரஹத்தால் மட்டும் தான் ஞானமுக்தி பெற முடியும் என்று கூறினார். இதைக் கேட்ட மந்திர தேவதைகளுக்கு கடும் கோபம் வந்தது. தங்கள் வலிமையைப்பழித்த துர்வாசரைத் தூற்றினர். முக்தியடைய எங்களுக்கு சக்தியில்லை என்கிறீர்களா? வெங்கடாஜலபதியை குறித்து தவம் செய்து இக்கணமே தாங்கள் முக்தியடையவோம் என்று சூளுரைத்தனர். தம்மையும் பிரம்ம வித்தையையும் அவமதித்த மந்திர தேவதைகளை நீங்கள் பலப்பல ஜென்மங்கள் எடுத்து துன்பப்பட்டு இறுதியில் தான் முக்தி பெறுவீர்கள். அதுவும் இந்த ஷேத்திரத்தில் கிடைக்காது. வெங்கடேசப் பெருமாளும் அதை உங்களுக்கு அளிக்க முடியாது. என்று துர்வாசர் சபித்தார். துர்வாசருடைய கோபத்தைப் பொருட்படுத்தாத மந்திர தேவதைகள் தாங்கள் சபதம் செய்தது போல் திருமயிலையிலேயே தங்கி புஷ்கரணியில் ஸ்ரீ நாராயணனைத் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினர். ஆனால் பன்னீராயிரம் ரிஷிகள் துர்வாசருடைய அறிவுரையை ஏற்று அவரைப் பின் தொடர்ந்து காசிக்குச் சென்றனர். அங்கு மணிகர்ணிகையில் நீராடி டுண்டிகணபதி, விஸ்வேஸ்வரர், விசாலாட்சி, பிந்துமாதவர் மற்றும் காலபைரவரை தரிசனம் செய்தனர். மகரிஷிகளுக்கு எதை உபதேசம் செய்வது என்று துர்வாசர் சிந்தித்துக்  கொண்டிருக்கும் சமயம் ஸ்ரீ விஸ்வநாதரான வேத்ரவனேஸ்வரர் (திருக்கோடீஸ்வரர்) அவரது கனவில் தோன்றி மகரிஷிகளுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து அத்யாத்ம வித்தையை கற்றுத் தரும் படியும் ஒரு மாதம் காசியில் தங்கி விட்டு பின் மகரிஷிகளுடன் வேத்ரவனத்திற்கு (திருக்கோடிக்கா) வரும் படியும் கட்டளையிடுகிறார். அவ்வாறே துர்வாசர் திருக்கோடிக்கா தலத்திற்கு வந்து சேர்ந்தார். பின் திருக்கோடீஸ்வரரின் ஆனைப்படி மகரிஷிகளுக்கு சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்து அத்தீர்த்தத்தை சிறிது கையில் எடுத்து கொண்டு அவர்களுடன் முக்கோடி மந்திர மந்திர தேவதைகள் கடுந்தவம் புரியும் இடமான திருமயிலைக்கு வந்தார். அப்போது ஸ்ரீ திருக்கோடீஸ்வரர் அம்பாள் திரிபுரசுந்தரி மற்றும் இரு புத்திரர்கள் பரிவாரங்களுடன் வந்து திவ்யதரிசனம் கொடுத்தார். ஸ்வாமியின் முன்னிலையில் துர்வாசர் தன் கையில்  கொண்டு வந்திருந்த சிருங்கோத்பவ தீர்த்தத்தை பன்னீராயிரம் ரிஷிகளுக்கும் தலையில் தெளிக்க அப்போது ஓர் ஜோதி தோன்றி முனிவர்கள் யாவரும் அதில் ஐக்கியமானர்கள். அவர்களுக்கு ஞான முக்தி கிட்டிவிட்டது. இதைக் கண்ணுற்ற மந்திர தேவதைகள்  துர்வாசரைப் பார்த்து உங்கள் முயற்சியாலோ பரமேஸ்வரனின் அருளாலோ மகரிஷிகளுக்கு ஞானமுக்தி கிடைக்க வில்லை. அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மபலன்களால் தான் அது கிட்டியது. நாங்கள் எப்படியாவது ஸ்ரீ நாராயணனிடமிருந்தே சாயுஜ்ய முக்தியை பெருவோம் பாருங்கள் என்று சூளுரைத்தார்கள். மந்திரதேவதைகளின் கர்வம் இன்னும் அடங்கவில்லை என்பதைக் கண்ணுற்ற துர்வாசர் மிக்க கோபம் கொண்டு அங்கிருந்து  சென்று விட்டார். சுவாமி புஷ்கரணியின் கரையில் தவமிருந்த திரிகோடி மந்திரதேவதைகளுக்கு பல இடையூறுகள் ஏற்படவே அவை அங்கிருந்து புறப்பட்டு பத்ரிகாச்சரம், நைமிசாரணியம், துவாரகை, கோஷ்டிபுரம் முதலிய வைணவ தலங்களுக்குச் சென்று தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர். ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் முன் ஸ்ரீ நாராயணன் தோன்றி நீங்கள் துர்வாசரை விரோதித்துக்கொண்டு அவரது கோபத்திற்கு ஆளானது மிகத்தவறு. என்னால் உங்களுக்கு சாயுஜ்ய முக்தி தர இயலாது. பரமசிவனால் மட்டும் தான் அது சாத்தியம். ஆகவே அவரை வழி படுங்கள் எனக் கூறுகிறார்.

மாற்றமடைந்த முக்கோடி மந்திர தேவதைகள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்ற போது நாரத முனிவர் தோன்றி பரமேஸ்வர பிரசாதத்தால் மட்டுமே ஞான முக்தி பெற முடியும். என வலியுறுத்துகிறார். துர்வாசர் போன்றே இவரும் கூறியதைக்கேட்டு கோபமடைந்த மந்திரதேவதைகள் நாரதரையும் இழிவாகப் பேசினர். நாரதர் அவர்களைப் பார்த்து நீங்கள் நூறு ஜென்மங்கள் மீண்டும் பிராம்மணர்களாகப் பிறந்து கடைசி ஜென்மத்தில் ஸ்ரீ நாராயணனின்  அனுக்கிரஹத்தால் முக்தி பெறுவீர்கள் என்று கூறி மறைந்து விடுகிறார். இதைக் கேட்டு ஓரளவு சமாதானம் அடைந்த மந்திர தேவதைகள் பிராம்மண வடிவம் ஏற்று நூற்றெட்டு திவ்ய தேசங்களிலும் ஸ்ரீ நாராயணனைக்குறித்து தவமிருந்து விட்டு கடைசியாக சுவேத  தீவிற்கு வந்தனர். இவர்களது தீவிர தவத்தைக் கண்டு என்ன செய்வது என்று புரியாத ஸ்ரீ நாராயணன் வீரபத்திரரிடம் செய்தியைக் கூறி ஆலோசனை கேட்கிறார். வீரபத்திரர் அவரிடம் திருக்கோடிக்கா தலத்தின் மகிமையை எடுத்துக் கூறுகிறார். இந்த ஜகத்தில் பாவக ஷேத்திரம் ஒன்று உள்ளது. அதில் பிப்பல விருட்சம் (அரசமரம்) அதிக உத்தமமாக விளங்குகிறது. அங்கு ஸர்வேஸ்வரன் திருக்கோடீஸ்வரர் என்ற நாமதேயத்துடன் ஸ்ரீ திரிபுரசுந்தரி தேவியுடன் ஆவிர்பவித்து இருக்கிறார். அங்கே சிருங்கோத்பவ தீர்த்தம், சித்ர குப்த தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், குபேரதீர்த்தம், அக்னி தீர்த்தம், துர்கா தீர்த்தம், பூத தீர்த்தம், காளி தீர்த்தம், நிர்நதி தீர்த்தம் என்ற மஹா தீர்த்தங்கள் உள்ளன. இங்கு பரமசிவனை ஆராதித்து தர்ம, அர்த்த, காம, மோஷ என்கிற நான்கு புருஷார்த்த தேவதைகள் ஸித்தி பெற்றன. மேலும் ஸப்தரிஷிகளும் ஸனாகதி முனிவர்களும் மற்றும் அநேக மகான்களும் சித்தி பெற்றுள்ளார்கள். தவிர ஜமதக்னி முனிவரின் புதல்வரான பரசுராமர் தன் தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஸத்தி தோஷம் ஸ்ரீ ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் பிரலம்பாசுரனைக் கொன்றதால் பலராமனுக்கு நேர்ந்த பாவம் தட்சயாகத்தில் பலபேரைக் கொன்றதால் எனக்கும் காளிக்கும் ஏற்பட்ட மஹா ஹத்யா பாபம் இவற்றிற்கெல்லாம் திருக்கோடிக்கா ஸ்தலத்தில் தான் பாப நிவர்த்தி கிடைத்தது.

இந்த ஷேத்திரத்தின் மகிமையை யாராலும் வர்ணித்துச் சொல்ல இயலாது என்று கூறி திருக்கோடிக்கா சென்று தவமிருக்கும் படி வீரபத்திரர் ஆலோசனை கூறுகிறார். ஸ்ரீ நாராயணனும் அவ்விதமே திருக்கோடிக்கா வந்து இங்குள்ள சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடி பிப்பல மரத்தை பிரதட்சனம் செய்து பரமேஸ்வரனைக் குறித்து தவமிருந்து அசுவமேத யாகங்கள் செய்ய ஈஸ்வரன் மனம் மகிழ்ந்து ஸ்ரீ நாராயணன் முன்தோன்றி அவரது விருப்பம் என்னவென்று வினவுகிறார். ஸ்ரீ நாராயணன் மூன்று கோடி மந்திரங்களுக்கு எப்படியாவது முக்தி தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். நீங்கள் தவம் இருந்ததாலும் பெரிய யாகங்கள் செய்ததாலும் உங்களுக்காக திரிகோடி மந்திரங்களுக்கு முக்தி அளிக்கிறேன்  என்று பரமேஸ்வரன் வாக்குறுதி அளிக்கிறார். பின் ஸ்ரீ நாராயணன் திரிகோடி பிராமணர்களிடம் அவர்களை திருக்கோடிக்கா சென்று திருக்கோடீஸ்வரரைக் குறித்து ஒரு வருடம் தவம் இருக்கும் படி கூறுகிறார். மந்திர தவதைகளும் மகிழ்ச்சி அடைந்து திருக்கோடிக்காவை அடைந்து பரமேஸ்வரனைக் குறித்து தவம் இயற்றத் தொடங்கினர். இத்தருணத்தில் நாரதர் துர்வாசரைத் சந்தித்து இன்னும் இரண்டு மாதங்களில் மந்திர தேவதைகளுக்கு முக்தி கிடைக்க போகிறது. அதுமட்டுமன்று அவர்களுக்கு இன்னும் புத்தி வரவில்லை. கர்வமும் அடங்கவில்லை. ஸ்ரீ நாராயணனின் முயற்சியால் அவர் மூலமாகத்தானே தங்களுக்கு முக்தி கிடைக்கப்போகிறது என்று கூறுகிறார்கள். குரு சேவை செய்து குரு பிரசாதமாக ஞான முக்தி அடைந்தால் தானே உங்களுக்கு வெற்றி கிடைத்ததாகும். எனக் கூறி கலகமூட்டி விடுகிறார். அதன் பலனாக துர்வாசரும் கடும் கோபம் கொண்டு விட்டேனாபார் என்று கர்ஜித்து விட்டு கணபதியைத் தொழுகிறார். கணபதி பிரத்யட்சமானவுடன் முக்கோடி மந்திரங்கள் தம்மை அவமதித்ததையும் தூஷித்ததையும் கூறி அவர்களுக்கு முக்தி கிடைக்கும் முன் பல இடையூறுகளை உண்டு பண்ண வேண்டும் என்று கணபதியை வேண்டுகிறார். கணபதியும் துர்வாசரின் வேண்டுகோளுக்கினங்க காவிரி நதியை கும்பகோண மத்யார்ஜுன க்ஷேத்திர மார்க்கமாக திருக்கோடிக்காவுக்கு கொண்டு வந்து அர்த்த ராத்திரியில் எல்லோரும் நித்திரை செய்து கொண்டு இருக்கும் சமயத்தில் வெள்ளத்தைப் பெருகச் செய்து மந்திர பிராமணர்களை அதில் மூழ்கடித்து திணற அடிக்கிறார்.

அந்த பிரவாஹத்தில் மகா காளியும், வீரபத்திரரும், மஹாகணபதியின் கட்டளையின் பேரில் திரிகோடி மந்திரதேவதைகளை மிகவும் துன் புறுத்தினார்கள். துர்வாசரும், நாரதரும் அக்காட்சியைக் கண்டு மகிழ்கிறார்கள். வேறு வழி தெரியாத மந்திர பிராமணர்கள் இறுதியில் துர்வாசரிடம் சரணடைந்து தாங்கள் செய்த தவறுக்காக வருந்துகிறார்கள். மேலும் அவரையும் நாரதரையும் போற்றி தோத்திரம் செய்தனர். பிறகு கணபதியை துதித்து தங்களை வெள்ளத்திலிருந்து கரையேற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். கணபதியும் ஒரு பிரம்மச்சாரியாக வந்து அவர்களைக் காப்பாற்றி கரையேற்றி விட்டு பிரம்ம வித்தையை பழிப்பதோ வேத மார்க்கத்திற்கு விரோதமாக இருப்பதோ மகான்களை தூற்றுவதோ மாபெரும் பாபச் செயலாகும். உங்கள் கர்வத்தை அடக்குவதற்காகத்தான் இந்த தண்டனையைக் கொடுத்தேன். என்று அவர்களிடம் கூறி விட்டு தமது சுய வடிவத்தைக்காட்டுகிறார். தங்கள் தவறுகளை மன்னித்து முக்திக்கு வழிகாட்ட வேண்டும் என்று அவர்கள் கணபதியை வேண்ட அவரும் திருக் கோடிக்காவில் எழுந்தருளியிருக்கும் சுவாமியை பூஜை செய்யுங்கள்.  உங்களுக்கு முக்தி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி மறைகிறார். பின் மந்திர பிராமணர்கள் துர்வாசரை அணுகி முறையாக சிவ ஆராதனை செய்யும் வழியை கூறும் படி வேண்டுகிறார்கள். அகஸ்தியர் வந்து உங்களுக்கு எல்லாம் விளக்குவார். என்று துர்வாசர் கூறி விட்டு நாரதருடன் சென்று விடுகிறார். நான்கு நாட்கள் கழித்து லோபா முத்திரையுடன் அகத்தியர் திருக்கோடிக்கா வந்து சேருகிறார். திரிகோடி மந்திரதேவதைகள் வேண்டு கோளின்படி அவர்களுக்கு அத்யாத்ம வித்தையை உபதேசம் செய்து முத்திரைகளை சொல்லித்தந்து சிவ பூஜா விதிகளையும் எல்லா மந்திர சாஸ்திரங்களையும் கற்றுக் கொடுக்கிறார். அவரோடு சேர்ந்து மந்திர பிராமணர்கள், சாஸ்தா, காளி, துர்க்கை மற்றும் வீரபத்திரர் ஆகியோரை பூஜை செய்தனர். பின் அகத்தியர்  திருக்கோடீஸ்வரருக்கு தென்மேற்கு பகுதியில் மணலால் கணபதியை பிரிதிஷ்டை செய்ய எல்லோரும் சஹஸ்ர நாமத்தால் அக்கணபதியை பூஜை செய்தனர். பின்னர்   திருக்கோடீஸ்வரரை சஹஸ்ர நாமத்தால் அர்ச்சனை செய்தனர். இந்த சஹஸ்ரநாமம் அபூர்வமானது. இதற்கு சமம் எதுவும் கிடையாது.

""த்ரி கோடீச ; த்ரிகோடீட்ய
த்ரிகோடி   பரிஸேவித:
த்ரிகோடிஸ்த: த்ரி கோட்யங்க:
த்ரிகோடி  பரிவேஷ்டித:

என்று ஆரம்பமாகும் இந்த சஹஸ்ரநாமத்தை திரிகோடி மந்திர தேவதைகளுக்கு அகஸ்தியர்  கற்றுக்கொடுத்தார். (அகஸ்தியருக்கு, சண்முகராலும், சண்முகருக்கு விநாயகராலும், விநாயகருக்கு சிறு வயதில் ஈஸ்வரியாலும் சொல்லிக் கொடுக்கப்பட்டதாகும்) சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஒரு சமயம் பரமேஸ்வரனும், பார்வதியும், ஜலக்கிரீடை செய்யும் போது மிக்க சந்தோஷம் அடைந்த சுவாமியிடமிருந்து திரிபுர சுந்தரியானவள் முதன் முதலில் இந்த சஹஸ்ரநாமத்தைக் கற்றுக் கொண்டாளாம். இத்தருணம் மஹாகணபதி, முக்கோடி மந்திரதேவதைகள் முன் தோன்றி தமது முர்த்தி ஒன்றை பிரதிஷ்டை செய்து அவருக்கு துர்வாச கணபதி என்று பெயர் வைக்கும் படி கூறுகிறார். அதன் படி மந்தர தேவதைகள் நந்திக்கு சமீபம் கிழக்கே பார்த்து ஒரு பிள்ளையாரை பிரிதிஷ்டை செய்து பூசித்தனர். மேலும் பைரவருக்கு தெற்கு பாகத்தில் நாதேஸ்வரர், சண்டிபீடேஸ்வரர், கஹோனேஸ்வரர் என்ற மூன்று லிங்கங்களையும் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார்கள். இவற்றையெல்லாம் கண்டு திருப்தி அடைந்த துர்வாசர் கைலாசம் சென்று விநாயகரிடம் திரிகோடி மந்திரதேவதைகளின் முக்திக்காக சிபாரிசு செய்ய கணபதியும் மேபரமஸ்வரனிடம் சென்று ஸ்ரீ நாராயணனுக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் படி முறையிட்டார். அதன் படி கைலாசபதியான பரமேஸ்வரன் திருக்கோடிக்காவில் உள்ள சிவலிங்கத்தில் சாந்நித்யம் ஆகி முக்திக்காக காத்திருக்கும் மூன்று கோடி மந்திர பிராமணர்கள் முன் தோன்றினர். பிரபோ! எங்கள் பாக்கிய வசத்தால் தங்கள் திருப்பாதங்களைக் கண்டோம் என்று அவர்கள் பரவசமானார்கள். சுவாமி சைகையால் சிருங்கோத்பவ தீர்த்தத்தைக் காட்டினார். அது அவர்களுக்குப் புரியவில்லை. இதைக் கண்ணுற்ற அதிகார நந்தி தமது பிரம்பால் திருக்குளத்தைக் சுட்டிக்காட்டிய பின் அப்புனித தீர்த்தத்தில் அனைவரும் இறங்கி நீராடினார். அடுத்த கணம் நீரிலிருந்து ஒரு திவ்ய ஜோதி கிளம்பிற்று அந்த ஒளிப்பிழம்பில் மூன்று கோடி மந்திர தேவதைகளும் ஐக்கியமாகி விட்டனர். அவர்களுக்கு ஞானமுக்தி (சாயுஜ்ய முக்தி) கிட்டி விட்டது. அக்கணம் அங்கு குழுமியிருந்த சப்தரிஷிகள், பிரம்மாதி தேவர்கள், சனகாதி முனிவர்கள் முதலியோர் திருக்கோடீஸ் வரரைத் துதிக்கத் தொடங்கினார். பரமேஸ்வரன் கரம் உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்து விட்டு திருக்கோடிக்கா ஷேத்திரத்தின் மகிமையை கூறலானார். நந்தியின் கொம்பால் உண்டான இந்த சிருங்கோத்பவ தீர்த்தக் கரையில் இருப்பது என்னுடைய க்ஷேத்திரம் இது எல்லா சௌபாக்கியங்களையும் கொடுக்கும். எல்லோருக்கும் எல்லா இஷ்ட சித்திகளையும் அளிக்க வல்லது. இது பாவகம் என்ற உத்தம க்ஷேத்திரமாகக் கூறப்படுகிறது. பிரம்மாண்டத்தில் இதற்கு சமமாக ஒன்றைக் கூற இயலாது.

ஒரு சமயம் கைலாசத்தையும் திரிக்கோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது இத்தலம் உயர்ந்து கைலாசம் கீழே போய் விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட பூமி இது. இங்கே கணபதியின் மகிமையும் கூடியுள்ளது.
இந்த இடத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கிறது. இங்கே காவிரி உத்திரவாஹினியாக இருக்கிறாள். என்னுடைய சன்னதியில் இருக்கும் இந்த உத்திரவாஹினியில் கார்த்திகை மாதம் ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லா பாவங்களும் தொலைந்து விடும். இவ்வாறு பகவான் கூறி அருளினார்.
274 சிவாலயங்கள் :அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் :  அக்னீஸ்வரர்
அம்மன் :  கற்பகாம்பாள்
ஸ்தல விருட்சம் :  பலா
தீர்த்தம் :  அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம்
பழமை :  2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :  கஞ்சனூர்(பலாசவனம், பராசபுரம்,பிரமபுரி, அக்கினிபுரம், கம்சபுரம், முத்திரிபுரி என்ற வேறு பெயர்களும் உண்டு)
ஊர் :  கஞ்சனூர்
மாவட்டம் :  தஞ்சாவூர்
மாநிலம் :  தமிழ்நாடு
பாடியவர்கள் : திருநாவுக்கரசர்,தேவாரப்பதிகம்.
வானவனை வலிவலமும் மறைக் காடானை மதிசூடும் பெருமானை மறையோன் தன்னை ஏனவனை இமவான்தன் பேதை யோடும் இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத் தேனவனைத் தித்திக்கும் பெருமான் தன்னைத் தீதிலா மறையோனைத் தேவர் போற்றும் கானவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்த் தேனே.திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 36வது தலம்.
 
விழா : மாசி மகம், தைத்திங்களில் ஹரதத்தர் காட்சி, ஆடிப்பூரம், திருவாதிரை, நவராத்திரி, சிவராத்திரி  
      
சிறப்பு : நவகிரகத்தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும். சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று. சுக்கிரனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சிவன் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் (சிலா ரூபமாக) இருப்பது தனிசிறப்பு வாய்ந்தது. இத்தலத்தில் ஈசன் பிரம்மனுக்கு தன் திருமணக்கோலத்தை காட்டியருளினார். எனவே தான் இங்கு அம்மனை தன் வலப்பாகத்தில் சிவன் கொண்டருள்கிறார். பராசர முனிவருக்கு சிவன் இங்கு தாண்டவ கோலம் காட்டி முக்தி அருளினார். எனவே இங்குள்ள நடராஜர் "முக்தி தாண்டவ மூர்த்தி' என அழைக்கப்படுகிறார்.  
      
திறக்கும் நேரம் : காலை 07:30 முதல் மதியம் 12:00 வரை. மாலை 04:30 முதல் இரவு 09:00 மணிவரை நடை திறந்திருக்கும். அருள் மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர், -609 804 (வழி) துகிலி, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன் : +91- 435 - 247 3737 
     
தகவல் : கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. பழமையான கோயில். தெற்கு வாயில் வழியாக உள்வந்தால் உள்மண்டபம் உள்ளது.  பிரகாரமாக வலம் வந்து மண்டபத்தையடைந்தால் இடப்பால் விநாயகர் தரிசனம், வலப்பால் விசுவநாதர் சன்னதி. அடுத்து அம்பாள் சன்னதி. உள்வாயிலைத் தாண்டி சுவாமி சன்னதிக்குச் செல்லும் போது இடப்பால் (வெளவால் நெத்தி மண்டபத்தில்) விநாயகர், மயூரசுப்பிரமணியர், மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன.
தலமரம் புரசு (பலாசு) உள்ளது. இதன்கீழ் அக்னீஸ்வரர் லிங்கம் தரிசனம் அடுத்து மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன், நவக்கிரக சன்னதி, நால்வர் சன்னதிகள் உள்ளன.



பிரார்த்தனை : உடல்பிணி, சோகை நோய், சித்தபிரமை நீங்கவும், செல்வம் செழிக்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். 
     
ஸ்தல பெருமை : பராசரருக்கு சித்த பிரமை நீங்கியது. பிரம்மனுக்கு திருமண காட்சி தந்தது. அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்தது. சந்திரனின் சாபம் நீங்கியது. கம்சன் என்னும மன்னனின் உடற்பிணி நீங்கியது. கலிக்காமருக்கு திருமணம் நடந்தது. மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டது ஆகிய சிறப்புகளை உடையது இத்தலம். மேலும் பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாச்சாரியார் அவதார தலம். மகா பலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார். எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர். இவரது அருள் பெற நவக்கிரக தலங்களில் தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூர் செல்ல வேண்டும். நவக்கிரகங்களில் சுக்கிரன் ஆறாவது கிரகம் ஆவார். இவர் பிரம்ம தேவரின் மானஸ புத்திரராகிய பிருகு முனிவருக்கும், பிலோமிசைக்கும் மகன். எனவே தான் இவருக்கு பார்க்கவன் என்ற பெயர் உண்டு. இவருக்கு கவி என்ற மற்றொரு பெயரும் உண்டு. சுக்கிரன் மிகச்சிறந்த சிவ பக்தர். சிவ பெருமான் அருளால் இறந்தவர்களை உயிர் பிழைக்க செய்யும் அமிர்த சஞ்சீவி மந்திரத்தை கற்றவர். இவர் வெள்ளை நிறம் கொண்டவர். வெண்தாமரையுடன் கருட வாகனத்தில் வீற்றிருப்பார். முதலை வாகனமும் உண்டு. இவர் அசுரர்களுக்கு குரு. சுக்கிராச்சாரியார் என அழைக்கப்பட்டார். ரிஷப, துலா ராசிக்கு அதிபதியான இவர் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்திற்கு உரியவர். சுக்கிர திசை இருபது ஆண்டுகள் நடக்கும். ஒரு ராசியில் சஞ்சரிக்க இவருக்கு ஒரு மாத காலம் ஆகும். சுக்கிரனுக்கு நண்பர்கள் புதனும், சனியும். எதிரி சூரியனும் சந்திரனும். சமமானவர்கள் செவ்வாயும் குருவும். மகா பலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார். எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர். ஒரு முறை சுக்கிராச்சாரியாரால் விஷ்ணுவுக்கு சுக்ர தோஷம் ஏற்பட்டது. இத்தோஷத்தை நீக்க விஷ்ணு ஹரதத்தர் என்ற திரு நாமத்துடன் இங்குள்ள சிவனை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார் என்கிறது புராணம். சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் சுக்கிரனுக்கு அருகில் உள்ள ஐம்பொன்னால் ஆன சிவனை வழிபாடு செய்வது சிறப்பு.

ஸ்தல வரலாறு : முன்பு கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு பிறந்த குழந்தையின் பெயர் சுதர்சனர். வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. திரு நீறு, உருத்திராக்கதாரியாக திகழ்ந்த அக்குழந்தை எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீது அமர்ந்து சிவமே பரம்பொருள் என்று அக்குழந்தை மும்முறை கூறியதைக்கண்டு வியந்தனர். இக்காட்சியை சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயில் நடராஜர் சன்னதியிலும் உள்ளது. பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாளுடன் எழுந்தருளியுள்ளார். ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தெட்சிணாமூர்த்தி உருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயர் அளித்து சிவநாம தீட்சை செய்தவர். ஒரு செல்வந்தர் தினமும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்துவந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பது போல காட்சி தருவார். ஒரு நாள் அக்கனவு தோன்றவில்லை. காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர் ஹரதத்தரிடம் ஏழை பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கி உண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பி விட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன் மூலம் ஹரதத்தரின் பெருமையை அறிந்து அச்செல்வர் அவரை நாடிச்சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது. ஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும் ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன. ஊருக்குள் வரும் போது அரசமரத்தின் எதிரில் கிழக்கு நோக்கி ஹரதத்தர் சிவ பூஜை செய்வது போல உள்ள ஹரதத்தர் தனிக்கோயிலும் இத்தலத்தில் உள்ளது. சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் சுரைக்காய் பக்தர் என்ற அடியவர் மனைவியுடன் காட்சிதருகிறார்.
இவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுரைக்காய் விற்று பிழைத்துவந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்து விட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க அவர் செய்வதறியாது திகைத்தார். அதிதிகளுக்கு சுரைக்காய் ஆகாது என்று எண்ணி கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக ஒரு பாதி விதைக்கு ஒரு பாதி கறிக்கு என்று அருளி செய்து ஏற்று அவருக்கு அருள் புரிந்தார் என்று ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

கல்நந்தி : பிராமணர் ஒருவர் புல் கட்டை தெரியாமல் போட்டு விட்டதால் பசுக்கன்று ஒன்று இறந்தது. இதனால் அவருக்கு பசுதோஷம் நேர்ந்தது என்று பிராமணர்கள் அவரை தங்களிடமிருந்து விலக்கி வைத்து விட்டனர். அவர் செய்வதறியாமல் ஹரதத்தரிடம் முறையிட்டார். அவ்வாறு முறையிடும் போது பஞ்சாட்சரத்தைச் சொல்லியவாறே சென்றார். அதை கேட்ட ஹரதத்தர் சிவபஞ்சாட்சரத்தை சொல்லியதால் அப்பாதகம் நீங்கி விட்டதாக கூறினார். பிராமணர்கள் அதை ஏற்காமல் தங்களுக்கு நேரடிச்சான்று தந்து நிரூபிக்குமாறு கூறினர். ஹரதத்தர் உடனே அந்த பிராமணரை அழைத்து காவிரியில் நீராடி ஒரு கைப்புல் எடுத்து வந்து அந்த கல்நந்தியிடம் தருமாறு பணித்தார். அப்பிராமணரும் அவ்வாறே செய்து கல்நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நீங்கும் என்று சொல்லி புல்லைத்தர அந்நந்தியும் உண்டதாக வரலாறு.
108 திவ்ய தேசங்கள் :அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில்

மூலவர் :  நாவாய் முகுந்தன் (நாராயணன்)
தாயார் : மலர்மங்கை நாச்சியார் (சிறுதேவி)
தீர்த்தம் : கமல தடாகம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருநாவாய்
ஊர் :  திருநாவாய்
மாவட்டம் : மலப்புரம்
மாநிலம் : கேரளா
பாடியவர்கள்:நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்துயிர் தேவர்கட் கெல்லாம் விண்ணாளன் விரும்பியுரையும் திருநாவாய் கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே. நம்மாழ்வார்
 
விழா : வைகுண்ட ஏகாதசி, திருவோணம்  
      
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் இத்தலத்தை திருக்கோட்டியூருக்கும், திரு நறையூருக்கும் ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார். கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.  
      
திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய் : 676 301 மலப்புரம் மாவட்டம், கேரளா மாநிலம். போன்:+91- 494 - 260 2157 
     
தகவல் : கோயிலின் சுற்றுப்பகுதியில் கணபதி, லட்சுமி, ஐயப்பனுக்கு சன்னதிகள் உண்டு. கோயிலுக்கு எதிரே உள்ள ஆற்றின் அக்கரையில் பிரம்மனுக்கும், சிவனுக்கும் தனி கோயில் உள்ளது. எனவே இத்தலத்தை மும்மூர்த்தி என அழைக்கிறார்கள். மிகப்பழமையான இக்கோயிலின் உட்புற சுவர்களில் காலத்தினால் அழியாத பல ஓவியங்கள் இன்றும் உள்ளன. காசியில் நடப்பதை போல இத்தலத்தில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் கொடுக்கிறார்கள். கேரள மாநிலத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதில் இத்தலம் முதன்மை வகிக்கிறது. 


     
ஸ்தல பெருமை : ஒரு முறை ஒன்பது யோகிகள் சேர்ந்து பெருமாளை நினைத்து தவம் செய்துள்ளனர். எனவே இத்தலம் நவயோகிகள் ஸ்தலம் என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் "நாவாய் ஸ்தலம்' ஆனது. இதை தற்போது "திருநாவாய்' என அழைக்கிறார்கள். இந்த ஸ்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இவருக்கு மேலே உள்ள விமானம் வேத விமானம் எனப்படுகிறது. இவரை லட்சுமி, கஜேந்திரன், நவயோகிகள் தரிசனம் செய்துள்ளனர்.

ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப்பூக்களை பறித்து பெருமாளை பூஜித்து வந்தனர். இதில் ஒரு முறை கஜேந்திரனுக்கு அர்ச்சனை செய்வதற்கு பூக்கள் கிடைக்காமல் போனது. இதனால் வருத்தமடைந்த கஜேந்திரன் பெருமாளின் தனது நிலையை கூறி வருத்தப்பட்டான். உடனே பெருமாள் லட்சுமியை தேவியை அழைத்து இனி மேல் பூப்பறிக்க வேண்டாம் கஜேந்திரனுக்காக விட்டு கொடு என்று கூறினார். லட்சுமியும் அதன் படி செய்தாள். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் தினமும் ஏராளமான பூக்களைப்பறித்து பெருமாளை அர்ச்சித்து வந்தான். பூஜையின் போது பெருமாள், லட்சுமி தேவியை தன்னுடன் ஏக சிம்மாசனத்தில் அமரச்செய்து கஜேந்திரனின் பூஜையை ஏற்று தரிசனம் தந்ததாக புராண வரலாறு கூறுகிறது. கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.
108 திவ்ய தேசங்கள்: அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில்

மூலவர் :  உய்யவந்த பெருமாள்(அபயப்ரதன்)
தாயார் :  வித்துவக்கோட்டு வல்லி (பத்மாஸனி நாச்சியார்)
தீர்த்தம் :  சக்கரதீர்த்தம்
பழமை :  3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :  திருமிற்றக்கோடு
ஊர் :  திருவித்துவக்கோடு
மாவட்டம் :  பாலக்காடு
மாநிலம் :  கேரளா
பாடியவர்கள் : குலசேகராழ்வார்
தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை விரைகுழவும் மலர்பொழில் சூழ் வித்துவக் கோட்டம்மானே! அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள்நினைந்தே அழுங்குழவி அதுவே போல் இருந்தேனே!-குலசேகராழ்வார்
      
திறக்கும் நேரம் : காலை 05:00 மணி முதல் 10:30 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 07:30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு உய்யவந்த பெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு- 679 303 (திருவிச்சிக்கோடு), பாலக்காடு மாவட்டம், கேரளா மாநிலம்.போன் : +91- 98954 03524 
     
தகவல் : இப்பகுதி மக்கள் பெரும் பாலானோர் தமிழ் பேசுகின்றனர். கோயில் சுவர்களில் அமைந்துள்ள அழகிய சுதைச்சிற்பங்களும் சிற்ப வேலைப்பாடுகளும் அர்ஜுனன் தவம் செய்த காட்சி கிருஷ்ண லீலா காட்சிகள் போன்றவை மிகவும் அற்புதமாக உள்ளது.  
      
ஸ்தல பெருமை : காசி விஸ்வநாதரே இங்கு எழுந்தருளியிருப்பதாலும் பத்து நதிகள் ஒன்றாக இணையும் பாரதப்புழா நதிக்கரையில் கோயில் அமைந்திருப்பதாலும் இத்தலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்ததாகும். பெருமாள் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். மூலவர் விமானம் தத்வகாஞ்சன விமானம் ஆகும். அம்பரீஷன், பஞ்சபாண்டவர்கள் ஆகியோர் பெருமாளை தரிசித்துள்ளனர்.  


      
ஸ்தல வரலாறு : மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தென்னிந்திய பகுதிக்கு வந்த போது இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகான இடத்தை கண்டனர். அங்கிருந்த அழகும் தெய்வீகம் கலந்த அமைதியும் கண்ட அவர்கள் சில காலம் அங்கேயே தங்க முடிவு செய்தனர். அந்த நேரத்தில் தினமும் பூஜை செய்வதற்காக கோயில் கட்டி சிலைகளை அமைத்தனர். முதலில் அர்ஜுனன் மகா விஷ்ணுவின் சிலையை அமைத்தான். இதுவே மூலஸ்தானமாக கருதப்படுகிறது. சுற்றுப்பகுதியில் தர்மர் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும், நகுல சகாதேவர் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும், பீமன் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும் அருள் பாலிக்கிறார்கள். கோயிலில் நுழைந்தவுடன் கணபதியும் தெட்சிணாமூர்த்தியும் வீற்றிருக்கின்றனர். சாஸ்தா, நாகர், பகவதி தேவிக்கு தனித்தனி சன்னதி உள்ளது. பஞ்சபாண்டவர்கள் அனைவரும் தங்களது வன வாசத்தில் பெரும் பாலான நாட்களில் இங்கேயே தங்கி பூஜை செய்ததாக கூறப்படுகிறது. வெகு காலத்திற்கு பின் பாண்டிய மன்னன் ஒருவனால் மிகப்பெரிய மதில் சுவர் கட்டப்பட்டது. நெடுங்காலமாகவே இக்கோயிலில் பெருமாள் வழிபாடு மட்டுமே இருந்து வந்தது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை சேர்ந்த முனிவர் ஒருவர் காசிக்கு சென்று அங்கேயே தங்கி வெகு காலம் வாழ்ந்திருந்தார். அப்போது அவரது தாயாரின் உடல் நிலை மோசமாகி இறக்கும் நிலையில் இருப்பதாக தகவல் வந்தது. இதை கேள்விப்பட்ட அவர் காசியிலிருந்து தன் தாயை பார்க்க புறப்பட்டார். அவர் கிளம்பும் போது இவரது பக்தியின் காரணமாக காசி விஸ்வநாதரும் முனிவரது குடையில் மறைந்து வந்ததாக கூறப்படுகிறது. முனிவர் வரும் வழியில் இந்த கோயிலை கண்டு தனது குடையை இத்தலத்தில் வைத்து விட்டு குளிக்க சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்த போது குடை வைத்திருந்த பலிபீடம் வெடித்து சிதறி அதிலிருந்து ஒரு சிவலிங்கம் தோன்றியிருப்பதையும், குடை மறைந்து விட்டதையும் கண்டார். காசியிலிருந்த விஸ்வநாதரே பஞ்ச பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த இத்தலத்தில் தங்குவதற்கு வந்து விட்டதாகவும் இதற்கு அந்த முனிவர் காரணமாக இருந்ததாகவும் கூறுவர். மூலவரை தரிசிக்கும் முன் இந்த சிவலிங்கத்தை தரிசித்து செல்ல வேண்டும். கேரளாவில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இத்தலம் விளங்குகிறது. இத்தலத்ததை இப்பகுதி மக்கள் ஐந்து தல மூர்த்தி தலம் என அழைக்கின்றனர்.

திங்கள், 29 ஜூலை, 2019

108 திவ்ய தேசங்கள்: அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில்
மூலவர் :  காட்கரையப்பன் (அப்பன்)
தாயார் :  பெருஞ்செல்வநாயகி, வாத்ஸல்யவல்லி
தீர்த்தம் :  கபில தீர்த்தம்
பழமை :  2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :  திருகாட்கரை
ஊர் :  திருக்காக்கரை
மாவட்டம் :  எர்ணாகுளம்
மாநிலம் :  கேரளா
பாடியவர்கள்:நம்மாழ்வார்
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை ஈர்மை செய்து என்னுயிராய் என்னுயிருண்டான் சீர்மல்கு சோலை தென் காட்கரை யென்னப்பன் கார்முகில் வண்ணன்தன் கள்வம் அறிகிலேனே. நம்மாழ்வார்  
      
விழா : ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் திருவோண உற்சவம் நடக்கும். ஒரு காலத்தில் 28 நாள் திருவிழா நடந்துள்ளது. இப்போது பத்து நாள் திருவிழா நடக்கிறது.  
      
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இக்கோயிலின் நுழைவு வாயிலில் மகாபலியின் ஆஸ்தானம் இருந்துள்ளது. இந்த இடத்தில் தற்போது ஒரு சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இவ்விடத்தில் விளக்கேற்றி மகாபலியை வழிபடுகின்றனர். கேரளபாணியில் ஓடு வேய்ந்த வட்ட வடிவ கோயில் இது. முகப்பில் உள்ள மண்டபத்தில் பெருமாள் வாமனராக, குள்ள வடிவம் எடுத்து வரும் காட்சி மரத்தில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் வாமன மூர்த்தி அருள்பாலிக்கிறார். இவரை மக்கள் திருக்காக்கரை அப்பன் என செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.  
      
திறக்கும் நேரம் : காலை 05:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு காட்கரையப்பன் (வாமனர்) திருக்கோயில், திருக்காக்கரை : 683 028 எர்ணாகுளம் மாவட்டம் கேரளா மாநிலம்.

தகவல் : கோயிலுக்கு வெளியே தனி சன்னதியில் தேவி பகவதி, சாஸ்தா, சுந்தர யக்க்ஷி, கோபால கிருஷ்ணன், நாகர் ஆகியோர் உள்ளனர். இக்கோயிலை பரசுராமர் நிறுவியுள்ளார். மகாபலி சிறந்த சிவபக்தன். அவன் வழிபாடு செய்ததாக சொல்லப்படும் லிங்கம் இங்கு இருக்கிறது. இந்த வகையில் சைவ, வைணவர்கள் இரு தரப்பினரும் இங்கு வழிபாடு செய்கின்றனர். இந்தக் கோயிலில் வாமனருக்கு ஒரு கருவறையும், சிவபெருமானுக்கு ஒரு கருவறையும் தனித்தனியே உள்ளன. தினமும் ஐந்து  பூஜைகள், மூன்று சீவேலிகள் நடைபெறுகின்றன. வாமன மூர்த்தி சந்நிதிக்கு தெற்குத் திசையில் மகாபலி வழிபட்டதாக கூறப்படும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தலத்தில் வாமனரை வழிபடுவதற்கு முன்பாக சிவலிங்கத்தை வழிபடுவதைப் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தலபெருமை : கேரளத்தில் பழமை வாய்ந்த கோயில் இது. தமிழ் கல்வெட்டுக்கள் இங்கு உள்ளது. தமிழக மக்களுக்கு ஒரு காலத்தில் இது வழிபாட்டு தலமாக இருந்துள்ளது. கி.பி. ஒன்பது முதல் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை சேர மன்னர்கள் இத்தலத்தை பிரபலமாக்கியுள்ளனர். 1825ல் திருவிதாங்கூர் அரசு இக்கோயிலை எடுத்து கொண்டது. 1948ல் புனர் பிரதிஷ்டை நடந்துள்ளது. இருந்தாலும் இன்றும் புதுப்பொலிவுடன் விளங்குகிறது. திருக்காட்கரை திருத்தலத்திலும் ஓணம் திருவிழா வெகு விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தத் தலத்தில் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார் வாமன அவதார பெருமாள். இவருக்குக் கதாயுதம் கிடையாது. கருவறை விமானம் புஷ்கல விமானம். தாயார் ஸ்ரீ பெருஞ் செல்வநாயகி. தாயாருக்குத் தனிச் சன்னதி கிடையாது. பத்து மற்றும் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பதினெட்டு கல்வெட்டுக்கள் இந்தத் தலத்தில் காணக்கிடைக்கின்றன.

ஸ்தல வரலாறு : மகா பலிச்சக்கரவர்த்தி என்பவன் கேட்டவர்க்கு கேட்டதை எல்லாம் கொடுப்பவன். இவன் அசுர குலத்தில் பிறந்தாலும் மிகவும் நல்லவன். ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் இடறி விட்டான். தர்மம் செய்வதில் தன்னை விட தலை சிறந்தவர் யாருமில்லை என்ற அகந்தை அவனிடம் ஏற்பட்டு விட்டது. நல்லவனிடத்தில் அகந்தை ஏற்பட்டால் ஆபத்து. இதை உணர்ந்த மகா விஷ்ணு அதை வளர விடாமல் தடுக்கவே குள்ள வடிவெடுத்து வந்தார். மகா பலியிடம் மூன்றடி நிலம் கேட்டார். தாங்கள் குள்ளமானவர். உங்கள் காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே என்றான் மகாபலி. அவனது குல குரு சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகா விஷ்ணு என்பதை அறிந்து தானம் கொடுப்பதை தடுத்தார். கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால் இது வரை செய்த தானம் பலனில்லாமல் போய் விடும் என நினைத்தான் மகா பலி  சம்மதித்தான். பெருமாள் விஸ்வரூபம் எடுத்தார். ஓரடியால் பூமியையும், இன்னொரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே? என கேட்டார். அகந்தை கொண்டிருந்த மகா பலி பணிந்து தலை வணங்கி நின்றான். பகவானே! இதோ என் தலை இதைத்தவிர என்னிடம் வேறெதுவும் இல்லை என்றான். பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி தன்னோடு இணைத்து கொண்டார். வாமனர் மகா பலியைப் பாதாளத்திற்கு அனுப்புவதற்கு முன் மகா பலி ஒரு வரம் கேட்டான். வருடத்துக்கு ஒரு முறை தனது தேசத்து மக்களைச் சந்திப்பதற்கு அருள் செய்யுமாறு வேண்டிக்கொண்டான் பகவானும் ஏற்றுக்கொண்டார். பகவான் மகாபலிக்கு அருள் புரிந்தது ஆவணி மாதம் திருவோண நடசத்திரத் திருநாளில்  இதை நினைவு கூரும் வகையில் கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகாபலியும் நான் வேண்டிக்கொண்டபடி இந்த விழாவில் கலந்து கொண்டு குடிமக்களை வாழ்த்துவதாக ஐதீகம்.
108 திவ்ய தேசங்கள் : அருள் மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில்

மூலவர் : லெட்சுமணப்பெருமாள் (திருமூழிக்களத்தான், அப்பன்,ஸுக்திநாதன்)
தாயார் : மதுரவேணி நாச்சியார்
தீர்த்தம் : சங்க தீர்த்தம், சிற்றாறு
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருமூழிக்களம்
ஊர் : திருமூழிக்களம்
மாவட்டம் : எர்ணாகுளம்
மாநிலம் : கேரளா
பாடியவர்கள் : நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
பூந்துழாய் முடியாருக்கு பொன்னாழிக் கையாருக்கு ஏந்து நீரிளங் குருகே திரு மூழிக் களத்ததாருக்கு ஏந்து பூண்முலை பயந்து என்னினை மலர்கண்கள் நீர் ததும்ப தாம் தம்மை கொண்டகல்தல் தகவன்றென்றுரையீரே. நம்மாழ்வார்
 
விழா : சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஆறாட்டு. அதற்கு பத்து நாள் முன்பாக கொடியேற்றம். சித்திரை திருவோணத்தை தவிர அனைத்து திருவோணத்திற்கும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. கேரளாவை பொறுத்த வரை ஆடி மாதம் முழுவதும் ராமாயண மாதம் என்பதால் இந்த மாதத்தில் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.  
      
தல சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. லட்சுமணனும் பரதனும் சேர்ந்து வழிபட்ட தலமாகும். இத்தலத்திற்கு கோபுரம் மண்டபம் போன்றவற்றை லட்சுமணன் கட்டி பல திருப்பணிகள் செய்துள்ளான்.  
      
திறக்கும் நேரம் : காலை 05:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம் : 683 572 எர்ணாகுளம் மாவட்டம், கேரளா மாநிலம். போன் : +91- 484 - 247 3996 
     
தகவல் : நான்கு திருக்கரத்துடன் உள்ள இந்த பெருமாள் மேல் இரண்டு கைகளில் சங்கு, சக்கரம், வலது கீழ்க்கையில் கதை, இடது கீழ் கையில் தாமரை மலருடன் இடுப்பில் வைத்த கோலத்தில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். மூலவரின் விமானம் சவுந்தரிய விமானம். இவரை ஹாரித மகரிஷி தரிசித்துள்ளார். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இங்கு சிவனுக்கு தனி சன்னதி உள்ளது.
     
ஸ்தல பெருமை : கேரளாவின் பிரசித்தி பெற்ற பாரதப்புழா நதிக்கரையில் கோயில் அமைந்துள்ளது. இத்தலம் ஒரு காலத்தில் பெரிய கலாக்ஷேத்திரமாக விளங்கியிருக்கிறது. "ஸ்ரீஸுஸீக்தி' இங்கு அருளப்பட்டதால் பல வகையான நூல்கள் இங்கு ஆராயப்பட்டன. இதனால் கற்றறிந்த பெரியோர்கள் குழுமியிருந்த கல்வி மாநகரமாகவும் கலை நகரமாகவும் இத்தலம் சிறப்புற்றிருந்தது. ராமன் வனவாசம் செல்லும் போது சித்திர கூடத்தில் தங்க நேரிட்டது. அப்போது அயோத்திக்கே ராமனை மீண்டும் அழைத்து செல்ல பரதன் அங்கு வந்தான். இதைக்கண்ட லட்சுமணன், ராமனுடன் போர் செய்யவே பரதன் வருவதாக நினைத்து அவனை கொல்ல முயற்சிக்கிறான். இது தவறு என்பதை உணர்ந்த லட்சுமணன் தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்து பெருமாளிடம் அடிபணிந்து நின்றதாகவும் அப்போது பரதனே வந்து லட்சுமணனை ஆரத்தழுவி இன்சொல் கூறியதாகவும் இதனால் இத்தலம் திருமொழிக்களம் ஆனதாகவும் கூறுவர்.

        
ஸ்தல வரலாறு : கிருஷ்ண பகவான் துவாரகையில், ராமன், லட்சுமணன், பரதன், சத்ருகனன் என்ற நான்கு  விக்ரகங்களை பூஜித்து வந்தார். ஒரு முறை இப்பகுதி தண்ணீரில் மூழ்கிய போது வாக்கேல் கைமல் முனிவர் என்பவரிடம் இந்த விக்கிரகங்கள் கிடைத்தது. அன்றிரவு இவரது கனவில் தோன்றிய பகவான் இந்த விக்கிரகங்களை பாரதப்புழா ஆற்றின் கரையோர தலங்களில் பிரதிஷ்டை செய்ய கூறினார். இத்தலங்கள் தான் திருச்சூர் மாவட்டம் திருப்பறையார் ராமர் கோயிலாகவும் இரிஞ்சாலக்குடாவில் பரதன் கோயிலாகவும் பாயமல்லில் சத்ருக்கன் கோயிலாகவும் எர்ணாகுளம் மாவட்டம் திரு மூழிக்களத்தில் லெட்சுமணப்பெருமாள் கோயிலாகவும் அமைந்துள்ளது. கேரளாவில் உள்ள பெருமாள் கோயில்களில் லெட்சுமணப்பெருமாள் என்ற திருநாமத்துடன் அருள் பாலிப்பது இங்கு மட்டும் தான். இத்தலம் குறித்து இன்னொரு வரலாறும் உண்டு. முன்னொரு காலத்தில் ஹரித மகரிஷி என்பவர் இத்தலத்தில் பெருமாளை குறித்து தவமிருந்தார். இவரது தவத்தில் மகிழந்த பெருமாள் வேண்டும் வரம் கேள் என்றார். அதற்கு மகரிஷி பெருமாளே! இந்த உலக மக்கள் அனைவரும் உன்னை வந்து அடைவதற்கான எளிய வழிமுறையை கூறுங்கள் என்றார். அதற்கு பெருமாள் மகரிஷியே! மக்கள் அனைவரும் அவரவர்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கேற்ப (வர்ணாசிரம தர்மப்படி) எளிதில் என்னை அடைவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய பூஜை நெறிமுறைகளை போதிக்கும் ஸ்ரீ ஸுக்தியை  (திருமொழியை) இந்த தலத்தில் உங்களுக்கு வழங்குகிறேன் என்றார். எனவே தான் இத்தலம் திருமொழிக்களம் என்றும் பெருமாள் திரு மொழிக்களத்தான் எனவும் வழங்கப்படுகிறது. இதுவே காலப்போக்கில் திருமூழக்களம் ஆனது.

108 திவ்ய தேசங்கள் : அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில்
மூலவர் :  திருவாழ்மார்பன் (ஸ்ரீ வல்லபன் கோலப்பிரான்)
தாயார் :செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் (வாத்சல்ய தேவி)
தீர்த்தம் :கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம்
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : ஸ்ரீவல்லப சேத்திரம்
ஊர் : திருவல்லவாழ்
மாவட்டம் : பந்தனம் திட்டா
மாநிலம் : கேரளா
பாடியவர்கள் : நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
    
காண்பது எஞ்ஞான்று கொலோ, விளையேன் கனிவாய் மடவீர் பாண்டுரல் வண்டினொடு பசுந்தென்றலுமாகி எங்கும் சேன் சினையோங்கு மரச் செழுங்கானல் திருவல்லவாழ் மான்குறள் கோலப் பிரான் மலர் தாமரைப் பாதங்களே.-நம்மாழ்வார்
 
விழா : மாசிமாதம் பூசம் நட்சத்திரத்தில் ஆறாட்டு. அதற்கு பத்து நாள் முன்பாக கொடியேற்றம் நடைபெறும். திருவிழா முடிந்த மறுநாள் அர்ச்சனையை தவிர வேறு எந்த பூஜையும் நடைபெறாது.  
      
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று பெருமாள் இங்கு பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிக்கிறார். எனவே, ஐயப்பன் கோயிலைப் போல, இங்கும் பெண்களுக்கு அனுமதியில்லை. மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்றும், சித்திரை விஷு அன்றும் இவரது மார்பு தரிசனம் விசேஷம் என்பதால், இந்த நாட்களில் மட்டும் பெண்களை அனுமதிப்பார்கள். உப்பு மாங்காய் நைவேத்யம்: சங்கரமங்கலத்தம்மையார் பிரம்மச்சாரிகளுக்கு தானம் செய்த போது பெருமாளும் பிரம்மச்சாரி வடிவில் வரிசையில் நின்றார். தனக்களித்த உணவை ஏற்ற அவர், இப்பெண் விரதம் முடித்து தான் சாப்பிடுவதற்காக வைத்திருந்த உப்பு மாங்காயை கேட்டாராம். அவள் அதை பாக்கு மரத்தின் இலையில் வைத்து பெருமாளுக்கு அளித்தார். அன்றிலிருந்து தினமும் இத்தலத்தில் கமுகு இலையில் சாதமும் உப்புமாங்காயும் நைவேத்யமாக வைக்கப்படுகிறது. இத்தலத்தில் கேரளாவுக்கே உரித்தான சந்தனத்துடன் விபூதியும் தரப்படுவது விசேஷம். மார்கழி திருவாதிரையன்று சிவன் இவரது கோலத்தைக் காண வந்தாராம். அதனால், விபூதியும் கொடுப்பது வழக்கமாயிற்று.

        
திறக்கும் நேரம் : காலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருவல்லவாழ்- 689 101 (ஸ்ரீ வல்லப க்ஷேத்திரம்) பந்தனம் திட்டா மாவட்டம், கேரளா மாநிலம்.போன்:+91- 469 - 270 0191 
     
தகவல் : நாட்டிய குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கேரளாவின் பிரசித்தி பெற்ற கதகளி நிகழ்ச்சியை கோயிலில், நேர்ச்சையாக நடத்துகிறார்கள். நாட்டியக் கலைஞர்கள் கோயிலிலேயே உள்ளனர். தினமும் இந்த நேர்ச்சை நடத்தப்படுகிறது. இந்த நடனக்குழுவிற்கு கலாக்ஷேத்ரா என்று பெயர்.
     
ஸ்தல பெருமை : பொதுவாக, கருடாழ்வார் பெருமாளுக்கு எதிரில் அருள்பாலிப்பார். ஆனால் இங்கு 50 அடி உயரத்திலுள்ள கல் தூணின் மீது பறக்கும் நிலையில் அருள் பாலிக்கிறார். கருடனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டுள்ளது. பெருமாளை வணங்குவோர் தங்களது நியாயமான வேண்டுகோளை அவரிடம் வேண்டியவுடனேயே கருடன் அவரை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் இருப்பதாக ஐதீகம். இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். மூலவரின் விமானம் சதுரங்க கோல விமானம் எனப்படுகிறது. இந்த பெருமாளை  கண்டாகர்ணன், சங்கரமங்கலத்தம்மையார் ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர்.  
      
தல வரலாறு : கேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்ற பதிவிரதை வாழ்ந்தார். இவர் ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து இந்த கோயிலுக்கு வருவார். மறுநாள் துவதாசியன்று இந்தக் கோயிலில் வசிக்கும் துறவிகளுக்கு அன்னதானம் செய்வார். இவர் வரும் வழியிலுள்ள காட்டில் வசித்த தோலாகாசுரன் என்பவன் இந்த அம்மையாரை கோயிலுக்கு செல்ல விடாமல், மறைவாக இருந்து அவரே அறியாமல் துன்பம் விளைவித்தான். இதை பெருமாளிடம் அம்மையார் முறையிட்டார். ஒரு முறை அவர் காட்டு வழியே வரும் போது பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன் ஏதோ ஒரு அசுர சக்தியுடன் போர் புரிவதைக் கண்டார். சற்று நேரத்தில் சப்தம் அடங்கி விட்டது. பிரம்மச்சாரியைக் காணவில்லை. அம்மையார் கோயிலுக்கு வந்தார். அங்கே பெருமாள் காட்டில் பார்த்த பிரம்மச்சாரி இளைஞனைப் போன்ற தோற்றத்தில் இருந்தார். தன்னைப் பாதுகாக்க பெருமாளே நேரில் வந்து அசுரனுடன் போரிட்டதை அம்மையார் புரிந்து கொண்டார். பிரம்மச்சாரி இளைஞர்கள் அங்கவஸ்திரம் அணிவதில்லை. பெருமாளும் இத்தலத்தில் அங்கவஸ்திரம் இல்லாமல் மார்பு தெரிய காட்சியளிக்கிறார். அவரது மார்பில் லட்சுமி (திரு) நிரந்தரமாக குடியிருப்பதால் இவருக்கு திருவாழ்மார்பன் என்ற பெயர் ஏற்பட்டது. மற்ற தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனம் முக்கியம். இங்கோ மார்பு தரிசனம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.



ஸ்ரீ பெரியவாளிடம் நாற்பது வருடங்களுக்கு மேல் பூஜா கைங்கர்யம் செய்து வந்தார் குள்ளச்சீனு ஐய்யர் என்பவர். அவருடைய புத்திரர் ஸ்ரீ மடத்தில் இப்போது சாமவேத அத்யாபகராயிருக்கும் ஸ்ரீ சந்திர மௌளிச்ரௌதிகள் சுமார் ஆறு வருஷங்களுக்கு முன் (2000 ஆண்டு வாக்கில்) உடலில் திடீரென்று வாயுத்தொல்லை அதிகமாகி எங்கேயாவது ஓடிப்போய்விடலாமா என்ற நிலை ஏற்பட்டது.ஆனால் வயதான தாயாரையும் குழந்தைகளையும் தன்னிடத்தில் படிக்கும் மாணவர்களையும் விட்டு விட்டு எப்படி எங்கே போவது ? என்று நிலைகொள்ளாமல் ஸ்ரீ பெரியவாளையே பிரார்த்தித்து கொண்டு இரவில் படுத்துக்கொண்டார். அப்பொழுது கனவில் கையில் தண்டமில்லாத சன்யாஸி போல் தோற்றமளித்த ஒருவர் சந்திரமௌளியை என் பின்னாலே வா என்று அழைத்துக் கொண்டு ஸ்ரீ பெரியவா சிவாஸ்தானத்தில் வழக்கமாகத் தங்கும் இடத்திற்குச் சென்று ஓர் இடுக்கு வழியாக உள்ளே சென்று விட்டார். மௌளி மட்டும் வெளியே நின்று கொண்டு அந்தப் பலகணி வழியாக எட்டிப் பார்த்தார். அப்போது ஸ்ரீ மஹா பெரியவா வெறும் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் வேறு இரு சன்யாஸிகள். ஸ்ரீ மஹா பெரியவா சந்திரமௌளியைக் கூப்பிட்டு கையில் இருந்த எதோ ஒரு யந்திரம் எழுதியிருந்த தகட்டை நன்றாகத் துடைத்து விட்டு என்ன எழுதியிருக்கிறது? என்று படிக்கும் படி உத்திரவிட்டார்கள்.மௌளி அது கன்னட எழுத்து மாதிரியிருக்கிறது. எனக்குக் கன்னடம் படிக்கத் தெரியாது. பேச மட்டும் தான் தெரியும் என்றார். அதை அழித்து விட்டு மறுபடியும் காண்பித்து “படி” என்று உத்திரவிட்டார்கள். இந்த லிபியும் எனக்கு தெரியாது தெலுங்கு எழுத்து போல் இருக்கிறது என்றார் சந்திரமௌளி. அதன் பிறகு பெரியவா மறுபடியும் யந்திரத்தைத் துடைத்து விட்டு பிரகாசமான எழுத்தில் இருந்ததைப் படிக்கும் படி உத்திரவிட்டார்கள். அதில் தும் துர்காயை நமஹ என்று சம்ஸ்கிருத்தில் பளிச்சென்று எழுதியிருந்தது. இது தான் நான் உனக்குச் செய்யும் உபதேசம் இதையே ஜபம் செய் என்று அனுக்ரஹித்தார்கள்.

உடனே விழிப்பு வந்து விட்டது, சந்திரமௌளிக்கு.

மறு நாள் முதல் மௌளி அந்த மந்திரத்தை ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டார். படிப்படியாக உடல் உபத்திரவம் பரிபூரணமாகக் குணமடைந்தார்.சில தினங்கள் ஆயின. மறுபடி ஒரு கனவு. கையில் திரிசூலத்தை வைத்துக் கொண்டு லம்பாடி போல் தோற்றமளித்த ஒரு பெண்மணி மௌளி சென்ற இடமெல்லாம் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தாள். எங்கு போனாலும் ஓடினாலும் மதில் மேல் ஏறிக் குதித்துச் சென்றாலும் கதவைச் சாத்திக்கொண்டு கோயிலுக்குச் சென்றாலும் அவரை விடாமல் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தாள்.மௌளிக்குப் பயத்துடன் விழிப்பு வந்து விட்டது. தற்செயலாக கும்பகோணத்திலிருந்து வந்த ஸ்ரீ வித்யா உபாசகரான தினகர சாஸ்திரிகளிடம் இதைப்பற்றிக் கேட்டார். நான் பல வருஷங்களாக ஜபம் செய்தும் எனக்கு துர்காம்பிகையின் தரிசனம் கிடைக்கவில்லை. உனக்கு ஸ்ரீ பெரியவாளின் அனுக்ரஹம் தான். கனவில் வந்தது சாட்சாத் துர்காதேவியே ! என்று சொன்ன்னர்.



ஒரு நாள் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் துவஜஸ்தம்பத்தின் அருகில் இந்த துர்கா மந்திரத்தை ஜபம் பண்ணிக்கொண்டிருக்கும் போது கோயில் ஸ்தானிகர் ஸ்ரீ காமகோடி சாஸ்திரிகள் “அம்பாள் சந்நிதியில் வந்து ஜபம் செய்” என்று அவரை அழைத்துக் கொண்டு போனார். கொஞ்ச நேரம் கண்ணை மூடிக் கொண்டு ஜபம் செய்தார். பின் யாரோ கழுத்தில் ஏதோ கட்டுவது போல் தெரிந்ததும் கண்ணைத் திறந்து பார்த்தால் காமகோடி சாஸ்திரிகள் தன் கையில் கட்டியிருந்த காப்புக்கயிற்றைக் கழற்றி இன்று காப்புக் கட்டு பூர்த்தி தினம் அம்பால் பிரசாதம் கழுத்தில் அணிந்துகொள் என்று கூறிக்கொண்டே கட்டி விட்டார்.

மறு நாள் ஸ்ரீ மௌளி காமகோடி சாஸ்திரிகளைச் சந்தித்த போது ஸ்ரீ மஹா பெரியவா கனவில் அநுக்ரஹித்ததையும் முதல் நாள் சாஸ்திரிகள் தம் கழுத்தில் கட்டிய காப்பையும் காட்டி சந்தோஷப்பட்டார்.
காமகோடி சாஸ்திரிகள் தனக்கு துவஜஸ்தம்பத்திலிருந்த மௌளியை சந்நிதிக்கு அழைத்து வந்ததோ தன் கைக்காப்பைக் கழற்றி மௌளியின் கழுத்தில் கட்டியதோ எதுவும் தெரியவே தெரியாது ! சந்திரமௌளியின் கையில் கட்டிய காப்பு இன்னும் இருக்கிறதே? அது கனவுப் பொருள் இல்லையே? அப்படியானால் ஸ்தானிகராக வந்தது யார் ? என்று திகைப்புடன் கூறினார்.

பெரியவா கடாக்ஷம் பரிபூரணம்
ஆண்டாளுக்கு வயது 5023

ஆடிதோறும் பூரநட்சத்திரம் வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் ஆண்டாள் அவதரித்த பின் தான் அந்நாளுக்கு தனிச்சிறப்பு உண்டானது. அவள் பூமிப்பிராட்டியின் அம்சம். கிணற்றில் விழுந்த குழந்தையைக் காக்க எண்ணிய தாய் தானே கிணற்றுக்குள் குதிப்பதைப் போல பாசம் ஆசை  என்னும் கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கும் உயிர்களை  காப்பாற்றி பரந்தாமனிடம் சேர்க்க பூவுலகில் அவதரித்தாள்.

பிறந்த வருடம் : ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள நந்தவனத்தில் ஒரு துளசிச் செடியின் அடியில் கலியுகம் பிறந்து 98வதாக நிகழ்ந்த நளவருடத்தில் ஆண்டாள் அவதரித்தாள். ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியும் பூரநட்சத்திரமும் செவ்வாய்க்கிழமையும் கூடிய நன்னாளில் பெரியாழ்வார்  அவளைக் கண்டெடுத்தார். தற்போது கலியுகம் 5117 நடக்கிறது. இவ்வகையில் ஆண்டாளுக்கு இவ்வாண்டு 5020 வது பிறந்த நாள். தான் பூஜித்து  வந்த வடபத்ரசாயி (ஸ்ரீவில்லிபுத்தூர் மூலவர்) குழந்தையை எடுத்துச் சென்றார். அவளுக்கு கோதை என்னும் பெயரிட்டு வளர்த்து வரும்படி அவர்  அருள்புரிந்தார். கோதை என்றால் நல்வாக்கு அருள்பவள் எனப்பொருள். ஆண்டாள் பெருமாளிடம் கொண்ட பக்தி காதலாக மாறியது. அவரையே தன் கணவனாக நினைத்து வாழத் தொடங்கினாள். கண்ணனோடு வாழ்ந்த கோபியர்களில் ஒருத்தியாக தன்னைக் கருதிக் கொண்டாள். ஸ்ரீவில்லி புத்தூரை கண்ணன் வசித்த ஆயர்பாடியாக கற்பனை செய்து அங்குள்ள பெண்களை கோபியராகச் சித்தரித்து அனைவருமாக இணைந்து பாவை நான்பு நோற்பதாக முப்பது பாடல்கள் எழுதினாள். அதுவே திருப்பாவை என்னும் இனிய நூல் ஆயிற்று.

ஞாயிறு, 28 ஜூலை, 2019

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.

உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.

1)   அர்த்த தோஷம்
2)   நிமித்த தோஷம்
3)   ஸ்தான தோஷம்
4)   ஜாதி தோஷம்
5)   சம்ஸ்கார தோஷம்   

1 )   #அர்த்த  தோஷம்

பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார். உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். அடடா என்ன தவறு செய்து விட்டோம் இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார். பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார். தன் சீடனிடம் நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது என்று கேட்டார். வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான். இது பொருளால் வரும் தோஷம் அதாவது அர்த்த தோஷம்! அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம். நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.

2)  #நிமித்த  தோஷம்

அடுத்தது நிமித்த தோஷம். உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதைக் கொண்டிருத்தல் அவசியம். நேர்மையானவராகவும், அன்பானவராகவும் நல்ல் சுபாவம் உடையவராகவும் அவர் இருத்தல் வேண்டும். அத்தோடு சமைக்கப்பட்ட உணவு நாய், எறும்பு, பல்லி, காகம் போன்ற ஜந்துக்களால் தொடப்படாமல் இருத்தலும் அவசியம். அப்படித் தொடப்பட்ட உணவுகள் அசுத்தமானவை. உணவில் தூசி, தலை மயிர், புழுக்கள் போன்றவையும் இருக்கக் கூடாது. பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன்  ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர் அம்மா நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறும் போது நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது” என்று கூறினார். அசுத்தமான உணவு அனர்த்தத்தையே விளைவிக்கும். தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும். நல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ணங்களையே உருவாக்கும்.

3)  #ஸ்தான  தோஷம்

அடுத்தது ஸ்தான தோஷம் எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். அது மட்டுமின்றி கழிப்பறை, மருத்துவமனை, யுத்த களம், கோர்ட் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். அவரோ மறுத்து விட்டார். அவரை சிறைப்பிடிக்கவும் அவன் முயன்றான். ஆனால் அவரோ நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள். எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் ஆனந்த முற்றார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர் விதுரா! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும் என்று அருளினார். உள்ளன்புடன் உணவு படைக்கப்பட வேண்டியது அவசியம்.

4 )  #ஜாதி  தோஷம்

அடுத்தது ஜாதி தோஷம். உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு, உப்பு உள்ளவை ராஜஸிகமானவை. உள்ளிப்பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை. சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது. ராஜஸிக உணவு உலோகாயத உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது. தாமஸிக உணவு தீய பிசாசு குணத்தை வளர்க்கிறது.

5)  #சம்ஸ்கார  தோஷம்

அடுத்தது சம்ஸ்கார தோஷம். தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை. ஆக இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். இன்றோ ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என்று அசுத்த உணவை ஆரவாரத்துடன் சாப்பிடுகிறோம். அசைவ உணவைத் தயாரிக்கும அதே பாத்திரத்தில் தான் சாம்பார், அரிசி, பருப்பு போன்றவை தயாராகின்றன. தட்டுகள் உரிய முறைப்படி கழுவப்படுகிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. மக்டொனால்ட், கெல்லாக் என்று இப்படி பிராண்டட் அயிட்டங்களில் மோகம் உச்சமடைந்திருக்கும் காலம் இது. அதன் விளைவையும் அனுபவித்துத்தானே ஆக வேண்டும். ஆசாரத்தைக் கடைப்பிடி என்றனர் ஆன்றோர். ஆசாரம் என்றால் சுத்தம்.

ஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம் {பாலாம்பிகை}

வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி பால் அல்லது முடிந்த ப்ரஸாதத்தை நைவேத்யம் செய்து வந்தால் அம்பாள் அருள் நிச்சயம் கிட்டும்.

வேலாதிலங்க்ய கருணே விபு தேந்த்ர வந்த்யே
லீலா விநிர்மித சராசரஹ்ருந்நிவாஸே |
மாலா கிரீட மணி குண்டல மண்டி தாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||கஞ்ஜாஸனாதிமணி மஞ்ஜு கிரீட கோடி ப்ரத்யும்த
ரத்ன ருசி ரஞ்சிதபாத பத்மே |
மஞ்ஜீர மஞ்சுல விநிர்ஜித ஹம்ஸ நாதே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் || ப்ராளேய பானு கவிகா கலிதாதிரம்யே பாதாக்ரஜ
வளி வினிர்ஜித மௌக்திகாபே |
ப்ராணேஸ்வரீ ப்ரமத லோகபதே ப்ரஜானம்
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் || ஜங்காதிபிர் விஜித சித்தஜ தூணிபாகா
ரம்பாதி மார்தவ கரீந்த்ர கரோருயுக்மே |
கம்பாசதாதிக ஸமுஜ்வல சேலீலோ
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||மாணிக்ய மௌக்திக விநிர்ஜித மேகலாட்யே
மாயா விலக்ன விலஸன் மணி பட்டபந்தே |
லோலம்பராஜி விலஸந்நவ ரோம ஜாலே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||ந்யக்ரோத பல்லபத லோதர நிம்ன நாபே
நிர்தூத ஹார விலஸத் குசச் சக்ரவாகே |
நிஷ்காதி மணிபூஷண பூஷிதாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||கந்தர்ய சாப மதபங்க கிருதாதிரம்யே
ப்ரூ வல்லரீ விவிதா சேஷ்டத ரம்யமானே |
கந்தர்ப ஸோதர ஸமாகிருதி பாலதேசே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||மௌக்தாவனீ விலஸதூர்மித கம்பு கண்டே
மந்தஸ் பிதாளன விநிர்ஜித சந்த்ர பிம்பே |
பக்தேஷ்டதான நிரதா மிருத பூர்ணத் ருஷ்டே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||கர்ணா வலம்பி மணிகுண்டல கண்டபாகே
காணாந்த தீர்கநவ நீரஜபத்ர நேத்ரேஸ்வர் |
ணாயகாதி குண மௌக்திக சோபிநாஸே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||லோலம் பராஜி லலிதாலக ஜாலசோபே
மல்லீ நவீன களிகா நவ குந்தஜாலே |
பாலேந்து மஞ்ஜுல கிரீட விராஜமானே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||பாலாம்பிகே மஹாராக்ஞி வித்யாநாத ப்ரியேஸ்வரி |
பாஹிமாமம்ப க்ருபயா த்வத் பாதம் சரணம் கத: ||