திங்கள், 29 ஜூலை, 2019

108 திவ்ய தேசங்கள் : அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில்
மூலவர் :  திருவாழ்மார்பன் (ஸ்ரீ வல்லபன் கோலப்பிரான்)
தாயார் :செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் (வாத்சல்ய தேவி)
தீர்த்தம் :கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம்
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : ஸ்ரீவல்லப சேத்திரம்
ஊர் : திருவல்லவாழ்
மாவட்டம் : பந்தனம் திட்டா
மாநிலம் : கேரளா
பாடியவர்கள் : நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
    
காண்பது எஞ்ஞான்று கொலோ, விளையேன் கனிவாய் மடவீர் பாண்டுரல் வண்டினொடு பசுந்தென்றலுமாகி எங்கும் சேன் சினையோங்கு மரச் செழுங்கானல் திருவல்லவாழ் மான்குறள் கோலப் பிரான் மலர் தாமரைப் பாதங்களே.-நம்மாழ்வார்
 
விழா : மாசிமாதம் பூசம் நட்சத்திரத்தில் ஆறாட்டு. அதற்கு பத்து நாள் முன்பாக கொடியேற்றம் நடைபெறும். திருவிழா முடிந்த மறுநாள் அர்ச்சனையை தவிர வேறு எந்த பூஜையும் நடைபெறாது.  
      
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று பெருமாள் இங்கு பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிக்கிறார். எனவே, ஐயப்பன் கோயிலைப் போல, இங்கும் பெண்களுக்கு அனுமதியில்லை. மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்றும், சித்திரை விஷு அன்றும் இவரது மார்பு தரிசனம் விசேஷம் என்பதால், இந்த நாட்களில் மட்டும் பெண்களை அனுமதிப்பார்கள். உப்பு மாங்காய் நைவேத்யம்: சங்கரமங்கலத்தம்மையார் பிரம்மச்சாரிகளுக்கு தானம் செய்த போது பெருமாளும் பிரம்மச்சாரி வடிவில் வரிசையில் நின்றார். தனக்களித்த உணவை ஏற்ற அவர், இப்பெண் விரதம் முடித்து தான் சாப்பிடுவதற்காக வைத்திருந்த உப்பு மாங்காயை கேட்டாராம். அவள் அதை பாக்கு மரத்தின் இலையில் வைத்து பெருமாளுக்கு அளித்தார். அன்றிலிருந்து தினமும் இத்தலத்தில் கமுகு இலையில் சாதமும் உப்புமாங்காயும் நைவேத்யமாக வைக்கப்படுகிறது. இத்தலத்தில் கேரளாவுக்கே உரித்தான சந்தனத்துடன் விபூதியும் தரப்படுவது விசேஷம். மார்கழி திருவாதிரையன்று சிவன் இவரது கோலத்தைக் காண வந்தாராம். அதனால், விபூதியும் கொடுப்பது வழக்கமாயிற்று.

        
திறக்கும் நேரம் : காலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருவல்லவாழ்- 689 101 (ஸ்ரீ வல்லப க்ஷேத்திரம்) பந்தனம் திட்டா மாவட்டம், கேரளா மாநிலம்.போன்:+91- 469 - 270 0191 
     
தகவல் : நாட்டிய குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கேரளாவின் பிரசித்தி பெற்ற கதகளி நிகழ்ச்சியை கோயிலில், நேர்ச்சையாக நடத்துகிறார்கள். நாட்டியக் கலைஞர்கள் கோயிலிலேயே உள்ளனர். தினமும் இந்த நேர்ச்சை நடத்தப்படுகிறது. இந்த நடனக்குழுவிற்கு கலாக்ஷேத்ரா என்று பெயர்.
     
ஸ்தல பெருமை : பொதுவாக, கருடாழ்வார் பெருமாளுக்கு எதிரில் அருள்பாலிப்பார். ஆனால் இங்கு 50 அடி உயரத்திலுள்ள கல் தூணின் மீது பறக்கும் நிலையில் அருள் பாலிக்கிறார். கருடனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டுள்ளது. பெருமாளை வணங்குவோர் தங்களது நியாயமான வேண்டுகோளை அவரிடம் வேண்டியவுடனேயே கருடன் அவரை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் இருப்பதாக ஐதீகம். இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். மூலவரின் விமானம் சதுரங்க கோல விமானம் எனப்படுகிறது. இந்த பெருமாளை  கண்டாகர்ணன், சங்கரமங்கலத்தம்மையார் ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர்.  
      
தல வரலாறு : கேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்ற பதிவிரதை வாழ்ந்தார். இவர் ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து இந்த கோயிலுக்கு வருவார். மறுநாள் துவதாசியன்று இந்தக் கோயிலில் வசிக்கும் துறவிகளுக்கு அன்னதானம் செய்வார். இவர் வரும் வழியிலுள்ள காட்டில் வசித்த தோலாகாசுரன் என்பவன் இந்த அம்மையாரை கோயிலுக்கு செல்ல விடாமல், மறைவாக இருந்து அவரே அறியாமல் துன்பம் விளைவித்தான். இதை பெருமாளிடம் அம்மையார் முறையிட்டார். ஒரு முறை அவர் காட்டு வழியே வரும் போது பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன் ஏதோ ஒரு அசுர சக்தியுடன் போர் புரிவதைக் கண்டார். சற்று நேரத்தில் சப்தம் அடங்கி விட்டது. பிரம்மச்சாரியைக் காணவில்லை. அம்மையார் கோயிலுக்கு வந்தார். அங்கே பெருமாள் காட்டில் பார்த்த பிரம்மச்சாரி இளைஞனைப் போன்ற தோற்றத்தில் இருந்தார். தன்னைப் பாதுகாக்க பெருமாளே நேரில் வந்து அசுரனுடன் போரிட்டதை அம்மையார் புரிந்து கொண்டார். பிரம்மச்சாரி இளைஞர்கள் அங்கவஸ்திரம் அணிவதில்லை. பெருமாளும் இத்தலத்தில் அங்கவஸ்திரம் இல்லாமல் மார்பு தெரிய காட்சியளிக்கிறார். அவரது மார்பில் லட்சுமி (திரு) நிரந்தரமாக குடியிருப்பதால் இவருக்கு திருவாழ்மார்பன் என்ற பெயர் ஏற்பட்டது. மற்ற தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனம் முக்கியம். இங்கோ மார்பு தரிசனம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.



கருத்துகள் இல்லை: