குருசாமி அம்மையார் {கண்டமங்கலம்}
நாம் வணங்கும் தெய்வங்களில் ஆண் தெய்வமும் உண்டு பெண் தெய்வமும் உண்டு.அதுபோல் சித்த புருஷர்களிலும் பெண் மகான்கள் இருந்துள்ளனர். ஆன்மிகத்திலும் தொண்டுள்ளத்திலும் இவர்கள் சிறந்து விளங்கி பக்தி நெறி தழைக்க அரும் பாடுபட்டுள்ளனர். ஔவையார் காரைக்கால் அம்மையார் மங்கையர்க்கரசியார் என்று நம் தமிழகத்தில் எத்தனையோ பெண் அருளாளர்கள் இருந்துள்ளனர்.இறை பக்தியின் மேன்மையை இவர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.இறை தரிசனத்தையும் பெற்றிருக்கிறார்கள். புதுவை(பாண்டிச்சேரி)மாநிலத்தில் ஒரு பெண் சித்தர் ஜீவ சமாதி கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இன்னருள் புரிந்து வருகிறார்.புதுவை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்டமங்கலத்தில் இந்த அம்மையாரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.கண்டமங்கலத்தில் பிரதான சாலையிலேயே உள்ள சமரச சுத்த சன்மார்க்க நிலைய வளாகத்தில் இந்த சமாதி திருக்கோயில் இருக்கிறது. பிரதான சாலையை ஒட்டி இது அமைந்திருந்தாலும் ஜீவ சமாதி அமைந்திருக்கும் இடம் மரங்கள் சூழ.. இயற்கை எழிலோடு விளங்கிறது.
புதுவை மக்களுக்கும் எண்ணற்ற வெளியூர் பக்தர்களுக்கும் அருள் பாலித்து வாழ்ந்து வந்த இந்தப் பெண் சித்தரின் திருநாமம் ஸ்ரீகுருசாமி அம்மையார்!இந்த வழியே பயணப்படும் ஏரளாமான பக்தர்கள் சமாதித் திருக்கோயிலைத் தரிசித்துப் பலன் பெற்று வருகிறார்கள். 1890-ல் இருந்து 1895 வரை இந்தப் பகுதியில் குருசாமி அம்மையார் வசித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
எங்கே இருக்கிறது கண்டமங்கலம்?
விழுப்புரம் பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில்(என்.எச்-45ஏ)வருகிற ஒரு பேருந்து நிறுத்தம் அரியூர் மெயின் கேட்.இங்கு இறங்கிக்கொண்டால் இரண்டே நிமிட நடை தூரத்தில் குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதியை அடைந்து விடலாம்.பிரதான சாலையிலேயே இருப்பதால் கண்டுபிடிப்பதிலும் போக்குவரத்திலும் எந்தச் சிரமமும் இருக்காது.
விழுப்புரத்துக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் இருக்கிறது.அரியூர் அதாவது விழுப்புரத்தில் இருந்து 23 கி.மீ. தொலைவு பாண்டியில் இருந்த 17 கி.மீ. தொலைவு சமாதி அமைந்துள்ள இடத்தில் பாதி விழுப்புரம் மாவட்டத்திலும் மறு பாதி புதுவை மாநிலத்திலும் இருக்கிறது. கண்டமங்கலம் என்பது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கிறது.அரியூர் என்பது புதுவை மாநிலத்தில் அமைந்துள்ளது.இதனால்தான் இந்த ஜீவ சமாதி அமைந்துள்ள பகுதியை கண்டமங்கலம் அரியூர் என்றே வழங்கி வருகிறார்கள். குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி சுதந்திர காலத்துக்கு முன் அதாவது 1947-க்கு முன் முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்ததாம். மேலே சொன்னபடி இரண்டு மாநிலத்துக்கும் இது எல்லையாக அமைந்தமையால் இந்த ஜீவ சமாதி அமைந்துள்ள இடத்துக்கு அருகே புதுவை எல்லையில் பிரெஞ்சுப் படையும் தமிழக எல்லையில் பிரிட்டிஷ் படையும் தன் வீரர்களை நிறுத்திக் காவல் காத்து வந்ததாம்.எனவே இரண்டு படைகளும் நிரந்தர முகாமிட்டிருக்கும் இடத்துக்கு அருகே உள்ள குருசாமி அம்மையார் ஜீவ சமாதி எவருக்கும் புலப்படவில்லை. இந்தப் பகுதி வழயாகப் பயணிப்போர் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று இங்கே அமர்ந்தாலும் அவர்களை விரட்டிவிடுவார்கள் இரண்டு படையினரும்.காரணம் போராட்டக்காரர்களாக இருக்குமோ என்கிற சந்தேகத்தில் எவரையும் இதன் அருகே நெருங்கவிட மாட்டார்களாம்.
தமிழகப் பகுதிக்கு ஒரு வழியாக சுதந்திரம் கிடைத்த பின்னும் பிரெஞ்சுக் குடியரசின் ஒரு பகுதியாகவே புதுவைப் பிரதேசம் தொடர்ந்து வந்தது.எனவே குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதியை நிம்மிதியாகத் தரிசிக்க வரும் பக்தர்களை பிரெஞ்சப் படைகள் சந்தேகக் கண் கொண்டே பார்க்க ஆரம்பித்தது.எங்கே தமிழகம் மாதிரி தங்களது கட்டுப்பாட்டில் உள்ள புதுவைப் பிரதேசத்திலும் ஏதேனும் கலகம் விளைவித்து விடுவார்களோ என்று பிரெஞ்சுப்படை பயந்தது.காலம் உருண்டோட...எல்லாப் படைகளும் தொலைந்தொழிக்க பின்னர்தான் இந்த ஜீவ சமாதி ஒரு வெளிச்சத்துக்கு வந்தது என்று சொல்லலாம்.
குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி இங்கே எப்படி அமைந்தது என்பதைப் பார்ப்பதற்கு முன்.இந்தப் அம்மையாரைப் பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாம். வட நாட்டில் இருந்து இங்கே வந்தவர் குருசாமி அம்மையார் என்பது ஒரு செய்தி.கால்நடை யாகப் பல பகுதிகளுக்கும் சென்ற இவர்.கடைசியாக வந்து அமர்ந்து இந்த கண்டமங்கலத்தில் தான்.இந்த இடத்தின் சூழலும் அமைதியும் அம்மையாருக்குப் பிடித்துப் போக...இங்கே மரத்தடியில் தங்கி தன் இருப்பிடமாக ஆக்கிகொண்டார்.சாப்பாடு என்பதைப் பற்றி கவலை கொள்ளாமல் எந்நேரமும் தியானத்திலேயே இருப்பாராம்.யாரோ ஒரு வட நாட்டுப் பெண் சாது தங்கள் ஊருக்கு வந்து தியானத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார்.என்பதை அறிந்த அக்கம்பக்கத்து ஊர்க்காரர்கள். அம்மையாரிடம் வந்து அருள் கேட்பார்களாம்.தங்களுக்குள்ள மனக் குறை வியாதி வீட்டில் நல்ல காரியம் நடைபெறுவதற்கு இருக்கும் தடைகள் போன்றவற்றை அம்மையாரிடம் கொட்டுவார்களாம்.அவர்களின் குறைகளை எல்லாம் புன்னகையுடன் கேட்டுக்கொண்டு ஆசி புரிந்து அனுப்பி வைப்பாராம்.அதன் பின் நிம்மதியுடன் வீடு திரும்புவார்கள் பக்தர்கள்.
குருசாமி அம்மையார் சாதாரணமானவரா...இறையருள் பெற்றவர் ஆயிற்றே! இவரிடம் வந்து ஆசி பெற்றுச் சென்றவர்கள் அடுத்த வந்த சில நாட்களிலே தங்கள் குறைகள் அகலப் பெற்றனர்.அதன் பின் அம்மையாருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இவரது இருப்பிடம் தேடி வந்து வணங்கிச் செல்வார்கள்.அப்படி வருபவர்களில் பொருள் வசதி படைத்த சிலர் அம்மையாரின் தியானமும் அருட் பணியும் தடைபடாமல் இருப்பதற்காக போதிய இட வசதியை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர்.இன்னும் சிலர் நில புலன்களையும் சில சொத்துகளையும் அம்மையார் பெயருக்கு எழுதிக் கொடுத்து சந்தோஷப்பட்டனர். வருமானத்தை வைத்துக்கொண்டு ஒரு பெண் சாது என்ன செய்வார்?தான் தங்கி இருக்கும் இடத்தில் தினமும் தண்ணீர் தானம் அன்னதானம் செய்ய ஆரம்பித்தார்.தன் இடத்துக்கு வரும் அனைவருக்கும் உணவிட்டு மகிழ்வாராம்.
சித்த புருஷர்கள் என்றால் அவர்களின் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருக்கும்தானே!அதுபோல் குருசாமி அம்மையாரிடம் ஒரு நடைமுறை இருந்து வந்தது.அதாவது ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் உடல் முழுக்க காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்தெடுத்த விழுதை பூசிக்கொண்டு சற்று நேரம் ஊறிய பிறகு அருகில் உள்ள கிணற்றில் இறங்கிக் குளிப்பது வழக்கமாம்.அம்மையாரின் சமாதிக்கு அருகில் அந்தப் புனிதக் கிணறு இன்று பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.
அக்கம்பக்கத்தில் வசிக்கும் பெண் பக்தர்கள் சிலரே மிளாகயை அரைத்து அம்மையாரின் மேல் பூசிவிடுவார்களாம். இப்படி மிளகாயை அரைப்பது இந்த மடத்திலேயே செய்ய வேண்டுமாம். வீட்டில் இருந்து மிளகாயை அரைத்து எடுத்து வரக் கூடாது.இப்படி அரைத்துக் கொடுத்த பெண்களின் கைகளே ஜிவுஜிவுவென்று எரியும் என்று என் அம்மா கூறி இருக்கிறார்.அப்படி இருக்கும்போது இதை உடலில் பூசிக் கொண்டு சிரித்த முகத்துடன் அந்தப் பெண்களுக்கு ஆசி வழங்குவாராம் அம்மையார்.மிளகாய் அரைக்கும்போது பெண்கள் என்ன நினைத்துப் பிரார்த்தித்தாலும் கூடிய விரைவிலேயே அது நடந்துவிடும் என்று அம்மா கூறி இருக்கிறார் என்று சொல்லி மெய் சிலிக்கிறார் பாண்டிச்சேரியில் இன்று வசிக்கும் பெண்மணி ஒருவர்.
உடல் முழுக்க மிளகாய் அரைத்த விழுதுகள் அப்பி இருக்க...அதோடு அருகில் இருக்கும் கிணற்றில் இறங்கி விடுவாராம்.கிணற்றின் மேல் அவர் கால் வைப்பதுதான் தெரியுமாம்.அடுத்த கணம் கிணற்றுக்குள் இருப்பாராம்.எப்படி இறங்குவார் என்பது எவருக்குமே தெரியாதாம்.கிணற்றுக்குள் இருக்கும் அம்மையாரை எவரும் எட்டிப் பார்க்கக் கூடாதாம்.அப்படி ஒரு முறை எட்டிப் பார்த்த பெண்மணி அம்மையாரைப் பார்க்கவே முடியவில்லை.அவரது தலைமுடி கிணற்றில் நீர்ப் பரப்பு மேல் படர்ந்து இருந்தது.அவரைக் காணவில்லை என்று பய உணர்ச்சியுடன் சொல்லி இருக்கிறார்.
அதுபோல் குளித்து முடித்து எப்படி மேலே ஏறி வருகிறார் என்பதும் எவருக்கும் தெரியாது.தரைக்கு வந்தவுடன் அம்மையார் அப்படியும் இப்படியும் திரும்பும்போது அவரது ஈரமான தலைமுடியில் இருந்து சிதறும் நீர்த் துளிகள் பலர் மீதும் பட்டுத் தெறிக்கும். அந்த நீர்த் துளிகள் தங்கள் மேல் படாதா என்கிற ஆர்வத்துடன் பலரும் அம்மையாரை நெருங்கவார்களாம்.நீர்த் துளிகள் பட்டால் தங்கள் குடும்பம் சிறக்கும் என்பதற்காகப் பலரும் அருகே செல்வதற்குப் போட்டி போடுவார்களாம்.
இன்றும் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் குருசாமி அம்மையாரின் மூலவர் விக்கிரகத்துக்கு மிளகாய் அரைத்து அபிஷேகம் செய்யும் வழிபாடு நடக்கிறது. இதற்காகப் பல பெண் பக்தர்களும் இங்கு வந்து ஆலய வளாகத்திலேயே மிளகாய் அரைத்துத் தருகிறார்கள்.ஏதாவது ஒரு பிரார்த்தனையை மனதில் வைத்துக்கொண்டு.அம்மையாரின் அபிஷேகத்துக்கு மிளகாய் அரைத்துக் கொடுத்தால் அது நிச்சியம் பலித்துவிடும் என்கிறார்கள்.மற்றபடி வியாழக்கிழமைகளில் பால் எலுமிச்சம்பழச் சாறு கொண்டு குருசாமி அம்மையாருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.அன்றைய தினத்தில் இந்த மடம் இன்று செயல்படுவதற்கு உறுதுணையாக இருந்து வரும் வள்ளலார் ஆன்மிகப் பேரவை அன்னதானக் குழுவினர் அன்னதானம் செய்கின்றனர்.
குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி, இங்கு இருக்கும் இடம் சில காலத்துக்கு வெளியுலகுக்குத் தெரியாமலே இருந்து வந்தது என்று சொல்லி இருந்தோம். காரணம்.செடி கொடிகளும் முட்புதர்களும் ஒரு கட்டத்தில் சமாதியை மூடிவிட்டிருந்தன.தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் பிறந்த நடராஜ சுவாமிகள் எனும் ஆன்மிக அடியாரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. இளம் வயதிலேயே துறவறம் பூண்ட நடராஜர் யாத்திரையாகப் புறப்பட்டு பல திருத்தலங்களைத் தரிசித்து வந்து கொண்டிருந்தார்.அப்படி வந்தவர் புதுவையை அடைந்து சித்தானந்த சுவாமி கோயிலில் தவத்தில் ஆழ்ந்தார்.அதுவரை நிரந்தரமாக எங்கும் தங்காமல் யாத்திரையாகப் பயணப்பட்டுக்கொண்டே இருந்த நடராஜரை ஓர் அசரீரிக் குரல் தடுத்தாட்கொண்டது.குருசாமி கோயிலுக்குப் போ...அங்கே உனக்குப் பணிகள் காத்திருக்கின்றன எனபதே அந்த அசரீரி.
இதன் பின் அவரது உள்ளுணர்வுக்குக் கிடைத்த குறிப்புகளைக் கொண்டு விழுப்புரம் சாலையில் பயணப்பட ஆரம்பித்தார்.அரியூர் பகுதி வந்ததும். ஏதோ ஒரு குறிப்பு கிடைக்க அங்கே புதர் மண்டிய ஓர் இடத்தில் அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்தார்.ஆம்! அந்தப் புதருக்குள்தான் குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி புதையுண்டு கிடந்தது. தியானத்தின்போது நடராஜருக்கு குருசாமி அம்மையார் காட்சி கொடுத்து. நான் இங்கேதான் குடிகொண்டிருக்கிறேன்.என்று சொல்ல... சட்டென்று தியானம் கலைந்து எழுந்தார் நடராஜர் பரபரவென்று அந்த முள் புதரை அகற்றினார்.சமாதியைக் கண்டு பிடித்தார்.பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் படையினரின் எதிர்ப்பை எல்லாம் சமாளித்து அந்த ஜீவ சமாதிக்குப் புத்துயிர் தந்தார் நடராஜர்.
நடராஜரின் இந்த திருப்பணிகளுக்கு உள்ளூர்க்காரர்கள் சிலரும் உதவ முன்வந்தனர்.அதன் பின் குருசாமி அம்மையாரின் திருவுருவப் படத்தைப் பாதுகாத்து வரும் ஒரு அன்பரை மங்கலம்பேட்டையில் கண்டுபிடித்து, அதை வாங்கினார்.படத்தில் உள்ள உருவத்தைக் கொண்டு அம்மையாருக்கு ஒரு திருமேனி வடிக்கச் செய்தார்.அந்தத் திருமேனியே இன்று நாம் தரிசிப்பது! வழிபாட்டையும் அன்ன தானத்தையும் அந்த ஜீவ சமாதியில் துவங்கி வைத்தார். குருசாமி அம்மையாருக்கு செல்வந்தர்கள் கொடுத்த சொத்துகளைக் கஷ்டப்பட்டுக் கண்டறிந்து அவற்றைக் கொண்டு கல்வி உட்பட பல திருப்பணிகளைச் செய்தார் நடராஜர்.
1970-ஆம் ஆண்டு நடராஜ சுவாமிகளை மறைந்துவிடவே அவரின் சீடரான சீதாராம் என்பவர் இந்தப் பணிகளைத் தொடர்ந்து நடத்தினார்.இந்த இரு அருளாளர்களின் பெருமுயற்சியால்தான் குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி இன்று நம் தரிசிக்க கிடைத்திருக்கிறது. என்றே சொல்லலாம்.நடராஜ சுவாமிகள் சீதாராம் சுவாமிகள் ஆகிய இருவரின் சமாதிகளும் அம்மையாரின் சமாதி அமைந்துள்ள இடத்துக்கு அருகே அமைந்துள்ளன.புதுவை மாநிலத்தில் சமாதி கொண்ட இந்த குருசாமி அம்மையாரின் குருபூஜை தினம் சித்திரை மாத பௌர்ணமி தினத்தன்று அவருடைய எண்ணற்ற பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மையாரின் ஜீவ சமாதித் திருக்கோயிலைத் தரிசித்து அவரது அருள் பெற்று, வாழ்வில் வளம் பெருக்குவோம்!
தவம்:கண்டமங்கலம்-அரியூர்.
சிறப்பு:ஸ்ரீகுருசாமி அம்மையார் மடம்.
சிறப்பு:ஸ்ரீகுருசாமி அம்மையார் மடம்.
எங்கே இருக்கிறது:விழுப்புரம் பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.-45ஏ)வருகிற ஒரு பேருந்து நிறுத்தம்-அரியூர் மெயின் கேட் இங்கு இறங்கிக்கொண்டால் இரண்டே நிமிட நடை தூரம்.விழுப்புரத்துக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் இருக்கிறது.அரியூர் அதாவது விழுப்புரத்தில் இருந்து 23 கி.மீ. தொலைவில் பாண்டியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது.
எப்படி போவது:விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் அனைத்துப் பேருந்துகளும் அரியூர் மெயின் கேட் நிறுத்தம் அல்லது கண்டமங்கலம் காவல் நிலையத்தில் நின்று செல்லும்.இதில் ஏதாவது ஒரு நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம்.பிரதான சாலை என்பதால் ஏராளமான பேருந்து வசதி உண்டு.தொடர்புக்கு:வள்ளலார் ஆன்மீகப் பேரவை அன்னதானக் குழு, கண்டமங்கலம்-அரியூர்.{மொபைல்: 9486623409, 9884816773.}