புதன், 16 அக்டோபர், 2013

உயிர் காக்கும் ஒப்பற்ற கவசம் எது தெரியுமா?

உயிரைக் காக்க அக்காலத்தில் மன்னர்கள் இரும்புக்கவசம் அணிந்து கொண்டனர். அதுபோல, கவச நூல்களைப் பாராயணம் செய்தால் நம்மைச் சுற்றி தெய்வத்தின் மந்திரசக்தி கவசமாகத் துணைநிற்கும் என்பர். கவசப்பாடல்களில் கந்தசஷ்டி கவசம் மிகவும் புகழ்பெற்றது. தேவராய சுவாமிகளால் எழுதப்பட்ட இந்நூல், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அரங்கேற்றப்பட்டது. காங்கேயத்தை மையமாகக் கொண்டு சென்னிமலை, ஊதிமலை, வட்டமலை, சிவன்மலை,திருமுருகன்பூண்டி ஆகிய மலைகள் உள்ளன. இவற்றில் தலைசிறந்தது சென்னிமலை. சென்னி என்ற சொல்லுக்கே தலை என்று தான் பொருள். சிரகிரி, சென்னியங்கிரி, புஷ்பகிரி, சிகரகிரி என்ற பெயர்களும் இதற்குண்டு. தேவராய சுவாமிகள் கவசத்தில் சிரகிரி வேலா சீக்கிரம் வருக! என்று இத்தல முருகனை வேண்டுகிறார். இங்கு மூலவராக கைலாசநாதரும், பெரியநாயகியும் வீற்றிருக்கின்றனர். புண்ணாக்குச் சித்தருக்கு சமாதியும் இங்குள்ளது. கந்தசஷ்டியும், தைப்பூசமும் சிறப்பான விழாக்கள். அக்னிஜாத சுப்பிரமணியர், சவுரபேய சுப்பிரமணியர், சரவணபவன், தேவசேனாதிபதி ஆகிய பெயர்களிலும் முருகப்பெருமான் கோஷ்டத்தில் வீற்றிருக்கிறார்.
தங்கை சரஸ்வதிக்கு தட்சிணாமூர்த்தி தந்த வீணை!

ஞானத்தைத் தரும் வித்யைக்கு அதிபதிகள் இருவர். ஒருவர் ஈஸ்வரனின் அம்சமான தட்சிணாமூர்த்தி. மற்றொருவர், கல்விக்கும் கலைகளுக்கும் அதிபதியான சரஸ்வதி. அருளே திருமேனியாகக் கொண்ட இறைவன், தான் நினைத்த மாத்திரத்தில் நினைத்த வடிவத்தை மேற் கொள்ளும் ஆற்றல் உடையவன். உலகில் தோன்றிய உயிர்கள் எல்லாம் தன்னை அறிந்தும் கண்டும் கருதியும் வாழ்த்தியும் வணங்கியும் உய்தற் பொருட்டே இவ்வரிய உருவங்களை அவன் தாங்கி அருளுகின்றான். அவனது இந்த உருவத் திருமேனியை போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் என்று மூன்றாய்ப் பிரித்து சித்தாந்த சாஸ்திரங்கள் கூறும். அதில் தட்சிணாமூர்த்தி யோக வடிவமானவர். சிவப் பரம்பொருளே ஆதி குருவாக - தட்சிணாமூர்த்தியாக சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்னும் முனி சிரேஷ்டர்களுக்கு கல்லால மரத்தின்கீழ் தென் திசை நோக்கி அமர்ந்து வேதப் பொருளை மௌனமாக உபதேசித்தருளியவர்.

இந்நிகழ்ச்சியை -

ஞாலம் நாறு நலங்கெழு நல்லிசை
நான்மறை முதநூல் முக்கட் செல்வன் ஆலமுற்றம்

என்று அகநானூறும்; ஆலமர் தெய்வம் என்று புறநூனூறும் விரித்துச் சொல்கின்றன. சாதாரணமாக குருவானவர் வயது முதிர்ந்தவராகவும், சீடர்கள் இளைஞர்களாகவும் இருப்பது உலக இயல்பு. ஆனால், தட்சிணாமூர்த்தியோ வயதில் இளையவராகவும், அவரிடம் வேதப் பொருளை அறிய வந்த சனகாதி முனிவர்கள் வயதில் முதியவர்களாகவும் இருப்பது அற்புதத்திலும் அற்புதம். குரு பேசிக்கொண்டிருப்பதும் சீடர்கள் பாடம் கேட்டுக் கொண்டிருப்பதும்தான் வழக்கம். ஆனால், இங்கு சீடர்கள்தான் சந்தேகங்களைக் கேட்கின்றனர். குருவோ மௌனமாக இருந்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கிறார்.

மாசற விளங்கிய மங்கையர் ஆழ்சுடர்
வாடல் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணர்வின் உருகெழு பெரியோர்

என்று மருதக் காஞ்சியில் மாங்குடி மருதனார் குறிப்பிடுகிறார்.

ஆதிசங்கரரும் இந்த அற்புதக் காட்சியை-

சித்ரம் வடதரோர் மூலே
வ்ருத்தாச் சிஷ்யா குருர்யுவா
குரோஸ்து மௌனம் வியாக்யானம்
சிஸ்யாஸ்து கிஞ்ஞாலம்ய சா

என்று வியக்கிறார்.

மேலும் ஆசிரியர் நின்று கொண்டு பாடம் நடத்துவதும், சீடர்கள் அமர்ந்த நிலையில் பாடம் கேட்பதும் வழக்கம். இங்கு குரு காலை மடித்து உட்கார்ந்திருக்கிறார். சீடர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். (அமர்ந்த நிலையிலும் சீடர்கள் உள்ளதைக் காணலாம்.) இதுவும் பேரதிசயம். சிவபிரான் மௌனமாக சின்முத்திரை காட்டி அருளியதை,மௌன உபதேச சம்பு என்று பழநித் திருப்புகழில் அருணாகிரிநாதர் போற்றுகிறார்.

சொல்லரிய நெறியையொரு சொல்லால் உணர்த்திய
சொரூப அனுபூதி காட்டிய தட்சிணாமூர்த்தியே
சின்மயானந்த குருவே

என்று சின்மயானந்த குருவின் அருளை வியந்து பாராட்டுகிறார் தாயுமானவர். தென்திசை எமனின் திசை. எம பாசத்திலிருந்து யாரும் தப்ப முடியாது. ஜீவன்கள் மரண பயத்தினால் தன்னை வந்தடைந்து புகழ் தேடும் போது, அவர்களது மரண பயத்தை நீக்கி அருளவே தட்சிணாமூர்த்தி தென் திசை நோக்கி அமர்ந்திருப்பதாகக் கூறுவர். இந்த திவ்ய வடிவமே அண்ணாமலை அடி வாரத்தில் இன்றும் அமர்ந்து மோனத் தவம் இயற்றிக் கொண்டிருப்பதாக - அண்ணா மலையில் ஜீவசமாதியான மகான் சேஷாத்ரி சுவாமிகள் கூறியுள்ளார். பேச்சு, செயல், அறிவது எல்லாம் அடங்கிப் போன நிலையில் இருக்கிற தட்சிணாமூர்த்தி மேதா தட்சிணாமூர்த்தியாக - புத்திப் பிரகாசம், வாக்குவளம், வித்வசந்தி எல்லாம் தருவார். சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவருமே தம் திருக்கரங்களில் அட்சமாலை ஏந்தியுள்ளனர். சர்வ வித்யை அளிக்கும் பிரபு (ஈஸ்வரன்) சதாசிவனாகிய தட்சிணாமூர்த்தியே என்று வேதம் புகழ்கிறது. வித்யா தேவதையான சரஸ்வதி தேவதையே வாக்தேவதையாக விளங்குகிறாள். அவள் அருள் இல்லாமல் நம்மால் பேச முடியாது. இருவருமே தங்கள் திருக்கரங்களில் சுவடி தாங்கி நெற்றியில் பிறைச் சந்திரனை அணிந்துள்ளனர். கலை, கலை வளருகிறது என்று அர்த்தம். அறிவும் ஞானமும் மேன்மேலும் வளர்ந்து கொண்டே போக வேண்டும் என்பதைக் காட்டவே கைகளில் சுவடி.

ஏழு வண்ணங்களில் சேராத நிறம் வெண்மை. பரம நிர்மலமான - தூய்மையான நிறம் வெண்மை. அது சுத்த தத்துவ நிலையைக் குறிக்கிறது. இந்த வெண்மையும்கூட இன்னும் நிர்மலமாக-தன்வழியே ஒளி ஊடுருவிச் செல்கிற அளவுக்குத் தெளிந்து விடுகிறபோது அது ஸ்படிகமாகிறது. தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி ஆகிய இருவரின் கைகளிலும் ஸ்படிகத்தாலான அட்ச மாலை இருப்பது இதைக் காட்டுகிறது. சரஸ்வதிக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நெற்றிக்கண் உண்டு. இருவருமே தலையில் ஜடாமகுடம் அணிந்துள்ளனர். அது ஞானிகளின் அடையாளம். இருவருமே வெள்ளை வெளேர் என்ற நிறம் உடையவர்கள். வெண்மை நிறம், சந்திர கலை, ஸ்படிக மாலை ! வெண்மை நிறத்தாலே நம் மனதில் ஒரு தூய்மை, தாப சாந்தி, அமைதி எல்லாம் உண்டாகிறது. சரஸ்வதி தன் கையில் வீணையை வைத்து வாசித்துக்கொண்டிருப்பது- கலைக்கு நாதனான இறைவனின் உடலாய் அமைந்துள்ளது என்பதைக் காட்டுவதே., அவளே கலைகளின் நாயகி என்பதை உணர்த்தவும் அவளது கையில் வீணை. தட்சிணாமூர்த்தியின் கையிலும் வீணை உள்ளது. வீணா தட்சிணாமூர்த்தி என்றே திருநாமம். சரஸ்வதி கையில் உள்ள வீணைக்கு கச்சபி என்று பெயர். வீணை தட்சிணாமூர்த்தியாக இருந்து இசை நுணுக்கங்களை உபதேசித்த பின்னர், இறைவன் தான் உருவாக்கிய கச்சபி என்ற வீணையைத் தனது சகோதரியான சரஸ்வதி தேவிக்கு அளித்துவிட்டதாகப் புராண வரலாறு கூறும். கலைமகள் மொழி வடிவானவள். எழுத்துகள் 51. அவற்றை அட்சரங்கள் என்று சொல்வது மரபு. ஆகவே அந்த 51 அட்சரங்களைக் குறிக்கும் விதத்தில் தன் கையில் 51 மணிகள் கொண்ட அட்சரமாலையை தரித்திருக்கிறாள். அவள் வேதத்தின் உட்பொருளானவள்.

பாரதியும்,
வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பவள்
வீணை செய்யு மொலியிலிருப்பாள்
உள்ளதாம் பொருள் வேதத்தினின் றொளிர்வாள்

என்று குறிப்பிடுகிறார். இப்படி ஞான தேவதைகளான இருவருமே நமக்கு மெய்ஞ்ஞானத்தை அருளவல்ல அருட் தெய்வங்கள். குரு கடாக்ஷம் பரிபூர்ணம் என்று சொல்வார்கள். அதன்படி குருவடிவான தட்சிணாமூர்த்தியை வியாழன் தோறும் வழிபட்டு நலம் பெறலாம்.
நவக்கிரகங்களை எத்தனை முறை வலம் வரலாம்?
 
வலம் வருதல் என்பது 16 உபசாரங்களில் ஒன்று. இந்தப் பணிவிடைக்கு பிரதக்ஷிணம் என்று பெயர். மூன்று முறை வலம் வந்தால், பிரதக்ஷிணம் என்ற இந்த உபசாரம் முற்றுப்பெறும். தெய்வத் திருவுருவங்களுக்கும் வலம் வருதலின் எண்ணிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. 9 கிரகங்கள் என்பதால், 9 முறை வலம் வரவேண்டும் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதேபோல், இடமாகச் சுற்றுவதும் தவறு. அது, வலம் வருதலில் அடங்காது. இடமாகச் சுற்றுவது என்பது அபசாரமாக மாறிவிடும்.தெய்வத் திருவுருவங்களின் இயல்பை வைத்து வலம் வருதல் எழவில்லை. நாம் செய்யும் பணிவிடைகளே அதன் அளவுகோல். மூன்று முறை செய்தால் முற்றுப்பெறும் என்ற மரபு உண்டு, சாந்தி : சாந்தி : சாந்தி : என மூன்று முறை சொல்வோம். தம்பதி அக்னியை மூன்று முறை வலம் வருவார்கள். சாஸ்திரம் சொல்லும் சடங்குகளிலும் மூன்று முறை வலம் வருவோம். ஏலத்தில் மூன்று முறை சொன்னால் முற்றுப் பெற்றதாக எடுத்துக்கொள்வோம். கோர்ட்டிலும் மூன்று முறை சாட்சியை அழைப்பார்கள். இப்படி நடைமுறையிலும் மூன்று முறைக்கு முன்னுரிமை இருப்பதைக் காண்கிறோம். நவக்கிரகங்கள் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும், அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வலம் வர இயலாது. ஒட்டு மொத்தமாக அத்தனை பேரையும் மூன்று முறை வலம் வந்தால், முழுமையான உபசாரத்தை எட்டிவீடுவீர்கள்; உரிய பலனும் கிடைத்துவிடும். அதேபோல் குறிப்பிட்ட சாமியை குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வரவேண்டும் என்கிற கூற்றும் ஏற்கத்தக்கதல்ல. இப்படி, குறிப்பிட்ட தெய்வத்துக்கு உகந்த எண்ணிக்கையில் வலம் வரவேண்டும் எனும் தகவல், தெய்வ உருவின் பெருமையை மிகைப்படுத்தக் கையாளும் வழிகளில் ஒன்றே ! வலத்தில் மூன்று முடிந்தாலே, முழுப் பயனும் கிட்டிவிடும்.
சுக,போகங்களை வாரி வழங்கும் சுக்கிரதிசை யாருக்கு ...

பூமியில் இருந்து விண்வெளியில் முதலில் சந்திரனின் ஓடுபாதையும், பிறகு புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் எனும் வரிசையில் ஓடுபாதைகளும் இருக்கும். ராசிச் சக்கரத்திலும், சுக்கிரனுக்கு முன்னும் பின்னுமான வீடுகளில், புதனும் செவ்வாயும் தென்படுவர். ரிஷபத்துக்குப் பொறுப்பான சுக்கிரனின் முன் வீட்டில் புதனும், பின் வீட்டில் செவ்வாயும் அதிபதியாக இருப்பர். துலாத்துக்கு அதிபதியான சுக்கிரனுக்கு முன் வீட்டில் செவ்வாயும், பின் வீட்டில் புதனும் இடம் மாறியிருப்பர். சுக்கிரன் உலக சுகங்கள் அனைத்தையும் நமக்கு வழங்குபவன். அவன் வலுவை இழந்தால், ஏழ்மையில் தள்ளுவான்; வலுப்பெற்றிருந்தாலோ செல்வத்தில் திளைக்கச் செய்து, சிந்தனையைத் திருப்பி, சிக்கலில் சிக்க வைத்து, நம்மைத் துயரத்தில் ஆழ்த்துவான். சுக்கிரன் அளவான வலுவுடன் இருந்தால், வளமான வாழ்வைத் தருவான் நமக்கு!

பக்கத்து வீட்டு புதன் - விவேகத்துடனும், மறுபக்கத்து வீட்டுச் செவ்வாய் - சுறுசுறுப்புடனும் நம்மை இயங்க வைப்பார்கள். புதனது சேர்க்கையால் விவேகமும் கலப்பதால், செல்வச் செருக்கின்றிச் செயல்படும் திறன் கிடைக்கும். செவ்வாயுடன் சேரும்போது, ரஜோ குணத்தின் சேர்க்கை நிகழ, தவறான சிந்தனை தலைதூக்கும்; மெத்தனம் வெளிப்படும்; துயரத்தைச் சந்திக்க நேரிடும். சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் பயண வேளையில் ஒற்றுமை உண்டு. இருவருக்கும் ஏறக்குறைய இரண்டு வீடுதான் இடைவெளி! அடிக்கடி சூரியனுடன் நெருங்கும் வேளை அதிகம் உண்டு என்பதால், சூரியனின் ஒளியில் மங்கி, செயல்படும் தகுதியை இழக்க நேரிடும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருடன் சேரும்போது, தனது தனித்தன்மையை இழந்துவிடுவான், சுக்கிரன். சேர்ந்த கிரகத்தின் செயல்பாடும் அவனில் கலப்பதால், மாறுபட்ட பலனையே தருவான். இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை என்கிறான் காளிதாசன். இதற்கு, சுக்கிரனின் மாறுபட்ட அமைப்பே காரணம் ஏழை, செல்வந்தன் ஆகிய இந்த இரண்டு நிலையும் அவனால் ஏற்படுவதே!

மாறுபட்ட காலத்தில், விகிதாசாரப்படி செல்வத்தைத் தருவதால், ஏழ்மையும் செல்வச் செழிப்பும் என மாறி மாறி வருகிற நிலையைச் சந்திப்பவர்கள் இருக்கின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ! சுக்கிரன் செல்வத்தில் மூழ்கடித்தால் விவேகம் குன்றும்; சிந்தனை திசை திரும்பும். சுக்கிரன் வலுவிழந்தால், விவேகம் முளைக்கும்; செல்வந்தனாவது கடினம். இந்தச் செல்வம், விவேகம் இரண்டும் ஒரு சேரக் கிடைப்பது அரிது ! அதாவது, கிடைத்ததைக் கொண்டு திருப்திப்பட வேண்டும் எனும் கருத்தை உணர்த்துகிறான், சுக்கிரன். அறிவும் செல்வமும் மாமியார் - மருமகளைப்போல.. ஒன்று சேராது ! லட்சுமியும் சரஸ்வதியும் மாமியார் - மருமகள்தான். இரண்டுபேரும் ஒத்துப் போகமாட்டார்கள். அறிவு இருப்பவரிடத்தில், செல்வத்தின் சேமிப்பு இருக்காது; செல்வம் மிகுந்தவனிடம் அறிவு மங்கும். இந்த இரண்டின் தாக்கம், இன்றைய விஞ்ஞான உலகிலும் உண்டு ! பொருளாதாரமும் விவேகமும் சம அளவில் இணையாது. வயதில் முதிர்ந்தவன், அறிவில் முதிர்ந்தவன், ஒழுக்கத்தில் முதிர்ந்தவன் ஆகிய அனைவரும் செல்வந்தனின் வீட்டு வாசலில், கைகட்டிச் சேவகம் செய்யக் காத்திருக்கின்றனர் என்கிறார், கவிஞர் ஒருவர் (ஞான விருத்தா; வயோவிருத்தா...) இன்றைக்கு, இந்தச் சூழலே அதிகம் காணப்படுகிறது.

அதாவது, செல்வமும் விவேகமும் சம வலிமையுடன் திகழ்கிற நிலையை ஜோதிடம் உருவாக்கவில்லை. புதன், கன்னியில் உச்சனாக இருப்பின், சுக்கிரன் உச்சம் பெறமாட்டான். சுக்கிரன் மீனத்தில் இருப்பின், உச்சம் பெற்றிருப்பான். புதன், அங்கே நீசனாகிவிடுவான். அதாவது, புதனுடன் மீனத்தில் சுக்கிரன் இருந்தால், புதனும்; புதனுடன் கன்னியில் இணைந்தால், சுக்கிரனும் நீசம் பெறுகின்றனர். அதாவது, இருவரும் முழு பலத்துடன் இணைவது, இயலாத ஒன்று. அறிவு வலுப்பெற்றால் செல்வம் முடங்கும். செல்வம் வலுப்பெற்றால் அறிவு முடங்கும் என்பதை காலத்தின் நியதியாக சுக்கிரன் வெளிப்படுத்துகிறான். இருவரது சேர்க்கை அவர்களின் இயல்புகளை இடமாறச் செய்யும். துஷ்டனின் சேர்க்கையில் நல்லவன் துஷ்டனாகலாம். நல்ல சேர்க்கையால் துஷ்டனும் நல்லவனாகலாம்! மீனத்தில் நீசனான புதனுக்கு உச்ச சுக்கிரனின் சேர்க்கையைப் பார்த்து, புதனுக்கு நீசபங்கம் வந்து, ராஜ யோகமாக மாறிவிட்டதாக... நற்பலனாக சித்தரித்து விளக்கமளிக்கும் ஜோதிடம். கன்னியில் நீச சுக்கிரனுக்கு உச்ச புதனது சேர்க்கையில் நீசபங்கம் வந்து, ராஜ யோகமாக மாறியதாகச் சித்திரிக்கும். உச்ச கிரக சேர்க்கையில், நீசம் வலுப்பெறும்; நீசக் கிரக சேர்க்கையில், உச்சம் தரம் தாழ்ந்து விடும் என்கிறது அது ! இந்த இரண்டு சேர்க்கையும் ஒன்றை இழந்து, மற்றொன்றை வழங்குமே தவிர, இரண்டையும், சமமாகச் சேர்த்து வழங்காது. இதை உயர்ந்த யோகமாகச் சொல்லும் ஜோதிடத்தின் கூற்றுக்கு ஆதாரம் தேட வேண்டியுள்ளது. ஆக, இருவரின் உச்ச நீசசேர்க்கையில், இருவரும் சம பலனை அளிக்கும் வாய்ப்பு இல்லை என்பதே உண்மை. எனவே, அறிவும் செல்வமும் ஒரே இடத்தில் முழுமையாக இருப்பது, அரிதாகி விடுகிறது. இருட்டும் வெளிச்சமும் ஒரே இடத்தில் இருப்பதில்லை.

களத்திரகாரகனாகவும் விவாககாரனாகவும் செயல்படுபவன். சிற்றின்பம், உலக சுகம், பாட்டு இசை, நாட்டியம் முதலான கலைகள், ஆடம்பரப் பொருட்களில் ஈர்ப்பு, புதிய பொருட்களின் மீதான ஆர்வம் ஆகிய அனைத்தையும் தரவல்லவன் சுக்கிரன்;. அழகிலும் அழகிய பொருட்களிலும் ஆர்வத்தைத் தூண்டிவிடுவான் அவன். கடகம் போன்ற ஜல ராசியில் இருந்து, அது லக்கினத்திலிருந்து களத்திர ஸ்தானமாக அமைந்தால், பலரிடம் சிற்றின்பத்தைத் தேடி அலையவைப்பான். அஷ்டமத்தில் வீற்றிருந்தால், தாம்பத்திய சுகத்துக்காக ஏங்க வைப்பான்; காலம் கடந்து தருவதுடன், முழுத் திருப்தியைத் தராமல் அலைக்கழிப்பான். இரண்டு பாப கிரகங்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சுக்கிரன், வலிமையை இழந்த நிலையில் இருந்தால், அரைகுறையான தாம்பத்ய சுகத்தைத் தந்து, விரக்தியில் தள்ளுவான். சுக்கிரனுக்கு, 4லும் 8லும் பாப கிரகம் இருக்க.. சதுரச்ர தோஷத்தைச் சந்தித்த சுக்கிரன், களத்திர தோஷமாக மாறி, மனைவியை இழக்கச் செய்வான்.

விவாகத்துக்குக் காரகன், சுக்கிரன். காரகன் என்றால், நடைமுறைப்படுத்தவேண்டியவன் என்று அர்த்தம். அவன் நல்ல நிலையில் இருந்தால், உரிய தருணத்தில், தடங்கலின்றித் திருமணத்தை நடத்திவைப்பான். லக்னத்தில் இருந்து, 7-வது வீடு களத்திர ஸ்தானம். அங்கே, விவாக காரகனான சுக்கிரன் இருந்தால், களத்திர சுகத்தை பலவீனமாக்குவான். 7-ஆம் பாவமாக அமைந்த விருச்சிகத்தில் வீற்றிருக்கும் சுக்கிரன், வரம்பு மீறிய சிற்றின்பத்தைத் தேடச் செய்து, துயரத்தில் ஆழ்த்துவான். சூரியனுடன் இணைந்து, 9-வது இடத்தில் அமர்ந்தால், வெப்பத்தின் தாக்கத்தால் தாம்பத்திய ஈடுபாட்டை வெட்டிவிடுவான். பாப கிரகங்களுடன் இணைகிற சுக்கிரன், தனது இயல்பை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பான். மகர லக்னம், துலாத்தில் சுக்கிரன். துலாம் 10 ஆம் வீடு... அங்கே சுக்கிரன் அமர்ந்தாலும், அவனுக்கு கேந்திராதிபத்ய தோஷம் உண்டு. இந்தத் தோஷத்தை எட்டிய சுக்கிரன், வேலையில் இடையூறு விளைவித்து, பொருளாதாரப் பற்றாக் குறையை உண்டுபண்ணுவான். சுபக் கிரகங்களோடும். அவற்றின் பார்வை பட்டும், சுக்கிரன் வலுப் பெற்றிருந்தால், வாழ்நாள் முழுவதும் இன்பமயமாக வாழலாம். கும்பம், மகர லக்னங்களுக்கு சுக்கிரன் யோக காரகன், ஒரு கிரகம், கேந்திரத்துக்கும் த்ரிகோணத்துக்கும் அதிபதியாக இருந்தால், யோக காரகன். ஒரு கிரகம், கேந்திரத்துக்கும் த்ரிகோணத்துக்கும் அதிபதியாக இருந்தால், யோக காரகன் எனும் அந்தஸ்து உண்டு. சுக்கிரன் யோக காரகனாக மாறியதால், அவனுடன் சேர்ந்த கிரகங்கள் நற்பலனை அளிக்கும்விதமாக மாறிவிடுவர். பாபத்துடன் இணைந்த சுக்கிரன், பாப கிரகத்தின் தாக்கத்தால் தனது இயல்பை மாற்றி, சேர்ந்த கிரகத்தின் இயல்புக்குத் தக்கபடி பலன்களைத் தருவான். அப்போது, சுக்கிரனின் தன்னிச்சையாகப் பலனளிக்கும் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழில் செவ்வாயும் சுக்கிரனும் இருப்பதாகக் கொள்வோம். செவ்வாய், தாம்பத்திய சுகத்தை அழிப்பவன். ஆனால் சுக்கிரனின் சேர்க்கையில் தன் இயல்பை மாற்றிக்கொண்டு பலனை அளிப்பான்.  இதேபோல், சுக்கிரனும் தனது இயல்பை மாற்றி செவ்வாயின் இயல்புடன் பலன் தருவான். அப்போது, இருவரிலும் இருவரின் இயல்பும் கலந்திருப்பதால், இழப்பையும் தராமல், சுகத்திலும் முழுமை கிடைக்காமல் அரைகுறை பலத்தையே தருகின்றனர். செவ்வாய் 7-ல் இருந்தால் வைதவ்யம்; செவ்வாயுடன் சுபக் கிரகம் சேர்ந்திருந்தால், வைதவ்யம் இல்லை. ஆனால் புனர்பூவாக மாறிவிடுவாள். அதாவது, ஆசைப்பட்டவனைத் துறந்து வேறொருவனை ஏற்பாள் எனப் பலனை மாற்றிச் செல்வதைக் கவனிக்க வேண்டும் (ஆக்னேயை; விதவாஸ்தகை: மிச்ரே புனர்பூ பவேத்). செவ்வாயால் ஏற்பட்ட தாம்பத்யத்தை இழக்கும் சூழலைச் சந்தித்தவளை வேறொருவருக்கு மனைவியாக மாற்றி, கறுப்புப் புள்ளியுடன் வாழ்க்கையைத் தொடரச் செய்வான், செவ்வாயுடன் இணைந்த சுக்கிரன். புனர் பூ எனும் திருப்புமுனை அவனால் உருவானது.

தசா வருஷத்தின் எண்ணிக்கை மற்ற கிரகங்களைவிட சுக்கிரனுக்கு அதிகம். 20 வருடங்கள் அவனது தசை நீடிக்கும். மூன்றாக வகுத்த தசா வருஷத்தில், 2-வது பகுதியில் தசா பலன்களை அள்ளித் தருவான். 2,7-க்கு உடையவனாக அங்கே வீற்றிருந்தால், அதாவது மாரகாதிபதி மாரகத்தில் இருந்தால், அழிவைச் சந்திக்க வைப்பான். இன்பத்தைக் கொடுத்துவிட்டு, திடீரென துன்பத்தில் தள்ளும்போதுதான், அது பொறுக்கமுடியாத துயரமாகிவிடுகிறது. அதை தனது இயல்பாகக் கொண்டிருக்கிறான் சுக்கிரன். ஆணில் உருப்பெறும் கடைசித் தாதுவுக்கு சுக்கிரம் எனப் பெயர் வைத்திருக்கிறது ஆயுர்வேதம். அதுதான் தாம்பத்திய சுகத்தின் அடிப்படை சிற்றின்பத்தை அளிப்பவனான சுக்கிரனுக்கு, இந்தப் பெயர் பொருத்தமே ! நல்லவன் சேர்க்கையில் இன்பம், கெட்டவன் சேர்க்கையில் துன்பம் என்பதற்கு சுக்கிரன் எடுத்துக்காட்டு. இளமையை இனிமையாக்குவதில் இவனுக்கு நிகர் எவரும் இல்லை. வம்ச விருத்திக்கு, வாழ்வில், நம்பிக்கையூட்ட சுக்கிரன் அவசியம். விண்வெளி ஓடு பாதையில் ஆத்மகாரகனான சூரியனுடன் நெருங்கிச் செல்வதால், தன்மானத்துடன் வாழச் செய்பவன் அவன். அறத்தை வளர்ப்பதிலும், இனத்தைப் பெருக்குவதிலும் திறமை பெற்றவன் என்று அவன் அமர்ந்த ரிஷப ராசி சுட்டிக்காட்டும் (தர்ம ஸ்த்வம் விருஷரூபேண).... சீர்தூக்கி ஆராய்ந்து முடிவு எடுப்பதில் முதன்மையானவன் என்பதை அவன் அமர்ந்துள்ள துலா ராசி சுட்டிக் காட்டும். அதாவது, கிராமச் சூழலிலும் (ரிஷப ராசி) நகரச் சூழலிலும் (துலாம்) மனம் ஒத்துப்போக வைப்பதில் திறமைகொண்டவன். மகிழ்ச்சிக்கு மனமே காரணம்; இடம் காரணமல்ல என விளக்குபவன் சுக்கிரன்.

சுக்கிர வழிபாட்டு முறையை வேதம் வகுத்துத் தந்திருக்கிறது. சுக்கிர சாந்தி என விரிவான வழிபாட்டை சாந்தி ரத்னாதரம் எனும் நூல் விளக்குகிறது. வெள்ளிக்கிழமை, அவனை வழிபட உகந்த நாள். சுக் சுக்ராயநம: என்று சொன்னால் அது மந்திரமாக மாறிவிடும் என மந்திர மஹோததி சொல்கிறது. இந்த மந்திரத்தை 108 முறை மனதுக்குள் சொல்லி வழிபடலாம். சுக்கிரனின் உருவத்தை சும் சுக்ராய நம : எனும் மந்திரத்தால், 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்தி வணங்குவது வளம் தரும். தினமும் அவசரத்துடன் வழிபடுவதை விட, வெள்ளிக்கிழமை தோறும் முழு ஈடுபாட்டுடன் சுக்கிரனை வணங்கி பலன் பெறலாம்.

பகவந்தம் கவிம் சுக்ரம் பிரணதார்த்தி வினாசகம்
ஸர்வகாம பிரதம் வந்தெ பரமானந்த தாயகம்

எனும் ஸ்லோகத்தைச் சொல்லியும் வணங்குங்கள்; வாழ்வு வளம் பெறும்.
இறைவனோடு உறையாடிய உத்தமர்கள்!

அவ்வைப் பாட்டி: வைணவத்துக்கு ஒரே ஒரு ஆண்டாள். சைவத்துக்கோ காரைக்காலம்மையார்,  மங்கையர்க்கரசியார், குலச்சிறையாரும் தான். கௌமாரத் தெய்வமான முருகனையும், காணாபத்ய கணபதியையும் அவ்வைப் பாட்டி ஒருத்தியே அதிகம் நெருங்கியுள்ளாள். சௌரத்தின் வழிக்கு திரௌபதியை சொன்னாலும் அவளை தீயிலே பூத்த ஒரு தெய்வப்பெண், வைணவக் கண்ணனை அண்ணனாகவே பெற்று விட்டவள். எனவே திரௌபதியை இந்த தெய்வப்பிறவிகளின் கணக்கில் சேர்க்கவும் நீக்கவும் நெருடுகிறது. கூட்டிக் கழித்தால் நான்கு பேர்தான் தேறி நிற்கிறார்கள். இவர்களில் ஆண்டாளும் சரி,  அவ்வையும் சரி, தங்கள் சிந்தனைகளை பாடல்களாக்கி, இந்த சமுதாயத்துக்குத் தந்து விட்டுச் சென்றுள்ளதுதான் சிறப்பு. இதில் ஆண்டாளின் வழி வேறானதாக, காதல்மிக்கதாய் உள்ளது. ஓர் எழிலார்ந்த பெண்மகளாய் அந்தத் திருமால் மேல் காதல் கொண்ட, அந்தக் காதலில் வெற்றியும் பெற்றவளாய்த் திகழ்கிறாள். அதனால் இல்வாழ்வில் ஈடுபட விரும்புவோர்க்கு இவள் பெரிய  வழிகாட்டியாகவும் விளங்குகிறாள்.

இவளது திருப்பாவைப் பாடல்கள் நம்பாவையர்களை, அவர்களின் வினைப்பாடுகளிடம் இருந்து, மீட்டுக் கரை சேர்ப்பதாக உள்ளது. இவளுக்கு நேர் எதிர்த்திசையில் நிற்கிறாள் நம் அவ்வைப் பாட்டி! ஆண்டாள் தெய்வக் காதலினால் கவர்ந்தாள். அவ்வையிடம் சமுகப் பார்வையும் அறக்கோட்பாடுகளும் மிகுந்து காணப்படுகிறது. இவளும் இறைவனை அடைய விரும்புகிறாள்... அது காதல் வழி அல்ல. தவத்தின்  வழி...! அவ்வைப் பாட்டியின்  பூர்வீகம் சோழ நாட்டு உறையூர். அந்தண குலத்திலே ஒருதாய் தகப்பனுக்கு மூத்த பெண்ணாகப் பிறந்தவர். எப்படி குழந்தைப் பருவத்திலேயே ஞானசம் பந்தர் கோபுரத்து தெய்வசிலையைப் பார்த்து தோடுடைய செவியன் என்று தொடங்கும் பாடலைப் பாடி தன் ஞானத்தை உலகறியச் செய்தாரோ அதே போலவே அவ்வையும் பிள்ளையாக இருந்தபோதே தான் ஒரு தெய்வக்குழந்தை என்பதை  உணர்ந்து விட்டாள்- இட்டமுடன் என் தலையில் இன்னபடியென்று எழுதிவிட்ட சிவனுஞ் செத்துவிட்டானோ? முட்டமுட்டப் பஞ்சமேயானாலும் பாரம் அவனுக்கன்னாய்! நெஞ்சமே அஞ்சாதே நீ என்று அவ்வை பாடியதைக் கேட்டு வியக்காதவர்கள் இல்லை. குறிப்பாக அவ்வையின் தாய் தந்தையர்கள் இவரைப் பற்றிய கவலையை விட்டொழித்தனர்.

குழந்தைப் பிராயத்திலேயே, அவ்வையின் மனம் கவர்ந்த கடவுள் பிள்ளையார்தான். யானை உம்மாச்சி என்று நம் பிள்ளைகளின் மனங்களையும் வேகமாகக் கவர்பவர் இந்த கணபதிதானே? இந்தப் பிள்ளையார் ஆகமத்துக்கு அடங்குவது போலவே வெறும் அன்புக்கும் அடங்குபவர். நல்ல நிலம் பார்த்துக் கோவில் கட்டிக் அங்கேதான் இவரை குடியமர்த்த வேண்டும் என்றில்லை. கட்டிக் களிமண்ணை எடுத்துக் கையாலே உருவம் அமைத்து ஒரு மரத்தடியில் உட்கார்த்தி வைத்து இரண்டு அருகம்புல்லைக் கிள்ளிப் போட்டாலே போதும். அகம் மகிழ்ந்து அருளை வாரி வழங்கிவிடுபவர் இவர். அவ்வை வாழ்ந்த உறையூரிலும் இவருக்குத் திரும்பிய பக்கமெல்லாம் வானம் பார்த்த கோவில்கள். ஆற்றுப்பக்கமாய் குடம் எடுத்துச் செல்லும்போதெல்லாம் அவ்வையின் பார்வையில் படும் இவர்தான் முதல் இஷ்ட தெய்வம். ஆற்று நீரை குடத்தில் கொண்டு வந்து அபிஷேகம் செய்து விட்டு அப்படியே பிரதட்சணமாய் வந்து மனமுருக வணங்கிடும்போது அவ்வைக்குள்ளே  இனிய தமிழில் பல துதிப் பாடல்கள் தோன்றின. அதில் ஒன்றுதான்-

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ
 எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா...

என்னும் பாடல். அவ்வையின் காலம் மதுரையின் கடைச்சங்கம் இருந்த காலம். இந்த கால்த்தில்தான் சோழநாட்டில் கம்பரும், ஒட்டங்கூத்தரும், புகழேந்தியார் என்னும் புலவரும் வாழ்ந்து வந்தனர். இவர்களில் கம்பருக்கும், ஒட்டங்கூத்ருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்.  புகழேந்தியார் வழியோ தனிவழி. இப்படிப் பெரும் புலவர்கள் வாழ்ந்த நாளில்தான் காலம் அவர்களோடு அவ்வையையும் கொண்டு சேர்த்தது.

முன்னதாக அவ்வைத் தன் வாழ்வில் ஓர் அதிசயத்தையும் கேட்டு நிகழ்த்திக் கொண்டதை அனைவரும் அறிந்து கொண்டாக வேண்டும். அவ்வை ஒரு பெண்ணாக இருந்தும் பெண்களுக்கேயுரிய அழகுணர்ச்சிக்கும் அலங்காரத்திற்கும் முக்கியத்துவம் தரவேயில்லை. வாலிபப் பிராயத்தை எட்டும் நிலையில் தானொரு ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு இல்வாழ்வு எனும் இல்லறத்தில் செல்ல விரும்பவில்லை. இல்லறத்தில் செல்ல விரும்பாத நிலையில் நல்லறமாக அவ்வை கருதியது இறையறத்தைத்தான். அதாவது தவத்தை... குழந்தைப் பிராயத்திலேயே சிவபெருமான் மேல் பாரத்தைப் போட்டு விட்டேன் என்று பாடிய மனம், இல்லறம் எனும் பெரும்பாட்டை, பிள்ளைகள் உறவுகள் என்று வழிவழி யாய்த் தொடரும் ஒரு பந்தத்தை எப்படி விரும்பும்? அதையே விரும்பாதபோது இளமைதான் எதற்கு? இந்த இளமை, பெண்கள் வரையில் சற்று போகமும் மோகமும் சார்ந்தது. நாம் அதைக் கொண்டாடாவிட்டாலும் பிறர் கண்களுக்கு அது விருந்தாகி விடும் ஆபத்தும் அதிகம். தோற்றம் என்பது ஏற்றம் தருவதாக இருக்க வேண்டும். எனவே அவ்வை தனது மனதிற்கிசைந்த கணபதியிடம் தனக் கேற்ற விதமான உடம்பைக் கேட்கிறாள். கணபதியும் அந்த இளமையான தெய்வக்குழந்தைக்கு முதிர்ந்த வைரம் பாய்ந்த ஞானம் மிக்க தேகத்தை வழங்கி அருளுகிறான். உலகிலேயே இளமையைத் துறந்து முதுமையை வேண்டிப் பெற்றவர்கள் இருவர். ஒருவர் காரைக்காலம்மையார், அடுத்து, அவ்வைப் பாட்டி மட்டுமே. இங்கேயிருந்து தொடங்குகிறது அவ்வையின் பவித்ரமான பயணம்...

திங்கள், 14 அக்டோபர், 2013

படலம் 98: ஸர்வ தானோத்தம விதி

98வது படலத்தில் ஸர்வ தானோத்தம விதி, கூறப்படுகிறது. இங்கு துலாரோஹதான விதிப்படி மண்டபம் அமைத்து வேதிகை, குண்டம், மண்டலம் இவைகளோடு கூடியதாக செய்யவும் என கூறி கொட்டகையிலோ, இந்த விதியை அனுஷ்டிக்கவும் என விசேஷமாக கூறப்படுகிறது. மண்டலத்தின் மத்தியில் பரமேஸ்வரனை பிரம்மா, விஷ்ணு சஹிதமாக சந்தன, புஷ்பங்களால் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு குண்டத்தில் நல்ல மனதை உடையவர்களால் சேஷ ஹோமம் செய்யவும் என கூறி அதன் மந்திரங்கள் கூறப்படுகின்றன. பிறகு நான்கு வேதங்களை அறிந்த மூன்று நபர்களை ஏற்றுக் கொள்ளவேண்டும். அந்த பிராம்ணர்களுக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன்களை உத்தேசித்து நியாயப்படி பஞ்சாங்க பூஷணம், நல்ல வஸ்திரங்களுடன் கூடியதாக தனித்தனியாக 108 கணக்குகள் ஸ்வர்ணங்களை கொடுக்கவும், இங்கு கூறப்படாத எந்த கர்மா உண்டோ அவை எல்லாம் முன்பு கூறப்பட்ட முறைப்படி செய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறு 98வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. எல்லா தானங்களை காட்டிலும் உத்தமமான முதல் தானத்தை கூறுகிறேன். முன்பு போல் வேதிகை குண்டம் இவைகளுடன் மண்டபத்தை அமைக்க வேண்டும்.

2. முன்பு கூறிய விதமாக மண்டலத்துடன் மண்டப நிர்மாணத்தை தண்ணீர் பந்தலில் அமைக்கவும். மண்டலத்தின் நடுவில் பிரம்மா, விஷ்ணு, இவர்களுடன் பரமேஸ்வரனை

3. சந்தனம் முதலியவைகளால் சிவன், பிரம்மா விஷ்ணுவிற்கும் பூஜை செய்யவும். தனத்தை கொடுக்கும் பிரம்மாவிற்கும் (விஷ்ணுவிற்கும்)

4. சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் ஸ்வாஹா, ஸ்வதா, வவுஷட், வஷட், நம என்பதாக பூஜிக்கவும். (நாராயாணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி தந்தோ விஷ்ணு: ப்ரசோதயாது)

5. என்பதாகவும் மீதமுள்ள ஹோமத்தை சமாதான முள்ளவர்களால் குண்டத்தில் ஹோமம் செய்ய வேண்டும். நான்கு வேதங்களை அறிந்த மூன்று நபர்களை ஜபம் செய்ய சொல்ல வேண்டும்.

6. அந்த பிராம்மணர்களுக்கு கூறிய முறைப்படி தட்சிணையை கொடுக்கவும். நூற்றிஎட்டு ஸுவர்ணம் தனித்தனியாக கொடுப்பது உத்தமமாகும்.

7. அவர்களுக்கு ஐந்து அங்களுக்கும் ஆபரணம் ஸமர்ப்பித்து வஸ்த்ரம் முதலியவைகளை கொடுக்கவும். இங்கு கூறப்படாததை முன்பு கூறப்பட்டது போல் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸர்வதானோத்தம விதியாகிய தொண்ணூற்றி எட்டாவது படலமாகும்.
படலம் 97: எட்டு திசை நாயகர்களை தான செய்யும் முறை

97வது படலத்தில் 8 லோக பாலகர்களின் தான விதி கூறப்படுகிறது. துலாரோஹதான விதியில் கூறப்பட்டுள்ள இடம் காலம் இவைகளில் அவ்வாறே அந்தந்த விதியில் கூறப்பட்டுள்ளபடி நிர்மாணிக்கப்பட்ட வேதிகை, மண்டலம், குண்டம், இவைகளுடன் கூடிய மண்டபத்தில் அந்த படலத்தில் கூறியுள்ள முறைப்படியே சிவ பூஜை ஹோமம் செய்து நல்ல லக்ஷணத்துடன் கூடிய எட்டு சிவாச்சாரியர்களை கூப்பிட்டு புதிய வஸ்திரத்தின் மேல் வடக்கு முகமாக அமர்த்தி அவர்களை சந்தனம், புஷ்பம் இவைகளால் அஷ்டதிக்பாலக மந்திரங்களாலும் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. வேறு ஒருமுறை கூறப்படுகிறது. பிறகு அந்த சிவாச்சாரியர்களுக்கு வஸ்திரம் ஆபரணங்கள் வாசனை திரவ்யங்கள் கம்பளம் முதலியவைகளை கொடுக்கவும். ஆபரணங்களுடன் கூடி நூறு நிஷ்கத்துடன் கூடியதாக தட்சிணைகள் கொடுக்கவேண்டும் என கூறப்படுகிறது. இங்கு சொல்லப்படாத எந்த சிறிய முறை உண்டோ அதை துலாரோக விதிப்படி செய்யவும். முடிவில் திக்பாலகர்களின் தானம் எல்லா சம்பத்தையும் ஸம்ருத்தியாக கொடுக்கக் கூடியதாகவும் பிறரால் ஏவப்பட்ட சக்ரங்களை அழிக்க வல்லதாகவும் யானை குதிரை இவைகளை விருத்தி செய்வதாகவும், குழந்தையை கொடுக்கக் கூடியதும், ராஜ்யத்தை அபிவிருத்தி செய்வதாகவும், பசு பிராம்ணர்கள் இவர்களுக்கு சுகத்தை கொடுக்கக் கூடியதுமாக ஆகும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு 97வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பிறகு எட்டு திக்பாலகர்களின் தானம் கூறுகிறேன். முன்பு கூறப்பட்ட இடம், காலத்தில் வேதிகை, மண்டலத்துடன் கூடிய இடத்தில்

2. குருவானவர் முன்பு போல் சிவபூஜையும், ஹோமமும் செய்து எல்லா அமைப்பும் உள்ள எட்டு ஆதி சைவர்களை அழைத்து

3. வடக்கு முகமாக அமர்த்தி, புதிய வஸ்திரங்களை உடுத்தியவர்களாக சந்தனம், புஷ்பம் இவைகளாலும் திக்பால மந்திரங்களாலும் பூஜிக்க வேண்டும்.

4. ஒரு குண்டம் அல்லது ஸ்தண்டிலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். ஆபரணங்களுடன் கூடியதாக பத்து நிஷ்க அளவுள்ள தட்சிணையை கொடுக்க வேண்டும்.

5. ஆஸனம், கம்பளம், வஸ்திரம், உத்தரீயங்களையும் கொடுக்கவும். இங்கு கூறப்படாதது ஏதாவதிருப்பின் துலாபார விதிப்படி செய்ய வேண்டும்.

6. எல்லா ஸமிருத்தியான ஐஸ்வர்யத்தை கொடுக்கக்கூடிய லோக பாலதானம் இவ்வாறாகும். இது பிறரால் ஏவப்பட்ட சக்கரங்களை அழிக்க வல்லதும் யானை குதிரை இவைகளை விருத்தி செய்வதும் ஆகும்.

7. புத்ரனை கொடுக்கக் கூடியதும், அபிவ்ருத்தியான ராஜ்யத்தை கொடுக்கக் கூடியதும் பசு, பிராம்மணர்களுக்கு நலத்தை கொடுக்கக் கூடியதும் ஆகும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்த்ரத்தில் லோகபாலாஷ்டக தான முறையாகிற தொன்னூற்றியேழாவது படலமாகும்.
படலம் 96: யானையை தானம் செய்யும் முறை

96வது படலத்தில் யானையை தானம் செய்யும் முறை கூறப்படுகிறது. ஆயிரம், ஐநூறு, இருநூற்றி ஐம்பது, 100, 50, 125, 108, என்ற இந்த அந்த எண்ணிக்கையில் தங்கத்தாலோ, வெள்ளியாலோ, லக்ஷண முறைப்படி யானை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு துலாரோஹதான முறைப்படி வேதிகை குண்டம், மண்டலம் இவைகளுடன் கூடியதாக மண்டபம் அமைத்து அதன் மத்தியில், கஜேந்திரனை வைத்து சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும். துலாரோஹதான முறைப்படி சிவனை பூஜித்து ஹோமம் செய்யவும். சிரத்தையுடன் கூடி யானையை சிவனுக்கும் சிவபக்தனுக்கும் கொடுக்க வேண்டும், அங்கு கூறப்படாத எல்லா கர்மாவையும் துலாபார விதியில் கூறியபடி அனுஷ்டிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இவ்வாறாக 96வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பிறகு யானை தானத்தை பற்றி கூறுகிறேன். பிரம்மணோத்தமர்களே அந்த யானையானது தங்கத்தாலோ அல்லது வெள்ளியாலோ நிர்மாணிக்க வேண்டும்.

2. ஆயிரம் ஸ்வர்ணங்களாலோ, அல்லது ஐநூறு தங்கத்தாலோ அல்லது இருநூற்றி ஐம்பது தங்கத்தாலோ அல்லது நூற்றி இருபத்தி ஐந்து தங்கத்தாலோ அல்லது நூற்றிஎட்டு ஸுவர்ணங்களாலோ யானையை நிர்மாணிக்க வேண்டும்.

3. முன்பு போல் வேதிகை மண்டலம் நிர்மாணித்து இவற்றுடன் மண்டபத்தை நிர்மாணித்து அதன் நடுவில் யானையை பிரதிஷ்டை செய்து சந்தனம் புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.

4. முன்பு போல் சிவபூஜை செய்து விசேஷமாக ஹோமம் செய்ய வேண்டும். பிறகு சிவார்ப்பணமாக சிரத்தையுடன் சிவபக்தர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

5. இதில் கூறாத எல்லாவற்றையும் துலாரோஹ விதிப்படி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கஜதான விதியாகிற தொண்ணூற்றி ஆறாவது படலமாகும்.
படலம் 95: தங்க விருஷபதான முறை

95வது படலத்தில் தங்க விருஷபதான முறை சுருக்கமாக கூறப்படுகிறது. இங்கு ஆயிரம், ஐநூறு, இருநூத்தி ஐம்பது, நூற்றி இருபத்தி ஐந்து, நூறு இந்த அளவுள்ள நிஷ்கம் என்ற அளவு முறையில். தங்கத்தால் விருஷபம் செய்து அதன் நெற்றியில் ஸ்படிகத்தினால் அர்த்தசந்திராகாரமான ஆபரணமும் வெள்ளியால் குளம்பும், பத்மராக கல்லால் காதும், கோமேதக கல்லால் திமிழும், கழுத்தில் ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்ட கண்டாமாலையும் செய்யவும். வேறு விருப்பத்திற்கு அங்கமாக சலங்கையும் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு துலாரோஹதான முறைப்படி வேதிகை, மண்டலம், குண்டம் இவைகளுடன் கூடியதாக அமைத்து மண்டலம், அதன் மத்தியில் விருஷபரை மேற்கு முகமாக ஸ்தாபிக்கவும். விருஷப காயத்திரியால் பூஜிக்கவும் துலாரோகன விதியில் கூறப்பட்டுள்ளபடி சிவபூஜை ஹோமம் செய்யவும். பிறகு அங்கு பூஜித்த விருஷபரை சிவனுக்கும் சிவபக்தர்களுக்கும் கொடுக்கவும். பிறகு சமித்து, ஆஜ்ய, ஹவிஸ்சுடன், கூடி சாந்தி ஹோமமோ செய்யவும் என்று விசேஷமாக கூறப்படுகிறது. இங்கு கூறப்படாத கர்மாவை துலாபார முறைப்படி தேசிகன் அனுஷ்டிக்கவும் என்று தங்க விருஷப தான முறையில் செய்முறை விளக்கம் கூறப்படுகிறது. இவ்வாறாக 95வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. தங்கத்தால் செய்யப்பட்ட வ்ருஷபத்தின் தானம் இப்பொழுது சுருக்கமாக சொல்லப்படுகிறது. ஆயிரம் ஸ்வர்ணத்தாலோ ஆயிரம் நிஷ்கத்தாலோ அல்லது அதில் பாதியோ (ஐநூறு)

2. அதில் பாதி இருநூற்றி ஐம்பதோ அதில் பாதி நூற்றி இருபத்தி ஐந்தோ அல்லது நூற்றி எட்டு ஸ்வர்ணத்தாலோ லக்ஷணத்துடன் கூடிய வ்ருஷபத்தை நிர்மாணிக்க வேண்டும்.

3. நெற்றியில் ஸ்படிகத்தால் அஷ்டமீ சந்திரன் போன்ற ஒளி உள்ளதும் வெள்ளியால் ஆன குளம்பையும் பத்மராகத்தால் காதுகளிலும், தோள்பாகம் கோமேதகத்தாலும்

4. கழுத்தில் மணிகளின் மாலையையும் ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டும் சலங்கை மாலைகளுடன் கூடியதாகவும் வ்ருஷபத்தின் அவயவங்களை நிர்மாணிக்க வேண்டும்.

5. முன்பு போல் வேதிகை, மண்டலத்துடன் மண்டபம் அமைத்து அதன் நடுவில் மேற்கு முகமாக வ்ருஷபத்தை வைக்க வேண்டும்.

6. வ்ருஷபத்தை காயத்ரி மந்திரத்தால் பூஜிக்க வேண்டும். வ்ருஷபத்தின் மேலே பரமேஸ்வரனை வைத்து முன்பு போல் சிவபூஜையையும் விசேஷமாக ஹோமத்தையும் செய்ய வேண்டும்.

7. ஆசார்யன் ஸமித்து, நெய், ஹவிஸ் இவற்றுடன் சாந்தி ஹோமத்தையோ செய்ய வேண்டும். மிகப் பெரியதான வ்ருஷபத்தை சிவனின் பொருட்டு சிவ பக்தர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

8. இங்கு எது சொல்லப்படாமல் விடப்பட்டதோ அதை துலாபாரத்தில் கூறியபடி அனுஷ்டிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் தங்க வ்ருஷப தானம் செய்யும் முறையாகிய தொன்னூற்றைந்தாவது படலமாகும்.
படலம் 94: கன்னிகாதான முறை

94வது படலத்தில் கன்னிகாதான முறை கூறப்படுகிறது. பிறகு எல்லா தானத்திற்கும் மேன்மையான கன்னிகாதானம் கூறுகிறேன் என்று பிரதிக்ஞை செய்கிறார் யஜமானன். ஸர்வ லக்ஷணம் உடைய தோஷம் இல்லாத வேறு கோத்திரத்தில் உன்டான தனக்கு அனுகூலமான தினத்தில் பிறந்த கன்னிகையை அவர்களுடைய தந்தையரிடம் இருந்து சொல்லப்பட்ட முறைப்படி இவர்களின் மனதை அறிந்து தனம் முதலானவற்றை கொடுத்து ஸ்வீகரித்து அவளை தன்னுடைய புத்திரியாக ஆக்கி அவளுக்கு ஸ்னாநம் செய்வித்து, சந்தனம், புஷ்பம், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு முறைப்படி தானம் செய்யவும் என்று கன்யாதான முறை கூறப்படுகிறது. பிறகு துலாபார முறைப்படி வேதிகை குண்டம் மண்டலத்துடன் கூடிய மண்டபம் அமைத்து அதில் முறைப்படி செய்த ஹோமத்தினால் பரமேஸ்வரனை பூஜிக்கவும். பிறகு ஜோஸ்யரால் கூறப்பட்ட சாந்தம், சிவபக்தியுடன் கூடிய, வரனை ஈஸ்வர புத்தியோடு சந்தனம், புஷ்ப மாலைகளாலும், பஞ்சாங்க பூஷணங்களாலும் பூஜித்து அந்த வரனின் பொருட்டு வஸ்திரம் பூமி தனம், இவைகளுடன் கூடியதாகவும், வீட்டிற்கு உபயோகமான பொருளோடும், தாசி, தாசனுடன் கூடிய கன்னிகையை சிரத்தையோடு சிவனை ஸ்மரித்து கொடுக்கவும் என்று கன்னியாதான விதியில் செய்முறை விளக்கம் கூறப்படுகிறது. முடிவில் இவ்வாறு யார் கன்னிகாதானம் செய்கிறானோ அவன் கன்னிகையின் மேல் எவ்வளவு ரோமம் இருக்கிறதோ அவ்வளவு எண்ணிக்கை உள்ள நூறு வருஷம் சுகமாக இருப்பான் என்று பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறாக 94வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. எல்லா தானத்தை காட்டிலும் சிறந்ததான கன்யகா தானத்தை கூறுகிறேன். பிராம்மணோத்தமர்களே எல்லா லக்ஷணத்துடன் கூடியவரும் குற்றமற்றவளும்

2. வேறு கோத்ரத்தில் பிறந்தவளும் நல்ல சுப தினத்தில் பிறந்தவளுமான கன்னிகையை பணம் முதலியவைகளை கொடுத்து, பெண், மாப்பிள்ளை இவர்களின் முன்னோர் பேர்களை கூறி

3. ஒருவருக்கொருவர் மனம்புரிந்து கொண்டு பெண்ணை தன் சொந்த பெண்ணாக பாவித்து மங்கள ஸ்நானம் செய்வித்து சந்தனம், பூமாலை, ஆபரணங்கள் பட்டு புடவைகளுடனும்

4. அலங்கரித்து க்ருஹஸ்தாச்ரம தர்மத்தை அனுஷ்டிப்பதற்கு அனுகூலமாய் இருப்பதற்கு கன்யகா தானம் முறைப்படி செய்ய வேண்டும். முன்பு போல் வேதிகை மண்டலம் இவற்றுடன் கூடியதாய் மண்டபம் அமைத்து

5. அங்கு பரமேஸ்வரனை ஆராதித்து முன்பு போல் ஹோமம் செய்யவும். அமைதியானவரும் கன்யா தானத்திற்காக வரிக்கப்பட்டவரும் சிவபக்தியுள்ள வரனை

6. ஐந்து அங்கத்தின் அணிகலன்களுடன் கூடிய வரும் சந்தனம் புஷ்பமாலை இவைகளால் அலங்கரிக்கபட்டவரும் வஸ்திரம் பூமி ஐஸ்வர்யம் கூடி பரமேஸ்வரனாக பூஜித்து பாவித்து

7. வீட்டுக்கு வேண்டிய உபகரணங்களுடன் மிகவும் பொறுப்பாக வேலைகாரர்களுடன் கன்னிகையை சிவனாக பாவிக்கப்பட்ட வரனுக்கு கொடுக்க வேண்டும்.

8. பிராம்மனோத்தமர்களே! இவ்வாறாக எவன் கன்னிகா தானம் செய்கிறானோ அவனுடைய அந்த கன்னிகை சுகத்தை அடைகிறான். அந்த கன்னிகையின் சரீரத்தில் எவ்வளவு ரோமங்கள் உள்ளனவோ அந்த எண்ணிக்கையில் நூறு வர்ஷகாலம் சுகமாக இருக்கிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கன்யாதானம் செய்யும் முறையாகிற தொன்னூற்றி நான்காவது படலமாகும்.
படலம் 93: தங்கக்குதிரை தானம் செய்யும் முறை

93வது படலத்தின் தங்கக்குதிரை தானம் செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் இந்த ஆகமத்தில் வெற்றிக்காக சொல்லப்பட்ட தங்க குதிரை தானம், பத்தாயிரம் அஸ்வமேதயாக பலத்தைவிட உயர்ந்ததான பலத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. பிறகு ஆயிரத்தி எட்டு, ஐநூற்றி நான்கு, 52, 108 கணக்குள்ள தங்கத்தால் லக்ஷணத்துடன் கூடிய குதிரை செய்து, அதன்மேல் வெள்ளியால் பஞ்ச கல்யாணம் என்ற அங்க அழகை செய்யவும். பிறகு துலாபாரதான முறைப்படி வேதிகை, குண்டம், மண்டலம் அமைத்து அதன் மத்தியில், தங்கத்தால் செய்யப்பட்டதும் ஸர்வ அலங்காரம் உடையதுமான அந்த குதிரையில் உச்சை ஸ்ரவஸ் என்று பெயர் இட்டு பூஜிக்க, மண்டல பூஜை, ஹோமம், கலசஸ்தாபனம் முதலியவை துலாரோஹண முறைப்படி செய்து, இந்திர புத்தியுடன் சந்தனம், முதலியவைகளால் பூஜித்து பிராம்ணர்களுக்கு ஐந்து நிஷ்கம் தங்க தானம் செய்து அந்த குதிரையை தானம் செய்யவும். ஏழை, குருடு, கருமி, அனாதை இவர்களுக்கு உணவு அளித்தல் முதலியவைகளால் சந்தோஷிக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறு 93வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. வெற்றிக்காக தங்க குதிரை தானம் பற்றி கூறப்படுகிறது. பத்தாயிரம் அச்வமேத யாக பலனைவிட மிகவும் உயர்ந்ததாக கூறப்படுகிறது.

2. ஆயிரத்தெட்டு அதில்பாதி ஐநூறு, அதில் பாதி இருநூற்றி ஐம்பது, அல்லது நூற்றி எட்டு அளவுள்ள தங்கத்தினால் லக்ஷணத்துடன் கூடியதாக குதிரையை அமைக்க வேண்டும்.

3. வெள்ளியால் பஞ்ச கல்யாணி அடையாளத்தை செய்யவும், கலைகளால் எல்லா அலங்காரத்துடன் கூடியதாகவும்,

4. வேதிகை மண்டலத்துடன் முன்புபோல் மண்டபம் தீர்மானித்து அதன் நடுவில் உச்சை ச்ரவஸ் என்று பெயருள்ள குதிரையை செய்து வைக்க வேண்டும்.

5. சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து பிராம்மணர்களுக்கு குதிரையை கொடுக்கவும். பிராம்மணர்களை தேவேந்திரனாக பாவித்து ஐந்து நிஷ்கம் தங்கத்தை கொடுக்க வேண்டும்.

6. ஏழை குருடானவன், கருமி, அனாதை இவர்களை உணவு முதலியவைகளால் திருப்தி செய்து, மண்டலார்ச்சனை, கலசஸ்தாபனம் ஹோமம் முதலியவற்றை செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஹிரண்யாச்வப்ரதான முறையாகிய தொன்னூற்றி மூன்றாவது படலமாகும்.