புதன், 16 அக்டோபர், 2013

தங்கை சரஸ்வதிக்கு தட்சிணாமூர்த்தி தந்த வீணை!

ஞானத்தைத் தரும் வித்யைக்கு அதிபதிகள் இருவர். ஒருவர் ஈஸ்வரனின் அம்சமான தட்சிணாமூர்த்தி. மற்றொருவர், கல்விக்கும் கலைகளுக்கும் அதிபதியான சரஸ்வதி. அருளே திருமேனியாகக் கொண்ட இறைவன், தான் நினைத்த மாத்திரத்தில் நினைத்த வடிவத்தை மேற் கொள்ளும் ஆற்றல் உடையவன். உலகில் தோன்றிய உயிர்கள் எல்லாம் தன்னை அறிந்தும் கண்டும் கருதியும் வாழ்த்தியும் வணங்கியும் உய்தற் பொருட்டே இவ்வரிய உருவங்களை அவன் தாங்கி அருளுகின்றான். அவனது இந்த உருவத் திருமேனியை போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் என்று மூன்றாய்ப் பிரித்து சித்தாந்த சாஸ்திரங்கள் கூறும். அதில் தட்சிணாமூர்த்தி யோக வடிவமானவர். சிவப் பரம்பொருளே ஆதி குருவாக - தட்சிணாமூர்த்தியாக சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்னும் முனி சிரேஷ்டர்களுக்கு கல்லால மரத்தின்கீழ் தென் திசை நோக்கி அமர்ந்து வேதப் பொருளை மௌனமாக உபதேசித்தருளியவர்.

இந்நிகழ்ச்சியை -

ஞாலம் நாறு நலங்கெழு நல்லிசை
நான்மறை முதநூல் முக்கட் செல்வன் ஆலமுற்றம்

என்று அகநானூறும்; ஆலமர் தெய்வம் என்று புறநூனூறும் விரித்துச் சொல்கின்றன. சாதாரணமாக குருவானவர் வயது முதிர்ந்தவராகவும், சீடர்கள் இளைஞர்களாகவும் இருப்பது உலக இயல்பு. ஆனால், தட்சிணாமூர்த்தியோ வயதில் இளையவராகவும், அவரிடம் வேதப் பொருளை அறிய வந்த சனகாதி முனிவர்கள் வயதில் முதியவர்களாகவும் இருப்பது அற்புதத்திலும் அற்புதம். குரு பேசிக்கொண்டிருப்பதும் சீடர்கள் பாடம் கேட்டுக் கொண்டிருப்பதும்தான் வழக்கம். ஆனால், இங்கு சீடர்கள்தான் சந்தேகங்களைக் கேட்கின்றனர். குருவோ மௌனமாக இருந்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கிறார்.

மாசற விளங்கிய மங்கையர் ஆழ்சுடர்
வாடல் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணர்வின் உருகெழு பெரியோர்

என்று மருதக் காஞ்சியில் மாங்குடி மருதனார் குறிப்பிடுகிறார்.

ஆதிசங்கரரும் இந்த அற்புதக் காட்சியை-

சித்ரம் வடதரோர் மூலே
வ்ருத்தாச் சிஷ்யா குருர்யுவா
குரோஸ்து மௌனம் வியாக்யானம்
சிஸ்யாஸ்து கிஞ்ஞாலம்ய சா

என்று வியக்கிறார்.

மேலும் ஆசிரியர் நின்று கொண்டு பாடம் நடத்துவதும், சீடர்கள் அமர்ந்த நிலையில் பாடம் கேட்பதும் வழக்கம். இங்கு குரு காலை மடித்து உட்கார்ந்திருக்கிறார். சீடர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். (அமர்ந்த நிலையிலும் சீடர்கள் உள்ளதைக் காணலாம்.) இதுவும் பேரதிசயம். சிவபிரான் மௌனமாக சின்முத்திரை காட்டி அருளியதை,மௌன உபதேச சம்பு என்று பழநித் திருப்புகழில் அருணாகிரிநாதர் போற்றுகிறார்.

சொல்லரிய நெறியையொரு சொல்லால் உணர்த்திய
சொரூப அனுபூதி காட்டிய தட்சிணாமூர்த்தியே
சின்மயானந்த குருவே

என்று சின்மயானந்த குருவின் அருளை வியந்து பாராட்டுகிறார் தாயுமானவர். தென்திசை எமனின் திசை. எம பாசத்திலிருந்து யாரும் தப்ப முடியாது. ஜீவன்கள் மரண பயத்தினால் தன்னை வந்தடைந்து புகழ் தேடும் போது, அவர்களது மரண பயத்தை நீக்கி அருளவே தட்சிணாமூர்த்தி தென் திசை நோக்கி அமர்ந்திருப்பதாகக் கூறுவர். இந்த திவ்ய வடிவமே அண்ணாமலை அடி வாரத்தில் இன்றும் அமர்ந்து மோனத் தவம் இயற்றிக் கொண்டிருப்பதாக - அண்ணா மலையில் ஜீவசமாதியான மகான் சேஷாத்ரி சுவாமிகள் கூறியுள்ளார். பேச்சு, செயல், அறிவது எல்லாம் அடங்கிப் போன நிலையில் இருக்கிற தட்சிணாமூர்த்தி மேதா தட்சிணாமூர்த்தியாக - புத்திப் பிரகாசம், வாக்குவளம், வித்வசந்தி எல்லாம் தருவார். சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவருமே தம் திருக்கரங்களில் அட்சமாலை ஏந்தியுள்ளனர். சர்வ வித்யை அளிக்கும் பிரபு (ஈஸ்வரன்) சதாசிவனாகிய தட்சிணாமூர்த்தியே என்று வேதம் புகழ்கிறது. வித்யா தேவதையான சரஸ்வதி தேவதையே வாக்தேவதையாக விளங்குகிறாள். அவள் அருள் இல்லாமல் நம்மால் பேச முடியாது. இருவருமே தங்கள் திருக்கரங்களில் சுவடி தாங்கி நெற்றியில் பிறைச் சந்திரனை அணிந்துள்ளனர். கலை, கலை வளருகிறது என்று அர்த்தம். அறிவும் ஞானமும் மேன்மேலும் வளர்ந்து கொண்டே போக வேண்டும் என்பதைக் காட்டவே கைகளில் சுவடி.

ஏழு வண்ணங்களில் சேராத நிறம் வெண்மை. பரம நிர்மலமான - தூய்மையான நிறம் வெண்மை. அது சுத்த தத்துவ நிலையைக் குறிக்கிறது. இந்த வெண்மையும்கூட இன்னும் நிர்மலமாக-தன்வழியே ஒளி ஊடுருவிச் செல்கிற அளவுக்குத் தெளிந்து விடுகிறபோது அது ஸ்படிகமாகிறது. தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி ஆகிய இருவரின் கைகளிலும் ஸ்படிகத்தாலான அட்ச மாலை இருப்பது இதைக் காட்டுகிறது. சரஸ்வதிக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நெற்றிக்கண் உண்டு. இருவருமே தலையில் ஜடாமகுடம் அணிந்துள்ளனர். அது ஞானிகளின் அடையாளம். இருவருமே வெள்ளை வெளேர் என்ற நிறம் உடையவர்கள். வெண்மை நிறம், சந்திர கலை, ஸ்படிக மாலை ! வெண்மை நிறத்தாலே நம் மனதில் ஒரு தூய்மை, தாப சாந்தி, அமைதி எல்லாம் உண்டாகிறது. சரஸ்வதி தன் கையில் வீணையை வைத்து வாசித்துக்கொண்டிருப்பது- கலைக்கு நாதனான இறைவனின் உடலாய் அமைந்துள்ளது என்பதைக் காட்டுவதே., அவளே கலைகளின் நாயகி என்பதை உணர்த்தவும் அவளது கையில் வீணை. தட்சிணாமூர்த்தியின் கையிலும் வீணை உள்ளது. வீணா தட்சிணாமூர்த்தி என்றே திருநாமம். சரஸ்வதி கையில் உள்ள வீணைக்கு கச்சபி என்று பெயர். வீணை தட்சிணாமூர்த்தியாக இருந்து இசை நுணுக்கங்களை உபதேசித்த பின்னர், இறைவன் தான் உருவாக்கிய கச்சபி என்ற வீணையைத் தனது சகோதரியான சரஸ்வதி தேவிக்கு அளித்துவிட்டதாகப் புராண வரலாறு கூறும். கலைமகள் மொழி வடிவானவள். எழுத்துகள் 51. அவற்றை அட்சரங்கள் என்று சொல்வது மரபு. ஆகவே அந்த 51 அட்சரங்களைக் குறிக்கும் விதத்தில் தன் கையில் 51 மணிகள் கொண்ட அட்சரமாலையை தரித்திருக்கிறாள். அவள் வேதத்தின் உட்பொருளானவள்.

பாரதியும்,
வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பவள்
வீணை செய்யு மொலியிலிருப்பாள்
உள்ளதாம் பொருள் வேதத்தினின் றொளிர்வாள்

என்று குறிப்பிடுகிறார். இப்படி ஞான தேவதைகளான இருவருமே நமக்கு மெய்ஞ்ஞானத்தை அருளவல்ல அருட் தெய்வங்கள். குரு கடாக்ஷம் பரிபூர்ணம் என்று சொல்வார்கள். அதன்படி குருவடிவான தட்சிணாமூர்த்தியை வியாழன் தோறும் வழிபட்டு நலம் பெறலாம்.

கருத்துகள் இல்லை: